நான் சாதாரண மனிதன் எனில் என்னிடம் என் ஆட்சியாளன் பற்றிக் கேளுங்கள் !

நான் ஆட்சியாளன் எனில் என்னிடம் என் நாட்டைப் பற்றிக் கேளுங்கள் !!

Thursday, 13 September 2018

கடல் கடந்தும் கலைஞருக்கு அஞ்சலி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் திமுகவின் அரைநூற்றாண்டு கால தலைவருமாகவும் இருந்த கலைஞர். மு.கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை (07.08.2018) மாலை  உடல்நலக் குறைவின் காரணமாக மறைந்தார். 08.08.2018 அன்று ஒரு சூரியன் மேற்கில் மறைந்துபோனது, இன்னொரு சூரியன் கிழக்கில் மெரினா கடற்கரையில் விதைந்துபோனது.


கலைஞர் மறைவிற்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் அரசு துக்கம் அனுசரித்தன. இந்திய அரசாங்கம் ஒருநாள் துக்கம் அனுசரித்தது. கலைஞரின் மறைவு அரசியலில் மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கியதைப் போல மக்களிடமும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கலைஞர் கருணாநிதிக்கு! தமிழகம், இந்தியா தாண்டி கடல் கடந்து வாழும் தமிழர்கள் இரங்கற்கூட்டம் நடத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் அமீரக தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்க  அய்மான் சங்க ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை  ஷாஹுல் ஹமீது  தலைமை வகித்தார்.

கலைஞரின் சிறப்புகளையும் அவர்தம் மக்கட்தொண்டையும் பல்வேறு நபர்கள் சிறப்பித்துப் பேசினர்.

ஒரு நிமிடம் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்திய பின் கூட்டம் நிறைவுபெற்றது. கலைஞரின் பணிகளையும் தொண்டுகளையும்  பாராட்டி மத்தியஅரசு  பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என  இரங்கல் கூட்டத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதேபோல், ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் இயங்கிவரும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பில் கலைஞருக்கு இரங்கற் கூட்டம் நடைபெற்றது!

இதில் சிட்னி வாழ் தமிழர்கள் பங்கு கொண்டு கலைஞரின் நினைவுகளையும் அவருடைய பணிகளையும் பேசினர். அவரது திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டி மரியாதை செய்தனர்., இது குறித்து  சிட்னி வாழ் தமிழர் அனகன் பாபு கூறுகையில், கலைஞர் கருணாநிதி தமிழுக்கும் தமிழர்க்கும் அரசியல் கடந்து பணியாற்றியவர். அவரது சாதனைகள் போற்றுதர்க்குரியது என்றார்.

இதேபோல் இந்தியத் தலைநகர் தில்லியில் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய சமூக நீதிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுகுமார் மற்றும் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ராஜம் கிருஷ்ணன் இரு பேராசிரியர்களும் உரையாற்றினர்.  இந்திய திராவிட அரசியலில் கருணாநிதியின் பங்கு எனும் தலைப்பிலான விவாதக்களத்தில் வடமாநில மாணவர்களும் பங்கு கொண்டனர். மாணவர்களின் கேள்விகள் பாங்குற அமைய, மாணவர்களும் தங்கள் கருத்துகள் எடுத்துரைத்தனர்.

புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  மாணவர் கூடும் இடங்களில் இந்திய அரசியலில் கலைஞர் கருணாநிதியின்  இரங்கல் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதனை தில்லி தமிழ் மாணவர் படிப்பு வட்டத்தின் சார்பில் ஒட்டப்பட்டதாக தமிழாய்வு மாணவர் அருண்குமார் தெரிவித்தார்.

இவ்வாறு தமிழகத்தில் வாழ்ந்த கலைஞர் கருணாநிதிக்கு மாநிலங்கடந்தும், கடல்கடந்தும் இரங்கற்கூட்டம் நடத்தியிருப்பது மக்கள் மத்தியில் அவர்தம் சிறப்புக்குச் சான்றாகிறது!

த.க.தமிழ்பாரதன்
12.08.2018

No comments:

Post a Comment