நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

சனி, 8 ஜூன், 2019

தேசிய நெல் திருவிழா - 2019



13ஆம் ஆண்டு தேசிய நெல்திருவிழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல்திருவிழா இந்த ஆண்டு (2019) ஜூன் 8, ஜூன் 9  நாட்களில் நடைபெறுகிறது.

கிரியேட் நமது நெல்லைக் காப்போம் அமைப்பு வாயிலாக 2006ஆம் ஆண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது நெல் திருவிழா. அது முதல் கடந்த 12 ஆண்டுகளாக நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து நெல் திருவிழாவை சிறப்பாக நடத்தியவர் நெல் ஜெயராமன். தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமன் கடந்த 2018 டிசம்பர் 6ஆம் நாள் மறைந்தார். அவர் இல்லாது நடக்கக்கூடிய முதலாவது நெல் திருவிழாவாகும் இது.

நம்மாழ்வாரும் நெல்ஜெயரமானும் இயற்கை வேளாண்மையை தமிழக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த இருபெரும் ஆளுமைகள். வேளாண்மை அழிந்து வருகிறது, செயற்கை உரங்களால் மண் மலடாகி வருகிறது, இது தவிர்த்து, காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றால் இயற்கை வளமே இல்லாத போகும் சூழல் ஒருபக்கம். இவற்றுக்கிடையே இவையாவற்றையும் தாண்டி விவசாயத்தை இலாபகரமானதாக மாற்றி, இயற்கை சார்ந்து பயிரிட்டு சாதிக்கலாம் என்பதை மற்ற விவசாயிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்து செயல்படுத்திக் காட்டியவர் நெல் ஜெயராமன்.

அவர் இல்லாத நடக்கும் முதல் நெல் திருவிழா இதுவாகும்.  தேசிய நெல்திருவிழாவின் முதல் நாளான சனிக்கிழமை காலை உழவர்களின் பேரணி, கண்காட்சித் திறப்பு, மறைந்த நெல் ஜெயராமன் மற்றும் முன்னோடி உழவர்களின் படத்திறப்பு விழாவும், புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, விழாப் பேருரையாற்றுகிறார். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சுகதீப்சிங் பேடி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரம், ஜார்கண்ட ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளான் வல்லுநர்களும் பங்கேற்க உள்ளனர்.

நெல்திருவிழாவில் இரண்டு நாட்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இவ்விழாவில் பாரம்பரிய நெல்ரகங்களில் காணப்படும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன், இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், சான்றிதழ் பெறுவதில் விவசாயிகளின் கூட்டு முயற்சிகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், நுகர்வோர் பார்வையில் பாரம்பரிய நெல் ரகங்கள், விதை மீதான உழவர்களின் உரிமையும் அரசின் நெருக்கடிகளும், அழிவின் விளிம்பிலுள்ள நாட்டுரக கால்நடை இனங்கள், வறட்சியை எதிர்கொள்ள சமூக அளவில் மேற்கொள்ள வேண்டிய நீர்மேலாண்மை யுக்திகள் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கமும், விவாதங்களும் நடைபெற இருக்கின்றன.

நெல் ஜெயராமன் நினைவாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனை முகாம் சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர் மல்லிகா தலைமையில் நடக்கவிருக்கிறது. பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டியும், மரபார்ந்த விளையாட்டுகள் போட்டியும் நடத்தப்படவுள்ளன. பேரணி, கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சி, உணவுத்திருவிழா என திருத்துறைப்பூண்டி ஏஆர்வி தனலெட்சுமி திருமண அரங்கில் நடைபெறவுள்ள உணவுத்திருவிழா-2019 களைகட்ட இருக்கிறது.

நெல் திருவிழாவின் முதன்மையான நோக்கமே விதை நெல் தான். கடந்தாண்டு இயற்கை விதை நெல் வாங்கிச் சென்ற விவசாயிகள் அதனை இரட்டிப்பாக திரும்பித்தர வேண்டும். இந்தாண்டு புதியதாக விதை நெல்வாங்கிச் செல்லும் விவசாயிகள் அடுத்த ஆண்டு இரட்டிப்பாக அவற்றைத் தர வேண்டும். அறாத்தொடர்ச்சியாக நிகழும் இது பல்கிப் பெருகி இயற்கை வேளாண்மையை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் முறையாகும். தனிமனிதரின் பிடியில் துறைசார்ந்த யாவற்றையும் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரம் பல்கிப்பெருகி வரும் உலகமயமாக்கல் சூழலில்,  அடையாளங்கண்ட இயற்கை பயிர்களையெல்லாம் விதை நெல்லாக பிறருக்கும் கொடுத்து வேளாண்மையை பொதுவுடைமையாக்கிய பெருமை நெல் திருவிழாவையே சேரும்.

நெல் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

-    த.க.தமிழ்பாரதன்
-   படங்கள் க.சதீஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக