நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Tuesday, 15 September 2015

கலைஞரும் இளைஞரும்.., த.க with மு.க
கலைஞரும் இளைஞரும்
முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களிடமிருந்து பாரதிதாசன் கவிதை ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றிகனியை தொட்டுப் பிடித்ததற்கான பரிசினை பெறும் பரிசளிப்பு நிகழ்வில் :

எப்போதும் நமக்கான 'நிலை' கால ஓட்டத்தில் வேகமாக உயரத் தொடங்குகிறது. சிலருக்கு அது ஏணிப்படியில் ஏறுவதைப் போல, சிலருக்கு எஸ்கலேட்டரில் ஏறுவதைப் போல, சிலருக்கு ஏரோபிளேனில் பறப்பதைப் போல, சிலருக்கு ராக்கெட்டில் சீறுவதைப் போல. நான் இப்போது தான் ஏணியை பிடித்திருக்கிறேன். அந்த ஏணியின் ஒரு படிகட்டு செப்டம்பர் 15 2௦15 அன்று அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடப்பட்ட அண்ணா பிறந்த நாளில் வந்தது.

எண் 43 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயர் சொல்லி அழைக்க பரிசு பெற நான் செல்ல பரிசு தர காத்திருந்தார் முன்னாள் தமிழக முதல்வரும் எம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவருமான மு.கருணாநிதி அவர்கள். வயோதிகம் வந்திருந்தாலும் வற்றிப் போகாத எண்ணங்கள் எதிர்வந்த என்னை பார்த்து அறிவதற்கு சற்று நேரம் பிடித்தன. காலம் அடுத்தவரை வரச் சொல்ல, என்னை பார்த்த அவரிடம் நான் சொல்லுவதெல்லாம் அருகிருப்பவர் மொழி பெயர்ப்பது போன்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அன்று சொல்ல நினைத்து சொல்லாமல் போனதை இன்று சொல்ல எண்ணுகிறேன்.

"ஒரு பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு முதலமைச்சர் தான் வர வேண்டும் என்றில்லை, வாழ்த்துங்கள்" என்பதைத் தான் .

தொட்டுப் பிடித்ததற்கான வரலாறு :
பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி 08.08.2015இல் கொரடாச்சேரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. அதுவே முதல் பரிசாகவும் அமைந்தது மகிழ்வுக்குரியது. எல்லா போட்டியாகவும் இதை பாவிக்காமல், சிரத்தையோடு இதை அணுகியதன் விளைவாக மாவட்டத்தில் முதல் பரிசு கிடைத்தது மெய்யாகவே இருந்தது.

மாநிலத்திற்கான போட்டி சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் ௦3.௦9.2௦15 தேதியில் நடைபெற்றது. அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் நிகழும் அண்ணா அறிவாலயத்தில் முதன் முதல் அடி வைத்ததும் அன்று தான். காலை இரண்டாவது நபராக உள் சென்று அங்கே நிகழும் சுற்றுப் புற நடவடிக்கைகளை கவனித்து என் கவிதை ஒப்புக்கும் பாங்கை நினைவுக்கு நினைவு மாற்றிக் கொண்டே இருந்தேன். 66 மாணவர்கள் என்று நினைவு. போட்டியிட்ட அனைவரும் தங்கள் அளவில் முதல் பரிசை தட்டியவர்கள் என்பதால் அனைவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் உண்டு என்பது திண்ணம்.

ஆனால், ஐந்தாயிரம் ருபாய் பரிசாய் பெரும் நபர்களில் ஐவருக்கு மட்டுமே அண்ணா பிறந்த நாள் விழாவில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் கரங்களால் பரிசு என்பது தான் போட்டியாளர்களுக்கான நெருக்கடி. எப்படியும் ஐவர் மட்டும் என்பதால் சிரத்தை எடுக்கவில்லை சிலர். ஐவரில் நாமும் உண்டு என்றெண்ணி மூச்சை மூலதனமாக்கி உதிர்த்த சொற்கள் சுற்றுப் புற கட்டிடத்தின் செங்கற்களையே உணர்ச்சியடையச் செய்தன. திருவாரூர் மாவட்டம் சற்றே இறுதியில் அழைக்கப் பட்டது. பெரும்பாலும் சொன்ன நடைகள் அலுத்துப் போன நடுவர்களின் பார்வைகளால் புலப்பட்டன. சிலரது மொழிநடையும் உடல் நடையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க அவர்களின் முகங்களில் மலர்ச்சி.

என் சுற்று வந்தது. அதுவரை அடங்கி இருந்து வெள்ளை வேட்டியும், சட்டையும் தன் கவி நடையை காற்றில் தவழ விட்டன. இருமுறை சொல்லுதல் கூடாது, அதிகப்படியான உடல் நடை கூடாது, என்றெல்லாம் மொழியப்பட்ட முன்னுரைகளால் என்னுரை என் சராசரி உரையிலிருந்து மாறுபட்டே காணப்பட்டது.

மெல்ல மொழிய ஆரம்பித்த நெஞ்சு பதைக்கும் நிலை கவிதை இறுதி நேரங்களில் உணர்வுகளால் பொழிய ஆரம்பித்தது. வேட்டியும் சட்டையும் எடுத்துக் கூறிய கவிதை பலரின் கைத்தட்டல்களையும் பெற மாலை வரை முடிவிற்காக பொறுத்திருக்க வேண்டியது எல்லார் பேசி முடித்தும் இது போல் தட்டிய கைகளால்.

மாலையில் முதலில் ஐவர் தகுதி. நான்காம் இடம் எனக்கு என்று மேடையின் முற்பகுதியில், மொழியப்பட்டது. அதுவரை பிற்பகுதியில் இருந்த எனக்கு அதன் பின் முற்பகுதியில் அமர இடம் தந்தார்கள். அதுவே நடுவரின் தீர்ப்பு, அதனாலே தான் முதலில் குறிப்பிட்டிருந்தேன் வெற்றிகனியை தொட்டுப் பிடித்ததற்கான பரிசு என்று. முதலிடத்தை பிடிக்கும் போது மட்டும் தான் எட்டிப் பிடித்தல் என்பது எனக்கான இலக்கணம்.

கலைஞர் என்கிறவர் - மூத்தவர் மு.கருணாநிதி
இளைஞர் என்கிறவர் - இளையவர் த.க.தமிழ்பாரதன்
Tamil Bharathan
15.09.2015

2 comments:

  1. அருமை தோழரே தமிழ்பரதன் அவர்களே

    ReplyDelete