செங்கோட்டையில் ஒரு நாள்
| 2019 ஆகஸ்டு 15
பள்ளிப் பருவத்திலிருந்தே நாட்டின் விடுதலைநாள்
விழா, குடியரசுநாள் விழாவினைக் கொண்டாடி வந்திருப்போம். எனினும், அடுத்தடுத்த கட்டமாக
மாவட்ட ஆட்சியரகம், மாநிலத் தலைமையகத்தில் நிகழும் இவ்விழாக்களின் மீதான ஈர்ப்பு அலாதியானது.
அணிவகுப்பு, விருதளிப்பு, கலைநிகழ்ச்சிகள் எனக் கோலாகலமாக நிகழும். இங்கேயே இப்படியெனில்,
நாட்டின் தலைநகரில் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும்!
நாட்டின் அதிகார மையமாக விளங்கும் புதுதில்லியில் விடுதலைநாள் விழா செங்கோட்டையிலும் குடியரசுநாள் விழா இராஜபாதை(Rajpath)யிலும் நிகழும். இதில் செங்கோட்டை (பழைய)தில்லியைச் சேர்ந்தது. இராஜபாதை புதுதில்லியைச் சேர்ந்தது. குடியரசு தினவிழாவில்தான் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நிகழும். அதைப்பார்க்கத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். ஒப்பீட்டளவில் விடுதலைநாள் விழா அந்தளவு கொண்டாட்டங்கள் நிறைந்ததில்லை. புதுதில்லி வந்ததிலிருந்தே இவ்விழாக்களில் பங்கெடுக்க வேண்டுமென்ற விருப்பமிருந்தும் அதற்காக முயன்றும் ஏதும் கைகூடவில்லை. அதில் 2019 குடியரசு நாளுக்குப் ப்ரகதி மைதானில் நெடுநேரம் வரிசையில் காத்திருந்து அனுமதிச்சீட்டு கிடைக்காததும் அடங்கும்.
2019 ஆகஸ்ட் 05ஆம் நாள் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது மத்திய அரசு. பல எதிர்ப்புகள் விவாதங்கள் குற்றச்சாட்டுகள் வருமெனத் தெரிந்தும் காஷ்மீர் விவகாரத்தில் அம்முடிவைத் துணிந்து எடுத்தது அரசாங்கம். அடுத்த பத்து நாட்களில் விடுதலை நாளும் வந்தது.
இடைப்பட்ட நாட்களில் வழக்கத்திற்கு மாறாக, தில்லியில்
கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முக்கிய மெட்ரோ நிலையங்களில் ஆயுதம் ஏந்திய
போலிசார் கூடுதலாகக் குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம் அனைத்து செயல்களும்
கண்காணிக்கப்பட்டது.
இம்முறை விடுதலைநாள் விழாவில் பங்கெடுத்தே ஆகவேண்டுமென
முடிவெடுத்துத் தெரிந்த அதிகாரிகள் வட்டத்தில் கேட்டதில் நேர்மறை பதில் இல்லை. அடுத்ததாக
மாநில, தேசியக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களிடம் கேட்டதில் ஒருவர் மட்டும்
A முத்திரையிட்ட அனுமதிச்சீட்டு வாங்கித் தந்தார்.
ஜேஎன்யு - செங்கோட்டை இடையிலான தொலைவு 17 கிமீ.
விடுதலைநாள் மற்றும் குடியரசுநாளில் தில்லி நகர மெட்ரோ ரயில் சேவை காலையில் கிடையாது
என்பது நடைமுறையாம். மேலும், நகரப் போக்குவரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுப்
போக்குவரத்துக்கான வழிகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதோடு, ஓலா, ஊபர், ஆட்டோ போன்றவை
இயங்கவும் விதிகள் இருந்தன.
அனுமதிச் சீட்டு கிடைத்தும் நிகழ்விற்குச் செல்லமுடியாதுபோயின்,
முயற்சிகள் வீணாகிவிடும் என்பதனால் முதல்நாள் இரவே, லோக் கல்யாண் மார்க் மெட்ரோவிற்கு
அருகிலுள்ள இந்திய மாநில இல்லமொன்றில் தங்கவேண்டியதாயிற்று. அதிகாலை 05.30க்குலாம்
குளித்து முடித்து செங்கோட்டை செல்ல ஓலா, ஊபர் பதிவு செய்தால், செய்கின்ற பதிவுகளெல்லாம்
ஓட்டுநரால் இரத்து செய்யப்பட்டன. கண்ணெட்டும் தொலைவுவரை ஆட்டோக்கள் தென்படவே இல்லை.
எவ்வாறோ, கருணையுள்ள ஓலா ஓட்டுநர் ஒருவர் எப்படியோ சவாரிக்கு அனுமதியளித்தார்.
220+ இந்தியப் பண மதிப்பிலான அந்தப் பயணம் தில்லியின்
புறநகர்ச்சாலை வழியாக செங்கோட்டைக்கு முன்னதாகவே முடிவடைந்தது. போக்குவரத்து மாற்றத்தினால்
அங்கங்கு பலவழிமாறி ஒருவழியாகக் கொண்டுவந்து சேர்த்திட்டார். கூடுதல் தொகை கொடுக்கவேண்டியிருந்தது.
ஆங்காங்கு, பெரும்விலையுடைய வாகனங்களிலிருந்து மக்கள் இறங்கி வந்துகொண்டிருந்தனர்.
வானம் மென்தூறல் இட்டிருந்ததால் நிலத்தில் நீர்பூத்திருந்தது.
அநாவசியப் பொருட்கள், கூர்மையான பொருட்கள் முதலான
எவையும் கொண்டுவரலாகாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. செங்கோட்டைக்கு ஒரு கி.மீக்கு
முன்பிருந்தே சோதனையிடல் நடக்கத் தொடங்கியிருந்தது. முதற்கட்டம் முடிந்து அடுத்த கட்டம்
அதற்கடுத்த கட்டம் எனக் கடந்து நடந்து வந்தால் செங்கோட்டையின் முதன்மைச் சாலை வந்துவிட்டது.
தசரா விழாவின்போது என்னதான் நிகழ்கிறது என்பதைப்
பார்ப்பதற்காக 2018இல் வந்தபோது இதே செங்கோட்டையில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் உள்நுழையமுடியவில்லை.
பிறகு, அருகேயுள்ள ஜாமா மசூதியைப் பார்வையிட்டு அருகே உள்ள உணவகத்தில் 10ரூபாய்க்கு
ரொட்டியும் 150 ரூபாய்க்கு சப்ஜியும் வாங்கிய நினைவு வந்துபோனது.
ஆனால், இப்போது எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை.
மக்கள் திரளும் இல்லை. முன்வரிசை காவலர்களால் அனுமதிக்கப்பட்ட நபர்கள் அமைதியாக செங்கோட்டை
வாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். செங்கோட்டை வாயிலில் மீண்டும் ஒரு சோதனை. இரும்பு
பொருட்கள், பேனா, கருப்பு உடை முதலான இன்னபிறவும் அந்த வாயிலுக்குமேல் எடுத்துச்செல்ல
அனுமதியில்லை. வைத்துச்செல்லுங்கள் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்றனர். திறன்பேசிக்கு
அனுமதி உண்டு.
காலை 06.30க்குள் உள்நுழையவேண்டும், முதலில்
வருபவர்களுக்கே முன்னுரிமை எனும் வகையிலான அனுமதிச்சீட்டு என்பதால் இத்தனை நெருக்கடிகளோடு
செங்கோட்டை வளாகத்தினுள் உள்நுழைந்தபோது மணி 06.50 ஆகிவிட்டது. பாதுகாப்புக்கென கண்காணிப்புக்
கேமிரா, பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்துவந்தனர். ஆங்காங்கு தரமான ஒலிப்பெருக்கிகள்,
எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேசியக்கொடிகளும் ஆங்காங்கு பறந்துகொண்டிருந்தன.
எல்இடி திரையில் இந்தியப் பிரதமர், காந்தியடிகள்
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் காட்சிகள் ஒளிபரப்பாகின. அச்சமயத்திலேயே உள்துறை அமைச்சர்
உட்பட மத்திய அரசின் மூத்த, முக்கிய அங்கத்தினரால் கோட்டைக் கொத்தளம் நிரம்பியிருந்தது.
கொடியேற்றத்திற்காக மேடை ஆயத்தமாக இருந்தது. பிரதமரின் வாகனம் வந்தது, பிரதமர் இறங்கினார்,
உள்நுழைந்தார், மாடிப்படி ஏறினார், கொடியேற்றினார், அணிவகுப்பு மரியாதை ஏற்றார் என
சில நிமிடங்களில் இவை அனைத்தும் நிறைவுற்றது.
தமிழகத்தில் பாரத் மாதாகி ஜே! என்ற முழக்கம் குறிப்பிட்ட கட்சியின் கொள்கை முழக்கமாக பாவிக்கப்படுகிறது. ஆனால், தில்லியில் அவ்வாறு இல்லை. கொடியேற்றுகையில் இசைக்கப்படும் நாட்டுப் பண்ணின் நிறைவில் குழுமியிருந்த பல்வேறு தரப்பினரும் முழங்கினர்.
விடுதலைநாளில் திறந்தவெளியில் இருக்கும் கோட்டைக்
கொத்தளத்தில் கொடியேற்றியபின், பிரதமர் உரையாற்றுவார். கடந்த ஆட்சிக்காலங்களில் குண்டு
துளைக்காத கூண்டுக்குள் நின்றுதான் பிரதமர் உரையாற்றுவது வழக்கம்.”சுதந்திர தினவிழா,
பாதுகாப்புக்கூண்டுக்குள் பிரதமர் உரை, எங்கே சுதந்திரம்” எனப்பொருள்படும் தமிழக மாணவர்களின்
பன்ச் வசன பேச்சுகளைப் பள்ளிப் பருவ பேச்சுப் போட்டிகளில் கேட்டிருக்கிறேன். இப்பேச்சு
2014ஆம் ஆண்டோடு நின்றது. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி அவர்கள் பிரதமரானதும்
குண்டு துளைக்காத பாதுகாப்பு மேடை அப்புறப் படுத்தப்பட்டது. ஒவ்வொரு விடுதலை நாள் விழாவிலும்
நேரடியாக மக்களிடையே பேசி வருகிறார்.
அன்றைய கொடியேற்றும் நிகழ்வு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது, ஏனெனில், முந்தைய ஐந்தாண்டுகால ஆட்சியில் சந்தித்த சவால்களால் 2018தான் நரேந்திரமோடி அவர்கள் பிரதமாரகக் கொடியேற்றும் கடைசிநிகழ்வென்று பல அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறினர். ஆனால், அனைத்தையும் முறித்து, அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறி, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றில் முடிவெடுத்து, பிரதமராக அவரது 6ஆவது விடுதலைநாள் கொடியேற்றம் அன்றைக்கு.
அன்றைய விடுதலைநாள் விழாவில் இந்தியில் உரையாற்றத் தொடங்கினார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், காஷ்மீர் குறித்து முதன்மையாகப் பேசினார், தேச ஒருமைப்பாடு அவர் பேச்சின் அடிநாதமாக இருந்ததை அறியமுடிந்தது. அவ்வப்போது மக்களின் ஆரவாரம் இருந்தது. அவருடைய உரையில் மழையிடைப் பருகும் தேநீர்போல தமிழ் இடம்பெறும்/இடம்பெற்றது. தமிழின் பன்னெடுங்கால இலக்கிய வரலாற்றிலிருந்து சில வரிகளை அன்றைக்கும் சுட்டியிருந்தார். வள்ளுவப் பெருந்தகையின் நீரின்றி அமையாது உலகு என்ற வரியே மேற்கோள்காட்டியிருந்தார். ஒன்றுமே புரிந்துகொள்ள முடியாத இந்தி உரையில் தமிழ் வரிகள் மேற்கோள் காட்டப்படும்போது, கைத்தட்டும் நபர்களைத் தமிழறிந்தவர்கள் என அடையாளம் காண இயலும். அன்று விகடனுக்காக நேரலையும் வெளியிட்டிருந்தேன். அதன் உரலி. https://www.facebook.com/568311806606731/posts/2128938060544090/
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக உரையாற்றிக்கொண்டிருந்தார். (முக்கியமான பல அறிவிப்புகளின் உள்ளடக்கத்தைப் பிரதமர் பேசியிருந்தார் என்பதை அடுத்த நாள் ஆங்கில இதழ்களின் வாயிலாக அறியமுடிந்தது.) கதிரொளி மெல்லப் படரத் தொடங்கி உடல் வெம்மையை ஏற்றியிருந்தது. மக்கள் தங்களுக்கிடையே
தான்மி(selfie), படங்கள் எடுத்துக்கொண்டனர். தொலைவிலிருந்தவரை எல்இடி அருகில் காட்டியது.
