நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Sunday, 13 January 2019

வளர்த்தெடுத்த சுபாஷ் காந்தி!


சார், ஒரே ஒரு முறை எனக்கொரு டீ வாங்கிக்கொடுத்துட்டு போங்க!
Rest in Peace Subash Gandhi 😞😔
நள்ளிரவு மூன்று மணியிருக்கும். முதல் நாள் எதிரி விட்ட சாபத்தில் பல நல்ல கனவுகள் அடுத்தடுத்து ஒளிபரப்பப்பட்ட மனத்தில் சற்றே இடைவெளி விட்டிருந்தேன். தண்ணீர் குடித்து கண்ணயரலாம் என நேரத்தைப் பார்க்கையில் செல்பேசி இணையம் இணைப்பிலேயே இருந்தது. குடித்தத் தண்ணீர் குடலிறங்குவதற்குள் செல்பேசியை இயக்கத் தொடங்கினேன்.
புலனத்தில் முக்கியத் தகவல்கள் ஏதேனும் வந்துள்ளனவா என நோக்குகையில் ஏதுமில்லை. ஒருநாள் நிலைப்பதிவை வெளியிருந்தே பார்க்கையில் தோழிகளின் முன்னிரவு பாடல்களும் தோழன்களின் காதல் தோல்விப் பாடல்களும் இடம்பெற்றிருந்தன. ஊடே இருவர் சுபாஷ்காந்தி அவர்களின் படத்தை வைத்திருந்தார்கள். ஆனால், அதைப் படிக்க மனம் வரவில்லை. படிக்கவும் வேண்டாம் எனத் தள்ளிப் போட்டு, இணையத்தை அணைத்து ரஜாய் இழுத்துப் போர்த்தி வராத் தூக்கத்தை வரவழைத்துக் கொண்டேன்.
காலை எட்டு இருக்கும். இப்போதும் இணையத்தை இணைக்க வில்லை. வேறு யாரேனும் சுபாஷ்காந்தியின் படத்தை வைத்திருந்தால் அதைப் பார்க்கும் மனதிடமற்று, அதிகாலையில் வைத்திருந்த அந்த இருவரின் பதிவை விரிவு செய்து பார்க்கையில், மனம் ஊகித்த செய்தி தான் சுபாஷ் காந்தி மரணித்திருக்கிறார். ஹ்ஹ்ஹ்ஹ்ம்.

சிறுபிள்ளையிலிருந்து திருவாரூரின் சமூக அடையாளங்களாகக் கருதிய மூவர் ஜிவி என்கிற ஜி. வரதராஜன் (சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற (2011) திருவாரூர் நகரமன்ற 4வது வார்டு உறுப்பினர்)., சுபாஷ் காந்தி (பாரதி மக்கள் மன்றத் தலைவர், சமூக செயல்பாட்டாளர்), இரெ. முத்துக்குமார் (மேனாள் அரிமா சங்கத் தலைவர்). இம்மூவரையும் ஒருவரை ஒருவர் பிரித்துப் பார்க்க முடியாத அளவினுக்கு பிணைப்புக் கொண்டிருந்த காலத்தில் தான் நான் இடைநிலைக் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அப்போது தான் அவர்களின் அறிமுகம். இப்போது வரை தொடர்ந்து வருகிறது.
திருவாரூரில் பிறை. அறிவழகன் https://bit.ly/2VPs8rG (குடிமக்கள் நுகர்வோர் மன்றம்), மழைநீர் வரதராஜன் (நீர் பொறியாளர்), கேசி https://bit.ly/2RrToOk (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) போன்ற பெருந்தலைகள் சமூகத்திற்கு தத்தம் அமைப்பு வழியே செய்து கொண்டிருந்த பெரும்பங்கின் அடுத்தத் தலைமுறையினர் தான் ஜீவியும் சுபாஷ் காந்தியும் முத்துக்குமாரும். இம்மூவரையும் தனிப்பட்ட எந்தவொரு அமைப்பின் சுவர்களுக்குள் அடக்கிவிட முடியாது.
மாணவர்களுக்கு ஏதேனும் பயிற்சி என்றால், நேரடியாகச் சென்று பயிற்சி அளிக்கும் கருத்தாளுமைகள் தான் இம்மூவரும். எல்லா ஆண்டும் நாட்டு நலப் பணித்திட்ட முகாம்களில் இம்மூவரின் தவறாத வருகை சுற்று வட்டாரத் திருவாரூர் மாணவர்களுக்குக் கருத்தாக்கத்தை நிச்சயம் உருவாக்கித் தந்திருக்கும். அதனாலே எல்லா ஆண்டுகளும் இவர்தம் வருகையை ஆசிரியர்கள் உற்றுநோக்குவர். இதுமட்டுமன்றி மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட இன்னபிற சமூகமாற்றத்திற்கான அமைப்புகளின் நிகழ்வுகளில் கருத்தாளர்களாக இம்மூவரையும் காண இயலும்.
திருவாரூர் எனும் பரந்துபட்ட சமூகவெளிக்குள் இயங்கும் அத்தனை பேருக்கும் இவர்கள் மூவரையும் தெரிந்திருக்கும். யாருக்கேனும் அப்படித் தெரிந்திருக்கவில்லையெனில், தொலைக்காட்சியிலோ, இணையத்திலோ, பேசியிலோ, தத்தம் துறையிலோ ஐக்கியமானவர்களாக இருப்பார்கள்.
சுபாஷ் காந்தி அவர்களின் மரணமென்பது வருத்தத்திற்குரிய பெரும் இழப்பிற்குரியது. இன்று செல்பேசியால் தகவல் பரிமாற்றம் மிக எளிதாகிப் போன காலத்தில் இயங்கும் வாட்சப்-பேஸ்புக் போன்ற இணையப்போராளி அல்ல அவர். தகவல் தொழில்நுட்பத்தின் எதற்கும் வாய்ப்பற்ற 20ஆம் நூற்றாண்டின் நிறைவுக் காலகட்டத்தில் பலதரப்பட்ட மக்களுக்குத் தேவையான கருத்தூக்கத்தை விதைத்துச் சென்ற போராளி தான் சுபாஷ்காந்தி.
மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய தன்னார்வலர். தன் வாழ்நாளில் அதிகப்படியான இரத்ததானம் செய்த வலிமையாளர். மக்களுடனான அணுக்கமான சிந்தனையைக் கடைபிடித்தவர். புதியன விரும்பி அறியும் இளையவர்.
ஒருமுறை அகில இந்திய வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சிக்காக பேச சென்றிருந்த பொழுது எதேச்சையாக ஜெயராமன் அவர்களுடைய நெல் மீட்டெடுப்புகளை பற்றி சொல்லும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு உதாரணமாக இருந்தவர் சுபாஷ் காந்தி. கடுமையாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது அதிலிருந்து இயற்கை நெல்வகைகளை உண்டு உடல்நலத்தை மீட்டெடுத்தார். கடுமையான சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு உடல்நலம் திரும்பிய பின்னர் சமூக இயக்கங்கள் தொடர்ந்து இயங்கினார்.
நம்ம ஊரு செய்தி இதழை நான் முத்துக்குமார், எஸ்எம்டி பாலாஜியோடு இணைந்து நடத்திய போது வழிகாட்டுநராக இருந்தவர் .முதல் முறையாக ஆரூரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் பகுதியைத் தொடங்கிய போது முதல் நபராக எங்களுக்குத் தெரிந்தவர் . அந்தச்செய்தி இதோ.
எப்போதும் "தமிழ்பரதன் தமிழ்பரதன்" என்றழைப்பார். ஏதேனும் முரணான கருத்துகள் தெரிவிக்க வேண்டுமெனில், ”இல்ல தமிழ்பரதன் இது இப்படி இருக்கும்.. நாம தான் இப்படி அணுகணும்” எனச்சொல்வதுண்டு. தன் கல்வி இல்வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக்கொடுப்பார். யாரைப் பற்றிய தொடர்புத் தகவலும் கையில் வைத்திருப்பார். சில வெளியூர் பயணங்கள் சென்றுவரும் போது இது உங்களுக்காகத் தான் வாங்கி வந்தேன் என்று சொல்லி புத்தகங்கள் கொடுப்பார்.
ஆவணப்படுத்துதலை காந்தி சாரிடமிருந்து தான் கத்துக்கிட்டேன். தன் அறிக்கையை முகநூலில் பதிவேற்றுவார். முக்கியச் செய்திகளை ஒளிப்படமாக்கி முகநூலில் பதிவார். பதிவு செய்தல் என்பதை மிக முதன்மையானதக் கொண்டவர். வயதில் சிறியவன் என்றாலும் என் கருத்துகளுக்கும் சம உரிமை கொடுத்துக் கொண்டாடியவர்.
தான் சந்தித்த மாணவர்களை சமூக சிந்தனைக்குரியவர்களாக மடைமாற்றி வளர்த்தெடுத்தவர். பல குடும்பங்களின் மறுமலர்ச்சிக்கான சிந்தனைப் போக்குகளை வழிவகுத்துக்கொடுத்தவர்.
திருமணம் செய்து கொள்ளவில்லை அவர். சமூகத்திற்காகப் பல தியாகங்கள் செய்தவர். அதிகம் பட்டப்படிப்பெல்லாம் படித்தது கூட இல்லை. ஆனால், எல்லா சமூக நிகழ்வுகளையும் கையிருப்பில் வைத்திருப்பார். எல்லாரும் எளிதில் அணுகும் வண்ணம். ஒரே கெட்ட பழக்கமென அவரே ஒப்புக்கொண்டது தேநீர் அருந்துவது தான். தவிர்க்க முடியாத ஒன்றாகப் போன பழக்கம் அது. சர்க்கரை நோய் எனத் தெரிந்தும் தேநீர் மீது தீராப்பற்று கொண்டிருந்ததே உடலுக்குகு கேடாகிப்போனது.
முன்பெல்லாம் ஜீவி கடையில் அவரைப் பார்ப்பதுண்டு. பிந்நாட்களில், ஆரூர் பக்கு கடையில் சுபாஷ் காந்தியைச் சந்திக்கச் செல்வேன். ஊருலகக்கதைகள் பேசி முடிக்கும் வாய்க்கு பக்கு அண்ணன் வாங்கித் தரும் தேநீர் பசியாற்றும். ஆரூர் பக்கு அவர்களுடைய வாழ்க்கையினை சுருங்கிய வடிவமாக நாற்றாங்கால் எனும் குறும்படமாக எடுக்க முனைந்த போது, அருகிருந்து நெறிப்படுத்தியவர். போதிய தொழில்நுட்ப உதவி இல்லாத காரணத்தால் தொழில்முறை குறும்படமாக அது உருப்பெறவில்லை. எனினும் அது திருவாரூர் அளவில் எடுத்த ஒரு முதன்மைக் குறும்படமாகவே இருக்குமென்பது அவர் எண்ணம். இன்று கூட ஆரூர் பக்கு தான் அழைத்து சேதி தெரியுமா என்று கேட்டார். அவரிடம் என்ன பதிலுரைப்பது எனவறியாது திக்கித் திணறி பேசி முடித்தேன்.

அரசியல், வர்த்தகம், விளம்பரம், ஆன்மீகம் இவை தவிர்த்திருக்கும் சமூகத்தின் விளிம்புகளை தன்னால் இயன்றவரை போராடி மீட்டிருந்தார். நாங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மடப்புரம் உயர்நிலைப்பள்ளியில் துளிர் இல்லம் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பள்ளியின் நிர்வாக உறுப்பினராக விளங்கிய அவரே அதற்கு முழுமுயற்சி மேற்கொண்டிருந்தார். 2017ஆம் ஆண்டு அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அதன் முதல்நாள் சுபாஷ்காந்தியின் உரையோடு அப்துல்கலாம்-யஷ்பால் துளிர் இல்லத்தை இப்னு அரபியோடு சேர்த்துத் தொடங்கி வைத்தோம்.,
தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் ஒன்றியத்தின் சார்பில் அறிவியல் கோளரங்கம் அல்லது வான்வழி அறிவியல் அறிதல் நிகழ்ச்சிக்காக பேசிக்கொண்டிருந்த போது, அதற்கான நிதித் தேவையை ஏற்படுத்தித் தருவதற்கான வாயில்களைக் காட்டினார். ஆனால், நான் தில்லி வந்துவிட்ட காரணத்தால் அவருடைய அவ்வழிகாட்டல் வரைவுத் திட்டம் முடித்த கையோடு அப்படியே ஏடுகளில் முடங்கிப் போய்விட்டது.
மகாத்மா காந்தியின் நினைவு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் மடப்புரம் பெருமாள் சன்னதி வீதியில் ஜனவரி 30ஆம் தேதி மாலை 05.17க்கு அரங்கேற்றுவார் சுபாஷ் காந்தி. பெரும்பாலான நிகழ்வுகள் அடையாளப்படுத்தலுக்காக நிகழ்த்தப்படும் போது, காந்தி மரணித்த அந்த நிமிடம் ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்நிகழ்வு முதன்மையானதாகும். உறுதிமொழியும் அதன்பின்னான மலரஞ்சலியும் வருகை தந்திருப்போரால் நிகழ்த்தப்படும். நிறைவில் இயற்கை உணவோடு காந்தியின் நினைவலைகளைத் தாங்கி முடிவுறும்.
திருவாரூரில் அரசியல் சாயமற்ற சமூகத்தின் பால் சிந்தனை கொண்ட அடுத்தத் தலைமுறையை வளர்த்தெடுத்ததில் இவர் பங்கு முதன்மையானது. தனது திருப்புமுனை காணட்டும் திருவாரூர் எனும்  நூலை திருவாரூர் சுடுகாட்டில் வெளியிட்டவர் .தன் வாழ்க்கைப் பயணத்தை வழிகாட்டும் வானவில் எனும் நூலாக 2016 ஜனவரி 30இல் வெளியிட்டார்.
கடைசியாக அவரைப் பார்த்தது 2018 டிசம்பர் 26., ராஜ்குமார் அவர்களின் அச்சகத்தில். 2019 ஜனவரி 30ஆம் நாள் நிகழவுள்ள மகாத்மா காந்தியின் நினைவு நாள் நிகழ்விற்கான அழைப்பிதழ் சரிபார்ப்புக்காக வந்திருந்தார். முதல் நாள் கீழவெண்மணியில் நடந்த நிகழ்வுகள் பற்றியெல்லாம் கேட்டறிந்தார். கொஞ்சம் பேச்சு. கொஞ்சம் விசாரிப்பு. தில்லி வாழ்க்கைப் பற்றிய விசாரிப்புகளையும் தன் தில்லிப் பயணத்தின் அனுபவங்களின் ஊடே கேட்டறிந்தார். பேசி முடித்த பின், 'வாங்களேன் டீ சாப்டு போலாம்' என்றார். இல்லை வேணாம் என்ற போது, சரி நான் புறப்படுறேன் எனப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் இன்று.
சார், ஒரே ஒரு முறை எனக்கொரு டீ வாங்கிக்கொடுத்துட்டு போங்க!
-த.க.தமிழ்பாரதன்
புதுதில்லி
13.01.2018
https://bit.ly/2SQ3OUP

Saturday, 5 January 2019

The expects was held an unexpected in 2018!

எதிர்பார்த்தது எதிர்பார்க்காதபடி நடந்த 2018 !
The expects was held an unexpected in 2018.!!

யோசிக்க யாசிக்க நேசிக்க வாய்ப்பிருந்தும் அதை நடைமுறைப்பபடுத்தத் முடியாதளவினுக்கு முடிந்துபோன ஓராண்டு!

ஒவ்வொரு இரவும் எங்கு விடியப் போகிறது! எப்படி விடியப் போகிறது எனத் தெரியாத மாலைப்பொழுதுகளே அதிகம் புலர்ந்தன.

திடீர்ப் பயணம், திரும்பத் திரும்பப் பயணம், வெட்டிப் பயணம், வெற்றிக்கான பயணம் என வருடத்தின் பெரும்பாலான நாட்கள் பயணத்திலேயே கரைந்தது மகிழ்ச்சி!

விருதோடு தொடங்கிய ஆண்டு இது.  பேச்சில் வென்றமைக்காக "தமிழ்த்தாத்தா உவேசா" விருது தொடங்கி வைத்திருந்தார் எம்.பி திருச்சி சிவா.


புதுதில்லி குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொள்ள பல முயற்சிகள் எடுத்தும், பல்கலைக்கழகத்தை விட்டே அம்முயற்சிகள் தாண்டவில்லை. வேண்டுமெனில் சென்னை கோட்டை அணிவகுப்பில் கலந்துகொள்ள வந்த வாய்ப்பையும் வாசலோடு பேசி வழியனுப்பிட்டேன்.

பொங்கல்  முடிந்த 14 நாட்களுக்குப் பின் ஜன. 29 இல் தமிழ்நாடு மத்திய பல்கலை. யில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது விசித்திரமான ஒன்று!   எல்லாரையும் ஆவலில்லாது எதிர்பார்த்த தென்றல் ஆர்மியின் நிகழ்ச்சி அரங்கேறியது அன்று! மற்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரிகர்சல் பார்க்கப்பட்டபோது, On stage performance ஆக நாங்கள் தருகிறோம் எனச் சொல்லி ரிகர்சலைத் தவிர்த்துவிட்டோம்.  அப்போது வரை நானும் தீபக்கும் என்ன செய்யப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது, ஏன் எங்களுக்குக் கூடத் தெரியாது! ஆனால், பெரும்பாலோனோரின் வாடிக்கையற்ற வாழ்த்துகளைப் பெற்றுத் தந்த தென்றல் ஆர்மியின் Performance அது! அன்றைய எல்லா நிகழ்ச்சிகளையும் ஒளிப்பதிவு செய்து யூடியூப் தளத்தில் பதிவேற்றிய ஸ்டெர்லின் சார், அந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவே செய்யவில்லை. ஏனென்று, கேட்டமைக்கு பதிவு செய்வதை மறந்து ரசித்துக் கேட்டதாகச் சொன்னது இன்னும் நினைவுள்ளது!

பிப். 14 காதலர் தினம் வழக்கம்போல் மொக்கைக் கவிதைகள் எழுதிக் வெற்றிகரமாக கொண்டாடி முடிக்கப்பட்டதும் மகிழ்ச்சிக்குரியது! (சிங்கிள் பரிதாபங்கள்)

2017 திசம்பர் இறுதியில் எழுதிய ஜேஎன்யு நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 19இல் நேர்காணல் நடைபெற்றது.  நேர்காணல் ஜேஎன்யு வளாகத்திலேயே நடைபெற்றது! செய்யப்போகும் (மாதிரி) ஆய்வுச்சுருக்கமாக "ஒப்பிலக்கிய நோக்கில்  தாவோதேஜிங் - திருக்குறள்" சமர்ப்பித்திருந்தேன். ஆங்கிலத்தில் இயற்பியல் குறித்தெல்லாம் வினவினார் பேராசிரியர். பாரதிதாசன் பல்கலை.யில் யுஜி தேர்ச்சியுற்றவனுக்கு அக்கேள்விகள் மிகப்பெரிய சவாலாக இல்லை. ஆங்கிலத்திலும் பதிலளித்துப் பின், தமிழிலும் பதிலளித்தேன். மற்றொரு பேராசிரியரோ கொண்டு சென்ற சில சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு நீங்கள் ஆய்வு செய்ய வந்தவரைப் போலல்லவே. யுபிஎஸ்ஸி க்கு படிக்க வந்தவராகத்தானே தெரிகிறது என்றார், (நல்ல வேளை வாங்கிய எல்லாவற்றையும் எடுத்துச் செல்லவில்லை) அன்றைய நாளில் அதிகபட்ச கேள்விகளுக்கு பதில்சொல்லி 22+ நிமிடங்களுக்குப் பின் நேர்காணல் நிறைவடைந்தது!

மார்ச்20 தமிழ்நாடு மத்திய பல்கலை. கலைவிழா நடைபெற்றது! புதுதில்லியில் இரவு பத்து மணிக்கு கிளம்பி காலை மத்தியப் பல்கலைக்கழகம் வந்ததெல்லாம் கடந்தகால கனவுகளின் நனவு! (திருவிக வில் படித்தபோது, தினமும் கமலநாதனுடன் மிதிவண்டியில் செல்லும் போது, இப்போது நடக்கும் நடக்கப்போகிற, நடக்கவே முடியாத, நடந்திடவே கூடாத பலவற்றைப் பேசுவோம்! அப்படி ஒன்று தான், காலை திருவாரூரில் கிளம்பி மாலை தில்லி சென்று மறுநாள் திருவாரூர் வரவேண்டும் என்பதெல்லாம்)

சரி, கதைக்கு வருவோம்... அன்றைக்கு தென்றல் ஆர்மி சார்பில் அரங்கேறிய நிகழ்வுக்கும் ரிகர்சல் செய்துகாட்டவில்லை! மேடையில் நானும் தீபக்கும் தோன்றும் முன்னரே #தென்றல்ஆர்மி பெயர் கேட்டதும் கைதட்டல்களும் அதைத்தாண்டிய கழுத்திலிருந்து எழுந்த ஓசைகளும் அரங்கை நிறைத்தன. ஒரு ரசிகனுக்கும் அவன்தன் தலைவனுக்கும் இடையேயான அரசியல் குறித்த பார்வையை பகடியாகக் கொண்டுவர முனைந்தோம். அது கமெர்சியலாக கைதட்டல்களைப் பெறவில்லை என்றாலும், பலரது வாழ்த்துகளையும் எதிர்ப்புகளையும் எதிர்வினைகளையும் பெற்றுத்தந்தது!

அதிராம்பட்டிணம் காதிர் முகைய்தீன் கல்லூரிப் பேச்சுப்போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாம் முறை முதற்பரிசு முகிழ்ந்தெடுத்தேன்! பொதுவாக மூன்றுமுறை பெற்றால் சுழற்கோப்பை வென்றவருக்கே! ஆனால், கல்வி நிலையம் மாறியதைக் காரணம் சொல்லி சுழற்கோப்பையை உரிமையாக்கிக்கொள்ள அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

பின் வந்த பருவத்தேர்வுகள் நீ முதுகலை முடித்துவிட்டாய்! என மூட்டைகட்டி வெளியேறச்சொன்னது. சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்வது கடினமாகவே இருந்தது.  முதுகலையில் "எழுத்து, சொல்லிலக்கண அடிப்படையில் ஐங்குறுநூறு நெய்தல் திணை பாடல்கள் (175-200)" எனும் தலைப்பில் பேரா.ப.கு நெறியாள்கையில் ஆய்வு செய்தேன். அதற்கு Swati Patnaik Skyviewஇல் நெய்தல் நிலத்தை வரைந்து கொடுத்து வலுசேர்த்தார்.

அதற்குப்பின் திருப்பத்தூரில் நாடக ஆசான் கி.பார்த்திபராஜா (Parthiba Raja)  அவர்களது நாடகப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க வாய்ப்புகிட்டியது! இதுவரையான நினைவுமறதியற்ற வாழ்நாளில் அத்தனை மகிழ்ச்சியான வாய்திறந்த சிரிப்பை அனுபவித்தது அங்கு தான். 11 நாட்கள் யாரென்று தெரியாத நூறு நபர்களுடன் ஆளுமை வளர்ச்சிக்கான நாடகப்பயிற்சி பெற்றது வாழ்வின் மகிழ்ச்சிகரமான பக்கங்களில் முன்னிலை வகிக்கும். நாடகப்பயிற்சியை விட வாழ்க்கைப் பயிற்சியை மேற்கொண்டது கூட அங்கே தான்.

ஜூன் ஜூலை யில் பெரும்பாலும் அடுத்து என்ன செய்யப்போறீங்க என்ற கேள்விகள் காதைத் துளைத்தன! காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன் என கேள்விகளனைத்திற்கும் ஒற்றைப் பதிலால் விடையெழுதினேன்!

ஜூலை மாதம் மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இளந்தமிழர் இலக்கியப்பட்டறை இதுவரை கண்டதிலேயே மகிழ்ச்சியாக உணர்ந்த பட்டறை. பயிற்சி அதிகம் பெறவில்லை என்றாலும் ஏழு நாட்கள் எங்களை தமிழின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாட்கள் அவை. அப்படியான பட்டறை அது. உலகத்தமிழ்ச்சங்கத்தில் உட்கார்ந்திருந்த போது தான், ஜேஎன்யுவில் ஒருங்கிணைந்த முனைவர் படத்திற்கு தேர்வான செய்தி கிடைத்தது. அன்றிரவு எல்லார்க்கும் உணவோடு மிட்டாய் பரிமாறினேன்.

ஜூலை இறுதியில் ஜேஎன்யுவில் சேர புதுதில்லிக்கு ஒற்றைப் பெட்டியோடு புறப்பட்டு வந்தால்,   பல்கலைக்கழக வகுப்புகள் தொடங்கப்போகிறது என்று அறிவிப்பு வந்திட்டது! முப்பது நாட்கள் ஈருடையுடனே தில்லி வாழ்க்கை அணுக்கமாகத் தொடங்கியது. பின் ஆகஸ்ட் இறுதியில் 'யாரிடமும் சொல்லாமல் போய்விட்டான்' என்ற குறையை நிவர்த்தி செய்ய தமிழகம் வர நேர்ந்தது.

பின்னான மாதங்களில் ஜேஎன்யு கட்டிடங்களும், புதுதில்லி சாலைகளும்,  பூமிக்கடியிலான மெட்ரோ வழித் தடங்களும், என் மொழியறிவறியா மொழி பேசுபவர்களின் உணர்வுகளும் நனவிலி மனத்திற்கு நெருக்கமாகிப்போனது. நமக்கென யாருமற்ற வெளியில் எல்லாரும் நமக்காக இயங்குவதைக் காண நேர்ந்ததெல்லாம் அங்கு தான்.

மாணவ தேர்தலும் அவர்களின் கருத்தியல் விடயங்களும், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் உரைகளும் ஜேஎன்யுவின் கட்டிடங்களுக்குக் கூட உரமூட்டுபவை. இந்தி தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அவ்வப்போது தோன்றுவது உண்டு இதனால் மட்டுமே!

யாருமற்ற சாலைகளில் பனியைப் போர்த்திக்கொண்டதும், சுவையான ஒரு குல்ஃபி சாப்பிட 28 கி.மீ பயணித்ததெல்லாம் கூகுளால் சாத்தியமானது! தில்லியின் நெருக்கடியான போக்குவரத்தை இலகுவாகக் கடப்பதெல்லாம் இப்போது சாதாரணமாகிப்போனது.

தேர்வு முடிந்த மூன்று மாதங்களில் தமிழ்நாடு மத்திய பல்கலை. பட்டமளிப்புக்குத் தயாராயிற்று. செப். 28 காலை பட்டமளிப்பு வளாகத்திற்கு வர செப். 27 மாலை வரை தில்லியில் இருந்ததெல்லாம் கால நெருக்கடியே. பட்டம் வாங்க வந்தபோது தான் சியுடிஎன் வாழ்க்கையை தவறவிட்டுட்டோமோ எனத் தோன்றியது. அப்படி ஒரு தருணம்.  எழிலான அவ்வேளையோடு எனக்கும் சியுடிஎன்க்குமான தொடர்பறுந்ததாக நினைத்த வேளையில், மீண்டும் 'பேராசிரியாக இங்கே வாங்க' என ஆசிவழங்கிய பிறதுறை பேராசிரியர்களுக்கு பெரிய வணக்கம் வைத்திட்டு தில்லி திரும்பலானேம்.

நவம்பரில் தீபாவளிக்கென விடுப்பெடுத்து தமிழகம் வர நேர்ந்தது, ஆனால் அது தாத்தாவிற்கான விடுப்பென்பது பாட்டியே அறிவார். ஏழுநாள் உடனிருந்து கவனித்ததில் திரும்ப செல்வதற்காக எடுத்து வைத்திருந்த ரிடர்ன் டிக்கெட்டை ரத்து செய்ய வைத்துவிட்டார் தாத்தா. அவர்தம் இறப்பையடுத்து தாத்தா வாழ்க்கையின் ஆதார சுருதியான வலுவான உடலை தானம் செய்து தில்லி திரும்ப நேர்ந்தது.

இரண்டே இரண்டு தேர்வுகள் இதற்காக நாலாயிரம் கி.மீ பயணிக்க நேர்ந்தது.  (தமிழகத்தில் உண்டியலேந்திய கடந்தகாலத்தின் நீட்சியில்) தமிழகத்தைப் பாதித்த கஜா புயல் நிவாரண நிதிக்கு தில்லியின் சந்திகளில் கையேந்தி நின்ற நாட்கள் அவை. பின், குளிர்பனி துளிர்விடும் முன்னே இந்திய நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்திட்டேம்.

நெல்.ஜெயராமன், பிரபஞ்சன் எனப் பரிச்சயமான ஆளுமைகள் நம்மைவிட்டுச் சென்ற திசம்பர் 2018இல். NTA இன் கன்னி (சோதனை) முயற்சியான இணைய வழி தேர்வெழுதி புத்தாண்டைத் துவக்கி தாயகத்திலிருந்து விடைபெறும் நேரத்தில் எழுதிக்கொண்டிருப்பது இது.

2018இல் புதிய நண்பர்கள் அதிகம் அறிமுகமாகவில்லை. எனினும் அறிமுகமான நண்பர்களே புதிய கோணத்தில் பரிணமித்தார்கள்! அவர்களோடு தொடர்ந்து பயணிப்பதே பெரும்சவாலாக இருந்தது! இருக்கின்றது.

செய்த செயல்கள்களுக்கு சிலரது வெறுப்பையும் பலரது ஏற்பையும் பரவலான வாழ்த்தையும் பலமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தது! வழக்கமாக வைக்கும் விமர்சனங்களும், வழக்கத்திற்கு மாறான அறிவுரைகளும் ஏற்றுக்கொண்ட பின்னும் இயங்குவது பழகிபப்போனது!

கடந்த ஆண்டில் அதிகமானோரால் படிக்கப்பட்டதும், பாராட்டப்பட்டதும், பாவப்பட்டதும், பயணப்பட்டதுமான படைப்பு "அவள் சண்டையிடப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்!"(http://tamilbharathan.blogspot.com/2018/10/blog-post.html?m=1) எனும் படைப்பு புதிய பாதையை வலைப்பூவில் தொடங்கி வைத்தது!

2018இல் ஆண்டு அடுத்து என்ன? எனும் கேள்விக்கடுத்து அதிகம் பலரும் வினவியது அவள் யார்? என்பதே. விடையை என்னிடம் தேடிய வினாவாளர்களைப் போலவே எனக்கும் அவள் ஒரு கேள்வியே!.  ஆயினும் என் எல்லாக் கேள்விக்குமான விடை அவள்! 😍  அவளைக் கண்டுணரவில்லை. எந்த நிலவறைக்குள் எங்கு ஒளிந்திருக்கிறாள் என்பதெல்லாம் எனக்கும் தெரியாது! ஆனால், கண்ணாம்மாவைப் போல ஒரு கற்பனைப் பாத்திரமாயிரக் கூடாதென்பதிலே ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு.😔

சிலநேரம், தமிழகத்திலே இருந்திருக்கலாம் எனத்தோன்றும், அப்படித்தோன்றும் போதெல்லாம் அதைத்தகர்த்தெறியும் வண்ணம் சில சம்பவங்கள் நடந்தேறி ஆறுதல் அளிக்கும்.

மதிக்கவில்லை, Reply சரியாக செய்வதில்லை, திமிர், சீன், ஓவரா பண்றான் என்ற பெரும்பாலானவர்கள் முன்வைத்த வசையெல்லாம் என் செவிப்புலனாகாத தொலைவில் நிகழ்ந்தவை. சமமற்ற காலச்சூழலால் அப்படி நடந்திருக்கலாம், எனினும் அவர்களின் மனதில் இப்படியான வசைக்குரியவனாகவே இருந்துவிடுவதே உத்தமம்.   2018இல் ப்ளாக் செய்யப்பட்ட நண்(ம்)பர்களுண்டு.  சில நேரம் ப்ளாக் செய்துவிடுவேன் எனவும் மிரட்டுமளவு நட்பு பாராட்டியதெல்லாம் இந்த ஆண்டில் தான்.

பிறர் சொல்லாததை அறிவுரையின் பேரில் நெருங்கிப் பழகி எதிரியாய்ப் போன தோழி ஒருத்தி 'இப்படி மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளவேண்டாம்' என்று சொல்லியிருந்தார்.

அப்படி, கடுஞ்சொற்களால் மனதைக் காயப்படுத்தி இருந்தால் அதை டிஞ்சர் வைத்து சரி செய்யுமளவு தற்சமயம் இனிய சொற்கள் கையிருப்புள்ளன. வாய்ப்புள்ள தோழ தோழியர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம், அவர்தம் நேர்மறை எண்ணங்கள் வாழ்வை நிரப்ப 2019 வழிகோலட்டுமாக!

கலந்துகொள்ளும் போட்டிகள், கைகளில் தவழும் விருதுகள்-பரிசுகள், ஏறிப்பேசும் மேடைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆர்ப்பரிக்கும் அருவி, ஆறாகி ஓடத்தொடங்கியதைப் போன்ற உணர்வு, ஆனால், சிதறிய நீர்த்துளிகள் நிறைந்த ஆறு தன்னிடத்தில் அப்படியே நிற்கிறது! இனியாவது ஆற்றை துளி துளியாக நகர்த்தி நெடுந்தொலைவுக்கப்பால் உள்ள எனக்கே உரித்தான என் கடலில் நீக்கமறக் கலத்தல் வேண்டும்.

வாட்சப், முகநூல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள முனைந்து பலரது தொடர்பு எல்லைக்கு வெளியே உலவிக்கொண்டிருக்கிறேன் (மகிழ்ச்சியாக). நல்லது.

எதிர்பார்த்தது எதிர்பார்க்காத படி நடந்தது இந்த 2018இல்,.

எதிர்பார்க்காதது எதிர்பார்த்தபடி நடக்கவேண்டும் இந்த 2019இல்...

த.க.தமிழ்பாரதன்
(Tamil Bharathan)