நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Tuesday, 25 April 2017

அவசரப் பயணம் அசாத்தியமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எனில்.,

விகடன் மாணவப் பயிற்சித் திட்டம் அடையாளம் காட்டிய ஆளுமைகளுள் ஒருவன்பார்க்கும் முன்னரே மின்னஞ்சல் வழியாக தன் அடுத்த குறும்படத்திற்கான வரைவு முன்னோட்டங்களை அனுப்பியவன்எழுத்து,இயக்கம்காமிராநடிப்பு எனப் பன்முகத்தன்மைகொண்டவன் என்பதை முதல்நாள் முகாமின் முன்னிரவில் வாங்கிய நண்பர்களின் கலாய்ப்புகளால் உணர முடிந்தது.

அதிகம் பேசியது இல்லை., அவ்வப்போதெல்லாம்.
எழும் இச்சை எலுமிச்சை எனப் படங்களுக்கு பெயர் வைக்கும் சூத்திரம் தெரிந்த மந்திரவாதிஅவனது முதல் படம் கத்திக் கப்பல் எனக்குப் புரியவே இல்லை.,காரணம் காதல் கப்பலில் சவாரி செய்வதற்கான பாஸ்போர்ட்க்கு இன்னமும் நான் விண்ணப்பிக்கவேயில்லை. அதற்கடுத்து அவ்வப்போது வரும் டப்ஷ்மேஸ் வீடியோக்களுடனும் குறும்பட காணொளிகளுடனும் காலத்தைக் நகர்த்தி வந்த நாட்களின் மத்தியில் ஒரு நாள் ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தான். உண்மையில் அதற்கான விமர்சனம் இது.

A Video for Every Indian - A Touching Video on Ambulance Driver https://www.youtube.com/watch?v=7YJc9AJLQso எனும் இணைப்பில் இன்னும் யுடியூபில் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகிறது காணொளி. தென்னிந்திய திரைப்பட கலைஞர் சங்கத் தலைவர் நடிகர் நாசரின் வாழ்த்துகளோடு.,

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி அதிக மக்களுக்குத் தெரியப்படுத்திய உண்மை நிகழ்வு ஹிதேந்திரன் என்ற இளைஞரின் வாழ்க்கையின் இறுதி நிமிடங்கள்.  மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைப் பல மனிதர்களின் உயிர்களோடு இணைத்து அவர்களுக்கு வாழ்வளித்த சம்பவம் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் உடலுறுப்புத் தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த நெகிழ்ச்சியான சம்பவம்.

அந்த நெகிழ்ச்சிக்குரிய நிகழ்வின் போது அதிகம் பேசப்பட்ட நபர் மருத்துவர்கள், ஹிதேந்திரன், அவர்தம் பெற்றோர் போன்றவர்களை விட அவரது உடலுறுப்புகளை உரிய நேரத்திற்குள் எடுத்துச் சென்ற வாகன ஓட்டுநர் தான். அந்த உயிர்க்கதையை மையமாய் வைத்து எடுக்கப்பட்டதே “சென்னையில் ஒரு நாள்”.

இவ்வாறு நித்தமும் யாருக்காகவோ பயணப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஓட்டுநர்களில் முக்கியமானவர்களான ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தான் இந்த ஆவணப்படத்தின் கதாநாயகர்கள், அவர்களுடைய வாழ்க்கைப் படிநிலை, வாழ்வியல் சூழல்கள், பொருளாதரச் சிக்கல்கள், உளவியல் பிரச்சினைகள், சூழலியல் தேவைகள் என அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அத்தனை செயல்களையும் திரைக்குள் தெறிக்கவிட்டிருக்கிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனை தான் களம், அதிலிருந்து வெளியுலகத்தின் தொடர்புப் பிரதிநிதிகளாக உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு உரிய நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரை காவந்து செய்து கொண்டு வரும் கண்ணன்களாக இருக்கும் இருவர் தான். ஒருவர் குடும்பத்துடன் வசிப்பவர், மற்றொருவர் தனியே வசிப்பவர்.

இருவரின் வாழ்க்கையும் தினசரி நடவடிக்கைகளால் மட்டுமே இயங்கும் அளவு தான் வருமானம், பிள்ளைகளைப் படிக்க வைக்கவும் அன்றாடச் செலவுகளை அட்ஜஸ்ட் செய்யவும் என மாதத்தின் முதல் 15 நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையை இயக்கும் வாகனத்தின் வேகம் குறைந்து விடுகிறது.

பதற்றமின்மையே பாதி வெற்றி என்பது போல, எவ்வளவுக்கு எவ்வளவு பதற்றமின்றி பயணம் இருக்கிறதோ அந்த அளவிற்கு இலகுவாக பயனாளர் பாதுகாப்பாக மருத்துவமனையை அடைய முடியும்.   தன் மேல் நம்பிக்கையும், தன் வாகனம் ஓட்டும் திறன் மேல் துணிச்சலையும் கொண்ட ஒருவரால் மட்டும் தான் தொடர்ச்சியாக இயங்க இயலும்.

கோல்டன் மணிநேரம்
ப்ளாட்டினம் நிமிடம்
டைமண்ட் நொடிகள்
என மருத்துவத்தின் மகத்துவமே நேர மேலாண்மைக்குள் அடங்கி இருப்பதை மருத்துவர் ஒருவர் தெளிவுபடுத்துகிறார், அதற்கு முக்கியக் காரணமாக இருப்பவரான ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் நினைவு கூறுகிறார்.

வேகம் அதைத் தாண்டிய விவேகம் இது தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் மனக் கட்டுமானம்., இரத்தத்தைப் பார்த்தே பயம் கொள்கிற பலர் இருக்கிற தேசத்தில் எவ்வளவு இரத்தச் சேதம் ஆகியிருந்தாலும், மிக மோசமான விபத்தாக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் காப்பாற்றி உரிய நேரத்திற்குள் உயிர்காப்பாற்ற வேண்டிய சூழல் தான் வாழ்வின் மிகவும் உச்சபட்ச சூழல். சராசரி மனிதர்களுக்கு என்றாவது ஒரு நாள் தான் ரிஸ்க் எடுக்கும், மிகவும் முக்கியமான சூழல் வரலாம். ஆனால், தினசரி இவர்கள் ரிஸ்க் எடுத்து பழக்கப்பட்டவர்கள்.

ஒரு நாளைக்கு சென்னை போன்ற நகரங்களில் 1200-1500 நபர்கள் ஆம்புலன்ஸ் சேவை பெறுகிறார்கள். இவ்வாறு பெரும்பாலன நபர்கள் தன் வாழ்வின் இறுதி மூச்சிற்குள் ஒரு முறையேனும் ஆம்புலன்ஸ்க்குள் கழிக்க, அன்றாடப் பொழுதுகளும் அதனுடனே தானே இயங்குகிறது இவர்களுக்கு. இவையனைத்தையும் ஆம்புலன்ஸ் வாழ்க்கை தாண்டிய அன்றாட வாழ்க்கையையும் அதன் நிறை குறைகளையும் மனைவி பிள்ளைகள் இவர்களோடு சேர்த்து எக்ஸ்குளூசிவ் ஆவணப்படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர்.

உண்மையிலே உட்கார்ந்த இடத்திலிருந்து  நான்கு சுவர்களுக்குள் எடுக்கப்படும் ஆவணப்படங்களை விட முழுவதும் இயங்குகிற களத்தில், அதுவும் சென்னை போன்ற மெட்ரோபாலிடன் சிட்டியில் சாலைகளிலும் சேர்த்து படப்பிடிப்பை நிகழ்த்தி  இந்த ஆவணப்படத்திற்கான மெய்த்தன்மையை மெருகூட்டியுள்ளனர். கேமிராவின் வேகம் ஆவணப்படத்தின் விவேகத்தை கூட்டியுள்ளது. பல ஷாட்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்நோக்கக் கூடியதாக இருந்தது.

ஹெட்செட் போட்டுட்டு கார் பைக் ஓட்டக்கூடாது என்பது என அழுத்தமாக ஓட்டுநர் ஒருவர் பதிவு செய்கிறார்., உண்மையில் இது முக்கியமானது. தன் காது, தன் செல்போன், தன் விருப்பம் என்று கருதியே பலரும் செல்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் அவர் விபத்தை விளைவிக்கலாம். ஆபத்தில் சிக்கிய உயிர் அவசரமாக செல்லும் போது வழிவிட செவிமடுக்காமல் இருக்கலாம். இது போன்ற சூழல்களில் முழுக்கவனமும் எல்லா வாகன ஓட்டிகளுக்கும் சாலைகளில் இருக்கவேண்டும் என்பதை சாடாமல் சாடியுள்ளார்.
BLS (Basic Life Support) எனும் அடிப்படைப் பயிற்சி பற்றி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். இன்று பெரும்பாலும் தரைதளம் மட்டுமுள்ள கட்டிடங்களைக் காணுதல் அரிதினும் அரிது. அப்படிப்பட்ட சூழலில் அவசர சூழலில் லிப்ட் இல்லாத கட்டிட்டங்களில் இருந்து கணநேரத்திற்குள் கவனத்துடன் அவர்களை அழைத்து ஆம்புலன்ஸ்க்கு கொண்டுவருவதே மிகப் பெரிய சவாலாகும். அதற்கடுத்தே ஆம்புலன்ஸிலிருந்து மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவுக்கு அழைத்து வருவது எல்லாம்.

நேரம் இந்த உலகின் யாராலும் சிறைப்படுத்த முடியாத உயர்ந்த இடத்தில் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது. அப்படிப்பட்ட நேரத்தின் அருமை என்பது அநேக மக்களால் உணர்தல் இல்லை. ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஒவ்வொரு நொடியும் உயிர் நொடியே. அதனை உணர்ந்து எடுத்திருக்கும் ஒவ்வொரு ஷாட்களும் அப்லாஸ் அள்ளுகிறது. களத்தின் பதிவுகளை நேரடியாக அப்படியே கொணர்ந்ததில் ஆவணப்பட குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

பல படங்களைப் பார்த்துவிட்டு அதற்கு விமர்சனம் எழுத வேண்டும் என நினைத்து கலைந்து போன கனவுகளாய் இருந்த விமர்சனப் பகுதிக்கு முதல் முறையாய் விமர்சனம் எழுதிய ஆவணப்படமாய் விளங்குகிறது உயிர்க்காக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குறித்த இப்படம். 

நல்வாழ்த்துகள் இயக்குநர் நண்பன் உள்ளிட்ட குழுவினருக்கும்
தலைவணக்கம் எல்லா இடத்தினின்றும் இயங்குகிற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும்

த.க.தமிழ்பாரதன் 
(தினேஷ் இயக்கிய ஆவணப்படத்திற்கு விமர்சனம் அளிக்கும் பொருட்டு எழுதப்பட்டது) 

No comments:

Post a Comment