நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Friday, 19 June 2020

Magnificent proportions mean in Tamil - சிறந்த பரிமாணம்

Magnificent proportions mean in Tamil

என்று பல தேடல்கள் இருக்கின்றன. அதற்கு விடை காணும் முயற்சியாக இந்தப் பதிவு.


தமிழில் Magnificent proportions என்பதை  சிறந்த பரிமாணங்கள் அல்லது அற்புத பரிமாணங்கள் என்று சொல்லலாம்.

CTH meaning in Tamil

CTH meaning in  Tamil  என்று பல தேடல்கள் இருக்கின்றன. அதற்கு விடை காணும் முயற்சியாக இந்தப் பதிவு.

Custom Tariff Heading - CTH

தமிழில் Custom Tariff Heading என்பதை சுங்கவரி கட்டண தலைப்புகள்
என்று சொல்லலாம்.

Thursday, 18 June 2020

Determine full meaning in Tamil explain - தீர்மானித்தல்

Determine full meaning in Tamil explain

என்று பல தேடல்கள் இருக்கின்றன. அதற்கு விடை காணும் முயற்சியாக இந்தப் பதிவு.


தமிழில் Determine என்பதை உறுதிகொள்ளுதல், முடிவு செய்தல், தீர்மானித்தல் 
என்று சொல்லலாம்.

Monday, 4 May 2020

கணினிவழித் தமிழ் கற்பித்தல் நுட்பங்கள் - இணையவழிப் பயிலரங்கு

கணினிவழித் தமிழ் கற்பித்தல் நுட்பங்கள்.
கொரோனா பரவலால் வலசை சென்றிருந்த பறவைகள் வீடுதிரும்பச் சொல்லி கூடுகள் செய்தியனுப்பின. உரிய வாய்ப்பினால் ஊரடங்குக்கு முன்னமே கூடடைந்த பறவை நான். கொரோனா ஊரடங்கில் வீடடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்றே! என்று வருந்திக் கொண்டிருந்த நேரம். ஒரு பக்கம் ஆய்வேடு எழுத வேண்டியிருந்தது. மற்றொரு பக்கம் அதற்குரிய அடிப்படை நூல்கள் கைவசம் இல்லாமல் தூக்கமின்றி தூக்கத்தை நழுவி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
இதற்கிடையே கொரோனாவின் தில்லி அரசியலால் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு அழைத்துச் சென்றதுமருத்துவமனை வாசம், கொரோனா நோயாளிகள் அறை, மாத்திரை மருந்து எனக் கடினப்பட்டு கடத்திய 28 மணிநேர முடிவில் எதிர்மறை என முடிவு வந்ததால் மீண்டு(ம்வீடடைய முடிந்தது..
ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் எடுத்த முடிவு செயலாக்கம் பெற்றது. பன்மொழிப் படங்களும் சமூகவலைதளங்களும் தூசுதட்டாமல் இருந்த நூல்களும் நாட்களை பொருண்மையுள்ளதாக்கின. மாதத்தின் நிறைவு வார நாளொன்றில் சமூகவலைதளத்தில் நகர்வலம் வந்துகொண்டிருக்கையில், பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களின் முகநூல் பதிவு கண்ணில் பட்டது.
கணினித் தமிழ் கற்பித்தல் நுட்பங்கள். பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்., தமிழ் அநிதம்(அமெரிக்கா), உலகத் தமிழ் மென்பொருள் குடும்பம் (உலக மென் கும்) இணைந்து நடத்தும் கணினிவழித் தமிழ் கற்பித்தல் நுட்பங்கள் குறித்த ஏழுநாள் இணையவழிப் பயிலரங்கம் அது. பார்த்தவுடன், பரபரத்த மூளையின் தூண்டல் படிவத்தை நிரப்பச் செய்துவிட்டது. ஆனால், அது பேராசிரியர்களுக்கான பயிலரங்கு. குணசீலன் ஐயாவுக்கு தனிக்கணக்கில் விவரம் தெரிவித்ததில் பரிசீலனை செய்கிறோம் என்றிருந்தார்.

ஏப்ரல் 29ஆம் நாள் நிகழ்ந்த பயிலரங்கு நிகழ்வைப் பற்றிய தகவல்களை சமூகவலை தளங்களில் கண்ணுற்றுதும் விருப்பம்(Like) இட்டு கடப்பதைத் தவிர வேறேதும் தோன்றவில்லை. கதிரவனுறங்கத் தொடங்கும் மாலையில் திறந்த மின்னஞ்சலில் வகுப்பிற்கான அழைப்பு வந்திருந்தது. அதுதான் முதல் முறை,கூகுள் வகுப்பறையில் பங்கெடுப்பது; பயன்படுத்துவது; பயனடைவது எல்லாவற்றுக்கும். வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார்கள், Scratch செயலியில் 30 நொடிகளுக்கு அனிமேசன் காட்சிகளை உருவாக்க வேண்டும். நவீன கற்பித்தல் கருவிகள் எனும் தலைப்பில் இராஜபாளையத்தைச் சேர்ந்த நிரலாளர் செந்தில் முருகன் அன்றைய வகுப்பை எடுத்திருந்தார்.      
ஏப்ரல் 30ஆம் நாள் காலை 09.30க்கு வகுப்பு தொடங்கியது. இணையவழி கற்பித்தலில் முதன்மை & முதன்மைப் பாடம் உருவாக்கும் முறை குறித்து சிவகாசி, தி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் பா. பொன்னி வகுப்பு நடத்தினார். பவர் பாய்ண்ட் வழங்குதல்தமிழ் பயிற்றல் குறித்ததாக அமைந்தது வகுப்பு. சில விடயங்கள் புதியதாக இருந்தன. உலகமே கல்வியில் எங்கோ சென்று கொண்டிருக்கபவர் பாயிண்ட் வழங்கல் இந்தியச் சூழலில் பெரும் வெற்றியாகக் கருதிப்படுகிறது. பவர் பாயிண்ட் வழங்குவதை அறிவின் வெளிப்பாடாகக் கருதும் போக்கு அதனை வழங்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலேதான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பவர் பாயிண்ட் உருவாக்கினாலும், அதனைக் காட்சிப்படுத்த உகந்த வகுப்பறைகள் இருப்பதில்லை. அதற்குரிய உதவியாளர்கள், பராமரிப்புச் செலவு போன்றவற்றை கல்வி நிறுவனங்கள் சரிவர செய்வதில்லை. ஆதலின், மின்கோப்பாக அவை பகிரப்படுவதே இன்றைய எதார்த்தமாக உள்ளது குறித்தும் விவாதங்கள் நிகழ்ந்தன.

மே 1ஆம் நாள் இணையப் பாதுகாப்பு தலைப்பு. உரையாளர் வழக்கறிஞர் சரவணன். இணையத்திருட்டுகள் நடக்கும் முறைமைகள் குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான அடிப்படைச் சட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினார். மேலான, இணையப் பாதுகாப்பு குறித்து விளக்க <ஒருமணிநேரம் போதாதுதான். அடுத்த அமர்வாக தமிழ் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து வழக்கறிஞர் சரவணராஜ் குறிப்பிட்டிருந்தார். அத்தகவல் பொதுவாகத் தான் இருந்தது. இது படித்தால் இந்த வேலைவாய்ப்பு என்ற வரையறைத் தெளிவு இல்லை. வளரும் மாணவர்களிடம் அதுதான் மொழியை பட்டமாகப் படிப்பதில் சிக்கலாக கருதப்படுகிறது. இன்றைய இணைய உலகில் கூடுதல் திறன் அத்தியாவசியமாகிறது. மொழி படிப்பவர்களுக்கும் இது முதன்மையானது. கூடுதல் மொழி அறிதல், இலக்கணம் தெளிதல், மொழிபெயர்ப்புத் திறன், கணினி அறிவு, உலக அறிவு போன்றவை தமிழ் படிப்பவர்கள் வேலை வாய்ப்பிற்காக வளர்த்துக்கொள்ள வேண்டியவை.

மே 2ஆம் நாள் தரவு அறிவியல் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நிரலாளர் டேவிட் இராஜாமணி பேசினார். பல தகவல்கள் வெளிப்பட்டன. நிறைய செய்திகள் குறிப்பேட்டை நிரப்பின. திறந்த வெளி மென்பொருட்கள், நுகர்வு மென்பொருட்கள், தொழில்நுட்ப வீச்சு வளர்ச்சி குறித்து தெளிந்த பார்வை வழங்கினார். உரையினிடையே Focus, HER, Snowden படங்களைக் குறிப்பிட்டிருந்தார், இனிதான் பார்க்க வேண்டும்.

மே 3ஆம் நாள் பிறிதொரு பணியினால் காலை 09.30க்கு வகுப்பிற்கு வரத் தாமதமாகிவிட்டது. இணையமும் இலக்கணமும் & மொழிபெயர்ப்புக் கருவிகள் குறித்து அண்ணாமலை பல்கலை. மேனாள் மொழியியல் பேராசிரியர் காமாட்சி வகுப்பெடுக்க இருந்தார். சிலநிமிடங்கள் காத்திருந்து, பலமுறை முயற்சித்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அழைப்பை யாரும் ஏற்காததால் வெளியேறநேர்ந்தது.. காலத்தாழ்ச்சியில் வரும் மாணவர்களை வகுப்பிற்கு வெளியே ஆசிரியர் நிற்கவைப்பதைப் போல இருந்தது. ஆனால், அவ்வாறு நோக்கம் ஏதுமில்லை. சரியான நேரத்தில் வகுப்பைத் தொடங்கியதால் சி(ப)லர் வெளியே காத்திருந்தனர் என்பதை சில மணிநேரங்களில் வலையொளிப் பக்கத்தில் பகிரப்பட்ட வகுப்பின் திரைப்பதிவு வழி அறியமுடிந்தது.

மே 4ஆம் நாள் முனைவர். இரா. குணசீலன் மின்னூல் உருவாக்கம் குறித்தும், மின் உள்ளடக்க உருவாக்க வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். அடிப்படை தெரிந்தவை என்றாலும், வாழ்வியல் சார் விருப்ப நெறிகளைக் கற்றுக்கொடுத்தது. ஒன்றை அணுகுவது குறித்த பார்வையை தெளிவுபடுத்தியது. ஆட் சென்ஸ் குறித்த சில ஐயங்கள் தெளிவடைந்தன. எழுதியதை கொண்டு சேர்ப்பதன் முதன்மையை அறியமுடிந்தது. தமிழில் இணையத்திரட்டிகள் குறித்து அறிமுகம் செய்தார். அண்மையில் இயக்கத்திற்கு வந்த www.tamilcharam.com அதில் புதுமையுடன் இருந்தது.
மே 5ஆம் நாள். பயிலரங்கின் நிறைவு நாள். பயனுள்ள கூகுள் வகுப்பறை & நுண் கற்றல் குறித்து, தமிழ் அநிதத்தின் தலைவர் சுகந்தி பேச இருக்கிறார். அவ்வகுப்பும் பயன்தரும்.
மொழி கற்றல் கற்பித்தல் குறித்த தெளிவுக்கு இப்பயிலரங்கம் பயன்படும் என்றெண்ணி இணைந்ததில் அதைத்தாண்டிய பல திறப்புகள் கிட்டின. பயிற்சியாளர் ஒவ்வொருவரிடமிருந்து தலைப்புசார் செய்திகளுடன் பல்துறை செய்திகளை அறியமுடிந்தது. இணையவழியில் இது தான் முதன்முறை பயிலரங்கில் பங்கேற்பது. முனைவர் பட்டம் தெளிந்த தலைப்பில் மேற்கொள்ள வேண்டுமென்பதை மேலுமொருமுறை தெளிவுபடுத்தியது.
அன்றாடம் வீட்டுப்பாடம் வழங்கினார்கள். பள்ளிக்கூட வழக்கத்தில் இன்னும் வீட்டுப்பாடம் ஏதும் நிறைவுசெய்யவில்லை. முடித்தனுப்ப வேண்டும். அப்புறம் ஒரு குறிப்பு, இந்தப் பதிவு ஆறாம் நாள் வகுப்பிற்கான வீட்டுப்பாடம் தான்.

தக | 04.05.2020 | திருவாரூர்

Monday, 20 April 2020

ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்.


ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்.

அனைவருக்கும் தொடக்கக்கல்வி என்பது இந்தியாவில் சட்டம். ஆனால், இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப்படிப்பு, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர், முதுமுனைவர் என கல்விநிலை செல்லச் செல்ல கல்வி பயில்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டே போகிறது. இன்றைய சமூகத்தில் கல்வி என்பது பெரும்பாலும் வணிகமாகிவிட்டது. உயர்கல்வி குறித்து பெரும்பாலானோர் அச்சம் கொள்வதற்கான காரணமாகக் கல்விக்கட்டணமே இருக்கிறது.

ஏனெனில், இன்று பள்ளிப்படிப்புக்கே சில ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். லட்சங்களில்தான் கட்டணம். இந்தச் சூழ்நிலையில் உயர்கல்வியின் நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஆய்வுப் படிப்புகள் எனும்போது கல்லூரிகள், மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் என எதுவான போதும் கட்டணம் ஆயிரத்துக்கும் குறைவாக இல்லை. ஆனால், இந்தியாவின் தலைநகரில் அமைந்துள்ள ஜவகர்லால்நேரு  பல்கலைக்கழகத்தில் ஒரு பருவத்துக்கான கல்விக்கட்டணம் வெறும் 128 ரூபாய் மட்டுமே. 

ஜேஎன்யு
இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதன்மையானது, சிறந்த பல்கலைக்கழகத்துக்கான ஜனாதிபதி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது இப்பல்கலைக்கழகம். 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு 2019 ஆகும். தில்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்பெறும் முனிர்காவின் பின்புறம் அமைந்துள்ளது பல்கலைக்கழகம். தலைநகரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம் என்பதால் துறைசார்ந்த முக்கிய நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பு கிடைக்கப் பெறும். தலைநகரில் அமைந்துள்ளதால் அறிவுசார் விடயங்களை எளிதில் பெறுவதற்கான வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.

கல்விக்கட்டணம்
 இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம், பருவத்துக்கு 128ரூபாய் மட்டுமே. ஆம், இவ்வளவு குறைந்த கட்டணம் உலகின் எந்தப் பகுதியிலும் இருக்க வாய்ப்பில்லை. கல்விக் கட்டணம் மட்டும் அல்ல, சான்றிதழ்கள் வாங்க 100 ரூபாய்க்குமேல் கட்டவேண்டியதில்லை. இதை எல்லாம்விட முனைவர்பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்க வெறும் 100 ரூபாய்தான். இந்தியாவின் ஏனைய பல்கலைக்கழகங்களில் இதற்காக ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும்போது இத்தொகை மிகக் குறைவு. ஒரு பருவத்திற்கான விடுதிக்கட்டணம் ஏறக்குறைய 1500 ரூபாயாகும். இது தவிர்த்து மாதாந்திர உணவுக்கட்டணம் ஏறத்தாழ  2,500 ரூபாய் பெறப்படுகிறது. சேர்க்கையின் போது ஆய்வு மாணவர்களுக்கு 240ரூபாயும் இளநிலை,முதுநிலை மாணவர்களுக்கு 216 ரூபாயும் கல்விக்கட்டணமாகும். (துறை, பட்டப்படிப்பு பொறுத்து கட்டணத்தில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்)
பல்கலைக்கழக தன்மை
இது ஓர் உறைவிடப் பல்கலைக்கழகம் ஆகும். அதாவது, பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் இருப்பிடத் தொலைவை வைத்து விடுதியில் இடம்பெற முன்னுரிமை வழங்கப்பெறுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் மொத்தம் 18 விடுதிகள் உள்ளன. விடுதியின் ஒவ்வோர் அறைக்கும், இருவர் என்பதாகவும் மூத்த முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்குத் தனி அறை என்பதாகவும் ஒதுக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும்விடச் சிறந்தது இங்கே இருக்கும் பி.ஆர். அம்பேத்கர் நூலகம். 9 தளங்களை உடைய நூலகத்தின் தரைத்தளத்தில் ஒரேநேரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வசதி உள்ளது. இது, தவிர்த்து 24*7 படிப்பக அறை, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நூலகமும் உள்ளது.
அரசியல் ஆளுமைகள், பொருளாதார வல்லுநர்கள், அறிஞர்கள் எனப் பலத்தரப்பட்ட நபர்களின் பொழிவுகள் அவ்வப்போது ஆங்காங்கு நிகழ்ந்துகொண்டே இருக்கும்.  இலவச வைஃபை வசதி. மாற்றுத்திறனாளிகளுக்கு சேர்க்கை, விடுதி போன்றவை பிரத்யேகமாக இருக்கின்றன. கட்டிடங்கள், சாலைகள் தவிர்த்து பல்கலைக்கழகம் முழுமையும் மரங்கள் இருப்பதால், தில்லியில் நிலவும் மாசு பிரச்சினை இங்கு குறைவு.

மாணவர்கள்
சமூக விஞ்ஞானத்தின் ஆய்வுக் கருவூலமாக ஜேஎன்யு விளங்குகிறது. இப்பல்கலைக்கழகம் அரசியல் முதற்கொண்டு பலதுறைகளின் ஆளுமைகளை  உருவாக்கியுள்ளது. நிர்மலா சீதாராமன், சீதாராம்யெச்சூரி, பிரகாஷ் காரத், கண்ணையா குமார் உள்ளிட்ட பல அரசியல் ஆளுமைகளுக்கான விதை இங்கு விதைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் பொருளாதரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி முதலான ஆளுமைகள் பலர் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர்களே. சமூக ஆர்வலர்களாகவும், சமூக செயற்பாட்டாளர்காகவும் உருவெடுப்பதற்கான வாய்ப்பு இங்குள்ளது. அரசு உயர்ப் பொறுப்புகளிலும் தனியார் வேலைகளிலும் பலர் பணியாற்றி வருகின்றனர். உலகில் எந்த மூலையில் உரிமை மறுக்கப்படுகின்றதோ, அதை எதிர்த்து ஒலிக்கும் குரலாக ஜேஎன்யுமாணவர்களின் குரல் இருக்கும். இங்குள்ள கட்டற்ற சுதந்திரம், கட்டுப்பாடற்ற அறிவுத்தேடலும் மாணவர்களுக்கான சமூகப் புரிதலை  ஏற்படுத்துவதாக இருக்கிறது.

மாணவர் தேர்தல்!
ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான அமைப்பாக ஜேஎன்யு மாணவர் சங்கம் செயல்படுகிறது. இம்மாணவர் அமைப்பு 1971-ம் ஆண்டில் மாணவர்களால் உருவாக்கப்பட்டது. அதாவது, இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இதற்கான விதிமுறைகள் எல்லாம் மாணவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது, நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் இயங்கும் ஓர் அமைப்பாகும். இதற்கான தேர்தல் ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் நடைபெறும். தேர்தலில் பொதுக்குழுவுக்கான தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் என்ற 4 பதவிகளுக்கான உறுப்பினர்களும் ஒவ்வொரு துறைக்குமான ஆலோசகர்களும் வாக்கெடுப்பின்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தேர்தலை நடத்தும் தேர்தல் குழுவினரும் மாணவர்களாகவே இருப்பர். இத்தேர்தலின் முக்கியமான சிறப்பம்சம் போட்டியாளர்கள் மாணவர்களின் முன்னிலையில் பொதுவெளியில் தங்களது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள்.  மாணவர்கள் அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவ அமைப்பின் மீதான விமர்சனங்கள் அவ்வமைப்பின் சார்பாகப் போட்டியிடும் மாணவரிடம் கேட்கப்படும்.  ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவோர் பிற அமைப்புகளின் மீதான விமர்சனங்களையும் கேள்விகளையும் வைப்பர். அது தொடர்பான பதில்களையும் விளக்கங்களையும் அம்மேடையிலேயே பகிர்ந்துகொள்வர். இத்தகைய விவாதங்களே அவ்வாண்டின் மாணவத் தலைவரைத் தேர்தெடுப்பதில் அடிப்படையாக அமையும். இத்தகைய தன்மையானது பொது அரசியலில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு.

2020-21 சேர்க்கை
2020-21ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. கடந்த ஆண்டுகளில் எழுத்துத் தேர்வாக இருந்த நுழைவுத் தேர்வு,  கடந்த ஆண்டிலிருந்து ஆன்லைன் தேர்வாக நடந்துவருகிறது.  
இந்நுழைவுத்தேர்வினை ஜேஎன்யு மற்றும் National Test Agency உடன் இணைந்து நடத்துகிறது. சரியான விடையைத் தெரிவு செய்யும் Objective type முறையில் நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. ஏற்கெனவே, தமிழ், வரலாறு, சமூகவியல் உள்ளிட்ட துறைகளிலும் தமிழ் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழக மாணவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.


தேர்வு விவரம்
இணையத்தில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்  15 ஜூன் 2020
நுழைவுத்தேர்வுக்கான அனுமதிச்சீட்டு பதிவேற்றப்படும் நாள் –____2020
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்கள் – _____2020
தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடங்கள் - சென்னை, மதுரை,கோவை, திருச்சி, நாகர்கோயில்
பல்கலைக்கழக இணையதள முகவரி - https://jnu.ac.in/content/jnuadmission
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க - https://jnuexams.nta.nic.in/

-தக

மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணபிக்க மே 23 கடைசி நாள்

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணபிக்க மே 23 கடைசி நாள்
மத்திய மனித வளத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ளது.  மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமானது.  பிளஸ் டூ தேர்வு  எழுதியவர்கள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பிற்கும் (Integrated Master Degree), தற்போது இளநிலை முடிப்பவர்கள் முதுநிலை பட்டப்படிப்பிற்கும் (Master Degree) முதுநிலை பட்டம் முடித்தவர்கள் ஆய்வியல் நிறைஞர் (M.Phil), முனைவர் (Ph.D) பட்டப் படிப்பிற்கும்  விண்ணப்பிக்கலாம். 
மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் 40-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கல்வி நிறுவனங்களின் தர மதிப்பில் ஐஐடி-க்கள் முதல் வரிசையிலும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. பன்மொழி அறிவு, பல்வேறு பட்ட சிந்தனைகள், பல்வேறு மாநில மாணவர்களிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றங்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் பயில்வதால் கிடைக்கும். தமிழகத்தில் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் குறித்து தமிழர்கள் பலரும் அறியாமல் இருக்கிறார்கள். கல்வித் தரத்தில் முன்னணியில் உள்ள அக்கல்வி நிறுவனத்தின் வரும் 2020-21 கல்வியாண்டிற்கான நுழைவுத்தேர்வு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அமைவிடம்
நாகப்பட்டிணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதலைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். திருவாரூரில் இருந்து பத்து கி.மீட்டர் தொலைவில் நீலக்குடி, நாகக்குடி கிராமங்களில் 516 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம். வளர்ந்து வரும் கல்வி நிறுவனமான இது அண்மையில் தனது பத்தாம் ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

வழங்கப்பெறும் பட்டப்படிப்புகள்
இங்கு பிளஸ் டூ மாணவர்கள் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகளாக எம்எஸ்சி வேதியியல் (Chemistry), பொருளியல் (Economics), உயிரி அறிவியல் (Life Sciences), கணிதம் (Maths), இயற்பியல் (Physics) படிப்புகளும், நான்காண்டு இசைப்படிப்பு, நான்காண்டு பிஎஸ்ஸி., பிஎட்.., முதலானவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். இளநிலை முடித்த மாணவர்கள் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். எம்எஸ்சி வேதியியல் (Chemistry), கணினி அறிவியல் (Computer Sciences), நோயியல் மற்றும் பொது சுகாதாரம் (Epidemiology & Public Health), புவியியல், மைக்ரோபயாலஜி, அப்ளைடு சைக்காலஜி, எம்டெக் படிப்புகளாக மெட்ரியல் சயின்ஸ் & நானோ டெக்னாலஜி, எனர்ஜி & என்விரண்ட்மென்டல் டெக்னாலஜி படிப்புகளும், முதுநிலை கலைப் பிரிவில் எம்ஏ ஆங்கிலம், ஹிந்தி, மீடியா & கம்யூனிகேஷன், சோசியல் சர்வீஸ், வரலாறு, செவ்வியல் தமிழ், பொருளாதாரம், எம்பிஏ, எம்.காம், நூலகவியல் மற்றும் தகவல் அறிவியல் பாடங்களும் முதுநிலையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.  
மேற்சொன்ன பிரிவுகளில் சேர, பொது பிரிவினர் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 60% குறைவில்லாமல் மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்ணையும், இதர பிரிவினர் 50% மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும். 
பொருளாதாரப் படிப்பில் நாட்டின் முன்னணியில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து பொருளியல் - பொது (Economics - General), நிதி பொருளியல் (Financial Economics), காப்பீட்டுப் பொருளியல் (Actuarial Economics), சுற்றுச்சூழல் சார்ந்த பொருளியல் (Environmental Economics), பயன்பாட்டு நிதி பகுப்பாய்வு (Applied Quantitative Finance) போன்ற பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. மேலும், செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து முதுகலையில் செவ்வியல் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. இதைத்தவிர, தேசிய சட்ட பள்ளி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்தும் பல பயிற்சிகளை வழங்குகின்றது இப்பல்கலைக்கழகம். 

விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர பத்து மத்திய பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் பொது நுழைவுத் தேர்வு (CUCET) எழுத வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 25-ஆம் தேதியாகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்களில் மூன்று பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது நீங்கள் கொடுக்கும் அலைபேசி எண்ணுக்கு, பதிவு செய்த விவரங்கள் கிடைத்துவிடும்.  கொரானா பாதிப்பினால் தேர்வு நடைபெறும் நாட்களில் மாற்றம் இருக்கலாம்.

பதினெட்டு மத்தியப் பல்கலைக்கழகங்கள் சேர்ந்து நுழைவுத் தேர்வினை நடத்துவதால் நுழைவுத் தேர்வு முடிவுகளுக்குப் பின்னரே கலந்தாய்வு நடைபெறும். ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்காண்டு பிஎஸ்ஸி., பி.எட் பாடப்பிரிவில் 50 மாணவர்களும், முதுநிலை பட்டப்படிப்பிற்கு 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மத்திய அரசின் பல்கலைக்கழகம் என்பதால் படிப்புச் செலவு மிகவும் குறைவு. தமிழக மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.cucetexam.in/ இணையதளத்தையும், மாணவர் சேர்க்கைக்கு, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக https://cutn.ac.in/admissions-2020-2021/  இணையதளத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் – 23 மே 2020
 (கொரானா பாதிப்பினால் தேர்வு நடைபெறும் நாட்களில் மாற்றம் இருக்கலாம்)

முக்கிய நாட்கள்
·         ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள் : 16.03.2020
·         விண்ணப்பிக்க இறுதி நாள் : 23.05.2020
·         தேர்வுநுழைவுச்சீட்டு பதிவேற்றப்படும் நாள் : ___________
·         UG & PGக்கான நுழைவுத் தேர்வு நாட்கள் : ____________.2020
·         M.Phil & Ph.D ஆய்வுப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாட்கள் : ___.2020
·         முடிவுகள் வெளியாகும் நாள் : ___________2020
·         UG & PG பட்டங்களுக்கான நுழைவுத்தேர்வு மையங்கள் - சென்னை, கோவை, கடலூர், மதுரை,நாகர்கோயில், திருவாரூர், திருச்சி.
·         M.Phil & Ph.D ஆய்வுப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மையங்கள் சென்னை, கோவை
·         மத்திய பல்கலைக்கழக இணையதளம் : https://cutn.ac.in/admissions-2020-2021/
·         பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க : https://www.cucetexam.in/
-த.க.தமிழ்பாரதன்

படங்கள் : க.சதீஷ்குமார்