எல்லாப் பக்கங்களிலிருந்தும் கேமிராக்கள் மாறி மாறி ஒளிபரப்பிக்கொண்டிருந்தன. நெடுநேரம்
கழித்து உரையை முடித்தார் பிரதமர். குழுமியிருந்த குழந்தைகளுடன் விடுதலைநாள் மகிழ்வைப்
பகிர்ந்துகொண்டார். மூவண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
மக்கள் திரள் வெளியேறத் தொடங்கியது. அவர்களுடனே வெளியேறி, கொஞ்சம் தொலைவு நடந்து வந்தால் இந்த இடத்திற்கு முன்பே வந்திருக்கிறோமே என மூளையின் நினைவுநரம்புகள் தூசுதட்டின. அது அம்பேத்கார் பல்கலைக்கழகம் (காஷ்மீரிகேட் வளாகம்) உள்ள சாலை. மேனாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு நிகழ்ந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு அங்கு வந்திருக்கிறேன். காஷ்மீரிகேட், செங்கோட்டை, ஜாமா மசூதி இவையெல்லாம் அருகருகே இருக்கும் முக்கியப் பகுதிகள் என புரிய நேர்ந்தது. செங்கோட்டை செல்ல Violet lineஇல் உள்ள லால் கிலா, ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையங்களுக்கு முன்னுரிமை தரலாம். அல்லது Yellow Lineஇல் உள்ள காஷ்மீரி கேட் நிலையத்தில் இறங்கிச் சென்றிடலாம்.
காஷ்மீரி கேட்தான் உண்மையான தில்லி. தற்போதைய
சூழலில் பழைய தில்லி. தில்லியின் பூர்வ குடிகளை
அங்கு பார்க்கலாம் என்பர். நெருக்கடியான கட்டிடங்கள். ஏக்கமிக்க கண்கள், அழுக்கான உடைகள்,
வறுமையோடும் பசியோடும் போராடும் மக்களை இன்றளவும் காணமுடியும். நெடுநேரம் தண்ணீர் அருந்தாமையால்
தண்ணீரைத் தேடியலைந்தேன். எங்கும் கிட்டவில்லை. 2ரூ. அளவில் கண்ணாடி குவளையில் தண்ணீர்
நிரப்பிக் கொடுக்கும் தள்ளுவண்டி தாகம் தீர்த்தது. ஆங்காங்கு மக்கள் நடைபாதையில் படுத்துக்கிடந்தனர்.
சிறுஅடுப்பில் தமக்கான உணவுகளைச் சமைத்துக் கொண்டிருந்தனர்.
காலை 10 மணியளவிலும் மெட்ரோ சேவை திறக்கவில்லை.
ஓலா, ஊபர் அருகே ஏதும் இருப்பில் இல்லை. கிடைத்த ஆட்டோவில் கேட்ட தொகைகொடுத்துப் பயணித்து
இருப்பிடம் சேர வேண்டியதாயிற்று. நெடுநாள் எதிர்பார்த்துக் காத்திருந்த விடுதலைநாள்
விழாவில் பார்வையாளராய்ப் பங்கேற்ற நாள் 2019 ஆகஸ்ட் 15.
தக | 15.08.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக