த.க.தமிழ்பாரதன்
19.11.2020
அரிஸ்டாட்டிலின்
இயற்பியல் மொழிபெயர்ப்பு முறைகள்
தமிழ்ச்சூழலில்
மொழிபெயர்ப்பானது காலத்தால் முற்பட்டது.
தொல்காப்பியத்தில் இடம்பெறும்
தொகுத்தல் விரித்தல்
தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு அனை
மரபினவே (தொல். மரபியல் 98)
எனும் அடிகள் தக்க சான்றாகும். பிற்காலத்தில்,
பண்பாட்டு ஊடாட்டத்தால் வடமொழிச்சொற்கள் தமிழில் கலப்புற்றன.
தொழிற்புரட்சிக்குப் பின் ஏற்பட்ட தாக்கத்தால் மேலை நாட்டிலிருந்து இறக்குமதி
செய்யப்பெற்ற தொழில் துறைகள்/முறைகள் தமிழ்ச்சூழலுக்கு அறிமுகமாகின.
இவை, வாழ்விலும் வாழ்வில் எழுந்த சிந்தனையிலும்
மாற்றத்திற்கு வழிவகுத்தன. தமிழ் அல்லாத சொற்கள் தமிழர்களிடையே புழக்கமாகின. தமிழற்ற பிறமொழிச் சொற்களின் ஒலிப்புப் பெயர்கள் சமூகத்தில் நிலைபேறடைந்துவிட்டன.
இச்சூழலில் கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு என்பவை
தமிழின் இருப்பைத் தக்கவைக்கத்தக்கவை.
தற்காலத் தமிழ்ச்சூழலில் இலக்கியம் தவிர்த்த பிறதுறைகளில்
மொழிபெயர்ப்பின் பங்கு கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு, உலகமயமாக்கல்,
வணிகமயமாகிவரும் வாழ்க்கை முறை, சந்தைப் பொருளாதாரம்
முதலானவை காரணிகளாகும். கல்வி, அறிவியல்,
தொழில்நுட்பம், வணிகம், பொழுதுபோக்குத்
துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் மொழிபெயர்ப்பு பெருகி வருகிறது.
ஆனால், இவற்றோடு ஒப்பிடுகையில் இலக்கியத் துறையில்
மொழிபெயர்ப்பானது சவால்களைச் சந்தித்துவருகிறது. காப்புரிமை முதலான
காரணிகளால் உலக இலக்கியங்களின் தமிழாக்கங்கள் வெளியாவதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது.
“தமிழில் மட்டுமே வாசிக்க முடிந்த ஒருவர் இன்று நோபல் பரிசு பெற்ற
புத்தகத்தை வாசிக்க இன்னும் ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்”[1] என்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கூற்று இங்கு நோக்கத்தக்கது.
பனுவல் நிலையில் ஒன்றைத் தமிழாக்கம் செய்ய வேண்டியிருப்பின்
மொழிபெயர்ப்புக்கான பதிப்புரிமை,
காப்புரிமை முதலான காரணிகள் இடைவெளியை ஏற்படுத்துகின்றன. மேலும், திருட்டுத்(piracy) தளங்களில்
முறையற்றுப் பகிரப்படும் மென்கோப்புகளால் அச்சுநூல்களின் சந்தைப்படுத்தலும் கேள்விக்குறியாகி
வருகிறது. இதன் பின்னணியில் மொழிபெயர்ப்பு நூல்களின் சந்தைப்படுத்தும்
சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. தமிழர்களிடையே அதிகரித்துவரும்
ஆங்கில வாசிப்புப் பழக்கம், சந்தையில் உடன் வெளியாகும் ஆங்கில
நூல்கள், அந்நூலைப் பெறுவதற்கான எளிய வாய்ப்புகள் முதலானவை தமிழாக்கம்
நிகழ்த்துதலை தாமதப்படுத்துவதற்கான ஏனைய காரணிகள்.
இலக்கியம் தவிர்த்த பிறதுறைகளில் இச்சிக்கல் இருப்பதில்லை. ஏனெனில்,
பிறதுறை மொழிபெயர்ப்புகள் (தமிழாக்கங்கள்)
பனுவல் நிலையில் இருப்பதைவிட தேவையின் அடிப்படையில் உருவாக்கம் பெறுகின்றன.
அத்தேவையும் பொருளாதாரத்தால் சமன் செய்யப்படுகிறது. வளர்ந்த அறிவியல் நுட்பங்களுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவே தடுமாறும்
எளிய மனிதர்கள் நிறைந்த தமிழ்ச் சூழலில், அவர்களுக்குப் பிற பண்பாடுகளின்
அறிவை, இரசனையை உள்ளீடு செய்வதற்கு இலக்கிய/அறிவுப்புல மொழிபெயர்ப்புகள் அடிப்படையானவை.
மீவளர்ச்சியுற்ற அறிவியற் சூழலில், காலம் கடந்த
அறிவுமரபைத் தமிழ்மொழிக்குக் கடத்துவதென்பது, தமிழின் அறிவு மரபோடு
ஒப்புநோக்குவதற்கான வாய்ப்பைத் தருகிறது. இதன் பின்னணியிலேயே,
‘காலம்’ எனும் கருத்தாக்க நிலையில் தமிழறிவு மரபின்
வேராக விளங்கும் தொல்காப்பியத்தோடு ஒப்புநோக்கத்தக்குவதற்காக கிரேக்க அறிவு மரபின்
அடையாளமாக விளங்கும் அரிஸ்டாட்டிலின் இயற்பியல் நூல் தமிழாக்கம் பெற்றது. அரிஸ்டாட்டில் இயற்பியல் நூலைத் தமிழாக்கம் செய்தபோது, எழுந்த மொழிபெயர்ப்பு முறைகளை இக்கட்டுரை விளக்குகிறது.
அரிஸ்டாட்டிலின் இயற்பியல்
‘இயற்பியல்’ நூலின் சில பகுதிகள் தொடக்கத்தில் ஏதென்ஸ்
நகரத்தில் அரிஸ்டாட்டில் இருந்தபோது, எழுதப்பட்டிருக்கலாம்.
எவ்வாறாயினும், இந்நூலின் பிற பகுதிகள் அவரது வாழ்நாளின்
பிற்காலத்தில், அவரது உரைகளிலிருந்து விரிவாக்கப்பட்டிருக்கின்றன.
“அரிஸ்டாட்டில் எழுத்தாக்கங்களின் தற்போதைய சீரமைப்பு அவரைப் பொறுத்ததா?
பிற்கால தொகுப்பாசிரியர்களால் திணிக்கப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை.
குறுநூல்களாகவும் தலைப்புகளிட்டும் இதனைப் பகுத்தமை தொகுப்பாசிரியர்களே
என்ற பொதுப்பார்வை உள்ளது. அரிஸ்டாட்டிலின் மூலப்பிரதி நிறுத்தற்குறிகள்,
பத்தி பிரித்தல், தலைப்பிடுதல் போன்றவற்றைக் கொண்டிருக்கவில்லை.
அரிஸ்டாட்டிலின் எந்த எழுத்துப் பணியும் அவர் வெளியிடுவதற்காக உருவாக்கவில்லை
என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதை ஒருபோதும் வெளியிட நினைத்ததில்லை”[2]. இதன் காரணமாக, ஆங்கிலப் பனுவலில் இடம்பெற்றுள்ள நிறுத்தற்குறி,
பத்திப் பிரிப்பு, உட்தலைப்பு முதலானவற்றுக்குத்
தமிழாக்கத்தில் முதன்மை கொடுக்கப்பெறவில்லை. தமிழ்ச்சூழலுக்கு
ஏற்பவே, தலைப்புகளும் நிறுத்தற்குறிகளும் தரப்பெற்றுள்ளன.
மொழிவல்லுநரும் திறனாய்வாளருமான இமானுவேல் பெக்கர் (21 மே
1785 – 7 சூன் 1871) அரிஸ்டாட்டிலின் ஆக்கங்களைக்
கிரேக்க மொழியில் தொகுத்துள்ளார்[3]. இமானுவேல் பெக்கரின் கிரேக்கத் தொகுப்பு ஆய்வாளர்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.
பெக்கரின் தொகுப்பே அரிஸ்டாட்டிலின் ஆக்கங்களைக் சுட்டும் முதன்மைப்
பனுவலாக உருப்பெற்றது. இப்பனுவலை டபுள்யு.டி. ராஸ் 1936இல் பதிப்பித்தார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, ராபின் வாட்டர்ஃபீல்ட்-இன் ஆங்கில மொழிபெயர்ப்பில் அரிஸ்டாட்டில் பிசிக்ஸ் (Aristotle
Physics) 1996இல் வெளியானது[4]. இந்த ஆங்கில நூலே தமிழாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றது.
ஆங்கில மொழிபெயர்ப்பில் டபிள்யு.டி. ராஸ்-இன்
பதிப்பிற்கு மாறுபட்ட வாசிப்புமுறை இருப்பின் அவற்றுக்குரிய இடங்களில் (†) குறியிட்டு
விளக்கியுள்ளார் ராபின் வாட்டர் ஃபீல்ட். ஆங்கில மொழிபெயர்ப்பில்
சொற்றொடர்களுக்கிடையே ஆங்காங்கு நட்சத்திரக் குறியீடுகள் (*) கொடுக்கப்பெற்றுள்ளன.
நூலுக்கு அறிமுகவுரை எழுதிய டேவிட் பாஸ்டோக் நூலின் பிற்பகுதியில் நட்சத்திரக் குறியீடுகளுக்கு
விளக்கம் கொடுத்துள்ளார். ஆங்கிலப் பனுவல் எடுத்தியம்பும் கருத்துகளுக்கு வலுசேர்க்கும்
இந்தக் குறிப்புகள் தமிழாக்கத்தில் உரிய இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தனியே அடையாளப்படுத்தவில்லை.
அரிஸ்டாட்டிலின் பிசிக்ஸ் எனும்
ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் மொத்தம்
8 பகுப்புகள் உள்ளன. இந்தப் பகுப்புக்கான தலைப்புகளும்
அதன் உட்தலைப்புகளும் கிரேக்கத்தில் உள்ளவை அன்று. பொருண்மை அடிப்படையில்
ஆங்கில மொழிபெயர்ப்பாளரால் தரப்பட்டவையே. இந்நூலின் பகுப்புகள்
ஆங்கிலத்தில் புக் (book) என்று அழைக்கப்படுகின்றன. தமிழில் நூலின் பகுப்பு படலம், காண்டம், அதிகாரம், மண்டலம், இயல் போன்ற
பெயர்களால் விளிக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் புக் என்றழைக்கப்படும்
இப்பகுப்புகளைத் தமிழில் ‘இயல்’ என்றே கொள்ளப்பெற்றது.
சுட்டுக் குறியீடு
இமானுவேல் பெக்கர் தொகுத்த கிரேக்கப் பனுவலில் உள்ள
பக்க எண்கள், வரிகளின் எண்களே ஆங்கில நூலிலும் சுட்டுக் குறியீடாக உள்ளன. கிரேக்கத் தொகுப்பில் 184 ஏ முதல் 267 பி வரையிலான
பகுதிகள் இயற்பியல் நூலுக்குரியன. ஆங்கில நூலில் ஒவ்வொரு தொடருக்கும்
இந்தச் சுட்டுக் குறியீட்டு எண்கள் கொடுக்கப்பெறவில்லை. ஆங்கில
மொழிபெயர்ப்பாளரும் தொடருக்குத் தொடர் நேரடியாக மொழிபெயர்க்காமல் பொருண்மை அடிப்படையில்
மொழிபெயர்த்திருக்கிறார். கருத்து முதன்மை, பத்தி தொடக்கம் என தேவையின் அடிப்படையில் மொழிபெயர்ப்பாளரால் இந்தச் சுட்டுக்
குறியீட்டு எண்கள் ஆங்கில நூல் நெடுகிலும் தரப்பெற்றுள்ளது.
சான்று
: The Reason, then, why people think of time as the change of the heavenly
sphere is because all other changes are measured by this change and time too is
measured by this change என்ற வரிகளின் தொடக்கத்தில் 223b21
என்ற சுட்டுக் குறியீடு இடம்பெறுகிறது. இமானுவேல்
பெக்கரின் கிரேக்கத் தொகுப்பில் 223ஆம் பக்கத்தில் b
பிரிவில் 21ஆம் வரியில் மேற்காணும்
வரிகளின் மூலவரிகள் தொடங்குவதைப் புரிந்து கொள்ளலாம்.
இந்தச் சுட்டுக் குறியீட்டு எண்கள் தமிழிலும் தரப்
பெற்றுள்ளன. கருத்தாக்கத்திற்குரிய ஆங்கிலப் பத்தி/வரிகளின் தொடக்கத்தில்
இடப்பெற்றிருக்கும் எண்ணே கருத்தாக்கத்திற்குரியதாக கருதத் தக்கது. மேலும், ஆங்கிலத்தில் a, b என்ற
பக்கப் பிரிவுகள் தமிழில் ஏ, பி என்று ஒலிபெயர்க்கப்பெற்றுள்ளன.
மொழிபெயர்ப்பின் தன்மை
சொல்=சொல் நிலையிலோ,
தொடர்=தொடர் நிலையிலோ, பத்தி=பத்தி நிலையிலோ தமிழாக்கம் செய்யப்பெறவில்லை. அரிஸ்டாட்டிலின்
இயற்பியல் தர்க்கவியல் பின்னணியில் எழுதப் பெற்றிருப்பமையால், அவற்றைத் தொடருக்குத் தொடர் மொழிபெயர்த்தால், புழங்கு
தமிழில் அவை நெடுந்தொடர்களாக அமையும். புனைவற்ற மொழிபெயர்ப்பில்
இத்தகு நெடுந்தொடர்கள் வாசிப்பு அயற்சியைத் தரத்தக்கன. ஆதலால்,
ஆங்கிலப் பனுவல் விளக்க முயலும் பொருள்தளத்தைப் பற்றிய கருத்துகளைத்
தமிழாக்குதல் எனும் முடிவு எய்தப் பெற்றது.
இம்மொழிபெயர்ப்பானது கருத்துநிலையில் தமிழாக்கம்
செய்யப் பெற்றிருக்கிறது.
ஒரு கருத்தைப் பற்றிய நெடிய விவாதங்களின் முடிவிலும், ஒரு கருத்தை வரையறுக்குமிடத்தும், ஒரு கருத்தை வகைப்படுத்துமிடத்தும்
ஆங்கிலநூல் தரும் தகவல்கள் தமிழில் கருத்தாக்கங்களாக உருப்பெற்றுள்ளன.
தகவல்களின் சாரம் கருத்து. அக்கருத்துக்களே தமிழாக்கமானவை.
சான்று
: ‘இப்போது’ என்பது
வரம்பு. இது காலம் அன்று. 220ஏ21
இக்கருத்தாக்கத்திற்கு வலுசேர்க்கும்
வாதங்கள், விளக்கும் சான்றுகள் இத்தொடருக்கு முன்னும் பின்னும்
உள்ளன. அவையாவும் தெரிவிக்கும்
முதன்மைக் கருத்தானது மேற்காண்பதே.
ஒலிபெயர்ப்பு
இயற்கை குறித்து அரிஸ்டாட்டில் கிரேக்கத்தில் பதிவு
செய்த கருத்துகள் பிசிக்ஸ் எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. பிசிக்கி
(Φυσικη) எனும் கிரேக்கச் சொல்லின் ஆங்கில ஒலிபெயர்ப்பே பிசிக்ஸ்
(physics). இந்த ஒலிபெயர்ப்பே ஆங்கில நூலின் தலைப்பாக இருக்கிறது.
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆன் நேச்சர் (On Nature) ஆகும். ஆங்கில நூலின் பெயரான ‘அரிஸ்டாட்டில்
பிசிக்ஸ்’ (Aristotle Physics) ‘அரிஸ்டாட்டிலின் இயற்பியல்’
என்று தமிழாக்கம் செய்யப்பெற்றது. இங்கு,
‘பிசிக்ஸ்’ என்று ஒலிபெயர்ப்பதினும் ஏற்கெனவே தமிழ்ச்சூழலில்
வழக்கத்திலிருக்கும் ‘இயற்பியல்’ என்ற சொல்லைப்
பயன்படுத்தல் தலையாயது. Φυσικη = இயற்பியல்.
நூலின் முகவுரையில் தரப்பெற்றுள்ள ஊர்பெயர்கள், நூலுள் இடம்பெறும்
மனிதப் பெயர்கள் ஒலிபெயர்ப்புகளாகவே தமிழாக்கம் பெற்றுள்ளன.
எ-டு : பிளேட்டோ, அலெக்ஸாண்டர்,
ஏதென்ஸ், ‘ஏஜியன்’ கடல்
இவைதவிர்த்து, நூலுள் இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்கள்
மொழிபெயர்ப்புகளாகவே தமிழாக்கம் பெற்றுள்ளன. ஆங்கில நூலில் சான்றுகளுக்காகத் தரப்பெற்றுள்ள
A B C... என்ற ஆங்கில அகர நிரல் எழுத்துகள் தமிழாக்கத்தில் தமிழ் அகர
நிரலாக மாற்றப்பெற்றுள்ளன.
நிகரன்கள்
''நிகரான சொற்களைக் கண்டு அறிவதும் மூலமொழி நூலுக்கும், பெயர்ப்புமொழி நூலுக்கும் இடையே ஒத்த பொருளையுடைய சொற்களைக் காணுவதும்
மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோரை அடிக்கடி மலைக்க வைக்கும் பெரும் சிக்கலாகும்''
என்பது அறிஞர் ஆர்.எம்.பகாயாவின் கருத்தாகும்.[5] அரிஸ்டாட்டில்
இயற்பியல் நூலில் தனித்த சொற்களின் உரிய தமிழாக்கமே சொற்றொடரின் பொருள்தளத்தைக் கட்டியமைப்பதற்குரியதாக
உள்ளது. ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்குவதில் மும்முறைகள் பின்பற்றப்பெற்றன.
1. அகரமுதலி இணையத்தின்[6] வாயிலாக ஆங்கிலத்திற்கு
இணையான தமிழ்ச்சொற்கள் அடையாளங்காணப்பெற்றன.
2. ஆங்கிலச் சொல்லுக்கேற்ற
தமிழ்ப்பொருளை அடையாளங்கண்டு தமிழ்ச்சொல் கிடைப்பதில் தெளிவு கிட்டவில்லையெனில், செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் பேரகரமுதலி[7] வாயிலாகச் சொற்கள் எடுத்தாளப்பெற்றன.
3. சொற்களுக்கு இணையான வேறு
சொற்கள் பொருண்மை அடிப்படையில் தேவைப்படுகையில் தமிழ்மின் நிகண்டு வாயிலாகத் தெரிவு
செய்யப்பெற்றன.
இவை தவிர்த்து, தமிழக அரசு வெளியிட்ட துறைசார் கலைச்சொல்
அகராதியும், தேவையின் அடிப்படையில் சிகாகோ பல்கலை.யின் தமிழ் மின் அகராதித் தொகுப்பும்[8] பயன்படுத்தப்பெற்றிருக்கிறது. இத்தேடல்களுக்கு அடிப்படை
நிகரன்களே. இவையே, மொழிபெயர்க்கு அடிப்படையானவை.
“தியோடெர் சேவரி, ஜே.சி.காட்ஃபோர்டு, யூன் நைடா, ஆண்ட்டன் போபோவிக், நியூபெர்ட் மற்றும் லோத்ஃபூர் சையதி போன்றோர் நிகரன் பற்றிய கொள்கைகளை விளக்கியுள்ளனர்.”[9] அவை
·
மாய
நிகரன்
(Illusory Equivalent)
·
பாட
நிகரன்
(Textual Equivalent)
·
இயக்க
நிகரன்
(Dynamic Equivalent)
·
மொழியியல்
நிகரன்
(Linguistic Equivalent)
·
நடையியல்
நிகரன்
(Stylistinc Equivalent)
·
சொற்படிவ
நிகரன்
(Paradigmatic Equivalent)
·
பொருள்
நிகரன்
(Semantic Equivalent)
·
பயன்வழியியல்
நிகரன்
(Pragmatic Equivalent)
·
தொடர்
நிகரன்
(Syntactic Equivalent)
·
தொடர்பியல்
நிகரன்
(Communicative Equivalent)
அரிஸ்டாட்டில் இயற்பியல் தமிழாக்கமானது, கருத்தாக்க நிலையில்
செய்யப்பெற்றமையால் சொற்றொடர் நிலையிலான மொழிபெயர்ப்பு குறித்துப் பேசும் வாய்ப்பு
இல்லை. சொற்றொடரின் குறிப்பிட்ட சொல்லைத் தமிழ்ச்சொல்லாக்கும்
முறையே இங்குள்ளது. காலம் குறித்த அரிஸ்டாட்டிலின் கருத்துகளை
மொழிபெயர்ப்பதில் ஏற்பட்ட சொல்நிலைச் சிக்கல்கள் மட்டும் உரிய நிகரன் வகைமையில் இங்கு
தரப்படுகின்றன.
பாடநிகரன்
‘மொழிபெயர்ப்பாசிரியர் சொல்லின் பொருளுக்கு நிகரன் தேடுவதில்லை. மாறாக, மூலநூலில் காணப்படும் சூழலை இலக்கு மொழியில் உருவாக்கித்
தருகிறார்’ என்பது நிகரன் பற்றிய மொழியியலறிஞர் ஜே.சி.காட்ஃபோர்டு-இன் கருத்து[10]. இவர் பாட நிகரனை இரண்டாக வகைப்படுத்துகிறார்.
·
சூழல்
சார்ந்த நிகரன்
(Contextual Equivalent)
·
பாடம்
சார்ந்த நிகரன்
(Co – textual Equivalent)
Time - காலம்
ஆங்கிலத்தின்
டைம்
(time) என்ற சொல்லுக்கு இணையாக நேரம்-காலம் எனும்
இரு சொற்கள் தமிழில் உள்ளன. ஆனால், இவ்விரண்டுக்குமான
பொருள் வரையறை வேறுபாடுடையது. தற்காலத்தில் சொற்றொடரின் பொருண்மை
கருதி இவ்விரு சொற்களும் ஆளப்படுகின்றன. காலத்தின் குறிப்பிட்ட
கூறு நேரம். நேரத்தின் அளவு காலம். காலக்குறுமைகளை
நேரம் எனவும் நெடுமைகளை காலம் எனவும் கொள்ளலாம். கால அளவு நேரம்.
நேர அளவு காலம்.
காலம் என்ற சொல்லுக்கு காலப் பொழுது(time, duration) (காலப்பொழுது என்றே
இடம்பெற்றிருக்க்க் கூடும், அச்சுப்பிழையாக இருக்க வாய்ப்புள்ளது[11]), விடியற்காலம்(dawn),
தக்கநேரம் (proper time), நற்காலம்
(fortune), குறித்தகாலம் (fixed time), கேடுகாலம்
(evil time), இளமைக்காலம்(early stage of life), வாழ்நாள்(life time), இறப்புக்காலம் (time of
death), அறுவகைப் பொழுது(season of the year), இறப்பு-நிகழ்வு-எதிர்வு எனும் மூவகைத்
தொடர்ச்சிக்காலம் (tense, three in number viz., past, present and
future), காலமெய்ப்பொருள்(the element time) முதலான
17 பொருண்மைகளைச் சுட்டுகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.
மேலும், “தமிழிற்போல், கால், காலை என்ற சொற்கள் வடமொழியில் இல்லை. இவ்விரு சொல் போன்றே
காலம் என்னும் சொல்லும் தமிழில் அடிப்படைச் சொல்லாகத் தொன்றுதொட்டு இருவகை வழக்கிலும்
வழங்கி வருகின்றது. (கால் àகாலம். ஒ.நோ. வால்
à வாலம்)”[12]
இதன் வழி, காலம் என்பது வழக்கத்திலுள்ள
‘தமிழ்ச்சொல்’ என்பது தெளிவாகிறது.
தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்ட “தொல்காப்பியத் தகவல் பெறுவி” மென்பொருள்வழித் தேடலில் தொல்காப்பியத்தில் மொத்தம்
18 முறை காலம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மேலும்,
கால (5முறை), காலத்தானும்
(2முறை), காலத்தின் (2முறை),
காலத்து (16முறை), காலத்தும்(2முறை), காலம்தாமே (1முறை),
காலமும் (11முறை), காலமொடு
(5முறை) எனும் சொற்களும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன[13].
தமிழில் நேரம் என்ற சொல்லுக்கு வினைநேருங்காலப்பகுதி(Time), தக்கசமயம்; வேளை(தருணம்); பொழுது (opportunity, season), இருசாமங்கொண்ட அரைநாள்;
பகலிற் பாதியாகிய காலஅளவு (a
measure of the day = 2 Šāmam = 1/2 pagal = about six hours), மணி (hour), இத்தனை மணியெனக் கணக்கிடும் காலஅளவு(length
of time) எனப் பொருள் வரையறை செய்கிறது
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.
நேரம் என்ற சொல் தொல்காப்பியத்தில் இடம்பெறவில்லை. மேலும், பதினெண் மேல்கணக்கு, பதினெண்
கீழ்கணக்கு நூல்களிலும் நேரம் என்கிற சொல் இடம்பெறவில்லை. “நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை மீட்டிடம் பெற்று (பெருங். உஞ்சைக்.57:74)”[14]
எனும் அடிகள் வாயிலாகத் தமிழிலக்கிய வரலாற்றில்
பெருங்கதை பனுவலில்தான் முதல்முறையாக நேரம் எனும் சொல் இடம்பெற்றுள்ளது தெளிவாகிறது. இதற்கு, “…… பெரிய பகலினது
நாழிகையைத் தப்பாது அளந்து காணும் நாழிகைக் கணக்கர் உணவுண்ணும் பொழுதினையறிந்து பொருத்தமாகக்
கூறிநிற்பவும் என்க”[15] என பொ.வே.சோமசுந்தரனார் பொழிப்புரை
தந்துள்ளார். இங்கு,
காலத்தின் குறுகிய அலகு/குறிப்பிட்ட கூறாக
நேரம் சுட்டப்பெற்றுள்ளது.
எனினும், ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான மணிமேகலையில் மூவகைக்
காலத்தையும் விளக்குமிடத்து இடம்பெற்றுள்ள
கால
மூன்றுங் கருதுங் காலை
இறந்த கால மென்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கையா னவற்றை
நிகழ்ந்த காலமென நேரப் படுமே (மணி 30/159,162)
அடிகள் நமக்கு காலம்<நேர்<நேரம் என்பதற்கான திறப்புகளைத்
தருகிறது.
இவ்வாறு காலம் – நேரம் என்ற சொற்கள் பொதுப்பொருண்மையில்
time என்பதைச் சுட்டினாலும் தன்னளவில் தனித்த பொருண்மைகளைக் கொண்டுள்ளன.
அதோடு, காலம் என்ற சொல் பயன்படுத்தப்படும் இடத்தைப்
பொறுத்து அதற்கான தனிப்பொருண்மையும் மாற்றமடைகின்றது. போலவே,
நேரத்திற்கும். நேரம் என்ற சொல்லின் உருவாக்கம்
காலம் என்ற சொல்லுக்கான பரந்த பொருண்மைகளைச் சுருக்கிவிட்டது எனலாம்.
தற்காலத் தமிழில் நேரம் காலம் இரண்டையும் எல்லாச் சூழல்களிலும் ஒரே
பொருண்மையில் பயன்படுத்துவது சாத்தியமற்றதாகிவிட்டது. நேரத்தின் பொருண்மை காலத்துள் அடங்கும். காலத்தின் பொருண்மை
நேரத்துள் அடங்காது. அரிஸ்டாடிலின் இயற்பியல் நூலில்,
இறப்பு நிகழ்வு எதிர்வு என்பவை பற்றியும் அதன்பின்னிருக்கும் மெய்யியல்பொருள்தளம்
குறித்தும் பேசுவதால், பாடம் சார்ந்த நிகரனாக டைம் (Time)
என்ற ஆங்கிலச் சொல் காலம் என்றே பெயர்க்கப்பட்டிருக்கிறது.
Now – தற்போது இப்போது
Now is a limit, it is not
time (220a21) இப்போது என்பது வரம்பு, இது காலம்
அன்று.
நௌ
(Now) என்ற ஆங்கிலச் சொல்லானது, சொற்றொடர் எடுத்தியம்பும்
கருத்தினடிப்படையில் இருவேறாக பெயர்க்கப்பட்டிருக்கிறது. காலத்தின்
பகுப்பாகக் கொள்ளுமிடத்தில் ‘நிகழ்காலம்’ என்றும், வரம்பாக வரையறுக்குமிடத்தில் ‘இப்போது’ என்றும் பெயர்க்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது என்பதிலிருந்து மருவியதே இப்போது. இப்போது
என்ற சொல்லுக்கு, செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி ‘இப்பொழுது (திவ். இயற். பெரியதிருவ.87) (now, at this time)’ என்று பொருள் வரையறை செய்கிறது. தொல்தமிழ்ப் பதிவுகளில்
இப்பொழுது என்பது பொழுது என்ற பொருண்மையைப் பின்னணியாக உடையது. ‘இப்போது’ என்று மருவிய அதன் பொருள்தளம் சுட்டிக்குறிக்கவே
பயன்படுத்தப்படுகிறது. ‘இப்போது’ என்பதில்
பொழுது என்ற பொருண்மை இல்லை. ‘இப்போது’ என்ற சொல்லுக்கு நெருங்கிய பொருள்தளம் உடையது ‘தற்போது’
என்ற சொல். ஆனால், சுட்டிக்
குறிக்கவும் பிறிதொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஓசை இயைபு கருதியும் தற்போது
என்ற சொல்லின் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. நௌ(now)
என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ‘இப்போது’
என்ற சொல்லே தமிழாக்கத்தில் ஆளப்பெற்றுள்ளது.
Part – பகுதி
The now is not a part of
time (281a3)
நிகழ்காலம் (இப்போது)
என்பது காலத்தின் பகுதி அல்ல.
பார்ட்(part)
என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பகுப்பைக் குறிக்கிறது. இந்த ஆங்கிலச்சொல்லுக்கு, கூறு, பகுதி, புத்தகப் பிரிவு, காண்டம்,
பாகம், சம்புடம், முழுமையின்
சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று, ஒதுக்கப்பட்ட பாகம், பங்கீடு, செயலில் ஒருவரது பங்கு, கடமை, அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட
நடிப்புப் பகுதி, அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள், அரங்கில் நடிகர் பக்கம், (இசை.) குறிப்பிட்ட குரல்
அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண், (வினை.)
கூறுகளாகப் பிரி, தொடர்கிளைகளாகப் பிரி, வகிரெடு, சண்டை செய்பவர்களை விலக்கிவை, நண்பர்களைப் பிரித்து வை, வேறுபடுத்து, கூட்டுறவை விட்டொழி, (பே-வ.) பணங்கொடு, (வினையடை.) பகுதியாக, சிறிதுமட்டில், பாகத்தைப் பற்றிய மட்டில் என்ற தமிழ்ச் சொற்களைத் தருகிறது அகரமுதலி இணையதளம்.
ஆங்கிலப் பனுவலுள் இடம்பெற்ற பார்ட் எனும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில்
பாகம், பகுதி என்ற சொற்களே பொருண்மையால் அருகே உள்ளன.
பாகம் என்பதைப் பருப்பொருளின் பகுப்புகளாகவே கொள்ளவியலும். பருப்பொருளற்ற அருவப் பொருண்மைகளுக்கு பாகம் என்ற சொல் அணுக்கமானதாக இல்லை.
பகுதி என்பதே அணுக்கமானதாக விளங்குகிறது. இலக்கணப்
பின்னணியில் பகுதி தனித்த பொருள்தளமுடையது. பொதுத்தமிழில் அவ்வாறு
இருப்பதில்லை. பகுப்பு என்பதிலிருந்தே பகுதி தோன்றியுள்ளது.
ஆதலின், பார்ட் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக,
பகுதி எனும் சொல்லே பயன்படுத்தப்பெற்றது.
பொருள் நிகரன்
பொருளானது பொதுப்பொருள்(Referential Meaning), குறிப்புப் பொருள்(Connotative Meaning) என்று இருவகைப்படுகிறது.
‘இவற்றை அகராதிப் பொருள்(நுண்பொருள்), கருத்துப் பொருள்(மரபுப் பொருள்) என்றும் அழைப்பர்.’[16] அரிஸ்டாட்டிலின் இயற்பியல் புனைவிலி ஆதலால், பொதுப்பொருள்
தன்மையிலேயே பெரும்பான்மை அமைகின்றன.
Fast, Slow = விரைவு,
குறைவேகம்
Change can be faster and
slower, but time cannot, Since ‘fast’ and ‘slow’ are defined in terms of time
(218b9)
மாற்றம் என்பது விரைவாகவும் குறைவேகம்
உடையதாகவும் இருக்கலாம்,
ஆனால் காலம் அப்படியானதல்ல. ‘விரைவு’,
‘குறைவேகம்’ என்பது காலத்தின் விதிகளுக்கு
உட்பட்டது.
மாற்றத்தின் செயல்பாட்டைக் காலத்தின் பின்னணியில்
குறிக்க ஃபாஸ்ட் (Fast),
ஸ்லோ (Slow) என்ற ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளன.
விரைவின் அளவு வேகம். ஆதலால், ஃபாஸ்ட் என்ற சொல்லுக்குத் தமிழில் விரைவு என்ற சொல் பயன்படுத்தப்பெற்றது.
இதற்கு எதிர்ப்பதமான, ஸ்லோ என்ற சொல்லுக்கு குறைவேகம்
என்று பயன்படுத்தப்பெற்றது. மெதுவாக, மந்தமான
போன்ற சொற்கள் இவ்விடத்தில் சுட்ட இடமிருந்தாலும், ஸ்லோ என்பது
விரைவு அற்றதையே குறிப்பதால் ஒப்புத் தன்மையில் குறைவேகம் என்றே கொள்ளப்பெற்றது.
Number = எண்,
எண்ணிக்கை
Number is ambiguous (219b2)
எண் என்பது பொருள் மயக்கமுடையது
எண் என்பது பொருள் மயக்கமுடையது என்ற அரிஸ்டாட்டிலின்
கருத்து நோக்கத்தக்கது.
எண்ணும் எண்ணிக்கையும் ஒன்றல்ல. (பத்து
≠ பத்து ரூபாய் ≠ பத்து பைசா ≠ பத்து குதிரை). பொருள் நிகரனாக எண்ணும் எண்ணிக்கையும்
தனித்து எடுத்தாளப்பெற்றுள்ளன.
Object = பொருள்
அரிஸ்டாட்டிலின்
இயற்பியல் நூலில் பருப்பொருள்சார் பதிவுகள் இடம்பெறுகின்றமையால் ஆப்ஜெக்ட்
என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பொருள் என்ற சொல் பயன்படுத்தப்பெறுகிறது. இதன் காரணமாக, மீனிங்(meaning) என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழாக்கத்தில் பொருள்,
பொருண்மை என்றோ பயன்படுத்த இயலாச் சூழல் நிலவுகிறது. இயற்பியல் துறையில் பொருள், பொருண்மை நுண்ணிய வேறுபாட்டுடன்
பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இத்துறையில்
இவ்விரு சொற்களை வரையறைப்படுத்தப்பட்ட பொருள்தளத்துள் கட்டமைத்தலில் ஆய்வாளர்களிடையே
ஒருங்குநிலை காணப்பெறவில்லை. துறைசார் பனுவல்களில் தேவையற்ற குழப்பங்களை
வாசகர்களுக்கு விளைவித்தல் கூடாது. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலில் நெருடல்
இருப்பினும், மீனிங் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புழக்கத்தில்
இருக்கும் அர்த்தம் என்ற சொல்லே ஈடு செய்யப்பெற்றது.
Thing = பொருள்,
(விசயம்)
திங்(Thing)
என்ற ஆங்கிலச் சொல் பெரும்பாலும், தொடர்நிலையில்
‘பொருள்’ என்பதைக் குறிக்கிறது. இதனைத் தமிழில் நேரடியாகச் சொல்லால் குறிக்கவேண்டிய அவசியமில்லை. சான்றாக,
All
things are aged by time (221a26) = எல்லாவற்றுக்கும் காலத்தால்
வயதாகிறது.
இதில், பொருள் என்பது நேரடியாக இடம்பெறவில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் என்பதுள் பொருள் என்பதும்
அடங்குகின்றது. திங் என்பது செயல்நிலையில் இருக்குமிடத்தில் சூழற்களன் கருதி ‘விசயம்’
என்று பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. அதைத் தவிர்ப்பதற்கான
முயற்சி மேற்கொள்ளப்பெற்று வருகிறது.
நிறைவுரை
அரிஸ்டாட்டிலின் இயற்பியல் நூலின் தமிழாக்கமானது கருத்தாக்க நிலையில்
அமையப்பெற்றது. கருத்துகள் சொல், தொடர் அவை தாங்கிய பொருள் என்பதிலிருந்து வருவிக்கப்பெற்றன.
கருத்தைக் கடத்தும் குறிச்சொற்களைத் தமிழாக்குவதில் இணைய அகராதிகள் பயன்படுத்தப்பெற்றன.
முதன்மையாக, காலம் என்ற கருத்தாக்கப் பகுதிகளின்
மொழிபெயர்ப்புத் தன்மையானது பாடநிகரன், சொல்நிகரன் அடிப்படையிலான
அமைவு இம்மொழியாக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
துணைநூற்பட்டியல்
இராஜேஸ்வரி செ., 1992, மொழிபெயர்ப்பியல்
ஆய்வு, மதுரை: செல்லையா பதிப்பகம்
Robin
Waterfield (Translator), 1996, Aristotle Physics, London : Oxford
University Press.
[1]
https://www.sramakrishnan.com/?p=11869
[2] Aristotle Physics, p. vii
[3] இத்தொகுப்பில்,
அரிஸ்டாட்டிலின் ‘ஏதேனியர்களின் அரசியலமைப்பு’
(Constitution of the Athenians) என்கிற ஆக்கம் மட்டும் விடுபட்டுள்ளது.
பெக்கரின் பதிப்பு வெளியானதன் பிறகே இது கண்டறியப்பட்டதால், தொகுப்பில் இடம்பெறவில்லை.
[4] Aristotle Physics, Oxford
University Press, First Edition, 1996 ISBN 978-0-19-954028-0
[5]
http://www.tamilvu.org/ta/courses-degree-p201-p2012-html-p2012063-27436
[6]
https://www.xn--vkc6a6bybjo5gn.com/
[7]http://218.248.16.22/etytamildict/TamilDemo.aspx
[8]
https://dsal.uchicago.edu/dictionaries/
[9] ராஜேஸ்வரி.
செ., 1992, மொழிபெயர்ப்பியல் ஆய்வு, ப.1
[10] ராஜேஸ்வரி.
செ., மொழிபெயர்ப்பியல் ஆய்வு, ப.3
[11] செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
பேரகரமுதலி, இரண்டாம் படலம், இரண்டாம் பாகம்,
2006, ப. 169
[14] http://tamilconcordance.in/PKATHAIconc-1-%5Eee1.html#%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
[15]
சோமசுந்தரனார் பொ. வே (உ.ஆ), பெருங்கதை பகுதி 1 (உஞ்சைக்காண்டம்
–இலாவாணகாண்டம்), ப. 579.
[16] ராஜேஸ்வரி.
செ., மொழிபெயர்ப்பியல் ஆய்வு, ப.10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக