நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 4 ஜூலை, 2017

இடையன் எறிந்த மரம் - அப்டினா என்ன ! உ. வே.சா கட்டுரை


'இடையன் எறிந்த மரம்'



.வேசாமிநாதையர்



'இடையன் எறிந்த மரம்' தமிழ்த் தாத்தா .வே.சா. அவர்கள் எழுதிய கட்டுரை.

 திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தில் வருஷந்தோறும் நடைபெறும் ஸ்ரீ ஆதி குமரகுருபர ஸ்வாமிகள் தின வைபவத்துக்கு வழக்கப்படியே 1937-ஆம்வருஷம் நான் போயிருந்தேன். அப்போது அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாப்பதற்காக வருவித்து நியமிக்கப்பெற்றிருந்த இடையன் ஒருவனை நான் கண்டு பேசினேன். அவனுக்கு அறுபது பிராயத்திற்குமேல் இருக்கும். பல இடங்களிலிருந்து அநுபவம் பெற்றவன். அவனிடம் மாடுகளைப் பற்றிய விஷயங்களை யெல்லாம் தெரிந்து கொள்ளலாமென்பது என் அவா. ஆதலால் அவனிடம் விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். அவன் முதலில் தன் கதையைச் செல்லிக் கொண்டான். அந்த மடத்தில் தனக்கு எல்லாவித மான சௌகரியங்களும் கிடைப்பதுபற்றி நன்றி யறிவுடன் பாராட்டிப் பேசினான். அப்பால் மாடுகளின் வகை, கொண்டி மாடுகளை மடக்கிப் பிடிக்கும் முறைகள், பிடித்தற்கு வேண்டிய கருவிகள் முதலிய பல விஷயங்களை அவன் விரிவாக எடுத் துரைத்தான்.

கயிற்றில் சுருக்குப்போட்டு அடங்காத காளைகளை அதில் அகப்படச் செய்யும் விதத்தைச் சொல்லித் தன் கையிற் கொணர்ந்திருந்த கயிற்றில் அந்தச் சுருக்கையும் போட்டுக் காட் டினான். அவன் கூறிய செய்தி ஒவ்வொன்றும் எனக்குப் புதியதாக இருந்தது; ஆச்சரியத்தையும் விளை வித்தது. அந்தச் சமயத்தில் அவற்றால் ஒருவித மகிழ்ச்சி உண்டாயிற்றே யன்றி அவை என் மனத்திற் பதியவில்லை. நான் மாடுகளோடு பழகுபவனாகவோ, பல பசுக்களை வைத்துக் காப் பாற்றுபவனாகவோ இருந்தால், அவன் கூறிய வற்றையெல்லாம் மனத்திற் பதித்துக் கொண்டிருப்பேன். எனக்கு அத்தகைய நிலை இல்லையே. இலக்கியத்தில் வரும் பசுக்களையும், காளை களையும் அறிந்து இன்புறுபவனாகிய எனக்கு அவன் சொன்ன விஷயங்களில் கவனம் ஏற்படாதது வியப்பன்று. ஆயினும் அவன் கூறியவற்றைக் குறித்துக் கொண்டேன். அவன் இடையர் கூட்டத்தில் வழங்கும் சில பழமொழிகளைச் சொல்ல ஆரம்பித்தான். அநுபவத்தில் தோய்ந்து பழுத்து உருப்பெற்றவையே பழமொழிகள். ஆதலின் அதுகாறும் வெறும் விநோதார்த்தகாக்க் கேட்டுவந்த நான் என் கவனத்தை அதிகமாகச் செலுத்தத் தொடங்கினேன்.

"எங்கள் ஜாதியிலே வாழ்த்துச் சொல்லும் போது, 'நல்லெருமை நாகு, நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற' என்று வாழ்த்துவார்கள்" என்றான் அவன். எருமை கிடாரிக் கன்றையும், பசு காளைக்கன்றையும், ஆடு கிடாய்க் குட்டியையும், மனைவி பெண் குழந்தையையும் பெற வேண்டுமென்று அந்தச் சாதியினர் விரும்புவார்களாம். நாகு என்னும் சொல் பெண் எருமையைக் குறிக்கும். இலக்கியத்திலே அச்சொல் பயின்று வரும். அந்த இடையன் மெல்ல மெல்லத் தன்னிடத்திலும் சரக்கு உண்டு என்பதைக் காட்டத் தொடங்கினான். இடையன் ஆடுகளை ஓட்டும் மாதிரியை அபிநயித் துக் காட்டினான்; "ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப் புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். அங்கே மரங்களின் கிளைகளை எங்கள் வாளால் வெட்டு வோம். நாங்கள் வெட்டும்போது கிளை முதுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழை களைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும், மற்றக் கிளைகளைப்போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும்" என்று அவன் வருணிக்கத் தொடங்கினான்.

அவன் அந்த விஷயத்தைச் சொல்லி வரும் போது நான் ஊக்கத்தோடு கவனித்தேன். அவன் அகக்கண்ணிற்குக் காடும் மரமும் ஆடு மாடுகளும் தோன்றின போலும்! என் உள்ளத்திலோ வேறு விதமான தோற்றம் உண்டாயிற்று. அவன் இந்தப் பிரத்தியக்ஷமான உலகத்திலுள்ள காட்சிகளை நினைந்துகொண்டே பேசினான். அதைக் கேட்கக் கேட்கக் என் மனமோ தமிழ் இலக்கிய உலகத்திலே சஞ்சாரம் செய்யத்தொடங்கியது. 'இடையர்கள் ஆடு மாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்' என்ற செய்தியை அவன் சொன்னபோது எனக்குப் பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்யுட்கள் ஞாபகத்திற்கு வந்தன.

நம் மனமறிந்து முற்றும் நம்மோடு பழகினவர் நம்மிடமிருந்து ஓர் உபகாரத்தை எதிர்பார்க்கிறார்; வாய்விட்டும் சொல்லிக் கேட்டுவிடுகிறார். அவர் கேட்கும்போது தாக்ஷிண்யத்திற்குக் கட்டுப் பட்டு அந்த உபகாரத்தைச் செய்வதாக நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால், அவர் கேட்கும் பொருளோ நம்மிடத்தில் இல்லை. கேட்பவர் நெடுநாளாகப் பழகியவர். நாமோ வாக்குக் கொடுத்து விட்டோம்; நம்முடைய அளவை நன்றாக யோசனை செய்யாமல் அவருக்கு ஒரு நம்பிக்கையை உண்டாகி விட்டோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறோம். "முடியாது" என்று கடைசியில் சொல்வது நியாமாக தோன்றவில்லை . இந்த மாதிரியான தர்ம சங்கட நிலையை ஓர் உபமானம் நன்றாக விளக்குகிறது. நாம் 'இடையன் எறிந்த மரம் போல' இருக்கிறோம். உபகாரத்தை மறுப்பதற்கும் இல்லை; செய்வதற்கும் இல்லை. இந்த விஷயத்தையே பதினேண்கீழ்கணக்கு நூலுக்குள் ஒன்றாகிய பழமொழி என்பதிலுள்ள ஒரு செய்யுள் தெரிவிக்கின்றது.


அடையப் பயின்றாசொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின்-படைபெற்
றடைய அமாத்தகட் பைந்தொடி அகஃதால்
இடை னெரிந்த மரம்."

பயின்றா - பழகினவா
ஆற்றுவரா - செய்வாராக
ஒட்டின - சம் மதித்தால்
 பைந்தொடி : விளி
எறிந்த - வெட்டிய

இடையன் விரித்துரைத்த காட்சியும் பழ மொழி செய்யுளும் ஒருங்கே என் மனதில் ஓடின. அவ்வாறு வெட்டும் போது கிளை அடியோடி விழும்படி வெட்டினால் என்ன ?" என்று நான் கேட்டேன். "அப்படி வெட்டினால் அந்த கிளை அப்பால் உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ, மரத்தோடு ஒட்டிக்கொண் டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்." 'இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக்கொண்டிருக்கும்' என்ற எண்ணத்தை அவன் கூறிய விடை உண்டாக்கியது.

அதனைத் தொடர்ந்தவாறே,
"இடைமகன் கொன்றவின்னா மரத்தினேன்"(1914) என்ற சீவக சிந்தாமணி அடி ஞாபகத்திற்கு வந்தது. சீவகன் தன்னுடைய தாயைப் பார்த்துத் தன் நிலையை, "நான் என் தந்தை மரணமடையப் பின் பிறந்தேன்; அன்றியும் நீ துன்பத்தில் தங்கவும் நட்புடையவர்கள் மனம் வருந்தவும் இடைமகன் கொன்ற இன்னா மரம் போல இருந்தேன்" என்னும் சொற்களால் விளக்குகிறான். நச்சினார்க்கினியர் அந்த உவமையை விரித்து, 'உயிருடன் இருந் தேனாய்ப் பகையை வென்றேனுமல்லேன், உயிரை நீத்தேனுமல்லேனென்று கருதி மரத்தினேனென் றான்' என்று விசேஷவுரை எழுதுகின்றார். அவ் வுரை இடையன் கொன்ற மரத்தின் தன்மையை நன்கு விளக்குகிறது. அந்த இடையன் சொல்லிவந்த செய்திகள் இலக்கியப்பொருளைத் தெளிவாக விளக்கின.
இலக்கியங்களில் இடையர்களைப்பற்றி வருணிக்கும் இடங் களில், 'ஒடியெறிதல்' என ஒரு தொடர் வரும். 'ஒடிய எறிதல்' என்பதே அவ்வாறு விகாரப்பட்டு வந்தது. இடையர்கள் ஒடிய எறிவார்களே அன்றி அற்றுவிடும்பட எறியார் என்பதை அத்தொடர் குறிப்பதை அப்போது தெளிவாக நான் உணர்ந்தேன். "அவ்வளவு ஜாக்கிரதையாக வெட்டுவது கஷ்டமல்லவா?"என்று நான் கேட்டேன். "அது கைப்பழக்கம். இல்லாவிட்டால் பழ மொழி வருமா?" என்றான் அவன். "பழமொழியா? என்ன அது?" என்று ஆவ லுடன் வினவினேன். "'இடையன் வெட்டு அறாவெட்டு' என்ற பழமொழியைத்தான் சொல்லுகிறேன்.

எங்கள் கைப்பழக்கத்தை அந்தப் பழமொழி தெரிவிக்கிறதே." நான் ஸ்தம்பித்துவிட்டேன் என்ன அது? சொல்"நான் மறுபடியும் கேட்டேன். 'இடையன் வெட்டு அறாவெட்டு' என் பதை மறுபடியும் அவன் சொன்னான். அது காறும் அந்தப் பழமொழியை நான் கேட்டதே இல்லை. ஆதலின் அதைக் கேட்டபோது எனக்குப் பெரிய சந்தோஷம் உண்டாயிற்று. இலக்கியங் களிலே 'இடையன் எறிந்த மரம்'என்பதைப் படித்தவுடனே கருத்து விளங்காது. அதற்கு விசேஷ உரை சொல்லி விளக்கினால்தான் தெரிய வரும். ஆனால் அவன் கூறிய அந்தப் பழமொழி இலக்கியத்திற் கண்ட தொடர்மொழியாகிய பூட் டைத் திறக்கும் திறவுகோலாக விளங்குகிறது.

'இடையன் வெட்டு அறாவெட்டு' என்ற பழ மொழி எவ்வளவு சுலபமாகவும் சுருக்கமாகவும் இடையனது கைத்திறமையையும், மற்றவர்கள் வெட்டும் வெட்டிற்கும் அவனது வெட்டிற்கும் உள்ள வேற்றுமையையும் தெரிவிக்கின்றது!

படைநின்ற பைந்தா மரையோ டணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா
இடைய னெறிந்த மரமேயொத் திராமே
அடைய வருளா யெனக்குன்ற ருளே" (பெரிய திருமொழி)


என்ற பாசுரத்தில் ஆழ்வார் கடவுளது திரு ருளைப் பெறவில்லையே என்ற ஏக்கத்தால் மன மழிந்தும் பெறுவோமென்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக்கொண்டும் நிற்கும் நிலையை 'இடையன் எறிந்த மரத்தை' உவமையாக்கிப் புலப்படுத்து கின்றார். அந்த உபமானத்தின் கருத்தை ஆயிரம் வார்த்தைகளால் விரித்து உணர்த்தப் புகுவதை விட 'இடையன் வெட்டு அறாவெட்டு' என்ற சூத் திரத்தை மாத்திரம் சொல்லி நிறுத்தினாலே போதும். 'சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளை'ச் செறித்து இனிது விளக்கும் அப்பழமொழியைச் சூத்திரமென்று சொல்வதில் என்ன பிழை?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக