நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Thursday, 26 September 2019

பேச்சு - இராஜேந்திர பாலாஜி !


அண்மைக்காலமாக மனஅழுத்தத்திலிருந்து விடுதலை தருகிறார் அமைச்சர் இராஜேந்திரபாலாஜி. கடந்த சில மாதங்களில் வயிறுவலிக்க சிரிக்க வைத்த ஒரே நபர் அவர் மட்டுமே.

பேச்சுப்போட்டிகளில், மாநகர-நகர-சிற்றூர் மாணவர்களை எளிதில் அடையாளங்கண்டுவிட முடியும். மாநகர மாணவரிடம் கருத்து இருக்கும் அதை வெளிப்படுத்த அவர் உயர்ரக சொல்லாடல்களைக் கையாளுவார், அது பெரும்பாலும் யாரோ எழுதிக்கொடுத்ததாக இருக்கும். அது கல்வியில் உயர்ந்தவர்களையே எளிதில் சென்றடையும்.

நகர மாணவர் அந்த மேடையில் எப்படியேனும் பரிசு வாங்கிட முனைவார், அவர் களத்திற்கேற்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துவார், பஞ்ச் வசனங்கள் அதிகம் காணப்பெறும், தனது பேச்சை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைத்துக்கொள்வார்.

சிற்றூர் மாணவரின் நிலைமையே வேறு.... அவர் நூல்களை விட மக்களை அதிகம் வாசித்திருப்பார். உயர்ரக சொல்லாடல்களின்றி "இலகுவாக" மொழிநடை அமையும். அதில் உலக தத்துவங்கள் உள்ளுறையாக இருக்கும். எதார்த்தத்தைப் பேசுவார். அவருக்குப் பரிசு முதன்மை கிடையாது, நடுவர் பொருட்டே கிடையாது. எதிரே இருக்கும் மக்கள்! அவர்கள் தரும் ஆர்ப்பரிப்பு அது தான் அவருடைய இலக்கு! மனனமின்றி உதிரும் சொற்களை தொழில்முறை மூளைகள் இரசிக்கத் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும். அவனால் போட்டியில் வேண்டுமானால் வெல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால், என்றைக்குமான தன் இருப்பை அவன் பதிவு செய்யத் தவறுவதில்லை.

இவர்களே, பெரியவர்களாகும் போது,
மாநகர - எலைட் பேச்சாளராகவும்,
நகர -இரண்டாம்நிலை அல்லது தொலைக்காட்சி பேச்சாளராகவும்,
சிற்றூர் - அவலங்களைச் சாடுகிற பேச்சாளராகவும் உருவெடுக்கின்றனர். குறிப்பாக சிற்றூரிலிருந்து வருபவர்களை கட்சிகள் அரவணைத்துக் கொள்ளும்.

அவர் தன் தகுதியை வளர்த்து நிர்வாகத்தில் திறன் காட்டினாலன்றி பொறுப்புகள் தேடிவராது. பேச்சு ஒரு கருவி, அது இலக்கை அடைவதற்கான சுருக்கவழி.

நியூஸ்18 தொலைக்காட்சியின் நவீன தமிழகத்தின் சிற்பிகள் எனும் விவாத அரங்கில் ஜெயலலிதா எனும் தலைப்பில் அவர் பேசியிருக்கிறார். அந்த மேடையைப் பொறுத்தவரை அவர் மட்டுமே கல்வியில் பின்தங்கியவர் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். SSLC படித்ததை பெருமையாகக் கூறுகிறார். ஒப்பீட்டளவில் கல்வியறிவில் கரைகண்ட உங்களுடன் நான் எப்படிப் போட்டியிடப் போகின்றேன் என்ற சாவலுடன் தொடங்குகிறார்.

அவ்வப்போது எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முகத்தை க்ளோஸ்அப் ஷாட் வைத்து அவர் சிரிப்பதைக் காட்டுகின்றனர். அரங்கிருப்போரும் நெறியாளர் குணசேகரனும் சிரிப்பதைக் காட்டுகின்றனர். சொல்லப்போனால், இவர்களனைவரும் சிரிக்க வேண்டும் என்கிற பாணியும் அவரது பேச்சில் இருந்தது.

சொல்லப்போனால், தொலைநோக்கு தமிழ்நாடு 2023 என்கிற திட்டம் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மிக முதன்மையான திட்டம் நவீன தமிழகத்தின் சிற்பி என்ற தலைப்பில் பேச ஏதுவான திட்டம். பேசியவரே அதைப் புரிந்து பேசியிருந்தாலும் கேட்பவர்கள் பலருக்குப் புரிந்திருக்காது. மிக்சி, கிரைண்டர், பொருளாதார உதவி என மக்களின் அன்றாடத்திலிருந்தே இராஜேந்திர பாலாஜி பேசினார்.

இவ்வளவு சரளமாக மக்கள் மொழியில் பேசுவதற்கு அக்கட்சியில் வேறொருவர் இருக்கிறார் என்பதில் சந்தேகமே. அவரை உருவ கேலி / கருத்து கேலி செய்து முகநூலில் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு வசைபாடி கருத்தெழுதிக் கொண்டிருக்கும் பலராலும் ஐந்துநிமிடங்கள் துண்டுச் சீட்டில்லாமல் கூட பேசமுடியாது என்பதே எதார்த்தம்.

தன்னால் பேசமுடியும், கல்வியிலும் கருத்துநிலையிலும் உயர்ந்த மட்டத்தில் இருப்பவர்களுடன் தன்னால் ஈடுகொடுத்து, அதைவிட சிறப்பாகப் பேசி கவர முடியும் என்ற நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. தான் கட்சி கொடுத்த பதவியை அலங்கரிப்பதற்குத் தகுதியுடையவன் என்பதை அவர் நிரூபணம் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பு, பொதுவெளியில் கேள்விகளுக்கு ஊரே வியக்கும் வண்ணம் ஒரு பதில் சொல்லி தன்னை நிலைநிறுத்திக்கொள்வது.

படம் உதவி - மாலை மலர்


அவர்  எப்போதும் தன்னை ஊடக கவனத்தில் வைத்திருக்கிறார். எது பேசினாலும், எல்லாரும் பார்க்கிறார்கள், விமர்சிக்கிறார்கள். இது கிட்டத்தட்ட பிரதமர் மோதியின் உத்தி. அமைச்சர் இராஜேந்திர பாலாஜியின் பேச்சு சர்ச்சைகளைக் கிளப்புகிறது. வெகுசன நடையைப் பொதுவாழ்க்கையில் இருக்கும் நபர் கையாளும்போது, சிலவற்றைப் புறந்தள்ளி சமூக மனிதராக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். அது நிகழாத போது, அவர் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். இதற்கான விளக்கங்கள் மேலும், விவாதங்களைத் துவக்கி விடுகின்றன. மோதி இவ்விடயத்தில் தெளிவு. சர்ச்சைக்குரிய பேச்சை பேசுவதில்லை. அது தலைமைத்துவத்திற்கு அவசியமானதாகிறது.

நூலறிவு இல்லாதவர் உயர்பொறுப்புக்கு வருகையில் அவர் செயலாற்றுவதில் சிக்கல் இருக்கும். உயர்பொறுப்புக்கு வரும்போது நூலறிவோடு பொதுநடையும் இருத்தல் மக்களோடு அவரை தங்கவைக்கும். பகுத்தறிவும், கல்வியறிவும் உடையோர் சிந்தித்துச் செயலாற்றுகையில் பேச்சென்பது பெரும்பொருட்டாகவே இருக்காது. மக்களிடம் தங்கவைக்க அவர்தம் செயல்களே முதன்மையுறும்.
-தக || 26.09.2019

No comments:

Post a Comment