நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

விடுதலைநாள் உரையில் தன்னம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர்

விடுதலைநாள் உரையில் தன்னம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர்

17.08.2020 ஆங்கிலக் கட்டுரை :  http://airworldservice.org/english/archives/102431

(அகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் பதம் சிங் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த..தமிழ் பாரதன்)

2020 ஆகஸ்ட் 15ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலிருந்து தேசத்திற்கு உரையாற்றினார். ​​நாம் விடுதலையின் 75ஆம் ஆண்டுக்குள் நுழைகிறோம். இது பெருஞ்சிறப்பு வாய்ந்த தருணமாகும். வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில்130 கோடி இந்தியர்களும் குறிப்பிடத்தக்க உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். நமது விடுதலையின் 75 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, ​​அந்த உறுதிமொழிகளின் பலனை நம்மால் கொண்டாட முடியும். 

நமது முன்னோர்கள் தீவிர அர்ப்பணிப்பு, மிகுந்த ஒருமைப்பாடு, உண்மையான தவம், துறவு மனநிலை, தியாக உணர்வுடன் இந்த விடுதலைக்காகப் போராடினார்கள்; அடிமைத்தனத்தின் நீண்ட இருண்டகாலங்களில், தாய்நாட்டிற்காக அவர்கள் உயிர்மாய்த்ததை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. விடுதலைப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தலைமையில், பெருந்திரள் இயக்கங்களால் உண்டான மாபெரும் தேசிய விழிப்புணர்வு புதிய உத்வேகத்தை அளித்தது. ஆதலின், இன்றைய விடுதலைநாளை இதுபோன்ற உற்சாகத்துடன் கொண்டாட முடிந்ததற்கு நாமெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.

உலகெங்கிலும் விடுதலைக்கான போரில், இந்தியா தனது கூட்டு ஒருமைப்பாட்டு வலிமையுடன், அதன் பிரகாசமான எதிர்காலத்திற்கான உறுதியையும், அதன் அர்ப்பணிப்பையும், உத்வேகத்தையும்கொண்டு தலை உயர்த்திச்சென்றது.

திரு. மோடி மேலும் கூறுகையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில், 130 கோடி இந்தியர்களும் தங்களைத் தன்னம்பிக்கை உடையவர்களாக உறுதியளித்துள்ளனர். ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இன்று தன்னம்பிக்கை பொதிந்துள்ளது. தன்னம்பிக்கை இந்தியாவின் (ஆத்மா நிர்பர் பாரத்”) அந்தக் கனவை நனவாக்குவதையும் நாம் காண்கிறோம். "தன்னம்பிக்கை இந்தியா" என்பது சொல் மட்டுமல்ல, இது நாட்டின் 130 கோடி மக்களுக்கு மந்திரமாக மாறியுள்ளது.

விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவிலிருந்து ஒரு படி தொலைவே உள்ளோம். இந்தியா போன்ற ஒரு நாடு சொந்தமாக நின்று, தன்னம்பிக்கை அடைவது அவசியமானதாகும். இந்தக் கனவை இந்தியா நிறைவேற்றும் என்று பிரதமர் தனது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இதற்குக் காரணம் நாட்டின் குடிமக்களின் பலம். அவர்களின் திறமை குறித்து பிரதமர் பெருமிதம் கொண்டார். நமது இளைஞர்கள் மற்றும் நாட்டின் இணையற்ற பெண்களின் சக்தி குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். இந்தியா ஏதாவது செய்யத் தீர்மானிக்கும் போதெல்லாம் அதைச் செய்கிறது என்பதற்கு வரலாறே சாட்சி.

உலகம் ஒரு குடும்பம்என்ற பழமொழியை இந்தியா பின்பற்றி வருகிறது. வேதம் வாசுதேவ குடும்பகம்என்று கூறுகிறது. வினோபா ஜி  உலகத்தை வணங்குவதாகவும் கூறியுள்ளார். எனவே, பொருளாதார வளர்ச்சியுடன், மனிதகுலம் மனிதநேயத்திற்கும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை நாம் பின்பற்றுகிறோம்.

இன்று உலகம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா போன்ற ஒரு பரந்த நாடு உலகப் பொருளாதாரத்தில் தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை. இது உலக நலனுக்கான இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது பங்களிப்பை அதிகரிக்க விரும்பினால், அதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அது தன்னம்பிக்கை கொண்டதாக அல்லது ஆத்மா நிர்பர்ஆக இருக்க வேண்டும். உலக நலனுக்காக பங்களிக்கும் திறன் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். நமது வேர்கள் வலுவாக இருந்தால், நாம் போதுமான திறன் கொண்டவர்களாக இருந்தால், உலக நலனை நோக்கி நம்மால் அடியெடுத்து வைக்க முடியும்.

பிரதமர் தனது விடுதலை நாள் உரையில், நம் நாட்டில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. நாட்டைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கு நமது இயற்கை வளங்கள் மற்றும் மனித வளங்களின் மதிப்புக் கூட்டலை நாம் தொடங்க வேண்டும் என்பதே காலத்தின் தேவை. மூலப்பொருளை உலகுக்கு எவ்வளவு காலம் ஏற்றுமதி செய்வோம்? மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதும், மூலப்பொருட்களால் முடிக்கப்பட்ட முழுமையான பொருட்களை இறக்குமதி செய்வதும் எவ்வளவு காலம் தொடரும்? நாம் விரைவில் தன்னம்பிக்கை அடைய வேண்டியிருக்கும். உலகின் தேவைகளுக்கு ஏற்ப நமது திறன்களின் மதிப்பு கூட்டலை நாம் அடைய வேண்டியிருக்கும். அது நமது பொறுப்பு.

வேளாண்-மதிப்பு கூட்டலில் தன்னம்பிக்கையின் வலிமையானது நமது வலிமையாகும். இத்துறையிலும் இது அவசியமானது. நமது வேளாண்மைத் துறை உலகின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக வேண்டும்; வேளாண்மைத் துறைக்கு மதிப்பு கூட்டல் தேவை.

நாடு பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. நாம் விண்வெளித் துறையைத் திறப்பில் வைத்துள்ளோம். நாட்டின் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. விண்வெளித் துறையில் இந்தியா சக்திவாய்ந்ததாக மாறும்போது, ​​அண்டை நாடுகளும் நன்மைகளைப் பெறுகின்றன. எரிசக்தித் துறையில் நாம் சக்திவாய்ந்தவர்களாக மாறினால், இருளை விரட்ட விரும்பும் நாடுகளுக்கு இந்தியாவால் உதவ முடியும். நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு தன்னம்பிக்கை பெறும்போது, ​​சுகாதாரச் சுற்றுலாவுக்குரிய விருப்ப நாடாக இந்தியா மாறுகிறது. எனவே, ‘மேக் இன் இந்தியாதயாரிப்புகள் உலகில் பாராட்டப்படுவதைக் காண வேண்டியது அவசியம். நமது திறமையான மனிதசக்தியால் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு பாராட்டப்படுவதற்கு வரலாறே சாட்சி என்று பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக