நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அவள் சண்டையிடப் பயணித்துக்கொண்டிருக்கிறாள்......



முதன்முறையாக அவனைச் சந்தித்த அந்தக் கணம் எப்படி இருந்தது என்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு பெண்ணாக ஆயிரம் ஆண்களைக் கடந்த எனக்கு, ஒரு ஆணாக என்னைக் கடக்க இயலாதிருந்த அவனைக் கண்டுகொண்டிருக்க மாட்டேன் அன்று.

உலகில் நாம் நினைவில் கொள்ளமுடியாத இரண்டு தருணங்கள் உண்டு. பிறப்பின் முதல் அழுகை, இறப்பின் கடைசி சிரிப்பு. நம் வாழ்வில் சந்திக்கின்ற முதல் மற்றும் இறுதி தருணங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாததற்குக் காரணம் உண்டு.

இந்த உலகில் பிறந்த முதல் நிமிடம், நினைவிற்கொள்ளும் ஆற்றல் உயிரிடம் இருக்காது. இந்த உலகை விட்டுப் பிரியும் அந்த நிமிடம் நினைவிற்கொள்ளும் ஆற்றல் இருப்பினும் உயிர் இருக்காது. 

இந்தப் பேருந்து வாழ்க்கையில்தான்  எத்தனை எத்தனை மனிதர்களை எத்தனை எத்தனை முறை எத்தனை எத்தனை இடங்களில் சந்தித்திருக்கிறேன். அத்தனை பேருக்கும் நான் யாரோ ஒருவராகவே கடந்துபோய் இருக்கிறேன். 

பக்கத்து இருக்கை பேருந்து பயணி போல கடந்து போகும் மனிதர்களில் ஒருவராகவே அவன் அன்றிருந்தான். ஓரிரு முறை நான் செல்லும் அதே பேருந்தில் அவன் பயணித்ததைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் பெயர் கேட்டான், ஒரு நாள் படிப்பு கேட்டான், ஒரு நாள் அலைபேசி எண்ணையே கேட்டுவிட்டான், ஒவ்வொரு முறையும் கேட்பதற்குக் கூச்சப்பட்டிருக்கான் என நினைத்துக்கொண்டு, ஏனென்று கேட்காமல் கொடுத்துவிட்டேன் எண்ணை மட்டும்.

ஆதார் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் அரச சேவை போல, இவனுங்களுக்கு எண் கொடுத்தால்தான் பெண்களிடம் பேசுவதற்கு மனமே வருகிறது.

அவன் பேச நான் காத்துக் கொண்டிருக்கவில்லை.  அவன் பேசியதும் தான் காத்துக்கொண்டிருந்தேன். அவனது பொறுமையை சோதனையிடும் தராசாக நான் ஆன்லைனில் கழிக்கும் நேரங்கள் இருந்தன. அவன் கோபத்தின் உச்சிக்கு செல்லுமளவு அவனை ஒதுக்கியிருக்கிறேன்.

ஒருகட்டத்தில் வேறொரு பயணியின் எண் வாங்கி அங்கே பேசிக்கொண்டிருப்பானோ? என்றெல்லாம் தோன்றும். அப்படி வேறொருவரிடம் பேசும் ஒருவனிடம் நாம் நட்பு கொண்டாடி என்ன கிழிச்சிடப்போறோம் என்று விட்டுவிட்டேன்.

ஆனால், அவன் பேசியில் என்னைத் தவிர சில நரைவிழுந்த பெண்களின் எண்கள் இருந்தன என்பதை அவன் சேமித்து வைத்திருந்த பெயர்களால் பின்னாட்களில் அறிய முடிந்தது.

ஒருவேளை அந்தப் பழங்காலத்துப் பெயர்களெல்லாம் இளைய கன்னிகளுக்கு அவன்சூட்டிய புனைப்பெயர்களாக இருந்திருக்கலாமோ என நீங்கள் சந்தேகிக்கலாம். நீங்கள் அவன் மீது சந்தேகப்படுவதற்கு ஒரே காரணம் உண்டு. அது, நீங்கள் அவனுடன் பழகாதது தான்.

அவன் மீது எனக்குச் சந்தேகம் வந்ததில்லை. வந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லாத மனிதப் பிறவிதான் நானும். அவனுக்கு வாட்சப்பில் விடையளிக்காது போனாலும், அவனிடம் பேருந்தில் எப்போதாவது பேசுவது தொடர்ந்தது.

ஒருமுறை பர்சை வைத்துவிட்டுப் போன எனக்கு, பயணச்சீட்டு எடுக்கப் பணம் தந்தான் எனப்பொய் சொல்லமாட்டேன். அவனை சட்டையே செய்யாத எனது "பர்சு காணாமல் போயிடுச்சின்னு" பேருந்தையே நிறுத்தி எல்லாரையும்  அதோகதி ஆக்கிட்டான். பர்சை தொலைக்குமளவு கவனக்குறைவான நாகரீகமானவள் நானல்ல என்பதையும், வீட்டுலயே வச்சிட்டு வரும் நவநாகரீகமானவள் நானென்பதையும் அவன் அறிந்திருந்தான்.

அன்றைக்குக் கூட அவனுக்கு ஒரு ரிப்ளை பண்ணவில்லை! பாவம் அவன்!!! காத்துக்கொண்டே இருந்திருப்பான் போலும்!! பின்னாட்களில் தன் காத்திருப்பை சொல்லிச் சொல்லி வருத்தமடைவான். பஷீரின் காதல் கடிதத்தில் கேசவன் நாயர் குறிப்பிடும் பெண் போலவே அலைய விட்டிருக்கிறேனாம்.

என் பிறந்தநாளுக்கு அவன் கொடுத்த அந்த நாவலை இன்னும் நான் படிக்கவில்லை என கோவம் அவனுக்கு. இருக்காதா?? நான் தான் அன்பை அடையாளம் காணாத கொடுமைக்காரியாயிற்றே!!!

இந்தக் காலத்துப் பெண்களின் மனநிலையை அறிய முடியாத அந்த காலத்து ஆணாகவே அவனிருந்தான். ஆனால், அந்தக் காலத்து ஆணாகிய அவனது மனத்தை அறிந்துகொள்ளும் இந்தக் காலத்துப் பெண்ணாக நானிருந்தேன் என்பதால், நட்பு பாலைவனத்தில் மலர்ந்த பூவாகவே இருந்தது.

அவ்வப்போது, நானும் அவனும் சண்டை போட்டுக்கொள்வதுண்டு. அப்போதெல்லாம் தமிழகத்தில் தாமரை மலராது என்பதுபோல மீண்டும் எங்கள் நட்பு துளிர்க்காதென நினைப்போம், பின் பரஸ்பரம், சண்டையிடும் அன்றிலிருந்து எங்களின் இறப்பு வரையிலான ஒவ்வொரு சடங்கிற்கும் வாழ்த்து சொல்லி வசை பாடி நிறைவு செய்வோம்.

பத்துநாட்கள் அதிக பட்சம் பேசாதிருந்திருக்கிறோம். அதுவும் கூட அவனால்தான். திடீரென பிச்சைக்காரனைப் போல ஆன்லைனில் எல்லாவற்றையும் இழந்தவனாக, வாட்சப்பிற்கு விடுப்புகொடுத்து,  ஆஃப்லைன் சென்றிடுவான். அவன் வரும்வரை நான் காத்துக்கொண்டிருப்பதுண்டு. அவனிடம் பேச அல்ல! சண்டை இட. 

சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணிநேரங்கள், சில நாட்கள் என நீளும் சண்டைகளின் நிறைவில் அவனெழுதிய சமாதான உடன்படிக்கையில்  சிரிப்பு ஸ்மைலிக்கள் அனுப்பி நான் கையெழுத்திடுவேன். இது பொய், கையெழுத்திடும் அளவு அவன் சமாதானம் செய்வான். இது மெய்.


மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சண்டை போட்டிருக்கிறோம் நாங்கள்.  சண்டை என்பது சமாதானத்திற்கும் சமாதானம் என்பது சண்டைக்கும் அடித்தளமாக இருந்திருக்கிறது ஒவ்வொரு முறையும்.

நீங்கள் கூட பார்த்திருக்கலாமே! எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் என் டிபி அவனுடன் சண்டைபோடும் தருணங்களிலெல்லாம் ரிமூவ் செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை உங்கள் நண்பீக்களின் டிபி ரிமூவ் செய்யப்பட்டிருந்தால், அவள் சண்டைபோட்டிருக்கிறாள் என்றறிந்து கொள்ளுங்கள்.

சிரிப்பு தான் வருகிறது! ஆனால், முதல்முறை அவனை ப்ளாக் செய்தபோது, அவனைக் காட்டிலும் நான்தான் வருத்தமுற்றேன். கஷ்டப்பட்டேன். அழுதேன். ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை அவனை அன்ப்ளாக் (அன்பால் லாக்) செய்ய. 

அவனைப் பாவமாகவே பார்க்கிறேன் எப்போதும். அதான் அவனுடைய வெற்றியும் அதனால் கிடைத்த என் மகிழ்ச்சியும் கூட. 
என் எல்லாமறிந்த பின், அவன் இன்னும் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறான். இறந்தகாலத்தின் எல்லா நிகழ்வுகளையும் பேசித் தீர்த்துவிட்டோம். பேச ஏதுமில்லையென என் பிள்ளைக்குப் பெயர் வைப்பதும், என் பேத்திக்குத் திருமணம் நடத்துவதுமென நீளும் எங்களின் பேச்சு.

காலத்தின் அருமையை இழத்தலால்,  மீட்டுருவாக்க முடியாது, என்னுடைய அன்றாடத்தை, என் கனவுகளை, என் மனதின் அடி ஆழத்தில் இருக்கக்கூடிய நினைவுகளைச் சுமந்து சென்ற அவன் சிறகுகள் என் வானத்தில் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன.

அவனை ஏன் சந்தித்தேன், ஏன் பேசினேன், ஏன் சண்டையிட்டேன், என ஒவ்வொன்றையும் தூக்கம் வராத இரவுகளில் நினைப்பதுண்டு. என் ஒவ்வொரு இரவையும் அவன் துதி பாடி நிறைவு செய்வான். அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே நான் தூங்கிவிடுவதும், அவன் காலையில் உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நானெழுவதுமென முரணாகச் செல்கின்றன கடந்தகாலங்கள்.

ஒருநாள் இதுதான் தன்னுடைய இறுதிப்பயணம் எனச்சொல்லி இறங்கிவிட்டான். அவன் எதில் தான் உறுதியாயிருந்திருக்கிறான். இறுதி என்பதும் அவனுக்கொரு மறதி என இருந்துவிட்டேன்......

ஆனால், அவனை அதன்பின் நான் பேருந்தில் பார்ப்பதேயில்லை. வாட்சப்பில் அவனுடைய வரவிற்காக நான் காத்துக்கொண்டிருப்பதும் உண்டு. தன்னுடைய நேரமின்மையை அவன் சாரி எனும் ஒற்றைச் சொல்லில் சரிகட்டிவிடுவான். அதற்கு மேல் சண்டையிட்டால் அதைச்சமாதானம் செய்யவே நேரம் போய்விடுமென இப்போதெல்லாம் அவன் சண்டைக்குத் தூது அனுப்பினாலும், அதைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

அவன் பேசுவது குறைந்துவிட்டது. அவன் எங்கோ இருக்கிறானாம்.  ஆனால், அவனுடன் சண்டையிடுவதை நிறுத்தியதைப்போல, இன்னும் பேருந்தில் பயணம் செய்வதை நிறுத்தவில்லை நான். எதற்காக நான் நிறுத்தவேண்டும்?  

என்னுடைய பயணத்தை நான் தானே மேற்கொள்ள வேண்டும்! என் வாழ்க்கை வேருக்கு நான் நீரூற்றியாக வேண்டும்.

எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்கள்,

நான் சொன்ன அடையாளத்துடன் அவனை எங்காவது நீங்கள் பார்த்தால், அவனிடம் மறவாமல் சொல்லுங்கள்.....

அவள் சண்டையிட பயணித்துக்கொண்டிருக்கிறாள் என்று..!



--------------------------------
த.க.தமிழ் பாரதன்
புதுதில்லி
21.10.2018
https://www.facebook.com/butterbharathan

15 கருத்துகள்:

  1. Idhu ponra payanagal anaivar vazhvilum veveru tharunagalilum varuvadundu .. arumai Bharathan👌

    பதிலளிநீக்கு
  2. மொழியாளுகை கட்டி இழுக்கும் வகையில் உள்ளது. இப்படியும் இளைஞர்கள் இருப்பார்களா இன்று.

    தங்கள் வேட்கைக்குப் பாராட்டு.

    பதிலளிநீக்கு
  3. அருமை அண்ணா..... சொற்களும் அதை சொல்லிய விதமும் அழகு👌👌👌👏👏

    பதிலளிநீக்கு
  4. உணர்வுகள் நிறைந்த வரிகள் ❤

    பதிலளிநீக்கு