நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 10 ஏப்ரல், 2019

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 கடைசிநாள்



மத்திய மனித வளத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ளது, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமானது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பிளஸ் டூ தேர்வு  எழுதியவர்கள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கவும் (Integrated Master Degree), தற்போது இளநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள் முதுநிலை பட்டப்படிப்பு (Master Degree) படிக்கவும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆய்வியல் நிறைஞர் (M.Phil), முனைவர் (Ph.D) பட்டப் படிப்பிற்கும்  விண்ணப்பிக்கலாம். 


மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் 40-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கல்வி நிறுவனங்களின் தர மதிப்பில் ஐஐடி-கள் முதல் வரிசையிலும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. பன்மொழி அறிவு, பல்வேறு பட்ட சிந்தனைகள், பல்வேறு மாநில பழக்க வழக்கங்கள் ஆகியவை மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் கிடைக்கும். தமிழ்நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் குறித்து பலரும் அறியாமல் இருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் பலருக்கும் இப்பல்கலைக்கழகம் குறித்த புரிதல் சென்றடையாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது.

அமைவிடம் :
நாகப்பட்டிணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதலைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். திருவாரூரில் இருந்து பத்து கி.மீட்டர் தொலைவில் நீலக்குடி, நாகக்குடி கிராமங்களில் 516 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம். 

வழங்கப்பெறும் பட்டப் படிப்புகள் :
இங்கு பிளஸ் டூ மாணவர்கள் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகளாக எம்எஸ்சி வேதியியல் (Chemistry), பொருளியல் (Economics), உயிரி அறிவியல் (Life Sciences), கணிதம் (Maths), இயற்பியல் (Physics) படிப்புகளும், நான்காண்டு இசைப்படிப்பு,நான்காண்டு பிஎஸ்ஸி., பிஎட்..,  இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு முதுநிலை படிப்புகளாக எம்எஸ்சி வேதியியல் (Chemistry), கணினி அறிவியல் (Computer Sciences), நோயியல் மற்றும் பொது சுகாதாரம் (Epidemiology & Public Health), புவியியல், மைக்ரோபயாலஜி, அப்ளைடு சைக்காலஜி, எம்டெக் படிப்புகளாக மெட்ரியல் சயின்ஸ் & நானோ டெக்னாலஜி,எனர்ஜி & என்விரண்ட்மென்டல் டெக்னாலஜி படிப்புகளும், முதுநிலை கலைப் பிரிவில் எம்ஏ ஆங்கிலம், ஹிந்தி, மீடியா &கம்யூனிகேஷன், சோசியல் சர்வீஸ், வரலாறு, செவ்வியல்தமிழ், பொருளாதாரம், எம்பிஏ, எம்.காம், நூலகவியல் மற்றும் தகவல் அறிவியல் பாடங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இங்கு பி.எட் படிப்புடன் கூடிய பிஎஸ்சி கணிதம் படிப்பும், இளநிலை பிரிவில் சிறப்பு பாடங்களாக இசை, டெக்ஸ்டைல் போன்ற பாடங்களும் இருக்கின்றன.  

மேற்சொன்ன பிரிவுகளில் சேர, பொது பிரிவினர் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 60% குறைவில்லாமல் மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்ணையும், இதர பிரிவினர் 50% மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும்.

பொருளாதாரப் படிப்பில் நாட்டின் முன்னணியில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து பொருளியல் - பொது (Economics - General), நிதி பொருளியல் (Financial Economics), காப்பீட்டுப் பொருளியல் (Actuarial Economics), சுற்றுச்சூழல் சார்ந்த பொருளியல் (Environmental Economics), பயன்பாட்டு நிதி பகுப்பாய்வு (Applied Quantitative Finance) போன்ற பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. மேலும், செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து முதுகலை தமிழ் பட்டப்படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதைத்தவிர, தேசிய சட்ட பள்ளி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்தும் பல பயிற்சிகளை வழங்குகின்றன. 

விண்ணப்பிக்கும் முறை : 
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர பத்து மத்திய பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் பொது நுழைவுத் தேர்வு (CUCET) எழுத வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 13-ஆம் தேதியாகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்களில் மூன்று பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும்போது நீங்கள் கொடுக்கும் அலைபேசி எண்ணுக்கு, பதிவு செய்த விவரங்கள் கிடைத்துவிடும். நுழைவுத் தேர்வுக்கானஹால் டிக்கெட் மே 10-ஆம் தேதி பதிவேற்றப்படும். பொதுநுழைவுத் தேர்வு மே 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறும்.இத்தேர்வுமுறை, சரியான விடைகளை தேர்ந்தெடுக்கும்(Objective Type) வகையில் அமைந்திருக்கும்.  ஜூன் 21ஆம் தேதிநுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் சேர்ந்து நுழைவுத் தேர்வினை நடத்துவதால் நுழைவுத் தேர்வு முடிவுகளுக்குப் பின்னரேகலந்தாய்வு நடைபெறும். ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.நான்காண்டு பிஎஸ்ஸி., பி.எட் பாடப்பிரிவில் 50 மாணவர்களும், முதுநிலை பட்டப்படிப்பிற்கு 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மத்திய அரசின் பல்கலைக்கழகம் என்பதால் படிப்புச் செலவு மிகவும் குறைவு. 


பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.cucetexam.in/ இணைய தளத்தையம், மாணவர் சேர்க்கைக்கு, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக https://cutn.ac.in/admissions-2019-2020/  இணையதளத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


முக்கிய நாட்கள் ;
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள் : 13.03.2019
விண்ணப்பிக்க இறுதி நாள் : 13.04.2019
ஹால்டிக்கட் பதிவேற்றப்படும் நாள் : 10.05.2019
தேர்வு நிகழ வுள்ள நாட்கள் : 25 & 26 .05.2019
முடிவுகள் வெளியாகும் நாள் : 21.06.2019

மத்திய பல்கலைக்கழக இணையதளம் : https://cutn.ac.in/admissions-2019-2020/
பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க : https://www.cucetexam.in/

-த.க.தமிழ்பாரதன் / படங்கள் - க.சதீஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக