நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

மகளிர் தினத்தை ஆண்களும் கொண்டாட வேண்டுமா ...?

Same to u  மக்காள்

தினங்களைக் கொண்டாடுதல் என்பது பெரும் பாலும் சராசரி மனிதர்கள் கொண்டிருக்கும் மறதியைத் திரும்பக் கொணரும் வழி என்பதால் தான் 365 நாட்களும் ஏதாவது ஒரு தினத்தால் அடையாளப்படுத்தப் படுகிறது. அது நம் அன்றாட வாழ்வின் மறதியிலிருந்து அவ்வப்போது பொதுப் போக்கில் சிந்திக்கத் தேவையானதாகவும் இருக்கிறது. 


அந்தநாள் முழுவதும் எதைப் பற்றி கொண்டாடப்படும் என்ற  கருத்தே முன்னிலைப்படுத்தப்பட்டு விவாதக்களத்தில் விதைகளாக விதைக்கப்படும். இதில் கருத்துருக்கள், எதிர்கால நோக்குகள் தாண்டி தலைவர்களின் பிறந்த, இறந்த நாட்களுக்கும் பெரும்பகுதி பங்கு உண்டு. விதைக்கப்பட்ட விதைகளின் வீரியம் என்னவோ வெறும் ஒரு நாளுக்கு உள்ளதாகவே நீர்த்துப் போய்விடும் சூழல்.



அப்படித்தான், பெரும்பாலும் தினங்களைக் கொண்டாடும் பழக்கத்தை எதிர்ப்பதிலே அதீத நம்பிக்கை உண்டு. யுஜி படிக்கும் போது முதல் பருவத்தின் தமிழ்த்தாளின் பாடப்பகுதியில் ஒரு கவிதை படித்த நினைவு, கவிக்கோ அப்துல்ரகுமானின் வரிகள் :



தலைப்பு : தீக்குச்சிகள்

யாருடைய ஒளிக்கோ 
இவர்கள் தீக்குச்சி ஆகிறார்கள்,
இனி,
தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு

குழந்தைகளைக் கொண்டாடுவோம்.


குழந்தைத் தொழிலாளர் முறையைச் சாடி எழுதப்பட்ட இந்த வரிகளின் ஈற்று என் மனவானின் கிழக்கின் கீற்றுக்கு ஒளி அதிகமூட்டியது. 




2016 மகளிர் தினம் அன்று பதிவேற்றிய படம்  .,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மேலப்புதுவயல்
எனும் கிராமத்தின் சிறுதெய்வ வழிபாட்டில் நான் கண்ட
மானுடவியல் தெய்வம் மாரியாத்தாள்


பெரும்பாலும் முக்கியத் தகவல் பரிமாற்றத்திற்கும் மற்ற  விவரக் குறிப்புகளை மட்டும் சமூகவலைதளத்தில் பதிந்து வருதல் தொடர்ந்து வந்த சூழலில், தினங்களைக் கொண்டாடுதல் வேண்டும் என்பதும், அது நம் பயனர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என்பதும் மற்றவர்களின் மனதிற்கு சற்றேனும் மகிழ்வைத் தரும் என்பதாலும் பலர் சொல்ல, சில தினங்களுக்கு மட்டுமே சில முறை வாழ்த்துகள் தெரிவித்தல் வழக்கமானது.


அவ்வகையில் இவ்வாண்டு எல்லாருக்குமான வாழ்த்தாக அமைந்தது மகளிர் தினம்

பின்நவீனத்துவம், மார்க்சியம், பெண்ணியம் என கோட்பாடுகள் நிறைந்த இரண்டாம்பருவ முதுகலைக் கல்வியின் பெரும்பயனை வாழ்வியலில் செலுத்திப் பார்த்துப் பெரும்பாலும் அதன் பயன் தமிழக இந்திய நடைமுறைச் சூழலுக்கு ஒத்துப் போகாத தன்மையில் இருப்பதைக் கண்டு விவாதங்கள் இருந்திருக்கின்றன என் வகுப்பறைக்கு உள்ளே.


இந்த பருவத்தில் முக்கியப் பாடமான இலக்கியக் கோட்பாடுகளில் கூட செமினாருக்கு நான் எடுத்துக் கொண்ட தலைப்பு  “தமிழகச் சூழலில் பின்நவீனத்துவம்”  என்பதே.



நம் மக்கள் தொடர்ச்சியான மரபு பரிமாணத்தில் எவ்வித மாற்றமும் அறிவு ரீதியில் அதிகபட்சம் கண்டது கிடையாது, கண்டிருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளும் அளவினுக்கு மாற்றுக்கருத்து கிடையாது. அப்படியே கொண்டாலும் அதனை மாற்றி ஏற்றுக் கொள்ளும் வல்லமையை கொண்டிருக்கும் பலரை புறந்தள்ளி பொதுப் போக்கில் தனித்து வாழ வைத்துவிடுதலும் வழக்கம் தான்.



சரி, கட்டுரைக் கருவின் ஆதிப் புள்ளிக்கு வருகிறேன்., மகளிர் தினம் வந்தது அல்லவா.,? அன்றைய தினம் எனக்குத் தெரிந்து சமூக வலைதளங்களில் தங்கள் பங்களிப்பை அவ்வப்போது செய்துவரும் நண்பர்கள் பலருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தேன் அந்த இரவின் நிலா தன் வெள்ளொளிக் கதிர்களால் பூமியின் ஒற்றைப் பக்கத்தைக் குளிரூட்டிக் கொண்டிருக்க ஆசிய துணைக்கண்டத்தை விட்டு அடுத்தடுத்த நாடுகளுக்கு மகளிர் தினம் பயணப்பட்ட நேரமது. 


“சொல்லிவிட்டு செல்கிறோம்
         டுத்தவாண்டும் 
        
         சொல்கிறோம்
  இனியேனும் சொல்லும் வகை     
 செய்திருப்போம்
 மானுடமே மகளிரே” 
உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்

வாழ்த்து பெரும்பாலும் திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா, இன்னும் பிற நாடுகளில் வசிக்கின்ற பலருக்கும் அனுப்பி இருந்தேன். காவல்துறை அதிகாரி, இந்திய ஆட்சிப் பணியாளர், அறிவியலாளர், பேராசிரியர், மருத்துவர், ஊடகவியலாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், சகோதரி, உடன் பயின்ற தோழமை என பல துறை பெண்களுக்கும் அந்தச் செய்தி சென்று சேர்ந்தது. 


படித்தவர்கள் பலரும் நன்றி, மகிழ்ச்சி, லைக் ஸ்டிக்கர் என பலவற்றை திரும்ப அனுப்பி இருந்தார்கள். சிலர் தன் பாணியில் திரும்ப ஒரு கருத்தை வழி மொழிந்திருந்தார்கள். அப்படியாக தூக்கத்தைக் கண்கள் கைது செய்ய காத்துக் கொண்டிருந்தத நேரம்.   



வாழ்த்துக்கு பதிலீடாக தன் கருத்துகளை பொருண்மையோடு என்னோடு பணிபுரிந்த மாணவ பத்திரிக்கையாளர் தந்தார். பின் வானத்தின் வனாந்திரத்தில் வட்டமிடும் பறவைகளைப் படமெடுக்கும் நடுவண் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திரும்ப பதில் வாழ்த்து அனுப்பி இருந்தார் same to u  என்று, (நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்). 


இது என்ன புத்தாண்டு வாழ்த்து, சுதந்திர தின வாழ்த்து போல தங்களுக்கும் வாழ்த்துகள் எனப் பகிர்கிறாரே என்று. பலருக்கும் தட்டச்சுப் பொறி தானியங்கியாக செயல்படும், அது போன்றோ என எண்ணிணேன். ஆனால் மெய் அதுவன்று. அதற்கு அவர் சொன்ன விளக்கம் தான் மெய்த்தன்மையில் வைத்து சிந்திக்க வேண்டியது.






2017 உலக மகளிர் தினத்திற்கான சிறப்பு நிகழ்வு. 
 அதிரை பண்பலை 90.4 இல் ஒரு மணி நேரம்
 நிகழ்ச்சி வழங்கிய போது,


ஆண் = பெண் என்றால் மகளிர் தின வாழ்த்து சொல்பவர்களிடம் same to u என்று தானே சொல்லவேண்டும்.  ஆனால், இந்தத் தினத்தில் தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் same to u என்றே தான் சொன்னதாகவும், அதற்கு அந்த அனைவரும், எனக்கு ஏன் தெரிவிக்கிறீர்கள் என கேட்டிருந்ததாகவும் முகநூல் பதிவு செய்திருந்தார் அடுத்த நாளில். அந்த அனைவரும் என்பதில் நானும் அடக்கம்.


உலக மகளிர் தினம் மார்ச் 08

உலக ஆடவர் தினம் நவம்பர் 19


இதில், மகளிர் தினம் அறிந்த ஆண்களுள் ஆடவர் தினம் என்று இருப்பதே அறியாதவர்கள் அதிகம்., தன்னைப் பற்றிய சிந்தையில் பிறரைப்பற்றி அதீதம் சிந்திக்கும் மரபு கொண்ட ஆண் தன்மையில் மகளிர் தினம் பற்றிய புரிதலும் அவ்வாறே இருந்திருந்தது.  


ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதை தினத்தில் காணாததும் கூட ஒருவகையில் முற்போக்கோ? பிற்போக்கோ? எதுவாகினும் Same to U என்ற பதிலீட்டுக்குள் அடங்கி இருக்கும் ஆழம் என்பது அதீதம்.


முதுபெரும் பேராசிரியர் செங்கதிர் அவர்களுடன் National Children Science Congress - 2016 இல் பங்கேற்கச் சென்றிருந்த தருணம். அறிவியல் வெளிப்பாடு கொண்ட குழந்தைகள் மத்தியில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவரது உரையில் கேள்வி ஒன்று கேட்டிருந்தார்?.

பெண் டிஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தால் ஏற்றுக் கொள்கிற அதே தற்கால சமுதாயம், ஆண் சுடிதார் அணிந்து வந்தால் ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது. 

இதுவும் ஒரு வகையில் முற்போக்கோ? பிற்போக்கோ? கேள்விகள் பிறந்து கொண்டே இருக்கின்றன. இதற்கான பதில்கள் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மாறிக் கொண்டே இருக்கின்றன என்பதே மெய். 


ஆக, பார்வையின் அடிப்படையிலே தினங்கள் கொண்டாடப்படுவதும், கொண்டாடப்படவேண்டியவை திண்டாடப்படுவதும் இயல்பாகிப் போய்விட்டது. சரி இருந்து விட்டுப் போகட்டும் வாழ்த்துகள் சொல்லி வைப்பொம் இனி வரும் 365 நாட்களுக்கும்.


எது மெய்யென்பதில் எது தவறென்பதை அறிவதிலே காலம் செல்கிறது.



-த.க.தமிழ்பாரதன் 
08.03.2017
(கேள்வியில் திணறடித்த சக்திநற்பவியின் கேள்வியின் பொருட்டு எழுதப்பட்டது)














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக