நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 5 மார்ச், 2019

கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் ! வைரமுத்து கவிதை




அரபியில் சொன்னாள் அம்மா
எங்கள் டைகிரிஸ் யூப்ரடீஸ்
நதிகளிரண்டும்
வீசியடித்த அலைகளிலேதான்
முதல் நாகரிகம்
முளை கட்டிற்றாம்
உங்கள் நாட்டில்
நதிகளே இல்லையா புஷ் அங்கிள்?

உங்கள் ஆயுதம்
கூர் சோதிக்க
என் பிஞ்சு மண்டை ஓடுதான்
கிடைத்ததா?
ரொட்டி சலித்த உங்கள்
குட்டி நாய்க்கு எங்கள்
குருத்தெலும்பென்றால்
கொள்ளை ஆசையா?
கனவுகள் நனைந்து
பூமிக்கு வந்தேன்

ரோஜாக்கள் வெடிக்கும்
நுண்ணொலி கேட்கவே
ஈராக்கில் பிறந்தேன்
பகலில் சூரியன்
இரவில் நிலவு
இரண்டையும் வெடித்தால்
எங்ஙனம் தாங்குவேன்?

மு... மு... முட்டுதே மூச்சு
சுவாசப் பையில் என்ன நெரிசல்!
காற்றில் கலந்த சதைத்தூள்
நிறைந்து
நெரிபடுதோ என் நுரையீரல்?

அலெக்சாண்டர் வாளில்
மங்கோலிய வில்லில்
பிரிட்டிஷ் பீரங்கியில்
கருகாத எங்கள் பேரீச்சங் காடுகள்
தீத்தாரைகளில் சிவ்வென்றெரியுதே!

இன்னோரு பருவம்
பேரீச்சை பழுக்குமோ?
பேரீச்சை தின்ன
நாங்கள் இருப்பமோ?

நெருப்பு மழை
அக்கினி அலை
சூரியன் உடைந்து
பூமியில் ஒழுகினால்
எப்படித் தாங்கும்
என் மெல்லிய செந்தோல்?

மொத்தப் பிணக்குழியில்
என்னையும் இழுத்து
எறியும்பொழுது
என் பிரிய பொம்மையைப்
பிரிக்க மாட்டீரே?

எங்கு நோக்கினும்
ரத்தப் படுகை
பாலைவனத்தை
நாளை தோண்டினால்
தண்ணீரின்
நிறம் சிவப்பாயிருக்குமோ?

ஏனிந்த விஷவெறி?

ஏசுவா? அல்லாவா?
அதுவல்ல கேள்வி
டாலரா? தினாரா?
அதுதானே கேள்வி!

இந்தியப் புறாக்கள் வாங்கி வளர்க்க
ஏழு தினார்கள் சேர்த்திருந்தேன்
அனுப்பட்டுமா புஷ் அங்கிள்
உங்கள் வீட்டு விலாசமிட்டு?

ஒரே ஒரு பிஞ்சு நிபந்தனை :
எண்ணெய்க்காடு எரியும் நெருப்பில்
நீங்கள் மூட்டிய பூதப் புகையில்
வாழ்வு, தேசம் சுவாசம் எல்லாம்
கறுத்துக் கறுத்துக் கறுத்தழிந்தது
உங்கள் வீட்டுப் பெயரில் மட்டும்
இன்னும் என்ன
'வெள்ளை மாளிகை?'

வீடோ பெயரோ
மாற்றுவீர்களா?
நான் இறந்துபோயினும்
வந்து சேரும்
ஏழு தினார்!

- வைரமுத்து 



- வைரமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக