நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 டிசம்பர், 2020

நம் சமையலறையில்...| ஒரு இலட்சம் வென்ற சிறுகதை

வணக்கம்.

குமுதம் இதழ் மற்றும் கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு (ஒரு இலட்சம் உரூபா) பெறும் நம் சமையலறையில்... கதை 09.12.2020 நாளிட்ட குமுதம் இதழில் வெளியானது. கதை படித்தபின், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் மகிழ்வேன். 

நன்றி : குமுதம் & கொன்றை அறக்கட்டளை





நம் சமையலறையில்…                                             

                    -த.க.தமிழ்பாரதன்

இன்னும் சில மணிநேரமே இருக்க, அவசர அவசரமென அம்மாவுக்கு அழைத்தான். இக்கட்டான பொழுதுகளிலெல்லாம் இவ்வுலகை அறிமுகப்படுத்தியவரிடமே ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன. நான்கைந்து முறை அழைத்தும் அம்மா எடுக்கவில்லை. கடைசி முயற்சியாய் அழைத்துப்பார்ப்போம்.  எடுத்தால் சரி, எடுக்காவிட்டால்.... அந்தப் பேச்சுக்கே இடமில்லை, எடுத்துவிடுவார். எண்ணிக்கொண்டிருக்கையில், ‘ஆசப்பட்ட எல்லாத்தையும்..' ஒலித்தது.

“இப்பதான் நியூசு பாத்தன். இராத்திரிலருந்து ஊரடங்கு அமலுக்கு வருதாம். ஹாஸ்டல் காலி பண்ணிட்டு கிளம்பி வாரேன்னு சொன்னீயே? எங்க இருக்க?”

“அலோஓ, அம்ம்மா இங்க ஒரே கூட்டம். ரயில்லாம் இல்ல. கார் எடுக்க மாட்டேங்கறாங்க. பஸ்ல தான் வந்தாகணும். இந்தக் கூட்டத்துல வர்ரதுக்கு வராம இருக்கலாம். ஆனா, சென்னையில எங்க தங்கறது? யாருமே வீட்டுக்குள்ள விடமாட்டாங்க, ஒன்னுமே புரியல. ஏதாச்சும் ஐடியா கொடேன்.”

கன்சல்டன்சியில் பணிபுரிபவனுக்கு அம்மா ஆலோசனை தந்தாள்.

“கோவிச்சிக்கலனா ஒன்னு சொல்லுவேன்!”

“ஏது வள்ளி வீட்டுக்குப் போகணுமா? பேசவே வேணாம் போன வை!”

நிரம்பி வழியும் கோயம்பேடு, தாம்பரம் தாண்ட மறுக்கும் கார்கள், நிலையத்திலே தூங்கும் ரயில்கள் என  இயல்பைப் புரட்டிப்போட்டிருந்தது கொரோனா. 144 தடை உத்தரவு 48 நாட்களுக்கு அமல் என அரசு அறிவித்தவுடன் வாடகைக்குத் தங்கியுள்ள விடுதி வாட்சப் குழுவில் நிர்வாகி ஒரு பதிவிட்டார். "உணவு சமைக்க ஆள் வரமாட்டார், உணவகங்களும் இருக்காது". கண்ணில்பட்டதும் காலி செய்துவிட்டு ஊருக்குக் கிளம்பினான். மாலை வரை சுய ஊரடங்கென்று ஆட்டோ, டாக்சி எதுவும் ஓடவில்லை. விடுதிவாசலில் நின்று ஆன்லைன் அப்டேட் செய்தவனுக்கு, கோயம்பேடு சென்றால் கொரோனா தொற்றிடுமோ எனும் பயம்.

உறவினர் வீட்டுக்குச் செல்லலாம். 48 நாள் உட்கார வைத்து சோறுபோடுமளவுக்கு நெருங்கிய உறவினர் இல்லை. நண்பர்களோடு இருக்கலாம். தனியனாய் இருந்த கடைசி நண்பனும் கடந்த மாதம் இணையராய் மாறிவிட்டான். தான் தொந்தரவாகிவிடுவோமோ என்றஞ்சி யாரையும் தொந்தரவு செய்யவில்லை. அம்மா கூட புரிந்துகொள்ளாமல் வள்ளி வீட்டில் தங்கச் சொல்கிறாள் என்கிற எரிச்சல் வேறு.

தன்னைத் தானே நொந்துகொண்டு, விடியும் கிழக்கை நோக்கி நடக்கத்தொடங்கினான். வள்ளியின் வீடும் வீடிருக்கும் ஊரும் கிழக்கில் எதேச்சையாக அமைந்திருக்கவில்லை. அங்கங்கு நாய்களும், கண்ணுருட்டும் ஆந்தைகளும் கூடடங்கிய பறவைகளும் தவிர விண்மீன்களும் அறிய நடந்தான், நடந்தான், நடந்தான்.... நிலையா உலகில் இயற்கை அடக்குகிறது. தற்காத்துக்கொள்ள ஓடி ஒளிய வேண்டியிருக்கிறது. இந்த எதார்த்தம் வாழ்வின்மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

சற்றும் எதிர்பாரா நேரம், காலம், பொழுது அது. 'உனக்கே உயிரானேன், எந்நாளும் எனைநீ மறவாதே, நீ இல்லாமல் எது நிம்மதி, நீதான் என்றும் என் சந்நிதி; கண்ணே கலைமானே கன்னி மயிலென...' அழைப்பு ஓய்ந்தது. வள்ளியின் அழைப்பு. கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து இந்தப் பாடலை கேட்கிறான். இந்த வரிகளும் வரிகளேற்படுத்திய வசந்தமும் நினைவுகளைக் கிளறிவிட்டன.

'உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ..' அழைப்பை ஏற்றான். ஏதும் பேசவில்லை.

“நீ என்ட்ட பேசமாட்டேன்னு தெரியும். பேசவும் வேணாம்.  நானும் உன்ட்ட பேசிருக்க மாட்டேன்.  இராத்திரி அம்மா பேசனாங்க. கோவத்துல வச்சிட்டியாம். நட்ராத்திரில இங்கதான் சென்னைல எங்கயாவது நின்னிட்டிருப்ப, லொகேசன் அனுப்பு, நான் வந்து அழைச்சிட்டு போயிடறேன்.”

பதில்களை எதிர்நோக்காமல் துண்டித்துவிட்டாள். அவன் லொகேசன் அனுப்புவதற்குள் காரினை எடுக்க அடுக்குமாடிக்குடியிருப்பின் தரைகீழ்தளம் வந்திருந்தாள். லொகேசன் பார்த்தவளுக்கு கலைந்த முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததுபோலாயிற்று. அவளது குடியிருப்பின் வெளியே நிற்கும் அவனைப் பார்த்தாள், அழைத்தாள்; நகரவில்லை. மீண்டும் அழைத்தாள்;  பலனில்லை. அழைத்துக்கொண்டு ஏற 18ஆம் தளம் சென்றது மின்னேணி.

*

வள்ளி. திறமையான வளமையான பெண். கணிப்பொறித்துறையில் மென்பொறியாளர். மாதச்சம்பளம் நான்கு லட்சத்தைத்தாண்டும். அதை எப்படி பதினாறாக்குவது என்பதில்தான் அவளது நோக்கமெல்லாம். பெற்றோர் இல்லை அல்லது பெற்றோர் பிரிந்துபோய்விட்டனர். பெற்றோர் இல்லை என்பதையே விரும்புவாள் வள்ளி. பள்ளி முதல் கல்லூரி வரை விடுதியே கதியாய் இருந்தவள், வேலை சேர்ந்த பின்னும் பேயிங் கெஸ்ட்டாக இருந்தாள். மாதச்சம்பளம் இலட்சத்தைத் தாண்டுகையில் ஈஎம்ஐ-யில் வாங்கியதே 18ஆம் தளத்திலிருக்கும் வீடு. அது வீடு என்று சொல்வதைவிட ஓய்வெடுக்கும் கூடு என்று சொல்லலாம். அதுதான் வள்ளிக்குப் பிடிக்கும். சிறகை விரி, பற எனும் வரிகளின்படி சமூகத்தில் பறப்பவள். தன் வாழ்வின் வெறுமைகளை பறத்தலின் வெற்றியினால் மட்டுமே ஈடுகட்ட முடியுமென நினைத்திருந்தாள். வள்ளியைப் பொறுத்தவரை வெற்றியே மகிழ்ச்சி.

அகவை கால்நூற்றாண்டைக் கடப்பதற்குள் உடலுக்கும் உள்ளத்துக்குமென ஒருவனை அடையாளங்கண்டாள். அது அவன்தான். சிறுநகரத்திலிருந்து படியேறி சென்னை வந்தவன். அம்மா உழைப்பில் படித்தவன், இலட்சங்களையே அப்போதுதான் அறுவடை செய்யத்தொடங்கியிருந்தான். ஒரே அலுவலகம், அலட்டிக்கொள்ளாத '90களின் குழந்தை முகம், முன்காதல் ஏதுமில்லை, பெண்களிடம் வழிவதுமில்லை. அவனைத் திருமணம் செய்வது சரியான முடிவு என உறுதிப்படுத்தக்கூட அவளுக்கு யாருமில்லை. முடிவெடுத்தாள். அவனிடம் சொல்லிவிட்டாள்.

*

“இங்கேயே இரு…”

வீட்டிற்குள் சென்றவள், வாளியும் வெளிநாட்டுக் கிருமிநாசினியும் கொண்டுவந்தாள். பையை வாளியில் வைக்கச்சொல்லிவிட்டு கையிலிருந்த கிருமிநாசினியை அவன்மேல் தெளித்தாள். பூச்சுக்கொல்லியில் மடியும் பூச்சைப்போல அவன்முகம் பாவனை செய்தது.

“இங்கேயே தூங்கிக்க?”

“ஹம்ம்.”

உள்நுழைந்தவன் முகப்பிலேயே படுத்துக்கொண்டான். ஏசி போட்டிருக்கும் இரண்டாம் அறையை அவளது தூக்கம் ஆக்கிரமித்தது.

*

மற்ற பெண்களைப் போலில்லை வள்ளி. சுய அறிவும் கனவும் சராசரி அளவுக்கும் அதிகமாயிருந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. ஒருவருக்கொருவர் புரிந்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபின், வழக்கமான மார்கழி இரவொன்றில்தான் இதே வீட்டுக்குள் முதல்முறை வந்தான். அரிதான நுண்கலைப்பொருட்கள், மென்காந்தள் நிறம்கொண்ட சுவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே குடிகொண்ட வீட்டில் கூடுதலாக அவன் மட்டுமே இருந்தான்.

கதைத்தான், கதைத்தாள், கதைத்தார்கள். வான்முகில்கள் வலசை போகும் வரை கதைத்தார்கள்.

“சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்யவா?” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம். ஒரு காபி குடிப்போமா? ஆர்டர் செய்ய வேண்டாம், நானே செஞ்சி தரேன்” என கிச்சனுக்குள் நுழைந்தான்.

ஆச்சரியமாக இருந்தது, அதிர்ச்சியாகவும் தான். அவ்வளவு பெரிய கிச்சனுக்குள் பாத்திரங்கள் ஏதுமில்லை; பண்டங்கள் ஏதுமில்லை. குடிப்பதற்கு ஆர்ஓ வாட்டர். பழங்கள் கெடாமலிருக்க ப்ரிட்ஜ்.

“ஹே! என்ன இது, உன் கிச்சன்ல ஒன்னுமே இல்ல?”

“கிச்சனே இருக்கக்கூடாதுங்கறது தான் கனவே. ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கும் சமைத்தலுக்கும் எவ்வளவு நேரம் எவ்வளவு செலவு செய்றாங்க தெரியுமா? கடந்த பல தலைமுறைகளா பெண்கள்னாலே சமைக்கணும்னு இருந்திருக்கு. புருசனுக்கு அவன் குடும்பத்துக்கு அப்புறம் புள்ளைங்களுக்கு… சாகுற வரைக்கும் அடுப்படிதான் பெண்களுக்கு. சரி, அறிவு வளர்ந்து சமூகத்தில் பெண்கள் வளர ஆரம்பிச்ச அப்புறமாவது மாறினிச்சா இல்லயே.. ஏன்? இன்னிக்குக்கூட பெண்களுக்குக்குனு தனி இதழ்கள் நடத்துற பத்திரிக்கைகள் இலவச இணைப்பா சமையல் குறிப்புகள் தானே கொடுக்கறாங்க? சமூக இயங்கியல்ல பெண்கள்னா சமைக்கணுங்கறது ஊறிப்போயிருக்கு. அத மாத்தனும்..!”

“ஹே! மதியம் ஆஃபிஸ்ல சாப்டுவ., அப்ப காலையில, இராத்திருக்கு?”

“ஜூஸ் காலைல, இராத்திருக்கு ஆர்டர் செஞ்சிடுவேன். இடையில தீணிக்குப் பதிலா பழங்கள்…”

“ஊப்ஸ்! நாளைக்கு நான் வீட்டுக்கு வந்தாலும் இதே கதிதானா?”

“கம்ப்பள் இல்ல!  ஆனால், நீயும் ஃபாளோ செய்தால் நல்லா இருக்கும். ஆண்கள் சமைக்கறதுலயும் உடன்பாடில்லை. பத்து நிமிசம் சாப்டறதுக்காக ஒரு மண்ணேரம் சமைப்பாங்களா., அந்த நேரத்தை எப்படி ப்ரடக்டிவிட்டியா பயன்படுத்தனும்னு யோசி. ஆயிரம் குடும்பம் ஒருமணிநேரம் செலவு செஞ்சு, ஒருவேளை உணவு செய்றாங்க. அதே உணவை மொத்தமா தயாரித்தால் ஆயிரம் குடும்பத்தின் ஒருமணிநேரம் அதாவது ஆயிரம் மணிநேரம் மிச்சம்தானே”

*

திருமணம் முடிந்த நாளோடு தேனிலவுக்குக் கண்டம் தாண்டினார்கள். மாதமொன்று கழிந்தது, இயல்பு வாழ்க்கையும் புலர்ந்தது. திருமணமான புதிதென்பதால் அவள் பேச்சுக்கே அவன் கட்டுப்பட்டான். உணவு ஆர்டர் செய்தே சாப்பிட்டார்கள். சில மாதங்களில், அம்மா கதிரறுத்தனுப்பிய ‘மாப்பிள்ளை’ச் சம்பா அரிசி மூட்டை 18ஆம் தளத்திற்கு வந்திருந்தது. ‘இதைச் சமைக்க வேண்டாம்! வீணாக்கவும் வேணாம் திருப்பி அனுப்பிடேன்’ என்றாள். அம்மாவின் உழைப்பினை-தன் நிலத்து அரிசியைத் திருப்பியனுப்ப விருப்பமில்லை அவனுக்கு. பயன்படாத ஒன்று வீட்டிலிருக்க பிடிக்கவில்லை அவளுக்கு. முரண் தொடங்கியது; மூப்படைந்தது; முற்றியது. மணமுறிவிற்கே வழிகோலியது. மணமுறிவுக்கு முன்பே மனம்முறிந்தது. வக்கீல் நோட்டீஸ் வருமுன்னரே வீட்டைவிட்டு வெளியேறி பழையவிடுதிக்கே சென்றான்.

*

“ஹேய்! ஏந்திரி…. எவ்வளோ நேரம் தூங்குவ”

“என்ன?” எனும் பாவனையில் அவனிரு புருவங்களும் விண்நோக்கின.

“பசிக்கலையா? மணியப் பாரு”

அவனுக்கு ப்ரட்டும் ஜாமும் எடுத்துத் தந்தாள். பல்லிளிக்கும் சூரியன். பால்கனியிலிருந்து பூமியை நோக்கினால் ஆள் நடமாட்டமின்றி மரங்களும் கட்டடங்களுமே இருந்தன. பேருந்துகள் ஓடலை, பயணிக்க வகையில்லை. தங்குவதற்கு உரிமையில்லா வீட்டில் இருக்க வேணாம். முகம் கழுவி எப்படியேனும் ஊருக்குக் கிளம்பிட முடிவெடுத்தான்.

“நீ சாப்டியா?” எனும் கேள்வியை அவன் கேட்க மாட்டானா! என்றிருந்தது. கொரோனாவால் வொர்க் ப்ரம் ஹோம் அறிவிச்சப்பறம் இப்படித்தான். ஆளே மாறிட்டாள்! பறந்து கொண்டே இருப்பவளுக்கு இந்தக் கூடு மட்டுமே வானமானது. அதுவே தண்டனையும்.  ஊரடங்கால் சமைக்க யாரும் வரவில்லை, வைரஸ் பரவலால் யாரை நம்பியும் உணவு வாங்க முடியவில்லை. எடையிழந்த உடலின் கலையிழந்த முகத்தைப் பார்த்து,

“நீ?”

அத்திபூத்தாற்போல் சொல்லொன்று உதிர்த்தான். வான்மதகுடைத்துப் பயிர் வளர்க்கும் கார்முகிலாய் அழத் தொடங்கினாள். அவளைத் தொடக்கூடத் தயக்கம். “இரு வரேன்”. தண்ணீர் கொண்டுவர கிச்சன் சென்றான். அதிர்ச்சி, ஆச்சரியமும்தான். புதுப்பாத்திரங்கள் குடிபுகுந்திருந்தன. மின்னடுப்பும் உதயமாகி அலங்கோலமாக இருந்தது. சமையலுக்குதவும் சின்னச்சின்ன தானியங்கள், பருப்புகள் இருந்தன. ப்ரிட்ஜ் முழுதும் காய்கறிகள். அப்புறம் ஓரத்தில் அரிசி மூட்டை. எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், தண்ணீரெடுத்து வந்தான். தந்தான்.

“போறேன்” எனக் கிளம்பினான்.

“சமைச்சி கொடுத்துட்டுப் போறியா” என்றாள்.

அழுதான், அணைத்தான், சமைத்தான், சாப்பிட்டான், சாப்பிடவைத்தான். அவளும்தான். போறேன் என்றவன் ஒரு மண்டலம் அங்கேயே இருந்தான். வாட்சப் அழைப்பில் பாட்டி சமையல் கற்பித்தாள் அம்மா. உணவு அடிப்படையானது; சமையற்கூடமே கதியெனக் கிடப்பது அநாவசியமானது. அரிசி மூட்டையும் தீர்ந்தது. 48 நாட்கள் முடிந்து ஊரடங்கும் தளர்ந்தது. வள்ளிக்கோ மனம் நிறைந்து கலைகூடி எடை அதிகரித்தது. இருவர் இப்போது மூவராகியிருந்தனர். யாருக்குத் தெரியும் நால்வராகக்கூட இருக்கலாம். அம்மாவுக்கு மகிழ்ச்சி; அம்மாவாகப் போகிறவளுக்கும்தான்.

வாசல் வந்த வக்கீல் நோட்டீசை ஒன்றாகக் கிழித்தனர். மனமுறிவுக்கு வித்திட்ட சமையலறை சமையலே; அன்பையும் அன்யோன்யத்தையும் பெருக்கியது. இந்த எதார்த்தமே நம்பிக்கையானது.

அன்று வெளியான நாளேட்டின் தலைப்புச் செய்தி :

நாட்டிலிருந்து கொரோனா தொற்று முற்றிலும் ஒழிந்தது ; சமூக விலகல் இனி தேவையில்லை

டாட்

 






ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அவள் சண்டையிடப் பயணித்துக்கொண்டிருக்கிறாள்......



முதன்முறையாக அவனைச் சந்தித்த அந்தக் கணம் எப்படி இருந்தது என்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு பெண்ணாக ஆயிரம் ஆண்களைக் கடந்த எனக்கு, ஒரு ஆணாக என்னைக் கடக்க இயலாதிருந்த அவனைக் கண்டுகொண்டிருக்க மாட்டேன் அன்று.

உலகில் நாம் நினைவில் கொள்ளமுடியாத இரண்டு தருணங்கள் உண்டு. பிறப்பின் முதல் அழுகை, இறப்பின் கடைசி சிரிப்பு. நம் வாழ்வில் சந்திக்கின்ற முதல் மற்றும் இறுதி தருணங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாததற்குக் காரணம் உண்டு.

இந்த உலகில் பிறந்த முதல் நிமிடம், நினைவிற்கொள்ளும் ஆற்றல் உயிரிடம் இருக்காது. இந்த உலகை விட்டுப் பிரியும் அந்த நிமிடம் நினைவிற்கொள்ளும் ஆற்றல் இருப்பினும் உயிர் இருக்காது. 

இந்தப் பேருந்து வாழ்க்கையில்தான்  எத்தனை எத்தனை மனிதர்களை எத்தனை எத்தனை முறை எத்தனை எத்தனை இடங்களில் சந்தித்திருக்கிறேன். அத்தனை பேருக்கும் நான் யாரோ ஒருவராகவே கடந்துபோய் இருக்கிறேன். 

பக்கத்து இருக்கை பேருந்து பயணி போல கடந்து போகும் மனிதர்களில் ஒருவராகவே அவன் அன்றிருந்தான். ஓரிரு முறை நான் செல்லும் அதே பேருந்தில் அவன் பயணித்ததைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் பெயர் கேட்டான், ஒரு நாள் படிப்பு கேட்டான், ஒரு நாள் அலைபேசி எண்ணையே கேட்டுவிட்டான், ஒவ்வொரு முறையும் கேட்பதற்குக் கூச்சப்பட்டிருக்கான் என நினைத்துக்கொண்டு, ஏனென்று கேட்காமல் கொடுத்துவிட்டேன் எண்ணை மட்டும்.

ஆதார் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் அரச சேவை போல, இவனுங்களுக்கு எண் கொடுத்தால்தான் பெண்களிடம் பேசுவதற்கு மனமே வருகிறது.

அவன் பேச நான் காத்துக் கொண்டிருக்கவில்லை.  அவன் பேசியதும் தான் காத்துக்கொண்டிருந்தேன். அவனது பொறுமையை சோதனையிடும் தராசாக நான் ஆன்லைனில் கழிக்கும் நேரங்கள் இருந்தன. அவன் கோபத்தின் உச்சிக்கு செல்லுமளவு அவனை ஒதுக்கியிருக்கிறேன்.

ஒருகட்டத்தில் வேறொரு பயணியின் எண் வாங்கி அங்கே பேசிக்கொண்டிருப்பானோ? என்றெல்லாம் தோன்றும். அப்படி வேறொருவரிடம் பேசும் ஒருவனிடம் நாம் நட்பு கொண்டாடி என்ன கிழிச்சிடப்போறோம் என்று விட்டுவிட்டேன்.

ஆனால், அவன் பேசியில் என்னைத் தவிர சில நரைவிழுந்த பெண்களின் எண்கள் இருந்தன என்பதை அவன் சேமித்து வைத்திருந்த பெயர்களால் பின்னாட்களில் அறிய முடிந்தது.

ஒருவேளை அந்தப் பழங்காலத்துப் பெயர்களெல்லாம் இளைய கன்னிகளுக்கு அவன்சூட்டிய புனைப்பெயர்களாக இருந்திருக்கலாமோ என நீங்கள் சந்தேகிக்கலாம். நீங்கள் அவன் மீது சந்தேகப்படுவதற்கு ஒரே காரணம் உண்டு. அது, நீங்கள் அவனுடன் பழகாதது தான்.

அவன் மீது எனக்குச் சந்தேகம் வந்ததில்லை. வந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லாத மனிதப் பிறவிதான் நானும். அவனுக்கு வாட்சப்பில் விடையளிக்காது போனாலும், அவனிடம் பேருந்தில் எப்போதாவது பேசுவது தொடர்ந்தது.

ஒருமுறை பர்சை வைத்துவிட்டுப் போன எனக்கு, பயணச்சீட்டு எடுக்கப் பணம் தந்தான் எனப்பொய் சொல்லமாட்டேன். அவனை சட்டையே செய்யாத எனது "பர்சு காணாமல் போயிடுச்சின்னு" பேருந்தையே நிறுத்தி எல்லாரையும்  அதோகதி ஆக்கிட்டான். பர்சை தொலைக்குமளவு கவனக்குறைவான நாகரீகமானவள் நானல்ல என்பதையும், வீட்டுலயே வச்சிட்டு வரும் நவநாகரீகமானவள் நானென்பதையும் அவன் அறிந்திருந்தான்.

அன்றைக்குக் கூட அவனுக்கு ஒரு ரிப்ளை பண்ணவில்லை! பாவம் அவன்!!! காத்துக்கொண்டே இருந்திருப்பான் போலும்!! பின்னாட்களில் தன் காத்திருப்பை சொல்லிச் சொல்லி வருத்தமடைவான். பஷீரின் காதல் கடிதத்தில் கேசவன் நாயர் குறிப்பிடும் பெண் போலவே அலைய விட்டிருக்கிறேனாம்.

என் பிறந்தநாளுக்கு அவன் கொடுத்த அந்த நாவலை இன்னும் நான் படிக்கவில்லை என கோவம் அவனுக்கு. இருக்காதா?? நான் தான் அன்பை அடையாளம் காணாத கொடுமைக்காரியாயிற்றே!!!

இந்தக் காலத்துப் பெண்களின் மனநிலையை அறிய முடியாத அந்த காலத்து ஆணாகவே அவனிருந்தான். ஆனால், அந்தக் காலத்து ஆணாகிய அவனது மனத்தை அறிந்துகொள்ளும் இந்தக் காலத்துப் பெண்ணாக நானிருந்தேன் என்பதால், நட்பு பாலைவனத்தில் மலர்ந்த பூவாகவே இருந்தது.

அவ்வப்போது, நானும் அவனும் சண்டை போட்டுக்கொள்வதுண்டு. அப்போதெல்லாம் தமிழகத்தில் தாமரை மலராது என்பதுபோல மீண்டும் எங்கள் நட்பு துளிர்க்காதென நினைப்போம், பின் பரஸ்பரம், சண்டையிடும் அன்றிலிருந்து எங்களின் இறப்பு வரையிலான ஒவ்வொரு சடங்கிற்கும் வாழ்த்து சொல்லி வசை பாடி நிறைவு செய்வோம்.

பத்துநாட்கள் அதிக பட்சம் பேசாதிருந்திருக்கிறோம். அதுவும் கூட அவனால்தான். திடீரென பிச்சைக்காரனைப் போல ஆன்லைனில் எல்லாவற்றையும் இழந்தவனாக, வாட்சப்பிற்கு விடுப்புகொடுத்து,  ஆஃப்லைன் சென்றிடுவான். அவன் வரும்வரை நான் காத்துக்கொண்டிருப்பதுண்டு. அவனிடம் பேச அல்ல! சண்டை இட. 

சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணிநேரங்கள், சில நாட்கள் என நீளும் சண்டைகளின் நிறைவில் அவனெழுதிய சமாதான உடன்படிக்கையில்  சிரிப்பு ஸ்மைலிக்கள் அனுப்பி நான் கையெழுத்திடுவேன். இது பொய், கையெழுத்திடும் அளவு அவன் சமாதானம் செய்வான். இது மெய்.


மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சண்டை போட்டிருக்கிறோம் நாங்கள்.  சண்டை என்பது சமாதானத்திற்கும் சமாதானம் என்பது சண்டைக்கும் அடித்தளமாக இருந்திருக்கிறது ஒவ்வொரு முறையும்.

நீங்கள் கூட பார்த்திருக்கலாமே! எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் என் டிபி அவனுடன் சண்டைபோடும் தருணங்களிலெல்லாம் ரிமூவ் செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை உங்கள் நண்பீக்களின் டிபி ரிமூவ் செய்யப்பட்டிருந்தால், அவள் சண்டைபோட்டிருக்கிறாள் என்றறிந்து கொள்ளுங்கள்.

சிரிப்பு தான் வருகிறது! ஆனால், முதல்முறை அவனை ப்ளாக் செய்தபோது, அவனைக் காட்டிலும் நான்தான் வருத்தமுற்றேன். கஷ்டப்பட்டேன். அழுதேன். ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை அவனை அன்ப்ளாக் (அன்பால் லாக்) செய்ய. 

அவனைப் பாவமாகவே பார்க்கிறேன் எப்போதும். அதான் அவனுடைய வெற்றியும் அதனால் கிடைத்த என் மகிழ்ச்சியும் கூட. 
என் எல்லாமறிந்த பின், அவன் இன்னும் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறான். இறந்தகாலத்தின் எல்லா நிகழ்வுகளையும் பேசித் தீர்த்துவிட்டோம். பேச ஏதுமில்லையென என் பிள்ளைக்குப் பெயர் வைப்பதும், என் பேத்திக்குத் திருமணம் நடத்துவதுமென நீளும் எங்களின் பேச்சு.

காலத்தின் அருமையை இழத்தலால்,  மீட்டுருவாக்க முடியாது, என்னுடைய அன்றாடத்தை, என் கனவுகளை, என் மனதின் அடி ஆழத்தில் இருக்கக்கூடிய நினைவுகளைச் சுமந்து சென்ற அவன் சிறகுகள் என் வானத்தில் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன.

அவனை ஏன் சந்தித்தேன், ஏன் பேசினேன், ஏன் சண்டையிட்டேன், என ஒவ்வொன்றையும் தூக்கம் வராத இரவுகளில் நினைப்பதுண்டு. என் ஒவ்வொரு இரவையும் அவன் துதி பாடி நிறைவு செய்வான். அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே நான் தூங்கிவிடுவதும், அவன் காலையில் உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நானெழுவதுமென முரணாகச் செல்கின்றன கடந்தகாலங்கள்.

ஒருநாள் இதுதான் தன்னுடைய இறுதிப்பயணம் எனச்சொல்லி இறங்கிவிட்டான். அவன் எதில் தான் உறுதியாயிருந்திருக்கிறான். இறுதி என்பதும் அவனுக்கொரு மறதி என இருந்துவிட்டேன்......

ஆனால், அவனை அதன்பின் நான் பேருந்தில் பார்ப்பதேயில்லை. வாட்சப்பில் அவனுடைய வரவிற்காக நான் காத்துக்கொண்டிருப்பதும் உண்டு. தன்னுடைய நேரமின்மையை அவன் சாரி எனும் ஒற்றைச் சொல்லில் சரிகட்டிவிடுவான். அதற்கு மேல் சண்டையிட்டால் அதைச்சமாதானம் செய்யவே நேரம் போய்விடுமென இப்போதெல்லாம் அவன் சண்டைக்குத் தூது அனுப்பினாலும், அதைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

அவன் பேசுவது குறைந்துவிட்டது. அவன் எங்கோ இருக்கிறானாம்.  ஆனால், அவனுடன் சண்டையிடுவதை நிறுத்தியதைப்போல, இன்னும் பேருந்தில் பயணம் செய்வதை நிறுத்தவில்லை நான். எதற்காக நான் நிறுத்தவேண்டும்?  

என்னுடைய பயணத்தை நான் தானே மேற்கொள்ள வேண்டும்! என் வாழ்க்கை வேருக்கு நான் நீரூற்றியாக வேண்டும்.

எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்கள்,

நான் சொன்ன அடையாளத்துடன் அவனை எங்காவது நீங்கள் பார்த்தால், அவனிடம் மறவாமல் சொல்லுங்கள்.....

அவள் சண்டையிட பயணித்துக்கொண்டிருக்கிறாள் என்று..!



--------------------------------
த.க.தமிழ் பாரதன்
புதுதில்லி
21.10.2018
https://www.facebook.com/butterbharathan

செவ்வாய், 23 ஜனவரி, 2018

ஆக்கங்கெட்ட கூவ......(கதை)

அன்கண்டிசனல் லவ் ஸ்டோரிஸ் (மெரீனா காதல்)
--------------------------------------------------------------------------------------
கதைஆக்கம் : Mari Muthu

கடந்த ஆண்டு மெரினாவில் இதேநாள் தான் மெர்சியை ஆதி  இறுதியாக சந்தித்தான். இல்லை இல்லை உண்மைக்காதலை உணர்த்தியவளை இயற்கைசூழலால் தொலைத்தான் என்பதுவே சரி. 

கடந்த ஆண்டு ஜன,17 மெரினாவில் மெல்ல மெல்ல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குரல்கள் மேலெழுந்தன. அப்போது சென்னையின் கடற்கரை சாலையில் ஆதி, தன் மார்க்கெட்டிங் வேலைக்காக பைக்கில் பறந்து கொண்டிருந்தான். ஆம். ஆதி, அடையாறில் பிரபல கம்பெனியில் மார்க்கெட்டிங் அஸிஸ்டன்ட்டாக பணிபுரிந்துகொண்டிருந்தான். சென்னையின் வாட்டி வதைக்கும் வெயிலிலும், நன்கு அயர்ன் செய்த ஃபார்மல் ட்ரெஸ்களை அணிந்துகொண்டு, விறைப்பாக பைக்கில் சுற்றும் ஒரு திருச்சிக்காரன்,ஆதி. என்ன அடிக்கடி பைக்கில் சுற்றும் போது, முதுகுதான் ஒரு சலவைக்கல் சைஸுக்கு வியர்த்து இருக்கும். 

அப்படி ஆதி பைக்கில் செல்கையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மணிக்கூண்டு கட்டடத்திற்கு எதிரில் ஜல்லிக்கட்டை உடனடியாக, நடத்தக்கோரி ஒருபெரும்பட்டாளம் கண்டனமுழக்கங்களை ஆஃபாயில் போடும் வெயிலில் எழுப்பிக்கொண்டிருந்தது. அதை கண்டும்காணாமல் வேலைநிமித்தமாக பாரிஸ் கார்னருக்கு விரைந்தான்,ஆதி. திரும்பிவருகையிலும் அந்த கூட்டம் போராடுவதைப்பார்த்து சற்று திகிலானான். என்ன நினைத்தானோ... ஆதி தெரியவில்லை, சடாரென்று  ஒரு அளவான கேனில் டீயும், சில கப்புகளும் வாங்கிக்கொண்டு, அந்த கூட்டத்திற்குள் சங்கமித்தான். ஆனால், அதை யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் தவித்தபோது...கூட்டத்தில் ஒரு கை அதை வாங்க எத்தனித்தது. அவள் தான் மெர்சி. 

”சார் கொடுங்க. இங்க...50 பேர் இருக்காங்க...நான் நிறைந்து தந்துடுதேன்”-என பொசுக்கென டீ கேனை வாங்கிக்கொண்டாள். மெர்சிக்குச்சொந்த ஊர் திருநெல்வேலி. தி.நகரில் உள்ள ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கவுன்டன்ட். இதேப்போல் போராட்டம் நடைபெற்ற அடுத்தநாளும்  மாலை நேரத்தில் டீ கேனோடு சென்றான், ஆதி. மீண்டும் அதைப்பெற்றாள், மெர்சி. இருவரும் சேர்ந்து போராட்டக்காரர்களுக்கு தங்கள் கைகளில் டீ ஊற்றிக்கொடுத்தனர். அதன்பின் நடந்த சில மணிநேர உரையாடலில் ஆதியிடம் மெர்சி கேட்டகேள்விகளுக்கு மட்டும் தான் பதில் வந்தது. அது ஆதி ரொம்ப சைலன்ட் பார்ட்டி என்பதை மெர்சிக்கு உணர்த்தியது. ஆனால், மெர்சி அவனுக்கு நேரெதிரானவள், கொஞ்சம் ஃபிராங், உற்றவர்களிடம் மட்டும். 

”சார்வாள்...மணல்ல...வந்து உட்கார்ந்து..கோஷம் போடுங்க”
“இல்ல...இந்த ட்ரெஸ்ஸப்போட்டுக்கிட்டு...எப்பிடி.. எனக்கு கொஞ்சம் கஷ்டம் “ என மெர்சியின் அழைப்பை மறுதலித்தான் ஆதி.
”சார் கெளரவம் பாக்கிங்கலோ.. இப்பிடி எதுக்கெடுத்தாலும் நம்ம மக்களோட பிரச்னைய தூர நின்னுப்பார்க்கிறது தான், நம்மள மத்தவங்க முன்னாடி கோட்டிக்காரங்களா காட்டுது , ”எனச்சொல்லிக்கொண்டே,சடாரென ஆதியின் கையைப்பிடித்து போராட்டத்தில் அமர்ந்தாள் மெர்சி.

ஓரிரு நாளில் மெர்சி ஆதியை ஒருமையில் விளிக்கப்பழகியிருந்தாள். ஆனால், ஆதி எப்போதுமே, ஒவ்வொரு வார்த்தையிலுமே ‘ங்க’ சேர்க்க தவறியதில்லை. அந்த அழகிய முரணை இருவருமே ரசித்தனர். போராட்டம் வளர, வளர இருவருக்குள்ளும் காதலும் வளர்ந்தது. சில நாள் நள்ளிரவில் கூட, போராட்டத்தை முடித்து தைரியமாக ஹாஸ்டல் சென்றாள்,மெர்சி. வழித்துணையாக ஆதியும் வருவான் என்ற துணிச்சலில். அப்படித்தான் ஆதியும் செய்தான்.

சரியாக கடந்தாண்டு இதே நாள் (ஜனவரி-22),மெரினா போராட்டக்களத்தில் மங்கிய மாலையில் வயிறுவலியில் தவித்துக்கொண்டிருந்தாள், மெர்சி. அவளது தவிப்பை உணர்ந்து அருகில் சென்றான் ஆதி.

“எல...பக்கத்து கடையில ஒரு நாப்கின் வாங்கித்தாடே. அப்படியே...அந்த டாய்லெட்டு ஃப்ரீயா இருந்தா...வந்து கூட்டிட்டு போடே” என்றாள் மெர்சி.
அந்த வார்த்தைகளுக்குப்பின்னால் இருக்கும் கனம், ஆதியின் மனதை ஏதோ செய்தது. அதன்பின் 15 நிமிடத்தில் கேட்டபொருளோடு மெர்சியைச் சந்தித்து,டாய்லெட்டுக்கு அழைத்துச்சென்றான்,ஆதி. சில நிமிடங்களில் டாய்லெட்டில் இருந்து திரும்பி வந்த மெர்சி “இப்பிடியே...என் லைஃப் ஃபுல்லா...வருவியே..டே”எனக்கேட்டு தழுதழுத்தாள்.
அப்போது ஏதோ பதற்றத்தில், ‘உங்க ஹாஸ்டல் வர, வர்றேன் ‘ என மண்டையை ஆட்டி வைத்தான் ஆதி.
”ஒண்ணும் புரியாத...ஆங்கங்கெட்டகூவ..கூவ” என முணுமுணுத்தாள் மெர்சி. அப்போது போராடிக்கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப்பெண் பிரவசவலியில் துடிக்க, அவளை அழைத்துக்கொண்டு வேகவேகமாக ஒரு சிலப்பெண்களுடன் மெர்சியும்  ஆட்டோவில் சென்றாள். தூரத்தில் சென்ற ஆட்டோவிலிருந்து தன்னை போராட்டத்தில் முதன்முதலில் ஏற்ற மெர்சியின் கை, ஆதிக்கு டாட்டா காட்டியது.

ஆதியும் கேசுவலாக மறுநாள் போன் செய்யலாம் என்று,விட்டுவிட்டான். மறுநாள் ஜனவரி-23 காலை மெரினாவில் போலீசார் நடத்திய தடியடி களேபரத்தில் ஆதியின் செல்போன் கூட்டத்தில் தொலைந்துபோனது. மெர்சியின் போன் நம்பர், அந்த மொபைலில் இருந்ததால், தொடர்பு அறுந்த சோகத்தில் விக்கிப்போனான், ஆதி. ஃபேஸ்புக்கில் தேடிப்பார்த்தான்.20 முறை தி.நகர் சென்று இருப்பான். 5 முறை திருநெல்வேலிக்குப் பஸ் ஏறியிருப்பான். ஆனால், ஏனோ மெர்சியை, ஓராண்டுகளாக ஆதி பார்க்கவில்லை. 

அந்த வலியுடன் இன்று(ஜன-22,2018) காலையே மெரினா சென்று, தான் மெர்சியுடன் சேர்ந்து நடந்த இறுதி நிமிடங்களை நினைத்துக்கொண்டான் ஆதி. அந்த அழகிய காதலுக்கு சாட்சியாய் மெரினாவும் சென்னைப்பல்கலைக்கழக மணிக்கூண்டு கட்டடமும் நின்றதை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டான், ஆதி. அருகில்  இருவரும் சேர்ந்து டீ குடித்த  கடையில் மீண்டும் டீ ஆர்டர் செய்தான், ஆதி. கண்ணீர் விட்டான். கரைந்து இருந்தான்.

அப்போது டீக்கடை எஃப்.எம்மில் இருந்து கெளதம் மேனனின் இயக்கத்தில் வெளியான “ கூவ..ஆக்கங்கெட்ட கூவ..”ஆல்பம் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

(உண்மைக் கதையைத் தழுவி எழுதப்பட்டது)
- ம.மாரிமுத்து
23.01.2018


பிகு : இணையத்தில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பிறகு, ஜனரஞ்சக எழுத்து நடையில் கதைகள் பெரும்பாலும் வருவதில்லை என்ற ஏக்கம் இருந்தது. அப்டேட் ஆகாமல் இருக்கும் கடந்த காலத் தலைமுறை எழுத்தாளர்களைக் காட்டிலும் ஆன்லைன் எழுத்துலகில் இளைய தலைமுறையின் எழுத்துகள் வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன. மனோ பாரதியின்  “Oye- Bye Friends” கதை தான் எனக்கு 2017இல் படித்ததில் மிகவும் பிடித்தது. அதற்குப் பின் 2018இல் மாரிமுத்துவின் இந்த “ஆக்கங்கெட்ட கூவ” கதை இரண்டாவது.  தொடர்ந்து மக்கள் நெடியோடு உங்கள் நொடிகள் சுழலட்டும்.

மாரி எழுத்தில் மும்மாரி பொழியட்டும். வாழ்த்துகள்.
- த.க.தமிழ் பாரதன் Tamil Bharathan