நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - நடைமுறைகள்


மதுரைமண் தமிழ் வளர்த்தது, தாள் வளர்த்தது, களை எடுத்தது, களம் வளர்த்தது, இந்திய நாடாளுமன்றத்திற்குள் விருது வாங்க அழைத்துச் சென்றது., பல தலைமுறைக்குப் பாடமாய் இருந்தது, இன்னும் நமக்கும் இந்தச் சமூகத்துக்கும் இடையேயான உறவுகளால் பலப்பட்டு நிற்கிறது. 

அப்படிப்பட்ட மதுரைக்குப் பயணப்பட்ட சில முறைகளில் மல்லிகை முதலானவற்றுக்கடுத்து மிகப் பிடித்தது அலங்காநல்லூர். இறுதியாக மாநில அளவிலான ஆங்கிலப் பேச்சுப் போட்டிக்கும், தமிழ்க் கட்டுரைப் போட்டிக்கும் முறையே 2016 டிசம்பர் 17லும் 2017 ஜனவரி 30லும் பயணப்பட்டிருந்தபோது, செல்ல நேர்ந்து, நேரடியாகக் களத்தில் இருந்து தொகுத்தவை இவை. 

இதோ

அலங்காநல்லூர் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு ஊர், அது சாதரண நாளில். ஜல்லிக்கட்டு நடக்கின்ற போது மதுரை தான் அலங்காநல்லூர்க்கு அருகே இருக்கும் ஊர்ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர் எனுமளவிற்கு மிகத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.


அரசியல் களத்தில் எந்தக் காளை யாரைக் குத்தும் என்பது தெரியாமல் எந்த வீரன் எந்தக் காளையை வெல்லப் போகிறான் எனும் சூழலில் நிலவி வருவதால், 2017 ஜனவரி மாதம் தமிழகமே அல்ல, தமிழினமே போராடி வென்ற ஜல்லிக்கட்டு உரிமையின் உச்சாணிக் கொம்பு, உயிர்நாடி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின் இன்றைக்கு நடக்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பற்றிய முழுவிவரத்தை போட்டி நடைபெறும் முறைகளையும் காண்போம் ,…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல்

அலங்காநல்லூர் ஸ்பெஷல்: 

பொங்கல் அன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மாட்டுப் பொங்கல் அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு

காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  


வாடிவாசல் முன்புறத் தோற்றம் 

எல்லா ஜல்லிக்கட்டும் கிழக்கு நோக்கி தான் துவங்கும், அலங்காநல்லூரில் இருக்கும் வாடிவாசலும் கிழக்கு நோக்கியது தான்.  ஆனால், பாலமேடு, அவனியாபுரம் போன்றவை களத்திலிருந்து காளை வெளியேறியதும் நேரே செல்லும், ஆனால், அலங்காநல்லூரில் மட்டும் காளை வாடிவாசல் தாண்டி வெளியே வந்ததும், நேரே கிழக்கு நோக்கிப் பாயாமல், அடுத்த நொடி வடக்கு நோக்கித் திரும்பி விடும், ஏனெனில், அலங்காநல்லூரின் ஜல்லிக்கட்டு நிகழிட அமைப்பு அப்படிப் பட்டது. வாடிவாசலுக்கு எதிரே இருபது அடி தூரத்திலே வீடுகள், மனைகள் இருக்கிற காரணத்தால், மாடு உடனடியாகத் தனது பாதையைத் தேர்ந்தெடுத்து சீறிப்பாய வேண்டும்.  

ஜல்லிக்கட்டு விதிமுறைகள் : 

களத்தில் இறங்கும் வீரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட டிஷர்ட் வழங்கப்படும், அதனோடு தான் களத்தில் இறங்க வேண்டும்.  முன்பதிவும், மருத்துவப் பரிசோதனையும் செய்யாமல் எந்த வீரரும் காளையும் களத்தில் இறங்குதல் இயலாது. வாடிவாசலில் இருந்து வெற்றிக் கோடு பகுதி வரை மாடு செல்லவும், மாடு பிடி வீரர்கள் இலகுவாக மாடு பிடிக்கவும், யாருக்கும் எவ்விதச் சேதமும் காயமும் ஏற்படாமல் இருக்க தேங்காய்நார் உதவுகிறது. வெற்றிக் கோட்டைத் தாண்டிய மாட்டை யாரும் பிடிப்பது விதி மீறிய செயல். 

அரங்கம் அமைக்கும் முறை
வெளிநாட்டுப் பயணிகள் அமரும் மேடை
 

மொத்தம் மூன்று அரங்கம் அமைக்கப்படும். இதில் இரண்டு அரங்கம் எப்போதும் இருப்பவை. வாடிவாசலுக்கு இடதுபுறம் அமைந்த அரங்கில் உயரதிகாரிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். வலதுபுறத்தில் அமைந்திருக்கும் மேடை வெளிநாட்டுப் பயணிகள் வந்திருந்து வேடிக்கை பார்க்கும் மேடை. இந்த முறை பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணிகள் அரங்கம் மூடப்படும் எனத் கூறப்படுகிறது.  ஏனெனில், ஜல்லிக்கட்டை தடை செய்த பீட்டா அமைப்பு வெளிநாடு என்பதால் எல்லாரும் வெளிநாட்டினர் மீது கடும்கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது.  

காளைகள் அழைத்து
வரப்படும் வழி

இன்னொரு மேடை பொதுமக்களுக்கானது, இது வாடிவாசலில் இருந்து 1௦௦மீ தாண்டி இருபுறமும் அமைக்கப்படும், காளை செல்லும் வழியின் இருபுறமும் ஐந்து அடி உயரத்தில் பரண் போன்ற அமைப்பாக இந்த மேடை அமைக்கப்படுகிறது. ஆனால், இங்கே இடம் கிடைக்க வேண்டுமென்றால் இரவே சென்று அங்கே அமர வேண்டிய அளவு மக்கள் கூட்டம் அதிகம்.   

மருத்துவப் பரிசோதனை

காளைகளும், வீரர்களும் களத்தினுள் கால் பதிக்கும் முன்பாக முழுவதும் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் திறனுள்ள தகுதி வாய்ந்த காளைகளையும் வீரர்களையும் மட்டுமே, களத்தில் இறங்க அனுமதிப்பார்கள். இது குறிப்பிட்ட சாதியினரோ, குறிப்பிட்ட மதத்தினரோ பங்குபெறுவது கிடையாது. எல்லாருக்கும் பொதுவானதுஇருப்பினும், அலங்காநல்லூர் வீரர்கள், அவ்வூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கக் கூடாதென விதி இருக்கிறது. அது போல் எல்லா வீரர்களும் களத்தில் இறங்க வாய்ப்பு கிடையாது. ஏற்கெனவே முன்பதிவு செய்தி முழு உடற்தகுதி இருக்கின்ற வீரர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்படும்.
 

களத்தில் இருக்கும் வீரர்கள் :

திமிலை அணைத்தவாறு ஓடுதல் வேண்டும், அதன் மீது உட்கார்ந்தால் மிருகவதை ஆகிவிடும், அதேநேரம் குத்தும் மாடு என்றால், காளையின்  காலை கிடுக்கிய படி களத்தில் சுழலுவார்கள் வீரர்கள்., முன்பெல்லாம் சாராயம், எலுமிச்சை போன்றவை காளைகளுக்குக் கொடுக்கப்படும் அதெல்லாம் இப்போது முற்றிலும் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. அதேபோல் காளைகளின் கொம்புகள் ஷார்ப்னரால் சீவி விட்டதைப் போல இருந்த காலமெல்லாம் உண்டு. ஆனால், இப்போது அப்படியெல்லாம் இல்லை என்பது வீரர்களுக்கும் சீர்திருத்த விதிகளுக்கும் கிடைத்த பரிசாகும்.  

எவ்வளவு காளைகள் பங்கேற்கும் :

500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொள்ளும் முன்பெல்லாம் ஆனால், கடைசி சில ஆண்டுகளாக நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லா காளைகளையும் களத்திற்குள் இறக்கிவிட வேண்டியதாகிறது. முன்பு  காலை 8 மணியிலிருந்து 3 மணி வரை நடக்கும், இப்போதெல்லாம் காலை 8 மணியிலிருந்து 1 மணி வரை தான் என்பதால் காளைகளை வேகவேகமாக களத்தினுள் இறக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.

  
வாடிவாசல் முன்பாக காளைகள் சீறாத் தோற்றம்
இந்த வருட ஜல்லிக்கட்டின் சிறப்பு :
வாடிவாசலுக்குப்  பின்புறமிருக்கும் பகுதியில் முதலில் மாடுகளைக் கொண்டுவருவார்கள்நூறுவருடங்களுக்கு முன்பிருந்து நடக்கும் சீர்த்த நாகரீகம் கொண்டமையால், எல்லா வருடமும் இந்த ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கு சீறி வரும் காளைகள் அணிவகுக்கும்ஆனால், இந்த வருடம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெறுவதால் பலஊர் காளைகளும் பங்கு பெற ஆவலாக இருக்கின்றன.

  
ஜல்லிக்கட்டு நடக்கவில்லையென்றால்.,

ஜல்லிக்கட்டு வெறும் பாரம்பரிய விளையாட்டாகக் கருதவில்லை அலங்காநல்லூர் மக்கள். தங்கள் வாழ்வியலோடு தொடர்புடைய இறையாண்மையாகக் கருதுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடக்கவியலாமல் போனபோது ஊரே அம்மை வார்த்துப் போட்டதாம். ஒரு முறை குளம் முழுவதும் துத்துப்போய் இருக்கிறதாம்.
 இது அவர்களின் செண்டிமெண்ட்களுள் ஒன்றாகவே இப்போதும் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காமல் போனதால் சுத்துப்பட்டி 18 கிராமங்களிலும் விவசாயம் இல்லாத அளவிற்கு மழை பொய்த்துப் போய் ஒருபோகம் தான் அறுவடையாகி இருக்கிறது என ஜல்லிக்கட்டு நடக்காதக் கால வாழ்வியல் போராட்டத்தை தெரிவிக்கிறாள் பெருநரை கிழவி ஒருத்தி.

 பரிசு யாருக்கு..!
வாடிவாசல் நெடுக்கு
வெட்டுத் தோற்றம்

வாடிவாசலில் திறந்துவிட்ட பிறகு, மாட்டை பிடிக்கணும். அதன் திமிலை ஆரத் தழுவி இருபது அடி தூரம் இருக்கும் அது வரை மாட்டை அணைத்துச் செல்லும் வீரருக்கு வெகுமானம் பாராட்டு எல்லாமே கிடைக்கும்காளைகள் வெற்றிக் கோட்டைத் தாண்டிய பின், காளையை வீரர் தழுவி இருந்தால், அவர் பரிசைத் தழுவுவார். யாரையும் தழுவ காளை விடவில்லை என்று சொன்னால், காளை வெற்றியைப் பரிசாய் சூடும். அதைப் பழக்கியவர் பரிசைப் பெற்றுக்கொள்வார். கடைசியாக நடந்த சில வருட ஜல்லிக்கட்டு வரலாற்றின் ஏடுகளில் தொடர் மாடுபிடி வீரருக்கு பைக்கும், சிறப்பாக விளையாடிய காளைக்கு பைக்கும் வழங்கப்படுகிறது.     

பாதுகாப்பு ஏற்பாடுகள்: 

வாடிவாசலிலிருந்து 2௦௦மீ தூரத்தில் மருத்துவமனை, 5௦௦ மீ தூரத்தில் தீயணைப்புத் துறை இருக்கிறது. போட்டியன்று இவர்கள் மிகவும் கண்காணிப்புடனும், பொறுப்புடனும் களத்தில் பணியாற்றுகிறார்கள். களத்தில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மிகப் பெரிய தன்னெழுச்சிக்குப் பிறகு நிகழுவதால் எவ்வித இடரும் நிகழக் கூடாதென்பதில் எல்லாரும் கவனமாக இருக்கின்றனர். 

காளைகள் மீண்டும் எப்படி அடையாளம் காணுவது

:2 நாள் 3 நாளுக்கு முன்பாக காளைகள் அலங்காநல்லூர் போட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்துவரப்பட்டு எங்கிருந்து நீ செல்லவேண்டும், தென்னந்தோப்பு பகுதியில் நீ இறுதியாக நிற்க வேண்டும் என பழக்கப்படும்.  வாடிவாசலில் இருந்து வடக்கு நோக்கி விரையும் காளைகள் இறுதியாக சாத்தியத்து ஓடை தாண்டும் தன் வேகத்தைக் குறைத்துவிடும்.  அதற்கு அடுத்து இருக்கும் தென்னந்தோப்பு தான் காளைகளின் உறைவிடம். அங்கே வந்த பின்பு காளையின் உரிமையாளர் அதனைத் தம்முடன் அழைத்துச் செல்வார். அந்தத் தென்னந்தோப்பு வேலிகளையும் தாண்டி சில காளைகள் சென்று விடும். ஜல்லிக்கட்டு முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல காளைகள் திரிவதும், தன காளைகளைக் கண்டறிய உரிமையாளர்கள் திரிவதும் அவ்வப்போது நிகழ்வதும் உண்டு.

கோயில்மாடு வென்ற பரிசுகள்

கோயில்மாடு : 

முதலாவதாக முனியாண்டி கோயில்மாடு வரும், அதை யாரும் பிடிக்கக் கூடாது என்பது உலகவழக்கும் கூட. கோயில் மாடு என்பதால் அதனை யாரும் பிடித்தல் இல்லைஅந்தக் கோயில் மாடு பெறும் பரிசுகள் எல்லாமே வெற்றிக்கோட்டிற்கு அருகே இருக்கும் வேப்பமரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளன. எப்போதும் அம்மாட்டிற்குத் தரப்படும் பரிசுகளை வளர்ப்பவர் வேப்பமரத்தில் கட்டிவிடுவர்.

 எனப் பல்வேறு பட்ட கள நிகழ்வுகளை அலங்காநல்லூரைச் சேர்ந்த மாணவர் குரு, தான் நினைவு தெரிந்து இன்று இருக்கும் நிலை வரையிலான சூழல் மாறுபாடுகளைக் கூறினார்.
அவர் மட்டுமல்ல, அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களிடம் என்ன ஆகப் போகிறீர்கள் என வினவிய போது, மாடுபிடி வீரர் என்றே சூளுரைக்கின்றனர்.

இவ்வளவு கோட்பாடுகளும் கொள்கைகளையும் விதிகளையும் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னால் 2018இல் அதே காணும் பொங்கலில் நடப்பதால் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறது. நமது பாரம்பரியம் பல இடங்களில் மறக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் வரும் சூழலில் ஜல்லிக்கட்டு போன்ற மரபு சார் விளையாட்டுகளை மீட்கொணர்வது அவசியமானதாகும்.    


கட்டுரை மற்றும் படங்கள் : தக

(இரு முறை அலங்காநல்லூர் சென்றவந்த பின்னர், 2017 ஜனவரியில் தமிழகத்தில் களமிறங்கிய வீரியமான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் பொருட்டு எழுதப்பட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக