நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Tuesday, 28 May 2019

பாரதியாரின் சில சங்கற்பங்கள்

சில சங்கற்பங்கள் !இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி - முழு உலகின் முதற்பொருள் - அதனையே தியானஜ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.

பொழுது வீணே கழிய இடங்கொடேன். லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.

உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பாதலும் தூய்மையுறச் செய்வேன்.

மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.

மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.

ஸர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச்செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.

பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

இடையறாத தொழில்புரிந்து இவ்வுலப் பெருமைகள் பெற முயல்வேன். இயலாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன்.

எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம், இவற்றோடிப்ருப்பேன்.  ஓம்.


(16.05.2019 அன்று புதுச்சேரி பாரதியார் நினைவில்லத்திற்கு சென்றிருந்தபோது படியெடுத்தது. இஃது ஒளிப்படமாக இருக்கிறது,  நினைவில்லத்தின் உட்புறம் நுழைந்ததும் இடப்புறமுள்ள அறையில் பாரதியாரின் கையெழுத்தால் எழுதப்பட்ட இச்சங்கற்பத்தின் ஒருபகுதி காகிதத்தில் கனன்று கொண்டிருக்கிறது)

#தக | 16.05.2019

Tuesday, 21 May 2019

மனைவி செல்லம்மாவிற்கு பாரதியார் எழுதிய கடிதம் - 1901

ஓம் 
ஸ்ரீகாசி
ஹநுமந்த கட்டம்

          எனதருமை காதலி செல்லாம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன். 

உனதன்பன்,
சி. சுப்ரமணிய பாரதி


மனைவி செல்லம்மாவிற்கு பாரதியார் எழுதிய கடிதம் - 1901


(16.05.2019 அன்று புதுச்சேரி பாரதியார் நினைவில்லத்திற்கு சென்றிருந்தபோது படியெடுத்தது) 

#தக