புதுதில்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் ஜேஎன்யு பற்றிய அறிமுகம் இருப்பவர்கள், https://ntajnu.nic.in/GenRegSysCms/public/home.aspx என்ற இணையப்பக்கத்தில் சேர்க்கைக்காக விண்ணப்பிப்பதோடு இக்கட்டுரையைத் தவிர்ப்பது நலம்.
ஜேஎன்யு பற்றிய அறிமுகமில்லாதவர்களுக்கு அறிமுகம் தரும் வகையில் இக்குறுந்தொடர் நான்கு பாகங்களில் நிறைவுறும். உரிய நேரத்தில் அவை பதிவேற்றப்படும். நான் சந்தித்த மனிதர்களை நீங்கள் சந்திக்காது இருந்திருக்கலாம். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தவும், அவர்கள் வழி உங்களுடன் உரையாடவும், இக்குறுந்தொடர் வழிகோலும் என்றெண்ணுகிறேன்.
ஜேஎன்யு விண்ணப்பம் முதல் விடுதி வரை தொடர் இனிதே தொடங்குகிறது.
விகடனுக்காக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தன்மை/ தரம்/ வசதி/ பட்டப்படிப்புகள் உள்ளிட்டவற்றைப் பற்றிய கவர் ஸ்டோரி (https://www.vikatan.com/news/coverstory/46059.html) அது. முன்னொரு முறை இலக்கிய வளர்ச்சிக்கழகத்தில் உரையாற்றிய பேரா. ஆதிஇராமானுஜம் அவர்களின் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, அவசியம் வருகவென வரவேற்றிருந்தார். மதிய உணவு தவிர்த்த ஒரு நாளில் புகைப்படக் கலைஞர் சதீஷ்குமாருடன் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் சென்றிருந்தோம். நிர்வாக அலுவலகக் கட்டிடத்தில் பேரா. த. செங்கதிர் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்ததும், பேட்டி எடுக்க ஒப்புதல் கிடைத்தது. கார் ஒன்றில் எங்களை அழைத்துக் கொண்டு, அன்று மாலை வரை ஆங்காங்கே நிலத்தை உதறி விளைந்து நிற்கும் கட்டங்களுக்குள் பல்கலைக்கழகத்தை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார் ஆதி சார். உண்மையிலேயே வியப்பாக இருந்தது, இத்தனை ஆண்டுகள் இந்த ஊரில் இருந்திருக்கிறோம். இப்படி ஒரு பல்கலைக்கழகம் இருப்பது கூடத் தெரியாத அறிவிலிப் பதராக இருந்திருக்கிறோமே என்றெல்லாம் தோன்றிற்று.
பயிலும் மாணவர்கள் சிலரிடம் பேட்டி எடுத்தால் கட்டுரை மேலும், வலுப்பெறும் என நினைத்துப் பேட்டியெடுக்க முனைகையில், பலரும் அழகாக தவிர்த்துவிட்டனர். ஆதி சார் கடினப்பட்டு நான்கு பேரைப் பிடித்துக் கொடுத்தார். அதில் இருவர் தமிழர்கள், மற்றயிருவர் அல்தமிழர்கள். அந்தப் பேட்டியில் கடைசியில் சிக்கிய ஜீவன் தான் அருண்குமார். நடப்பு மாணவ பத்திரிக்கையாளரான எனக்கு ஒரு ஆண்டுக்கு முன் மாணவ பத்திரிக்கையாளராக இருந்தவராகத்தான் அறிமுகம் அருண். அவரது பேட்டியில்தான் ஜேஎன்யு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். தமிழுக்கு புதுதில்லியில் இருக்கை இருக்கிறது என்பதையே அப்போது தான் முதன்முதலாக செவியுறுகிறேன்.
பெரும்பாலும், எதிர்காலம் பற்றிய புரிதல்கள் அதிகம் இல்லாததால், நிகழ்காலத்தைக் கடத்துவதிலேயே காலம் கடந்துவிடுகிறது. கல்வியும் அப்படித்தான் காலம் கழித்துப் பார்க்கையில் செலவீனமே எஞ்சியிருந்தது. அடுத்த கட்ட படிப்பு பற்றிய பெரிய தெளிவு ஏதுமில்லாத சராசரி இந்திய மாணவனாகவே காலம் சென்று கொண்டிருந்தது. எதேச்சையாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை செவ்வியல் தமிழும் சேர்ந்துவிட்டேன். அந்தக்கதையை ஈராண்டு முன்னரே விளக்கியாயிற்று (http://tamilbharathan.blogspot.com/2017/06/blog-post.html )
சேர்ந்த சில நாட்களில் அதுவரை அறிமுகமாகத தமிழ் மாணவரொருவர், தமிழ்த்துறை அறைகளுக்கிடையே அலைந்து கொண்டிருந்தார், தில்லி ஜேஎன்யுவிற்கு ஒருங்கிணைந்த M.Phil/Ph.D பட்டப்படிப்பிற்காக நேர்முகத் தேர்விற்கு ப்ரொபோசல் தயாரித்துக் கொண்டிருந்த அவருக்குப் பெயர் விஜய் ஹசன். கொஞ்சம் விசாரிப்பு. கொஞ்சம் அறிமுகம் என ஜேஎன்யு பற்றிய சுண்டைக்காய் அளவிலான புரிதல் கிடைத்தது.
அது முதுகலை முதலாம் ஆண்டு முற்பருவம். வகுப்பில் பேரா. திருநாவுக்கரசு வித்தியாசமாக பாடம் நடத்துவார், இல்லை மாணவர்களையே பாடம் நடத்த வைப்பார். பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் எல்லாம் வகுப்பறைக்குள்ளேயே சிறையிலிருக்க, வகுப்பறை தாண்டி இன்றும் ஏதோ ஒன்று நினைவிலிருக்கும் எதார்த்தப் பாடங்கள் தான் அவருடைய வகுப்பில் நிறைந்திருக்கும். (பல நாள்) தூங்குவதற்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காத அவரது இயல்பு வெகுவாக கவர்ந்த ஒன்று. பின்நவீனத்துவம், நவீனத்துவம் கட்டுடைத்தல் என புதிய புதிய இசங்களை புரிந்துகொள்ள முடியாத எங்களிடம் புரிய வைக்கப்பாடுபடுவார். அப்படி ஒரு நாள் தான், ஜேஎன்யு பற்றிய விவாதத்தைத் தொடக்கி வைத்தார்.
எதிர்மறையிலிருந்து தொடங்கிவைத்த விவாதம் என்பதால் தான், இன்றும் நினைவிலிருக்கிறது. ”தீய பழக்கமாயினும் சிகரெட், தண்ணி போன்றவை தனிமனித சுதந்திரம் சார்ந்த பார்வை இருக்கும், நாடாளுமன்றத்தில் ஒரு பில் பாஸானது என்று சொன்னால், அன்றைய இரவு அதைப்பற்றிய விவாதம் நடக்கும். மாணவர்களே முன்னின்று போராட்டங்களை நடத்துவர். புல்வெளியில் பாடம் நடத்தும் பல்கலைக்கழகம். வகுப்புக்குள் வாழ்க்கையே சுருங்கிவிடாது. எத்துறையில் நடக்கும் எந்தக் கூட்டத்தில் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஒன்பது மாடி நூலகக் கட்டிடம். 24*7 இயங்கக்கூடிய நூலகவெளி, அறிஞர்கள் பலர் இயல்பாக அங்கே காணமுடியும். கல்விக்கட்டணம் குறைவு, கட்டற்ற சுதந்திரம், கட்டுப்பாடற்ற அறிவுத்தேடல் என கல்வியுலக சொர்க்கம் தான் ஜேஎன்யு” எனுமளவில் பொருள்பட விவாதம் நிறைவுற்றது. ”நீங்கள்ளாம் அங்க போகணும், உங்களுக்காகத் தான் அங்கே இருக்கை அமைச்சிருக்காங்க” என்று அடிக்கடி சொல்வார்.
அதற்குப் பின், ஜேஎன்யு பற்றித் தெளிவுறத் தேடுகையில், திருக்குறளின் முதல் அதிகாரத்தை மூன்று மணிநேரமாக நடத்திய பேரா. நாச்சிமுத்து அவர்கள் ஏற்கெனவே ஜேஎன்யுவில் பணியாற்றியவர் என்பதை அறிய நேர்ந்தது. மொத்தம் நான்கு மாணவர்கள் எங்களுக்கு முன், சியுடிஎன் வளாகத்திலிருந்து ஜேஎன்யு வளாகத்திற்கு மேற்கொண்டு தமிழ் படிக்க இடம்பெயர்ந்துள்ளனர் என்பதும் பின்னர் தெரியவந்தது.
ஜேஎன்யுவில் பிற பட்டப்படிப்புகள் படிப்பதற்கும் தமிழ்ப் படிப்பதற்கும், வேறுபாடு உண்டு தானே. தமிழ்நாட்டில் தான் தமிழ் படிப்பதற்கான அத்தனைத் தரவுகளும் உள்ளன எனில், புதுதில்லியில் இருந்துகொண்டு என்ன படிக்கப் போகிறோம். என்ற கேள்வியைப் பலரும் தணித்திருக்கிறார்கள். நாம் இருக்குமிடம் நாம் யாரென்பதை அடையாளப்படுத்துமெனில், ஜேஎன்யு பின்னணியிலான தமிழ்ப் படிப்பும் அப்படித்தானே. முதலில் தமிழ்ப் படிக்க தமிழகம் தாண்டி ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு ஏன் செல்லக் கூடாது என்பது விடையாக இருந்தது. நினைத்தது போலவே, ஒப்பிலக்கிய ஆய்வு தான் இங்கு முதன்மையாக மேற்கொள்ளப்படுவது காலப்போக்கில் அறிந்துகொள்ளமுடிந்தது.
தில்லி மாணவர்கள் சேர்ந்து நடத்தும் தில்லிகை நிகழ்வுகளை முகநூல் வழியே அறிய முடிந்தது. மேற்பூச்சு பூசாத செங்கல் கட்டிடங்களாக அவ்வப்போது யாரோ பதிவேற்றும் படங்களால் ஜேஎன்யுவின் புற அமைப்பு கனவில் காணும் கற்பனை பிம்பமாக உருவெடுக்கத் தொடங்கியது.
கண்ணையாகுமார் கைதுசெய்யப்பட்ட குறித்த செய்திகளை தேடி அறிய முற்பட்ட வேளையில், முத்துக்கிருஷ்ணன் என்ற தமிழ் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் ஏதோ ஒரு மூலையில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததை தடுக்க முடியவில்லை. ஆயிரந்தான் ஆனாலும் அது இன்னொரு மண், இன்னொரு மக்கள், அவர்களிடையே இயல்பாகவே ஒத்திருந்தாலும் தனிமைப் படுத்தப்படுவதற்கான அத்தனைக் கூறுகளும் இருப்பதை ஒடுக்க முடியவில்லை. அதற்காக பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே எவ்வளவு நாட்கள் தான் இருப்பதென்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.
2017-18 கல்வியாண்டில் நடப்பு சீனியர்கள் யாரெனும் ஜேஎன்யுவில் சேருவார்கள், அவர்களது அனுபவங்களைத் தாங்கி நாமும் அடுத்த ஆண்டு முயற்சி செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்த பொழுதில், அந்தக் கல்வியாண்டிற்கு போதிய ஆய்வாளர்கள் இருப்பதால் தமிழ்த்துறை, மாணவர் சேர்க்கை அறிவிப்பையே வெளியிடவில்லை. இதுவே அதுவரை கொண்டிருந்த நம்பிக்கையை சற்றே தளர்த்தியிருந்தது. அதற்குப் பின் சியுடிஎன்-இல் நிகழ்ந்த இரண்டாவது பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த ஸ்ரீராமன் என்பவரை ஜேஎன்யு மாணவராக அறிமுகம் கிடைத்தது.
சரி. ஜேஎன்யுவில் 2018-19க்கான விண்ணப்பம் வந்தால் விண்ணப்பித்துத் தான் பார்ப்போமே! என்ன நடக்கிறதென்று என்ற எண்ணத்தோடு இருந்ததன் மீதத்தை அடுத்த பாகத்தில் காண்போம்.
-தக
புதுதில்லி
19.03.2016
(சியுடிஎன் CUTN = Central University of TamilNadu தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்)
(ஜேஎன்யு JNU = Jawaharlaal Nehru University ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக