நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

2015ஆம் ஆண்டுப்பெட்டகம்

2015 ஆம் ஆண்டு என் வாழ்வில் பல திருப்பங்களை கொடுத்தது.
“இது என் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக அமையட்டும்.
வருகின்ற 2015 புத்தாண்டு இதை விட சிறப்பாக அமையட்டும்”
என்று இயம்பிய சென்ற ஆண்டு இது. எழுத்துகள் சிறப்பாகவே என் பயணத்தை நிலைநிறுத்தியது.

என் வாழ்வின் பல சறுக்கல்கள் சந்திக்கப்பட்டும், நிந்திக்கப்பட்டும் இருந்தது இந்த ஆண்டில். இதை விரும்பியே ஏற்றேன். அதில் பாடங்களும் கற்றேன்., அதனுழி படங்களும் எடுத்தேன்.

என் வாழ்க்கையின் மாபெரும் முன்னேற்றங்களை அள்ளித் தெளித்த ஆண்டு. பல புதிய அனுபவங்களைக் கொடுத்த ஆண்டு. எல்லாருக்கும் கிடைத்திடாத பலவற்றை களித்திட்ட ஆண்டு.

கால வரிசைப்படி :
ஏப்ரல் :
முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்திருந்தேன்.
இரவீந்திரன் சித்தப்பாவை சென்னையிலிருந்து புதுதில்லிவரை அழைத்துச்செல்லும் பொறுப்பு அது. இரண்டரை மணிநேரம் பூமிக்கும் எனக்கும் தொடர்பில்லா வான்வெளியில் பயணித்தது என்றும் நினைவிற்கொள்ளத்தக்கது.
நாடாளுமன்றத்திற்கு முதல்முறை சென்றது. மக்களவை, மாநிலங்களவை, நிதிமசோதா தாக்கல் செய்யும் அவை என நாடாளுமன்றத்தின் மூன்று அவைகளையும் சுற்றிப்பார்த்தேன். காரணம் அப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிகழவில்லை. இதனால், அவைப்பகுதிகளுக்குள்ளேயே சென்று பார்வையிட முடிந்தது.

இரவீந்திரன் சித்தப்பா ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் சுற்றுலாப் பயணத்தால் தில்லியின் லோட்டஸ் டெம்பிள், இந்தியா கேட், காந்தியடிகள் நினைவிடம், குதுப்பினார்,  போன்ற இடங்களுக்குச் செல்ல முடிந்தது. அதில் மிகவும் அதிசயித்தது அக்‌ஷர்தாம் கோயில். இந்தியாவின் பண்பாட்டை இருபத்தோராம் நூற்றாண்டியில் நிலைநிறுத்தியிருக்கும் அந்தக் கோயிலின் அழகிய அர்த்தமுள்ள கட்டமைப்பு.

ஜூலை மாதம் :
விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பணி நிறைவடைந்தது. 2014 ஜூலை முதல் 2015 ஜூலை வரை சிறப்பாக ஊடகத் துறையில் இயங்கியதற்காக “சிறந்த மாணவப்பத்திரிக்கையாளர்” சான்றினை விகடன் குழுமம் எனக்களித்தது. விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் தமிழ்/ஆங்கிலம் என இரு மொழியிலும் தனித்தனியாக அச்சான்றைத் தந்தது குறிப்பிடத்தக்கது.

அன்று காலை விகடன் பாராட்டுச்சான்று பெற்று உடனடியாகக் கிளம்பிவிட்டேன். அங்கிருந்து முதன்முறையா காஞ்சித் தலைவன் பிறந்த மண்ணுக்குப் படையெடுத்தேன். அண்ணா அரங்கில் எல்லாருக்கும் பரிமாறப்பட்ட “முகநூல் வேந்தன்” விருது எனக்குக் கிடைத்திருந்தது. தொடர்ச்சியான என்னுடைய முகநூல் செயல்பாட்டுக்கும், நான் வெளியிட்டு அதிகம் பகிரப்பட்ட காதலர் தின காணொளிக்கும் அது கிடைத்திருந்தது.

செப்டம்பர் மாதம் :
ஆகஸ்ட் மாதத்தில் திருவாரூர் மாவட்ட அளவில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் முதலிடம் பெற்றதால், அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ந்த மாநிலப் போட்டியில் கலந்து கொண்டிருந்தேன். அதில் மாநில அளவில் நான்காம் நிலை வெற்றி அதாவது, ஆறுதல் பரிசு பெற்றேன். செப்டம்பர் 15 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் மு.கருணாநிதி அவர்கள் பரிசு தந்திருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவனை, தமிழ்நாட்டின் பல்லாயிரம் உடன்பிறப்புகளின் உற்ற தோழனை அவனது குகைக்குள்ளே சென்று வாழ்த்து பெற்றது பசுந்தோல் போர்த்திய நினைவுகள்.

அக்டோபர் மாதம்:
இராமலிங்கர் பணிமன்றத்தின் பொன்விழா ஆண்டு. மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த போட்டியில் தஞ்சாவூர் மண்டல அளவில் கவிதைப்போட்டியில் முதலிடம் பெற்றிருந்தேன். “உனக்கு நீயே ஒளியாவாய்” எனும் தலைப்பில் நடைபெற்ற அக்கவிதைப் போட்டியில் மரப்புக்கவிதையில் குறள்வெண்பா நடையில் எழுதியிருந்தேன். பத்துநாட்கள் சென்னை மயிலாப்பூர் ஏ.வி.எம் மண்டபத்தில் நிகழ்ந்த நிகழ்வில் மூன்றுநாட்கள் கலந்து கொண்டேன். கண்ணில் பார்வை குன்றியிருந்த அந்நாட்களில் தனியாக அச்சூழலை எதிர்கொண்டது எனக்கே ஆச்சரியமாயிருந்தது. அந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் மணிவிழா நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.
திசம்பர் மாதம் :
பன்னெடுங்காலமாக ஆவலாக எதிர்பார்த்த நாடாளுமன்றப் பயணம் இந்த ஆண்டு நிறைவேறியது. ஏப்ரல் மாதம் - திசம்பர் மாதம் என இரண்டு மாதங்களிலும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஒன்று கோடைக் காலம். மற்றொன்று குளிர்காலம். குளிர்கால கூட்டத்தொடர் நடப்பதையும் நேரில் நோக்க முடிந்தது.

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல்குடிமகன் இருக்கும் இராஷ்ட்ரபதிபவன் - குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து அவரோடு படமெடுத்துக் கொண்டோம். மேலும், ஜனாதிபதி விருந்து ஏற்றுக்கொண்ட முதல்முறை இதுவே. (இனி எத்தனை முறை பெற்றாலும், முதல் முறை பெற்றதை மறக்க இயலாது). அதோடு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  உட்பட பல எம்பிக்களை அவர்தம் இல்லத்தில் சந்தித்தேன். 

அக்‌ஷர்தாம் கோயில் மடாதிபதியோடு பேசினோம். பின் மாலை வேளையின் நீர்க்காட்சி அமைப்பு கண்டு அதிசயித்துப் போனேன். இந்தியாவின் நவீனம் மிகச் சிறப்பாக இவ்வளவு கட்டமைப்பாக இருக்கும், அது சாத்தியமே என்பதை உணர்த்தியது அந்த நீர்க்காட்சிகள்.

இந்தாண்டின் இறுதியில் சொல்லவருவது என்னோவெனின்,

நிச்சயிக்கப்பட்ட வெற்றியை விட நிதர்சன வெற்றியை கொண்டாடுகிறேன். அதன் வழி ஊடுருகிறேன். பயணப்படுகிறேன்.

இந்த 2௦16ல் நேர மேலாண்மை முக்கியப்பங்கு வகிக்க வழிகோலட்டும். நிகழாண்டு ஏப்ரல் வரை சந்திக்கும் ஒவ்வொரு நாளும், என் கல்லூரிக்கும் எனக்குமான இறுதி நாட்கள். இதை உணர்வு ரீதியாக எதிர்கொள்ளுதல் எதிர்காலத்தின் ஏற்றத்திற்கு உதவும்.

இந்த மே மாதத்துக்குப் பின்னான செயல்பாடுகளால் எதிர்கால நிலைகள் மாற்றம் கொள்வது உறுதி. (ஏனெனில் எனது இளமறிவியல் இயற்பியல் படிப்பு நிறைவுறுகிறது). அதனையே எண்ணிக் காத்திருக்கிறேன். அந்த மாற்றமே என்னை பரிமாணத்திற்கான பிரதிநிதியாக அழைத்துச்செல்லும்.

எப்படியாயினும் சென்றதை விடவருவது ஒரு மடங்கு மேலிருப்பதை எல்லாரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான்.

வரும் இரண்டாண்டு நிறைவு; நூறு மடங்கு வளர்ச்சி.
த.க.தமிழ் பாரதன்
Tamil Bharathan
சென்ற 2014 ஆண்டின் பதிவு
http://bit.ly/2C10FsS

2016ஆம் ஆண்டுப்பெட்டகம்



A Best Year in my life 2016
ஆகச் சிறந்த வாய்ப்புகள் வழங்கிய ஓராண்டு 2016
  • முதல் வாக்குப்பதிவு
  • முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பணி
  • முதல் பட்டிமன்ற நடுவர் 
  • முதல் முறை தொலைக்காட்சி பேச்சரங்கப் பணி
  • முதல் முறை மாநிலத்தில் பேச்சில் முதல் பரிசு 
  • முதல் முறை மாநிலத்தில் கவிதையில் முதல் பரிசு
  • கவிதை முதல் அச்சுப் பிரதி வெளியீடு
  • முதல் ஆல்பம் பாடல் எழுதியது
  • திருவிக கல்லூரி தொடர்சாதனையாளர் விருது
  • தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை
  • தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக பல்லாயிரம் கிமீ பயணம்

இன்னும் ஏராளம் தந்து சென்றிருக்கிறது 2016

2016
என்னை பலரோடு இணைத்தது : Watsapp
என்னை என்னோடு இணைத்தது : இலக்கியப் பட்டறை

இந்த 2016ஆம் ஆண்டு துவக்கத்தில் தான் நான் ச்மார்ட் போன் வாங்கினேன். அதுவும் நான் தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தினமலர் நடத்திய போட்டிகளில் வென்று வந்த ரொக்கம் கொண்டே வாங்கினேன்.

உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 ஆம் தேதியோடு முடிவெய்திய இளந்தமிழர் இலக்கியப் பட்டறை எனக்கு மிகப்பெரிய பரந்த வெளியை அறிமுகப்படுத்தி ஆட்சி செய்ய அதிகாரமளித்தது.

என் வாழ்வின் வசந்த காலத்தின் வாயிற்படிகளிலிருந்து முழுவதும் விடுபட்டு எதிர்காலம் எனும் காலப் பேழைக்குள் அடியெடுத்து வைத்தேன்.

திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரி, எனதுத் திறன் மீதான என் நம்பிக்கையை விசாலமாக்கியது, தலைவனாக்கியது, எழுத்து ஆளனாக்கியது. கல்லூரியின் ஒவ்வொரு தென்றல் காற்றிலும் என் மனவாசனை வீசிக்கொண்டே யிருக்கும்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிலையில்லாத் தன்மையிலே உள் சென்றாலும், என்னை இரு மாதங்களுக்கு உள்ளாகவே நிலைநிறுத்திவிட்டேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் கல்விப் பயணத்தின் ஒப்பற்ற இடத்தை பிடித்துள்ளது பல்கலை. படிப்பு.

நீ கலைத் துறை மாணவனா ? நீ அறிவியல் துறை மாணவனா ? என்று கேட்கும் போது நான் ”அறிவியல் தமிழ் மாணவன்” எனச் சொல்லுமளவிற்கு இயற்பியலில் இருந்து துறையை தமிழுக்கு மாற்றிய ஆண்டு.

பேச்சுத் துறையிலும், எழுத்துத் துறையிலும், ஊடகத் துறையிலும் எண்ணற்ற ஆளுமைகளை அவர்களுடன் அளவளாவிய ஆண்டு.

எனக்கும் என் மனதிற்குமான உலகை உலகறியச் செய்த ஒரு நாள் ஏப்ரல் 09 2016. எனது கட்டுப்பாடுள்ள கட்டற்ற கவிதைகளின் களினடனம் புரித் தொகுப்பு ”எழுத்துப் பறவை” கையெழுத்துப் பிரதியாக வெளிவந்தது.

தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு சென்று வந்த வருடம் இது, பல மனிதர்கள், பல செயற்பாட்டாளர்கள், பல கருத்தரங்குகள், பல மனோ நிலையாளர்கள், பல சிந்தனையாளர்கள் என பன்முக மனிதர்களின் மொத்தக் கூடாரத்தையும் ஒற்றை மனிதனாய் சந்தித்தது.

முகநூலில் 2000க்கும் மேற்பட்டவர்கள் நண்பரான ஆண்டு.

வாழ்க்கை இது தான் என்று ஒவ்வொருவரும் பாடம் எடுக்கிறார்கள்., ஆனால், என் வாழ்வை நான் மட்டுமே வாழ முடியும் என்பதே மெய் என்பது ஆழ் மனதில் அடிக்கடி வந்துதித்து நம்பிக்கைத் தருபவை.

நல்லதெனினும் தீயதெனினும் நானிலம் மீதினில் நானறிந்து நடக்கும் அனைத்தும் என் மனதால் முழுதும் அகழ்வாயும்.

பெரும்பாலும் தனிமையில் காலம் தள்ளிய எனக்கு கலையுலகில் தனியுலகில் என பல நூறு நண்பர்களை வாரி வழங்கிய ஆண்டு., தோழர்களும் தோழிகளும் தோள் கொடுக்கும் தூரம் மட்டும் தொலையாது, தொலைதூர இலக்குள்ள முகவரிகள்.

நான் கடக்க வேண்டிய பாதை எனக்குமானதாக எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதே அவா.

அந்த வகையில் மேலும், யாம் இடம் பிடிப்பதற்கான ஒப்பற்ற ஆண்டாக 2017 அமைய வேண்டும் என நம்புகிறேன்.

2017இன் கருதுகோள் = 2018இல் அறிவீர்கள்

-த.க.தமிழ்பாரதன்
http://tamilbharathan.blogspot.in/

சனி, 23 டிசம்பர், 2017

கரையமறுக்கும் மண்சுவர்...!

உங்கள் வகுப்பிலே அமைதியான யாருடைய கவனத்தையும் ஈர்த்திடாத ஒரு நண்பர் இருக்கிறாரா ..! அவரை என்றைக்காவது கவனித்தது உண்டா..! அவரது செயல்களுக்குக் காரணம் கண்டதுண்டா..! அவரைப் பற்றி அவர் மனத்தைப் பற்றிய முழுப் புரிதலை அறிந்ததுண்டா.! 

முடிந்தால் நீங்கள் அந்த அமைதியான நண்பரைப் பற்றி முதலில் அறிந்துகொள்ளுங்கள்., அறிந்துகொள்ள முயற்சியாவது செய்யுங்கள்...

அந்த ஆண்டு இறுதி டிசம்பர் தொடக்கமாக இருந்ததை நீங்கள் அறிவீர்களேயானால், அப்போது நாங்கள் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் B.Sc இயற்பியல் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தோம் என்பதையும் அறிவீர்கள். முதற்பருவம் படித்து முடித்து பல்கலைக்கழகத் தேர்வுகள் முடிந்து விடுமுறையும் முடிகிற தருவாய் அது.  

பருவத்தேர்வும் பருவமழையும் சற்றே தணிந்திருந்த ஞாயிற்றுக்கிழமையில் படித்து தேர்வெழுதி இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்கிற இறுதிப்பருவத்திற்காக தயார் செய்துகொண்டிருந்தாள் செல்வராணி. 

வீட்டின் மூத்த மகள், அப்பா அம்மா, தென் ஓடாச்சேரி கிராமத்திற்கு என எல்லாருக்கும் செல்லராணி. எங்கள் வகுப்பின் அதிகம் பேசாத ஒரே ஆகாசவாணி. எல்லாவற்றிற்கும் சினேகச்சிரிப்பை மட்டும் பதிலாகத் தரும் நல்லவள். தானுண்டு தன்வேலையுண்டு என்றிருக்கும் தனிப்பிறவி அவள். 

அன்றைக்கும் அப்படித்தான்.

அடுத்தநாள் கல்லூரி செல்லவேண்டி, மழைபெய்தோய்ந்த அந்த கார்த்திகைக் கார்முகில் மேகக்கூட்டத்தின் கீழ் தலைஉலர்த்திக்கொண்டிருந்த செல்வராணியின் ஒரு கூக்குரல் அலறல் சத்தம் இருவீட்டைத் தாண்டிக்கேட்டிருந்தது. 

பெய்த மழையில் ஈரத்தை உள்வாங்கிய சுவர்கள் ஈரமற்று, தன் வீரத்தை ஒரு  சிறுபிள்ளையிடம் காட்டிவிட்டது. தான் வளர்த்துவந்த மாட்டிற்கு தன் கூரை வீட்டுக்குள் இடம்கொடுத்த செல்வராணியின் தந்தை பெயர்ந்த சுவர்களை எடுப்பதற்கு அவளது உயிர் பெயர்ந்துவிட்டதை உடனிருந்தவர்கள் அறிவர்.

எங்களுக்குத் தகவல் தெரிந்து சென்று பார்ப்பதற்குள், கூரை வேயப்பட்டு குடும்பம் வாழும் வீட்டுக்குள் அதே உவகைபூத்த உதட்டுடன் வெற்றுடலாகிக் கிடக்கிறாள் அவள். அதிகம் பேசாத ஆகாசவாணியான அவளின் இறப்புச் செய்தி, அன்று அனைத்துச் செய்திச்சேனல்களிலும் ஒளிபரப்பானது.

உள்ளூர் பிரமுகர்கள், அரசியல்கட்சியினர், நண்பர்களாகிய நாங்கள், படித்துக்கொண்டிருக்கக் கூடிய நீங்கள் இன்னும் வியாபித்திருக்கக்கூடிய எல்லாமும் சேர்ந்து அவளை இறக்கவிட்டுவிட்டோம். 

இன்னும், 
  • அப்புறப்படுத்தப்படாத இடிபாடான சுவர்கள்,
  • களிமண் குதம்பிய வாசல்வெளி, 
  • மாடு கட்டி இருந்த சமையலறை, 
  • தூரத்தில் இருந்த சிறு கழிவறை,

இன்னும் எக்கச்சக்கமாய் அந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் இந்தியாவிற்குத் துளியும் தொடர்பற்ற பொருண்மையில் இருந்த வீட்டில் அவளது இறுதி நாள் அன்றோடு முடிந்திருந்தது. ஆனால், இன்னும் எத்தனை செல்வராணிக்கள் நமக்குத் தெரியாமலே இருந்து, இறந்துவிடுகின்றனர் என்பதை நினைக்கையிலே 

நெஞ்சு பதைக்கும்,
சாற்ற வாய்பதைக்கும்...! என்ற பாரதிதாசனின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

குடிசை மாற்று வாரியத்திற்கு குடிமைப்பணித் தேர்வெழுதி பொறுப்பிற்கு வருபவர் ஒரு குடிசையிலிருந்து வந்தவராக இருப்பின் அல்லது குடிசைக்காரனின் நண்பனாக இருப்பின் அவ்வாரியத்தின் தேவை அடுத்த ஐந்தாண்டுகளில் இல்லாமலே போய் விடும். 


செல்வராணி எங்களுடன் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு குழுப்படம் (சமத்துவப் பொங்கல் - 2015)


அவளது இறப்பின் பின்னெழுதி முகநூலில் ஏற்றியது


கரைய மறுக்கும் மண் சுவரும் ;
காகத்திற்கு சாதம் வைக்கும்
குடிசை மற்று வாரியமும்

காலத்தின் ஓட்டத்தில் ஓட
மறுத்த மக்களின் மடமைக்கும்,

கெஞ்சி கேட்ட மக்களுக்காக
பெஞ்சி கெடுத்த மழைக்கும்,

இன்னும் மறையாத அந்த கால
மண் சுவருக்கும்,

எப்போது அழைத்துச் செல்லலாம்
என்றிருந்த காலனுக்கும்,

ஆடு மாடுகளுக்கு இடம் தந்து
வெளியே சென்ற தன் மனதிற்கும்,

மழைக் குளிரிலும், கல்லூரி செல்ல
முடியை காயவைத்த கடமைக்கும்,

கிடைத்த அருமைப் பரிசாக
உடலிருந்தும் உயிர் இல்லாத
வெற்று உடலாக கிடக்கிறாள்
அங்கே ஒரு தோழி.

குணத்திலே பொறுமையும்,
நிறத்திலே பெருமையும்,
மனத்திலே வெறுமையும்,
முகத்திலே மகிழ்வையும்
உதட்டிலே தெளிவையும்
அகத்திலே ஒளியையும்
கொண்டிருந்த அந்த
“செல்வராணி”

தான், தான் முதல் பிள்ளை,
செல்வம் சேர்ப்பாள்,
ராணியாய் வாழ்வாள்,
என்பதற்காய் வைத்த
பேரு என தந்தை
கூறியதற்காக
பிறந்த பின்னரும்
செல்வம் சேர்த்தாள் சிறுக...
இறந்த பின்னரும்
செல்வம் சேர்த்தாள் பெருக...

சுவர் இடிந்து
உயிர் பிரிந்த
பழைய வலத்து
புதிய நாயகி...

தாக்கத்தோடு,
உம் தோழர்கள்....

முகைய்தீன் இப்னு அரபி, விபவகுமார், கமலநாதன், தேவநேசன், ஆனந்த் மற்றும் பலர்

06.12.2015

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தூய்மை பாரதத்திற்கான விழிப்புணர்வு வாசகங்கள்

தூய்மையான பாரதம்
வளமான எதிர்காலம்


சுத்தம் சுகாதாரம்
நித்தம் உருவாக்குவோம்

மகாத்மா கனவினை
மாண்புடன் நனவாக்குவோம்

தூய்மையான உலகத்திற்கு
பசுமையான இந்தியாவை
முன்னோடி ஆக்குவோம்

நாம் தேசத்தின் தூய்மைக்காக
100 மணிநேரத்தை செலவிடுவோம்

இந்த உறுதிமொழியை 100 நபர்களை
எடுக்கச் செய்வதற்கு முயலுவோம்

நாம் நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும்
நம் ஊரையும் நம் தேசத்தையும் தூய்மையாக
மாற்றம் செய்ய முயலுவோம்


கிராமங்களிலும் நகரங்களிலுமிருந்து
தூய்மை இந்தியாவை உருவாக்குவோம்

தூய்மையை தாய்மைக்கு நிகராக்குவோம்

தூய்மையான பாரதம்
வலிமைமிகு வரலாறு

குப்பைகளை போடமாட்டோம்
மண்ணை மலடாக்க மாட்டோம்


மண்வளம் காப்போம்
மழைவளம் பெறுவோம்

தூய்மைக்குத் துணை நிற்போம்
வாய்மைக்குக் குரல்கொடுப்போம்

முந்திய குப்பைக்கூளங்கள் - நாம்
நிந்தித்தே வெளியேற்றுவோம்
விந்திய மலைத்தொடர் - நாம்
சிந்திய வியர்வை பேசட்டும்

திங்கள், 11 டிசம்பர், 2017

மீன் உண்ணா மீனவ நண்பன் !

நேற்றைய முன் தினம் காரைக்கால் பண்பலை 100.03 இல் சூரியன் தின்று மீதமிருந்த பிற்பகலில் மீனவ நண்பனின் நேர்காணல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.


  • எப்படி மீன் பிடிப்பார்கள் ?
  • என்னென்ன கருவிகள் கொண்டு செல்வார்கள் ?
  • மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன ?
  • மீன்பிடிப்பில் கையாளும் தொழில்நுட்பம் என்ன ?
  • மீன்களை எப்படி சந்தைப்படுத்துவது ?
  • அதன் பொருளாதார மீட்டுருவாக்கம் எப்படி ?
  • திமிங்கலம் கிடைக்குமா ?
  • அரிய வகை உயிரினங்களை என்ன செய்வீர்கள் ?


என மீனவ நண்பனின் அன்றாடப் பணிகளை வானொலி நிலையத்தார் கேட்க, ஒவ்வொன்றையும் கண் முன் விரியும் கடல்பரப்பில் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தான் அந்த மீனவ நண்பன்.

கேட்கப்பட்ட கேள்விகளினூடே ஒரு கேள்வி சற்றே நிதானித்தது..

நீங்கள் விரும்பி உண்ணும் மீன்வகை எது என வினா எழுப்பினார் நேர்காணல் செய்தவர்.

“நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ, எங்க அப்பா, அம்மா எனக்கு சோறு போட்டாங்க, என்னுடைய சாமிங்க அவங்க.

நான் வளர்ந்து தொழிலுக்கு வந்ததுக்கு அப்புறம், இந்த மீனு தான் எனக்கு சோறு போடுது, என்னுடைய சாமிங்க அது”.

என்று பதிலளித்து அடுத்த கேள்விக்கு ஆயத்தமானான் செய்யும் தொழிலை தெய்வம்  என்றெண்ணிய அம்மீனவ நண்பன்.

இதைப் பதிவேற்ற இணையம் திறக்கையிலே,  கடலில் மேற்பரப்பில் படகின்றி மிதந்து கொண்டிருந்தான் மீனவ நண்பன் 😭😓😓😓


- த.க.தமிழ்பாரதன்
11.12.2017



சனி, 28 அக்டோபர், 2017

சீயான் விக்ரமிற்கு ஒரு கடிதம்

சீயான் விக்ரமிற்கு ஒரு கடிதம்

வணக்கம் சீயான்,
 
 
ஒரு உண்மை நடிகருக்குஉண்மை ரசிகனின் மடல்.  நலம் நலமறிய ஆவல்.  இந்த கடிதத்தை எனக்கு எழுத வாய்ப்பு தந்தது நீங்கள்உத்வேகம் தந்தது நீங்கள். எழுதுமளவிற்கு என்னை தகுதிக்கு உட்படுத்தியதும் தாங்கள் எனக்குள் விதைத்த வசனங்கள்.  எனக்குள் இருந்த  இரசிப்புத் தன்மையை வெளியே வெளிக்கொணர்ந்தது விக்ரம் எனும் தனிமனிதனின் திரைப்படங்களே.
 
பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, குதிரையேற்றம், நீச்சல் விளையாட்டுகளையும் கற்றுத் தேர்ந்தவர். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் தனது தந்தையின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை லயோலா கல்லூரியில் படித்து முடித்தவர். கல்லூரியில் படிக்கும்போது ஒரு வாகன விபத்தில் படுகாயமடைந்து மூன்று வருடம் மருத்துவமனையிலிருந்த விக்ரம் தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர்.
 
நான் பார்த்த விக்ரம் பொறுத்தவரை,  ஓவர்நைட் ஸ்டார் அல்ல அவர். நாயகனாக அவரது துவக்கம் ஆஹா ஓஹோஎன்றெல்லாம் இருக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், 1991ல் வந்த ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் ஓரளவு அடையாளம் காட்டியது. பிறகு பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில்1992ல் மீரா திரைப்படம். இப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாய் 1999 ஜனவரியில் வெளியான பார்த்திபனின்ஹவுஸ்ஃபுல் படம் வரை பல படங்களில் நடித்தவர். மலையாளம், தெலுங்கு என்று போய் துணை நடிகர், துண்டு துக்கடா என்றெல்லாம் பாராமல் வெறியோடு நடித்துக்கொண்டே இருந்தவர். 
டிசம்பர் 1999 ல்  வெளியானது பாலாவின் 'சேது'. ஊரே பற்றிக் கொண்டாற்போல, ‘யார்யா இந்த மனுஷன் என்று கொண்டாடியது. விக்ரமை ஓரளவு தெரிந்திருந்த போதிலும், சேது படம் வெளிவந்தபோதுதான்,  ‘அட.. அமராவதி படத்தில் இவர் அஜித்க்கு டப்பிங் குரல் கொடுத்தார்.. காதலன்ல பிரபுதேவா குரல் யார்துன்னு நெனைக்கற?விக்ரமுது! என்று இவரைப் பற்றிய விவரங்களைச் சொல்லி மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். கென்னி என்று நண்பர்களால் அழைக்கப்படும் விக்ரம், எங்களைப் போன்ற ரசிகர்களால் 'சீயான்' என்று அழைக்கப்பட்டது சேது படத்தினால்தான்.
 
சேது படத்தின் கடைசி காட்சியில் இயலாமை கலந்தபடி நாயகியின் உடலைவிட்டு நீங்கி வெளியே நடக்கும் காட்சியில், ஒரு தேர்ந்த நடிகருக்கான அனைத்துத் திறமைகளையும் வெளிக்காட்டியிருப்பீர்கள்.

சில நிமிடங்களே வரும் பெண் கதாபாத்திரம் என்றாலும் சரி.. உழைப்பு நூறு சதம்தான்! 'அந்நியன்' திரைப்படத்தில்'மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி' யாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராமானுஜம் என்கிற அம்பியாக, சமூக நலனுக்கெதிரானவர்களைப் பழிவாங்கும் அந்நியனாக, நாயகியை விரட்டி விரட்டிக் காதலிக்கிற ரெமோவாக மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிற பாத்திரம்.
உங்களது சக்ஸஸ் சீக்ரெட், அர்ப்பணிப்புதான். இயக்குநர் ஷங்கரின் '' திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டியும், பின்பு, கடும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் ஒல்லியாக இளைத்தும் ஆச்சரியப் படுத்தினீர்கள். படத்திற்கு என்ன தேவையோ அதைச் சற்றும் யோசிக்காமல் செய்யக்கூடியவர். உடல் இளைக்க வேண்டுமா உடல் எடையைக் கூட்ட வேண்டுமா உடல்நிலையைப் பற்றித் துளியும் கருத்தில் கொள்ளாமல் நூறு சத உழைப்பைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆரம்பம் முதலே செயல்படுத்தி வருபவர்.என தங்களைப் பற்றிய எங்களின் அபிமானம் எல்லாம் அதிகபட்ச வெகுமானம். 
சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளவர் நீங்கள். இந்திய திரைப்படத் துறையின் ஐந்து ஃபிலிம்ஃபேர் விருதுகளும் மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு கொடுத்த கௌரவ டாக்டர் பட்டமும் பெற்ற பெருமைக்குரிய எங்களின் சீயான் நீங்கள்.
  
தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள், வறுமையால் கல்விகற்க முடியாத குழந்தைகளுக்கு கல்வியளித்தல் போன்ற சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த அதீத மழை வெள்ளப்பெருக்கின் கூட 'Spirit of chennai' எனும் பெயரில் வெள்ள நிவாரணப் பாடல் ஒன்றை தயாரித்து அவரே இயக்கினீர்கள்.
 
2011 ஆம் அண்டு 'UN - HABITAT' அமைப்பு உங்களைத் தூதுவராக நியமித்தது. இந்த அமைப்பின் நோக்கம் பெண்கள் முன்னேற்றம், இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குதல், சமூக வேறுபாடுகளை வேரோடு களைதல் மற்றும் சிறப்பான நீர் மேலாண்மை போன்ற திட்டங்களை பரவலாக அனைவரிடமும் கொண்டுசேர்ப்பது என்பதும் குறி்ப்பிடத்தக்கது.
 
எல்லாவற்றிற்கும் மேலாக கேரளாவில் நிகழ்ந்த விழா ஒன்றில் தங்களை நோக்கி வந்த ரசிகரை காவலர்கள் தாக்க அவர்களைத் தடுத்து அந்த ரசிகனை ஆட்கொண்டு அவனது மகிழ்ச்சிக்கு செவிமடுத்தீர்கள் என்பது எங்கள் நெஞ்சங்களைக் குளிர்வித்த நீரூற்று.

 இதுவரை கூறியதெல்லாம் தாங்கள் இவ்வளவு நாட்கள் வரை செய்திட்ட சாதனைகளின் சரீரம்.  அந்தச் சாதனைகள் மென்மேலும் சிறந்தோங்கி வளர வேண்டும் என்பதே எங்களின் அவா.  இந்நேரத்தில் தங்களுக்கு திருமண வயதில் பெண் இருக்கிறார் என்பதே ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தான் எனக்குத் தெரியும்.  அந்த அளவிற்கு நீங்கள் வயது முதிர்ந்தவர்கள் என்பதை இந்த செய்தி தான் எங்களுக்கு நினைவு படுத்தியது.
 
தங்கள் புதல்வியின் திருமணம் சிறப்பாகவும் செம்மையாகவும் நிகழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  தங்களுக்கு இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில் ஒன்று கூற விழைகிறேன்.  நடிகரை நடிகராக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது முற்போக்குவாதிகளின் கூற்று.  அது ஏற்றுக் கொள்ளக் கூடியதும் கூட. அது மற்றவர்களுக்கு பொருந்தும் என்று சொன்னலும்நான் தங்களை அவ்வாறு பார்ப்பதில்லை.நடிகர் என்கிற தகுதியைத் தாண்டி நிறைய அனுபவமும் பொதுநலனும் கொண்ட தங்களின் வாழ்வில் இது ஒரு முக்கியப் பங்கை அளிக்கலாம்.
 
மாறிவரும் இந்தக் காலாச்சார சூழலில் நாம் வாழும் பூமி மிகவும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.அதே வேளையில் இருக்கின்ற மனிதர்களுக்கிடையேயான இடைவெளி என்பது குறைந்து கொண்டே வருகிறது.  எல்லா வற்றிற்கும் மேலாக மனித குலம் தம் குலத்தையே அதிகம் நாடுவதில்லை.  நீங்கள் தங்களின் புதல்வியின் திருமணத்தை எவ்வாறெல்லாம் நிகழ்த்த வேண்டும் என்று எண்ணி இருப்பீர்கள் என்று  ஒரு தந்தையின் இடத்திலிருந்து நானறிகிறேன்.

ஆயினும் தற்போது நடிகை வித்யா பாலன் வெளியிட்டிருக்கும் திருமணம் குறித்த பெண்களின் பார்வை என்ற கணக்கெடுப்பில்,  58 % சதவிகிதர்க்கும் மேலான  பெண்கள் தங்கள் திருமணம் ஆடம்பரமாக இருப்பதை விரும்பவில்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.  பெண்ணை ஆடம்பர பொருளாக பார்க்கும் உச்சம் தான் ஒரு பெண்ணின் திருமண கோலம்அவள் தலை நிமரக்கூட வாய்ப்பில்லாத வகையில் ஆபரண நகைகளை அவள் மீது வலுக்கட்டாயமாக  திணிப்பது.
 
இந்த சமூகத்தின் முன்னணியில் இருக்கக்கூடிய சீயான் எல்லாருக்கும் முன் மாதிரியாக தனது புதல்வியின் திருமணத்தை நிகழ்த்த வேண்டும் என்பது எனது அவா.  அது பசுமைத் திருமணமாக இருக்கலாம்புத்தகக் கொடை திருமணமாக இருக்கலாம்விவசாயிகள் மகிழ்வுறும் வகையிலான திருமணமாக இருக்கலாம்.  பிளாஸ்டிக் தவிர்ப்புத் திருமணமாக இருக்கலாம்அதைத் தாண்டி தமிழ் முறைப் படி எளிய திருமணமாக இருக்கலாம். 
 
எல்லாரும் வியக்கும் வகையில் திருமணம் என்பது ஆடம்பரத்தில் இல்லஅதிசயிக்கும் ஆழ்ந்த சித்தாந்தத்தில் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும்எங்கெல்லாம் இது போல் முயற்சி செய்பவர்களை எள்ளி நகையாடுபவர்கள் இருக்கிறார்களோஅவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை சீயான் தர வேண்டும்,என்பதே எனது அவா.  நீங்கள் அவ்வாறு முயற்சி செய்தால்அது எங்களுக்கு மேலும் புத்துணர்ச்சியைத் தரும்மேலும் அது பலரை இயற்கையை நோக்கி அழைத்துச் செல்லும்,

 
நல்ல பாதையைத் துவக்குவதற்கு அதிலே பயணிப்பதற்கு புதிதாக இயக்கம் கட்டி காலம் முழுவதும் வழி நடத்துவது தேவையில்லை. சிறு செயலின் மூலம் சமூகத்தின் மாற்றத்தை தர முடியும் என்பதை நீங்கள் செய்ய வேண்டும்செய்வீர்கள் என நான் நம்புகிறேன். அதனைத் தங்கள் மகளின் திருமணம் என்னும் நிகழ்விலிருந்து துவக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

வெகு பிரமாண்ட திருமணங்கள் வெற்றிகரமாக போகாததற்கு அந்த நபர்களும், அவர்கள் குடும்பமும் ஒரு காரணமாக இருந்தாலும், திருமணத்திற்கு அதிவிரயம் செய்யப்பட்ட பணமும், அதைப் பார்த்து சபித்து தன்னால் தன் தேவை நிறைவேற்ற வியலாத சாமானியனின் பார்வையாகக் கூட இருக்கலாம். ஏதோ ஒரு தேசத்தில் வாழும் சராசரி சாமனியனும் தங்கள் மகளின் திருமணத்திற்கு மனமார வாழ்த்த வேண்டும் என ஏங்கும் உள்ளத்தில் எனது உள்ளமும் ஒன்று.
 
தங்களின் மகள் அக்ஷிதா அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள்.
 
இப்படிக்கு,
 தங்களின் மீது தீராத அபிமானமும்
 தெவிட்டாத நல்லன்பும் கொண்ட 
மேற்படி எழுதிய இரசிகன் 

விக்ரம் மீது அணைகட்டவியலாத இரசிகர் ஒருவர் நடிகர் விக்ரம் மகளின் நிச்சயதார்த்தம் குறித்த தகவல் அறிந்து 06.04.2016 அன்று பொருண்மை சொல்ல, அவருக்காய் என் நடையில் எழுதிய கடிதம். 08.04.2016 அன்று நடிகர் விக்ரம்-க்கு அனுப்பப்பட்டது இக்கடிதம்.

- த.க.தமிழ்பாரதன்
28.10.2017