குளிர்காய்ந்து கொண்டிருந்த ஞாயிற்றைச் சலனப்படுத்துவதாக வந்தது அழைப்பு. எப்போதும் அழைக்காத அவரே அழைத்திருந்த காரணத்தால் ஜேஎன்யு வளாக நூலகத்திலிருந்து வெளியானேன்.
‘என்ன ஏது என்ற எந்த விவரமும் தெரியவில்லை. 30 வயதுக்குள் ஒரு இளைஞர் பெயர் கேட்டார்கள். கொடுக்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றார்
‘சரிங்க' என்று கூறிவிட்டேன்
எப்போது? எங்கு? எதற்காக? தேவை என்ன? என எல்லா விவரமும் கிடைத்து அதற்குரிய கால அவகாசமும் இருந்தால், அதற்குரிய நபரைத் தக்கபடி அடையாளம் கண்டு அழைத்திடும் சூழலில், எவ்விவரமும் தெரியாதபோது சர்வரோக நிவாரணியாய் என் பெயர் நினைவுக்கு வந்திடும்போலும்.
எல்லாம் தெரிந்து களம்காண்பதில் ஏதுள மகிழ்ச்சி? தெரியாமை, நிலையாமை, அறியாமை ஆற்றில் கரைகாண்பதலவா மகிழ்ச்சி. ஆகட்டும் பார்க்கலாம் என்பதே என் அட்ரினலினுக்குத் தீனி.
நூலகத்துள் நுழைய அடுத்தநாளொருவர் தில்லியிலிருந்து அழைத்தார். ‘கவிதை வாசிக்க வேண்டும்’ என்றார்.
சரி என்றேன். எழுதியதுள் ஒன்றைத் தெரிவு செய்து செப்பமிட்டேன்.
அதற்கடுத்தநாள் வேறொருவர் ஜார்கண்ட்டிலிருந்து அழைத்தார். ‘கவிதை மொழியாக்கம் செய்து வாசிக்க வேண்டும்’ என்றார்.
ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தேன்.
அடுத்தநாள் இன்னொருவர் சென்னையிலிருந்து அழைத்தார். ‘நீங்கள் வாசிக்க வேண்டியது உங்கள் கவிதையை அன்று., ஏற்கெனவே தமிழில் எழுதப்பெற்ற இன்னொருவரின் கவிதையை’ என்றார்.
சரி (!) என்றேன்.
நிகழ்ச்சி விவரங்களை அளித்தார். தமிழில் பெரு. விஷ்ணுகுமார் எண்ணையும் எழுதிய கவிதையையும் அனுப்பி வைத்தார்.
மொழிசார் பணிகளில் நல்ல திட்டமிடல் முக்கால் வெற்றி. NCERT, அகில இந்திய வானொலி (திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்External Service Devision) முதலானவற்றில் பங்காற்றியதனுழி (ஆங்கிலம் - இந்திவழித்) தமிழாக்கம் எனக்கு அறிமுகமே.
தமிழிலிருந்து இந்தியாக்கம் புதிது.
NCERT, AIR இவை அரசு நிறுவனங்கள் என்பதாலும் பெருமக்களைச் சென்றடையும் என்பதாலும் அதன் பதிப்புநிலைகளை அறிந்தமையால், இந்த இந்தியாக்கத்தின் நிலைகளைக் மனம் கட்டமைத்தது.
முதற்கட்டமாகத் தமிழ்க்கவிதையை உள்வாங்கிக்கொண்டு, ஆங்கிலம் வழி இந்தியில் வரைவாக்கம் அணியமானது. அதையடுத்து, 20களின் நிறைவில் உள்ள தமிழறியாத இந்தி ஆய்வாளரிடம் தர, வரைவு செப்பனானது. பிறகு, 40களில் தளிராடும் முகநூல் அத்தை ஒருவரிடம் அனுப்ப, வரைவு மேம்பாடானது. அதன்பின், 60களில் அரும்பெரும் தமிழ்க் கவிதைகளை இந்தியாக்கும் மூத்தவரிடம் கேட்க, வரைவு வடிவானது. அதன்பின், 80களில் அறிஞ நிலைப்படும் இந்தி மொழிபெயர்ப்பாளரிடம் காண்பிக்க, வரைவு இறுதியானது.
இப்படியாக, களம்காணத் தயாரானது தமிழ்க் கவிதையின் இந்தியாக்கம். எங்கே?
ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில். என்னவாக?
2024 சனவரி 5ஆம் நாள் தேசிய அளவில் இளையோருக்கான கவிதை அரங்கில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைச் சேர்ந்த கவிஞர்கள் தமது மொழியில் கவிதை வாசிக்க அதையடுத்து, அக்கவிதையின் இந்தியாக்கங்களில் ஒன்றாக.
இடைப்பட்ட இருநாட்களுக்குள் தில்லி பணிகளை முடித்துவிட்டு, ஜார்கண்ட் விமானமேறிச் சென்றால், தரையிறங்க இறங்க இதுவரை நான் காணாத இந்திய நிலப்பரப்பு. இத்தகு வறள் நிலப்பரப்பிலிருந்துதான், பிர்சா முண்டாவும் தோனியும் வளர்த்தெழுந்தனர் என்பது அறிதற்கரியது.
குட்டி விமான நிலையத்திலிருந்து வெளிவர ராச மரியாதை, பெரு விடுதியில் உபசரிப்பு. தமிழ்நாட்டில் உள்ளிட்ட இதர மாநிலங்களின் பெருவிடுதிகளில் பெரும்பாலும் அடர்வண்ணத் தோலர்களைப் பணியமர்த்துவதில்லை. ஆனால், ராஞ்சியில் அடரடர் வண்ணத்தினரும் பழங்குடிகளும் பணியிலிருந்தனர்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கற்ப, எனதருமை முன்னாள் தோழியும் வந்திருந்தாள். வரவேற்றாள். தன் திருமணத்தோடு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றவளை அன்றுதான் சந்தித்தேன். இருவரும் தங்கள் மொழிகளுக்காக தேசிய அளவிலான திட்டங்களில் முன்பே பங்கெடுத்து மொழிபெயர்த்திருக்கிறோம்.
தனி அளாவல்களை முடித்து விட்டு, என்னிடமிருந்த கவிதைப் பிரதியைப் பெற்றாள். முன்னொருமுறை நீ இந்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்றவள்; உனக்கு இந்தி இந்தளவு தெரியுமா? என்றாள். கூட்டுழைப்பில் பொங்கிய இந்தியாக்கத்தில் அவளது இருப்புக்காகவும் சில மாற்றங்களைச் செய்தளித்தாள். இடைவெளி இடங்களைக் குறித்துக் கொடுத்தாள். அவளது கண்பட்டுக் கவிதையில் கைபட்ட இடமெல்லாம் அட அட என்றானது.
இப்படியாகச் சுனையாகி அருவியாகி ஆறாகிக் கடலாகிப் போனது தமிழ்க் கவிதையின் இந்தியாக்கம். கவலையெல்லாம் இந்தியொலிப்பில் தான். என் இந்தியொலிப்பில் தமிழின் ஆதிக்கம் இருக்கும். அது சுத் இந்தியாக இன்றி, சுத்திவளைத்த இந்தியாகவே பிறவி இந்தியாளருக்குத் தோன்றும்.
நிகழ்ச்சிக்கு முதல்நாள் மாலை ஒரு முன்னோட்டம் பார்த்தனர். ஓரளவு தேவலாம் என்றனர். ஒலிப்புச் சொதப்பல்களை நேரலை நிகழ்த்துக் கலைகளில் தவிர்ப்பது அவசியம். எதற்குமிருக்கட்டுமென இந்தி மொழிபெயர்ப்பின் ஒலிபெயர்ப்பையும் உருவாக்கி வைத்தேன். அடுத்தநாள் மாலை அரங்கேற்றம்.
அகில இந்திய வானொலி ஏற்பாட்டில் 'சர்வபாஷா கவி சம்மேளனம் -2024' ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலுள்ள அரங்கொன்றில் 05.01.2024 மாலை 5 மணியளவில் தொடங்கியது.
கவியரங்கு என்பதால், கவிஞர்கள் பலரும் கவிதையாகவே உடையணிந்து வந்தனர். உவகை பூத்தனர். குஜராத்தி கவிதாயினியுடன் ஒரு படம் விரும்பி எடுத்துக்கொண்டேன். அரங்கம் நிறைந்தது. எதுகை, மோனை, இயைபு உள்ள மொழியிசைமை மிகுந்த கவிதைகளை வாசித்தனர். ஒருசிலரோ பாடவே தொடங்கிவிட்டனர். இந்தி மொழிபெயர்ப்பே பெரும்பாலானோருக்குப் பொருள் புரிவதாக அமைந்தது. பார்வையாளர்கள் ‘க்யா பாத் ஹே!’ என அவ்வப்போது விளிப்பது அவர்களைப் புன்னகை புரியச் செய்தது.
'பல்லாங்குழியில் காலத்தை நகர்த்தி ஆடுதல்' எனும் தலைப்பில் கவிஞர் பெரு. விஷ்ணுகுமார் கவிதை வாசித்தார். அது நவீன கவிதை, அதன் இந்தியாக்கத்தை ஜேஎன்யு சிறப்புநிலைத் தமிழ்த்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளராக (அப்போதைய பணி விவரம்) வாசித்தேன்.
வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்று, இந்தியாவின் விழுமியங்களையும் பன்முகத்தன்மையையும் பறைசாற்றுவதாய் அமைந்த கவிதைக்களி நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குநர் முனைவர் வசுதா குப்தா கதராடை அணிவித்து, கேடயம் வழங்கினார். நிறைவில் கிடைத்த கைதட்டல் பாராட்டே அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. தமிழ்க் கவியரங்குகளில் பங்கேற்றவனுக்கு, இந்தக் கவிமாலை நல்லூழாகக் கிட்டியது.
ஒருநாள் இந்தி மொழிபெயர்ப்பாளராக அவதாரமெடுத்தவன் இன்று National Institute of Open Schooling பாடங்களை இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறான்.
ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்!
Dr. பாபா| அந்தமான் | 5.1.26
காலத்தை நகர்த்தி ஆடுதல்
- பெரு. விஷ்ணுகுமார்
பல்லாங்குழியாடுவதில் கெட்டிக்காரி பாட்டி
அவள் தன்பலகையில் செதுக்காமல் விட்ட குழி
ஊருக்கு வெளியே குளமானது
எதை நிரப்பியாடுவதென்று தெரியாத சிறுவயதில்
குடத்தைத் தூக்கிக்கொண்டு குளத்திற்கு போனவள்
வழியெல்லாம் ஒவ்வொரு குழியாக
சிந்திக்கொண்டே வருவாள்
பின்பு வீட்டிற்கு வந்து இறக்கிவைத்த
வெறும் குடத்தைத் தூக்கிக்கொண்டு
அடுத்தாள் போய்
அதேபோல் சிந்திக் கொண்டே வருவார்கள்
இப்படியான வரலாற்றில்
புளியமுத்தை நிரப்பியாடும் வழக்கத்தை
துவங்கிவைக்க
வெற்றிலைக்கறை படிந்த தன் பற்களைக் கொடுத்துவிட்டு
துருத்திக் காட்ட முடியாமல்
செம்மண் நாக்கை
நீட்டி நீட்டி காண்பிக்கின்றாள்
குளம் நிரம்பினால் மதகின் மீது
கொஞ்சம் கொஞ்சமாய் வழியுமே அதுபோல
சரி இன்றுபோதும்
மீதியை நாளை ஆடுவோமென
பரண்மீது வைக்கச் சொல்லிக் கொடுத்த பலகையை
வேண்டுமென்றே நாம் தொலைத்து விட
அன்று கேவியவளின் கண்ணுக்குழியில்
காலம்மங்கிய பூஞ்சோழியிட்டு
யாரோ ஆடிப்போயிருந்தனர்
मंकला खेल में काल को आगे ले चलना
पी. विष्णुकुमार (उपनाम – पेरु. विष्णुकुमार)
(कवि ने भूले बिसरे खेल मंकला के माध्यम से जीवन का यथार्थ व्यक्त किया है)
मंकला खेल में निपुण दादी ने,
अपने तख्ते में गड्ढे की खुदायी ही नहीं की
बन गया तालाब गाँव के बाहर ।
जाने बिना किससे भरके खेलें उस अज्ञात बचपन में
घड़ा लेकर तालाब जाती
रास्ते के हर गड्ढे में
बूँदें गिराती आती I
फिर घर आकर उतारकर रख देती ।
उसी ख़ाली घडे को लेकर जाती और कोई
उसी प्रकार
बूँदे गिराते आती ।
इसप्रकार इतिहास में
इमली के बीज भरकर खेलने की प्रथा का
प्रारंभ करने के लिए
पान खाने से दागदार अपने दांतों को देकर
उभडकर दिखाने में असमर्थ
लाल जीभ को निकाल कर दिखाती
ऐसे, जैसे भरे हुए तालाब के मेड़ से
हल्के-हल्के पानी छलकता है I
ठीक है, आज पर्याप्त है,
अब कल खेलेंगे – यूँ कहकर
परछत्ती पर रखने दिये तख्ते को
जानबूझकर हमने खो दिया, इसलिए
सिसक-सिसककर रोयी दादी की आँखों के गड्ढों में
समय फीकी फूल सी कौड़ी रखकर
खेल गया कोई।