நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Tuesday, 25 April 2017

அவசரப் பயணம் அசாத்தியமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எனில்.,

விகடன் மாணவப் பயிற்சித் திட்டம் அடையாளம் காட்டிய ஆளுமைகளுள் ஒருவன்பார்க்கும் முன்னரே மின்னஞ்சல் வழியாக தன் அடுத்த குறும்படத்திற்கான வரைவு முன்னோட்டங்களை அனுப்பியவன்எழுத்து,இயக்கம்காமிராநடிப்பு எனப் பன்முகத்தன்மைகொண்டவன் என்பதை முதல்நாள் முகாமின் முன்னிரவில் வாங்கிய நண்பர்களின் கலாய்ப்புகளால் உணர முடிந்தது.

அதிகம் பேசியது இல்லை., அவ்வப்போதெல்லாம்.
எழும் இச்சை எலுமிச்சை எனப் படங்களுக்கு பெயர் வைக்கும் சூத்திரம் தெரிந்த மந்திரவாதிஅவனது முதல் படம் கத்திக் கப்பல் எனக்குப் புரியவே இல்லை.,காரணம் காதல் கப்பலில் சவாரி செய்வதற்கான பாஸ்போர்ட்க்கு இன்னமும் நான் விண்ணப்பிக்கவேயில்லை. அதற்கடுத்து அவ்வப்போது வரும் டப்ஷ்மேஸ் வீடியோக்களுடனும் குறும்பட காணொளிகளுடனும் காலத்தைக் நகர்த்தி வந்த நாட்களின் மத்தியில் ஒரு நாள் ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தான். உண்மையில் அதற்கான விமர்சனம் இது.

A Video for Every Indian - A Touching Video on Ambulance Driver https://www.youtube.com/watch?v=7YJc9AJLQso எனும் இணைப்பில் இன்னும் யுடியூபில் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகிறது காணொளி. தென்னிந்திய திரைப்பட கலைஞர் சங்கத் தலைவர் நடிகர் நாசரின் வாழ்த்துகளோடு.,

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி அதிக மக்களுக்குத் தெரியப்படுத்திய உண்மை நிகழ்வு ஹிதேந்திரன் என்ற இளைஞரின் வாழ்க்கையின் இறுதி நிமிடங்கள்.  மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைப் பல மனிதர்களின் உயிர்களோடு இணைத்து அவர்களுக்கு வாழ்வளித்த சம்பவம் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் உடலுறுப்புத் தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.

அந்த நெகிழ்ச்சிக்குரிய நிகழ்வின் போது அதிகம் பேசப்பட்ட நபர் மருத்துவர்கள், ஹிதேந்திரன், அவர்தம் பெற்றோர் போன்றவர்களை விட அவரது உடலுறுப்புகளை உரிய நேரத்திற்குள் எடுத்துச் சென்ற வாகன ஓட்டுநர் தான். அந்த உயிர்க்கதையை மையமாய் வைத்து எடுக்கப்பட்டதே “சென்னையில் ஒரு நாள்”.

இவ்வாறு நித்தமும் யாருக்காகவோ பயணப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஓட்டுநர்களில் முக்கியமானவர்களான ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தான் இந்த ஆவணப்படத்தின் கதாநாயகர்கள், அவர்களுடைய வாழ்க்கைப் படிநிலை, வாழ்வியல் சூழல்கள், பொருளாதரச் சிக்கல்கள், உளவியல் பிரச்சினைகள், சூழலியல் தேவைகள் என அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அத்தனை செயல்களையும் திரைக்குள் தெறிக்கவிட்டிருக்கிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனை தான் களம், அதிலிருந்து வெளியுலகத்தின் தொடர்புப் பிரதிநிதிகளாக உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு உரிய நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரை காவந்து செய்து கொண்டு வரும் கண்ணன்களாக இருக்கும் இருவர் தான். ஒருவர் குடும்பத்துடன் வசிப்பவர், மற்றொருவர் தனியே வசிப்பவர்.

இருவரின் வாழ்க்கையும் தினசரி நடவடிக்கைகளால் மட்டுமே இயங்கும் அளவு தான் வருமானம், பிள்ளைகளைப் படிக்க வைக்கவும் அன்றாடச் செலவுகளை அட்ஜஸ்ட் செய்யவும் என மாதத்தின் முதல் 15 நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையை இயக்கும் வாகனத்தின் வேகம் குறைந்து விடுகிறது.

பதற்றமின்மையே பாதி வெற்றி என்பது போல, எவ்வளவுக்கு எவ்வளவு பதற்றமின்றி பயணம் இருக்கிறதோ அந்த அளவிற்கு இலகுவாக பயனாளர் பாதுகாப்பாக மருத்துவமனையை அடைய முடியும்.   தன் மேல் நம்பிக்கையும், தன் வாகனம் ஓட்டும் திறன் மேல் துணிச்சலையும் கொண்ட ஒருவரால் மட்டும் தான் தொடர்ச்சியாக இயங்க இயலும்.

கோல்டன் மணிநேரம்
ப்ளாட்டினம் நிமிடம்
டைமண்ட் நொடிகள்
என மருத்துவத்தின் மகத்துவமே நேர மேலாண்மைக்குள் அடங்கி இருப்பதை மருத்துவர் ஒருவர் தெளிவுபடுத்துகிறார், அதற்கு முக்கியக் காரணமாக இருப்பவரான ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் நினைவு கூறுகிறார்.

வேகம் அதைத் தாண்டிய விவேகம் இது தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் மனக் கட்டுமானம்., இரத்தத்தைப் பார்த்தே பயம் கொள்கிற பலர் இருக்கிற தேசத்தில் எவ்வளவு இரத்தச் சேதம் ஆகியிருந்தாலும், மிக மோசமான விபத்தாக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் காப்பாற்றி உரிய நேரத்திற்குள் உயிர்காப்பாற்ற வேண்டிய சூழல் தான் வாழ்வின் மிகவும் உச்சபட்ச சூழல். சராசரி மனிதர்களுக்கு என்றாவது ஒரு நாள் தான் ரிஸ்க் எடுக்கும், மிகவும் முக்கியமான சூழல் வரலாம். ஆனால், தினசரி இவர்கள் ரிஸ்க் எடுத்து பழக்கப்பட்டவர்கள்.

ஒரு நாளைக்கு சென்னை போன்ற நகரங்களில் 1200-1500 நபர்கள் ஆம்புலன்ஸ் சேவை பெறுகிறார்கள். இவ்வாறு பெரும்பாலன நபர்கள் தன் வாழ்வின் இறுதி மூச்சிற்குள் ஒரு முறையேனும் ஆம்புலன்ஸ்க்குள் கழிக்க, அன்றாடப் பொழுதுகளும் அதனுடனே தானே இயங்குகிறது இவர்களுக்கு. இவையனைத்தையும் ஆம்புலன்ஸ் வாழ்க்கை தாண்டிய அன்றாட வாழ்க்கையையும் அதன் நிறை குறைகளையும் மனைவி பிள்ளைகள் இவர்களோடு சேர்த்து எக்ஸ்குளூசிவ் ஆவணப்படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர்.

உண்மையிலே உட்கார்ந்த இடத்திலிருந்து  நான்கு சுவர்களுக்குள் எடுக்கப்படும் ஆவணப்படங்களை விட முழுவதும் இயங்குகிற களத்தில், அதுவும் சென்னை போன்ற மெட்ரோபாலிடன் சிட்டியில் சாலைகளிலும் சேர்த்து படப்பிடிப்பை நிகழ்த்தி  இந்த ஆவணப்படத்திற்கான மெய்த்தன்மையை மெருகூட்டியுள்ளனர். கேமிராவின் வேகம் ஆவணப்படத்தின் விவேகத்தை கூட்டியுள்ளது. பல ஷாட்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்நோக்கக் கூடியதாக இருந்தது.

ஹெட்செட் போட்டுட்டு கார் பைக் ஓட்டக்கூடாது என்பது என அழுத்தமாக ஓட்டுநர் ஒருவர் பதிவு செய்கிறார்., உண்மையில் இது முக்கியமானது. தன் காது, தன் செல்போன், தன் விருப்பம் என்று கருதியே பலரும் செல்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் அவர் விபத்தை விளைவிக்கலாம். ஆபத்தில் சிக்கிய உயிர் அவசரமாக செல்லும் போது வழிவிட செவிமடுக்காமல் இருக்கலாம். இது போன்ற சூழல்களில் முழுக்கவனமும் எல்லா வாகன ஓட்டிகளுக்கும் சாலைகளில் இருக்கவேண்டும் என்பதை சாடாமல் சாடியுள்ளார்.
BLS (Basic Life Support) எனும் அடிப்படைப் பயிற்சி பற்றி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். இன்று பெரும்பாலும் தரைதளம் மட்டுமுள்ள கட்டிடங்களைக் காணுதல் அரிதினும் அரிது. அப்படிப்பட்ட சூழலில் அவசர சூழலில் லிப்ட் இல்லாத கட்டிட்டங்களில் இருந்து கணநேரத்திற்குள் கவனத்துடன் அவர்களை அழைத்து ஆம்புலன்ஸ்க்கு கொண்டுவருவதே மிகப் பெரிய சவாலாகும். அதற்கடுத்தே ஆம்புலன்ஸிலிருந்து மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவுக்கு அழைத்து வருவது எல்லாம்.

நேரம் இந்த உலகின் யாராலும் சிறைப்படுத்த முடியாத உயர்ந்த இடத்தில் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது. அப்படிப்பட்ட நேரத்தின் அருமை என்பது அநேக மக்களால் உணர்தல் இல்லை. ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஒவ்வொரு நொடியும் உயிர் நொடியே. அதனை உணர்ந்து எடுத்திருக்கும் ஒவ்வொரு ஷாட்களும் அப்லாஸ் அள்ளுகிறது. களத்தின் பதிவுகளை நேரடியாக அப்படியே கொணர்ந்ததில் ஆவணப்பட குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

பல படங்களைப் பார்த்துவிட்டு அதற்கு விமர்சனம் எழுத வேண்டும் என நினைத்து கலைந்து போன கனவுகளாய் இருந்த விமர்சனப் பகுதிக்கு முதல் முறையாய் விமர்சனம் எழுதிய ஆவணப்படமாய் விளங்குகிறது உயிர்க்காக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குறித்த இப்படம். 

நல்வாழ்த்துகள் இயக்குநர் நண்பன் உள்ளிட்ட குழுவினருக்கும்
தலைவணக்கம் எல்லா இடத்தினின்றும் இயங்குகிற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும்

த.க.தமிழ்பாரதன் 
(தினேஷ் இயக்கிய ஆவணப்படத்திற்கு விமர்சனம் அளிக்கும் பொருட்டு எழுதப்பட்டது) 

எந்நாளும் ஒளிர் பிறை அறிவழகன் RIP _/\_

RIP _/\_ 
பேராசிரியர்
எந்நாளும் ஒளிர் பிறை அறிவழகன்

தற்போது எப்படி விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்களோ? அது போல 2000ஆம் ஆண்டில் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக 300 க்கு மேற்பட்டவர்களை வைத்து டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் நடத்திய பெருமைக்கு உரியவர் பிறை அறிவழகன். ஏனென்றால் அதன் நீட்சிதான் 2005ல் தகவல்பெறும் உரிமைச்சட்டம் வரக் காரணமாக இருந்தது.

வயதான சமூக செயற்பாட்டாளர்களில் கேசிக்கு (http://tamilbharathan.blogspot.in/2015/07/blog-post_31.html) அடுத்து யாரும் என்னுடன் அதிகம் நெருக்கம் காட்டியதில்லை., அறிவியல் இயக்கம் எப்படி என் வாழ்வின் உயர்நிலைக் கல்வியோடு பெரும்பாலும் உறவாடியதோ, அதே போன்றே குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் உறவும்.

அறிவியல் இயக்கம் கூட பிற்காலத்தில் தான் என் பங்கேற்புக்கு வழிகோலியது. ஆனால், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் உயர்நிலைக் கல்வி பயிலும் போதே என்னை பங்கேற்கச் செய்தது,. ஈடுபட வைத்தது., சமூக விழிப்பிற்கான என் விழிப்பைத் தூண்டிவிட்டது.

அதற்கெல்லாம் அத்தியாவசியக் காரணம் பிறை சார் பிறை.அறிவழகன். சிலருக்கு இயற்கையில் அமையும் பெயர்களைக்கண்டு வியந்ததுண்டு. அந்தவகையில் இந்தப் பெயரும் ஒன்று. மனிதர் எனது பத்தாம் வகுப்பு பால்யப் பருவத்திற்குள்ளே பல பயிற்சிகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கச் செய்தார். பள்ளிப் பருவத்திலே நான் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் செயலர் என நினைவு கொஞ்சம் இருக்கின்றது.

In School Days memories with Prof Pirai.Arivazhagan


9ஆம் வகுப்பும் 11ஆம் வகுப்பும் தான் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தில் அதிகம் பங்கெடுக்க முடியும். 12ஆம் வகுப்பு முடிந்தபிறகும் கூட என்னைத் தொடர்ந்து இயங்க வைத்தார். மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் இணைத்தார்.

திரு.வி.க. கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர்,
கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதை கல்லூரியின் கால்பதித்த சில நாட்களுக்குப் பின்னரே அறிந்து கொண்டேன். பின் அவரது இல்லத்தின் முதல்மாடியில் நிகழும் கலந்தாய்வு கூட்டங்கள் பலவற்றிலும் கலந்து கொண்ட அனுபவம் ஓர் இயக்கத்தை வழி நடத்துவதற்கான அனுபவங்களை வாரி இறைத்தது.

ஒரு நாள் திரு.வி.க கல்லூரிக்கு செல்லத் தயாரான சமயம், அழைப்பில் தொடர்ந்து இணைந்திருந்தார்., இன்றைக்கு வேதாரண்யம் செல்ல வேண்டும் வரலாமா? அயோடின் உப்பு பற்றிய திட்ட வகுப்பு, அதன் நிறை குறை அத்தியாவசியத் தேவை பற்றிய ஒரு நாள் அரங்கு மற்றும் நேரடிக் களப்பணியும் நிகழ்ந்திருந்தது.

நேரடியாக உப்பளங்களில் ஆராய்ச்சியும் அதன் பின் எப்படி அயோடின் கலக்கிறார்கள் என்பதையும் காண்பதற்கானக் களத்தை வடிவமைத்திருந்தார். அதன் பின் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட உப்புப் பொட்டலங்கள் முழுவதும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு திருவாரூர் வந்தோம்.

அதன் பின் திருவாரூரில் ஒரு முறை அயோடின் உப்பு தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் நிகழ அவரின் நெடுநாள் ஆசையை நான் விகடனில் கட்டுரையாக வெளியிட்டேன் (http://www.vikatan.com/news/tamilnadu/47176.html). பின் அயோடின் குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டத் தொடங்கி அதில் மிகப்பெரிய அறிவு மாறுதல்கள் ஏற்பட்டன.

நுகர்வோர் மன்றங்களில் போட்டிகளில் கலந்து கொண்ட நான் பின்னாளில் அந்தப் போட்டிகளுக்கே நடுவர் பொறுப்பையும் ஏற்றிருந்தேன். திருத்துறைப்பூண்டியில் 2015 மேமாதம் ஏற்ற அப்பொறுப்பே நான் ஏற்றுக்கொண்ட போட்டிக்களுக்கான முதல் நடுவர் பொறுப்பும் கூட.


தற்போது எப்படி விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்களோ? அது போல 2000ஆம் ஆண்டில் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக 300 க்கு மேற்பட்டவர்களை வைத்து டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் நடத்திய பெருமைக்கு உரியவர் பிறை அறிவழகன். ஏனென்றால் அதன் நீட்சிதான் 2005ல் தகவல்பெறும் உரிமைச்சட்டம் வரக் காரணமாக இருந்தது.

In College Days Memories with Prof Pirai.Arivazhagan


திருவாரூர் பகுதியில்
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நுகர்வோர் மன்றத்தைத் துவங்கி தமிழகத்திற்கே முன்னோடியாகத் திகழ்ந்தவர். திருவாரூரின் மக்கள் பிரச்சினைகளை மனதில் கொண்டு அதனை ஒவ்வொரு மாதமும் ஆராய்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைத்து தீர்வுகாண வழிகோலிய இயக்கத்தின் தலைவரவர்.

நெல் ஜெயராமன், நுகர்வோர் ரமேஷ், சுபாஷ் காந்தி, முத்துக்குமார், என்னையும் சேர்த்து பலரது பரிமாணங்களை உருவாக்கிய தகையவர்.

திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்று சூழல் அமைப்பின் தலைவராக தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை இருந்தவர் பிறை சார்.

நுகர்வோர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FETCOT) மாநில பெருந்தலைவராகவும் செயல்பட்ட பேராசிரியர் அவர்கள் உடல்நிலை சரியின்மை காரணமாக இப்பூவுலகிலிருந்து துஞ்சினார்.

அவரது இறுதிசடங்கு மாலை 3 மணிக்கு திருவாரூர் சிவம் நகர் அவர் இல்லத்திலிருந்து புறப்படுகிறதாம், நம்ப முடியவில்லை இந்த மாதம் நுகர்வோர் கூட்டத்திற்குச் செல்லமுடியவில்லை. சென்ற மாதமே தளர்ந்த உடலோடு மோசஸ் பள்ளியில் நிகழ்ந்த மாதக் கூட்டத்திற்கு வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் கூட உடல் சுகமின்மையாக இருக்கும் நெல் ஜெயராமன் அவர்களுக்கு நிதிதிரட்டல் பணி மேற்கொள்ள வழிவகை செய்திருந்தார்.

இன்றைய தினம் அவர் இல்லையென்று சொன்னாலும், நுகர்வோர் உரிமை நிலை நாட்டுகிற ஒவ்வொரு நாளும் அவர் உயிர்ப்புடனே இருந்து கொண்டிருப்பார்.


எந்நாளும் ஒளிர் பிறை அறிவழகன்

த.க.தமிழ் பாரதன்
(பேராசிரியர் பிறை அறிவழகன் மறைவின் அஞ்சலிக்காக எழுதப்பட்டது)
திருவாரூர்
24.04.2017

Sunday, 23 April 2017

உலக புத்தக தினம் 2017

பெரியார் சிந்தனைகள் படிக்காத
பெரியாரிஸ்ட்டுகள்

அண்ணாவின் கடிதங்கள் தெரியாத
தி.மு.க.வினர்

காந்தியின் எழுத்துகள் தெரியாத
காங்கிரஸார்

கோல்வார்க்கர் எண்ணம் அறியாத
பிஜேபியினர்

லெனின் ஸ்டாலின் தொகுப்பு நூல் புரியா கம்யூனிஸ்ட்டுகள்

பாவாணரை உள்வாங்காத
தமிழ்த்தேசியவாதிகள்

அம்பேத்கரின் அறிவை உணராத
தலித் இயக்கத்தவர்

ஒளவை/நகுலன்/தேவதச்சன் தெரியா
கவிஞர்களும்

சிங்காரம்/சம்பத்/ ஜி நாகராஜன் படிக்காத
நாவலாசிரியர்களும்

புதுமைப்பித்தன்/ லா ச ரா/ பிரபஞ்சன் வாசிக்காத
சிறுகதையாளரும்

பிரமிள்/ எஸ் என் நாகராஜன்/ கோவை ஞானி தெரியாத
விமர்சகர்களும்

பல்கிப் பெருகிவிட்ட காலத்தில் புத்தக தினம் வருகிறது.

அடி மண் அறியாது உரம் போடக்கூடாது
மேல் மண் தாங்காது எந்த வேரையும்!

From திருமாவேலன்sFb post

Sunday, 2 April 2017

மகளிர் தினத்தை ஆண்களும் கொண்டாட வேண்டுமா ...?

Same to u  மக்காள்

தினங்களைக் கொண்டாடுதல் என்பது பெரும் பாலும் சராசரி மனிதர்கள் கொண்டிருக்கும் மறதியைத் திரும்பக் கொணரும் வழி என்பதால் தான் 365 நாட்களும் ஏதாவது ஒரு தினத்தால் அடையாளப்படுத்தப் படுகிறது. அது நம் அன்றாட வாழ்வின் மறதியிலிருந்து அவ்வப்போது பொதுப் போக்கில் சிந்திக்கத் தேவையானதாகவும் இருக்கிறது. 


அந்தநாள் முழுவதும் எதைப் பற்றி கொண்டாடப்படும் என்ற  கருத்தே முன்னிலைப்படுத்தப்பட்டு விவாதக்களத்தில் விதைகளாக விதைக்கப்படும். இதில் கருத்துருக்கள், எதிர்கால நோக்குகள் தாண்டி தலைவர்களின் பிறந்த, இறந்த நாட்களுக்கும் பெரும்பகுதி பங்கு உண்டு. விதைக்கப்பட்ட விதைகளின் வீரியம் என்னவோ வெறும் ஒரு நாளுக்கு உள்ளதாகவே நீர்த்துப் போய்விடும் சூழல்.அப்படித்தான், பெரும்பாலும் தினங்களைக் கொண்டாடும் பழக்கத்தை எதிர்ப்பதிலே அதீத நம்பிக்கை உண்டு. யுஜி படிக்கும் போது முதல் பருவத்தின் தமிழ்த்தாளின் பாடப்பகுதியில் ஒரு கவிதை படித்த நினைவு, கவிக்கோ அப்துல்ரகுமானின் வரிகள் :தலைப்பு : தீக்குச்சிகள்

யாருடைய ஒளிக்கோ 
இவர்கள் தீக்குச்சி ஆகிறார்கள்,
இனி,
தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு

குழந்தைகளைக் கொண்டாடுவோம்.


குழந்தைத் தொழிலாளர் முறையைச் சாடி எழுதப்பட்ட இந்த வரிகளின் ஈற்று என் மனவானின் கிழக்கின் கீற்றுக்கு ஒளி அதிகமூட்டியது. 
2016 மகளிர் தினம் அன்று பதிவேற்றிய படம்  .,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மேலப்புதுவயல்
எனும் கிராமத்தின் சிறுதெய்வ வழிபாட்டில் நான் கண்ட
மானுடவியல் தெய்வம் மாரியாத்தாள்


பெரும்பாலும் முக்கியத் தகவல் பரிமாற்றத்திற்கும் மற்ற  விவரக் குறிப்புகளை மட்டும் சமூகவலைதளத்தில் பதிந்து வருதல் தொடர்ந்து வந்த சூழலில், தினங்களைக் கொண்டாடுதல் வேண்டும் என்பதும், அது நம் பயனர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என்பதும் மற்றவர்களின் மனதிற்கு சற்றேனும் மகிழ்வைத் தரும் என்பதாலும் பலர் சொல்ல, சில தினங்களுக்கு மட்டுமே சில முறை வாழ்த்துகள் தெரிவித்தல் வழக்கமானது.


அவ்வகையில் இவ்வாண்டு எல்லாருக்குமான வாழ்த்தாக அமைந்தது மகளிர் தினம்

பின்நவீனத்துவம், மார்க்சியம், பெண்ணியம் என கோட்பாடுகள் நிறைந்த இரண்டாம்பருவ முதுகலைக் கல்வியின் பெரும்பயனை வாழ்வியலில் செலுத்திப் பார்த்துப் பெரும்பாலும் அதன் பயன் தமிழக இந்திய நடைமுறைச் சூழலுக்கு ஒத்துப் போகாத தன்மையில் இருப்பதைக் கண்டு விவாதங்கள் இருந்திருக்கின்றன என் வகுப்பறைக்கு உள்ளே.


இந்த பருவத்தில் முக்கியப் பாடமான இலக்கியக் கோட்பாடுகளில் கூட செமினாருக்கு நான் எடுத்துக் கொண்ட தலைப்பு  “தமிழகச் சூழலில் பின்நவீனத்துவம்”  என்பதே.நம் மக்கள் தொடர்ச்சியான மரபு பரிமாணத்தில் எவ்வித மாற்றமும் அறிவு ரீதியில் அதிகபட்சம் கண்டது கிடையாது, கண்டிருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளும் அளவினுக்கு மாற்றுக்கருத்து கிடையாது. அப்படியே கொண்டாலும் அதனை மாற்றி ஏற்றுக் கொள்ளும் வல்லமையை கொண்டிருக்கும் பலரை புறந்தள்ளி பொதுப் போக்கில் தனித்து வாழ வைத்துவிடுதலும் வழக்கம் தான்.சரி, கட்டுரைக் கருவின் ஆதிப் புள்ளிக்கு வருகிறேன்., மகளிர் தினம் வந்தது அல்லவா.,? அன்றைய தினம் எனக்குத் தெரிந்து சமூக வலைதளங்களில் தங்கள் பங்களிப்பை அவ்வப்போது செய்துவரும் நண்பர்கள் பலருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தேன் அந்த இரவின் நிலா தன் வெள்ளொளிக் கதிர்களால் பூமியின் ஒற்றைப் பக்கத்தைக் குளிரூட்டிக் கொண்டிருக்க ஆசிய துணைக்கண்டத்தை விட்டு அடுத்தடுத்த நாடுகளுக்கு மகளிர் தினம் பயணப்பட்ட நேரமது. 


“சொல்லிவிட்டு செல்கிறோம்
         டுத்தவாண்டும் 
        
         சொல்கிறோம்
  இனியேனும் சொல்லும் வகை     
 செய்திருப்போம்
 மானுடமே மகளிரே” 
உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்

வாழ்த்து பெரும்பாலும் திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா, இன்னும் பிற நாடுகளில் வசிக்கின்ற பலருக்கும் அனுப்பி இருந்தேன். காவல்துறை அதிகாரி, இந்திய ஆட்சிப் பணியாளர், அறிவியலாளர், பேராசிரியர், மருத்துவர், ஊடகவியலாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், சகோதரி, உடன் பயின்ற தோழமை என பல துறை பெண்களுக்கும் அந்தச் செய்தி சென்று சேர்ந்தது. 


படித்தவர்கள் பலரும் நன்றி, மகிழ்ச்சி, லைக் ஸ்டிக்கர் என பலவற்றை திரும்ப அனுப்பி இருந்தார்கள். சிலர் தன் பாணியில் திரும்ப ஒரு கருத்தை வழி மொழிந்திருந்தார்கள். அப்படியாக தூக்கத்தைக் கண்கள் கைது செய்ய காத்துக் கொண்டிருந்தத நேரம்.   வாழ்த்துக்கு பதிலீடாக தன் கருத்துகளை பொருண்மையோடு என்னோடு பணிபுரிந்த மாணவ பத்திரிக்கையாளர் தந்தார். பின் வானத்தின் வனாந்திரத்தில் வட்டமிடும் பறவைகளைப் படமெடுக்கும் நடுவண் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திரும்ப பதில் வாழ்த்து அனுப்பி இருந்தார் same to u  என்று, (நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்). 


இது என்ன புத்தாண்டு வாழ்த்து, சுதந்திர தின வாழ்த்து போல தங்களுக்கும் வாழ்த்துகள் எனப் பகிர்கிறாரே என்று. பலருக்கும் தட்டச்சுப் பொறி தானியங்கியாக செயல்படும், அது போன்றோ என எண்ணிணேன். ஆனால் மெய் அதுவன்று. அதற்கு அவர் சொன்ன விளக்கம் தான் மெய்த்தன்மையில் வைத்து சிந்திக்க வேண்டியது.


2017 உலக மகளிர் தினத்திற்கான சிறப்பு நிகழ்வு. 
 அதிரை பண்பலை 90.4 இல் ஒரு மணி நேரம்
 நிகழ்ச்சி வழங்கிய போது,


ஆண் = பெண் என்றால் மகளிர் தின வாழ்த்து சொல்பவர்களிடம் same to u என்று தானே சொல்லவேண்டும்.  ஆனால், இந்தத் தினத்தில் தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் same to u என்றே தான் சொன்னதாகவும், அதற்கு அந்த அனைவரும், எனக்கு ஏன் தெரிவிக்கிறீர்கள் என கேட்டிருந்ததாகவும் முகநூல் பதிவு செய்திருந்தார் அடுத்த நாளில். அந்த அனைவரும் என்பதில் நானும் அடக்கம்.


உலக மகளிர் தினம் மார்ச் 08

உலக ஆடவர் தினம் நவம்பர் 19


இதில், மகளிர் தினம் அறிந்த ஆண்களுள் ஆடவர் தினம் என்று இருப்பதே அறியாதவர்கள் அதிகம்., தன்னைப் பற்றிய சிந்தையில் பிறரைப்பற்றி அதீதம் சிந்திக்கும் மரபு கொண்ட ஆண் தன்மையில் மகளிர் தினம் பற்றிய புரிதலும் அவ்வாறே இருந்திருந்தது.  


ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதை தினத்தில் காணாததும் கூட ஒருவகையில் முற்போக்கோ? பிற்போக்கோ? எதுவாகினும் Same to U என்ற பதிலீட்டுக்குள் அடங்கி இருக்கும் ஆழம் என்பது அதீதம்.


முதுபெரும் பேராசிரியர் செங்கதிர் அவர்களுடன் National Children Science Congress - 2016 இல் பங்கேற்கச் சென்றிருந்த தருணம். அறிவியல் வெளிப்பாடு கொண்ட குழந்தைகள் மத்தியில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவரது உரையில் கேள்வி ஒன்று கேட்டிருந்தார்?.

பெண் டிஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தால் ஏற்றுக் கொள்கிற அதே தற்கால சமுதாயம், ஆண் சுடிதார் அணிந்து வந்தால் ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது. 

இதுவும் ஒரு வகையில் முற்போக்கோ? பிற்போக்கோ? கேள்விகள் பிறந்து கொண்டே இருக்கின்றன. இதற்கான பதில்கள் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மாறிக் கொண்டே இருக்கின்றன என்பதே மெய். 


ஆக, பார்வையின் அடிப்படையிலே தினங்கள் கொண்டாடப்படுவதும், கொண்டாடப்படவேண்டியவை திண்டாடப்படுவதும் இயல்பாகிப் போய்விட்டது. சரி இருந்து விட்டுப் போகட்டும் வாழ்த்துகள் சொல்லி வைப்பொம் இனி வரும் 365 நாட்களுக்கும்.


எது மெய்யென்பதில் எது தவறென்பதை அறிவதிலே காலம் செல்கிறது.-த.க.தமிழ்பாரதன் 
08.03.2017
(கேள்வியில் திணறடித்த சக்திநற்பவியின் கேள்வியின் பொருட்டு எழுதப்பட்டது)