நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 2 டிசம்பர், 2020

நம் சமையலறையில்...| ஒரு இலட்சம் வென்ற சிறுகதை

வணக்கம்.

குமுதம் இதழ் மற்றும் கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு (ஒரு இலட்சம் உரூபா) பெறும் நம் சமையலறையில்... கதை 09.12.2020 நாளிட்ட குமுதம் இதழில் வெளியானது. கதை படித்தபின், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் மகிழ்வேன். 

நன்றி : குமுதம் & கொன்றை அறக்கட்டளை





நம் சமையலறையில்…                                             

                    -த.க.தமிழ்பாரதன்

இன்னும் சில மணிநேரமே இருக்க, அவசர அவசரமென அம்மாவுக்கு அழைத்தான். இக்கட்டான பொழுதுகளிலெல்லாம் இவ்வுலகை அறிமுகப்படுத்தியவரிடமே ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன. நான்கைந்து முறை அழைத்தும் அம்மா எடுக்கவில்லை. கடைசி முயற்சியாய் அழைத்துப்பார்ப்போம்.  எடுத்தால் சரி, எடுக்காவிட்டால்.... அந்தப் பேச்சுக்கே இடமில்லை, எடுத்துவிடுவார். எண்ணிக்கொண்டிருக்கையில், ‘ஆசப்பட்ட எல்லாத்தையும்..' ஒலித்தது.

இப்பதான் நியூசு பாத்தன். இராத்திரிலருந்து ஊரடங்கு அமலுக்கு வருதாம். ஹாஸ்டல் காலி பண்ணிட்டு கிளம்பி வாரேன்னு சொன்னீயே? எங்க இருக்க?”

அலோஓ, அம்ம்மா இங்க ஒரே கூட்டம். ரயில்லாம் இல்ல. கார் எடுக்க மாட்டேங்கறாங்க. பஸ்ல தான் வந்தாகணும். இந்தக் கூட்டத்துல வர்ரதுக்கு வராம இருக்கலாம். ஆனா, சென்னையில எங்க தங்கறது? யாருமே வீட்டுக்குள்ள விடமாட்டாங்க, ஒன்னுமே புரியல. ஏதாச்சும் ஐடியா கொடேன்.

கன்சல்டன்சியில் பணிபுரிபவனுக்கு அம்மா ஆலோசனை தந்தாள்.

கோவிச்சிக்கலனா ஒன்னு சொல்லுவேன்!

ஏது வள்ளி வீட்டுக்குப் போகணுமா? பேசவே வேணாம் போன வை!

நிரம்பி வழியும் கோயம்பேடு, தாம்பரம் தாண்ட மறுக்கும் கார்கள், நிலையத்திலே தூங்கும் ரயில்கள் என  இயல்பைப் புரட்டிப்போட்டிருந்தது கொரோனா. 144 தடை உத்தரவு 48 நாட்களுக்கு அமல் என அரசு அறிவித்தவுடன் வாடகைக்குத் தங்கியுள்ள விடுதி வாட்சப் குழுவில் நிர்வாகி ஒரு பதிவிட்டார். "உணவு சமைக்க ஆள் வரமாட்டார், உணவகங்களும் இருக்காது". கண்ணில்பட்டதும் காலி செய்துவிட்டு ஊருக்குக் கிளம்பினான். மாலை வரை சுய ஊரடங்கென்று ஆட்டோ, டாக்சி எதுவும் ஓடவில்லை. விடுதிவாசலில் நின்று ஆன்லைன் அப்டேட் செய்தவனுக்கு, கோயம்பேடு சென்றால் கொரோனா தொற்றிடுமோ எனும் பயம்.

உறவினர் வீட்டுக்குச் செல்லலாம். 48 நாள் உட்கார வைத்து சோறுபோடுமளவுக்கு நெருங்கிய உறவினர் இல்லை. நண்பர்களோடு இருக்கலாம். தனியனாய் இருந்த கடைசி நண்பனும் கடந்த மாதம் இணையராய் மாறிவிட்டான். தான் தொந்தரவாகிவிடுவோமோ என்றஞ்சி யாரையும் தொந்தரவு செய்யவில்லை. அம்மா கூட புரிந்துகொள்ளாமல் வள்ளி வீட்டில் தங்கச் சொல்கிறாள் என்கிற எரிச்சல் வேறு.

தன்னைத் தானே நொந்துகொண்டு, விடியும் கிழக்கை நோக்கி நடக்கத்தொடங்கினான். வள்ளியின் வீடும் வீடிருக்கும் ஊரும் கிழக்கில் எதேச்சையாக அமைந்திருக்கவில்லை. அங்கங்கு நாய்களும், கண்ணுருட்டும் ஆந்தைகளும் கூடடங்கிய பறவைகளும் தவிர விண்மீன்களும் அறிய நடந்தான், நடந்தான், நடந்தான்.... நிலையா உலகில் இயற்கை அடக்குகிறது. தற்காத்துக்கொள்ள ஓடி ஒளிய வேண்டியிருக்கிறது. இந்த எதார்த்தம் வாழ்வின்மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

சற்றும் எதிர்பாரா நேரம், காலம், பொழுது அது. 'உனக்கே உயிரானேன், எந்நாளும் எனைநீ மறவாதே, நீ இல்லாமல் எது நிம்மதி, நீதான் என்றும் என் சந்நிதி; கண்ணே கலைமானே கன்னி மயிலென...' அழைப்பு ஓய்ந்தது. வள்ளியின் அழைப்பு. கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து இந்தப் பாடலை கேட்கிறான். இந்த வரிகளும் வரிகளேற்படுத்திய வசந்தமும் நினைவுகளைக் கிளறிவிட்டன.

'உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ..' அழைப்பை ஏற்றான். ஏதும் பேசவில்லை.

நீ என்ட்ட பேசமாட்டேன்னு தெரியும். பேசவும் வேணாம்.  நானும் உன்ட்ட பேசிருக்க மாட்டேன்.  இராத்திரி அம்மா பேசனாங்க. கோவத்துல வச்சிட்டியாம். நட்ராத்திரில இங்கதான் சென்னைல எங்கயாவது நின்னிட்டிருப்ப, லொகேசன் அனுப்பு, நான் வந்து அழைச்சிட்டு போயிடறேன்.

பதில்களை எதிர்நோக்காமல் துண்டித்துவிட்டாள். அவன் லொகேசன் அனுப்புவதற்குள் காரினை எடுக்க அடுக்குமாடிக்குடியிருப்பின் தரைகீழ்தளம் வந்திருந்தாள். லொகேசன் பார்த்தவளுக்கு கலைந்த முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததுபோலாயிற்று. அவளது குடியிருப்பின் வெளியே நிற்கும் அவனைப் பார்த்தாள், அழைத்தாள்; நகரவில்லை. மீண்டும் அழைத்தாள்பலனில்லை. அழைத்துக்கொண்டு ஏற 18ஆம் தளம் சென்றது மின்னேணி.

*

வள்ளி. திறமையான வளமையான பெண். கணிப்பொறித்துறையில் மென்பொறியாளர். மாதச்சம்பளம் நான்கு லட்சத்தைத்தாண்டும். அதை எப்படி பதினாறாக்குவது என்பதில்தான் அவளது நோக்கமெல்லாம். பெற்றோர் இல்லை அல்லது பெற்றோர் பிரிந்துபோய்விட்டனர். பெற்றோர் இல்லை என்பதையே விரும்புவாள் வள்ளி. பள்ளி முதல் கல்லூரி வரை விடுதியே கதியாய் இருந்தவள், வேலை சேர்ந்த பின்னும் பேயிங் கெஸ்ட்டாக இருந்தாள். மாதச்சம்பளம் இலட்சத்தைத் தாண்டுகையில் ஈஎம்ஐ-யில் வாங்கியதே 18ஆம் தளத்திலிருக்கும் வீடு. அது வீடு என்று சொல்வதைவிட ஓய்வெடுக்கும் கூடு என்று சொல்லலாம். அதுதான் வள்ளிக்குப் பிடிக்கும். சிறகை விரி, பற எனும் வரிகளின்படி சமூகத்தில் பறப்பவள். தன் வாழ்வின் வெறுமைகளை பறத்தலின் வெற்றியினால் மட்டுமே ஈடுகட்ட முடியுமென நினைத்திருந்தாள். வள்ளியைப் பொறுத்தவரை வெற்றியே மகிழ்ச்சி.

அகவை கால்நூற்றாண்டைக் கடப்பதற்குள் உடலுக்கும் உள்ளத்துக்குமென ஒருவனை அடையாளங்கண்டாள். அது அவன்தான். சிறுநகரத்திலிருந்து படியேறி சென்னை வந்தவன். அம்மா உழைப்பில் படித்தவன், இலட்சங்களையே அப்போதுதான் அறுவடை செய்யத்தொடங்கியிருந்தான். ஒரே அலுவலகம், அலட்டிக்கொள்ளாத '90களின் குழந்தை முகம், முன்காதல் ஏதுமில்லை, பெண்களிடம் வழிவதுமில்லை. அவனைத் திருமணம் செய்வது சரியான முடிவு என உறுதிப்படுத்தக்கூட அவளுக்கு யாருமில்லை. முடிவெடுத்தாள். அவனிடம் சொல்லிவிட்டாள்.

*

இங்கேயே இரு…”

வீட்டிற்குள் சென்றவள், வாளியும் வெளிநாட்டுக் கிருமிநாசினியும் கொண்டுவந்தாள். பையை வாளியில் வைக்கச்சொல்லிவிட்டு கையிலிருந்த கிருமிநாசினியை அவன்மேல் தெளித்தாள். பூச்சுக்கொல்லியில் மடியும் பூச்சைப்போல அவன்முகம் பாவனை செய்தது.

இங்கேயே தூங்கிக்க?”

ஹம்ம்.

உள்நுழைந்தவன் முகப்பிலேயே படுத்துக்கொண்டான். ஏசி போட்டிருக்கும் இரண்டாம் அறையை அவளது தூக்கம் ஆக்கிரமித்தது.

*

மற்ற பெண்களைப் போலில்லை வள்ளி. சுய அறிவும் கனவும் சராசரி அளவுக்கும் அதிகமாயிருந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. ஒருவருக்கொருவர் புரிந்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபின், வழக்கமான மார்கழி இரவொன்றில்தான் இதே வீட்டுக்குள் முதல்முறை வந்தான். அரிதான நுண்கலைப்பொருட்கள், மென்காந்தள் நிறம்கொண்ட சுவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே குடிகொண்ட வீட்டில் கூடுதலாக அவன் மட்டுமே இருந்தான்.

கதைத்தான், கதைத்தாள், கதைத்தார்கள். வான்முகில்கள் வலசை போகும் வரை கதைத்தார்கள்.

சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்யவா?” என்றாள்.

அதெல்லாம் வேண்டாம். ஒரு காபி குடிப்போமா? ஆர்டர் செய்ய வேண்டாம், நானே செஞ்சி தரேன்என கிச்சனுக்குள் நுழைந்தான்.

ஆச்சரியமாக இருந்தது, அதிர்ச்சியாகவும் தான். அவ்வளவு பெரிய கிச்சனுக்குள் பாத்திரங்கள் ஏதுமில்லை; பண்டங்கள் ஏதுமில்லை. குடிப்பதற்கு ஆர்ஓ வாட்டர். பழங்கள் கெடாமலிருக்க ப்ரிட்ஜ்.

ஹே! என்ன இது, உன் கிச்சன்ல ஒன்னுமே இல்ல?”

கிச்சனே இருக்கக்கூடாதுங்கறது தான் கனவே. ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கும் சமைத்தலுக்கும் எவ்வளவு நேரம் எவ்வளவு செலவு செய்றாங்க தெரியுமா? கடந்த பல தலைமுறைகளா பெண்கள்னாலே சமைக்கணும்னு இருந்திருக்கு. புருசனுக்கு அவன் குடும்பத்துக்கு அப்புறம் புள்ளைங்களுக்குசாகுற வரைக்கும் அடுப்படிதான் பெண்களுக்கு. சரி, அறிவு வளர்ந்து சமூகத்தில் பெண்கள் வளர ஆரம்பிச்ச அப்புறமாவது மாறினிச்சா இல்லயே.. ஏன்? இன்னிக்குக்கூட பெண்களுக்குக்குனு தனி இதழ்கள் நடத்துற பத்திரிக்கைகள் இலவச இணைப்பா சமையல் குறிப்புகள் தானே கொடுக்கறாங்க? சமூக இயங்கியல்ல பெண்கள்னா சமைக்கணுங்கறது ஊறிப்போயிருக்கு. அத மாத்தனும்..!

ஹே! மதியம் ஆஃபிஸ்ல சாப்டுவ., அப்ப காலையில, இராத்திருக்கு?”

ஜூஸ் காலைல, இராத்திருக்கு ஆர்டர் செஞ்சிடுவேன். இடையில தீணிக்குப் பதிலா பழங்கள்…”

ஊப்ஸ்! நாளைக்கு நான் வீட்டுக்கு வந்தாலும் இதே கதிதானா?”

கம்ப்பள் இல்ல!  ஆனால், நீயும் ஃபாளோ செய்தால் நல்லா இருக்கும். ஆண்கள் சமைக்கறதுலயும் உடன்பாடில்லை. பத்து நிமிசம் சாப்டறதுக்காக ஒரு மண்ணேரம் சமைப்பாங்களா., அந்த நேரத்தை எப்படி ப்ரடக்டிவிட்டியா பயன்படுத்தனும்னு யோசி. ஆயிரம் குடும்பம் ஒருமணிநேரம் செலவு செஞ்சு, ஒருவேளை உணவு செய்றாங்க. அதே உணவை மொத்தமா தயாரித்தால் ஆயிரம் குடும்பத்தின் ஒருமணிநேரம் அதாவது ஆயிரம் மணிநேரம் மிச்சம்தானே

*

திருமணம் முடிந்த நாளோடு தேனிலவுக்குக் கண்டம் தாண்டினார்கள். மாதமொன்று கழிந்தது, இயல்பு வாழ்க்கையும் புலர்ந்தது. திருமணமான புதிதென்பதால் அவள் பேச்சுக்கே அவன் கட்டுப்பட்டான். உணவு ஆர்டர் செய்தே சாப்பிட்டார்கள். சில மாதங்களில், அம்மா கதிரறுத்தனுப்பிய மாப்பிள்ளைச் சம்பா அரிசி மூட்டை 18ஆம் தளத்திற்கு வந்திருந்தது. இதைச் சமைக்க வேண்டாம்! வீணாக்கவும் வேணாம் திருப்பி அனுப்பிடேன்என்றாள். அம்மாவின் உழைப்பினை-தன் நிலத்து அரிசியைத் திருப்பியனுப்ப விருப்பமில்லை அவனுக்கு. பயன்படாத ஒன்று வீட்டிலிருக்க பிடிக்கவில்லை அவளுக்கு. முரண் தொடங்கியது; மூப்படைந்தது; முற்றியது. மணமுறிவிற்கே வழிகோலியது. மணமுறிவுக்கு முன்பே மனம்முறிந்தது. வக்கீல் நோட்டீஸ் வருமுன்னரே வீட்டைவிட்டு வெளியேறி பழையவிடுதிக்கே சென்றான்.

*

ஹேய்! ஏந்திரி…. எவ்வளோ நேரம் தூங்குவ

என்ன?” எனும் பாவனையில் அவனிரு புருவங்களும் விண்நோக்கின.

பசிக்கலையா? மணியப் பாரு

அவனுக்கு ப்ரட்டும் ஜாமும் எடுத்துத் தந்தாள். பல்லிளிக்கும் சூரியன். பால்கனியிலிருந்து பூமியை நோக்கினால் ஆள் நடமாட்டமின்றி மரங்களும் கட்டடங்களுமே இருந்தன. பேருந்துகள் ஓடலை, பயணிக்க வகையில்லை. தங்குவதற்கு உரிமையில்லா வீட்டில் இருக்க வேணாம். முகம் கழுவி எப்படியேனும் ஊருக்குக் கிளம்பிட முடிவெடுத்தான்.

நீ சாப்டியா?” எனும் கேள்வியை அவன் கேட்க மாட்டானா! என்றிருந்தது. கொரோனாவால் வொர்க் ப்ரம் ஹோம் அறிவிச்சப்பறம் இப்படித்தான். ஆளே மாறிட்டாள்! பறந்து கொண்டே இருப்பவளுக்கு இந்தக் கூடு மட்டுமே வானமானது. அதுவே தண்டனையும்.  ஊரடங்கால் சமைக்க யாரும் வரவில்லை, வைரஸ் பரவலால் யாரை நம்பியும் உணவு வாங்க முடியவில்லை. எடையிழந்த உடலின் கலையிழந்த முகத்தைப் பார்த்து,

நீ?”

அத்திபூத்தாற்போல் சொல்லொன்று உதிர்த்தான். வான்மதகுடைத்துப் பயிர் வளர்க்கும் கார்முகிலாய் அழத் தொடங்கினாள். அவளைத் தொடக்கூடத் தயக்கம். “இரு வரேன்”. தண்ணீர் கொண்டுவர கிச்சன் சென்றான். அதிர்ச்சி, ஆச்சரியமும்தான். புதுப்பாத்திரங்கள் குடிபுகுந்திருந்தன. மின்னடுப்பும் உதயமாகி அலங்கோலமாக இருந்தது. சமையலுக்குதவும் சின்னச்சின்ன தானியங்கள், பருப்புகள் இருந்தன. ப்ரிட்ஜ் முழுதும் காய்கறிகள். அப்புறம் ஓரத்தில் அரிசி மூட்டை. எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், தண்ணீரெடுத்து வந்தான். தந்தான்.

போறேன்எனக் கிளம்பினான்.

சமைச்சி கொடுத்துட்டுப் போறியாஎன்றாள்.

அழுதான், அணைத்தான், சமைத்தான், சாப்பிட்டான், சாப்பிடவைத்தான். அவளும்தான். போறேன் என்றவன் ஒரு மண்டலம் அங்கேயே இருந்தான். வாட்சப் அழைப்பில் பாட்டி சமையல் கற்பித்தாள் அம்மா. உணவு அடிப்படையானது; சமையற்கூடமே கதியெனக் கிடப்பது அநாவசியமானது. அரிசி மூட்டையும் தீர்ந்தது. 48 நாட்கள் முடிந்து ஊரடங்கும் தளர்ந்தது. வள்ளிக்கோ மனம் நிறைந்து கலைகூடி எடை அதிகரித்தது. இருவர் இப்போது மூவராகியிருந்தனர். யாருக்குத் தெரியும் நால்வராகக்கூட இருக்கலாம். அம்மாவுக்கு மகிழ்ச்சி; அம்மாவாகப் போகிறவளுக்கும்தான்.

வாசல் வந்த வக்கீல் நோட்டீசை ஒன்றாகக் கிழித்தனர். மனமுறிவுக்கு வித்திட்ட சமையலறை சமையலே; அன்பையும் அன்யோன்யத்தையும் பெருக்கியது. இந்த எதார்த்தமே நம்பிக்கையானது.

அன்று வெளியான நாளேட்டின் தலைப்புச் செய்தி :

நாட்டிலிருந்து கொரோனா தொற்று முற்றிலும் ஒழிந்தது ; சமூக விலகல் இனி தேவையில்லை

டாட்

 






23 கருத்துகள்:

  1. அருமை அருமை தம்பி அடுப்பங்கரையே முறிவு தந்தது அதுவே பின் அணைப்பு தந்தது ...

    பதிலளிநீக்கு
  2. அருமை...
    உறவுகளின் தொப்புல் கொடி விருந்தோம்பல்.....
    இதனை எந்த corona உணர்த்த போகிறதோ தெரியவில்லை......

    பதிலளிநீக்கு
  3. உறவுகளை இணைக்கும் பாலம் சமையலறை. கதை சிறப்பு. உங்களின் எழுத்துக்களுக்கும் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. உறவுகளை இணைக்கும் பாலம் சமையலறை. கதை சிறப்பு. உங்களின் எழுத்துக்களுக்கும் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தி.வெண்ணிலா ஆசிரியை (மோசஸ்)
    சமயலறை பலமணிநேரத்தை வீணாக்கும் என்பது உண்மை.ஆனால் அதுவே உறவை வளர்கும் என்பது அருமை. வாழ்க!வளர்க! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அலுப்பு தட்டாத அருமையான கதை நகர்வு..! மூன்றே கதாபாத்திரத்தில் அழகான கதை.. வாழ்த்துகள் தம்பி..!
    #சாந்திசந்திசேகரன்

    பதிலளிநீக்கு
  7. கதையின் நகர்வு,கதைக்கு பெரும்பலத்தை சேர்த்திருக்கிறது.எளிய விடயத்தை எளிமையான முறையில் கூறி இருப்பது அலுப்புத்தட்டுவதையும் தவிர்த்திருக்கிறது.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. கொரோனாவால் ஏற்பட்ட விளைவுகளை விளக்கி கதையை விறுவிறுப்பாக சொல்லியுள்ளீர்கள்.
    தனித்திருந்தவர்கள் இணைந்துள்ளனர். இணைந்திரு....வீட்டிலிரு...
    உறவுகளின் பிரிவை நெருக்கப்படுத்தியது கொரோனா என்பதை ஊரடங்கு காலத்தில் உணர்ந்தோம்.
    குறுந்தொகை பாடலோடு ஒப்பிட்டது மிகச் சிறப்பு...வாழ்த்துக்கள் தமிழ்

    பதிலளிநீக்கு
  9. மௌனமாகத் தான் படித்தேன்.
    ஆனால், மனத்திரையில் சத்தமாய் ஓடிக்கொண்டிருந்தது உங்கள் சிறுகதை என்னும் குறும்படம். அத்தனை அழகு எழுத்துநடையில். மிகச் சிறப்பு. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ...💐💐💐 மென்மேலும் வளர வேண்டும். இனி சமையலறை பக்கம் போகும் போதெல்லாம் இந்த கதை ஞாபகம் வரும்.😊😊😊

    பதிலளிநீக்கு
  10. நாம் எதிர்கொண்டிருக்கும் கொரோனா கால எதார்த்தத்தை எதிரொலித்தது. மிகச் சிறப்பு...👏👏👏

    பதிலளிநீக்கு
  11. அருமை.
    இது போன்று நிறையவே எழுதுங்கள்.
    தமிழ் தலை நிமிரட்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பக்கத்தில் மட்டும் நீயிருந்திருந்தால் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து, தோள்சுமந்து கொண்டாடி யிருப்பேன்... அருமைப் படைப்பு...
    -
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு பெற்றிருந்தேன். மனம் நிறைந்து சொல்கிறேன் என் படைப்பினும் உன் படைப்புப் பல மடங்கு சிறப்புடைத்தாய் இருக்கிறது. உன்னோடு போட்டிப் போட வேண்டுமெனும் ஆர்வம் மிகுந்துள்ளது.
    -
    வாய்ப்பின் இக்கதை குறித்த திறனாய்வுக் கட்டுரை எழுத முயல்கிறேன்.
    -
    வாழ்க தம்பி.
    எழுச்சியுடன்,
    கவனகர் கலை.செழியன்

    பதிலளிநீக்கு
  13. மிக அருமையான கதை தம்பி... வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுக... மென்மேலும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுக...

    - தேனி மு. சுப்பிரமணி
    தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்,
    www.thenitamilsangam.org
    ஆசிரியர், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 -1990)
    www.muthukamalam.com

    பதிலளிநீக்கு
  14. சிறப்பு மிக சிறப்பு
    அண்ணா சிறுகதை நன்றாக இருந்தது
    அந்த பெண்ணிற்கு சமையல் ஆர்வத்தை அளித்த கொரோனாவிற்கு நன்றி
    கதையின் தலைப்பு கொரோனாவின் நற்பலன்கள் என்றும் கூறலாம்

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அருமையான எதார்த்தமான படைப்பு. நடைமுறை வாழ்க்கையில் உள்ள நகை முரண் சமையலுக்கு நேரம் செலவிடாதே; சம்பாதி என்று வாதம் செய்வது.. இக்கதையில் வரும் வள்ளி போன்ற பெண்கள் தத்தம் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம்! உணவு அரசியல் நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிற இக்கால கட்டத்தில் இது போன்ற படைப்புகள் மிகவும் அவசியம்! வாழ்க வளமுடன்; நலமுடன், தம்பி!!

    பதிலளிநீக்கு
  16. வாழ்கடா தம்பி.
    உன் வளமை அறிவான் அண்ணன்.
    தலைமை அறிந்து
    தமிழால் வாழ்த்துகிறேன்.

    தூரமும் நேரமும்
    இருக்கிறது இன்னும்.
    நடையளந்து வை.
    நாவளந்து பேசு.
    உலகளந்து நில்.
    உன் மொழியில் சொல்.
    ஒவ்வொன்றிலும் வெல்.

    உன்னை ஆராதிக்க
    உற்றவர் வருவார்-பெற்றவர் போல.

    நற்றமிழ் பேச
    நற்றவம் செய்தவர் நாம்.

    நாடு போற்ற
    நற்றிறம் பெற்றவா!
    மேலும் வெற்றிகள்
    மின்னிநீ பெற்றுவா!

    கவிஞர் கங்கைமணிமாறன்

    பதிலளிநீக்கு
  17. சமையலறையைக் குறித்த முரண்பாட்டை எழுப்பி ஒரு பக்கம் கேள்விகளால் சிந்திக்க வைத்து மறுபக்கம் எளிய தீர்வாய் சிறப்பு செய்துள்ளீர்கள். கதையுடன் பயணித்துக் கொண்டிருக்கும்போது வள்ளி கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் என்ன விளக்கம் சொல்ல போகிறீர்கள் என்று ஒரு கணத்தில் ஒரு ஆணாய் பயந்துவிட்டேன். தத்துவம் அறிவுரை பெண்ணியம் விருந்தோம்பல் போன்ற துறைகளைத் தொடாமல் கொரோனா தந்த மாற்றமாய் முடித்திருப்பது பாராட்டுக்குரியது. எழுத்து நடை, கதையோட்டம் உணர்வுப்பூர்வமாக இருந்தது. சத்தமில்லாத சமூகப்பணி தொடரட்டும்

    பதிலளிநீக்கு