சஞ்சாரத்தின் சாரம் பற்றி எஸ்ரா – சாகித்ய அகாடமி விருது
பெற்றதும் , பெற வைத்ததும்
இந்திய எழுத்தாளர்களுக்கு ஒரு குறிக்கோளாக
இருப்பது சாகித்ய அகாடமி விருது. மற்ற வேலைகளுக்கு இடையே எழுத்தையும் ஒரு வேலையாகச்
செய்துகொண்டிருப்பர்களுக்கு மத்தியில் எழுத்தையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும்
எஸ்ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது அவரது எழுத்துக்கான
அங்கீகாரமே ஆகும்.
நேற்றைய தினம் புதுதில்லி காமனி அரங்கில் எஸ்.ராமகிருஷ்ணன்.அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
இவ்விருது அவர் எழுதிய சஞ்சாரம் நாவலுக்காக வழங்கப்பட்டது.
விருதும், காசோலையும் பெற்று வெளிவந்த அவரைத் தமிழர்கள்,
தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்துக்களைத்
தெரிவித்தனர்.
அவர் சற்றே ஓய்வான சமயம், சஞ்சாரம் நாவல் உருவாக்கப் பின்னணி குறித்து விகடனுக்காகப் பிரத்யேகமாகப் பேட்டியளிக்கக் கேட்டுக் கொண்டேன்., அப்போது அவர் பேசியதாவது,
”சஞ்சாரம் நாவலை எழுதவேண்டும் என்ற விருப்பம் இன்று உருவானதல்ல, என் சிறுவயதிலேயே உருவானது. சிறுவயதிலேயே கோயிலில் வாசிக்கப்படும்
நாதஸ்வரத்தை, விழாக்களில் அல்லது திருமண மேடைகளில் வாசிக்கப்படும்
நாதஸ்வரத்தைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.
”இவர்களெல்லாம் யார்? எங்கிருந்து வருகிறார்கள்?
எப்படி கற்றுக் கொண்டார்கள்? யார் இவர்களுக்கெல்லாம்
ஆசிரியர்கள்? என்ன ஊதியம் கிடைக்கும் ? எங்க திரும்பிப் போவார்கள்?” என்றெல்லாம் கேள்வி இருக்கும்.
அந்த வயதில் அவர்கள் வருவதும் தெரியாது, செல்வதும்
தெரியாது. ஆனால், வாசிக்கிற நேரத்தில் சரியாக
வாசித்துக் கொண்டிருப்பார்கள்.
சிறுவயதில்
சில சமயங்களில் நாதஸ்வரக் கலைஞர்களைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறேன். ஒரு முறை அப்படிச் சென்ற போது, அந்த நாதஸ்வரக் கலைஞரின்
வீடு சிறிய குடிசை வீடு. அந்தச் சிறிய வீட்டினுள் உள்ள கலைஞரிடம்
எவ்வளவு மகத்தான இசை இருக்கிறது என்று வியந்தேன். அப்போதிலிருந்தே
இந்த நாதஸ்வரக் கலையை எழுத வேண்டும் என்றல்ல கேட்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது
,
பல்வேறு
மிகமுக்கியமான நாதஸ்வரக் கலைஞர்களின் இசையை நேரில் கேட்டேன். கோவில்பட்டியைச் சேர்ந்தவர் காருக்குறிச்சி அருணாச்சலம். என்னுடைய அம்மாவின் ஊரான கோவில்பட்டியில் காருக்குறிச்சி அருணாச்சலத்திற்கு
சிலை உள்ளது. அடிக்கடி அந்தச் சிலையைப் பார்ப்பேன். பின், அக்குடும்பத்தில் உள்ளவர்களுடன் அறிமுகமாகி,
அவர்களின் மூலம் காருக்குறிச்சி அருணாச்சலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள
ஆரம்பித்தேன்.
காருக்குறிச்சி
அருணாச்சலத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அது விகடனில்
வெளியானது. அது தான் நாதாஸ்வரம் பற்றிய என் எழுத்துலகின் முதல்
வித்து.
தற்செயலாக
ஒரு நண்பர் வந்து சொன்னார், “கோயில்களில் ஒரு இசைக்கருவியை
வாங்கிப் பொருத்திவிடுகிறார்கள், அது வந்தவுடன் இசைக்களைஞர்களெல்லாம்
வெளியேற்றப்பட்டுவிட்டோம்” என்று கூறினார். அவரிடம் நீங்க என்ன செய்றீங்கன்னு கேட்டப்போ “நான் மேளம்
வாசிக்கிறவர் தான், இப்போ ஹோட்டலில் சர்வராக வேலைப்பார்க்கிறேன்.”
என்றார்.
இதை
விகடனில் ஒரு கட்டுரையாக எழுதினேன். இந்த இரண்டு
நிகழ்வுகளும் தான் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது
தான் இது பெரிய கதை, இதை கட்டுரைகளுக்குள் அடக்கிவிடமுடியாது
என்று தோன்றியது. அதனால், நாவலாக்க முனைந்தேன்.
நிறைய இசைக்கலைஞர்களைச் சந்தித்தேன். அவர்களோடு
பேசினேன்.
குறிப்பாக மல்லாரி கேட்க
வேண்டும் என்பதற்காக, கோயில்களில் சாமி புறப்பாடு நடைபெறும்
போதெல்லாம் சென்று கேட்டேன். நான் இசை அறிஞனல்ல, அதனால், இசை நுணுக்கங்களை அறிந்த கொள்ள இந்நாவல் உருவாக்கத்தின்
போது, பல இசை அறிஞர்களின் உதவியைப் பலமுறை நாடினேன்.
ஒரு
வகையில் இது தென் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கரிசல் நிலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிப்பதாகத் தான்
நாதஸ்வர இசையைச் சொல்கிறார்கள்.
தஞ்சை
மண்ணின் நாதஸ்வரம் ஒலிக்கும் போது, யானை நடந்து
வருவதைப் போல கம்பீரமாக இருக்கும். ஆனால், கரிசல் மண்ணில் ஒலிக்கக் கூடிய நாதஸ்வரம் பசுவினுடைய சாந்தத்தைக் கொண்டிருக்கும்.
யானைக்கும் பசுவிற்கும் இடையேயான வேறுபாடு தான் தஞ்சை மண்ணின் நாதஸ்வரமும்
கரிசல் மண்ணின் நாதஸ்வரமும். அந்த இரண்டு வேறுபாட்டைத் தான் இந்த
நாவல் பொதுமைப்படுத்திருக்கு.
மற்றபடி
கரிசல் மண்ணின் கதையை முன்னோடியாக எழுதிய அழகர்சாமி, இராஜநாராயணன்,
பூமணி, இவர்களனைவருக்கும் என் எழுத்தின் வழியாகக்
காணிக்கை செலுத்தியிருக்கிறேன் என்று தான் சொல்வேன். அது தான்
சஞ்சாரம் என்றார்” எஸ்ரா
சாகித்ய அகாடமி விருது
பெற்ற அவருக்கு நம் அனைவர் சார்பிலும் வாழ்த்துகள்
!
நன்றி விகடன் .
இணைப்புச் சுட்டி ; https://www.vikatan.com/news/miscellaneous/148433-writer-sramakrishnan-speaks-about-his-sanjaram-novel.html
நன்றி விகடன் .
இணைப்புச் சுட்டி ; https://www.vikatan.com/news/miscellaneous/148433-writer-sramakrishnan-speaks-about-his-sanjaram-novel.html
- த.க.தமிழ் பாரதன்
புதுதில்லி
30.01.2019
30.01.2019