நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 18 ஜனவரி, 2018

இலங்கைக்கு விசா கிடைப்பதில் இருந்த சிக்கல்.....!

CBSE NET தேர்வு 05.11.2017 அன்று நடைபெற்றது. எல்லாத் தேர்வுகளையும் போல், அத்தேர்விற்கும் பல்லக்கு ஏதும் சுமக்காது நடைபாதைப் பயணமென வெகு இயல்பாக தயாரிப்பு செய்து கொண்டிருந்தேன்.

சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் பணிமேல் விடுப்புடன் பயணப்படி + உணவு + உறைவிடத்துடன் ஒரு வார காலத்திற்கான இளந்தமிழர் இலக்கியப்பட்டறைக்கு அரசு ஆணை வந்திருந்தும் இம்முறை கலந்து கொள்ள முடியாத சூழலில் சிக்கித் தவித்திருந்தேன்.

CBSE NET தேர்வும், அதனையடுத்து வந்த பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகளும், அவற்றிற்கிடையேயான இலங்கைப் பயணமும் இம்முறை இலக்கியப் பட்டறைக்குச் செல்லயியலாது செய்திருந்தன.

சரி, குவியத்திற்கு வருவோம்.

01.11.2017 அன்று தமிழ்நாடு மத்தியப் பல்கலை.யில் தமிழ்த்துறை சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ந்து கொண்டிருந்தது.

முந்தைய நாள் நண்பர் நி.கனகராசு கரைத்துக் குடித்த தமிழ் இலக்கிய வரலாறு புத்தகங்களுள் ஒன்றான மு.வரதராசனார் எழுதி சாகித்ய அகாதமி வெளியிட்ட தமிழ் இலக்கிய வரலாறு புத்தகத்தைப் பெற்றுப் படிக்கத் தொடங்கியிருந்தேன்.

வாசிப்பில் வசிக்கத் தொடங்கிய முதல் நாள் முடிவில் தமிழ் இலக்கிய வரலாற்று வானில் பாதி பறந்த எனக்கு, இரவு நேரத்தில் சுங்கம் தூக்கத்தை வரியாய் வசூலித்ததில் அடுத்த நாளும் தொடரலாயிற்று வாசிப்பு.

சிறப்புச் சொற்பொழிவு சிறப்பாய் இருப்பினும், அதனின் ஆர்வத்தை வரவழைத்திருந்தது இலக்கிய வரலாறு. முதன்முதலில் முழுவதும் படித்து முடித்த வரலாறு புத்தகம் அது. தன்னால் இயன்ற வரை மு.வ ஆவணப்படுத்தியிருக்கிறார். அம் மாபெரும் தரவுக்கே அவருக்கு பாராட்டு செய்தலவசியம்.

கண்கள் கணப்பொழுதில் எழுத்துகள் வடித்தத் தரவுகளை மூளைக்குள் பதிவிறக்கம் செய்திருந்த சமயம், அயல்நாட்டு இலக்கியப் பகுதியை அப்போது அடைந்திருந்தேன்.

280 பக்கங்களைக் கடந்த செய்யுள் பகுதி ஒன்று என்னை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஆங்கே உள்ள மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் கொடுத்திருந்தது.

கம்பர் ஒரு காவியத்தைச் செய்தார்
கண்டபடி இராவணனை வைதார்
எம்போல்வார் இன்றெடுக்கும்
இவர்விழவுக்கு இங்குவர
நம்பிக்கையாக விசா எய்தார்.
எனப் பொருள் தரும் பாடலை எழுதியிருந்தார் ஈழத்துப் புலவர் ஒருவர். (படத்தில் உள்ள செய்யுள்படி, நான்காவது வரியில் ஒரு அச்சுப்பிழை உள்ளதென அறிகிறேன், அறிந்தவர் அதனை சரி செய்க)

பாடல் விளக்கம் :
கம்பராமாயணம் பாடிய கம்பர் தமிழ்நாட்டார். அந்தக் காவியத்தில் அவர் இராவணனைக் கொடியவனாகக் காட்டியுள்ளார். இராவணன் இலங்கை நாட்டான். இலங்கை நாட்டுத் தலைவனைத் தம் காவியத்தில் கம்பர் கொடுமைப்படுத்தியுள்ளார்; வைத்துள்ளார்; ஆகையால் கம்பர் வழியில் வந்த தமிழ்நாட்டுத் தமிழர்களை வரவேற்க இலங்கைக்கு மனம் இல்லையாம்.

உறுதிக்கூற்று :
இந்த வரிகளை படித்து முடித்த நினைந்த பின்பு, அடுத்த வாரம் இலங்கைச் செல்ல இருப்பதும், அதற்கு இன்னும் விசா எடுக்காதும், டாலர் மதிப்பில் ஆன்லைன் பணம் செலுத்த முடியாததும் நினைவிற்கு வந்தது. Online visa பெற தாமதமாயின், ஈழம் சென்று Arrival visa ஆவது எடுத்திட வேண்டும் என நினைந்து கொண்டிருந்தேன்.

பயணச்சீட்டு பதிவுசெய்து கொடுத்த அண்ணன்  கிரிஷ்வரின் விசா முயற்சி  இழுபறியாய் நீடித்துக்கொண்டிருந்த அந்த வார நாட்களில் இதனைப் படித்தது, பயணம் பற்றிய கேள்வியை எழுப்பியது. அருகிருந்த முனைவர் பட்ட ஆய்வாளர்களிடம் காட்டி அதிசயிக்கலாயிற்று,  தமிழ்ப் புலவர்களின் வாக்குகளை, ஆவேச உணர்வுகளை...

இப்பாடல் படித்ததுக்கும் விசா கிடைக்கத் தாமதமானதுக்கும் இடைப்பட்ட ஒரு காரணம் :

புகழ்பெற்ற காரைக்குடி கம்பன் கழக மேடையில்,
  • பேச்சுப் போட்டி(28.01.2017), 
  • பேச்சாளர் சுகி.சிவம் அவர்கள் தலைமையில் பட்டிமண்டபம்(09.04.2017) , 
  • இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்கள் தலைமையில் பாங்கறி மன்றம்(01.07.2017) 
என மும்முறை கம்ப இராமாயணப் பேரருவியினைப் பற்றியசிறுதுளிகளை எடுத்தியம்ப முடிந்தது.
இந்தச் செய்யுள் படித்த பின்பு, கம்பன் கழக நினைவலைகளோடு விசா நல்லபடியாக கிடைக்கும் வரை, சற்றே அமைதியாக இருந்தேன்.

விசா பயணம் செல்லும் சில நாள் முன்பே கிடைத்தமையால் அதன்பின்னரே முகநூலில் கடல்கடந்து பேசச்செல்லும் அறிவிப்பை முழுநம்பிக்கையோடு வெளியிட முடிந்தது. இலக்கியச் சிந்தனையில் எவ்வளவு சீரிய வகையில் ஆண்டுகள் பல கடந்தும் உள்ளக் கிளர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இச்செய்யுள் ஒரு சான்று.

சரி,
கம்பர் இராவணனின் பாத்திரத்தை இப்படிக் காட்டியிருப்பது சரியா ? தவறா ? என்பதைத் தங்கள் சிந்தைக்கே விட்டுவிடுகிறேன்.

Vijay Sethupathi வழியில் சொல்லணும்னா, இங்க இராமனும் நான் தான் இராவணனும் நான் தான்.....

02.12.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக