நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

செறிவடையும் இந்தியா-ஆசியான் உறவுகளைக் கருத்துக்குவி தளத்தின் வாயிலாகப் புரிந்துகொள்ளல்

செறிவடையும் இந்தியா-ஆசியான் உறவுகளைக் கருத்துக்குவி தளத்தின் வாயிலாகப் புரிந்துகொள்ளல்

25.08.2020 ஆங்கிலக் கட்டுரை : http://airworldservice.org/english/archives/102619

(கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர் டிட்லி பாசு எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த..தமிழ் பாரதன்)

இந்தியாவின் ஆக்ட் ஈஸ்ட்கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் கண்ணோட்டத்தை மேம்படுத்துதல் தொடர்பான ஆசியான்-இந்தியா கருத்துக்குவி தளம் (ஏஐஎன்டிடி) ஆறாவது வட்டமேசை கூட்டம் கடந்த வாரம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த ஆண்டின் விவாதம் ஆசியான்-இந்தியா: கோவிட் பிந்தைய சகாப்தத்தில் கூட்டாட்சியை வலுப்படுத்துதல்என்பதில் கவனம் செலுத்தியது. ஏஐஎன்டிடி 2009ஆம் ஆண்டில் இந்தியாவால் கருத்தாக்கம் செய்யப்பட்டது. அறிவு இடைவெளியை நிவர்த்தி செய்வதன் மூலமும், ஒத்துழைப்புக்கான சாத்தியமான துறைகள் குறித்த கொள்கைப் பரிந்துரைகளை வழங்குவதன் மூலமும் ஆசியான்-இந்தியா மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் முனைவர் எஸ். ஜெய்சங்கர், துணை பிரதமரும் தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சருமான டான் பிரமுத்வினாய் மற்றும் ஆசியான் பொதுச்செயலாளர் டத்தோ லிம் ஜாக் ஹோய் ஆகியோர் இந்த ஆண்டு வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்றனர்.

நோய்த்தொற்று ஒருபுறம் சர்வதேச அரசியலில் ஆழ்ந்த போட்டியையும் மறுபுறம் பன்முகத்தன்மையும் வலியுறுத்தியுள்ளது என்று முனைவர் ஜெய்சங்கர் விளக்கினார். கோவிட்-19 உலக ஒழுங்கை எவ்வாறு வடிவமைக்கும் என்பது முதன்மைக் கேள்விகளில் ஒன்றாகும். இந்தியாவும் தென்கிழக்கு ஆசியாவும் உலகமயமாக்கலில் இருதரப்பு ஆர்வத்தைக் கொண்டுள்ளன. உலகளாவிய பொருளாதாரத்திற்கு கோவிட்-19 நோய்த்தொற்றால் முன்வைக்கப்பட்ட முன்னிகழ்ந்திராத சவால்களை வெளியுறவு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மதிப்பிடப்பட்ட இழப்பு 5.8-8.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6.5-9.7 விழுக்காடு வரை இருக்கலாம். இத்தகைய சவால் "கூட்டுத் தீர்வுகள்" என்று அழைக்கப்படுகிறது.

உலகப் பொருளாதாரத்தில் உள்ளார்ந்த அபாயங்கள், தொடர் பின்னடைவு மற்றும் பன்முகத்தன்மை தொடர்பானவற்றுக்கு கோவிட்-19 முக்கியத்துவம் அளித்துள்ளது. பொருளாதாரப் பாதுகாப்பு என்பது வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகும். முனைவர் ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், இச்சூழலில் உலகளாவிய விநியோகத் தொடரில் மூலோபாய சுயாட்சி என்ற கருத்து முக்கியமானது என்றும், பரந்த மறுசீரமைப்போடு சமமான உலகத்தை உருவாக்குவது அவசியம் என்றும் கூறினார். நலனை அபாயமாக்காமல் இருப்பதும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதும் முன்னுரிமையானவை. தலையிடாக்கொள்கை அல்லது பாதுகாப்புவாதத்தினைக் காத்துக்கோடல் தன்னம்பிக்கை இந்தியாவின் நோக்கம் அல்ல. ஆனால் "தன்னம்பிக்கை இந்தியா உலகிற்கு இன்னும் அதிகம் வழங்கவுள்ளது" என்பதை அது வலியுறுத்துகிறது. கோவிட்19க்குப் பிறகான உலகில் ஆசியானும் இந்தியாவும் சக்திவாய்ந்த பொருளாதார சக்திகளாக ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்.

துணை பிரதமரும் தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சருமான டான் பிரமுத்வினாய், ஆசியான்-இந்தியா மூலோபாய கூட்டுறவில் பகிர்வின் மதிப்பைஅடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட விநியோகத் தொடர், பிராந்திய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஒத்துழைப்பின் ஐந்து முக்கியத் துறைகளை அவர் பரிந்துரைத்தார்; மனித மூலதன வளர்ச்சி; பிராந்தியவாதம் மற்றும் துணை பிராந்திய ஒத்துழைப்பு, சான்றாக, அய்யேவடி-சோப்ராயா-மீகாங் பொருளாதார ஒத்துழைப்பு உத்தி (ஏசிஎம்இசிஎஸ்) மற்றும் மீகாங்-கங்கா ஒத்துழைப்பு (எம்ஜிசி); கடல் சூழல் மற்றும் பேரழிவு மேலாண்மை; வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முதலானவை.

ஏஐஎன்டிடி-இன் இந்த நிகழ்வு காணொளி வாயிலாக நிகழ்ந்தது என்றாலும், கடைசி ஐந்து வட்டமேசை கூட்டங்கள் புது தில்லி, வியஞ்சான், ஹனோய், கோலாலம்பூர் மற்றும் ஜகார்த்தாவில் நடத்தப்பட்டன. ஏஐஎன்டிடி-இன் இந்த நிகழ்வை இந்திய வெளியுறவு அமைச்சகம், தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகம், வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (ஆர்ஐஎஸ்), ஆசியான் ஆய்வு மையம் (ஏஎஸ்சி) மற்றும் சுலலாங்கொர்ன் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்தன. கலந்துரையாடலின் முக்கிய கருப்பொருள்கள் பின்வருமாறு: கோவிட்-19 சகாப்தத்தில் உலகளாவிய நிலப்பரப்பு ஒழுங்கு மாற்றம் மற்றும் ஆசியான்-இந்தியா உறவுகள்”; "வளர்ந்து வரும் மதிப்புத் தொடர்கள்: கோவிட்-19 சகாப்தத்தில் ஆசியான் மற்றும் இந்தியாவுக்கான வாய்ப்புகள்"; "நான்காவது தொழில்துறை புரட்சியில் (4ஐஆர்) ஆசியான்-இந்தியா கூட்டாண்மையைப் புதிய இயல்புடன் ஊக்குவித்தல்"; "இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம் (ஏஓஐபி) மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முயற்சி (ஐபிஓஐ)": "முழுமையாக்கல் மற்றும் ஒத்துழைப்பு; ஆசியான்-இந்தியா உறவுகளுக்கான முன்னோக்குவழி”.

இந்தியாவின் கிழக்கு சட்டக் கொள்கையின் முக்கியத் தூணாக தென்கிழக்கு ஆசியா உள்ளது. இலவச, திறந்த, உள்ளடக்கிய, விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-பசிபிக் அமைப்பைப் பெறுவதில் இருதரப்பு ஆர்வம் உள்ளது. இந்தியாவில் ஆசியான் மையநிலை மற்றும் இந்தோ-பசிபிக் தொடர்பான ஆசியானின் அணுகுமுறை போன்ற பொதுவான கொள்கைகளுடன் ஒன்றிணைவு உள்ளது மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, இயற்பியல் மற்றும் டிஜிட்டல் இணைப்பு, நீலப் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றை மேம்படுத்த இரு தரப்பினரும் அயராது உழைத்து வருகின்றனர். தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் மூலோபாய ஈடுபாடு வணிகம், இணைப்பு மற்றும் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. மேலும், ஆசியான்-இந்தியா மூலோபாய கூட்டாண்மையைப் புதிய உயரங்களுக்கு உயர்த்தும் நோக்கத்துடன் இந்தியா தொடர்ந்து ஆசியானில் முதலீடு செய்யும்.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகாடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

பயங்கரவாதிகள் மீதான பாகிஸ்தானின் புதிய தடை உண்மையா? கற்பனையா?

பயங்கரவாதிகள் மீதான பாகிஸ்தானின் புதிய தடை உண்மையா? கற்பனையா?

24.08.2020 ஆங்கிலக் கட்டுரை :  http://airworldservice.org/english/archives/102617

(அரசியல் உரையாளர் அசோக் ஹண்டூ எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த..தமிழ்பாரதன்)

கடந்த வாரம், 88 பயங்கரவாதிகள் மீது "ஃபர்தர்" நிதித் தடைகள் என்ற இரண்டு அறிவிப்புகளைப் பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டது. பயங்கரவாத அமைப்புகள், நிறுவனங்களின் பல முக்கியத் தலைவர்களுக்கு இந்த அறிவிப்புகள் தடை விதித்தன. இவர்களில் 2008 மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஜமாஅத் உத் தாவா தலைவர் ஹபீஸ் சயீத், இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ முகமது தலைவர் மசூத் அசார், 1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோரைக் கொன்ற இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம், தலிபான் தலைவர்கள் ஜலல்லுதீன் ஹக்கானி மற்றும் கலீல் அஹ்மத் ஹக்கானி ஆகியோரும் அடங்குவர். மேலும், தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான், லஷ்கர்-இ-ஜங்வி, ஹர்கத்-உல்-அன்சார் மற்றும் பல மோசமான அமைப்புகளின் உறுப்பினர்களும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளனர். இந்தத் தடை அறிவிப்புகள் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கும் அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் உதவும். மேலும், நிதி நிறுவனங்கள்மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கும் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கின்றன. இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி செய்யப்பட்டுள்ளன.

தாவூத் இப்ராஹிமின் பெயரை அவரது கராச்சி முகவரியுடன் பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம், பாகிஸ்தானில்தான் தாவூத் இப்ராஹிம் இருக்கிறார் என்பதைப் பாகிஸ்தான் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. பாகிஸ்தானிலுள்ள தாவூத் வசிப்பிடத்திற்கான ஆதாரங்களை இந்தியா அளித்தபோதிலும் கடந்த ஆண்டுவரை, தன்நாட்டில் தாவூத் இருப்பதை அந்நாடு மறுத்து வந்தது.

பாகிஸ்தானின் நடவடிக்கை பயங்கரவாத அச்சுறுத்தலைக் கையாள்வதில் ஒரு சாதகமான நடவடிக்கையாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில், அது அப்படி இல்லை.

பாரிஸை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு நிறுவனமான நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் (எஃப்..டி.எஃப்) கடும் நெருக்கடிக்கு பாகிஸ்தான் உள்ளாகியுள்ளது அனைவரும் அறிந்ததே; இது 2018இல் இருந்து அந்நாட்டினை க்ரேபட்டியலில் வைத்திருக்கிறது. பாகிஸ்தான் க்ரே பட்டியலிலிருந்து வெளியேற விரும்பினால், பயங்கரவாதிகளுக்கு எதிராகச் செயல்பட பாகிஸ்தானுக்கு எஃப்..டி.எஃப் காலக்கெடுவை நீட்டித்து வருகிறது. அல்லது, வட கொரியா மற்றும் ஈரானுடன் 'கறுப்புப்பட்டியலில்' சேர்க்கலாம். இவ்வாறு நடந்தால் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவதற்கான நாட்டின் திறனை மேலும் சிக்கலாக்கும். பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே குழப்பத்தில் இருப்பதால், இது பாகிஸ்தானால் தாங்க முடியாத ஒன்றாகும்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை புதிதானதல்ல. பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதில் பாகிஸ்தான் நேர்மையானது என்பதை உலகுக்குக் காட்டுவதற்காக மட்டுமே அரைமனதுடன் இருந்தது. ஹபீஸ் சயீத் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் போலியான காரணங்களால் கடந்த பத்தாண்டுகளில் மீண்டும் மீண்டும் விடுவிக்கப்பட்டார். தடைகளைத் தவிர்ப்பதற்காக கொடூரமான பயங்கரவாதிகள் தங்கள் அமைப்புகளின் பெயர்களை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நேர்மையின்மைக்குத் தெளிவான சான்றாகும். ஹபீஸ் சயீத், லீடி-ஐத் தொடங்கினார், இது ஜமாத் உத் டிஅவா ஆனது, பிறகு ஃபலாஹ்ஐ இன்சானியத் அறக்கட்டளை (எஃப்..எஃப்) என்றானது. இன்றுவரை தீங்கு விளைவிக்கும் செயல்களுடன் அது தொடர்கிறது. பயங்கரவாதத்தைக் கையாள்வதில் பாகிஸ்தான் நேர்மையாக இருந்திருந்தால், அது ஒசாமா பின்லேடனை ஐந்து ஆண்டுகளாக மறைத்திருக்காது. பின்லேடனைப் பிடிப்பதற்கான அமெரிக்க சிறப்புப் படையினரை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் மருத்துவர் அஃப்ரிடி இன்னும் பாகிஸ்தான் காவலில் உள்ளார். 2008 மும்பை தாக்குதலின் குற்றவாளிகளை பாகிஸ்தான் அதிகாரிகளால் பதிவு செய்வதற்கு, பாகிஸ்தானுக்கு இவ்வளவு காலம் எடுத்ததென்பது யாருடைய யூகம்.

தற்போதைய தடை உத்தரவில்கூட, பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின்கீழ் ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்வி மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகியோர் பதிவு செய்யப்படவில்லை. ஒரு சட்டரீதியான ஒழுங்குமுறை உத்தரவு மட்டுமே அவர்கள் மீது பாய்ந்துள்ளது. இருப்பினும், திடீர் கொள்கைமாற்றமாக, அறிவித்த சில மணி நேரங்களிலேயே அந்த பட்டியலில் இருந்து தாவூத்தின் பெயரை பாகிஸ்தான் நீக்கியது. இது உண்மையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தானின் நேர்மையின்மைக்கு சான்றாகும்.

இந்தப் பின்னணியில், பாகிஸ்தானின் சமீபத்திய நடவடிக்கை முழு நம்பிக்கைக்குரியதன்று. எஃப்..டி.எஃப் க்ரே பட்டியலிலிருந்து வெளியேறுவதே பாகிஸ்தானின் நிர்பந்தம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், பாகிஸ்தானின் ஆட்டத்தைப் புரிந்துகொண்ட எஃப்..டி.எஃப், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மீதமுள்ள 27கூறுகளில் 23ஐச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. உலகளாவிய அமைதியின் நலனுக்காக பயங்கரவாத அச்சுறுத்தல் வேரறுக்கப்பட வேண்டும் என்பதை உண்மையாக உணர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அந்த ஞானம் பாகிஸ்தானுக்கு இன்னும் வரவில்லை. பயங்கரவாதிகளைத் தனது அரச கொள்கையின் கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்துகிறது பாகிஸ்தான்.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf/

  

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

விடுதலைநாள் உரையில் தன்னம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர்

விடுதலைநாள் உரையில் தன்னம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர்

17.08.2020 ஆங்கிலக் கட்டுரை :  http://airworldservice.org/english/archives/102431

(அகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் பதம் சிங் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த..தமிழ் பாரதன்)

2020 ஆகஸ்ட் 15ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலிருந்து தேசத்திற்கு உரையாற்றினார். ​​நாம் விடுதலையின் 75ஆம் ஆண்டுக்குள் நுழைகிறோம். இது பெருஞ்சிறப்பு வாய்ந்த தருணமாகும். வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில்130 கோடி இந்தியர்களும் குறிப்பிடத்தக்க உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். நமது விடுதலையின் 75 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, ​​அந்த உறுதிமொழிகளின் பலனை நம்மால் கொண்டாட முடியும். 

நமது முன்னோர்கள் தீவிர அர்ப்பணிப்பு, மிகுந்த ஒருமைப்பாடு, உண்மையான தவம், துறவு மனநிலை, தியாக உணர்வுடன் இந்த விடுதலைக்காகப் போராடினார்கள்; அடிமைத்தனத்தின் நீண்ட இருண்டகாலங்களில், தாய்நாட்டிற்காக அவர்கள் உயிர்மாய்த்ததை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. விடுதலைப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தலைமையில், பெருந்திரள் இயக்கங்களால் உண்டான மாபெரும் தேசிய விழிப்புணர்வு புதிய உத்வேகத்தை அளித்தது. ஆதலின், இன்றைய விடுதலைநாளை இதுபோன்ற உற்சாகத்துடன் கொண்டாட முடிந்ததற்கு நாமெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.

உலகெங்கிலும் விடுதலைக்கான போரில், இந்தியா தனது கூட்டு ஒருமைப்பாட்டு வலிமையுடன், அதன் பிரகாசமான எதிர்காலத்திற்கான உறுதியையும், அதன் அர்ப்பணிப்பையும், உத்வேகத்தையும்கொண்டு தலை உயர்த்திச்சென்றது.

திரு. மோடி மேலும் கூறுகையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில், 130 கோடி இந்தியர்களும் தங்களைத் தன்னம்பிக்கை உடையவர்களாக உறுதியளித்துள்ளனர். ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இன்று தன்னம்பிக்கை பொதிந்துள்ளது. தன்னம்பிக்கை இந்தியாவின் (ஆத்மா நிர்பர் பாரத்”) அந்தக் கனவை நனவாக்குவதையும் நாம் காண்கிறோம். "தன்னம்பிக்கை இந்தியா" என்பது சொல் மட்டுமல்ல, இது நாட்டின் 130 கோடி மக்களுக்கு மந்திரமாக மாறியுள்ளது.

விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவிலிருந்து ஒரு படி தொலைவே உள்ளோம். இந்தியா போன்ற ஒரு நாடு சொந்தமாக நின்று, தன்னம்பிக்கை அடைவது அவசியமானதாகும். இந்தக் கனவை இந்தியா நிறைவேற்றும் என்று பிரதமர் தனது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இதற்குக் காரணம் நாட்டின் குடிமக்களின் பலம். அவர்களின் திறமை குறித்து பிரதமர் பெருமிதம் கொண்டார். நமது இளைஞர்கள் மற்றும் நாட்டின் இணையற்ற பெண்களின் சக்தி குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். இந்தியா ஏதாவது செய்யத் தீர்மானிக்கும் போதெல்லாம் அதைச் செய்கிறது என்பதற்கு வரலாறே சாட்சி.

உலகம் ஒரு குடும்பம்என்ற பழமொழியை இந்தியா பின்பற்றி வருகிறது. வேதம் வாசுதேவ குடும்பகம்என்று கூறுகிறது. வினோபா ஜி  உலகத்தை வணங்குவதாகவும் கூறியுள்ளார். எனவே, பொருளாதார வளர்ச்சியுடன், மனிதகுலம் மனிதநேயத்திற்கும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை நாம் பின்பற்றுகிறோம்.

இன்று உலகம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா போன்ற ஒரு பரந்த நாடு உலகப் பொருளாதாரத்தில் தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை. இது உலக நலனுக்கான இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது பங்களிப்பை அதிகரிக்க விரும்பினால், அதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அது தன்னம்பிக்கை கொண்டதாக அல்லது ஆத்மா நிர்பர்ஆக இருக்க வேண்டும். உலக நலனுக்காக பங்களிக்கும் திறன் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். நமது வேர்கள் வலுவாக இருந்தால், நாம் போதுமான திறன் கொண்டவர்களாக இருந்தால், உலக நலனை நோக்கி நம்மால் அடியெடுத்து வைக்க முடியும்.

பிரதமர் தனது விடுதலை நாள் உரையில், நம் நாட்டில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. நாட்டைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கு நமது இயற்கை வளங்கள் மற்றும் மனித வளங்களின் மதிப்புக் கூட்டலை நாம் தொடங்க வேண்டும் என்பதே காலத்தின் தேவை. மூலப்பொருளை உலகுக்கு எவ்வளவு காலம் ஏற்றுமதி செய்வோம்? மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதும், மூலப்பொருட்களால் முடிக்கப்பட்ட முழுமையான பொருட்களை இறக்குமதி செய்வதும் எவ்வளவு காலம் தொடரும்? நாம் விரைவில் தன்னம்பிக்கை அடைய வேண்டியிருக்கும். உலகின் தேவைகளுக்கு ஏற்ப நமது திறன்களின் மதிப்பு கூட்டலை நாம் அடைய வேண்டியிருக்கும். அது நமது பொறுப்பு.

வேளாண்-மதிப்பு கூட்டலில் தன்னம்பிக்கையின் வலிமையானது நமது வலிமையாகும். இத்துறையிலும் இது அவசியமானது. நமது வேளாண்மைத் துறை உலகின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக வேண்டும்; வேளாண்மைத் துறைக்கு மதிப்பு கூட்டல் தேவை.

நாடு பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. நாம் விண்வெளித் துறையைத் திறப்பில் வைத்துள்ளோம். நாட்டின் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. விண்வெளித் துறையில் இந்தியா சக்திவாய்ந்ததாக மாறும்போது, ​​அண்டை நாடுகளும் நன்மைகளைப் பெறுகின்றன. எரிசக்தித் துறையில் நாம் சக்திவாய்ந்தவர்களாக மாறினால், இருளை விரட்ட விரும்பும் நாடுகளுக்கு இந்தியாவால் உதவ முடியும். நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு தன்னம்பிக்கை பெறும்போது, ​​சுகாதாரச் சுற்றுலாவுக்குரிய விருப்ப நாடாக இந்தியா மாறுகிறது. எனவே, ‘மேக் இன் இந்தியாதயாரிப்புகள் உலகில் பாராட்டப்படுவதைக் காண வேண்டியது அவசியம். நமது திறமையான மனிதசக்தியால் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு பாராட்டப்படுவதற்கு வரலாறே சாட்சி என்று பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/

சனி, 15 ஆகஸ்ட், 2020

செங்கோட்டையில் ஒரு நாள் | 2019 ஆகஸ்டு 15

செங்கோட்டையில் ஒரு நாள் | 2019 ஆகஸ்டு 15

பள்ளிப் பருவத்திலிருந்தே நாட்டின் விடுதலைநாள் விழா, குடியரசுநாள் விழாவினைக் கொண்டாடி வந்திருப்போம். எனினும், அடுத்தடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியரகம், மாநிலத் தலைமையகத்தில் நிகழும் இவ்விழாக்களின் மீதான ஈர்ப்பு அலாதியானது. அணிவகுப்பு, விருதளிப்பு, கலைநிகழ்ச்சிகள் எனக் கோலாகலமாக நிகழும். இங்கேயே இப்படியெனில், நாட்டின் தலைநகரில் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும்!


நாட்டின் அதிகார மையமாக விளங்கும் புதுதில்லியில் விடுதலைநாள் விழா செங்கோட்டையிலும் குடியரசுநாள் விழா இராஜபாதை(Rajpath)யிலும் நிகழும். இதில் செங்கோட்டை (பழைய)தில்லியைச் சேர்ந்தது. இராஜபாதை புதுதில்லியைச் சேர்ந்தது. குடியரசு தினவிழாவில்தான் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நிகழும். அதைப்பார்க்கத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். ஒப்பீட்டளவில் விடுதலைநாள் விழா அந்தளவு கொண்டாட்டங்கள் நிறைந்ததில்லை. புதுதில்லி வந்ததிலிருந்தே இவ்விழாக்களில் பங்கெடுக்க வேண்டுமென்ற விருப்பமிருந்தும் அதற்காக முயன்றும் ஏதும் கைகூடவில்லை. அதில் 2019 குடியரசு நாளுக்குப் ப்ரகதி மைதானில் நெடுநேரம் வரிசையில் காத்திருந்து அனுமதிச்சீட்டு கிடைக்காததும் அடங்கும்.

2019 ஆகஸ்ட் 05ஆம் நாள் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது மத்திய அரசு. பல எதிர்ப்புகள் விவாதங்கள் குற்றச்சாட்டுகள் வருமெனத் தெரிந்தும் காஷ்மீர் விவகாரத்தில் அம்முடிவைத் துணிந்து எடுத்தது அரசாங்கம். அடுத்த பத்து நாட்களில் விடுதலை நாளும் வந்தது.

இடைப்பட்ட நாட்களில் வழக்கத்திற்கு மாறாக, தில்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முக்கிய மெட்ரோ நிலையங்களில் ஆயுதம் ஏந்திய போலிசார் கூடுதலாகக் குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம் அனைத்து செயல்களும் கண்காணிக்கப்பட்டது.

இம்முறை விடுதலைநாள் விழாவில் பங்கெடுத்தே ஆகவேண்டுமென முடிவெடுத்துத் தெரிந்த அதிகாரிகள் வட்டத்தில் கேட்டதில் நேர்மறை பதில் இல்லை. அடுத்ததாக மாநில, தேசியக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களிடம் கேட்டதில் ஒருவர் மட்டும் A முத்திரையிட்ட அனுமதிச்சீட்டு வாங்கித் தந்தார்.

ஜேஎன்யு - செங்கோட்டை இடையிலான தொலைவு 17 கிமீ. விடுதலைநாள் மற்றும் குடியரசுநாளில் தில்லி நகர மெட்ரோ ரயில் சேவை காலையில் கிடையாது என்பது நடைமுறையாம். மேலும், நகரப் போக்குவரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுப் போக்குவரத்துக்கான வழிகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதோடு, ஓலா, ஊபர், ஆட்டோ போன்றவை இயங்கவும் விதிகள் இருந்தன.

அனுமதிச் சீட்டு கிடைத்தும் நிகழ்விற்குச் செல்லமுடியாதுபோயின், முயற்சிகள் வீணாகிவிடும் என்பதனால் முதல்நாள் இரவே, லோக் கல்யாண் மார்க் மெட்ரோவிற்கு அருகிலுள்ள இந்திய மாநில இல்லமொன்றில் தங்கவேண்டியதாயிற்று. அதிகாலை 05.30க்குலாம் குளித்து முடித்து செங்கோட்டை செல்ல ஓலா, ஊபர் பதிவு செய்தால், செய்கின்ற பதிவுகளெல்லாம் ஓட்டுநரால் இரத்து செய்யப்பட்டன. கண்ணெட்டும் தொலைவுவரை ஆட்டோக்கள் தென்படவே இல்லை. எவ்வாறோ, கருணையுள்ள ஓலா ஓட்டுநர் ஒருவர் எப்படியோ சவாரிக்கு அனுமதியளித்தார்.

220+ இந்தியப் பண மதிப்பிலான அந்தப் பயணம் தில்லியின் புறநகர்ச்சாலை வழியாக செங்கோட்டைக்கு முன்னதாகவே முடிவடைந்தது. போக்குவரத்து மாற்றத்தினால் அங்கங்கு பலவழிமாறி ஒருவழியாகக் கொண்டுவந்து சேர்த்திட்டார். கூடுதல் தொகை கொடுக்கவேண்டியிருந்தது. ஆங்காங்கு, பெரும்விலையுடைய வாகனங்களிலிருந்து மக்கள் இறங்கி வந்துகொண்டிருந்தனர். வானம் மென்தூறல் இட்டிருந்ததால் நிலத்தில் நீர்பூத்திருந்தது.

அநாவசியப் பொருட்கள், கூர்மையான பொருட்கள் முதலான எவையும் கொண்டுவரலாகாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. செங்கோட்டைக்கு ஒரு கி.மீக்கு முன்பிருந்தே சோதனையிடல் நடக்கத் தொடங்கியிருந்தது. முதற்கட்டம் முடிந்து அடுத்த கட்டம் அதற்கடுத்த கட்டம் எனக் கடந்து நடந்து வந்தால் செங்கோட்டையின் முதன்மைச் சாலை வந்துவிட்டது.

தசரா விழாவின்போது என்னதான் நிகழ்கிறது என்பதைப் பார்ப்பதற்காக 2018இல் வந்தபோது இதே செங்கோட்டையில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் உள்நுழையமுடியவில்லை. பிறகு, அருகேயுள்ள ஜாமா மசூதியைப் பார்வையிட்டு அருகே உள்ள உணவகத்தில் 10ரூபாய்க்கு ரொட்டியும் 150 ரூபாய்க்கு சப்ஜியும் வாங்கிய நினைவு வந்துபோனது.

ஆனால், இப்போது எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. மக்கள் திரளும் இல்லை. முன்வரிசை காவலர்களால் அனுமதிக்கப்பட்ட நபர்கள் அமைதியாக செங்கோட்டை வாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். செங்கோட்டை வாயிலில் மீண்டும் ஒரு சோதனை. இரும்பு பொருட்கள், பேனா, கருப்பு உடை முதலான இன்னபிறவும் அந்த வாயிலுக்குமேல் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. வைத்துச்செல்லுங்கள் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்றனர். திறன்பேசிக்கு அனுமதி உண்டு.   

காலை 06.30க்குள் உள்நுழையவேண்டும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை எனும் வகையிலான அனுமதிச்சீட்டு என்பதால் இத்தனை நெருக்கடிகளோடு செங்கோட்டை வளாகத்தினுள் உள்நுழைந்தபோது மணி 06.50 ஆகிவிட்டது. பாதுகாப்புக்கென கண்காணிப்புக் கேமிரா, பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்துவந்தனர். ஆங்காங்கு தரமான ஒலிப்பெருக்கிகள், எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேசியக்கொடிகளும் ஆங்காங்கு பறந்துகொண்டிருந்தன.

எல்இடி திரையில் இந்தியப் பிரதமர், காந்தியடிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் காட்சிகள் ஒளிபரப்பாகின. அச்சமயத்திலேயே உள்துறை அமைச்சர் உட்பட மத்திய அரசின் மூத்த, முக்கிய அங்கத்தினரால் கோட்டைக் கொத்தளம் நிரம்பியிருந்தது. கொடியேற்றத்திற்காக மேடை ஆயத்தமாக இருந்தது. பிரதமரின் வாகனம் வந்தது, பிரதமர் இறங்கினார், உள்நுழைந்தார், மாடிப்படி ஏறினார், கொடியேற்றினார், அணிவகுப்பு மரியாதை ஏற்றார் என சில நிமிடங்களில் இவை அனைத்தும் நிறைவுற்றது.

தமிழகத்தில் பாரத் மாதாகி ஜே! என்ற முழக்கம் குறிப்பிட்ட கட்சியின் கொள்கை முழக்கமாக பாவிக்கப்படுகிறது. ஆனால், தில்லியில் அவ்வாறு இல்லை. கொடியேற்றுகையில் இசைக்கப்படும் நாட்டுப் பண்ணின் நிறைவில் குழுமியிருந்த பல்வேறு தரப்பினரும் முழங்கினர்.

விடுதலைநாளில் திறந்தவெளியில் இருக்கும் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றியபின், பிரதமர் உரையாற்றுவார். கடந்த ஆட்சிக்காலங்களில் குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்றுதான் பிரதமர் உரையாற்றுவது வழக்கம்.”சுதந்திர தினவிழா, பாதுகாப்புக்கூண்டுக்குள் பிரதமர் உரை, எங்கே சுதந்திரம்” எனப்பொருள்படும் தமிழக மாணவர்களின் பன்ச் வசன பேச்சுகளைப் பள்ளிப் பருவ பேச்சுப் போட்டிகளில் கேட்டிருக்கிறேன். இப்பேச்சு 2014ஆம் ஆண்டோடு நின்றது. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி அவர்கள் பிரதமரானதும் குண்டு துளைக்காத பாதுகாப்பு மேடை அப்புறப் படுத்தப்பட்டது. ஒவ்வொரு விடுதலை நாள் விழாவிலும் நேரடியாக மக்களிடையே பேசி வருகிறார்.

அன்றைய கொடியேற்றும் நிகழ்வு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது, ஏனெனில், முந்தைய ஐந்தாண்டுகால ஆட்சியில் சந்தித்த சவால்களால் 2018தான் நரேந்திரமோடி அவர்கள் பிரதமாரகக் கொடியேற்றும் கடைசிநிகழ்வென்று பல அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறினர். ஆனால், அனைத்தையும் முறித்து, அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறி,  காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றில் முடிவெடுத்து, பிரதமராக அவரது 6ஆவது விடுதலைநாள் கொடியேற்றம் அன்றைக்கு.

அன்றைய விடுதலைநாள் விழாவில் இந்தியில் உரையாற்றத் தொடங்கினார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், காஷ்மீர் குறித்து முதன்மையாகப் பேசினார், தேச ஒருமைப்பாடு அவர் பேச்சின் அடிநாதமாக இருந்ததை அறியமுடிந்தது. அவ்வப்போது மக்களின் ஆரவாரம் இருந்தது. அவருடைய உரையில் மழையிடைப் பருகும் தேநீர்போல தமிழ் இடம்பெறும்/இடம்பெற்றது. தமிழின் பன்னெடுங்கால இலக்கிய வரலாற்றிலிருந்து சில வரிகளை அன்றைக்கும் சுட்டியிருந்தார். வள்ளுவப் பெருந்தகையின் நீரின்றி அமையாது உலகு என்ற வரியே மேற்கோள்காட்டியிருந்தார். ஒன்றுமே புரிந்துகொள்ள முடியாத இந்தி உரையில் தமிழ் வரிகள் மேற்கோள் காட்டப்படும்போது, கைத்தட்டும் நபர்களைத் தமிழறிந்தவர்கள் என அடையாளம் காண இயலும். அன்று விகடனுக்காக நேரலையும் வெளியிட்டிருந்தேன். அதன் உரலி. https://www.facebook.com/568311806606731/posts/2128938060544090/

கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக உரையாற்றிக்கொண்டிருந்தார். (முக்கியமான பல அறிவிப்புகளின் உள்ளடக்கத்தைப் பிரதமர் பேசியிருந்தார் என்பதை அடுத்த நாள் ஆங்கில இதழ்களின் வாயிலாக அறியமுடிந்தது.) கதிரொளி மெல்லப் படரத் தொடங்கி உடல் வெம்மையை ஏற்றியிருந்தது. மக்கள் தங்களுக்கிடையே தான்மி(selfie), படங்கள் எடுத்துக்கொண்டனர். தொலைவிலிருந்தவரை எல்இடி அருகில் காட்டியது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் கேமிராக்கள் மாறி மாறி ஒளிபரப்பிக்கொண்டிருந்தன. நெடுநேரம் கழித்து உரையை முடித்தார் பிரதமர். குழுமியிருந்த குழந்தைகளுடன் விடுதலைநாள் மகிழ்வைப் பகிர்ந்துகொண்டார். மூவண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

மக்கள் திரள் வெளியேறத் தொடங்கியது. அவர்களுடனே வெளியேறி, கொஞ்சம் தொலைவு நடந்து வந்தால் இந்த இடத்திற்கு முன்பே வந்திருக்கிறோமே என மூளையின் நினைவுநரம்புகள் தூசுதட்டின. அது அம்பேத்கார் பல்கலைக்கழகம் (காஷ்மீரிகேட் வளாகம்) உள்ள சாலை. மேனாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு நிகழ்ந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு அங்கு வந்திருக்கிறேன். காஷ்மீரிகேட், செங்கோட்டை, ஜாமா மசூதி இவையெல்லாம் அருகருகே இருக்கும் முக்கியப் பகுதிகள் என புரிய நேர்ந்தது. செங்கோட்டை செல்ல Violet lineஇல் உள்ள லால் கிலா, ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையங்களுக்கு முன்னுரிமை தரலாம். அல்லது Yellow Lineஇல் உள்ள காஷ்மீரி கேட் நிலையத்தில் இறங்கிச் சென்றிடலாம்.

காஷ்மீரி கேட்தான் உண்மையான தில்லி. தற்போதைய சூழலில் பழைய தில்லி.  தில்லியின் பூர்வ குடிகளை அங்கு பார்க்கலாம் என்பர். நெருக்கடியான கட்டிடங்கள். ஏக்கமிக்க கண்கள், அழுக்கான உடைகள், வறுமையோடும் பசியோடும் போராடும் மக்களை இன்றளவும் காணமுடியும். நெடுநேரம் தண்ணீர் அருந்தாமையால் தண்ணீரைத் தேடியலைந்தேன். எங்கும் கிட்டவில்லை. 2ரூ. அளவில் கண்ணாடி குவளையில் தண்ணீர் நிரப்பிக் கொடுக்கும் தள்ளுவண்டி தாகம் தீர்த்தது. ஆங்காங்கு மக்கள் நடைபாதையில் படுத்துக்கிடந்தனர். சிறுஅடுப்பில் தமக்கான உணவுகளைச் சமைத்துக் கொண்டிருந்தனர்.

காலை 10 மணியளவிலும் மெட்ரோ சேவை திறக்கவில்லை. ஓலா, ஊபர் அருகே ஏதும் இருப்பில் இல்லை. கிடைத்த ஆட்டோவில் கேட்ட தொகைகொடுத்துப் பயணித்து இருப்பிடம் சேர வேண்டியதாயிற்று. நெடுநாள் எதிர்பார்த்துக் காத்திருந்த விடுதலைநாள் விழாவில் பார்வையாளராய்ப் பங்கேற்ற நாள் 2019 ஆகஸ்ட் 15.

தக | 15.08.2020