நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Tuesday, 15 September 2015

கலைஞரும் இளைஞரும்.., த.க with மு.க
கலைஞரும் இளைஞரும்
முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களிடமிருந்து பாரதிதாசன் கவிதை ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றிகனியை தொட்டுப் பிடித்ததற்கான பரிசினை பெறும் பரிசளிப்பு நிகழ்வில் :

எப்போதும் நமக்கான 'நிலை' கால ஓட்டத்தில் வேகமாக உயரத் தொடங்குகிறது. சிலருக்கு அது ஏணிப்படியில் ஏறுவதைப் போல, சிலருக்கு எஸ்கலேட்டரில் ஏறுவதைப் போல, சிலருக்கு ஏரோபிளேனில் பறப்பதைப் போல, சிலருக்கு ராக்கெட்டில் சீறுவதைப் போல. நான் இப்போது தான் ஏணியை பிடித்திருக்கிறேன். அந்த ஏணியின் ஒரு படிகட்டு செப்டம்பர் 15 2௦15 அன்று அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடப்பட்ட அண்ணா பிறந்த நாளில் வந்தது.

எண் 43 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயர் சொல்லி அழைக்க பரிசு பெற நான் செல்ல பரிசு தர காத்திருந்தார் முன்னாள் தமிழக முதல்வரும் எம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவருமான மு.கருணாநிதி அவர்கள். வயோதிகம் வந்திருந்தாலும் வற்றிப் போகாத எண்ணங்கள் எதிர்வந்த என்னை பார்த்து அறிவதற்கு சற்று நேரம் பிடித்தன. காலம் அடுத்தவரை வரச் சொல்ல, என்னை பார்த்த அவரிடம் நான் சொல்லுவதெல்லாம் அருகிருப்பவர் மொழி பெயர்ப்பது போன்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அன்று சொல்ல நினைத்து சொல்லாமல் போனதை இன்று சொல்ல எண்ணுகிறேன்.

"ஒரு பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு முதலமைச்சர் தான் வர வேண்டும் என்றில்லை, வாழ்த்துங்கள்" என்பதைத் தான் .

தொட்டுப் பிடித்ததற்கான வரலாறு :
பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி 08.08.2015இல் கொரடாச்சேரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. அதுவே முதல் பரிசாகவும் அமைந்தது மகிழ்வுக்குரியது. எல்லா போட்டியாகவும் இதை பாவிக்காமல், சிரத்தையோடு இதை அணுகியதன் விளைவாக மாவட்டத்தில் முதல் பரிசு கிடைத்தது மெய்யாகவே இருந்தது.

மாநிலத்திற்கான போட்டி சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் ௦3.௦9.2௦15 தேதியில் நடைபெற்றது. அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் நிகழும் அண்ணா அறிவாலயத்தில் முதன் முதல் அடி வைத்ததும் அன்று தான். காலை இரண்டாவது நபராக உள் சென்று அங்கே நிகழும் சுற்றுப் புற நடவடிக்கைகளை கவனித்து என் கவிதை ஒப்புக்கும் பாங்கை நினைவுக்கு நினைவு மாற்றிக் கொண்டே இருந்தேன். 66 மாணவர்கள் என்று நினைவு. போட்டியிட்ட அனைவரும் தங்கள் அளவில் முதல் பரிசை தட்டியவர்கள் என்பதால் அனைவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் உண்டு என்பது திண்ணம்.

ஆனால், ஐந்தாயிரம் ருபாய் பரிசாய் பெரும் நபர்களில் ஐவருக்கு மட்டுமே அண்ணா பிறந்த நாள் விழாவில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் கரங்களால் பரிசு என்பது தான் போட்டியாளர்களுக்கான நெருக்கடி. எப்படியும் ஐவர் மட்டும் என்பதால் சிரத்தை எடுக்கவில்லை சிலர். ஐவரில் நாமும் உண்டு என்றெண்ணி மூச்சை மூலதனமாக்கி உதிர்த்த சொற்கள் சுற்றுப் புற கட்டிடத்தின் செங்கற்களையே உணர்ச்சியடையச் செய்தன. திருவாரூர் மாவட்டம் சற்றே இறுதியில் அழைக்கப் பட்டது. பெரும்பாலும் சொன்ன நடைகள் அலுத்துப் போன நடுவர்களின் பார்வைகளால் புலப்பட்டன. சிலரது மொழிநடையும் உடல் நடையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க அவர்களின் முகங்களில் மலர்ச்சி.

என் சுற்று வந்தது. அதுவரை அடங்கி இருந்து வெள்ளை வேட்டியும், சட்டையும் தன் கவி நடையை காற்றில் தவழ விட்டன. இருமுறை சொல்லுதல் கூடாது, அதிகப்படியான உடல் நடை கூடாது, என்றெல்லாம் மொழியப்பட்ட முன்னுரைகளால் என்னுரை என் சராசரி உரையிலிருந்து மாறுபட்டே காணப்பட்டது.

மெல்ல மொழிய ஆரம்பித்த நெஞ்சு பதைக்கும் நிலை கவிதை இறுதி நேரங்களில் உணர்வுகளால் பொழிய ஆரம்பித்தது. வேட்டியும் சட்டையும் எடுத்துக் கூறிய கவிதை பலரின் கைத்தட்டல்களையும் பெற மாலை வரை முடிவிற்காக பொறுத்திருக்க வேண்டியது எல்லார் பேசி முடித்தும் இது போல் தட்டிய கைகளால்.

மாலையில் முதலில் ஐவர் தகுதி. நான்காம் இடம் எனக்கு என்று மேடையின் முற்பகுதியில், மொழியப்பட்டது. அதுவரை பிற்பகுதியில் இருந்த எனக்கு அதன் பின் முற்பகுதியில் அமர இடம் தந்தார்கள். அதுவே நடுவரின் தீர்ப்பு, அதனாலே தான் முதலில் குறிப்பிட்டிருந்தேன் வெற்றிகனியை தொட்டுப் பிடித்ததற்கான பரிசு என்று. முதலிடத்தை பிடிக்கும் போது மட்டும் தான் எட்டிப் பிடித்தல் என்பது எனக்கான இலக்கணம்.

கலைஞர் என்கிறவர் - மூத்தவர் மு.கருணாநிதி
இளைஞர் என்கிறவர் - இளையவர் த.க.தமிழ்பாரதன்
Tamil Bharathan
15.09.2015

Sunday, 6 September 2015

வேண்டற்க வென்றிடினும் சூதினை.....

வேண்டற்க வென்றிடினும் சூதினை.....

சென்ற ஆண்டு 2014 நடைபெற்ற ஸ்ரீ ராம் சிட்ஸ் நடத்திய மாநில அளவிலான திசையெல்லாம் திருக்குறள் பேச்சு போட்டியில் கலந்து கொண்ட போது,

இதே போட்டியில் ஆறாம் வகுப்பில் முதன் முறையாக திருவாரூரில் இருந்து திருச்சி சென்று கலந்து கொண்டு முதல் சுற்றில் தோற்று பின் கல்லூரி இரண்டாமாண்டில்மாநில இறுதிப் போட்டி வரை சென்றது எனது (தாமதமான) வளர்ச்சியின் அடையாளமாக கருதுகிறேன்.

இந்தப் மாநில அளவிலான போட்டி நிகழ்ந்த அன்று (27.09.2014) தான் மாநில முதலைமைச்சர் மக்கள் முதல்வராக பதவியேற்றார். சென்னை முழுவதும் அமைதிச் சூழலே நிலவவில்லை. போட்டி நடந்து முடிந்த, இராஜா அண்ணாமலைபுரம் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்திலே இரவு தங்க நேர்ந்தது. பேருந்தே கிடைக்காமல், அடுத்த நாள் (28.09.2014) ஊர் வந்து சேர்ந்தது என திகில் நிறைந்த நாட்கள் அவை.

பத்து மண்டலங்களில் முதன்மை பெற்றவர்களுக்கிடையே நடைபெற்ற இந்நிகழ்வில் பரிசு கிடைக்காமையே பெரும்பரிசாக அமைந்தது.

இந்நிகழ்வு தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் நான் பார்க்கவில்லை. கிராமங்களில் வசிக்கும் இருவர் மட்டும் தொலைக்காட்சியில் பேசியதைப் பார்த்ததாக மகிழ்ந்தனர்.

அதைத் தாண்டி நான் பங்கு கொண்ட தொலைக்காட்சி நிகழ்வை எப்படியும் பார்க்க வேண்டும், என்ற ஆர்வத்தில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். அந்த முயற்சிக்கு பலனாக ஒரு வருடம் கழித்து இப்போது நான் பேசிய ஒளிப்பேழை கிடைத்திருக்கிறது. நாள் பல ஆனாலும் பத்திராமாக கிடைத்திருப்பது மகிழ்வுக்குரியது.

இந்த வருடம் நடைபெற்ற போட்டியின் போது ஒளிப்பேழை கொடுத்தார் ஸ்ரீ ராம் சிட்ஸ் நிறுவனத்தின் நாகராஜன் அவர்கள். பொறுப்புணர்ச்சி மிக்க அந்த அண்ணன் திருவாரூர் வந்த போது மறவாமல் என்னிடம் கொடுத்ததை வியந்து போற்றுகிறேன்.

நன்றி

ஆசிரியர் தினமும் கோகுலாஷ்டமியும்,

ஆசிரியர் தினமும் கோகுலாஷ்டமியும்,
ஆசிரியர் தினம் : -
சுட்டி விகடனுக்கு அனுப்பிய கவிதை.
தேடினால் தருவது
கூகுள் இணையம்,
தேடாமல் தருவது
ஆசிரியர் இதயம்.
அந்த இதயத்தின்
புனிதத்தை வணங்கும் தினம்,
செப்டம்பர் ஐந்து
ஆசிரியர் தினம்.
நம்மை ஏற்றிவிட்ட
ஏணிக்களின் தினம்.
நமக்காக உழைக்கிற
தேனீக்களின் தினம்.

மாணவர்களை உருவாக்கும்
பிரம்மாக்களின் தினம்,
பிரம்மாக்களை வணங்கும்
மாணவர்களின் தினம்.

அகரம் சொல்லித்தந்து
சிகரம் ஏற்றியவர்களின் தினம்,
சிகரம் ஏறியவர்கள்
சிறந்து போற்றும் தினம்.
சமுதாயத்தை சீரமைக்கும்
சிற்பிகளின் தினம்.
உலகத்தை ‘உரு’வாக்கும்
உளிகளின் தினம்.
சிந்திக்க வைத்து,
சிரிக்க வைத்து,
பாடம் சொல்லி,
அறிவு புகட்டி,
பல்லக்கில் ஏற்றிவிடும்
ஆசிரியர்களின் தினம்
ஆசிரியர் தினம்.
வணங்குவோம் ஆசிரியர்களை,
வாழ்த்துவோம் ஆசிரியர்கள் தினத்தில் !
கோகுலாஷ்டமி : -
நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த போது, எனது தலைமை ஆசிரியராக இருந்தவர் கண்ணன்.

அவருடைய கண்ணன் எனும் பெயருக்கு கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி தினத்தில் பிறந்தவர் எனும் வரலாறு உண்டு.

05.09.2015 ஆசிரியர் தினம், கண்ணன் ஆசிரியரின் பிறந்த தினமும் தமிழ் முறைப்படி இன்று.

கோகுலாஷ்டமி தினத்தில் பிறந்ததால் வருடா வருடம் மறவாமல் பிறந்தநாள் வாழ்த்து கூறுவேன். இன்று இரட்டிப்பு மகிழ்வு. காலை தொடர்பு கொண்டு ஆசிரியர் தின வாழ்த்துகளும், பிறந்த நாள் வாழ்த்துகளும் கூறினேன். அதற்குள்ளாகவே இன்னும் அழைப்பு வரவில்லை என்று மனைவி கேட்டதாக சொன்னார்கள்.

இன்றைய தினம் எனது வயது முதிர்ந்த ஆசிரியரின் எதிர்பார்ப்பு, என்னை மேலும் இயங்க வைக்கிறது. காலை தொடர்பு கொண்டு பேசிய நொடிகள் எனக்கு பொக்கிஷமானவை - மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக கண்ணன் சார் காத்திருக்கும் சமயம் அது.

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் கண்ணன் சார்.அவரோடு சேர்த்த எனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும்.
த.க.தமிழ் பாரதன்

அன்றைக்கு அரசுத் துறை சார்பில்....

அரசுத் துறை சார்பில் எனது வ.சோ. ஆண்கள் பள்ளிப் பருவத்தில் பல போட்டிகளில் வென்றிருக்கிறேன்.
அதில் கூட்டுறவுத் துறை எனக்கு வானொலி வரை வாய்ப்பு தந்து ஊக்கப்படுத்தியது.

2௦௦6-211 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த வழக்கறிஞர் உ.மதிவாணன் அவர்களுடன் இருந்த ஒரு படம் கூட என்னால் பெற இயலவில்லை.

அந்த சமயங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்
அமைச்சர்கள்முக்கியஸ்தர்கள்சமூக நோக்கர்கள் பலருடனும் பரிசு வாங்கிய படங்கள் பலவற்றை ஸ்டுடியோக்களில் இருந்து வாங்கியாயிற்று.

ஆனால்மதிவாணன் அவர்களுடன் பரிசு வாங்கியும் படம் எடுக்காத ஒரு குறை தற்போது நிறைவேறி இருக்கிறது. கலைஞர் நூலக அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக் கிழமை 30.08.2015 நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற போது,

உடன் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன்முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் மா.சுப்ரமணியன்முன்னாள் அமைச்சர் மதிவாணன்திருவாரூர் தமிழ் சங்க செயலாளர் செல்வ துரைஅறக்கட்டளை இயக்குனர் அறிவு ஆகியோர்.

மக்கள் தொகை தின கருத்தரங்கில்....


மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த
உலக மக்கள் தொகை தின கருத்தரங்க நிகழ்வில்
கலந்து கொண்டு பேசியமைக்காக.,
எளிய குடும்பம், வளமான வாழ்வு எனும் தலைப்பில், மருத்துவர்கள், மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள், சமூக நலத்துறையினர் மத்தியில், நடைபெற்ற கருத்தரங்கம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகளுடன்,
த.க.தமிழ் பாரதன்

நிலாவில் உலா !

நிலாவில் உலா !
உலகத் திரைக்கான உள்ளூர் முன்னோட்டம்.
சிறு பிள்ளை முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும், ஒரு முழுமையான தொகுப்பாளனாக பரிணமித்தது 29.07.2015 அன்று தான். அப்துல் கலாம் அவர்களின் நினைவு தின நிகழ்வு ஒருங்கமைத்தது. ஆனால், அன்று படம் எடுக்க இயலவில்லை.
அதற்கடுத்ததாக 02.08.2015 அன்று நண்பர்கள் தினத்தை தொகுத்து வழங்கினேன்.
திருவாரூர் நிலா தொலைக்காட்சியில் தற்போது தொகுப்பாளர் பணி மேற்கொள்கிறேன். மனதிற்கு பிடித்து செய்யும் எந்த ஒரு செயலும் மக்களிடயே தாக்கத்தை ஏற்படுத்தும்.
சரியான விளம்பரதாரர் இருப்பின் இன்னும் செம்மையாக திருவாரூர் மக்களுக்கு பயனுள்ள வகையில் தொகுத்து அளிப்பதற்கு தயாராக உள்ளோம்.
தமிழ் சார்ந்து, திருவாரூர் சுற்று வட்டாரம் சார்ந்து, நகைச்சுவையாக, மாணவர்களுடன் என பல தளங்களில் மேலும் சிறப்புற இயங்க ஆயத்தப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். நிலா தொலைகாட்சி உரிமையாளரின் நம்பிக்கை மேலும் வலுவடைந்து கொண்டே வருகிறது.
பெரிய சாட்லைட் சேனல்களுக்கான முன்னோட்டமாக இது நிச்சயம் பயன் தருகிறது.
நிலாவில் சிந்திப்போம்.

இலக்கிய வளர்ச்சி கழகத்தில்.....

திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம், கருத்தரங்கில்....
தொகுப்புரை
கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் வரலாறு பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்றன....தொடர்ந்து பல நாட்கள் வெற்றி கரமாக நிகழ வாழ்த்துகள்.

ஆத்மார்த்த நம்பிக்கை

ஆத்மார்த்த நம்பிக்கை தான்
முயற்சியை வெற்றியாக்குகிறது...
25.08.2015

பட்டிமன்றத்தில் ஒரு பயணம்

பட்டிமன்றத்தில் ஒரு பயணம்
பல முறை பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. தொலைக்காட்சி மேடைகள், வானொலி ஒலிபரப்புகள், பள்ளி விழாக்கள், கல்லூரி நிகழ்வுகள், கிராமத்து நிகழ்வுகள், நற்பணி மன்ற நிகழ்ச்சிகள் என பல இடங்களிலும் பட்டி மன்றங்களில் கலந்திருக்கிறேன்.13.௦8.2௦15 முதல் முறையாக பட்டிமன்றத்தை Professional ஆக பேச ஆரம்பித்திருக்கிறேன்.
பட்டி மன்றம் பொய் அதிகம் புழங்குகிறது, அதில் உயிர்ப்பு போய் விட்டது, அதன் பிம்பத்தை மாற்றலாம் என்று பட்டி மன்றத்தை அதிகம் சாடிய என்னிடம் அதனைப் பற்றி விளக்கி, நெடுநேரம் அறிவுரை செய்து இன்றைக்கு பட்டிமன்றத்தில் Professional ஆக பயணிக்க வைத்த நண்பர் Arun Giri அவர்களுக்கு நன்றிகள். ஜாம்பவான்களின் உலகம்
ஏனெனில், பேச்சு, உரை, சொற்பொழிவு, கருத்தரங்கம், கவியரங்கம், என பல தளங்களில் பயணித்த என் வாய்மொழி நெடுநாள் பட்டிமன்றத்தில் பயணிக்க தவறிக் கொண்டிருந்தது. பட்டிமன்றத்தில் பயணித்தாலும் என் "பழைய உரு" மாறாதவாறு பார்த்துக் கொள்ள நினைக்கிறேன்.
13.௦8.2௦15 அன்று கீழ சன்னாநல்லூர் சின்னான் சுவாமிகள் ஆலயத்தில் நடந்த பட்டி மன்றத்தில் புலவர்.மு.விவேகானந்தன் தலைமையில் அன்றும் இன்றும் பக்தியில் சிறந்தவர்கள் ஆண்களே எனும் தலைப்பில் பேசினேன். ஆலயத்தில் உற்சவம் என்பதால் கூட்டம் உட்கார்ந்து ரசித்ததை விட நகர்ந்து கொண்டே கேட்டது என்கிற காரணத்தால் எதிரே எண்ணிக்கை அதிகமில்லை. ஆயினும், பலருக்கும் சென்று சேர்ந்தது. ஆலயத்தின் உட்புறம், சாலைகளின் வழி நெடுகும் கூட்டம் இருந்தது என் மகிழ்வுக்குரியது. கடைசி வரை உண்மைக்கு புறம்பாக ஒன்று கூட சொல்லவேயில்லை. இதே கொள்கை கடைசி வரை தொடரும்.
மக்களிடம் கருத்தைச் சொல்வதற்கு ஏற்ற பல வழிகளில் இதுவும் ஒன்றாக எடுத்துக் கொண்டேன். பட்டிமன்றம் எங்கேயாவது நடந்தா சொல்லுங்க ! நானும் வர்ரேன் @ பார்க்கவும் நிறைய கத்துக்கவும் பேசவும்.

செந்நீர் தியாகங்களுக்கு கண்ணீர் மட்டுமல்ல காணிக்கை.

செந்நீர் தியாகங்களுக்கு கண்ணீர் மட்டுமல்ல காணிக்கை.
இந்த ஆண்டு சுதந்திர தினம் 15.08.2015 சிறப்பாக மனதில் பதிந்தது.
காலை கல்லூரி வளாகத்தில் பேசி முடித்த பின்பு, வீடு வந்து மதியம் உண்ட பின்பு வந்த தொலைகாட்சி நிகழ்வுகள் எல்லாம் கண்களை துடைக்க வைப்பதாகவே இருந்தது.
அதிலும், புதிய தலைமுறையின்
"எல்லை இராணுவத்தோடு" நிகழ்வு பாராட்டுக்குரியது. மறைந்து நிற்கும் இராணுவத்தினரின் உலகில் சென்று பேட்டி எடுத்த ஒவ்வொரு நொடி காணொளியும் வரலாறு.
எந்த ஒரு செயற்கையும் இல்லாமல், எந்த ஒரு பஞ்ச் வசனங்களும் இல்லாமல், இயல்பு வாழ்க்கை நிலைகளை எடுத்துரைத்து கண்களை கண்ணீர் கடலாக்கிய அந்நிகழ்வு ஊடகங்களின் மைல்கல் என்று தான் கூற வேண்டும். அவர்கள் வாழ்க்கையை சொல்லும் போது ஏன் அழுகிறோம் என்று கூடத் தெரியாமல் அழுத பொழுதுகள் அவை.
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில்
போராட்டக்ளங்களில் பயணிப்பதாக உணருகிறேன்.
வெறும் கண்ணீரை மட்டும் காணிக்கையாக்குவதல்ல
நம் கடமை.,
சுதந்திர வேட்கை சுணங்கிய மக்களை சூரர்களாக்கியது. மாய வேட்கையில் இருந்து விடுபடுவோம்.,
சமூகம் காப்போம்.
தேசியம் வளர்ப்போம்.
சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

சுதந்திர தின நல்வாழ்த்துகள் 2015.

புகலிடம் தந்த நாட்டிற்கு 
புகழிடம் சேர்ப்போம்.
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.