மருதக்குடியும் மகாலட்சுமி என்கிற எருமையும்.., இந்தக் கால கட்டத்தின் வேளாண் சூழலை வெளிக்காட்ட விவாசயப் பண்ணையில் விளைந்த விடியலாக பல படைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் இந்தப் படைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்படைப்பு வருதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பே இது குறித்த முன்னோட்டத்தைக் (ட்ரெய்லர்) கண்டிருந்தேன். அது அசாத்திய வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒரு மலைப் பிரதேசத்தில் அதுவும் விவசாயத்தை விரும்புகிற மேலும் அதனை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய முயற்சியை விதைத்திருந்தது.
அந்த ட்ரெயிலரின் ஒவ்வொரு காட்சி அமைப்புகளும் நெஞ்சில் தைப்பதாய் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் சதீஸ்குமார் அந்தக் காட்சிகளை ஆவணப்படுத்த எவ்வளவு உழைத்திருப்பார் என்பது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிந்திருந்தது. ட்ரெய்லரின் இறுதியில் அந்த விவசாயி தன் உழவு கருவியோடு செல்ல அவரது மனைவியின் அதிகபட்ச ஆக்ரோச ஒலிக்க அந்த ட்ரெய்லர் முடிந்த விதம் ஒரு வெள்ளித்திரைக்கு இணையான ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது ஜேக்கப்பின் படத்தொகுப்பு.
அந்த ட்ரெய்லர் பார்த்த பின்பு எனக்கு எழுந்த ஒரு வினா அப்படியே இருந்தது. காட்சிப்படுத்தப்பட்ட விவசாயி வெள்ளை நிறத்தோனாக இருப்பானா என்று ? இதற்கு புதுதில்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது, விவசாயி ஐயாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கலாமா ? என்கிற கேள்வியை எழுப்பிய போது, ஏன் விவசாயி வைத்திருக்கக் கூடாதா? அவனுக்கு முன்னேற்றம் இருக்கக் கூடாதா ? அவனது பொருளாதாரம் என்பதை எப்போதும் அடுத்தாரிடம் கேட்டுப் பெறும் அளவிற்கு வறுமைக்கோட்டுக் கீழுள்ளதாகத் தான் இருக்க வேண்டுமா ? என்பது போன்ற எதிர் கேள்விகளிடத்திலிருந்து எனக்கு விடை கிடைத்தது.
காவிரி டெல்டா தமிழகத்தின் தன்னிகரில்லாத விவசாயப் பகுதி. அதில் மீத்தேன், ஷெல் கேஸ், என அடுக்கடுக்காக மக்களை வெளியேற்றி மண்ணை மலடாக்கும் திட்டத்தை ஒருபுறம் அரசாங்கம் நிகழ்த்தி வர, ஏற்கெனவே கர்நாடகத்தால் தமிழகத்தில் கைவிரிக்கப்பட்ட காவிரி புணர்வாழ்வின்றி தவிக்க, கண் இருந்தும் குருடாய் ஆவியாக்கப்பட்ட மண்ணீரை எல்லாம் மழைநீராய் தரமறுத்த ஆகாயத்தை எதிர்த்து நீதிகேட்க நாதியற்ற சூழலில் பயிர் விளையும் நிலங்கள் யாவும் விவசாயி கொலை புரியும் நிலமாகி வருவதை எதார்த்தத்துடன் வெளிப்படுத்துகிறது கதைப்போக்கு.
வானொலியின் காந்தக் குரலால் கதிர்வெடித்துப் பிழம்பு விழும் கண்ணியக் குரல் வளம்கொண்ட சரோஜ் நாராயண சுவாமியின் செவியின்பம் கொணரும் குரலை ஆவணப்படுத்தியிருப்பதற்கே இயக்குநருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். வானலைகளில் வானொலியின் செய்திகள் வானவில்லாய் மறைந்திட அதனூடே ஒளி(லி)பரப்பிய அவரது குரலொலியை அடுத்தத் தலைமுறையும் உய்த்துணர்வதற்கான வெளியை இந்தப் படைப்பு நிலைநிறுத்தியிருக்கிறது.
பெரும்பாலும் மலைவாழ் பிரதேச வாழ்க்கை என்பதைக் காதல் காட்சிகளுக்காய் சாசனம் செய்துகொடுத்த தமிழ்த் திரை பிம்பத்தை உடைத்து அம்மக்களின் விவசாயக் கூறுகளைக் கருவிகளை சூழல்களை ஆவணப்படுத்தி அதிலிருந்து வெளிவரும் உணர்வுகளை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மணிவண்ணன். உண்மையில் சமவெளிப்பகுதிகள் மட்டுமே கட்புலனான மக்களுக்கு மலைப் பிரதேசத்தின் விவசாயத் தன்மைகளையும் விலங்குகளையும் கட்டிட அமைப்பு போன்றவை புதிய புதினமாகவே இருக்கும்.
குறிஞ்சி நிலத்தின் மருதக்குடிகளுக்கு உயிர் முக்கியத்துவம் வாய்ந்து பொருளாதார முக்கியத்துவமிழந்த விவசாயம் என்பது எவ்வளவு எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கியிருக்கிறது என்பதை உலகமயமாக்கலுக்கு உரமாகிப் போன விவசாயியின் மனைவி பகரும் வடிகட்டப்பட்ட வார்த்தைகளை நோக்குகையில் உணரலாம்.
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று சொன்னது மனிதர்களுக்கு மட்டுமல்ல என்று, ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற விரக்தி விவசாயியை காப்பாற்றி யிருக்கும் அந்த மகாலட்சுமியைத் தெய்வமாகப் பார்க்கும் கடைக்கண் பார்வை உச்சபட்சம். அடுத்த நாள் வேலை பார்க்கச் செல்லும் போது, தன் சகவிவசாயியின் உள்ளத்தை அப்படியே அகக்கண் கொண்டு ஆராய்ந்து தற்கொலையைத் தடுத்திருக்கும் விவசாய மனம் மகாலட்சுமியின் மனிதநேய நீட்சி.
இறுதியில் ஒரு உயிர் செல்வதறிந்து அதனை படைத்தவன் சோகம் கொள்வான். காக்க முயல்வான். நித்தமும் நிலத்தின் உயிர்வளர்க்கும் விவசாயி பயிர் கருகுவதையே நாடான். உயிர் போவதையா பார்த்திருப்பான். ஓடி வந்து அந்த மற்றொரு விவசாயியின் உயிரைக் காவந்து செய்வது மனித மனத்தின் ஆட்சி. கடைசி வரை உழைப்போம் என்றந்த ஈற்று வரியின் இறுதி இசை
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை.
என்ற வள்ளுவனின் வரிகளை நினைவுபடுத்திச் சென்றது. யாரால் உலகம் வாழ்கிறதோ, அவர்களாலே வாழ முடியவில்லை என்று சொன்னால் எந்தச் சூழலில் நம்மை நாம் தகவமைத்துத் தற்காத்துக் கொள்ளப் போகிறோம் என்பது அவசியமானது.
இதனால் விவசாயம் பெருகிடுமா, இணையத்தில் விவசாயம் சார்ந்த இத்தனைக் கட்டுரைகள் வந்துள்ளதால் வேளாண் உற்பத்தி அதிகரித்து விட்டதா ? அதனால் மறுமலர்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா ? என்பது அர்த்தமற்ற விவாதத்திற்கு வழிவகுக்கும். படைப்பு ஒன்றை ஆவணப்படுத்தும். அடுத்த தலைமுறை ஒருவேளை உணவின்றி உயிர்வாழ்தலுக்கான சூழலைக்கூடப் பெறலாம். ஆனால், உலகிற்கு உணவு கொடுத்த ஒரு குடி தன் உயிர் வாழ்விற்கே கடினப்பட்டது என்பதை அந்தக் காலக் கட்டத்தினூடே பதிவு செய்தல் அவசியமானது அந்த வகையில் இந்த மருதக்குடியும் மகாலட்சுமி என்கிற எருமையும் காலத்தின் பெட்டகத்தில் முக்கியத்துவமானது.
இன்னும் சமூகம் சார்ந்த படைப்புகள் வெளியிட நிழலி காட்சிக் களத்திற்கு வாழ்த்துகள்.
இதனால் விவசாயம் பெருகிடுமா, இணையத்தில் விவசாயம் சார்ந்த இத்தனைக் கட்டுரைகள் வந்துள்ளதால் வேளாண் உற்பத்தி அதிகரித்து விட்டதா ? அதனால் மறுமலர்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா ? என்பது அர்த்தமற்ற விவாதத்திற்கு வழிவகுக்கும். படைப்பு ஒன்றை ஆவணப்படுத்தும். அடுத்த தலைமுறை ஒருவேளை உணவின்றி உயிர்வாழ்தலுக்கான சூழலைக்கூடப் பெறலாம். ஆனால், உலகிற்கு உணவு கொடுத்த ஒரு குடி தன் உயிர் வாழ்விற்கே கடினப்பட்டது என்பதை அந்தக் காலக் கட்டத்தினூடே பதிவு செய்தல் அவசியமானது அந்த வகையில் இந்த மருதக்குடியும் மகாலட்சுமி என்கிற எருமையும் காலத்தின் பெட்டகத்தில் முக்கியத்துவமானது.
இன்னும் சமூகம் சார்ந்த படைப்புகள் வெளியிட நிழலி காட்சிக் களத்திற்கு வாழ்த்துகள்.
- த.க.தமிழ்பாரதன்
08.07.2017
(மருதக்குடியும் மகாலெட்சுமி என்கிற எருமையும் குறும்படத்தின் முன்னோட்டம் பார்த்த ஆர்வத்தில் அக்குறும்படம் பார்த்ததன் பொருட்டு எழுதியது)
தங்கள் கருத்து அற்புதம். சிறந்த திறனாய்வு.வாழ்த்துகள்
பதிலளிநீக்கு