நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Sunday, 30 July 2017

திருநங்கைகளின் ஓவியங்கள் ...


திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள்

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காட்சி ஊடகத் துறையும் பாலியல் துன்புறுத்தல் எதிரான குழு - பாலின உணர்திறன் ஆலோசனை அலகும் இணைந்து நடத்திய இரண்டு நாள் ஓவியக் கண்காட்சி நடந்து முடிந்தது.

முதல் முறையாக ஒரு கல்வி நிலையத்தில் திருநங்கைகளின் ஓவியக் கண்காட்சி நடப்பது இதுவே முதல் முறையாகும். இதில் சென்னை கோவை காஞ்சிபுரம் நாகர்கோவில் திருவனந்தபுரம் ஆந்திரம் கர்நாடகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. ஆயிரம் ரூபாய் முதல் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரையிலான மதிப்புடையவை ஒவ்வொரு ஓவியங்களும்.ஓவியக்கண்காட்சியில் பேசிய பல்கலை. துணைவேந்தர் பேராசிரியர் ஏ.பி.தாஸ்,

இந்தியாவில் திருநங்கைகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும் அப்போது தான் எந்தெந்த திட்டங்களில் அவர்களுக்கு வேலைக் கொடுக்க முடியும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.


திருநங்கைகளை மக்கள் புறக்கணிப்ப்தைத் தவிர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் என்று அரவணைத்துச் செல்ல வேண்டும். திருநங்கைகளை ஏற்காமலிருப்பதும் நண்பர்கள் - பெற்றோர்கள் வெறுப்பதும் நல்ல அணுகுமுறை கிடையாது. அவர்களுக்கு வேலை கொடுக்காமலிருப்பதும் அவர்களைத் தனித்து விடுவதற்கான வாய்ப்பாக அமையும்.

இதனால் புறக்கணிக்கப்பட்ட மனத்துடனே பலர் தங்கள் வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். புதிய சிந்தனையை விதைப்பதன் மூலமே மாற்றுக்கருத்தை விதைக்க முடியும். மாணவர்களால் இக்கருத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
 ஓவியம் என்பது திருநங்கைகளின் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் களமாகும். ஓவியத்திற்கு மட்டும் தான் உலகளவில் ஒரே மொழி. ஆகவே, எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஓவியத்தின் மொழி அமைவதால் திருநங்கைகளின் மனதை ஓவியத்தில் ஒருங்கிணைத்திருக்கிறார் கல்கி சுப்ரமணியம்.

அவர் பேசியதிலிருந்து,

மருத்துவத்தில், பல்கலைக்கழகங்களில் , ஊடகத்தில் என பல்வேறு தளங்களில் திருநங்கைகள் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள். அதேபோல் திருமண விழாவில், திறப்பு விழாக்களில் திருநங்கைகள் ஆசிர்வதிக்க அழைக்கப்படுகிறாஅர்கள்.  ஆனால், தனது சொந்தக் குடும்பத்தில் மட்டும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுப்பது தன் வேதனையானது.
நாட்டில் திருநங்கைகளுக்கான உரிமைகள் முழுமையாக அங்கீகரிக்கபடவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெற்றொர்களால் திருநங்கைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனாலும் தடைகளை உடைத்து சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் திருநங்கைகள் எதிர்பார்ப்பது ஆதரிப்பு மட்டுமே.

எங்களிடம் எல்லா வகையிலும், துணிவு, திறமை சாதிக்கும் ஆற்றல் உள்ளது. அதனை வெளிப்படுத்தும் ஒரு துறையாக ஓவியம் விளங்குகிறது. இதுவரை தென்னிந்தியாவில் மொத்தம் 6 பயிற்சிப் பட்டறைகள் அமைத்து திருநங்கைகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்கி அவர்களது அக உணர்வுகளை ஓவியத்தின் வழி வெளிக்கொணர்கிறோம். இதற்கு திருநங்கைகள் மத்தியில் வரவேற்பு கிட்டியுள்ளது. அவர்களது தனித்திறன் மேம்பாடு அடைந்துள்ளது. 


உலகளவில் பத்தாயிரம் திருநங்கை ஓவியர்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். திருநங்கைகளின் ஓவியத்திறனுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. “எல்லாருமே ஓவியர், உங்கள் ஓவியம் என்ன என்பதை நீங்கள் தான் வரைய வேண்டும்! என தத்துவம் கூறும் கல்கி சுப்ரமணியம்

Trans Hearts என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் திருநங்கைகளிடையே ஓவியத்திறனையும் மக்களிடையே திருநங்கைகள் உணர்வுகளையும் எடுத்துச் செல்கிறார்.

இந்த இரண்டு நாள் ஓவியக்கண்காட்சியை பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டனர். ஓவிய விற்பனையும் நடைபெற்றது.  சில ஓவியங்கள் அழகியல்  தன்மை, கருத்தியல் தன்மை கொண்டதாகவும் பல ஓவியங்கள் உளவியல் தன்மை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தன. சில ஓவியங்களை ஒன்றுக்குமேற்பட்ட திருநங்கைகள் வரைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


ஓவியத்தின் வழி ஒளி பரவட்டும் !


த.க.தமிழ்பாரதன்
30.07.2017
(தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்து முடிந்த திருநங்கைகளின் ஓவியக்கண்காட்சிக் குறித்து எழுதியது)No comments:

Post a Comment