நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 3 ஜனவரி, 2018

2017 ஒரு மீள்பார்வை


#மீள்பார்வை

2017ஆம் ஆண்டு 365 நாட்களையும் மூச்சுவிட்டே கழித்த மற்றுமொரு ஆண்டு. 

பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. ஆனால், சாதிக்க நிறைய இருந்திருந்தது. அதைச் சந்திக்க பன்னிரு மாதங்களும் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணங்களோடு பூர்த்தியாகின. தலைநகர் சென்னைக்கு செல்வதெல்லாம் இப்போது பக்கத்துவீட்டுக்குச் செல்வதுபோல் ஆகிவிட்டது. பெரும்பான்மையான பெரும்தகையோரின் தொடர்பு எல்லைக்குள் இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. 

சிந்திக்கும் மனிதர்களின் சந்திப்பு அதிகமாகியது. தமிழில் இன்னும் ஆழங்கால் படவேண்டிய அத்தியாவசியமுணர்ந்த பொழுதுகளும் அதிகம்.

மறக்கமுடியாத அடிகள், மறக்கவேண்டிய வலிகள், சகித்துக்கொண்ட மனிதர்கள், சகித்துக்கொள்ள முடியாத மனிதர்கள்(!), ஊக்குவித்த உற்சாகக்கேணிகள், உற்சாகம்தந்த உற்ற நண்பர்கள், எந்நாளும் என்னைக் காதலிக்கும் அதிர்ஷ்டதேவதை, அவளது இருப்பால் அவ்வப்போது அநாதையாக்கிவிட்ட பயிற்சி + முயற்சி. எதிர்காலத்திற்கும் திட்டமிடப்பட்ட நேற்றைய பணிகள் என நிமிடங்களை நொடிகளாய்ச் செலவு செய்தது என இந்த 2017ஆம் ஆண்டு இதயத்துடிப்பை சற்றே இருக்கிப் பிடித்திருந்தது. 

வயது வந்துவிட்டது. என்னோடு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் சேர்ந்த நண்பர்கள் பணிகளில் அமர்ந்து தங்கள் வாழ்க்கைப் பாதையின் அடுத்த கட்டத்தை அடைய, மேலும் சில நண்பர்கள் படிச்சாச்சு வேலையில்லை என பகரும் பேச்சொலிகள் வெறும் சொற்களாக மட்டும் செவியை அடையவில்லை.

இன்னும் “பத்துவருசாமாச்சும் படிச்சிக்கிட்டே வாழ்க்கையை ஓட்டு” என உள்ளுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு வழங்கியது மன்கீபாத் (மனதின் குரல்). இந்த 2018 மே மாதத்தோடு முதுகலையும் முடியப்போகிறது. அதற்கடுத்து என்ன என்பதை காலப்பெட்டகத்தின் திரைமறைவிலிருந்து இரசிக்கவே நான் விரும்புகிறேன்.

சரி., 2017ஆம் ஆண்டு “நடந்த” இல்லை, நான் நடவு செய்து அறுவடை செய்த நிகழ்வுகளின் சாரத்தை என் உளமுற்ற உங்களிடம் படைக்கிறேன்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருச்செங்கோடு பகுதியில் நண்பன் சபரி ஏற்பாடு செய்த கன்னிப்பொங்கல் தின பட்டிமன்றத்தில் நடுவராக இருந்ததோடு தொடங்கியது இவ்வாண்டின் பேச்சாளர்ப்பணி. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் அமர்ந்து சமூக ஊடகங்கள் இளைஞர்களை சீர்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? எனும் தலைப்பிலான பட்டிமன்றத்திற்கு நடுவராக அமர்ந்தது. பின் நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பேரா. போ. மணிவண்ணன் அவர்கள் தலைமையில் குளிருக்கு கம்பளி போர்த்தப் பேசியது. பின்னர் 2017இல் தமிழகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிலரில் குறிப்பிடத்தகுந்த, அக்கா சபரிமாலா ஜெயகாந்தன் அவர்கள் தலைமையில் தொலைக்காட்சி சிறப்புப் பட்டிமன்றங்கள் (2) பேசியது என கடந்த 2017 பேச்சால் பெரும்பகுதி கழிந்தது.

உலகப்புகழ்பெற்ற காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் விழாவில் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் தலைமையில் மரபார்ந்த பட்டிமண்டபத்தில் கலந்துகொண்டது இதுவே முதல் முறை. அதற்கடுத்து இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்கள் தலைமையில் பாங்கறி மன்றத்தில் உரை நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. கவியரங்கில் கலந்துகொள்ளாதிருந்த கவலையை இராமலிங்கர் பணிமன்றத்தில் நமது நம்பிக்கை ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தலைமையில் இறுதிநிமிடப் பரபரப்பில் கவிதை அரங்கேற்றியதும் கவிதையே. அடுத்த நாள் பேராசிரியர் கிருங்கை சேதுபதி அவர்கள் தலைமையில் பேச்சரங்கில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி, கடல்கடந்த பயணம் என தமிழ்ப்பருகக் கிடைத்த வாய்ப்பு இவ்வாண்டில் அதிகமிருந்தது. கடல்கடந்த பயணத்திற்கு தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, இலங்கையிலே முதன்முறை கண்ட பாசமும் நேசமும் வளர்த்தெடுக்கும் வல்லமையும் கொண்ட தஞ்சை தமிழ்ப்பல்கலை. பேரா. குறிஞ்சிவேந்தன் அவர்களின் வாழ்த்து என்றைக்குமானது. 

கடந்த இரு கல்வியாண்டாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் ஒன்றிய செயலாளராக இருந்து நிறைவடைந்த பின், கடந்த 2017 ஜூலை மாதத்தில் திருவாரூர் ஒன்றிய தலைவராகப் பொறுப்பேற்றிருப்பதற்கும் பெரிதும் காரணம் முன்னாள் மாவட்டச் செயலாளர்களான கே.சந்திரசேகரன் மற்றும் சங்கரலிங்கம் இருவரையே சாரும்.

கவிதையிலும் பேச்சிலும் மாநிலத்தில் முதலிடம் பெற்ற எனக்கு கட்டுரை மட்டும் கனவாக இருந்தது. கனவாக இருந்த கனவையும் கவியரசர் கண்ணதாசன் தன் விழாவில் நினைவாக்கித் தந்தார் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளமாக (அந்தக் கட்டுரை கண்ணதாசன் பதிப்பகத்தால் விரைவில் நூலாக வெளிவர உள்ளது).

வாய்ப்புகளில் வழிநடத்தும் அண்ணன் பேரா. சையது அகமது கபீர் இவ்வாண்டும் வளர்த்தெடுத்தார். அதிரை பண்பலை 90.4 (நமது சமூகம் நமது நலன்) இல் மார்ச் 08 உலக மகளிர் தினம் தொடங்கி 2018 புத்தாண்டு வரை பல சிறப்பு நிகழ்ச்சிகளையும், பிழையின்றி இலக்கணம் கற்போம் எனும் தமிழ் மொழித் தொடர் ஒன்றையும் செய்துவந்தேன், வந்துகொண்டுமிருக்கிறேன். மேலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “படைப்பு” குழுமத்தின் நூல்வெளியீட்டு விழாவில் மாதகையோர் முன்னிலையில் தொகுப்புரைக்கு வாய்ப்பு வழங்கி அடுத்தக் கட்டப் பரிமாணத்திற்கும் கால்கோலிட்டார்.

இளமறிவியல் இயற்பியல் மூன்றாண்டு படித்ததெல்லாம் முக்கால் வாசி மறக்குமளவு செய்திட்டது முதலாமாண்டு முதுகலைத் தமிழ்ப்படிப்பு. இருப்பினும் மூன்றாண்டு படித்துத் தேர்வெழுதி A++ முதல்நிலையில் தேர்வாகி இயற்பியல் பட்டதாரியானதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டம் கொடுத்து உறுதி செய்திருந்தது மே மாதம்.

ஜூன் மாத்த்தில் அவசரம் அவசரமாய் உங்கள் தமிழ்த்தாய்த் திரைக்களஞ்சியம் வாயிலாக விக்னேஷ் ஒளிப்பதிவில் நான் இயக்கிய குறும்படம் “நாற்றாங்கால்”. ஆருர் பக்கு அவர்களின் உண்மை வாழ்க்கை சிற்சில புனைவோடு இயக்கிய அப்படம் நெய்வேலி புத்தகக் கண்காட்சி குறும்படப் போட்டியில் பங்கேற்றது.

நாடாளுமன்றம் சென்ற எனக்கு நாடாளுமன்ற அமைச்சராகும் வாய்ப்பை இளைஞர் நாடாளுமன்றம் வழங்கியது. 2017-18ஆம் கல்வியாண்டிற்கான இளைஞர் நாடாளுமன்றத்தில் “இரயில்வே துறை” அமைச்சராக இருந்து செயல்பட்டேன். மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இரயில்வே துறையில் இல்லாது போவதற்கான முன்வரைவுகளை சபாநாயகர் முன்பு எடுத்து வைத்துப் பேசியதும்(ஆங்கிலத்தில்) நினைவில் கொள்ளத்தக்கது.

கட்டுரைப்போட்டி : 
தமிழ்வளர்ச்சித் துறை – மாவட்ட அளவில் – முதலிடம்

இராமலிங்கர் பணிமன்றம் – மண்டல அளவில் – முதலிடம்
கண்ணதாசன் விழா – மாநில அளவில் – முதலிடம் 

என என் எழுத்துப் பயணத்திற்கு மேலும் வெற்றிகளைத் தாரை வார்த்துத் தந்த ஆண்டு இந்த 2017. இதுவரை தாட்களில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த எனக்கு 

http://tamilbharathan.blogspot.in/ என்ற என் வலைப்பக்கத்தில் கட்டுரைகளை அதிகம் வழங்கிய ஆண்டாகவும் இருந்தது.

தனிப்பட்ட முறையில் அரசியல் தலைவர்களை(!) பேட்டி கண்டதில்லை, அதுவும் ஊடகத்திற்காக. ஆனால், 2017இல் ஒரு உவர்மாலைப் பொழுதில் அழகேவடிவான அண்ணன் அழகுசுப்பையா அவர்களுடன் விகடனுக்காக அஇஅதிமுக-வின்(!) நாஞ்சில் சம்பத் அவர்களை மெரினாவில் பேட்டி கண்டது ஒரு மாறுபட்ட அனுபவம். ஆனால், விகடனுக்காகப் பணிபுரியும் நேரம் வெகுவாகக் குன்றிப்போனது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல் பரிசு பெற்று மேடையில் பரிசு வாங்க வேண்டியவன்., ஆனால், நான்தான் முதல்பரிசு பெற்றேன் என்பதை
நீதிதேவதை இறுதி நேரத்தில் யாவர்க்கும் தெளிவுறுத்தி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடிப்பார்வையில் தமிழ்பாரதன் தான் பரிசுபெற்றார் என நிறுவப்பட்டது. ஆனால், திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் புள்ளிப்பட்டியல் போட்டாலும் முதலிடத்தில் நிற்கக்கூடிய என்னை விடுத்து தமிழக முதலமைச்சர் பிறர்க்குப் பரிசு வழங்கியிருந்தார் (இவர்கள் தான் பெறவேண்டும் என தேர்வு செய்தவர்கள் வேறுசிலர்). தமிழகம் எப்போதும் இப்படியே இருக்கட்டும் என சபித்துச் செத்த பல்லோரின் சொற்கள் இப்போது செயலாற்றி வருவதைக் காண முடிந்தது. கிட்டத்தட்ட ஐந்து வேலைநாட்கள் முழுதுமிழந்து உழைத்து ஈட்டிய வெற்றி இன்னும் களிக்க முடியாது இருக்கிறது. (பரிசு இன்னும் கைக்கு வரவில்லை என்பது வேறுதொடர்கதை)

