நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Thursday, 13 July 2017

கலைஞனை அரசியல்வாதி ஆக்கிவிடாதீர்கள் - வைரமுத்து

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் எண்பத்தி ஏழாவது பிறந்த தினமான 2017 ஜூலை 09 ஆம் தேதி அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நல்லமாங்குடி கிராமத்தில் அவருக்கு வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மறைந்த பாலச்சந்தரின் மனைவி ராஜம் பாலச்சந்தர், அவரது மகள் புஷ்பா கந்தசாமி, கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் வசந்த்சாய், பிரமிட் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் பாலச்சந்தருக்கு சிலை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு மூலமாக இருந்து, இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த கவிப்பேரரசு வைரமுத்து புகழுரை ஆற்றுகையில்.,

நான் புவியரசனாக இருந்திருந்தால் 80கிலோ தங்கத்தால் சிலை செய்திருப்பேன். ஆனால், கவிராஜனாக இருப்பதால் வெண்கலச் சிலை செய்திருக்கிறேன். எனக்கு அவருக்கு சிலை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்ததும் நிறைவேற்ற நினைத்தேன். புஷ்பா தான் சொன்னார், இப்போது அப்பா சிலை இருக்கும் இடம் தான் அப்போது திண்ணை. முதன்முதலில் தாத்தாவின் வேட்டியை மறைத்து அப்பா முதன்முதலாக நாடகம் போட்ட இடம் என்று. நான் நெகிழ்ந்து போனேன்.

86 ஆண்டுகளுக்கு முன்பு,

இந்த நட்சத்திரங்கள் அறிந்திருக்காது, தமிழ் சினிமாவுக்கு மாற்று சினிமா பிறந்திருக்கிறது என்று.

உறவினர்கள் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள், தாதா சாகேப் பால்கே விருது பெறப்போகும் இயக்குநர் பிறந்திருக்கிறார் என்று.

தமிழகம் அறிந்திருக்காது, கமல்-ரஜினி எனும் மாபெரும் கலைஞர்களை திரைக்கு அறிமுகம் செய்யப்போகிறார் என்று.

இந்தக் காற்று அறிந்திருக்காது கலையாக வந்தவன் இங்கே சிலையாகப் போகிறான் என்று.

ஆனால், அதெல்லாம் நனவாகிப் போய்விட்டது. பாலச்சந்தர் தனிமனிதன் அல்ல. அவர் ஒரு நிறுவனம். அதனால் இந்தச் சமுதாயம் பல நன்மைகளை பெற்றிருக்கிறது. சாதரணக் குடும்பத்தில் கிராமத்தில் பிறந்த ஒருவன், குடியரசுத் தலைவரிடம் விருதுபெறும் அளவிற்கு இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறார் என்று சொன்னால், இளைஞர்களே இந்தச் சிலை உங்களை மவுனமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

சினிமாவில் வெற்றி பெறுவது என்பது புல்லில் நடந்து பூப்பறிப்பது அல்ல., முள்ளில் நடந்து தேனெடுப்பது. நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்தது. நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது. இயக்குநர்களின் ஆதிக்கம் இருந்தது. இவ்வளவு சுவர்களைத் தாண்டி சினிமாவில் ஒருவன் புகழ்க்கொடி நாட்டி இருக்கிறான் என்று சொன்னால், அவருக்கு மரியாதை செலுத்துவது நிச்சயம். சினிமாவில் அவர் செய்த முக்கிய செயல் மூடநம்பிக்கைகளை உடை., செண்டிமெண்ட்டுகளை தூக்கி எறி.

மூச்சு விட்டாலே உடைந்து விடும் அளவுக்கு உலகத்திலே நிலையில்லாத பொருள் எதுவோ, அதையே தன் படத்திற்கு தலைப்பாக வைத்தார் பாலச்சந்தர்.  “நீர்க்குமிழி” இந்தத் தலைப்பு வைக்கவே மிகவும் துணிச்சல் வேண்டும்.

புன்னகை மன்னன் படத்தில் நான் பாட்டு எழுதி இருப்பேன். “என்ன சத்தம் இந்த நேரம்” பாடலில்,

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சரிந்துவிட்டால் ஆரிரரோ பாடு

இந்த வரிக்கு ஒரு நியாயம் செய்திருப்பார் பாலச்சந்தர். அந்த சீனில் ஃப்ரேமை வலமும் இடமுமாக ஆட்டுவார், அது தாலாட்டு. வரிகளை உயிர்ப்பிக்க எப்படி போராடி இருக்கிறார் இயக்குநர் அது தான் பாலச்சந்தர்.
தண்ணீர் தண்ணீர் படத்தில், பஞ்சத்தின் உச்சத்தை எப்படிக் காட்சிப்படுத்துவது நெஞ்சில் தைக்க வைப்பதாய் இருக்க வேண்டும் படைப்பு. அப்படி ஒரு காட்சி, பத்திரிக்கையாளன் அந்த ஊருக்குள் செல்லுகிறான், கோடாளியால் ஒருவன் கலப்பையை வெட்டிக்கொண்டிருக்கிறான்.! கலப்பையும் ஏர் மாடும் தான் எங்கள் கடவுள். அந்தக் கடவுளையும் உடைத்து அவன் சாப்பிடுகிறான் என்று காட்சிப்படுத்தியிருப்பார்.

பாலுணர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. காதல் இல்லாமல் சினிமா இல்லை.  பாலுணர்ச்சியைக் கதை செய்பவர் தான் நாகரீகமானவர். கதையை பாலுணர்ச்சி செய்ய முடியாது. சிந்துபைரவி படத்தில் ஜேகேபியும் சிந்துவும் இணைவது எவ்வளவு நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருப்பார்.

வேலை வாங்குவது பாலச்சந்தர் தேர்ந்தவர். ஒருவரின் உச்சபட்ச திறமை என்னவோ அதனை வாங்கிவிடுவார். ரஜினியிடம் என்ன இருக்கிறது, கமலிடம் என்ன உள்ளது, எம்எஸ்வி யிடம் உச்சம் தெரியும், வாலியிடம் என்ன உள்ளது தெரியும், வைரமுத்துவின் அதிகபட்சம் என்ன  இருக்கிறது தெரியும் ? ஒவ்வொருவரிடமும் அவரது அதிகபட்சத் திறனை வெளிப்படுத்தும் வரை விடமாட்டார்.

அவரது வேலை வாங்கும் திறன் குறிப்பிட்த்தக்கது.,
பூவில் வண்டு தேனெடுப்பது ஒரு வகை,
கரும்பில் சாறெடுப்பது ஒரு வகை.,
கரும்பில் சாறெடுத்தால் கரும்பின் உருவம் போய்விடும், பூவில் தேனெடுத்தால் பூவிற்கும் நஷ்டமில்லை, வண்டுக்கும் கஷ்டமில்லை. வாலி கூறியிருக்கிறார்.

வாலி பாடல் எழுதித் தரும்போது, வாலி பாடலா, கண்ணதாசன் பாடலான்னு சந்தேகம் வருமளவுக்கு இருக்கு, ஆனா

பல்லவிக்கு இணையா சரணம் இல்லை பார்த்தீரா, என இயக்குநர் சொல்ல
சரணம் மாற்றப்படும். இது தான்ய வாலி என்று பாராட்டிய பின்

இப்ப சரணத்திற்கு இணையா மற்ற வரி இல்லை பார்த்தீரா, என இயக்குநர் சொல்ல மற்றவரி மாற்றப்படும். இப்ப பாருங்களேன் மற்ற வரிகளெல்லாம் அழகா இருக்கு அதுக்குத் தகுந்த பல்லவி மாத்திடுங்களேன்னு சொல்ல,

வாலி சொன்னாராம், ஏங்கானும், மேலே பிள்ளையார் சுழி போட்டிருக்கேனே அதாவது இருக்கட்டுமா, அதையும் மாத்திடவா என்று.  

இவ்வாறு யாரிடம் என்ன வேலை வாங்குவது எனத் தெரிந்த கலைஞன் பாலச்சந்தர். மேகத்தைப் பிழிந்து மழையெடுக்கும் கலைக் கற்றவரவர். கண்ணதாசன் சொல்லுவாராம், பாலுவிற்கு பாட்டெழுதச் செல்லும் போது மட்டும் மூளை சுறுசுறுப்பாக வேலைச் செய்கிறது என்று.

பாலச்சந்தர் படங்கள் வெற்றிப் படங்கள் தோல்விப்படங்கள் என்று எதுவும் இல்லை. புரிந்துகொள்ளப்பட்ட படங்கள், புரிந்துகொள்ளப்படாத படங்கள் என்று தான் வகைப்படுத்த முடியும்.

இந்த ஊரில் சின்ன முனுமுனுப்பு இருக்கிறதாம், பாலச்சந்தர் இந்த ஊருக்கு என்ன செய்தார் என்று ? அதற்கு நான் பதில் கொண்டுவந்திருக்கிறேன். கலைஞன் என்பவன் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் அல்ல. உங்கள் வார்டு கவுன்சிலர் அல்ல. கலைஞன் என்பவன் வானத்தில் இருந்து கொண்டு பிரபஞ்சத்திற்கே வேலை செய்து கொண்டிருக்கிறான். ஊருக்காகப் பெய்கிற மழை அவன், உங்கள் வீட்டு குழாய்களில் அவன் வடிய மாட்டான். ஊருக்கெல்லம் மழை பெய்தால் உங்கள் வீட்டுக்கும் தண்ணீர் வரும். அவரது தாக்கத்தால் இந்த மண்ணில் இருந்து நூறு இளையவர்கள் உருவாகிறார்களே அது தான் பெருமை. கலைஞனை அரசியல்வாதி ஆக்கிவிடாதீர்கள்.

அவரது பாத்திரங்கள், படைப்புகள், காட்சிகள் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சொத்து. சொல்லப்போனால், நல்லமாங்குடியின் சொத்து தேச உடைமையாக்கப்பட்டுள்ளது என்பது பெருமை.

அவரது முதல் படம் நீர்க்குமிழி, கடைசி படம் பொய். நீ வாழ்ந்த உடல் அழிந்துவிடும் நீர்க்குமிழி போல், அதிலிருந்து நிலைத்த அழியாப் புகழ் கொண்டவன் கலைஞன். இந்த வாழ்க்கை என்பது பொய், அதில் மெய் செய்பவன் கலைஞன். பாலச்சந்தர் கலைஞர்., வாழ்க அவரது புகழ் எனப் பேச்சை முடித்தார்.

த.க.தமிழ்பாரதன்
(09.07.2017 அன்று நன்னிலத்தில் கே.பாலச்சந்தர் சிலையைத் திறந்து வைத்து பேசியது)

1 comment:

  1. வைரமுத்துவின் உரை நன்றாக இருந்தாலும், சிலை வைப்பதைவிடவும் பாலச்சந்தர் எனும் நடுத்தர வரக்கத்துக்கான தமிழ்த்திரை இயக்குநரின் புகழ் நிலைத்திருக்க வேறு மாதிரி யோசித்திருக்கலாம் என்றுபடுகிறது. இன்னும் பல்லாண்டு கழிந்தும் அந்தக் கலைஞன் பேசப்படுவான், இந்தச் சிலை ஒருசில ஆண்டுக்குப்பின் எந்த நிலையிலிருக்குமோ யாரறிவார்? எனினும் உங்கள் பதிவு அருமை

    ReplyDelete