நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Tuesday, 23 January 2018

ஆக்கங்கெட்ட கூவ......(கதை)

அன்கண்டிசனல் லவ் ஸ்டோரிஸ் (மெரீனா காதல்)
--------------------------------------------------------------------------------------
கதைஆக்கம் : Mari Muthu

கடந்த ஆண்டு மெரினாவில் இதேநாள் தான் மெர்சியை ஆதி  இறுதியாக சந்தித்தான். இல்லை இல்லை உண்மைக்காதலை உணர்த்தியவளை இயற்கைசூழலால் தொலைத்தான் என்பதுவே சரி. 

கடந்த ஆண்டு ஜன,17 மெரினாவில் மெல்ல மெல்ல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குரல்கள் மேலெழுந்தன. அப்போது சென்னையின் கடற்கரை சாலையில் ஆதி, தன் மார்க்கெட்டிங் வேலைக்காக பைக்கில் பறந்து கொண்டிருந்தான். ஆம். ஆதி, அடையாறில் பிரபல கம்பெனியில் மார்க்கெட்டிங் அஸிஸ்டன்ட்டாக பணிபுரிந்துகொண்டிருந்தான். சென்னையின் வாட்டி வதைக்கும் வெயிலிலும், நன்கு அயர்ன் செய்த ஃபார்மல் ட்ரெஸ்களை அணிந்துகொண்டு, விறைப்பாக பைக்கில் சுற்றும் ஒரு திருச்சிக்காரன்,ஆதி. என்ன அடிக்கடி பைக்கில் சுற்றும் போது, முதுகுதான் ஒரு சலவைக்கல் சைஸுக்கு வியர்த்து இருக்கும். 

அப்படி ஆதி பைக்கில் செல்கையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மணிக்கூண்டு கட்டடத்திற்கு எதிரில் ஜல்லிக்கட்டை உடனடியாக, நடத்தக்கோரி ஒருபெரும்பட்டாளம் கண்டனமுழக்கங்களை ஆஃபாயில் போடும் வெயிலில் எழுப்பிக்கொண்டிருந்தது. அதை கண்டும்காணாமல் வேலைநிமித்தமாக பாரிஸ் கார்னருக்கு விரைந்தான்,ஆதி. திரும்பிவருகையிலும் அந்த கூட்டம் போராடுவதைப்பார்த்து சற்று திகிலானான். என்ன நினைத்தானோ... ஆதி தெரியவில்லை, சடாரென்று  ஒரு அளவான கேனில் டீயும், சில கப்புகளும் வாங்கிக்கொண்டு, அந்த கூட்டத்திற்குள் சங்கமித்தான். ஆனால், அதை யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் தவித்தபோது...கூட்டத்தில் ஒரு கை அதை வாங்க எத்தனித்தது. அவள் தான் மெர்சி. 

”சார் கொடுங்க. இங்க...50 பேர் இருக்காங்க...நான் நிறைந்து தந்துடுதேன்”-என பொசுக்கென டீ கேனை வாங்கிக்கொண்டாள். மெர்சிக்குச்சொந்த ஊர் திருநெல்வேலி. தி.நகரில் உள்ள ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கவுன்டன்ட். இதேப்போல் போராட்டம் நடைபெற்ற அடுத்தநாளும்  மாலை நேரத்தில் டீ கேனோடு சென்றான், ஆதி. மீண்டும் அதைப்பெற்றாள், மெர்சி. இருவரும் சேர்ந்து போராட்டக்காரர்களுக்கு தங்கள் கைகளில் டீ ஊற்றிக்கொடுத்தனர். அதன்பின் நடந்த சில மணிநேர உரையாடலில் ஆதியிடம் மெர்சி கேட்டகேள்விகளுக்கு மட்டும் தான் பதில் வந்தது. அது ஆதி ரொம்ப சைலன்ட் பார்ட்டி என்பதை மெர்சிக்கு உணர்த்தியது. ஆனால், மெர்சி அவனுக்கு நேரெதிரானவள், கொஞ்சம் ஃபிராங், உற்றவர்களிடம் மட்டும். 

”சார்வாள்...மணல்ல...வந்து உட்கார்ந்து..கோஷம் போடுங்க”
“இல்ல...இந்த ட்ரெஸ்ஸப்போட்டுக்கிட்டு...எப்பிடி.. எனக்கு கொஞ்சம் கஷ்டம் “ என மெர்சியின் அழைப்பை மறுதலித்தான் ஆதி.
”சார் கெளரவம் பாக்கிங்கலோ.. இப்பிடி எதுக்கெடுத்தாலும் நம்ம மக்களோட பிரச்னைய தூர நின்னுப்பார்க்கிறது தான், நம்மள மத்தவங்க முன்னாடி கோட்டிக்காரங்களா காட்டுது , ”எனச்சொல்லிக்கொண்டே,சடாரென ஆதியின் கையைப்பிடித்து போராட்டத்தில் அமர்ந்தாள் மெர்சி.

ஓரிரு நாளில் மெர்சி ஆதியை ஒருமையில் விளிக்கப்பழகியிருந்தாள். ஆனால், ஆதி எப்போதுமே, ஒவ்வொரு வார்த்தையிலுமே ‘ங்க’ சேர்க்க தவறியதில்லை. அந்த அழகிய முரணை இருவருமே ரசித்தனர். போராட்டம் வளர, வளர இருவருக்குள்ளும் காதலும் வளர்ந்தது. சில நாள் நள்ளிரவில் கூட, போராட்டத்தை முடித்து தைரியமாக ஹாஸ்டல் சென்றாள்,மெர்சி. வழித்துணையாக ஆதியும் வருவான் என்ற துணிச்சலில். அப்படித்தான் ஆதியும் செய்தான்.

சரியாக கடந்தாண்டு இதே நாள் (ஜனவரி-22),மெரினா போராட்டக்களத்தில் மங்கிய மாலையில் வயிறுவலியில் தவித்துக்கொண்டிருந்தாள், மெர்சி. அவளது தவிப்பை உணர்ந்து அருகில் சென்றான் ஆதி.

“எல...பக்கத்து கடையில ஒரு நாப்கின் வாங்கித்தாடே. அப்படியே...அந்த டாய்லெட்டு ஃப்ரீயா இருந்தா...வந்து கூட்டிட்டு போடே” என்றாள் மெர்சி.
அந்த வார்த்தைகளுக்குப்பின்னால் இருக்கும் கனம், ஆதியின் மனதை ஏதோ செய்தது. அதன்பின் 15 நிமிடத்தில் கேட்டபொருளோடு மெர்சியைச் சந்தித்து,டாய்லெட்டுக்கு அழைத்துச்சென்றான்,ஆதி. சில நிமிடங்களில் டாய்லெட்டில் இருந்து திரும்பி வந்த மெர்சி “இப்பிடியே...என் லைஃப் ஃபுல்லா...வருவியே..டே”எனக்கேட்டு தழுதழுத்தாள்.
அப்போது ஏதோ பதற்றத்தில், ‘உங்க ஹாஸ்டல் வர, வர்றேன் ‘ என மண்டையை ஆட்டி வைத்தான் ஆதி.
”ஒண்ணும் புரியாத...ஆங்கங்கெட்டகூவ..கூவ” என முணுமுணுத்தாள் மெர்சி. அப்போது போராடிக்கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப்பெண் பிரவசவலியில் துடிக்க, அவளை அழைத்துக்கொண்டு வேகவேகமாக ஒரு சிலப்பெண்களுடன் மெர்சியும்  ஆட்டோவில் சென்றாள். தூரத்தில் சென்ற ஆட்டோவிலிருந்து தன்னை போராட்டத்தில் முதன்முதலில் ஏற்ற மெர்சியின் கை, ஆதிக்கு டாட்டா காட்டியது.

ஆதியும் கேசுவலாக மறுநாள் போன் செய்யலாம் என்று,விட்டுவிட்டான். மறுநாள் ஜனவரி-23 காலை மெரினாவில் போலீசார் நடத்திய தடியடி களேபரத்தில் ஆதியின் செல்போன் கூட்டத்தில் தொலைந்துபோனது. மெர்சியின் போன் நம்பர், அந்த மொபைலில் இருந்ததால், தொடர்பு அறுந்த சோகத்தில் விக்கிப்போனான், ஆதி. ஃபேஸ்புக்கில் தேடிப்பார்த்தான்.20 முறை தி.நகர் சென்று இருப்பான். 5 முறை திருநெல்வேலிக்குப் பஸ் ஏறியிருப்பான். ஆனால், ஏனோ மெர்சியை, ஓராண்டுகளாக ஆதி பார்க்கவில்லை. 

அந்த வலியுடன் இன்று(ஜன-22,2018) காலையே மெரினா சென்று, தான் மெர்சியுடன் சேர்ந்து நடந்த இறுதி நிமிடங்களை நினைத்துக்கொண்டான் ஆதி. அந்த அழகிய காதலுக்கு சாட்சியாய் மெரினாவும் சென்னைப்பல்கலைக்கழக மணிக்கூண்டு கட்டடமும் நின்றதை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டான், ஆதி. அருகில்  இருவரும் சேர்ந்து டீ குடித்த  கடையில் மீண்டும் டீ ஆர்டர் செய்தான், ஆதி. கண்ணீர் விட்டான். கரைந்து இருந்தான்.

அப்போது டீக்கடை எஃப்.எம்மில் இருந்து கெளதம் மேனனின் இயக்கத்தில் வெளியான “ கூவ..ஆக்கங்கெட்ட கூவ..”ஆல்பம் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

(உண்மைக் கதையைத் தழுவி எழுதப்பட்டது)
- ம.மாரிமுத்து
23.01.2018


பிகு : இணையத்தில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பிறகு, ஜனரஞ்சக எழுத்து நடையில் கதைகள் பெரும்பாலும் வருவதில்லை என்ற ஏக்கம் இருந்தது. அப்டேட் ஆகாமல் இருக்கும் கடந்த காலத் தலைமுறை எழுத்தாளர்களைக் காட்டிலும் ஆன்லைன் எழுத்துலகில் இளைய தலைமுறையின் எழுத்துகள் வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன. மனோ பாரதியின்  “Oye- Bye Friends” கதை தான் எனக்கு 2017இல் படித்ததில் மிகவும் பிடித்தது. அதற்குப் பின் 2018இல் மாரிமுத்துவின் இந்த “ஆக்கங்கெட்ட கூவ” கதை இரண்டாவது.  தொடர்ந்து மக்கள் நெடியோடு உங்கள் நொடிகள் சுழலட்டும்.

மாரி எழுத்தில் மும்மாரி பொழியட்டும். வாழ்த்துகள்.
- த.க.தமிழ் பாரதன் Tamil Bharathan

7 comments:

 1. கதையோட்டம் அருமை. படிக்க எளிமையா, அழகா இருந்தது. எழுத்தும் தேடலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இரயில் பயணத்தில் எதிராய் அமர்ந்திருக்கும் ஒருவர் மீது வரும் இரசிய சினேகம், பேருந்து பயணத்தின் பக்கத்து இருக்கை பயணியின் மீது வரும் காதல்,பக்கத்து தெரு மாடி வீட்டு ஆள்/பெண் மீது தோன்றும் அன்பு என எல்லோருக்கும் இந்த அவரச யுகத்தில் சொல்ல மறந்த சொல்ல பயந்த கைவிடப்பட்ட காதல் நிச்சயம் இருக்கும். அப்படி இருந்தால் உங்கள் கதையை படிக்கிற பொழுது அவை உணர்வுகளை நிச்சயம் தட்டி எழுப்பும்.எதார்த்த நடை கதை. அருமை.வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் எழுத்துபணி இவண் இனியவள் மலர்க்கொடி

  ReplyDelete
 3. அருமையான கதைக் கரு மெரினாவில் நிறைந்த நினைவுகள்

  ReplyDelete
 4. Annane sema😍😍😍😍.but avanga senthurunthaa santhosama irukum😞😒😒😒

  ReplyDelete