நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 22 நவம்பர், 2019

மின்னூல் என்றால் என்ன? அதனை கிண்டிலில் வாசிப்பது எப்படி?


ஈரிருநாள் இலங்கை மின்னூல் அமேசானில் 23.12.2019 மதியம் வரை  விலையின்றி (0₹) இலவசமாகக் கிடைக்கும். https://www.amazon.in/dp/B081D9YGMD என்ற லிங்க் வாயிலாக இந்தியாவில் வசிப்போர் நூலினைப் பதிவிறக்கி கிண்டிலில் வாசிக்கலாம்.


மின்னூல் அறிமுகம் :
      காகிதத்தில் வாசிக்கின்ற எழுத்துகளுக்கு மாற்றாக, எலெக்ட்ரானிக் கருவிகளில் வாசிக்கப்படும் எழுத்துகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அச்சில் வாசிக்கப்பட்ட புத்தகங்கள் எலெக்ட்ரானிக் கருவிகளில் தவழத் தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில்  எலெக்ட்ரானிக் புத்தகங்களே (மின்னூல்) எழுத்துலகை ஆளும் என எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எப்படி வாசிக்க வேண்டும்?

      அமேசான் தளத்தில் கணக்கு வைத்துள்ளவர்களால் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். அமேசானில் லாக்-இன் செய்தபின், https://www.amazon.in/dp/B081D9YGMD லிங்க்-ஐ தொட்டால் புத்தகம் இருக்கும் பக்கத்திற்குச் சென்றுவிடும். தற்போது விலையின்றி இலவசமாகக் கிடைப்பதால், ஒரு கிளிக் செய்யும்போது, நேரடியாக கிண்டில் செயலிக்கு புத்தகம் சென்றுவிடும். அங்கு படிக்கலாம்.


கிண்டில் என்றால் என்ன?

      கிண்டில் என்பது மின்னூல்களைப் படிக்கும் கருவியாகும். இதனைத் தனியாக வாங்கியும் பயன்படுத்தலாம். இதனை ஆண்ட்ராய்ட் போனில் இருக்கும் பிளே ஸ்டோரில் சென்றும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின், இந்தச் செயலியில் அமேசான் கணக்கைக் கொண்டு உள்நுழையவேண்டும். அமேசானில் வாங்கும் நூல்கள் தாமாக இந்தச் செயலியில் திறந்துவிடும். (கிண்டில் ஆப் லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle )

மதிப்பீடுகள் Rating & கருத்துகள் Comments ஏன் செய்ய வேண்டும்.?

      ஈரிருநாள் இலங்கை நூல், தற்போது pentopublish2019 போட்டியின் குறுநூல் பிரிவில் பங்கெடுத்திருக்கிறது. அதில் இறுதிச்சுற்றுக்குச் செல்லவதற்கு மின்னூல்களின் Rating மற்றும் comments அடிப்படையானது. ஆகவே, மின்னூலைத் தரவிறக்கியதோடு, படிப்பதோடு, கருத்துகளையும் மதிப்பீடுகளையும் செய்தல் அவசியமான ஒன்றாகும். கருத்துகளை ஆங்கிலத்தில் பதிவு செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.


நூலைப் பற்றி :

2017 நவம்பர் மாதத்தில் இலங்கைக்குப் பயணப்பட்டேன். நான்கு நாட்கள் பயணித்துத் திரும்பிய அனுபவங்கள் படைப்பு குழுமத்தின் தகவு மின்னிதழில் ஈரிருநாள் இலங்கை” எனும் தலைப்பில் தொடராக வெளியானது. மொத்தம் ஏழு மாதங்கள் வந்த தொடரைத் தொகுத்து நூலாக வெளியிடலாமே என்ற சிலரது விழைவு தற்போது நிறைவேறி இருக்கிறது.


இதுவரை கண்டிராத ஒருநாட்டில் சென்றது, நடந்ததுஉண்டதுபேசியதுகற்றதுபெற்றது என்பனவற்றை இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளேன். முதுகலை பயின்ற மாணவனின் பார்வையில் அயல்நாட்டில் நான்கு நாட்கள் எப்படி உணரப்பட்டன என்பதை இந்நூல் அறிவிக்கும். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்துஇந்தியப் பிரதிநிதியாக பன்னாட்டு அரங்கில் பங்கெடுத்ததன் வெளிப்பாடு இந்நூல். நீளும் கோட்டின் ஆதிப்புள்ளி இது.


நாடுகளும் அங்கு நூல் கிடைக்கும் இணைய முகவரிகளும் :
இந்தியா     : https://www.amazon.in/dp/B081D9YGMD
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இன்னபிற நாடுகள் : https://www.amazon.com/dp/B081D9YGMD
இங்கிலாந்து : https://www.amazon.co.uk/dp/B081D9YGMD
ஜெர்மனி        : https://www.amazon.de/dp/B081D9YGMD
பிரான்சு          : https://www.amazon.fr/dp/B081D9YGMD
ஸ்பெயின்     : https://www.amazon.es/dp/B081D9YGMD
இத்தாலி         : https://www.amazon.it/dp/B081D9YGMD
நெதர்லாந்து : https://www.amazon.nl/dp/B081D9YGMD
ஜப்பான்         : https://www.amazon.co.jp/dp/B081D9YGMD
பிரேசில்        : https://www.amazon.com.br/dp/B081D9YGMD
கனடா           : https://www.amazon.ca/dp/B081D9YGMD
மெக்சிகோ   : https://www.amazon.com.mx/dp/B081D9YGMD
ஆஸ்திரேலியா :https://www.amazon.com.au/dp/B081D9YGMD


-தக | 22.11.2019



திங்கள், 11 நவம்பர், 2019

தாத்தா எனும் உடல் ! Thatha

தாத்தா எனும் உடல் #one_year_of_thatha
ஜேஎன்யு-இல் இரண்டு தேர்வுகள் மட்டுமே மீதமிருந்தன. மொத்தம் ஆறு மணிநேரம் தேர்வெழுதிவிட்டால், ஒரேடியாக பருவ விடுப்பெடுத்து தமிழகம் சென்றிடலாம். இனிமேல் ஜனவரி மாதம் திரும்பி வந்தால் போதும். ஆனால், அதற்குள் நவ. 6 தீபாவளி வர, விடுப்பு எடுத்துக்கொண்டு நவ. 3 தமிழகம் வந்தாயிற்று.
படம் கண் அறுவை சிகிச்சைக்குப் பின் முதன்முறை
டி-ஷர்ட் அணிந்தபோது எடுத்தது.

ஆறு மணிநேரம் தேர்வை வைத்துவிட்டு, 32+32 மணிநேரம் பயணிக்குமளவு தீபாவளி கொண்டாடத்தக்க பண்டிகை அல்ல என்பதில் நம்பிக்கை இருந்தாலும், அதற்கு முன்பு பார்த்த சில காணொளி அழைப்புகள் (video call) தமிழகம் வரவைத்துவிட்டன. சரிவர உணவுண்ணவில்லை, அடம் பிடிக்கிறார் என்பதையெல்லாம் அசாதாரணமாகக் கடக்கமுடியவில்லை.
தாத்தா.

தாத்தாவின் உடலுக்கு வயது 78. கிட்டத்தட்ட அறுபது வயது வரை காவிரி டெல்டா பாசனத்தில் வேளாண்மை செய்த கீழத்தஞ்சை விவசாயி. வெள்ளாமை பார்க்க வழியின்றி அவர் நகரம் நோக்கிப் பெயர்ந்த வாக்கில்தான் நானெல்லாம் பேசவே தொடங்கியிருந்தேன். நகரம் வந்த புதிதில் 2% கமிஷனில் ஏஜென்சியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். ஞாயிறு தவிர்த்த வாரம் ஒவ்வொரு நாளும் காரைக்கால், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், சிதம்பரம் வரை சென்று ஆர்டர் எடுத்து, ஆர்டர் எடுத்த பொருட்களை கொடுக்கும் வேலை.
வேலை முடித்து வீடுவரும் இரவுகளிலெல்லாம் பூந்தி பொட்டலங்களை பேரப்பிள்ளைகளுக்கு எடுத்துக் கொடுப்பார். நாங்கள் அவருக்கு வைத்த பெயர் பூந்தி தாத்தா. அவருயிர் உடல்பிரிந்து ஓராண்டாகிய இன்றளவிலும் பூந்தி தாத்தா1, பூந்தி தாத்தா2 என்பதாகவே அவருடைய எண்கள் பதிந்திருக்கிறது என் பேசியில். ஆனால், தாத்தாவின் பெயரோ முருகேசன்.
பெயருக்கேற்றார் போல் அழகிய கேசம் தாத்தாவின் இளவயதில் இருந்திருக்கும் போலும். அரிதான அவரது இளைமைப் படங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறார். எனக்கு நினைவு தெரிந்தவரை மரபணு கொடுத்த கொடையில் வாழ்க்கையைப் போலவே தலையிலும் வழுக்கைதான். ஆனால், அந்தப் பெயர் அவருக்கு மிகப் பிடிக்கும்.
தொடக்கக்கல்வி படித்தபோது மாணவர் மதிப்பெண் அட்டையில்(Rank card) கையெழுத்து வாங்கச் செல்வதுண்டு. S. Murugesan என்பதை Cursive writing முறையில் கையெழுத்திடுவார். காந்தி தன்னுடைய கோட் உடையைக் கழட்டியதற்கும் அம்பேத்கார் கோட் உடை அணிந்ததற்கும் இடையிலான வெளியைப் போலத்தான் ; இன்றளவில் M.Phil படித்துக்கொண்டிருக்கும் நான் தமிழில் கையெழுத்திடுவதும் தன் காலத்தில் 9ஆம் வகுப்பு தேர்ச்சியுறாத தாத்தா ஆங்கிலத்தில் கையெழுத்திட்டதும்.
ஆமாம். தாத்தா 9ஆம் வகுப்பே தேர்ச்சியுறவில்லை. அதனால் தான் ஆங்கில சொற்கள், பெருமளவிலான தொகை புழங்கும் மார்க்கெட்டிங் வேலையில் கிட்டத்தட்ட 13+ ஆண்டுகள் வேலைசெய்யமுடிந்தது. 2004 வாக்கில் தாத்தாவோடு தில்லி சென்றிருந்தோம். மொத்தம் 16 பேர் கொண்ட குழுவில் தனியாளாக காணாமல் போய்விட்டார் தாத்தா. அது நோக்கியா 1100 காலம். ஒரு சிலர் கையில் தான் செல்போன் இருந்தது. தெருவுக்குத் தெரு STD / ISD / PCO நிலையங்கள் இருக்கும். எப்படியோ யாரையோ தொடர்புகொண்டு கடைக்காரருக்குப் புரியவைத்து, சித்தப்பா எண்ணுக்குப் பேசி தானிருக்கும் இடத்தைத் தெரிவித்து அழைத்து வரச்சொன்னவர். தாத்தா காணமல் போய்விட்டாரே எனும் பதட்டத்திலும் பரவாயில்லையே, இவ்வளவு தெளிவாக இருக்கின்றாரே எனப் பலருக்கும் ஈயாடாத குறை.
எனைத் திட்ட வேண்டுமெனில் எப்போதும் அவர் பயன்படுத்தும் இழிவழக்கு “படிச்ச முட்டாள்” என்பதே. சில சமயம் அது உண்மையாகவும் இருந்திருக்கும். உண்மையில், அவருக்கு கல்வி மீது மதிப்பிருந்தது. தன்னுடைய இரண்டு பெண்பிள்ளைகளையும் தன்னளவில் மீப்பெரும் படிப்பு படிக்க வைத்திருந்தார். சராசரிக் குடும்பங்களில் நடக்கும் சராசரிச் சண்டைகள் அவ்வப்போது நிகழும். அப்போதெல்லாம் ஒன்றைச் சொல்லி வாயடைத்துவிடுவார். 1985இல் திருவாரூரின் பெயர்பெற்ற பெண்கள் பள்ளி விடுதியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் அம்மா குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார். “இவ்வளவு குறைவான மார்க்கு எடுத்தவளை சேர்க்கவந்துவிட்டாய்” என ஒருமையில் தலைமை ஆசிரியை விளித்த அவமானத்தை நினைவகலும் வரை நினைவில் வைத்திருந்தார்.
நான் ஆறாம் வகுப்பினை நகரத்தின் இருபாலர் பள்ளியில் சேர விழைந்த போதும், அம்மா தான் படித்த பள்ளிக்கூடத்தின் கல்வி முகவாண்மையின்கீழ் வரும் ஆண்கள் பள்ளிக்கூடத்திலேயே சேர்த்துவிட்டார். அங்கு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 475 மதிப்பெண்கள் பெற்று தமிழ்வழியில் பள்ளியில் முதல் மாணவனாகத் தேறியதில் 1985 பழி 2011இல் நீங்கியது. இப்போதும் நான் படித்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் தாத்தாவுக்கு உடன்பாடில்லை. எம்.ஏ முடித்த காலத்தில் என் பெயரைத்தாண்டி என்னை அவருக்கு நினைவில்லை. வீட்டிற்கு செல்லும் போதெல்லாம், ”சார் வந்திருக்காங்க” என்று தான் அழைப்பார்.
ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த நேரம். அண்ணா பிறந்தநாள் சைக்கிள் ஓட்டப்போட்டி என நினைவு. இப்போது அமேசான் கிண்டில் போட்டியில் கலந்துகொண்டு ஐந்து இலட்சம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையைப் போல அச்சைக்கிள் ஓட்டத்தில் பங்கெடுக்க ஆசையிருந்தது. என்னைவிட அகவையும் ஆற்றலும் முதிர்ந்த பலர் அப்போட்டியில் பங்கெடுத்திருந்தனர். தாத்தாவின் சைக்கிளைத்தான் எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன். அது லோட் வைக்கும் கனரக சைக்கிள். சராசரியை விட பயங்கர எடை, பயங்கர உயரம். தாத்தாவின் உடலுக்கு அது சாதாரணம். பத்துவயது எனக்கு அது அசாதாரணம் என்பதை உணராது போட்டியன்று காலை பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். ஸ்ரீ ஜீ ஆர் எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே விழுந்துவிட்டேன். எந்தப் பெண்களும் அப்போது வரவில்லை ஆனாலும் விழுந்ததற்குக் காரணம், சாலை அமைப்பு. (இன்றும் அச்சாலை அப்படியே இருக்கிறது)
விழுந்ததில் ஹேண்ட்பேர் திரும்பி, காலில் பெடல் குத்தி இரத்தம் வெளியேறத் தொடங்கிட்டது. வீடு சென்று பெற்றோரிடம் திட்டுவாங்க அஞ்சி, தாத்தா வீட்டிற்குச் சென்றேன். சைக்கிள் ஓட்டப் போட்டி முடிந்ததை அங்கிருந்து பார்த்தேன். ஆனால், என் காலிலிருந்து இரத்த ஓட்டம் முடிந்ததாயில்லை. வேளாண்மை செய்த தாத்தாவைப் பொறுத்த வரை அது ஒரு வலியே இல்லை. அதன்பின், வீட்டிற்குச் சென்று பார்த்தால் உள்ளுக்குள்ளிருந்து சதையெல்லாம் கொத்து கொத்தாகக் கொழ கொழவென வெளியே வந்திருக்கிறது. அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று தையலிட்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு தையலைப் பிரித்து ரண வேதனை தான்.
தாத்தாவின் சைக்கிள் மட்டுமல்ல. தாத்தாவே பலம் பொருந்திய உடல் கொண்டவர்தான். அசாத்தியமான மனதிடம்தான் அவரது உடல்திடமே. நம்முடைய தாத்தா ஏன் மெத்தப்படித்தவராக இல்லை, ஏன் அவருக்கு கிரிக்கெட் பற்றிய பிரக்ஞை இல்லை, ஒருவேளை அவர் வங்கி மேலாளராகவோ, அரசுப் பணியிலோ இருந்திருந்தால் நம்மை எவ்வாறு அணுகியிருப்பார் என்றெல்லாம் யோசித்ததுண்டு. ஆனால், தாத்தா வயதின் உடல் வலிமையை ஒத்த பிறிதொருவரின் உடல்வலிமை நேரில் கண்டதில்லை. தாத்தா ஒருவர் மீது தடுமாறி விழ, அவரைத் தாங்கியவரின் கால் எலும்புகள் உடைந்த வரலாறுண்டு. புகை, மது இன்னபிற தீய பழக்கம் என சமூகம் அடையாளப்படுத்திய பழக்கங்கள் ஏதும் தாத்தாவிற்கு இல்லை. தாத்தாவின் உடல் எந்த நோய்த்தொற்றுக்கும் அனுமதி தந்ததில்லை. அப்படிப்பட்ட தாத்தா உணவுண்ணவில்லை, அடம்பிடிக்கிறார் என்பதாலேயே வீட்டிற்கு வரவேண்டியதாயிற்று.
வந்த இரு நாளில் தீபாவளி நிறைவடைந்தது. சத்தூசி இன்னபிற மருந்துகளை வீட்டுக்கே வந்து கொடுத்துக்கொண்டிருந்தார் செவிலியர். ஆனாலும் தாத்தாவின் உடல்நிலை சீராகக் குன்றிக்கொண்டே இருந்தது. அசாதாரண நலக்குன்றாக அமைந்ததால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். பல்ஸ் இல்லை. வீட்டுக்குக்கொண்டு போயிடலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
தனியார் ஆம்புலன்ஸில் வீட்டுக்கு அழைத்து வந்தோம். அவரது படுக்கையை இருவர் தூக்க அவரது கூரிய மூக்கு, காற்றில் ஆக்சிஜன் இருப்பை அடையாளங்காணத் தவிக்க….. இப்படியெல்லாம் அழைத்து வரத் தகுதியானவரில்லை தாத்தா. நகரத்திற்கு வந்தாலும் தான் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த கிராமத்துத் தெருக்களை அவ்வப்போது வாசம் பிடிக்கக் கிளம்பிவிடுவார். ஒரு கோடை விடுமுறையில் கிராமத்திற்குச் சென்று ஒரு மூட்டை நிறைய நுங்கு கொண்டுவந்திருந்தார். எப்படித்தான் அவ்வளவு பெரிய மூட்டையை சைக்கிளில் பல கி.மீ மிதித்து பேருந்தி ஏற்றி பின் வீடுகொண்டுவந்தார் என்பதில் பெருத்த மலைப்பு எனக்குண்டு. அது தான் அவரது உடல். நுங்கு, தென்னங்காய் முதலியவற்றை அநாயசமாக உரிக்கும் திறன் அவர்தம் கைக்குண்டு. மூஞ்சூறு, எலித்தொல்லைகள் அவர் குடியிருந்த ஓட்டு வீட்டில் இருக்கும். அசாதராணமாக அவற்றைக் கரம் பிடித்து வெளியேற்றுவார். அந்தக் கைகள் கேரம்பலகையில் எங்களைத் தோற்கடித்ததும் உண்டு.
அவரது ஊரில் அவரது நண்பர் மரணம் 2018 ஜூன் நிகழ்ந்தது. பெரும்பாலும் இளமைக்கால நினைவுகள் தவிர பிற அனைத்துமே முற்றாக மறந்த தாத்தாவை அந்த இறப்பிற்கு அழைத்துச் சென்றேன். இறப்பிற்குச் செல்லும் முன்னர் அருகிலுள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் வழிபாடு முடித்து ஊரை நோக்கி வாகனம் புறப்பட்டது. அடுத்தடுத்த தலைமுறைகள் நகரம் நோக்கிப் பெயர்ந்த நிலையில் என்றைக்கோ கட்டிய ஓட்டு வீட்டின் முற்றத்தில் அவரது நண்பர் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவரை வணங்கிய தாத்தா அரிதாகச் சிலரை அடையாளங்கண்டுகொண்டார். துக்கத்திற்கு வந்தவர்களுக்கு கலர்(cooling இல்லாத cooldrink) தரும் வழக்கத்தை அங்கு தான் கண்டேன். அவ்வூர் மக்கள் முன்னெப்போதோ பேசிய தொலைக்காட்சி பட்டிமன்றத்தின் நினைவாக ”அடுத்து எப்போ டிவியில பேசுவீங்க” என ஆசையாக கேட்டனர் என்னிடம். கிராமத்து மக்கள். ஆய்வாளர்கள் மத்தியில் அசிங்கப்படுத்தப் பயன்படுத்தும் அடைமொழியான 'பட்டிமன்றப் பேச்சாளர்' எனும் அடைமொழியை கபடமற்ற அவ்வூர் மக்களின் ஆசை-விழைவு உயர்த்தியிருந்தது.
சிறுபிள்ளையில் யாரும் காசு தர மாட்டார்கள். பெயருக்கு மட்டுமே பாக்கெட் வைத்திருக்கும் என் ஆடைகள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்பதை அவ்வப்போது தாத்தா உழைப்பில் பார்க்கும். அதிகபட்சம் சூட மிட்டாய், பாக்கு மிட்டாய், தேன் மிட்டாய் தான் அதைக்கொண்டு வாங்க முடியும். ஏதுமற்ற அப்பால்யத்திற்கு அதுவே போதுமானதாயிருந்தது.
அக்காலத்திய என் தேடல்களுக்கு incognito பக்கமாக இருந்தார். அந்தக் காலத்து கிராமத்தாள் என்பதால் சமூகத்தின் புறவழக்குகள் பலவற்றை அவரிடம் பேசித் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால், என்னிடமிருந்து தாத்தா இதைத் தெரிந்து கொண்டார் என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை. கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தால் ”யாரு ஜெய்ச்சான்” என்பது தான் என்னிடம் எதிர்பார்த்த அதிகபட்ச தேடலே.
தாத்தாவின் வழுக்கைத் தலையில் முடிவெட்ட குறைந்தது ஐம்பது ரூபாய் ஆகும். ஆனால், தாத்தாவின் இளவயது நினைவின்படி அது மாபெரும் தொகை என்பதால், அவருக்கும் முடிவெட்டுபவருக்கும் ஏகபோக வாக்குவாதம் நிகழும். இதையடுத்து தாத்தாவின் முடிவெட்டும் பொறுப்பை கடந்த ஐந்தாண்டுகளாக எடுத்துக்கொண்டு தேர்ந்த முடிவெட்டும் கலைஞராகவே மாறிவிட்டேன்.

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை. யில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. ஆனால், எனக்கு மட்டும் பெற்றோரின் பெற்றோர் ஆசிரியர் கூட்டம். அப்பா அம்மாவின் பெற்றோர்களை அழைத்துச் சென்றிருந்தேன். முதல்முறை அவர்கள் அவ்வளவு பெரிய கட்டிடங்களுக்குள் அடியெடுத்து வைத்திருக்கலாம். இரு ஆத்தாக்களும் பேசினார்கள். தாத்தா தன் நிகழ்காலம் மறந்து இளம்பிள்ளைச் சேட்டைகள் செய்துகொண்டிருந்தார். கேட்கும் திறன் குன்றிப்போய் எதிரும் புதிருமாய் விடையளிக்கும் தாத்தாவின் சில செய்கைகள் ரசிக்கவும் வைத்தன.
நினைவு ஒரேடியாகக் குன்றவில்லை. வயதாக வயதாக மூளை நரம்புகளில் ஏற்பட்ட சுருக்கம் அதனைத் தந்தது. ஒரு முறை ஐந்திலக்க எண்ணிக்கையிலான பெருந்தொகை ஒன்றை தவறவிட்டுவிட்டார். அத்தோடு வேலைக்குச் செல்வதையும் நிறுத்தியாயிற்று. ஆனாலும், தினசரி காலையில் எல்லா சேனலிலும் எல்லா ஜோசிய அறிக்கைகளையும் தவறாது பார்ப்பார். அதுவொன்றே தாத்தாவின் இறுதிக்காலங்களில் மீப்பெரு பொழுதுபோக்கு. வாழ்வில் நல்லகாலம் பிறக்கும் எனக் காத்திருப்பவனின் கடைசி நம்பிக்கை ஜோசியம்.
வீட்டிற்கு அழைத்து வந்தும் உடல்நலனில் முன்னேற்றமில்லை. மணிக்கு மணி நலம் குன்றிக்கொண்டேயிருந்தது. உறவினர்கள் நாளை கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள் என்றஞ்சி, மருத்துவம் பார்க்க முனைந்தோம். தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்டவர்களுக்கான அடைக்கலம் அரசு மருத்துவமனையே. திருவாரூருக்கு அப்பால் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2018 நவ. 09 காலை சேர்த்தோம்.
ஆக்சிஜனை அடையாளங் காணமுடியாது தவித்த தாத்தாவுக்கு, ஆக்சிஜன் செலுத்துக் குழாய் வைக்கப்பட்டது. மேலும், உணவு செலுத்துவதற்கு ஆதரவாக மூக்கின்வழி குழாய் இறக்கப்பட்டது. சுற்றி நான்கைந்து நபர்கள் தாத்தாவின் உடலைப் பிடித்திருந்தும், தாத்தா அசால்ட்டாக திமிறி எழுந்தார். அவரது உடல் அசுர வலிமையிலிருந்தது. இயற்கைக்கு மாறாக அவர் உணவுண்ண விரும்பாது, குழாயைப் பிடித்து வெளியே எறிந்தார்.
முதல்தளத்திற்கு மாற்றப்பட்டு, தீவிர கண்காணிப்பில் இருந்தார் தாத்தா. ஒருவார காலமாக படுக்கையிலே சிறுநீர் கழிப்பதால், அணையாடை (napkin) வைத்து அதனை மேலாண்மை செய்துகொண்டிருந்தோம். இவரால் யாரும் தொந்தரவடையக் கூடாதென எண்ணிக்கொண்டிருந்தேன்.

கொசுவர்த்திச்சுருள், ஜன்னல் கம்பிகளில் கயிறுகட்டி ஏற்றப்படும் சிலைன் பாட்டில், நோயாளி, ஒருதலைக்காதலால் விசமருந்திய வாலிபன், அவனை ஆற்றுப்படுத்தும் வயோதிகன் என ஏற்கெனவே பழக்கப்பட்ட அம்மருத்துவமனைக் காட்சிகள் இன்னும் மாறியதாயில்லை.
//வாழ்க்கையைக் கூடுதலாக நேசிக்கவும், உயிரின் மதிப்பை மிகச் சரியாக அறிந்துகொள்ளவும் வேண்டுமெனில், அரசு மருத்துவமனியில் சேர்க்கப்பட்டிருக்கும் எவரையாவது சில நாட்களேனும் கவனித்துக்கொள்வதற்காக அருகில் இருந்து பாருங்கள்.
எவ்வளவு இயலாமை, எவ்வளவு துயரம், எவ்வளவு நிம்மதி, எவ்வளவு ஏக்கம், எவ்வளவு கனவு, எத்தனை விதமான உணர்வுகள்! எத்தனை விதமான தருணங்கள்! மருத்துவமனை ஒரு பெருங்கல்விக்கூடம்!// என்ற கவின் மலர் அவர்களின் எழுத்துகள் எத்தனை உண்மை என்பதை அனுபவித்தவர்கள் அறிந்திருப்பார்கள்.
தாத்தாவின் இரவுத் துணையாக உடனிருந்தேன். தாத்தாவைக் கட்டுக்குள் வைத்திருக்க, கைகளைக் கட்டிப்போடுவதைத் தவிர வேறுவழியில்லை. கையில் டிரிப்ஸ் மட்டும் சரியாக ஏறுகிறதா என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருந்தேன். முன்பு வாங்கி அதுகாறும் புரட்டாமல் இருந்த Balakrishnan Rசாரின் சிறகுக்குள் வானம் மழைபெய்தோய்ந்த கொசுக்கடி இரவில் தாத்தாவை பார்த்துக்கொள்ள உதவியாய் இருந்தது. முக்கால் வாசி வாசித்து முடிக்கையில் வானம் காலைக்கு அழைத்துச் சென்றிருந்தது.
காலை அவரது அணையாடையை மாற்றுகையில் முதுகுத்தோலின் சில பகுதி அழன்று கழன்றுவிட்டது. இது கிட்டத்தட்ட மரணத்தைக் குறிப்பதாகும் என்பதை முன்னர் இன்னொரு தாத்தாவின் மரணம் உணர்த்தியிருந்தது. மதியம் வீடுசென்று உணவு முடித்து திரும்புவதற்குள் ஆத்தாவின் குரல் குன்றியிருந்தது. வந்து கையை உயர்த்திப் பிடித்துப் பார்க்கையில், உடலியக்கத்துக்குக் கட்டுப்படாத அந்த வலுவான கரம் முதல்முறை புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு கீழே விழுந்தது. ஆனால், உயிர் இருந்தது. காற்றின் சொச்ச ஆக்சிஜனை இழுத்துப்பிடித்து வயிறு உப்பி உப்பி இறங்கியது.
இனி மருத்துவம் பயனில்லை. எது நடப்பினும் வீட்டிலே பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி, ஆம்புலன்சில் வீடழைத்து வந்து, ஒரு கட்டிலில் படுக்க வைத்தோம். மனைவி, மகள்கள், பேரன்கள், மாப்பிள்ளை என யாவரும் சூழ்ந்திருந்த வேளையில் காய்ச்சிய பசும்பால் தன் இருப்பைப் புறந்தள்ள தாத்தாவின் உயிர் உடல் பிரிந்தது.
யாருக்கும் தொந்தரவின்றி சனி மாலை இறந்ததால், ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் உறவினர்கள், தெரிந்தவர்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவரின் வழக்கப்படி தாத்தாவின் உடலை சடங்குகள் எனும்பேரில் பாடாய்ப்படுத்துவார்களே என்றிருந்தது. ஒருவழியாய்ச் சடங்குகள் முடித்தபின் தாத்தாவை பாதுகாப்பாய் மருத்துவமனைக்கே வழியனுப்பி வைத்துவிட்டேன். முன்னமே சமூக ஆர்வலர் Subash Gandhi அவர்களிடம் கூறி Raj Kumar அவர்களின் வழியாக அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடல்தானம் அளிக்க ஆத்தாவின் அனுமதியோடு ஏற்பாடுகள் செய்யச் சொல்லியிருந்தேன்.
எங்கிருந்து இனி பிழைப்பதற்கில்லை என தாத்தாவை அழைத்துவந்தோமோ அங்கேயே தாத்தா பயன் தரப்போகிறார் என்பது எதார்த்தமாக இருந்தது.
மீதமுள்ள இரண்டு தேர்வுகளை முடிக்க நவ. 12 தில்லி நோக்கி திரும்பினேன்.
இன்று 2019 நவ. 10. 

இந்த ஓராண்டுக்குள் தாத்தாவின் உடல் வேதிமருந்துகளால் தசைகள் இறுக்கப்பட்டு, அவ்வப்போது பாகம்பாகமாய் அறுக்கப்பட்டு, கூறுகளாக்கப்பட்டு மாணவர்களுக்கோ மருத்துவர்களுக்கோ பாடமாக இருந்திருக்கும்.
வாழ்க்கையெனும் பாடத்தில் அதன் பிறகான பாடமும் வாழ்க்கை தானே…!
-த.க.தமிழ்பாரதன்
10.11.2019