#வந்தநிலையும்வருநிலையும்
தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்றுள்ளேன் சிலமுறை. முதன்மைக் கட்டிடத்தின் அருகே செல்லும் வாய்ப்பு கிட்டியது இன்றுதான்(25.03.2021).
அலுவல் கட்டிடம் அது . பெரிய கல்வெட்டு ஒன்றிருந்தது அதன்முகப்பில். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய்.சு எழுதிய கடிதமே அந்தக் கல்வெட்டு.
அதைப் படித்ததும் (வடிவேலுவின் குரலில்) "என்னா மனுசன்யா... " என்றிருந்தது.
கல்வெட்டில் இருந்த வ.அய்.சு அவர்களின் கடிதம், அப்படியே இதோ...
*****
வாழ்த்து..
இன்று (31.07.86) மாலை ஐந்து மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து
ஆய்விற்காக நான் திருவனந்தபுரம் செல்கிறேன்.
பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல்
பிறர்கையில் மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களனைவருடன் உழைத்துத்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில்
ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது.
இணைந்த செயற்பாடும், உறவு முறையும், தமிழுக்காகச் செய்கின்றோம்
என்ற மனநிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம்.
இவற்றிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்ற ஒன்றன்று.
இது உயராய்வு மையம். இங்கே அறிவுசான்ற சிலரே இடம்பெற முடியும்.
இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்த்த்
தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குட்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதைப்போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயற்பட வேண்டும்.
என்று ஆய்வின் தரம் குறைகிறதோ
அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்து விடும். நல்கைகள் குறையும்;
பொருள் முட்டுப்பாடு தோன்றி,
தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வளர்க்கும்
இந்த நிறுவனம் நிலை குலைந்துவிடும்
இதனை ஒவ்வொருவரும் நினைவிற் கொள்வது நன்று.
இதன் வாழ்வும், வளர்ச்சியும்
ஒவ்வொரு ஆய்வாளர்/அலுவலர் கையில் எப்போதும் இருக்கும்.
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்று அடிகள்
நமக்கு மனப்பாடம்.
‘அறநெறி’ தவறாமல் செயல்படுவதே பெரும் அரச வெற்றி’ என்று
அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம்.
தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியைத் தமிழர் அனைவரும்,
ஏன் பிற மாநிலத்தார் கூட உன்னிப்பாக்க் கவனித்து வருவர்.
அயல் மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில்
அகலவிருந்து பார்த்து
உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும்.
தளர்ச்சியிருப்பின் என்முகம் வாடும்.
அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால்
நான் காலமான பின் என்னுடற் சாம்பலின் இம்மியளவைத்
தஞ்சைத் தென்வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே
வளர்ந்த மரத்தடியிலும்,
காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட
என் குழந்தைகள் அனுப்புவர். புதைத்திடுக.
நீங்களனைவரும் வளமுற வாழ வாழ்த்துகிறேன்.
-
வ.அய்.சுப்பிரமணியன்
துணைவேந்தர்
31.07.1986
*****
நிற்க,
அண்மையில், NAAC வழங்கும் புள்ளிகள் பட்டியலில் தமிழ்ப் பல்கலைக்கழகம் B+ நிலைக்கு இறங்கியுள்ளது. இதனால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வ.அய்.சு அவர்களின் முகம் வாடியிருக்கும்தானே!
- தக | 25.03.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக