நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

பயங்கரவாதிகள் மீதான பாகிஸ்தானின் புதிய தடை உண்மையா? கற்பனையா?

பயங்கரவாதிகள் மீதான பாகிஸ்தானின் புதிய தடை உண்மையா? கற்பனையா?

24.08.2020 ஆங்கிலக் கட்டுரை :  http://airworldservice.org/english/archives/102617

(அரசியல் உரையாளர் அசோக் ஹண்டூ எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த..தமிழ்பாரதன்)

கடந்த வாரம், 88 பயங்கரவாதிகள் மீது "ஃபர்தர்" நிதித் தடைகள் என்ற இரண்டு அறிவிப்புகளைப் பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டது. பயங்கரவாத அமைப்புகள், நிறுவனங்களின் பல முக்கியத் தலைவர்களுக்கு இந்த அறிவிப்புகள் தடை விதித்தன. இவர்களில் 2008 மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஜமாஅத் உத் தாவா தலைவர் ஹபீஸ் சயீத், இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ முகமது தலைவர் மசூத் அசார், 1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோரைக் கொன்ற இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம், தலிபான் தலைவர்கள் ஜலல்லுதீன் ஹக்கானி மற்றும் கலீல் அஹ்மத் ஹக்கானி ஆகியோரும் அடங்குவர். மேலும், தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான், லஷ்கர்-இ-ஜங்வி, ஹர்கத்-உல்-அன்சார் மற்றும் பல மோசமான அமைப்புகளின் உறுப்பினர்களும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளனர். இந்தத் தடை அறிவிப்புகள் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கும் அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் உதவும். மேலும், நிதி நிறுவனங்கள்மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கும் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கின்றன. இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி செய்யப்பட்டுள்ளன.

தாவூத் இப்ராஹிமின் பெயரை அவரது கராச்சி முகவரியுடன் பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம், பாகிஸ்தானில்தான் தாவூத் இப்ராஹிம் இருக்கிறார் என்பதைப் பாகிஸ்தான் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. பாகிஸ்தானிலுள்ள தாவூத் வசிப்பிடத்திற்கான ஆதாரங்களை இந்தியா அளித்தபோதிலும் கடந்த ஆண்டுவரை, தன்நாட்டில் தாவூத் இருப்பதை அந்நாடு மறுத்து வந்தது.

பாகிஸ்தானின் நடவடிக்கை பயங்கரவாத அச்சுறுத்தலைக் கையாள்வதில் ஒரு சாதகமான நடவடிக்கையாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில், அது அப்படி இல்லை.

பாரிஸை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு நிறுவனமான நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் (எஃப்..டி.எஃப்) கடும் நெருக்கடிக்கு பாகிஸ்தான் உள்ளாகியுள்ளது அனைவரும் அறிந்ததே; இது 2018இல் இருந்து அந்நாட்டினை க்ரேபட்டியலில் வைத்திருக்கிறது. பாகிஸ்தான் க்ரே பட்டியலிலிருந்து வெளியேற விரும்பினால், பயங்கரவாதிகளுக்கு எதிராகச் செயல்பட பாகிஸ்தானுக்கு எஃப்..டி.எஃப் காலக்கெடுவை நீட்டித்து வருகிறது. அல்லது, வட கொரியா மற்றும் ஈரானுடன் 'கறுப்புப்பட்டியலில்' சேர்க்கலாம். இவ்வாறு நடந்தால் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவதற்கான நாட்டின் திறனை மேலும் சிக்கலாக்கும். பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே குழப்பத்தில் இருப்பதால், இது பாகிஸ்தானால் தாங்க முடியாத ஒன்றாகும்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை புதிதானதல்ல. பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதில் பாகிஸ்தான் நேர்மையானது என்பதை உலகுக்குக் காட்டுவதற்காக மட்டுமே அரைமனதுடன் இருந்தது. ஹபீஸ் சயீத் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் போலியான காரணங்களால் கடந்த பத்தாண்டுகளில் மீண்டும் மீண்டும் விடுவிக்கப்பட்டார். தடைகளைத் தவிர்ப்பதற்காக கொடூரமான பயங்கரவாதிகள் தங்கள் அமைப்புகளின் பெயர்களை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நேர்மையின்மைக்குத் தெளிவான சான்றாகும். ஹபீஸ் சயீத், லீடி-ஐத் தொடங்கினார், இது ஜமாத் உத் டிஅவா ஆனது, பிறகு ஃபலாஹ்ஐ இன்சானியத் அறக்கட்டளை (எஃப்..எஃப்) என்றானது. இன்றுவரை தீங்கு விளைவிக்கும் செயல்களுடன் அது தொடர்கிறது. பயங்கரவாதத்தைக் கையாள்வதில் பாகிஸ்தான் நேர்மையாக இருந்திருந்தால், அது ஒசாமா பின்லேடனை ஐந்து ஆண்டுகளாக மறைத்திருக்காது. பின்லேடனைப் பிடிப்பதற்கான அமெரிக்க சிறப்புப் படையினரை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் மருத்துவர் அஃப்ரிடி இன்னும் பாகிஸ்தான் காவலில் உள்ளார். 2008 மும்பை தாக்குதலின் குற்றவாளிகளை பாகிஸ்தான் அதிகாரிகளால் பதிவு செய்வதற்கு, பாகிஸ்தானுக்கு இவ்வளவு காலம் எடுத்ததென்பது யாருடைய யூகம்.

தற்போதைய தடை உத்தரவில்கூட, பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின்கீழ் ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்வி மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகியோர் பதிவு செய்யப்படவில்லை. ஒரு சட்டரீதியான ஒழுங்குமுறை உத்தரவு மட்டுமே அவர்கள் மீது பாய்ந்துள்ளது. இருப்பினும், திடீர் கொள்கைமாற்றமாக, அறிவித்த சில மணி நேரங்களிலேயே அந்த பட்டியலில் இருந்து தாவூத்தின் பெயரை பாகிஸ்தான் நீக்கியது. இது உண்மையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தானின் நேர்மையின்மைக்கு சான்றாகும்.

இந்தப் பின்னணியில், பாகிஸ்தானின் சமீபத்திய நடவடிக்கை முழு நம்பிக்கைக்குரியதன்று. எஃப்..டி.எஃப் க்ரே பட்டியலிலிருந்து வெளியேறுவதே பாகிஸ்தானின் நிர்பந்தம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், பாகிஸ்தானின் ஆட்டத்தைப் புரிந்துகொண்ட எஃப்..டி.எஃப், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மீதமுள்ள 27கூறுகளில் 23ஐச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. உலகளாவிய அமைதியின் நலனுக்காக பயங்கரவாத அச்சுறுத்தல் வேரறுக்கப்பட வேண்டும் என்பதை உண்மையாக உணர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அந்த ஞானம் பாகிஸ்தானுக்கு இன்னும் வரவில்லை. பயங்கரவாதிகளைத் தனது அரச கொள்கையின் கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்துகிறது பாகிஸ்தான்.

நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்

http://airworldservice.org/tamil/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf/

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக