நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Sunday, 9 July 2017

நெகிழ்ந்து பேசிய இயக்குநர் மணிரத்னம்.,

தமிழ்சினிமாவிற்கு மாற்று முகத்தை விதைத்த இயக்குநர் பாலச்சந்தருக்கு அவர் பிறந்த ஊரில் சிலை நிறுவப்பட்டது. தமிழ்த் திரையுலகின் தவிர்க்க இயலாத அடையாளங்களுள் ஒருவர் இயக்குநர் பாலச்சந்தர். தயாரிப்பு நிறுவனங்களும், திரை நட்சத்திரங்களும் கோலோச்சிய காலத்தில் இயக்குநராய் களம் கண்டு தன்னையும் தன் படங்களையும் நிலைநிறுத்தியவர் கே.பாலச்சந்தர். 

தமிழ்த் திரையுலகிற்கு ஏராளமான முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கித் தந்தவர் என்கிற சிறப்பு அவருக்குண்டு. இதற்கெல்லாம் மணிமகுடமாக 2010ஆம் ஆண்டு பாலச்சந்தருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2014 டிசம்பர் 23ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மண்ணுலகில் இருந்து மறைந்தார்.

On Stage Director Maniratnam Speech
இந்நிலையில் அவரது எண்பத்தி ஏழாவது பிறந்த தினமான 2017 ஜூலை 09 ஆம் தேதி அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நல்லமாங்குடி கிராமத்தில் அவருக்கு வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மறைந்த பாலச்சந்தரின் மனைவி ராஜம் பாலச்சந்தர், அவரது மகள் புஷ்பா கந்தசாமி, கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் வசந்த்சாய், பிரமிட் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது,

சின்ன பிள்ளையிலே என்னை ஹாஸ்டலில் சேத்துட்டாங்க. அதனால் சினிமா பார்க்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.  ஒரு முறை  அப்பா  சினிமா பார்க்க 5ரூபாய் கொடுத்திருந்தார்.  அன்று நான் பார்த்த படம் இரு கோடுகள். அதுவரை நடிகர்கள் தான் முக்கியம் என்றிருந்த என் பிம்பத்தில் இயக்குநர் புதிய தேடல் தந்திருந்தார் கேபி சார். 

பிற்காலத்தில், அவருடனே பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைத்திருந்தன.  கவிதாலயாவில் ரோஜா படத்தின் கதையைச் சொல்லிமுடித்தேன். டைட்டில் என்னன்னு கேட்டார் ? ”ரோஜா” என்று சொன்னேன்.

என்ன இது “பாக்குத் தூள்” மாதிரி இருக்கு.? என்றவர் அடுத்த நாள் அதுவே இருக்கட்டும் என்றார். அவரிடம் வசனம் எழுதுங்க சார் என்றேன். அது சரியா இருக்காது என் வசனம் எனக்குத் தான் சரியா இருக்கும் என்றார் கேபி. அது இப்போது தான் புரிந்தது, ஆசிரியரிடம் மாணவனே என் விடைத்தாளில் நீங்களே விடையெழுதுங்கள் என்பது போன்றது.

With my lovely director Maniratnam 
வைரமுத்து மணிவிழா கோவையில் நடந்தது. அதற்கு சென்னையிலிருந்து கோவை சென்றோம். விமானம் கிளம்பிய பின், அவர் எடுக்க இருந்த அடுத்த கதையை கூறினார். கேபி சார் இருந்திருந்தால் அந்தப் படம் வந்திருக்கும்., முதலில் அவரிடம் நான் கதை கூறினேன். இப்போது அவர் கதை கூறுகிறார். அந்த நாளில் அவர் கடந்து வந்த பாதை, அவரைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.  அந்த ஒருநாள் முழுவதும் அவருடன் இருந்தேன். கடைசியாய் என் தோளில் அவர் தட்டிய நாள் அது. இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கான காரணம் அவர்தான்.

என்று நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார் மணிரத்னம்.


த.க.தமிழ்பாரதன்
(நன்றி : விகடனிலும் பெரிய கட்டுரையாக வெளிவந்துள்ளது)

No comments:

Post a Comment