நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 5 ஜூன், 2019

இலையில் தங்கிய துளிகள் | வைரமுத்து கவிதை


இலையில் தங்கிய துளிகள்

காலப் பெருவெளியில்
சிலப்பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும்கண்டுசெல்ல வருகிறேன் உன்
காதல் திருமுகம்

அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?

உன் கிராம்ம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி

நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்ட்தாகவும்
நீளப் பொய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம் கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்.

பட்டுப் பாவடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடை ஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை
உருண்டை திரட்டி என் மேலெறிந்து
நீஎன்னைக் கடந்த காலம்-
தெருவெல்லாம் கார்த்திகைதான்!
மனசெல்லாம் மார்கழிதான்!

ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும்?

இன்றேனும் பேசு பெண்ணே!

“வாங்க”

ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீ மட்டும் நீயில்லை

வீதிஎயல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே

மழையூறிய ஓவியமாய்ச்
சாயம்போன நீ எங்கே

காலம்தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்

மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்

பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்

சரத்தின் சருக்சொல்லியது
உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்கத் தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்

தேநீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது

மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி

இனிமேலும் இஞ்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி

கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது

கார்க்கதவு சாத்த வந்த கணவன் சொன்னான் :
”நீங்களே அவளுக்குத்
தாலிகட்டியிருக்கலாம்”

உன்போல் பெண்மக்கள்
ஊர் உலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்.

-    வைரமுத்து | கொஞ்சம் தேநீர் நிறைய வானம் தொகுப்பிலிருந்து.


#தக 05.06.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக