நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

  புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்சங்க தேர்தல் தொடங்கியது.

மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் தேர்தல் என்றாலே கொண்டாட்டம் தான் அரசியல் கட்சிகளுக்கு,. தேர்தலில் களம்காண்பவர்களும், அதில் வெல்பவர்களும் ஜனநாயகத்துடன் நடந்துகொள்கிறார்களா! தேர்தல் கூட ஜனநாயக முறைப்படி நடக்கிறதா? என்பதெல்லாம் விடை தேடப்படவேண்டிய வினாக்கள்.  தாம் அன்றாடம் எதிர்கொள்கிற திண்டாட்டத்தை ஒழித்து நல்லது நடக்கும் என்று ஒவ்வொரு முறையும் வாக்களிப்பதே சராசரி இந்திய மனம்.

மாணவர்கள் தான் எதிர்காலம் என்றான பிறகு, மாணவர்களிடையே அரசியல் குறித்த விழிப்புணர்வென்பது அத்தியாவசியமானதாகும். அரசியல் கட்சிகளின் மாணவர் பிரிவுகள் அரசியல் கட்சிகளை விட வேகமாக இயங்குகின்றன எனலாம். இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் மாணவர் சங்கத் தேர்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது! 

இந்தியாவின் தலைநகரில் இயங்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகமானது மற்ற கல்விநிலையங்களைவிட மாறுபட்டது. கருத்துச்சுதந்திரமும் பன்முகத்தன்மையும் இதனை இன்றும் தாங்கியிருக்கின்றன. இங்குள்ள மாணவர்கள் கருத்துச்சுதந்திரத்தையும், போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் இந்தியாவின் பிற மாணவர்களுக்கு முன்னோடிகளாக உள்ளனர். எங்கு உரிமை மீறல் நிகழ்ந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே கூட்டம் போராட்டம் நடத்தப்பெறும். 

இவர்களை நெறிப்படுத்தும் இங்குள்ள மாணவர் சங்கத்திற்கான தேர்தல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிவுகள் அரசியலிலும் கல்விச்சூழலிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

2018ஆம் ஆண்டிற்கான JNUSU - ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் இன்று 14.09.2018 காலை 09.30மணியளவில் தொடங்கியது. 
தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர், மற்றும் பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலர்கள்  ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி அடைபவர்களே மாணவர் பிரதிநிதிகளாவர்.  

கடந்த 12.09.2018 அன்று இரவு விடிய விடிய பல்கலைக்கழக மாணவர்கள் முன்னிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மாணவர்களின் விவாதம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக, கொள்கை ரீதியாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் விடையளித்தனர். எப்படி பதில் சொல்கிறார், அவரது சித்தாந்தம் என்ன!  கொள்கை, திறன் , இலக்கு என்ன! என்பதெல்லாம் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதிப்பதால் அவர்களைத் தேர்வு செய்ய ஏதுவாக இவ்விவாதம் அமைகிறது. 

களத்தில் வெகுவாக இயங்கும் அமைப்புகள் :
பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் அமைப்பு (Birsa Ambedkar Phule Students Association - BAPSA),
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Students Union of India - NSUI), 
பா.ஜ.க-வின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (Akhila Bharatiya Vidyarthi Parsishad - ABVP).
அனைத்திந்திய மாணவர் சங்கம் (All Indian Students Association – AISA), 
இந்திய மாணவர் சங்கம்(Students Federation of India - SFI) ,
ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (Democratic Students Federation - DSF)
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (All India Students Federation )

பல்கலை. வளாகத்துக்குள் காவல்துறை அத்துமீறி நுழைந்து, மாணவர் அமைப்புத் தலைவரைக் கைதுசெய்தது, மாணவர் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தல்,  ShutDownJNU,  மாணவர் நஜீப் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அவர் காணாமல் போனது, போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது விசாரணைகள் பல்கலைக்கழகத்தைவிட்டு நீக்குதல், அபராதம் விதித்தல், மாணவர்களின் போராட்டங்களுக்குத் துணையாக இருக்கும் ஆசிரியர்கள் மீதும் விசாரணைகள் போன்றவை காரணமாக எதிர்எதிர் துருவங்களாகச் செயல்பட்டு வந்த மாணவ அமைப்புகளான இடதுசாரி அமைப்புகள் ஒன்றுபட்டுத் தேர்தலைச் சந்திக்கின்றன.

பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களின் போராட்டங்கள் மட்டுப்படுத்தப்படுத்தல், மாணவர் சேர்க்கையில் பெரும்பான்மையான இடங்களைக் குறைத்தல், மாணவர்கள் மீதான தாக்குதல்.,  பல்கலைக்கழக நிர்வாகம் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டியுள்ளது.  நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, உயர்கல்வி காவிமயமாவதையும் தடுக்க வேண்டியுள்ளது. 

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் மாணவ அமைப்பிற்கான தேர்தல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இது நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டு இடதுசாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டணி [AISA - DSF - SFI - AISF] சார்பில் சாய்பாலாஜி, ஏபிவிபி[ABVP] சார்பில் லலித் பாண்டே, பாப்சா [BAPSA] சார்பில் தள்ளபள்ளி பிரவீன், என்எஸ்யுஐ [NSUI] சார்பில் விகாஸ்யாதவ், ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு போட்டியாளர்களிடையே  கடுமையான போட்டி நிலவுகின்றது.

இம்மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் ஜனநாயகமானத்திற்கும் மாணவர்களின் செயல்பாட்டுக்கும் வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடித்தளமாகவும் அமைகிறது. 

அரசியல் தளத்திலும் கல்விச் சூழலிலும் கவனிக்கப்படும் தேர்தலின் முடிவுகளை வரும் ஞாயிறு 16.09.2018 அன்று தெரிந்துகொள்ளலாம்.

(சிறப்பு நிருபர் - தில்லி)
14.09.2018

கடல் கடந்தும் கலைஞருக்கு அஞ்சலி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் திமுகவின் அரைநூற்றாண்டு கால தலைவருமாகவும் இருந்த கலைஞர். மு.கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை (07.08.2018) மாலை  உடல்நலக் குறைவின் காரணமாக மறைந்தார். 08.08.2018 அன்று ஒரு சூரியன் மேற்கில் மறைந்துபோனது, இன்னொரு சூரியன் கிழக்கில் மெரினா கடற்கரையில் விதைந்துபோனது.


கலைஞர் மறைவிற்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் அரசு துக்கம் அனுசரித்தன. இந்திய அரசாங்கம் ஒருநாள் துக்கம் அனுசரித்தது. கலைஞரின் மறைவு அரசியலில் மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கியதைப் போல மக்களிடமும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கலைஞர் கருணாநிதிக்கு! தமிழகம், இந்தியா தாண்டி கடல் கடந்து வாழும் தமிழர்கள் இரங்கற்கூட்டம் நடத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் அமீரக தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்க  அய்மான் சங்க ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை  ஷாஹுல் ஹமீது  தலைமை வகித்தார்.

கலைஞரின் சிறப்புகளையும் அவர்தம் மக்கட்தொண்டையும் பல்வேறு நபர்கள் சிறப்பித்துப் பேசினர்.

ஒரு நிமிடம் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்திய பின் கூட்டம் நிறைவுபெற்றது. கலைஞரின் பணிகளையும் தொண்டுகளையும்  பாராட்டி மத்தியஅரசு  பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என  இரங்கல் கூட்டத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதேபோல், ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் இயங்கிவரும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பில் கலைஞருக்கு இரங்கற் கூட்டம் நடைபெற்றது!

இதில் சிட்னி வாழ் தமிழர்கள் பங்கு கொண்டு கலைஞரின் நினைவுகளையும் அவருடைய பணிகளையும் பேசினர். அவரது திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டி மரியாதை செய்தனர்., இது குறித்து  சிட்னி வாழ் தமிழர் அனகன் பாபு கூறுகையில், கலைஞர் கருணாநிதி தமிழுக்கும் தமிழர்க்கும் அரசியல் கடந்து பணியாற்றியவர். அவரது சாதனைகள் போற்றுதர்க்குரியது என்றார்.

இதேபோல் இந்தியத் தலைநகர் தில்லியில் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய சமூக நீதிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுகுமார் மற்றும் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ராஜம் கிருஷ்ணன் இரு பேராசிரியர்களும் உரையாற்றினர்.  இந்திய திராவிட அரசியலில் கருணாநிதியின் பங்கு எனும் தலைப்பிலான விவாதக்களத்தில் வடமாநில மாணவர்களும் பங்கு கொண்டனர். மாணவர்களின் கேள்விகள் பாங்குற அமைய, மாணவர்களும் தங்கள் கருத்துகள் எடுத்துரைத்தனர்.

புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  மாணவர் கூடும் இடங்களில் இந்திய அரசியலில் கலைஞர் கருணாநிதியின்  இரங்கல் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதனை தில்லி தமிழ் மாணவர் படிப்பு வட்டத்தின் சார்பில் ஒட்டப்பட்டதாக தமிழாய்வு மாணவர் அருண்குமார் தெரிவித்தார்.

இவ்வாறு தமிழகத்தில் வாழ்ந்த கலைஞர் கருணாநிதிக்கு மாநிலங்கடந்தும், கடல்கடந்தும் இரங்கற்கூட்டம் நடத்தியிருப்பது மக்கள் மத்தியில் அவர்தம் சிறப்புக்குச் சான்றாகிறது!

த.க.தமிழ்பாரதன்
12.08.2018