நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 29 ஜூன், 2017

நான் ஏன் மத்தியப் பல்கலையில் சேர்ந்தேன் ?

நான் ஏன் மத்தியப் பல்கலையில் சேர்ந்தேன் ?

கொஞ்சம் பெருசு தான், அதனால் பொறுமையா படிங்க.,

திருவிக அரசுக் கலைக் கல்லூரி என் எண்ணங்களுக்கு எந்நாளும் வேகத்தடை விதிக்காது இன்னும் வேகஞ்செல்லும் நான்குவழிச் சாலையாகவே என்னை இருக்கவைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மூன்றாண்டுக்குள் கலைத்துறையிலும் இயற்பியல் பாடத்துறையிலும் நிலைநிறுத்தி வைத்திட்டேன். மார்ச்சு மாத தொடக்கத்தில் பல்கலைக்கழக செய்முறைத்தேர்வு நடைபெற்றது.

புதுதில்லிக்கு விருது வாங்கச் சென்றது. தமிழக அரசின் இளந்தமிழர் இலக்கியப்பட்டறைக்கு சென்றது. இது மட்டுமின்றி அங்கிரண்டும் இங்கிரண்டுமாய் அவ்வப்போது போட்டிகளுக்கும் பேசுவதற்கும் சென்றது என 90 வேலை நாட்களில் 60க்கு மேல் நான் கல்லூரி செல்லவில்லை. இதற்கிடையில் தான் செய்முறைத்தேர்வு. அதையும் முடித்து அதற்கடுத்து வந்த பிரிவு உபசரிப்பு விழாவையும் முடித்து வந்தால், வீட்டில் அம்மாவின் பிடிவாதம். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தே ஆக வேண்டும் என்று.
@ common entrance test



சின்ன பிளாஷ்பேக் :
(நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்த போதே, என்னுடன் படித்த பல மாணவர்கள் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும், தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமலே போய்விட்டது. சமுதாயத்தின் கடைசி சாரத்தில் இருந்து தான் சமுதாயம் கட்டிஎழுப்பப்படுகிறது என்பதறிந்து கொள்ளத்தான் அப்போது சியுடிஎன் க்கு விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பத்தேதி முடிந்த பின் தான் வீட்டிற்கே தெரிவித்தேன். திருவிக கல்லூரியில் விண்ணப்பம் வாங்கச் சென்ற போது சியுடிஎன் இல் இரண்டாம் கலந்தாய்வு நடக்கும் அங்கு சென்று சேர்ந்துவிடு என்றெல்லாம் பேராசிரியர்கள் சொன்னார்கள். எனக்கு விருப்பம் திருவிக கல்லூரிக் களத்தில் கால் பதிக்க வேண்டும் என்பதே)

எனக்குத் தெரியும் விண்ணப்பித்தால் தேர்வு எழுதவேண்டும், தேர்வெழுதின் வெற்றி கிட்டிடும், கிட்டினால் சேர வேண்டும். சேர்ந்தால் படிக்க வேண்டும். அப்போது, சென்னை-மீடியா-அரசியல்-ஆட்சிப்பணி-இயற்பியல் எனும் என்னுடைய கனவெல்லாம் கண்களுக்குள்ளே தற்கொலைக்கு சென்றுவிடும் என்றெண்ணம் தலைத்தூக்கியிருந்தது. வேறுவழியின்றி தாய் சொல் மிக்க ஜீ பூ பாம்பா இல்லை என்கிற காரணத்தால் விண்ணப்பித்தேன் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான கடைசி நாளில்.

மே 19 – மே 20 இரு நாள் தேர்வு நடந்தது. ஒரு முறை தான் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், மூன்று பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்க இயலும் விரும்பிய பாடங்களுக்கு., நான் விண்ணப்பித்தது மூன்று பல்கலைக்கழகங்களிலும் சேர்த்து மொத்தம் ஐந்து பாடங்கள்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
கேரள மத்தியப் பல்கலைக்கழகம்
ஹரியான மத்தியப் பல்கலைக்கழகம்

செவ்வியல் தமிழ் – M.A Classical Tamil Studies
தகவல் தொடர்பு & காட்சி ஊடகம் M.A Mass media & visual communication
சமூகவியல் துறை MSW Social Work
இயற்பியல் M.Sc Physics
அரசியல் அறிவியல் M.A Political Science

 @ conference 
மே மாதம் கோடை விடுமுறையில் வீட்டில் வெட்டியாய் இருப்பதற்கு அதே நேரம் நம் அறிவின் திறத்தை ஆயத்தமின்றி சோதித்துப் பார்க்கலாமே என்று நினைத்தன் விளைவு. இரு நாள் முழுதும் அன்றெனக்கு அந்நியமான சியுடிஎன் வளாகத்தில் தேர்வெழுதி முடித்தேன். சுத்தமாக கவலையில்லை. அழுக்காக மகிழ்ச்சியுமில்லை. ஏனெனில், எப்படித் தேர்வு முடிவு வந்தாலும் நாம் தான் சென்னைப் போகப் போகிறோமே ! என்றந்த நினைவிலேயே ஐந்து தேர்வுகளும் அசாதரணமாகச் சென்றது.

எனக்கு இந்த நுழைவுத் தேர்வு முடிவுகளை விட, இதற்குள் நுழையத் தேவையான எனது யுஜி பட்டப்படிப்புத் தேர்வு முடிவுகளை தான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். எனதாசையை நிறைவேற்றியது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள். எல்லாப் பாடத்திலும் தேர்வு பெற்றாச்சு. அம்மகிழ்ச்சியின் சுவடுகள் முடிவதற்குள் சென்னை சென்றிடலாம் என்றிருந்தவனை மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான
தேர்வு முடிவுகள் வந்து நீச்சலே தெரியாத என்னை சோக வெள்ளத்தில் மூழ்கடிக்க வைத்துவிட்டது.

ஆமாம், attend செய்த ஐந்து நுழைவுத் தேர்விலும் attempt இல்லாமல் பாஸாகிட்டேன். எப்படியும் கேரளாவிற்கும் ஹரியாணவிற்கும் சென்று அங்குள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு என்வீட்டு வெளியுறவுத் துறை விசா வழங்கப்போவதில்லை என்பதாலும், உள்நாட்டுக்குள் உலவுவதற்கு கடவுச்சீட்டே தேவையில்லை என்பதாலும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேர்த்திட எண்ணி 10 கிலோ சலவைத்தூள் வாங்கி வைத்திட்டாள் அம்மா.

தினசரி சலவை தான் நடந்துகொண்டிருந்தது. எப்போதும்
“எதிர்மறையை யோசி, நேர்மறையை யாசி” என் காபிரைட் வாங்கிய கொள்கையினால் என்னால் சியுடிஎன் பற்றி யோசிக்க முடிந்தது. எப்படியும் சென்னை சென்றிடலாம் என்றிருந்தவனை எப்போதும் போல் சுற்றி நின்று சுழற்றி விடுபவர்கள் என்றெண்ணுபவர்கள் குழப்பத்தில் இருப்பவனை நன்றாகவே குழப்பி இருந்தார்கள்.

மேலும் மேலும் யோசித்து யோசித்து அதிகம் விழிப்புடனே இருந்தேன் குழப்பத்தில். எப்படியும் சென்னை சென்றிட வேண்டும். டிஜி வைஷ்ணவா, மாநிலக்கல்லூரி, விவேகானந்தா கல்லூரி என மூன்றுக்குள் ஒன்று என்னை சூடிக்கொள்ளும் என நினைத்திருந்தேன்.
(பி.கு : சென்னையில் ஏன் இயற்பியல் படிக்கவில்லை என்பதை அடுத்த கட்டுரையில் குறிப்பிடுகிறேன்)
ஆனால், சென்னையின் எல்லா வாகையையும் இரண்டாம் பட்சமாக வைத்துவிட்டு, சியுடிஎன் எனும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் வாகையை என் தலையில் சூட்டப் பார்த்தாள் அம்ம்மா. சில விசயங்களை அம்மாவிற்கு ஏற்பது சரியென்றும் தேவைப்படின் அந்த விசயங்களையே புறக்கணிப்பது சரியென்றும் நடந்து கொண்டதுண்டு. அதன்படி எப்படியும் நம் கனவை தயாரிக்கும் உரிமை எப்படி நம்முடையதோ, அதை காவியமாக இயக்கி வெளியிடும் உரிமையும் நம்மிடம் தான் இருக்க வேண்டும் என்றிருந்தேன். அப்படியே கழிந்தது அட்மிசன் நாள் வரை.

ஒரு நிமிடம் அதற்கு முன்னிரவு நடந்ததைக் கூறுகிறேன். முதல்நாள் மாலை, திருவாரூரில் நடந்த இலக்கிய வளர்ச்சிக் கழக மாதக் கூட்டத்தில் தற்போதைய தமிழ்த்துறைத் தலைவர் Velmurugan Palanisamyrugan Palanisamy ஐயா தான் சிறப்பு விருந்தினர். அன்றைய தினமே அவருடன் பேசி அடுத்த நாள் வாய்ப்பிருப்பின் கலந்தாய்விற்கு வருவேன் என்றிருந்தேன். அங்கு வந்த Muni Arasu பேராசிரியரும் மிகவும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து முன்னிரவை விடையெழுத விடாது செய்திட்டார். பின்னிரவு வந்தது.

நான் இரண்டாண்டு முன்பு தமிழ்நாடு மத்தியப்பல்கலைக்கழகம் பற்றிய கட்டுரை எடுக்க வந்திருந்தேன் விகடனுக்காக. அப்போது மாணவப் பத்திரிக்கையாளனாக இருந்த எனக்கு கிடைத்த பத்திரிக்கையாள சீனியர் தான் Arunkumar Cheyyaruumar Cheyyaru (இப்போ தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் செய்துகொண்டிருக்கிறார்). அவரிடம் இரவு 9 மணிக்கு மேல் தொடர்புகொண்டேன். 22 நிமிடங்களுக்கு மேல் நீண்டது அந்த உரையாடல்.

கடைசியில் தமிழ் படித்தால் வேலை மாதச் சம்பளத்திற்கு நன் உத்திரவாதம் (?) எனும் முடிவோடு முடிக்கப்பட்டது. வேலைக்காக என்று படித்ததும் இல்லை, படிக்கப் போவதும் இல்லை என்கிற காரணத்தால் அந்தச் சம்பள மேட்டர் காவிரியின்றி கருகிப் போன பயிர்களாய் கருகி விட்டது. அந்த அண்ணன் சொன்ன நிறை குறைகள் எல்லாம் கரெண்ட் இல்லாத நேரத்தில் கடையில் எடைபோடும் எலெக்ட்ரானிக் இயந்திரம் போல் என்மனதில் இடம் பிடித்திருந்தது. ஒரு நிமிடம் முடிஞ்சி சில விநாடிகள் ஓடிடிச்சு. வாங்க அடுத்து அட்மிசன் அன்று நடந்ததைக் காண்போம்.

காலை எப்போதும் போல எழுந்து முடிந்து அம்மாவை பள்ளிக்கு அனுப்புவதற்கு அவர்கள் தந்த அறிவுரைகள் தாதாசாகேப் பால்கே கே. பாலச்சந்தர் படம் பார்த்த தாக்கத்தை அப்படியே கடத்தி இருந்தது. முகநூலில் நான் என்னப் படிக்கலாம் என்று ஒரு பதிவு ஏற்றி விட்டு, முகநூல் நண்பர்களின் கருத்துகள் என்னவென்று அறிந்திருக்க காத்திருந்தேன், (அப்படி ஏற்றிய பதிவின் ஓராண்டு நிறைவு தான் இன்று). அதற்குள் தாயவள் அழைக்க “சரிம்மா, நான் சியுடிஎன் இல் சேர்ந்திடுறேன் நீ போயிட்டு வா” என்று அவர்களை வழியனுப்பியாச்சு.

அப்பாவுக்கு கால் எலும்பு முறிவு சிகிச்சை மேற்கொண்ட சிலநாள் தான் தொடர்ந்திருந்தது என்பதால் வீட்டில் இருந்திருந்தார்கள். அதனால் அப்பாவின் சைக்கிளை துணைக்கு அழைத்துக்கொண்டு கையில் எல்லாச் சான்றிதழ்களின் நகல்களை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பலாம் எனத் தயாரானேன். நாற்பது நிமிட சைக்கிள் பயண நிறைவில் பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கம் வந்திருந்தது. கையில் ஏதுமின்றி மேடையேறினேன் இதற்குமுன் On the Spot பேச்சுப் போட்டிகளில் பேசிய நம்பிக்கையுடன். அங்கே தமிழ்த்துறையில் தேடிச் சென்று பேச, தம்பி டீ இன்னும் வரலை எனும் நோக்கில் பத்து மணிக்குத் தான் தொடங்கும் கொஞ்சம் பொறுங்கள் என்பதற்கெற்ப நாச்சிமுத்து ஐயா சொல்லிவிட்டார்.

அதுவரை சும்மா இருக்காது, நாம் நுழைவுத் தேர்வு எழுதிய துறைகளான சமூக சேவைத் துறையிலும் காட்சி ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையிலும் கேட்டுக் கொண்டிருந்தேன். இதில் இன்னோரு பியுட்டி என்னவென்றால் சமூக சேவைத் துறைக்கு முற்றிலும் பாட ரீதியில் தொடர்பின்றி இருக்கும் நான் அதில் தான் அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தேன். எனக்குக் ஒரு குழப்பம். பேசாமால் இந்தத் துறையில் இணைந்திடுவோமா என்று. ஆனால், எனக்கு அந்தக் கலந்தாய்விற்கு வந்திருந்தவர்கள் வேலைக்கு உத்திரவாதம் கொடுத்தார்கள். அப்போதே அங்கிருந்து ஆப்செண்ட் ஆகிவிட்டேன்.

அடுத்தது காட்சி ஊடகம் தகவல் தொடர்புத் துறைக்குச் சென்ற போது பேராசிரியர் ஷியாமளா do you interest join the course என என்னை அழைத்துச் சென்று அந்தப் படிப்புப் படிப்பதற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்யச் சொன்னார். ஒரு நிமிடம் என்று அவரிடம் அந்த விண்ணப்பத்தை வாங்கிச் சென்றவன் தான் பிறகு அந்த மேடத்தை பல்கலைக்கழகம் திறந்த பிறகு தான் சந்தித்தேன்.

சரி, பிற துறைகளில் தேர்வானதையும் முகநூலில் பதிவேற்றினேன். ஆனால், அச்சமயம் என் கனவுக்கு ஃபைனான்ஸ் செய்யும் விதத்தில் எல்லாருமே சென்னையே செல்க என்று பச்சைக்கொடி காட்டியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இது ஒரு புறமிருக்க அட்மிசன் நெறிமுறைகள் தொடங்கி இருந்தன. பதினொரு மணிக்கு செவ்வியல் தமிழ் சேர்வதற்காக இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு அரங்கில் வைத்திருந்தார்கள்.

அதையும் வெற்றிகரமாக முடிச்சாச்சு. முடிச்சிட்டு ஆங்கிலப் பேராசிரியர் ஜெயராமன் சார் தான் மேலே இருந்து பெயர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். முதலில் தமிழ்த் துறைக்காக நான் அழைக்கப் பட்டிருந்தேன். மேடை சென்று எல்லா வித சரிபார்ப்புகளும் செய்ய வேண்டுமென்றால் ஒரிஜினல் சான்றிதழ் வேண்டும் எனப் பகர்ந்தார். அப்படியே வெளியே வந்துவிட்டேன். அந்நேரம் மீண்டும் குழம்ப ஆரம்பித்து விட்டது.

With Vice Chancellor
அம்மாவிற்கு அழைப்பு கொடுத்தேன். அம்மாவும் நான் சொல்றதைக் கேளு, இப்ப சேரு, சென்னையில் சீட்டு கிடைத்தது என்று சொன்னால் நானே டிசி வாங்கி உன்னைச் சென்னையில் சேர்த்து விடுகிறேன். உடனே மீண்டும் ஒரு நல்லாலோசகரிடம் அறிவாலோசனை பெற வேண்டி இருந்தது. ஜூவியின் ஆசிரியர் Thirumavelan Padikaramu சாரிடம் பேசினேன். ஏற்கெனவே பேசியிருந்த திலிருந்து கொஞ்சம் மாற்றம் சொல்லி இருந்தார். பிற துறையிலிருந்து தமிழ் வந்தார் பற்றியெல்லாம் பகர்ந்திருந்தார். ஐந்து நிமிடத்திற்குள் நிறைவுற்ற அந்த தொலைபேசி உரையாடலின் முடிவு தமிழ் பற்றிய ஒரு தெளிவைக் கொடுத்திருந்தது.

ஆனால், தமிழ் சேர வேண்டும் என்றால் அசல் சான்றிதழ்கள் தேவை. அதற்கு வீடு வர வேண்டும், வீடு வர 40 நிமிடம் சைக்கிளில் திரும்ப 40 நிமிடம் நான் எம்.ஏ தமிழ் சேர்வதற்குள் எமலோகமே சேர்ந்திடுவேன் என்றிருக்க.
ஓராண்டு முன்னால் என்பின்னால் உட்கார்ந்து வந்த ஒரே காரணத்திற்காக என்னினும் மோசமாக ஆற்றங்கரை ஓரத்தில் அடிபட்டுக்கிடந்த இயற்பியல் வகுப்புத் தோழன் Ibnu Tnsf அப்போது சியுடிஎன் இல் கேண்டீன் இல் பணி புரிந்து கொண்டிருந்தான். அப்போது தான் ஹீரோ ஹோண்டா பாசன் ப்ரோ புதிய வண்டி வாங்கி இருந்தான். அவனையே ஆற்றங்கரையில் தள்ளியவன் நான், இப்போது வீடு வரை சென்று திரும்ப வேண்டும் எப்படியும் 10+10 மொத்தம் 20 கிமீ தூரம் வண்டி தருவானா என்ற கேள்வியே என்னுள் எழும்பாமல் அவனிடம் கேட்டுவிட்டேன். அவனும் மறுமொழி ஏதும் பகராமல் சீக்கிரம் வந்துடு ஷிப்டுக்கு போகணும் என்று மட்டும் மொழிந்தான். அதான் நட்பு.

வீடு வர ஒன்றரை மணி ஆகி இருந்தது. இரண்டு மணிக்குள் சாப்பிட்டு முடித்து அப்பா சென்னையே போ எனும் முடிவில் தீர்க்கமா இரு. வேண்டுமென்றால் அடுத்த வருடம் தமிழ் படித்துக் கொள்ளலாம் என நம்பிக்கைக் கொடுக்க மதிய உணவு செரிமானத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தது.

தேவையான பணமும், தேவைக்கு அதிகமான சான்றிதழ்களும் எடுத்துக்கொண்டு திரும்பவும் பல்கலைச் சென்றால், அதற்குள் பெயர் பலருக்கும் தெரிந்துவிட்டது. மூன்று துறைகளிலும் முதல் பத்து இடம் பிடித்தவர்களுக்கான பட்டியலில் என் பெயர் இருக்க மாற்றி மாற்றி கூப்பிட எனக்குப் பின்னால், பெயர் வந்தவர்கள் எல்லாம் எனக்கான காத்திருத்தலில் என் மீது வெறுப்பையும் சிலர் இவன் தேர்வுற்றால் நம்மால் வேறு பல்கலை சென்று விட இயலும் என்கிற அன்பையும் பொழிந்தனர்.

ஒரு வழியாக சான்றிதழ் சரிபார்ப்பு, பணம் கட்டுதல் என சகலவிதமான பரிவர்த்தனைகளும் பூர்த்தியடைய தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் கல்விப் பயணம் தொடங்கியது. கலைப் பயணத்தில் பேச்சு/கவிதை இரண்டிலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தாயிற்று. இப்போது அனைத்துப் பேராசிரியர்களின் சீரிய வழிகாட்டுதல்களோடு செவ்வியல் தமிழ்ப் பயணம் சிறப்பாக செல்கிறது. இரண்டாமாண்டு வரும் மூன்றாம் தேதி துவங்குகிறது.

முகநூலில் அன்று எனக்கு கருத்து சொல்லி என்னை ஊக்கு வித்த நண்பர்களுக்கும், இன்று இதைப் படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

இவ்வளவு நேரம் படித்தவர்களும் ஒரு மகிழ்ச்செய்தி (!)., மனதை திடமாக்கி வச்சிக்கங்க. “நான் ஏன் சென்னையில் படிக்கவில்லை” என்ற தலைப்பில் அடுத்த கட்டுரை வெளியாகிறது.

த.க.தமிழ்பாரதன்


29.06.2018
(தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நாளின் நினைவைப் பகிர்தல் பொருட்டு எழுதப்பெற்றது)

புதன், 28 ஜூன், 2017

பிறந்தநாள் (HBD) is not necessary !

இறக்காமல் ஓராண்டு காலம் உணவுண்டு உயிர் வாழ்ந்தது சாதனையா? அல்லது சாகடிக்காமல் ஓராண்டு இவ்வுலகம் உணவூட்டியது சாதனையா? எது சாதனை? சரி, ஒரு வாதத்துக்கு இதுவும் சாதனைதான் என வைத்துக்கொண்டால், வாழும் ஒவ்வொரு நொடியும் சாதனைதானே? ஆம், இந்த வேகமான கார்ப்பரேட் மாசு நிறைந்த உலகில் இந்த நொடி என்னால் உயிர்வாழ முடிகிறது, அடுத்த நொடி வாழ்வதற்கான நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால், அதுவே சாதனை தான்.

இன்று ஒரு குழந்தை பிறக்கிறது. அடுத்த ஆண்டு அதே மாதம், அதே நாள், வேறு கிழமையில் வரும்!  [பிப்ரவரி 29 விதிவிலக்கு]

பிறந்தநாள் என நாம் தவறாக சொல்வது பிறந்தநாளின்  நினைவுநாள்” என்பதே. 
 
சான்றாக..

ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்கிறது. அடுத்த வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அவருக்குத் 'திருமண நாளா'? இல்லை!

அடுத்த மாதம் அதே தேதி வருமா? வரும்! அப்போது அவருக்குத் 'திருமண நாளா'? இல்லை! "மாதாந்திர திருமண நினைவு நாள்".

அடுத்த ஆண்டு அதே மாதம் அதே தேதி வருமா? வரும்! அப்போது “திருமணம் நிகழ்ந்த ஓராண்டு நினைவு நாள்” சரிதானே.

ஆனால், ஏனோ... ஆண்டுக்காண்டு வரும் 'பிறந்த நினைவு நாளுக்கு' "wish you happy birth anniversary" என்று ஒருவரும் சொல்வதில்லை! 

 

மாறாக, 'அன்றுதான் அவர் பிறந்தது' போல "wish you happy birthday" என்கிறார்கள்! தர்க்கப்பூர்வமாக இதை ஆயுசுக்கு ஒருமுறைதான் ஒருத்தர் கிட்டே சொல்ல முடியும். அதாவது ஒருவர்  பிறந்த அன்றைய நாளில் மட்டும் சொல்ல முடியும் தர்க்க ரீதியாக!

சரி இருக்கட்டும்பிறந்தநாள் மட்டும் இந்தளவு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.. 

ஒவ்வொரு ஆண்டும் வரும் பிறந்தநாளன்றாவது, புதிய பிறப்பு எடுக்க வேண்டும் புதிய உத்வேகத்தோடு இயங்க வேண்டும். இந்தச் சூரியக் குடும்பத்தின் ஓர் அங்கமான நீயும் இந்தச் சூரியனை ஓராண்டு சுற்றிவிட்டாய்(அதாவது ஒருமுறை) உன் வயது ஒன்று கூடியிருக்கிறது. உனக்கான பொறுப்பும் வேகமும் கூடியிருக்கிறது. உன்னைச் சுற்றி இருக்கிற உலகம் உன்னிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறது. அதற்காக உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியதை நினைவு படுத்துகிறது.

வள்ளுவர் சொன்னது :
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
தாயைப்போலத் தான் பிள்ளைக்கும். பிறந்தகணத்தை நினைவுபடுத்தும் ஆண்டில் ஒருநாள் தலையாயது. இந்த அவசர உலகில் நம் இருப்பைத் தகவமைத்துக்கொள்ள நம்மைப் பற்றிச் சிந்திக்க அடுத்த ஓராண்டிற்கானத் திட்டமிடலைச் செய்வதற்கும் இந்தநாள் அவசியமானதும் கூட.

 நினைவு தெரிந்து கேக் வெட்டி கொண்டாட்டம் எதுவும் செய்ததில்லை. செய்ய எதுவும் ஆசையில்லாத சராசரி மனிதர்களில் நானும் ஒருவன். 

 

பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் என்ன ? எனக் கேட்பவருக்கெல்லாம். பிறந்தநாளுக்கு நான் தான் ஸ்பெஷல் என்றே பதில் வரும் வாழ்வை அதன்போக்கில் வாழ்பவர்களிடமிருந்து.

இல்ல கோயிலுக்குப் போனிங்களா ? ஸ்வீட் செஞ்சாச்சா ? டிரீட்லாம் கிடையாதா ? என அடுக்கிக்கொண்டே செல்லும் கேள்விகள்.

புதிதாய் ஒரு மேலாடை அவ்வளவு தான். ஸ்வீட் ஒன்றும் இல்லை., செல்லவில்லை கோயிலுக்கும்,. ட்ரீட் எதுவும் இல்லை. வெகு சாதாரணமாய் கேலி கிண்டல் திட்டு எரிச்சல் எனத் தான் செல்லும் சராசரி மனிதனுக்கு.

சிலருக்குப் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அது 

என்றைக்கு உன் பிறந்தநாளை உலகமே கொண்டாடுகிறதோ அதுவே உனக்கு பிறந்தநாள்

அருகிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுடன் நேற்றைய பிறந்தநாளின் நினைவுநாள் கொண்டாடப்பெற்றது. 
 
நேற்று கிடைத்த ஒரே ஒரு பிறந்தநாள் பரிசு அவள் விகடனில் என்னில் எழுதி வெளியான திருவாரூரில் வளர்ந்து சூப்பர் சிங்கர் வென்ற பிரித்திகா குறித்த கட்டுரை. அதுவும் பத்திரிக்கையாளர் பொன் விமலா அக்காவின் நேரடி வாழ்த்துகளோடு.. (கட்டுரை வாசிக்க https://www.vikatan.com/oddities/women/132284-vijay-tv-super-singer-junior-prithika-interview).

நேற்று  கிடைத்த வாழ்த்துகளிலே மறக்கமுடியாத வாழ்த்து தம்பி தன்ராஜ் முகநூலில் பதிந்திருந்தது. அந்தப் பள்ளிக் கூடத்துப் பதின்பருவ நாட்களில் எல்லா போட்டிகளுக்கும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் தன்னந்தனியாக முன்னின்று எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு போராடிய போது சக போட்டியாளானாக எதிர்ப்படையில் அமர்ந்து போரிட்டவனின் வரிகள்.

 thank you dhanraj

சமூகத்தின் ஆதியிலிருந்து அந்தம் வரை அனைத்துப் பரிமாணத்திலும் பரிணமிக்கும் நண்பர்களின் வாழ்த்துகளோடு இந்த ஆண்டுப் பயணம் தொடங்கிற்று. இன்னும் வேகமாக இயங்க வேண்டிய கடப்பாட்டை காலச்சுழற்சி எண்ணிக்காட்டுகிறது. 

தக | 28.06.2017
(2017 ஆம் ஆண்டு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு எழுதப்பட்டது )