இதுவரை வீட்டை விடுத்து அதிகப்படியான நாட்கள் வெளியிடங்களில் தங்காத எனக்கு விடுதி வாழ்க்கை வானவில்லாகவே இருந்தது. பேராசிரியர்க் குடியிருப்பில் குடியிருந்தபோது பேராசிரியர்களுடன் விளையாடியது, இரவு நடைபயிற்சி, பாம்புகளுடன் போட்டியிடுதல், பல்கலை.க்கும் குடியிருப்புக்கும் நடந்தே கழிந்த இரவுகளென விசித்திர சம்பவங்களை வரலாறாய்ப் பெற்றவை.

சரி, இரண்டாமாண்டின் முதல் பருவத்தில் மாணவர் குடியிருப்பில் இடம் கிடைத்திருப்பினும் வீடு-விடுதி-வெளியூர் என 360டிகிரியில் சுழன்றுகொண்டே ஓடியது நாட்கள். பாவம் எனதறை நண்பன் கௌரவ் சிங் அவனது ஹிந்தி வரலாற்றை என் தமிழ் வரலாற்றோடு ஆங்கிலத்தில் ஒப்பிடுகையில் சிலாகித்துப் போவான்.
யூ தமிழ் மேன்., யூ ஹேவ் ஹிஸ்டரி !! என்று அவன் ஆச்சரியத்தில் வியப்பதை சொல்லி மாளாது. 

CBSE – NET/JRF தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கையில் சில விவாதங்கள் செய்த இரவுகள் இருக்கும். காலையில் பாதமும், திராட்சையும் தந்து துயிலெழுப்புவான். மேலும், அவ்வப்போது சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றை அவனுக்கு அள்ளித் தெளிக்கையில், ரஜினிகாந்தின் தீவிர இரசிகன் சூப்பர் ஸ்டார் படத்தின் முதல் நாள் முதல்காட்சி பார்த்த உள்ளுணர்வு அவன் முகத்திலிருக்கும். 

காதல் பாடல்களைக் காட்சிப்படுத்தும் நான் காதலிக்கவில்லை – காதுறும் அவன் காதலித்திருக்கிறான் என்பதே நீங்கள் அறியும் காரணம். சங்க இலக்கியத்தின் ஒரு பாடல் படித்தற்காகவாவது காதலித்திட வேண்டுமென்று இதயப்பக்கத்தில் இருந்து கியூபிட் சொன்னாலும், சிங்கிள்டா – கெத்துடா என்பதைத் தவிர வேறு பதில் இல்லை என் இலக்குகளுக்கும் இன்றைய பொழுதிற்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்பாராத திருப்பங்களை என் வாழ்வில் எப்போதும் ஏற்படுத்தும் தமிழ், இவ்வாண்டும் பல அதிசயங்களை காணப் பண்ணுவேன் என வழிகாட்டி நின்றது. அதன் மீத்தன்மையாக நவம்பர் மாதம் 12ஆம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற பன்னாட்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டது. அதுவும் இந்தியாவின் பிரதிநிதியாக சென்றது எனக்குள் இன்னும் உத்வேகத்தை அளித்தது. இறுதியாக இரண்டாம் நிலை வெற்றியை இந்தியாவிற்காகப் பெற்றதில் பெருமகிழ்ச்சி. ஆனால், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் இழந்த வீரன் போல உணர்ந்தேன்.

முன்பெல்லாம் கலைப்போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெறாத போது, “எந்தத் துறையிலும் மாநிலத்தில் முதலிடம் பெறவில்லை. ஆனால், எல்லாத் துறையிலும் மாநிலத்தையே முதலிடத்திற்கு கொண்டு வருவேன்” என மனநோய்க்கு மாத்திரை கொடுத்திருந்தேன்.

காலப்போக்கில் மாத்திரைகள் வலுப்பெற்று, உருகொண்டு பேச்சு, கவிதை, கட்டுரை என கலைப்போட்டிகளில் மாநில முதலிடம் பெறலாயிற்று. அன்று தமிழகம் (மாநிலம்) இருந்த இடத்தில் இன்று இந்தியா (நாடு) இருக்கிறது. விரைவில்…

பல பேச்சாளர்கள் கடல்கடந்து பேசச் செல்லுவார்கள். ஆனால், படிக்கும் போதே, அதுவும் திரைகடலோடி நம் தமிழின் தொப்புள்கொடி சொந்தமாக விளங்கும் ஈழத்தில் பேசச்செல்வதும் பெருமையாக இருக்கிறது என வீரசோழன்.க.சோ. திருமாவளவன் அண்ணன் வாழ்த்தியது இன்னும் மூளை மடிப்புகளில் மறையாமல் உள்ளது.

தமிழகம் – இந்தியா தாண்டி குடியுரிமை பெறாத எனது சிந்தனைச் சிறகுகளுக்கு கட்டற்ற களஞ்சியம் இவ்வுலகம் என பன்னாட்டுப் பண்பாட்டுக் கூறுகள் சுட்டிக்காட்டியது. கைக்குள் அடக்கிவிட்டோம் என தொழில்நுட்பத்தின் துணைகொண்டு உளறும் அறிவியல் சித்தர்கள் நவீன பித்தர்கள் என்பதை ஒரு அயல்நாட்டுப் பயணத்தின் பரிமாணம் கொடுத்தது.

சினிமா தியேட்டர்களின் அதிகம் திரைப்படம் பார்த்ததும், நூற்றுக்கணக்கான படங்களை முன்னிரவின் முற்பகுதியில் பார்த்ததும் இவ்வாண்டு. படங்களிலிருந்து பாடங்கள் கற்பதும், பாடங்களிலிருந்து படத்தின் கரு தோன்றுவதுமாய் அன்றாடம் கழிந்த ஓராண்டு 2017.

எல்லாவற்றிற்கும் மேலாய்,

எக்கச்சக்கமாய் நண்பர்களை அள்ளித்தந்த ஆண்டு 2017. கட்டுரை போன்ற தோழர்களையும் கவிதை போன்ற தோழியர்களையும் தோள்கொடுக்கவைத்து நீ தொடர்ந்தியங்கு என இயங்கவைத்துக் கொண்டிருந்தது 2017. 


ஆனால், நானிழந்த ஒரு தோழன் சனி. கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகளோடு என்னோடு பயணித்து என் பயணங்களை எல்லாம் முட்டுக்கட்டை போட்டு நெறிப்படுத்திய நெறியாளன் என்னைவிட்டுப்பிரிந்த ஆண்டு. சனிப்பெயர்ச்சிக்குப் பின் மனத்தளர்ச்சியே இருக்கிறது. அவனை இழந்து வாடும் வாட்டம் மட்டுமே எனக்கு இன்னுமிருக்கிறது.

இப்படியாய் இன்னும் பல சொல்ல முடிந்தும், சொல்ல முடியாது பல மெல்ல முடிந்தும் நிறைவடைந்திருக்கிறது இந்த 2017.

காலத்தின் ஓட்டத்தில் மற்றுமொரு ஆண்டு 2017. இதுவரை நடந்த எல்லாவற்றின் சாத்தியக் கூறுகளோடு அடுத்தக் கட்டம் நோக்கி காலண்டர் நகர்ந்ததைப் போல நானும் நகர்கிறேன். அதனால், இந்த

2018ஐ ஒரு கை பார்க்கப் போகிறேன். 

த.க.தமிழ்பாரதன்
Tamil Bharathan

01.01.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக