நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

திங்கள், 31 ஜூலை, 2017

சுந்தரர் - பரவைநாச்சியார் காதல் திருமணம் !?


                திருவாரூரில் ஆடி சுவாதி விழா 30.௦7.2௦15 மக்களின் உற்சாகத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.  மாப்பிள்ளைஅழைப்புபெண்அழைப்புவரிசைஎடுத்தல்பத்திரிகை அடித்து திருமணம்மொய் வைத்தல், விருந்து படைத்தல் என எம்பெருமானின் நண்பனுக்கு திருமணம் நடந்தேறியது. திருவாரூரில் 63 நாயன்மார்களில் நால்வரில் ஒருவராக திகழக்கூடிய,சிவபெருமானின் தோழராய் விளங்கும் சுந்தரருக்கும் பரவைநாச்சியாருக்கும் திருமணம்  வெகு விமரிசையாக முடிந்தது.

காலை 6 மணிக்கு நம்பி ஆரூராரை நிறைகுடம் கொடுத்து திருவாரூர் புதுத்தெருநாலுகால் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை அழைத்தல் நிகழ்ச்சியும் மணிக்கு பெண் அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்ககாலை ௦மணிக்கு மேல் நம்பி ஆரூராருக்கும்(சுந்தரர்) பரவை நாச்சியாருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இன்று மாலை மணியளவில் நம்பி ஆரூரார் 63நாயன்மார்களுடன் ஆழித்தேரோடும் வீதியில் 63 நாதஸ்வர இசை கச்சேரியுடன் வீதியுலா காட்சியும் நடந்திருந்தது. இன்று மாலை நம்பி ஆரூரார் வெள்ளை யானையில் கயிலாய வாத்தியங்களுடன் வீதியுலா மற்றும் கயிலாயம் செல்லும் நிகழ்வுடன் ஆடி சுவாதிவிழா நிறைவுபெறுகிறது.


பேரன்புடையீர் !

சைவ சமயத்தின் பீடமாகவும்பல சித்தர்கள் அருள் நிறைந்ததும்பஞ்சபூத குலங்களில் முதன்மையாகவும்மூர்த்திதலம்தீர்த்தம்இதனுள் முதன்மையாகவும்பிறக்க முக்தி அளிப்பதும், 11 நாயன்மார்கள் வழிபாடு செய்வித்தும், 63 நாயன்மார்கள் அருவமாக உள்ளதும் திருவாரூரில் நீக்கமற நிறைந்துள்ள சிவபரம்பொருள் ஆரூரின் பற்றிடம் கொண்ட பெருமானின் பெரும் கருணையினாலும் திருநீரும்,கண்டிகையும்திருவைந்தெழுத்தும் பொருளாக கொண்ட நாயன்மார்களின் குரு அருளினாலும் நடைபெறும் கலியுக ஆண்டு 5118 வருடம் ஹேவிளம்பி ஆடி மாதம் 13ம் நாள் (ஜூலை 29) சனிக்கிழமை காலை ௦9.௦௦ மணிக்கு மேல் சிவயோக சிவதினத்தில் மேம்படு சடையனாருக்கும்வாழ்க்கை மனை இசைஞானியார்க்கும்உலகம் உய்ய அவதாரம் செய்த நம்பி ஆரூரர்க்கும் கதிர்மணி மிகுந்ததென்னஉருத்திர கணிகைமாமரம் பதியிலார் குலத்துள் தோன்றிய நங்கை பரவைநாச்சியார்க்கும் திருமணம் ” என பல நாட்களுக்கு முன்பே பொதுமக்களுக்கு திருமண அழைப்புத் தரப்பட்டன.



வேத ஆகம மந்திரங்கள் முழங்க தோத்திரங்கள் பாட ஹர ஹரசிவ சிவ என்னும் முழக்கத்தோடு பிரம்மன்விஷ்ணுஇந்திரன் போன்ற தெய்வங்களும்தேவர்களும் வந்து எதிர்கொண்டு அழைத்துச் செல்லவெள்ளை யானை மேல் ஏறிப் பறந்து சென்று முக்தியடைந்து சிவலோகம் சேர்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறு கயிலை மலையில் உபமன்னியு முனிவருக்குப் பரமேஸ்வரனால் உரைக்கப்பட்ட புனிதமான புண்ணிய வரலாறாக பாவிக்கப் படுகிறது. 

                பிரம்மலோகம்வைகுண்டம் போன்ற தேவலோகங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு விளங்குவதும் ஆணவம் (நான்எனது என்ற உணர்வு) கர்மம் (இன்பதுன்பங்கள்) மாயை (பிறவிகள்) ஆகிய மூன்று மலங்களிலிருந்தும் விடுவிக்கப் பெற்று முக்தியடைந்த தூய்மையான உயிர்களின் இடமுமாகிய சிவபுரம் என்னும் திருக்கைலாயத்தில் சுந்தரர் என்பவர் பரமேசுவரனுடைய நண்பராய்தொண்டராய் இருப்பவர். ஆலகால நஞ்சின் காற்றுப்பட்டே மேனியெல்லாம் கருத்துப்போன நாராயணன் மற்றும் பிரம்மன்இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாம் நஞ்சு கண்டு அஞ்சியோடி பூமியிலுள்ள கயிலை மலையை அடைந்து காத்தருளும்படி வேண்டினர். பரமன் பாற்கடலிலிருந்து வந்த ஆலகால நஞ்சை எடுத்து வருமாறு சுந்தரரை அனுப்பினார். சுந்தரர் உருண்டையாகத் திரட்டிக் கொண்டு வந்த விஷத்தை உண்ட சதாசிவன் அண்டசராசரங்களை எல்லாம் காத்தருளி நஞ்சை அமுதமாக்கினார். ஆலகால நஞ்சைக் கொண்டு வந்ததால் சுந்தரருக்கு ஆலகால சுந்தரர் என பெயர் அமைந்தது.சுந்தரர் ஒருநாள் திருத்தொண்டில் ஈடுபட்டிருக்கும்போது அவரது சிந்தனையும் வேறு இரு தொண்டர்களின் சிந்தனையும் வழிபாட்டிலிருந்து விலகின.  மாசடைந்த உயிர்களைத் தூய்மைபடுத்துவதற்காக மாசிலாமணீசன் மூவரையும் மானிடப் பிறவிகளாக அருளச் செய்தார்.

சுந்தரர் திருநாவலூரில் வாழ்ந்து வந்த சடையனார் இசைஞானியார் என்ற ஆதிசைவ அந்தணர்களுக்கு ஆரூரான் என்ற பெயர் கொண்ட மகனாக அவதரித்தார். மற்ற இருவர்களுள் ஒருவர் திருவாரூரில் பரவையார் என்ற பெயருடனும்மற்றொருவர் திருவொற்றியூரில் சங்கிலியார் என்ற பெயருடனும் பிறந்து வளர்ந்தனர்.திருமுனைப்பாடி நாட்டு மன்னன் சுந்தரரிடம் அன்பு கொண்டு தன் மகனாகப் போற்றி வளர்த்து வந்தான். உரிய பருவத்தில் பூணூல் அணிவித்தல் முதலிய மங்கல நிகழ்ச்சிகள் எல்லாம் முறைப்படி நடக்க சுந்தரருக்கு 16ஆண்டுகள் ஆயின.

ஒரு சமயம் சுந்தரர் திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட பெருமானைக் காண வருகிறார். அங்கு கோயிற்பணி செய்து வாழ்ந்த பரவையாரைக் கண்டு விரும்பினார். இருவரும் மணம் புரிந்து வாழ்ந்தனர். பின்னர் சுந்தரர் திருவொற்றியூரை அடைந்து தியாகேசரை வணங்கினார். அங்கு சங்கிலியார் மணவாழ்வில் விருப்பமில்லாமல் திருக்கோயில் தொண்டு புரிந்து வாழ்ந்துவந்தார். சங்கிலியாரைக் கண்ட சுந்தரர் அவரை மணம்புரிந்து கொள்ள விரும்பினார். திருவொற்றியூரை நீங்கிச் செல்ல மாட்டேன் என்று கூறி சங்கிலியாரிடம் சத்தியம் செய்து கொடுத்து மணம் புரிந்து வாழ்ந்தார்.

இந்நிலையில் திருவாரூரில் திருவிழாக்காலம் நெருங்கிய நேரத்தில் திருவாரூரைப் பிரிந்திருக்க முடியாமல் வருந்திய சுந்தரர் திருவாரூக்கு பயணமானார். சத்தியத்தை மீறி திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதால் அவருடைய கண்கள் குருடாயின. பின்னர் காஞ்சிபுரத்திற்கு சென்று ஏகாம்பரேசுவரனைத் தொழுது பாடினார். அப்போது இறைவன் ஒரு கண்ணில் பார்வை அருளினான். தொடர்ந்து பல்வேறு திருத்தலங்களுக்கு சென்று திருவாரூரை அடைந்து தியாகேசனைத் தொழுது வருந்திப்பாடி வழிபட்டு மற்றொரு கண் பார்வையையும் பெற்றார். அப்போது சுந்தரர் மறுமணம் புரிந்துகொண்டதை அறிந்த பரவையார் சுந்தரரை ஏற்றுக்கொள்ள மறுத்தார். சுந்தரர்பரவையார் மீதுள்ள காதலை தெரிவித்து தியாகேசனின் துணையை நாடினார். பெண்ணாகவும்ஆணாகவும் ஒருசேர விளங்கி எல்லோருக்கும் அருள்புரியும் அர்த்தநாரீசுவரன் வேதியர் வடிவில் சென்று பரவையாரின் சீற்றத்தைத் தணித்து சுந்தரரின் அன்பை புரியவைத்து இருவரும் சேர்ந்து வாழ அருள்புரிந்தான்.



பரமனின் உத்தரவுப்படி தனது நண்பராக விளங்கிய சுந்தரர் திருமணம் செய்துகொண்ட பரவை மாளிகைதான் தற்போது திருமணம் பரவைநாச்சியார் சுந்தரர் திருக்கோயிலாகும். இங்கு இருவரும் அருள்பாலித்து வருகின்றனர். தியாகராஜர் திருக்கோயிலில் இன்று சுந்தரர் - பரவை நாச்சியார் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. அன்பர்களுக்கு திருமண விருந்து தியாகராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் அருகே படைக்கப்பட்டது.  இன்றைய தினமும் நிகழ்வுகள் இருப்பதால் வெளியூர் பயணிகளின் வருகை இன்னும் திருவாரூர் நோக்கி விரைந்து கொண்டே இருக்கிறது.


-த.க.தமிழ் பாரதன்
(2017ஆம் ஆண்டு திருவாரூர் பெரிய கோயிலில் நிகழ்ந்த சுந்தரர் – பரவை நாச்சியார் திருமணத்தின் பொருட்டு எழுதப்பெற்றது)
31.07.2017

ஞாயிறு, 30 ஜூலை, 2017

திருநங்கைகளின் ஓவியங்கள் ...


திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள்

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காட்சி ஊடகத் துறையும் பாலியல் துன்புறுத்தல் எதிரான குழு - பாலின உணர்திறன் ஆலோசனை அலகும் இணைந்து நடத்திய இரண்டு நாள் ஓவியக் கண்காட்சி நடந்து முடிந்தது.

முதல் முறையாக ஒரு கல்வி நிலையத்தில் திருநங்கைகளின் ஓவியக் கண்காட்சி நடப்பது இதுவே முதல் முறையாகும். இதில் சென்னை கோவை காஞ்சிபுரம் நாகர்கோவில் திருவனந்தபுரம் ஆந்திரம் கர்நாடகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. ஆயிரம் ரூபாய் முதல் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரையிலான மதிப்புடையவை ஒவ்வொரு ஓவியங்களும்.



ஓவியக்கண்காட்சியில் பேசிய பல்கலை. துணைவேந்தர் பேராசிரியர் ஏ.பி.தாஸ்,

இந்தியாவில் திருநங்கைகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும் அப்போது தான் எந்தெந்த திட்டங்களில் அவர்களுக்கு வேலைக் கொடுக்க முடியும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.


திருநங்கைகளை மக்கள் புறக்கணிப்ப்தைத் தவிர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் என்று அரவணைத்துச் செல்ல வேண்டும். திருநங்கைகளை ஏற்காமலிருப்பதும் நண்பர்கள் - பெற்றோர்கள் வெறுப்பதும் நல்ல அணுகுமுறை கிடையாது. அவர்களுக்கு வேலை கொடுக்காமலிருப்பதும் அவர்களைத் தனித்து விடுவதற்கான வாய்ப்பாக அமையும்.

இதனால் புறக்கணிக்கப்பட்ட மனத்துடனே பலர் தங்கள் வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். புதிய சிந்தனையை விதைப்பதன் மூலமே மாற்றுக்கருத்தை விதைக்க முடியும். மாணவர்களால் இக்கருத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
 ஓவியம் என்பது திருநங்கைகளின் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் களமாகும். ஓவியத்திற்கு மட்டும் தான் உலகளவில் ஒரே மொழி. ஆகவே, எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஓவியத்தின் மொழி அமைவதால் திருநங்கைகளின் மனதை ஓவியத்தில் ஒருங்கிணைத்திருக்கிறார் கல்கி சுப்ரமணியம்.

அவர் பேசியதிலிருந்து,

மருத்துவத்தில், பல்கலைக்கழகங்களில் , ஊடகத்தில் என பல்வேறு தளங்களில் திருநங்கைகள் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள். அதேபோல் திருமண விழாவில், திறப்பு விழாக்களில் திருநங்கைகள் ஆசிர்வதிக்க அழைக்கப்படுகிறாஅர்கள்.  ஆனால், தனது சொந்தக் குடும்பத்தில் மட்டும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுப்பது தன் வேதனையானது.
நாட்டில் திருநங்கைகளுக்கான உரிமைகள் முழுமையாக அங்கீகரிக்கபடவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெற்றொர்களால் திருநங்கைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனாலும் தடைகளை உடைத்து சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் திருநங்கைகள் எதிர்பார்ப்பது ஆதரிப்பு மட்டுமே.

எங்களிடம் எல்லா வகையிலும், துணிவு, திறமை சாதிக்கும் ஆற்றல் உள்ளது. அதனை வெளிப்படுத்தும் ஒரு துறையாக ஓவியம் விளங்குகிறது. இதுவரை தென்னிந்தியாவில் மொத்தம் 6 பயிற்சிப் பட்டறைகள் அமைத்து திருநங்கைகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்கி அவர்களது அக உணர்வுகளை ஓவியத்தின் வழி வெளிக்கொணர்கிறோம். இதற்கு திருநங்கைகள் மத்தியில் வரவேற்பு கிட்டியுள்ளது. அவர்களது தனித்திறன் மேம்பாடு அடைந்துள்ளது. 


உலகளவில் பத்தாயிரம் திருநங்கை ஓவியர்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். திருநங்கைகளின் ஓவியத்திறனுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. “எல்லாருமே ஓவியர், உங்கள் ஓவியம் என்ன என்பதை நீங்கள் தான் வரைய வேண்டும்! என தத்துவம் கூறும் கல்கி சுப்ரமணியம்

Trans Hearts என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் திருநங்கைகளிடையே ஓவியத்திறனையும் மக்களிடையே திருநங்கைகள் உணர்வுகளையும் எடுத்துச் செல்கிறார்.

இந்த இரண்டு நாள் ஓவியக்கண்காட்சியை பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டனர். ஓவிய விற்பனையும் நடைபெற்றது.  சில ஓவியங்கள் அழகியல்  தன்மை, கருத்தியல் தன்மை கொண்டதாகவும் பல ஓவியங்கள் உளவியல் தன்மை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தன. சில ஓவியங்களை ஒன்றுக்குமேற்பட்ட திருநங்கைகள் வரைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


ஓவியத்தின் வழி ஒளி பரவட்டும் !


த.க.தமிழ்பாரதன்
30.07.2017
(தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்து முடிந்த திருநங்கைகளின் ஓவியக்கண்காட்சிக் குறித்து எழுதியது)











திங்கள், 24 ஜூலை, 2017

இந்தியக் குடியரசுத் தலைவருடன்...with The Indian President .....

அப்போது தான் அறிவிப்பு வந்திருந்தது தில்லி செல்ல தேர்வாகி இருக்கிறீர்கள் என்று. 

இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தன தில்லி செல்வதற்கு. திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்ற நிறுவனர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் அவர்கள் முன்னேற்பாடு செய்திட்டு ராம் சுப்ரமணியன் அவர்கள் ஒருங்கமைத்த அந்நிகழ்வு முக்கியமான ஒன்றாகும்.  ஏனெனில் அதுவரை நான் பங்குகொண்டதிலே மிகப்பெரிய நிகழ்ச்சிஅதுதான். நாடாளுமன்ற வளாகத்தில் திருக்குறள் செல்வர் விருதளிப்பு நிகழ்வு. 133 மாணவர்களை ஒருங்கமைத்து தில்லி அழைத்துச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய செயல் என்பதை நிகழ்வு ஏற்பாட்டாளராக இருந்து ஊகித்துப் பாருங்கள்.

மிகப்பெரிய இலக்கு. கல்லூரி மாணவர்கள் உதவியுடன் திறம்பட நேர்த்தியாக செய்திருந்தனர் விழாக் குழுவினர்.

டிசம்பர் ஜனவரி மாதங்கள் இந்தியாவின் வடமாநிலங்களில் கடுங்குளிர் நிலவும். நாசியிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடு நமக்கேப் புகையாக காட்சிதரும் முன்பனி மாதம் அது. அத்தகு வீரியமிகு பனிமூட்டத்தின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகிவிடும். சில தொடர்வண்டிகள் தாமதாகவோ இரத்தாகவோ வாய்ப்புள்ளது. அதனால் மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் காலத்தாழ்ச்சி ஏற்படும்.

வானம் வசப்படும் ஆதலின், வசந்தமும் எங்களுக்காய் வசப்பட்டது. தமிழ்நாடு விரைவுவண்டியில் ஈரிரவு ஒரு பகல் பயணம் நாளைய தமிழிளைஞர்களின் நட்போடு நவின்றது. பல மாவட்டபல பள்ளி சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்தம் பெற்றோர் ஆசிரியர் என அந்தத் தொடர்வண்டியின் பெரும்பகுதி நிகழ்வுக்கு வந்தவர்களே. தங்களுக்கிடையே குழுக்களாகி தங்கள் பெட்டியில் இருப்பவர்களுடன் ஒருங்கிணைந்தனர்.


ஓரளவு அங்கே சென்ற பெரும்பான்மையான பள்ளி மாணவர்களை விட மூத்த கல்லூரி மாணவர்களுள் நானும் ஒருவன். ஆங்கிலம் அரைகுறையாகவும் இந்தி குறைஅரையாகவும் பேசவும் எழுதவும் தெரியுமப்போது. எப்படியும் போல்செய்து தகவமைத்துக் கொள்ளலாம் என்கிற துணிவில் துணைக்கு எந்தையும் முந்தையே செய்திட்ட முன்பதிவு பயணத்தில் உடன் வந்திருந்தார். என்னினும் அதிக நட்புகளை அப்பாதான் சம்பாதித்திருப்பார்.

அதிகாலை 4 மணி இருக்கும்.  ஆக்ரா வந்தது.  அதற்குப் பின் தான் வடமாநிலக் குளிர் தன் கணைகளைக் கொண்டு தாக்கியது. கைகள் மறத்துப் போயின. உடல் எடை 68ஐ தாண்டியிருந்த போதினும் கால்கள் செயலிழந்து நடக்க மறுத்திருந்தன. இதற்கெனவே அனுப்பப்பட்ட தேவ தூதர்கள் போல கையுறை காலுறை முதலான குளிர்கால உபகரணங்களை விற்க வந்தனர் அந்த மகராசர்கள். அதைப் பெற்று உயிர்காத்த வேளையில், காலைக் கதிரவன் கண்விழித்து, வரவேற்றான் நிசாமுதீன் இரயில்நிலையத்தில்.

16.12.2015

காலை தமிழ்நாடு விரைவுவண்டி எங்களை பாதுகாப்பாகத் தில்லியில்  தரையிறக்கியது. அப்படித்தான் சொல்லவேண்டும். சில அரசு அலுவலர்களும், சமூக ஆர்வலர்களும், தமிழறிஞர்களும் நேரில் வந்திருந்து வரவேற்றனர். அங்கிருந்து MP Quartersக்கு அழைத்துச் சென்றார்கள். காலை 10 மணிக்கு எங்கள் உடைமைகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறைகளில் வைத்துவிட்டு தன்னுடல் சுத்தம் செய்திட்டு மீண்டு வந்தோம் உணவுண்ண. உண்டு முடிப்பதற்குள் அடுத்த தகவல் திடீரென. அதுவரையிலும் எங்களுக்குத் தெரியாது அந்த அறிவிப்பு.

உடனடியாகத் தயாராகச் சொன்னார்கள். தயாரானோம். வந்ததொரு வாகனத்தில் ஏறச்சொன்னார்கள். ஏறினோம். வண்டிப் புறப்பட்டது. சென்னைப் போக்குவரத்தில் பல நாட்கள் பலமணிகள் நடந்தே பாதை பயின்றவனக்கு ஏதோ அரசாங்கக் காட்டில்தான் அலைபாய்கிறோம் என்பது மட்டும் திண்ணமாகத் தெரிந்தது. நிறைவில் வந்திருந்தது ஒரு கட்டிடம். அது கட்டிடம் அல்ல. ராஜா இருந்திருந்தால் அரண்மனை என சொல்லும் விதமாக இருந்தது.

ஆம் மாளிகை. குடியரசுத் தலைவர் மாளிகை.


அழகாக பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுடன் அந்த வளாகம் அமைதியாக இருந்தது. அந்த உயர்ந்த கட்டிடத்தின் வெளியில் யாராவது பேட்டி கொடுக்க வருவார்களா என ஊடகத்தினர் உயர்த்தி வைத்திருந்த மைக்குகள் பார்த்துக்கொண்டே இருந்தன. ஒரு பத்து வருடம் அமைதியாக இருங்க என்று  சொல்லிவிட்டுக் கடந்தேம் 


காவலர்கள், கருஞ்சட்டைப் படைகள், என நான்கைந்து பிரிவுகளைச் சேர்ந்த பல தரப்பு காவலர்கள் எங்களை நோக்கி வந்தனர். நான்கு கட்ட சோதனைக்குப் பிறகு உள்ளே நுழைந்திருந்தோம். அங்கிருந்து ஒரு அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தோம். சில உயரதிகாரிகள் காதில் புளுடூத் இருந்தது. அதன்வழி வரும் உத்தரவுகள் அவர்கள் வாய்வழியாக எங்கள் கால்வழியால் நிறைவேற்றப்பட்டிருந்தன.

கால்கள் இறுதியில் நின்ற இடம் : யாரை நாயகனாய் ஊடகங்கள் கொண்டாடியதோ அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதே இடம்.  வானொலியில் பேச வேண்டுமென்றால் குடியரசுத்தலைவராக வேண்டும் என்ற அவாவை எதேச்சையாக மனதில் பதிய வைத்த ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் நினைவைச் சுமந்து கொண்டுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை. இந்தியாவின் முதல் குடிமகன் வசிக்கின்ற வளாகத்தில் விளைந்த புற்களுக்கு மேலே நின்றுகொண்டிருந்தோம்.

ஒருவழியாய் அந்த மொகல் தோட்டத்தை தொலைநோக்குப் பார்வையால் உணரும் தருவாய் கிட்டியது. குடியரசுத் தலைவர் மாளிகையின் உட்புறத்தே நாங்கள் காத்திருந்தோம். அங்கே குடியரசுத் தலைவர் வரும் வரை எப்படி நடக்கவேண்டும் என்பது குறித்த தகவல்கள் எங்களுக்கு அறிவுரைகளாக வழங்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே பேரமைதி.  காற்றுகூட கட்டுப்பட்டுக் காத்திருந்தது. நாங்கள் நேரடியாக மேடையில் ஏறி நின்றிருந்தோம். எதிர்நோக்கிய ஒவ்வொருவர் மீதும், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் கண்கள் சோதனைக் கணைகளை வீசிக்கொண்டிருந்தது.

இதோ வருவார் அதோ வருவார் வலது ஆரிக்கிளும் இடது ஆரிக்கிளும் அலைமோதிக் கொண்டிருந்த அந்த ஐந்து நிமிட இடைவெளியின் இறுதியில் அட்டென்ஷன் மோடிற்கு ஆக்டிவேட் செய்யப்பட்டது அதிகாரிகள் கால்கள். ஓரிலக்க மெய்க்காவலர்கள் உடனிருக்க நிகழ்ச்சி நடத்தும் மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் அவர்கள் உடனிருக்க, மிகுந்த வயதுக்குரிய தளர்ந்த நடையுடன் வந்தார் அந்நாளின் பாரதத் திருநாட்டின் பரந்துபட்ட நிலப்பரப்பின் குடியரசுத்தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள். 

வந்தார் எங்கள் எல்லாருக்கும் வணக்கம் சொன்னார். இரு முறை படம் எடுத்துக் கொண்டோம். வாழ்த்துச் சொன்னார். எங்களுக்குத் தயாரித்து வைக்கப்பட்ட ’ஜனாதிபதி விருந்து’க்கு அடுத்து செல்லச் சொல்லிவிட்டு, உரையாட நேரமின்றி தன் அடுத்தக் கட்டப் பணிகளைப் பார்க்க சென்றுவிட்டார் குடியரசுத்தலைவர்.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுடன்


அவரோடு கலந்துரையாட இயலவில்லை. காலம் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கிறது. அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்க வைத்தது. அதற்கடுத்த ஆண்டில் அவர் இருந்த குடியரசுத் தலைவர் மாளிகைக்குள்ளேயே அழைத்துச் சென்றது. இன்னும் காலம் இருக்கிறது. 

குடியரசுத் தலைவர் விருந்து. அடுத்த நாள் மாலை வரைக்கும் கூட தாக்குப் பிடிக்கும் அளவிற்கு நிரம்பியது மனமும் வயிறும். அந்தளவுச் சுவை. சில கிரீம் வகை கேக்குகளை திருவாரூர் தாண்டாத அந்த அரசுக் கல்லூரி நாட்களைச் சுமந்தவனுக்கு அதிசயமாகத்தானிருந்தன. இந்திய முறை உணவுகளே பெரிதும் பரிமாறப்பட்டன. இல்லே நாங்களே பரிமாறிக்கொண்டோம். அங்கிருந்த பீங்கான் தட்டுகள், ஸ்பூன்கள், அந்த உயர்ந்த அறை, சுற்றியிருந்த உயரதிகாரிகள் எல்லாமே எனக்குப் புதியவை. அந்தத் தேநீர் விருந்தே இரண்டு
 ஃபுல்மீல்ஸ் சாப்பிடும் அளவிற்கு வயிற்றை நிரப்பியிருந்தது (நிரப்பிக்கொண்டேன்;)

அன்றைக்கு இன்னொரு முக்கியமான நாளும் கூட. கூகுள் முதன்மை செயல் அதிகாரி தமிழர்/இந்தியர் சுந்தர் பிச்சை அப்போதுதான் இந்தியா வந்திருந்தார். குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அங்கத்தினருடன் பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் எடுத்துக்கொண்ட அந்தப் படங்கள் அடுத்த நாள்  தில்லி/தமிழகத்தின் தமிழ் நாளிதழ்களிலும் இடம் பிடித்திருந்தது.

இன்றளவும் பசுமையாய் உள்ளன அச்சுவடுகள். 

இதற்கு வாய்ப்பளித்த வள்ளுவனுக்கும் வள்ளுவர் மாணவர் இளைஞர் மன்ற நிறுவனர் தருண்விஜய் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ராம் சுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றி.

அவருக்கும் அடுத்துப் பதவியேற்கும் குடியரசுத் தலைவருக்கும் நல்வாழ்த்துகள்.

தக | 24.07.2017
(நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஓய்வு பெறுவதை ஒட்டி, அவருடனான சந்திப்பை நினைவு கூறும் பொருட்டு எழுதப்பட்டது)