நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Thursday, 2 February 2017

பதற்றத்தில்(!) நெளிந்த பதின் நிமிடங்கள்

பதற்றத்தில்(!) நெளிந்த பதின் நிமிடங்கள் 
பெரும்பாலும் பயம் என்பதை கண்ணாடியில் பார்க்க வேண்டுமென்றே அவா., அது நடப்பது அரிதினும் அரிதென்பதால் அவ்வப்போது நாட்குறிப்பு நடவடிக்கைகளில் மட்டுமே சாத்தியம்.  மனதில் ஒரு கணம் அச்சத்தை நிறுவி வாழ்நாள் முழுதும் அதனை அப்படியே அசைபோட வைக்கும் நிகழ்வுகள் எண்ணிக்கையில் குறைவு. 

இன்றைக்குமொன்று அப்படிப்பட்ட வகையில்.,

ஒருநாளைக்கு அதிகம் எவ்வளவு கற்கவியலுமோ அவ்வளவு நேரம் வகுப்பில் இருந்திடும் வழக்காறு இருந்தமையால் மாலை வெயில் மங்கி சூரியன் மேற்கில் ஓய்வெடுக்க ஒளிந்து ஒளிந்து சென்ற நேரம். வானவீதியில் வெள்ளொளிக் கதிர்கள் கண் சிமிட்டக் காத்திருந்தது.  ஆறேகால் இருக்கும் மணி, அதிசயம்தான் அதுகாறும் அம்மா அழைக்கவில்லை. கிராபிக்ஸ் முடித்து கட்டிடப் படிகள் முடிந்த பகுதியில் நீண்ட கருஞ்சாலையில் பாதங்கள் பதியத் தொடங்கின.

பல்கலை வாகனமெல்லாம் சூரிய மறைவிற்குள் தம் பயணத்தை முடித்து தன் கூட்டிற்குத் திரும்பிவிடும் என்பதால் என் கூட்டிற்கு நான் திரும்ப கண்ணனை எதிர்பார்த்துக் காத்திருப்பதும், இல்லையெனில் நடராஜா  வாகனத்தை நானே இயக்குவதும் இயல்பில் பழக்கமாகிவிட்டது.கீழிறங்கி நடப்பதற்குள் தானியங்கி முறையில் செவிக்குள் இசைக்க தயாராய் சில பாடல்களை தேர்வு செய்யத் தயராய் விரல்கள் நான் இரசிக்கும் பாடல் விலாசத்தைத் தேடிக் கொண்டிருந்தன. அவ்வப்போது யாரேனும் கண்ணன் வருவாரா ? எனத் திரும்பி நோக்குவதும் இயல்பு. அதுவரை இல்லை.,

பார்த்த முதல் நாளே பார்த்த முதல் நாளே
பார்த்தால் பசு மரம் பாடுத்து விட்டால்
பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்

என நீண்ட தேடல் நிறைவுபெறும் முன்னே, நித்தியத்தில் நிலைத்திருந்த நினைவைத் தூக்கிச் செல்வதாய் ஒரு மனப்பிஸ்கி. திரும்பி நின்று நோக்கினும் யாருமில்லை, வலப்பக்க உயிரியல் துறையை அவ்வப்போது தான் தொட்டிருப்பேன், எதிரில் என்ன என்பதை நோக்க ஒன்றுமில்லா பரந்த வெளியில், உடன் குவிந்து கீழ்நோக்குக்கையில் ஓரதிசயம்.


ஒய்யார நீளமுடைய அரவம் ஒன்று, இசைக்காமலே நல்லதொரு நாட்டியம் நவின்று வந்தது நடுவீதியில், அப்படியே ரசிகனாகிவிட்டேன் (பயந்து), வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நான்கரை அடிக்கு சற்றும் குறையாத உயரம் நீளத்தில். என் காலடிக்கு காலடி தூரத்தில் கடந்து கொண்டிருந்தது. இதுவரை ஏதேனும் படத்தில் பார்த்ததுண்டு, இவ்வளவு நீளத்தை, யாரேனும் அடித்துப் போட்ட பின்பு, அரவம் உயிர் அற்றுப் போன போது இவ்வளவு அருகில் சாத்தியம் பார்த்திருக்க.

ஆனால், யாருமில்லா பொதுவெளியில் நானுமங்கே தனித்திருக்கும் வானுமங்கே ஒளிகுறைக்கும் கணத்தில் தானா இது நடக்கணும் !

வளர்சிதை மாற்ற உடற்கூறுகள் பயத்தைப் போக்கிய சில நொடியில் எடுடா போனை என்றுரைக்க, மனமோ வேண்டாம் ஓடிடு எனப் பகர, உண்மையில் படம் எடுத்திருப்பேன் பாம்பு படம் எடுக்கும் முன்னே, இருட்டில் படம் எடுக்க முடியா கேமிரா கிளாரிட்டி இருந்திருக்க, அத்தோடு நின்ற சில கணம் அடுத்த கணம் நிஜத்தைத் திரும்பளிக்க போதும் போதும்,

பயம் என்பதை விட பதற்றம் தான், பின்னோக்கி வைத்த ஐம்பது அடிகள் அடுத்த ஐம்பது நிமிடத்திற்குள் வீடுவரை விடாது நிலைத்தன, ஏன் இப்போதும் கூட.......

ஏன் லேட்டாச்சு எனப் பகரும் அம்மாவைக் காத்திருக்க வைப்பதும்,
ஏதெனுமொரு வாகனஓட்டியாகக் கிடைக்கும் கண்ணனுக்காகக் காத்திருப்பதும்,

காலத்தின் கட்டாயமெனில், அதனை வென்றிடவாவது வரவேண்டும் விரைவில் விடுதிக்குள்., எடுக்க வேண்டும் படம் பாம்பு கொண்டு.


த.க.தமிழ் பாரதன்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
திருவாரூர்

4 comments:

 1. குறுநகை வரவழைக்கும் கவிநய வரிகள். பெருஞ்சிரிப்புக்கும் பஞ்சமில்லை. அனுபவ பிம்பத்தைத் தாங்கிய கண்ணாடியாக இருக்கிறது எழுத்து. விடுதிகளின் சுற்றுப்புரத்தில் பாம்புகளுக்கு குறைவில்லை.விரைவில் வாருங்கள்; வந்து படம் பிடியுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி., சகோ, கல்லூரி நண்பர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் எனும் உந்துதல் தான் ஒரு வருடம் கழித்து ப்ளாக் வழியாக உத்வேகம் அடைந்திருக்கிறது., நன்றி அடுத்த வாரம் வருகிறேன்.

   Delete
 2. பயத்தையும் பதட்டத்தையும் கூட இவ்வளவு கவிநயமாகச் சொல்ல முடியுமா? வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி., தங்களுக்கு பதிந்த பதில் ஏனோ பதிவேற்றப்படவில்லை., நன்றி. எல்லாவற்றையும் எழுத்துக்குள் அடக்கிவிட முடியும் தானே..., தங்களின் எழுத்தின் தாக்கமும் இதில் அடங்கும்.....

   Delete