நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Wednesday, 10 April 2019

ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 14 கடைசி நாள்.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 14  கடைசி நாள்.

அனைவருக்கும் தொடக்கக்கல்வி என்பது இந்தியாவில் சட்டம். ஆனால், இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப்படிப்பு, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர், முதுமுனைவர் என கல்விநிலை செல்லச் செல்ல கல்வி பயில்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டே போகிறது. இன்றைய சமூகத்தில் கல்வி என்பது பெரும்பாலும் வணிகமாகிவிட்டது. உயர்கல்வி குறித்து பெரும்பாலானோர் அச்சம் கொள்வதற்கான காரணமாகக் கல்விக்கட்டணமே இருக்கிறது.

ஏனெனில், இன்று பள்ளிப்படிப்புக்கே சில ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். லட்சங்களில்தான் கட்டணம். இந்தச் சூழ்நிலையில் உயர்கல்வியின் நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆய்வுப் படிப்புகள் எனும்போது கல்லூரிகள், மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் என எதுவான போதும் கட்டணம் ஆயிரத்துக்கும் குறைவாக இல்லை. ஆனால், இந்தியாவின் தலைநகரில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு பருவத்துக்கான கல்விக்கட்டணம் வெறும் 128 ரூபாய் மட்டுமே. 

ஜேஎன்யு
இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதன்மையானது, சிறந்த பல்கலைக்கழகத்துக்கான ஜனாதிபதி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது இப்பல்கலைக்கழகம். 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு 2019 ஆகும். தில்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றானமுனிர்காவின் பின்புறம் அமைந்துள்ளது பல்கலைக்கழகம். தலைநகரில் இருக்கும் மத்தியப் பல்கலைக்கழகம் என்பதால் துறைசார்ந்த முக்கிய நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பு கிடைக்கப் பெறும். தலைநகரில் அமைந்துள்ளதால் அறிவுசார் விடயங்களை எளிதில் பெறுவதற்கான வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.
கல்விக்கட்டணம்
 இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம், பருவத்துக்கு 128 ரூபாய் மட்டுமே. ஆம், இவ்வளவு குறைந்த கட்டணம் உலகின் எந்தப் பகுதியிலும் இருக்க வாய்ப்பில்லை. கல்விக் கட்டணம் மட்டும் அல்ல, சான்றிதழ்கள் வாங்க 100 ரூபாய்க்குமேல் கட்டவேண்டியதில்லை. இதை எல்லாம்விட முனைவர்பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்க வெறும் 100 ரூபாய்தான். இந்தியாவின் ஏனைய பல்கலைக்கழகங்களில் இதற்காக ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும்போது இத்தொகை மிகக் குறைவு. ஒரு பருவத்திற்கான விடுதிக்கட்டணம் ஏறக்குறைய 1000 ரூபாயாகும்.  இது தவிர்த்து மாதாந்திர உணவுக்கட்டணமாக மாதம் 2,100 முதல் 2,500 வரை பெறப்படுகிறது.
பல்கலைக்கழக தன்மை
இது ஓர் உறைவிடப் பல்கலைக்கழகம் ஆகும். அதாவது, இங்கே சேரும் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே தங்குவதற்கு விடுதி கிடைத்துவிடுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் மொத்தம் 14-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. விடுதியின் ஒவ்வோர் அறைக்கும், இருவர் என்பதாகவும் முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்குத் தனி அறை என்பதாகவும் ஒதுக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம்விடச் சிறந்தது இங்கே இருக்கும் பி.ஆர். அம்பேத்கர் நூலகம். நூலகம் 9 தளங்களை உடையது. தரைத்தளத்தில் ஒரேநேரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வசதி உள்ளது. இது, தவிர்த்துச் செய்தித்தாள், வாரமாத இதழ்கள் வைத்திருக்கும் பகுதி உள்ளது. அரசியல் ஆளுமைகள், பொருளாதார வல்லுநர்கள், அறிஞர்கள் எனப் பலத்தரப்பட்ட நபர்களின் பொழிவுகள் அவ்வப்போது ஆங்காங்கு நிகழ்ந்துகொண்டே இருக்கும்.  24*7 படிப்பக அறை உள்ளது. இலவச வைஃபை வசதி. மாற்றுத்திறனாளிகளுக்கு சேர்க்கை, விடுதி போன்றவை பிரத்யேகமாக இருக்கின்றன. கட்டிடங்கள், சாலைகள் தவிர்த்து பல்கலைக்கழகம் முழுமையும் மரங்கள் இருப்பதால், தில்லியில் நிலவும் மாசு பிரச்சினை இங்கு குறைவு.


மாணவர்கள்
இப்பல்கலைக்கழகம் அரசியல் முதற்கொண்டு பலதுறைகளின் ஆளுமைகளை  உருவாக்கியுள்ளது. நிர்மலா சீதாராமன், சீதாராம்யெச்சூரி, பிரகாஷ் காரத், கண்ணையா குமார் உள்ளிட்ட பல அரசியல் ஆளுமைகளுக்கான விதை இங்கு விதைக்கப்பட்டிருக்கிறது. உலகில் எந்த மூலையில் உரிமை மறுக்கப்படுகின்றதோ, அதை எதிர்த்து ஒலிக்கும் குரலாக ஜேஎன்யுமாணவர்களின் குரல் இருக்கும். இங்குள்ள கட்டற்ற சுதந்திரம், கட்டுப்பாடற்ற அறிவுத்தேடலும் மாணவர்களுக்கான சமூகப் புரிதலை  ஏற்படுத்துவதாக இருக்கிறது.

மாணவர் தேர்தல்!
ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான அமைப்பாக ஜேஎன்யு மாணவர் சங்கம் செயல்படுகிறது. இம்மாணவர் அமைப்பு 1971-ம் ஆண்டில் மாணவர்களால் உருவாக்கப்பட்டது. அதாவது, இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இதற்கான விதிமுறைகள் எல்லாம் மாணவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது, நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் இயங்கும் ஓர் அமைப்பாகும். இதற்கான தேர்தல் ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் நடைபெறும். தேர்தலில் பொதுக்குழுவுக்கான தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் என்ற 4 பதவிகளுக்கான உறுப்பினர்களும் ஒவ்வொரு துறைக்குமான ஆலோசகர்களும் வாக்கெடுப்பின்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தேர்தலை நடத்தும் தேர்தல் குழுவினரும் மாணவர்களாகவே இருப்பர். இத்தேர்தலின் முக்கியமான சிறப்பம்சம் போட்டியாளர்கள் மாணவர்களின் முன்னிலையில் பொதுவெளியில் தங்களது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள்.  மாணவர்கள் அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவ அமைப்பின் மீதான விமர்சனங்கள் அவ்வமைப்பின் சார்பாகப் போட்டியிடும் மாணவரிடம் கேட்கப்படும்.  ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவோர் பிற அமைப்புகளின் மீதான விமர்சனங்களையும் கேள்விகளையும் வைப்பர். அது தொடர்பான பதில்களையும் விளக்கங்களையும் அம்மேடையிலேயே பகிர்ந்துகொள்வர். இத்தகைய விவாதங்களே அவ்வாண்டின் மாணவத் தலைவரைத் தேர்தெடுப்பதில் அடிப்படையாக அமையும். இத்தகைய தன்மையானது பொது அரசியலில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு.

2019-20 சேர்க்கை
2019-20ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கான அறிவிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளி தள்ளி தற்போது வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் எழுத்துத் தேர்வாக இருந்த நுழைவுத் தேர்வு,  இந்த ஆண்டு ஆன்லைன் தேர்வாக நடக்கவிருக்கிறது. ஜேஎன்யு நுழைவுத்தேர்வு National Test Agency உடன் இணைந்து நடத்தப்படஇருக்கிறது. சரியான விடையைத் தெரிவு செய்யும் Objective type முறையில் நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. ஏற்கெனவே, தமிழ்த்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் தமிழ் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். வரும் கல்வியாண்டிற்கு தமிழ்த்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாய்ப்புள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.


தேர்வு விவரம்
இணையத்தில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் – 14.04.2019
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்கள் – 27,28,29,30 .05.2019
தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடங்கள் - சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நாகர்கோயில்
பல்கலைக்கழக இணையதள முகவரி - https://jnu.ac.in/content/jnuadmission
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க - https://ntajnu.nic.in/

-த.க.தமிழ்பாரதன்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 கடைசிநாள்மத்திய மனித வளத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ளது, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமானது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பிளஸ் டூ தேர்வு  எழுதியவர்கள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கவும் (Integrated Master Degree), தற்போது இளநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள் முதுநிலை பட்டப்படிப்பு (Master Degree) படிக்கவும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆய்வியல் நிறைஞர் (M.Phil), முனைவர் (Ph.D) பட்டப் படிப்பிற்கும்  விண்ணப்பிக்கலாம். 


மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் 40-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கல்வி நிறுவனங்களின் தர மதிப்பில் ஐஐடி-கள் முதல் வரிசையிலும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. பன்மொழி அறிவு, பல்வேறு பட்ட சிந்தனைகள், பல்வேறு மாநில பழக்க வழக்கங்கள் ஆகியவை மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் கிடைக்கும். தமிழ்நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் குறித்து பலரும் அறியாமல் இருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் பலருக்கும் இப்பல்கலைக்கழகம் குறித்த புரிதல் சென்றடையாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது.

அமைவிடம் :
நாகப்பட்டிணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதலைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். திருவாரூரில் இருந்து பத்து கி.மீட்டர் தொலைவில் நீலக்குடி, நாகக்குடி கிராமங்களில் 516 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம். 

வழங்கப்பெறும் பட்டப் படிப்புகள் :
இங்கு பிளஸ் டூ மாணவர்கள் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகளாக எம்எஸ்சி வேதியியல் (Chemistry), பொருளியல் (Economics), உயிரி அறிவியல் (Life Sciences), கணிதம் (Maths), இயற்பியல் (Physics) படிப்புகளும், நான்காண்டு இசைப்படிப்பு,நான்காண்டு பிஎஸ்ஸி., பிஎட்..,  இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு முதுநிலை படிப்புகளாக எம்எஸ்சி வேதியியல் (Chemistry), கணினி அறிவியல் (Computer Sciences), நோயியல் மற்றும் பொது சுகாதாரம் (Epidemiology & Public Health), புவியியல், மைக்ரோபயாலஜி, அப்ளைடு சைக்காலஜி, எம்டெக் படிப்புகளாக மெட்ரியல் சயின்ஸ் & நானோ டெக்னாலஜி,எனர்ஜி & என்விரண்ட்மென்டல் டெக்னாலஜி படிப்புகளும், முதுநிலை கலைப் பிரிவில் எம்ஏ ஆங்கிலம், ஹிந்தி, மீடியா &கம்யூனிகேஷன், சோசியல் சர்வீஸ், வரலாறு, செவ்வியல்தமிழ், பொருளாதாரம், எம்பிஏ, எம்.காம், நூலகவியல் மற்றும் தகவல் அறிவியல் பாடங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இங்கு பி.எட் படிப்புடன் கூடிய பிஎஸ்சி கணிதம் படிப்பும், இளநிலை பிரிவில் சிறப்பு பாடங்களாக இசை, டெக்ஸ்டைல் போன்ற பாடங்களும் இருக்கின்றன.  

மேற்சொன்ன பிரிவுகளில் சேர, பொது பிரிவினர் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 60% குறைவில்லாமல் மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்ணையும், இதர பிரிவினர் 50% மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும்.

பொருளாதாரப் படிப்பில் நாட்டின் முன்னணியில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து பொருளியல் - பொது (Economics - General), நிதி பொருளியல் (Financial Economics), காப்பீட்டுப் பொருளியல் (Actuarial Economics), சுற்றுச்சூழல் சார்ந்த பொருளியல் (Environmental Economics), பயன்பாட்டு நிதி பகுப்பாய்வு (Applied Quantitative Finance) போன்ற பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. மேலும், செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து முதுகலை தமிழ் பட்டப்படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதைத்தவிர, தேசிய சட்ட பள்ளி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்தும் பல பயிற்சிகளை வழங்குகின்றன. 

விண்ணப்பிக்கும் முறை : 
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர பத்து மத்திய பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் பொது நுழைவுத் தேர்வு (CUCET) எழுத வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 13-ஆம் தேதியாகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்களில் மூன்று பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும்போது நீங்கள் கொடுக்கும் அலைபேசி எண்ணுக்கு, பதிவு செய்த விவரங்கள் கிடைத்துவிடும். நுழைவுத் தேர்வுக்கானஹால் டிக்கெட் மே 10-ஆம் தேதி பதிவேற்றப்படும். பொதுநுழைவுத் தேர்வு மே 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறும்.இத்தேர்வுமுறை, சரியான விடைகளை தேர்ந்தெடுக்கும்(Objective Type) வகையில் அமைந்திருக்கும்.  ஜூன் 21ஆம் தேதிநுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் சேர்ந்து நுழைவுத் தேர்வினை நடத்துவதால் நுழைவுத் தேர்வு முடிவுகளுக்குப் பின்னரேகலந்தாய்வு நடைபெறும். ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.நான்காண்டு பிஎஸ்ஸி., பி.எட் பாடப்பிரிவில் 50 மாணவர்களும், முதுநிலை பட்டப்படிப்பிற்கு 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மத்திய அரசின் பல்கலைக்கழகம் என்பதால் படிப்புச் செலவு மிகவும் குறைவு. 


பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.cucetexam.in/ இணைய தளத்தையம், மாணவர் சேர்க்கைக்கு, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக https://cutn.ac.in/admissions-2019-2020/  இணையதளத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


முக்கிய நாட்கள் ;
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள் : 13.03.2019
விண்ணப்பிக்க இறுதி நாள் : 13.04.2019
ஹால்டிக்கட் பதிவேற்றப்படும் நாள் : 10.05.2019
தேர்வு நிகழ வுள்ள நாட்கள் : 25 & 26 .05.2019
முடிவுகள் வெளியாகும் நாள் : 21.06.2019

மத்திய பல்கலைக்கழக இணையதளம் : https://cutn.ac.in/admissions-2019-2020/
பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க : https://www.cucetexam.in/

-த.க.தமிழ்பாரதன் / படங்கள் - க.சதீஷ்குமார்