அப்போது தான் அறிவிப்பு வந்திருந்தது தில்லி
செல்ல தேர்வாகி இருக்கிறீர்கள் என்று.
இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தன தில்லி செல்வதற்கு. திருவள்ளுவர் மாணவர் இளைஞர்
மன்ற நிறுவனர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் அவர்கள் முன்னேற்பாடு செய்திட்டு ராம்
சுப்ரமணியன் அவர்கள் ஒருங்கமைத்த அந்நிகழ்வு முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அதுவரை நான் பங்குகொண்டதிலே
மிகப்பெரிய நிகழ்ச்சிஅதுதான். நாடாளுமன்ற வளாகத்தில் திருக்குறள் செல்வர் விருதளிப்பு நிகழ்வு. 133 மாணவர்களை ஒருங்கமைத்து தில்லி அழைத்துச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய செயல் என்பதை நிகழ்வு ஏற்பாட்டாளராக இருந்து ஊகித்துப் பாருங்கள்.
மிகப்பெரிய இலக்கு. கல்லூரி மாணவர்கள் உதவியுடன் திறம்பட நேர்த்தியாக செய்திருந்தனர் விழாக் குழுவினர்.
டிசம்பர் ஜனவரி மாதங்கள் இந்தியாவின் வடமாநிலங்களில் கடுங்குளிர் நிலவும்.
நாசியிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடு நமக்கேப் புகையாக காட்சிதரும்
முன்பனி மாதம் அது. அத்தகு வீரியமிகு பனிமூட்டத்தின் காரணமாக பல இடங்களில்
போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகிவிடும். சில தொடர்வண்டிகள் தாமதாகவோ இரத்தாகவோ வாய்ப்புள்ளது. அதனால் மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் காலத்தாழ்ச்சி ஏற்படும்.
வானம் வசப்படும் ஆதலின், வசந்தமும்
எங்களுக்காய் வசப்பட்டது. தமிழ்நாடு விரைவுவண்டியில் ஈரிரவு ஒரு பகல் பயணம் நாளைய
தமிழிளைஞர்களின் நட்போடு நவின்றது. பல மாவட்டபல பள்ளி சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்தம் பெற்றோர் ஆசிரியர் என அந்தத் தொடர்வண்டியின் பெரும்பகுதி நிகழ்வுக்கு வந்தவர்களே. தங்களுக்கிடையே குழுக்களாகி தங்கள் பெட்டியில் இருப்பவர்களுடன் ஒருங்கிணைந்தனர்.
ஓரளவு அங்கே சென்ற பெரும்பான்மையான பள்ளி மாணவர்களை விட
மூத்த கல்லூரி மாணவர்களுள் நானும் ஒருவன். ஆங்கிலம் அரைகுறையாகவும் இந்தி குறைஅரையாகவும் பேசவும் எழுதவும்
தெரியுமப்போது. எப்படியும் “போல்” செய்து தகவமைத்துக்
கொள்ளலாம் என்கிற துணிவில் துணைக்கு எந்தையும் முந்தையே செய்திட்ட முன்பதிவு பயணத்தில்
உடன் வந்திருந்தார். என்னினும் அதிக நட்புகளை அப்பாதான் சம்பாதித்திருப்பார்.
அதிகாலை 4
மணி இருக்கும். ஆக்ரா வந்தது. அதற்குப் பின் தான் வடமாநிலக் குளிர் தன் கணைகளைக் கொண்டு தாக்கியது. கைகள்
மறத்துப் போயின. உடல் எடை 68ஐ தாண்டியிருந்த போதினும்
கால்கள் செயலிழந்து நடக்க மறுத்திருந்தன. இதற்கெனவே அனுப்பப்பட்ட தேவ தூதர்கள் போல
கையுறை காலுறை முதலான குளிர்கால உபகரணங்களை விற்க வந்தனர் அந்த மகராசர்கள். அதைப்
பெற்று உயிர்காத்த வேளையில், காலைக் கதிரவன் கண்விழித்து, வரவேற்றான் நிசாமுதீன் இரயில்நிலையத்தில்.
16.12.2015
காலை தமிழ்நாடு விரைவுவண்டி எங்களை பாதுகாப்பாகத் தில்லியில் தரையிறக்கியது. அப்படித்தான் சொல்லவேண்டும். சில அரசு அலுவலர்களும், சமூக
ஆர்வலர்களும், தமிழறிஞர்களும் நேரில் வந்திருந்து வரவேற்றனர். அங்கிருந்து MP Quartersக்கு அழைத்துச் சென்றார்கள். காலை 10 மணிக்கு எங்கள் உடைமைகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான
அறைகளில் வைத்துவிட்டு தன்னுடல் சுத்தம் செய்திட்டு மீண்டு வந்தோம் உணவுண்ண.
உண்டு முடிப்பதற்குள் அடுத்த தகவல் திடீரென. அதுவரையிலும்
எங்களுக்குத் தெரியாது அந்த அறிவிப்பு.
உடனடியாகத் தயாராகச் சொன்னார்கள். தயாரானோம். வந்ததொரு வாகனத்தில் ஏறச்சொன்னார்கள். ஏறினோம். வண்டிப் புறப்பட்டது. சென்னைப் போக்குவரத்தில் பல நாட்கள்
பலமணிகள் நடந்தே பாதை பயின்றவனக்கு ஏதோ அரசாங்கக் காட்டில்தான் அலைபாய்கிறோம்
என்பது மட்டும் திண்ணமாகத் தெரிந்தது. நிறைவில் வந்திருந்தது ஒரு கட்டிடம். அது
கட்டிடம் அல்ல. ராஜா இருந்திருந்தால் அரண்மனை என சொல்லும் விதமாக இருந்தது.
ஆம் மாளிகை. குடியரசுத் தலைவர் மாளிகை.
காவலர்கள், கருஞ்சட்டைப் படைகள், என நான்கைந்து பிரிவுகளைச் சேர்ந்த பல தரப்பு காவலர்கள் எங்களை
நோக்கி வந்தனர். நான்கு கட்ட சோதனைக்குப் பிறகு உள்ளே நுழைந்திருந்தோம்.
அங்கிருந்து ஒரு அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தோம்.
சில உயரதிகாரிகள் காதில் புளுடூத் இருந்தது. அதன்வழி வரும் உத்தரவுகள் அவர்கள்
வாய்வழியாக எங்கள் கால்வழியால் நிறைவேற்றப்பட்டிருந்தன.
கால்கள் இறுதியில் நின்ற இடம் : யாரை நாயகனாய் ஊடகங்கள் கொண்டாடியதோ அவர்
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதே இடம். வானொலியில்
பேச வேண்டுமென்றால் குடியரசுத்தலைவராக வேண்டும் என்ற அவாவை எதேச்சையாக மனதில்
பதிய வைத்த ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் நினைவைச் சுமந்து கொண்டுள்ள குடியரசுத்
தலைவர் மாளிகை. இந்தியாவின் முதல் குடிமகன் வசிக்கின்ற வளாகத்தில் விளைந்த புற்களுக்கு
மேலே நின்றுகொண்டிருந்தோம்.
ஒருவழியாய் அந்த மொகல் தோட்டத்தை தொலைநோக்குப் பார்வையால் உணரும் தருவாய் கிட்டியது. குடியரசுத் தலைவர் மாளிகையின்
உட்புறத்தே நாங்கள் காத்திருந்தோம். அங்கே குடியரசுத் தலைவர் வரும் வரை எப்படி
நடக்கவேண்டும் என்பது குறித்த தகவல்கள் எங்களுக்கு அறிவுரைகளாக
வழங்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே பேரமைதி. காற்றுகூட கட்டுப்பட்டுக் காத்திருந்தது. நாங்கள் நேரடியாக மேடையில் ஏறி நின்றிருந்தோம். எதிர்நோக்கிய ஒவ்வொருவர் மீதும், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் கண்கள் சோதனைக் கணைகளை வீசிக்கொண்டிருந்தது.
இதோ வருவார் அதோ வருவார் வலது ஆரிக்கிளும் இடது
ஆரிக்கிளும் அலைமோதிக் கொண்டிருந்த அந்த ஐந்து நிமிட இடைவெளியின் இறுதியில்
அட்டென்ஷன் மோடிற்கு ஆக்டிவேட் செய்யப்பட்டது அதிகாரிகள் கால்கள். ஓரிலக்க
மெய்க்காவலர்கள் உடனிருக்க நிகழ்ச்சி நடத்தும் மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் அவர்கள்
உடனிருக்க,
மிகுந்த வயதுக்குரிய தளர்ந்த நடையுடன் வந்தார் அந்நாளின் பாரதத் திருநாட்டின்
பரந்துபட்ட நிலப்பரப்பின் குடியரசுத்தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள்.
வந்தார் எங்கள் எல்லாருக்கும் வணக்கம் சொன்னார். இரு முறை படம் எடுத்துக்
கொண்டோம். வாழ்த்துச் சொன்னார். எங்களுக்குத் தயாரித்து வைக்கப்பட்ட ’ஜனாதிபதி
விருந்து’க்கு அடுத்து செல்லச் சொல்லிவிட்டு, உரையாட நேரமின்றி தன் அடுத்தக் கட்டப்
பணிகளைப் பார்க்க சென்றுவிட்டார் குடியரசுத்தலைவர்.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுடன்
|
அவரோடு கலந்துரையாட இயலவில்லை. காலம் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கிறது. அப்துல்
கலாம் அவர்களைச் சந்திக்க வைத்தது.
அதற்கடுத்த ஆண்டில் அவர் இருந்த குடியரசுத் தலைவர் மாளிகைக்குள்ளேயே அழைத்துச்
சென்றது. இன்னும் காலம் இருக்கிறது.
குடியரசுத் தலைவர் விருந்து. அடுத்த நாள் மாலை வரைக்கும் கூட தாக்குப் பிடிக்கும் அளவிற்கு நிரம்பியது மனமும் வயிறும். அந்தளவுச் சுவை. சில கிரீம் வகை கேக்குகளை திருவாரூர் தாண்டாத அந்த அரசுக்
கல்லூரி நாட்களைச் சுமந்தவனுக்கு அதிசயமாகத்தானிருந்தன. இந்திய முறை உணவுகளே
பெரிதும் பரிமாறப்பட்டன. இல்லே நாங்களே பரிமாறிக்கொண்டோம். அங்கிருந்த பீங்கான் தட்டுகள், ஸ்பூன்கள், அந்த உயர்ந்த அறை, சுற்றியிருந்த உயரதிகாரிகள் எல்லாமே எனக்குப் புதியவை. அந்தத் தேநீர் விருந்தே
இரண்டு
ஃபுல்மீல்ஸ் சாப்பிடும் அளவிற்கு வயிற்றை நிரப்பியிருந்தது (நிரப்பிக்கொண்டேன்;)
அன்றைக்கு இன்னொரு முக்கியமான நாளும் கூட.
கூகுள் முதன்மை செயல் அதிகாரி தமிழர்/இந்தியர் சுந்தர் பிச்சை அப்போதுதான்
இந்தியா வந்திருந்தார். குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அங்கத்தினருடன் பேச்சு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாங்கள் எடுத்துக்கொண்ட அந்தப்
படங்கள் அடுத்த நாள் தில்லி/தமிழகத்தின் தமிழ் நாளிதழ்களிலும் இடம் பிடித்திருந்தது.
இன்றளவும் பசுமையாய் உள்ளன அச்சுவடுகள்.
இதற்கு வாய்ப்பளித்த வள்ளுவனுக்கும் வள்ளுவர்
மாணவர் இளைஞர் மன்ற நிறுவனர் தருண்விஜய் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் அண்ணன்
ராம் சுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றி.
அவருக்கும் அடுத்துப் பதவியேற்கும் குடியரசுத்
தலைவருக்கும் நல்வாழ்த்துகள்.
தக | 24.07.2017
(நாட்டின் 14வது குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஓய்வு பெறுவதை ஒட்டி, அவருடனான சந்திப்பை நினைவு கூறும் பொருட்டு எழுதப்பட்டது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக