த.க.தமிழ்பாரதன்
30.06.2020
சங்க கால வானிலை | நூலறிமுகம்
சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்திய மக்களின் வாழ்க்கைப் பதிவு. புனைவு தவிர்த்து நோக்குகையில் புலனாகும் அறிவியல் தகவல்கள்,
தொழில்நுட்பம் மீப்பெரும் வளர்ச்சியடையாத அக்கால அறிவு வளர்ச்சிக்குச்
சான்றாக அமைகின்றன. இதனை உய்த்துணர்தலின் வழி தமிழர்தம் அறிவு
மரபை அறியலாம். இயற்கை சார்ந்த வாழ்வியலை மரபாகக்கொண்டு தமிழர்
தம் அறிவை மீட்டுருவாக்குதலின் வழி செயற்கையாக முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகின் இயற்கை
வாழ்வியலை முன்னெடுக்க இயலும்.
ஒன்றன் இயல்புகளைப் புரிந்துகொள்ளும் அறிவியல்துறை இயற்பியல். அதனுள் வானின் இயல்புகளைப் புரிந்துகொள்ளும் துறையே வானியல்.
மானுடத் தொடக்கத்தில் மெய்யியலாக இருந்த வானியல் அறிவு, பின் அறிவியலாக அறியப்படுகிறது. தமிழர்களின் வானியல்
அறிவு பெரும்பாலும் சோதிடத்தோடு தொடர்புறுத்திய ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவந்த தமிழாய்வு உலகில் அதனை அறிவியல் துறையோடு தொடர்புறுத்தி
வந்திருக்கும் நூல் சங்க கால வானிலை.
வானிலையாளராகப் பணியாற்றிவரும் முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் எழுதிய
272 பக்கங்கள் கொண்ட இந்நூல் 2018 டிசம்பரில் முக்கடல்
வெளியீடாக (300உரூபா) வந்துள்ளது.
வானிலை, காலநிலை பற்றிய கருத்தாக்கங்களை விளக்குவதோடு,
அதன் தற்கால அறிவியல் செய்திகளையும் தந்து, அதற்கொப்பான
சங்க இலக்கியப் பதிவுகளிலிருந்து சங்க கால வானிலை பற்றிய தமிழர் அறிவை வருவிக்கிறார்.
அறிவியல், இலக்கியப் புலத்தில் வெளியான காலநிலை,
வளியியலுக்கு ஓர் அறிமுகம், வானிலை ஆராய்ச்சி,
வானிலை அறிவியல், வேளாண்மை வானிலையியல்,
சங்க இலக்கியத்தில் நிலவியல், கடலும் காற்றும்,
பழந்தமிழ் அகப்பாடல்களில் நிலமும் பொழுதும், பழந்தமிழ்
இலக்கியத்தில் இயற்கை, தமிழ்க்காதல் முதலான நூல்கள் இந்நூலுக்கு
முன்னாய்வுகளாக அமைந்திருக்கின்றன. அன்றாட வாழ்வியலோடு தொடர்புடையது
வானிலை. எனின், சங்கப் புலவர்கள் அது குறித்துப்
பாடியிருக்கக்கூடும் என்றே நூற்தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருப்பதை அறிவிக்கிறார் நூலாளர்.
வானிலை பற்றி சங்க இலக்கியத்தில் காற்று, மழை, மேகங்கள் எனும் இயல்களிலும்
காலநிலை பற்றி சங்க இலக்கியத்தில் காலநிலை இயலிலும் எடுத்தியம்புகிறார். இவை தவிர்த்த தொடக்க இயல் கருத்துருவாக்க வளர்ச்சி நிலைகளையும் நிறைவு இயல்
நூற்தொகுக்கும் கருத்துகளையும் பதிவு செய்வதாக மொத்தம் ஆறு இயல்களால் நூலாக்கிள்ளார்.
கருத்துவிளக்கம் கூறும் இயலில் வானிலையியலின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் மூன்று கட்டங்களாகப் பகுக்கிறார். முதலாவது கருத்துருவாக்கமும் மத அடிப்படை நம்பிக்கைகளும், இரண்டாவது வானிலை பற்றிய ஊகங்கள், மூன்றாவது தொழிற்புரட்சிக்குப் பிந்தைய சிந்தனைகள். மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் மழையின்மை, பெருமழைப்பொழிவு என இருவேறு வானிலைக் காரணிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் நீட்சியில் வழிபடுதல், பலியிடுதல் உள்ளிட்ட சோதிட வானிலையியல் வழக்கிற்கு வந்திருக்கிறது. அதன்பின், காலநிலையைக் கருத்தில்கொண்டு கொண்டு ஊகங்களும் கொள்கைகளும் உருவாகியிருக்கின்றன.
நீர்சுழற்சி பற்றி எழுதிய தாலஸ், நகரும் வாயுக்களின்
தொகுதியே காற்று என்ற அனாக்சிமேண்டர், மழைப் பொழிவிற்கான காரணம்
சொன்ன அனாக்சகோரஸ் முதலான கிரேக்கர்களின் தொடக்ககால பங்கு வானிலை வளர்ச்சிக்கு முதன்மையானவை.
ஆனால், இவர்களின் கருத்துகள் பின்னாட்களில் அறிவியலால்
மறுக்கப்பட்டதும் இந்நூலில் பதிவாகியுள்ளது. இயற்கையோடு மழைக்கான
தகவமைப்புகளைச் சுட்டிக்காட்டிய தியோப்ரஸ்டஸ் குறித்தும் வானிலை பற்றிய கருத்தாக்கங்களை
வெளிப்படுத்திய ரோமானியர்கள் குறித்தும் பிறமொழி இந்திய அறிஞர்கள் குறித்தும் பகர்கிறார்.
சூரியனே மழையைத் தரும் எனப்பொருள்படும் மனுஸ்மிருதியின் மூன்றாவது பகுதியில்
76ஆவது துதியின், இரண்டாவது வரியான ஆதித்யாத் ஜாயதே
வ்ருஷ்டிஹி என்பதே இந்திய வானிலை ஆய்வுத் துறையின் முத்திரை வாசகமாக உள்ளதை அறியமுடிகிறது.
தற்கால அறிவியல் முறையிலான வானிலை அறிவுக்கு கலிலியோ வெப்பமானி, டாரிசெல்லி காற்றழுத்தமானி முதலானவை அடிப்படையானவை.
வளிமண்டலத்தின் வெப்பம், குளிர், ஈரப்பதம், உலர்தன்மை, காற்றோட்டம்
முதலானவற்றின் நிலைகளைக் குறிப்பது வானிலையாகும். அதாவது, குறிப்பிட்ட
இடத்தின் குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வான் நிலைக் கூறுகளின் தொகுப்பு வானிலை
(Weather) எனலாம். காற்றின் வெப்பநிலை,
ஈரப்பதம், திசைவேகம், அழுத்தம்,
வானிலுள்ள மேகங்களின் வகை, அளவு முதலியன தரைநிலையில்
அளக்கக்கூடிய வானிலைக் கூறுகள். காற்றின் வெப்பநிலை, திசைவேகம், ஈரப்பதம் ஆகிய வளிமண்டலத்தில் வெவ்வேறு உயரங்களில்
அளக்கக்கூடிய வானிலைக்கூறுகள். தரைநிலை மற்றும் வளிமண்டல வானிலைக்
கூறுகளின் மாற்றத்தால் மழை, பனி, புழுதிக்காற்று
போன்றவை ஏற்படுவதாகச் சுட்டுகிறார்.
·
நுண்ணிய துகள்கள் மண்ணில்
எழும்பி காற்றில் பரவியிருக்கும் நிலையை உருவாக்கும் வானிலையானது மண்சார்ந்த வானிலைக்
கூறுகள் (Lithometeor) ஆகும்.
·
வானில் மேகமாகி, மண்ணில் மழையாகுபவையும் அப்படியே ஆவியாகுபவையும் காற்றில்
பரவி நிற்கின்ற மேகமும், மண்ணிலிருந்து மேலெழும்பும் பனித்துகள்
படலமும், பனித்துளி, உறைபனி முதலானவை நீர்ம
வானிலைக் கூறுகள் (Hydrometeor) ஆகும்.
·
வளிமண்டலத்தில் வழி சூரியன், நிலவு ஆகியவற்றின் ஒளி பயணிக்கையில் எதிரொளித்தல்,
ஒளிவிலகல் நிகழ்வுகளால் உருவாகும் ஒளிவட்டம், வானவில்
முதலானவை ஒளி வானிலைக் கூறுகள் (Photometeor) ஆகும்.
·
மேகங்களிடையே தோன்றும்
இடி, மின்னல் போன்றவை மின் வானிலைக் கூறுகள்
(Electrometeor) ஆகும்.
பெருநிலப்பரப்பின் பெருங்கால அளவின் சராசரி வானிலை காலநிலையாகும் (climate). இது தட்பவெப்பநிலை, காலப்போக்கு,
சமுதாயச்சூழ்நிலை அமைதி, காலச்சூழ்நிலை அமைதி,
பண்பாட்டமைதி எனப் பொருள்படுகிறது. இக்காலநிலையின்
முடிபே பருவங்களையும் அதற்கேற்ற வாழ்வியல் தகவுகளையும் கட்டமைக்கும் என்பது வெளிப்படை.
வானிலை, காலநிலை குறித்த கல்வி முறையே மெடியராலஜி
(Meteorology) கிளைமேட்டாலஜி (Climatology) என்றும்
அழைக்கப்படுகிறது. இதில் மெடியராலஜி என்பது அரிஸ்டாட்டில் எழுதிய
வானிலை குறித்த நூலின் தலைப்பாகும். காலஅளவே வானிலைக்கும் காலநிலைக்குமான
வேறுபாடு ஆகும். வானிலையின் தொகுவாக்கம்(integration)
காலநிலை ; காலநிலையின் பகுவாக்கம்
(differentiation) வானிலை. உயிர்மெய்யெழுத்தில்
தொடங்கும் சொற்களுக்கு முன்பு ஓர் எனும் சொல் தவறுதலாகப் பலவிடங்களில் (ப.30:1) இடம்பெற்றுள்ளது.
நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றும் பூமியின் சுழல் அச்சின் இருமுனைகளும்
துருவப்பகுதியில் அமைகின்றன. கோளவடிவமான
பூமியின் தட்டைப்பகுதியில் துருவங்கள் இருப்பதால், அவை குறைந்தளவு
சுழற்சியையே கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச்
21 மற்றும் செப்டம்பர் 23ஆம் நாள் நிலநடுக்கோட்டிற்கு
நேர் உச்சியில் சூரியன் இருக்கும். ஆதலின், இவை பகலிரவு சமநாட்களாகும். வெப்பநிலையில் அடிப்படையில்
நிலநடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதி குளிர்காலமற்ற வெப்ப மண்டலப்பகுதியாகும்.
நிலநடுக்கோட்டுக்கு தொலைவிலுள்ள பகுதி வெப்பகாலமற்ற குளிர் மண்டலப்பகுதியாகும்.
இவ்விரண்டிற்குமிடைப்பட்ட குளிர்/கோடை பருவம் கொண்டவை
துணை வெப்பமண்டலப்பகுதியாகும். இவற்றோடு காலநிலைகளின் பல்வேறு
வகைகளையும் அதற்கான குறியீடுகளையும் குறிப்பிட்டுள்ளார். காலநிலையின்
அடிப்படையிலேயே வாழ்வாதாரமான உணவு உற்பத்தி அமையுமென்பது வெளிப்படை. இந்தியாவின் ஓராண்டுக்கான காலநிலைகள் குளிர்காலம், கோடைக்காலம்,
தென்மேற்குப் பருவமழைக் காலம், வடகிழக்குப் பருவமழைக்
காலம் ஆகும். சங்க காலத் தமிழகக் காலநிலைகளையும் தற்கால நிலவரைவியலின்
அடிப்படையில் சுட்டியுள்ளார்.
·
குறுகிய மழையற்ற கோடைக்காலமுடைய
பருவமழைப் பிரிவு – Amw - (கேரள, கர்நாடக, கோவா, தென் மகாராஷ்டிரா
கடற்கரைப்பகுதிகள்)
·
வெப்பமண்டலப் புள்வெளிப்பிரிவு – Aw - (தமிழக, ஆந்திர, கர்நாடக மாநில உள்பகுதிகள்)
·
நீண்ட மழையற்ற கோடைக்காலமுடைய
பருவமழைப்பிரிவு – As - (தென் ஆந்திர தமிழகக் கடற்கரைப்பகுதிகள்)
·
வறண்ட கோடையும், மழை குறைவாகவும் பெறுகின்ற பிரிவு – Bshw - (மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அதன் மேற்கே அமைந்துள்ள தமிழக, கர்நாடக பகுதிகள்)
சங்ககாலத் தமிழகமாகக் கருதப்படும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளடக்கிய நிலப்பரப்புக்கு பொதுவான காலநிலை இல்லை என்பது இதிலிருந்து
தெளிவாகிறது. கேரள கர்நாடகக் கடற்கரைப்பகுதிகளுக்கு தென்மேற்குப்பருவமழையும்
ஏனையவற்றுக்கு வடகிழக்குப் பருவமழையும் அதிகபட்ச மழையைத் தரும். தமிழகம், ஆந்திரம் புயலால் பாதிப்படைவதைப்போல கேரளமும்
கர்நாடகத்திற்கும் அபாயம் இல்லை. இவற்றுக்கு கிழக்கு/மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அமைப்பே அடிப்படையாகின்றது. தற்கால இந்திய வரைபடத்தை உற்றுநோக்கினால் கடக ரேகைக்குக் கீழுள்ள கிழக்குப்
பகுதி உள்வாங்கி ஒழுங்கற்ற வடிவமைப்பில் இருப்பதும், மேற்குப்
பகுதி சீரான வடிவமைப்பில் இருப்பதும் தெரியும் இதற்கும் தொடர்ச்சி மலைகளே காரணமாகும்.
வரைபடம் இணைத்து அதன் வழி (ஐந்திணை வரையறைகளின்படி)
சங்க கால வானிலைப் பதிவுகளை மாதிரிப் படமாக காட்சிப்படுத்தியிருந்தால்
மேலும், பயனுடையதாக இருந்திருக்கும்.
தொடக்கத்தில் கடவுளாக வணங்கப்பட்ட காற்று உயிர்வாழ அடிப்படையானது. தொடக்கத்தில் காற்றையும் கருமையையும் பார்த்து பதட்டமுற்ற
மனத்தால் காத்து கருப்பு எனும் தொடர் இன்றளவும் வழக்கத்திலுள்ளது. ஓரிடத்தின் வானிலையை பாதிக்கக்கூடிய, நில அமைப்பையே மாற்றக்கூடிய
காற்று பற்றிய தரவுகள் சங்க இலக்கியத்தில் காற்று எனும் இயலில் இடம்பெற்றுள்ளது.
காற்றின் வேகத்தை அளக்கும் அனீமாமீட்டர்
(Anemometer) வெப்பமானி, காற்றழுத்தமானி,
மழைமானி முதலான கருவிகள் இல்லாத காலத்தில் காற்று பற்றிய அறிவு சங்ககாலப்
புலவர்களுக்கு இருந்துள்ளதைச் சான்றுகளுடன் பகர்கிறார்.
நகரும் காற்று(air) காற்றோட்டம்(wind) எனப்படுகிறது. காற்றழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து
குறைவான பகுதியை நோக்கியே காற்று வீசும். ஒரு பகுதியில் வெப்பநிலை
அதிகமிருந்தால் காற்றழுத்தம் குறைவாகவும் வெப்பநிலை குறைவாக இருந்தால் காற்றழுத்தம்
அதிகமாகவும் இருக்கும். காற்றின் வலிமையைப் பொறுத்து மாற்றமுரும்
அதன் பல்வேறு வகைகளும் காற்று வீசும் பதினாறு கோணங்களும் இங்கு சுட்டப்பட்டுள்ளன.
பகல் முழுதும் சூரியனிடமிருந்து பெற்ற வெப்பத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும்
பூமி இரவு முழுக்க அதை வெளிப்படுத்தி அடுத்தநாள் சூரியன் உதிக்கும் முன்பு அதிகாலையில்
குறைந்தபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்யும். வெயில் காலங்களில் கடலோரப் பகுதிகளில்
நிலப்பரப்பு காற்று சூடாகி வளிமண்டலம் செல்ல கடல்காற்று அவ்விடத்தை நிரப்ப வந்துவிடும்,
இதனால் வெயிலின் தாக்கம் குறையும். (சென்னை<தில்லி வெயிலின் தாக்கம்). ஓரிடத்தின் வெப்பநிலையை நிர்ணயிப்பதில்
காற்றில் தலையாய பண்பு இதிலிருந்து அறிய முடிகிறது.
வளி, கடுவளி வெந்திறல், கடுவளி, துகள் தொகுத்து எற்வளி, வடந்தைத் தண்வளி, வளி மறை, சில்காற்று,
கடுங்காற்று, குடகாற்று, ஊதை, வாடை அசைவரல் வாடை, வடந்தை,
கொண்டல், கோடை, கோடை அவ்வளி,
எழல் எறி கோடை, வறந்த கோடை, ஞெமை இலை உதிர்த்த எரிவாய்க்கோடை, வங்கூழ், தென்றல் முதலான காற்று எனப்பொருள்படும் சங்க இலக்கியச் சொற்களை சுட்டுகின்றார்.
இவை பெரும்பாலும் செய்யுளில் உவமிக்கப் பயன்படுவதால் காற்றின் தன்மைக்கான
அடை சேர்ந்தவையாகவே கருதவேண்டியுள்ளது. இருப்பினும், காற்றின் வகைகள் வாடை, கொண்டல், கோடை, தென்றல் என்பனவே.
பூமிக்கு மேலே பத்து மீட்டர் உயரத்தில் காற்றின் வேகத்தை பியூபோர்ட் அளவை
எண்கள் குறிக்கின்றன. 1.மென்காற்று, 2.லேசான காற்று, 3.சுகமான காற்று, 4.மிதமான காற்று, 5.விறுவிறுப்பான காற்று, 6.பலமான காற்று, 7.மிதமான விசைக்காற்று, 8.விறுவிறுப்பான விசைக்காற்று, 9.பலமான விசைக்காற்று,
10.கடுங்காற்று, 11.புயற்காற்று, 12.கடும்புயற்காற்று. இவற்றின் ஒவ்வொரு நிலைக்கும் சங்க
இலக்கியப் பதிவுகளிலிருந்து சான்றுகளும் பொழிப்பும் தந்துள்ளார். இதில் பனிரெண்டாம் எண் அபாயகரமானது, மின்கம்பங்கள் சரிந்து,
மேற்கூரைகள் பறக்கக்கூடிய, காணும் திறன் குறைவடையத்தக்க,
மட்டம் உயர்ந்த வெண்ணிறமாகக் காட்சியளிக்கும் நிலையாகும். இதனை மலையையே அசைக்கக்கூடிய காற்று எனப்பொருள்படும் பெருமலை மிளிர்ப் பன்ன
காற்றுடை (குறி. கலி 45.4) எனும் வரி குறிப்பிடுகிறது.
நிலநடுக்கோட்டிற்கு வடக்கு, தெற்கில்
தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடிய காற்று வாணிகக்காற்று எனப்படுகிறது.
தொடக்கத்தில் வாணிகம் செய்தவர்கள் இதனை அடிப்படையாக வைத்து தங்கள் இலக்கு
இடங்களை அடையாளங்கண்டனர். தீ பரப்பும் காற்றுக்கு, மூங்கில் ஒன்றோடொன்று உராய்ந்து தீ உண்டாக்கி காற்று வீசும் திசையெல்லாம் தீபரப்பியதையும்
(அகம். 39.6) கீழிருந்து மலைநோக்கி வீசும் காற்றுக்கு,
மலையேறு வளி என்பதையும் (பரி. 8.90) சான்றாகின்றன. காற்றின் திசை, வேகம், தன்மை எப்படி
வரையறுக்கவியலாததோ அதேபோன்றதே வாழ்நாள் என்பதை வளியினும் வரைநில்லா வாழுநாள் (பா.கலி. 20/9) என குறிப்பிடுகிறது.
தற்காலத்திய காற்று அளவை முறைகொண்டு சங்க இலக்கியப் பனுவல் பதிவுகளை
வகைப்படுத்தி விளக்கியுள்ளார்.
உலகப் பரப்பில் நீரானது 97% கடலிலும்
2% உறைபனிப்பாறைகளிலும் ஏனைய 1%இல்
0.31 விழுக்காடு நிலத்தடியிலும் 0.69 விழுக்காடு
மழை, ஆறு, குளங்களிலும் ஆகிய வடிவங்களிலும்
காணப்படுகிறது. உலகளவில் வேளாண்மையானது இந்த 1% நீரினை நம்பியே உள்ளது. இதற்கு நீராவி மழையாக மண்ணில்
பொழிவது அடிப்படையானதாகும். இன்றைய சூழலில் மழையின் அளவு,
அது பெய்யும் இடத்தின் பரப்பு, பொழிவின் தன்மை,
வீழ்படிவாகும் நிலை ஆகியவற்றினால் பல்வேறு வகைப்பெயர்களையும் சுட்டியுள்ளார்.
மழை, பெயல், கார்,
மாரி, தூறல், துவலை,
சாரல், ஆலி ஆகியன மழையைக் குறிக்கும் சங்க காலச்
சொற்களாகும். இவற்றின் தன்மைகொண்டு ஆலி, அழி, கண, அதிர், உறு முதலான அடைகளோடு விளிக்கப்படும் மழைச்சொற்களைப் பட்டியலிட்டுள்ளார்.
பெய்கின்ற மழையின் அளவைப் பொறுத்தும் வகைப்படுத்தலாம். ஒரு நாளில் ஓரிடத்தில் பெய்கின்ற இலேசான மழை (2.5 மி.மீ-7.5 மி.மீ), மிதமான மழை (7.6 மி.மீ-35.5மி.மீ), கனமழை (64.5 மி.மீ முதல் 124.4 மி.மீ) மற்றும் தொடர்மழை, பருவகாலமழை(வடகிழக்கு 715மி.மீ ; தென்மேற்கு 379மி.மீ).
மாக்கடல் முகந்து, மணிநிறத்து
அருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்து படப் பாரஅய் (நற்.112.6-7) எனும் வரிகள் நீர்நிலைகளிலிருந்து சூரிய
வெப்பத்தால் ஆவியாகிய நீர், வளிமண்டலத்தின் மேலே செல்லச் செல்லக்
குளிரடைந்து, மேகமாக மாறி மழையாகப் பொழிகிறது எனும் மழையின் இயற்பியல்
நோக்கினைப் பதிவு செய்துள்ளது. ஆலங்கட்டி மழை அளிக்கக்கூடிய மேகங்கள்
தோன்றி, மறைய குறைநேரமே பிடிக்கிறது. இவை
திரள் முகிலாக மாறுகையில் உள்ளிருக்கும் காற்று வெளியிருக்கும் காற்றை விட வெப்பமானதாக
இருக்கிறது. இதனால் மேல்நோக்கிய காற்றோட்டம் மேகம் முழுதும் பரவியிருக்கும்.
இந்நிலையில் வெளியில் உள்ள எடை அதிகமுள்ள காற்று மேகத்தைத் துளைத்துக்
கொண்டு உள்நுழையும். சுமார் பதினைந்து நிமிடங்களில் மேகம் சுமார்
7.5 – 9 கி.மீ வரை சென்றுவிடும். மேகத்தின் நீர்த்தவலைகளின் பருமனும் பனிக்கட்டி பருமனும் அதிகமாகிக்கொண்டே
இருக்கும். நன்றாக வளர்ந்த பின் இவை, புவியீர்ப்பு
விசையால் மேல்நோக்கி வீசும் காற்றை மீறி பெருந்துளி மழையாகவும் ஆலங்கட்டி மழையாகவும்
கீழிறங்குகின்றன.
இது போன்றே மின்னலுக்குமான சூழல். நீர்
ஆவியாகும் போது வெப்பசக்தி தேவைப்படும். நீராவி குளிர்ந்து நீராகும்
போது வெப்பசக்தி வெளிப்படும். வளிமண்டலத்தில் மேகத்துகள்கள் மேலே
செல்லச் செல்ல நீர்த்திவலைகளாக மாறுகின்றன. இதனால் வெளிப்படும்
வெப்பசக்தி அவற்றை மேலே அனுப்ப, மேகங்கள் எடை அதிகரிக்கின்றன.
அதே நேரம் புவியீர்ப்பு சக்தியால் கீழிழுக்கப்பட சுழற்சி உண்டாகிறது.
இத்தகு மேகங்களின் மேல்மட்டத்தில் நேர்மின் அயனிகளும் கீழ் மட்டத்தில்
எதிர்மின் அயனிகளும் சேர்ந்துவிடுகின்றன. மேகங்களை விட பூமியில்
எதிர்மின் அயனிகள் அதிகமென்பதால் மேகங்களிலிருந்து பூமிக்கு மின்னிறக்கம் நடைபெறுகிறது.
இதுவே மின்னல் எனப்படுகிறது. மேகம்-பூமி இடையேயான மின்னழுத்த வேறுபாடு 1 மில்லியன் முதல்
100 மில்லியன் வோல்ட் வரை இருக்குமென்றும் இதனால் உருவாகும் மின்னோட்டம்
சுமார் 20,000 முதல் 2,00,000 ஆம்பியர்
வரை இருக்குமென்றும் இம்மின்னல் செல்லும் பாதையின் வெப்பநிலை சுமார் 15,000
டிகிர் செல்சியஸ் வரை உயருமென்றும் தகவலளிக்கிறார்.
தொடக்கத்தில் மழை பெய்தலின் போதான மீப்பெரும் ஒலி, ஒளி வடிவங்களை இடி என்றே குறிப்பிட்டுள்ளனர். பிற்காலத்திலேயே மின்னல் எனும் சொல் மீப்பெரும் ஒளிக்கான சொல்லாகத் தோன்றியிருக்கும் என்பதை அகராதிகள் வழி அறியமுடிகிறது. ஆதலின், தொடரமைப்பைப் பொறுத்தே இடிக்கான பொருளை விளங்க முடியும். இடி, மின்னல் குறித்து வரும் சங்க இலக்கியப் பதிவுகள் இவ்வியலில் காணப்படுகின்றன. சான்று - இடி விழுந்ததால் பெண் யானை இறந்தது(நற்.114.9). இவை பெரும்பாலும் அகத்திணையில் தலைவியின் உள்ளத்தை ஆற்றவும் வெளிப்படுத்தவும் புறத்திணையில் நிகழ்வுகளின் வெளிப்பாடாகவும் உவமிக்கவும் சுட்டப்பட்டிருக்கின்றன.
(மின்னல் விழுந்து திருச்செங்கோடு அருகே, குளம்
நிரம்பியது https://www.vikatan.com/news/local-bodies/32798-, கிணறு நிரம்பியது https://www.dinamalar.com/district_detail.asp?id=1238151, மலைகளில் நீர்நிலைகள் உருவானமை https://www.vikatan.com/news/environment/villages-near-pachamalai-in-a-battered-condition நிகழ்காலசம்பவங்கள் ஊற்று உருவாக்கத்திற்கான காரணங்களை
எடுத்தியம்புகின்றன) இவ்வியலில் பாம்பிற்கு கேட்கும் திறன்
உண்டு என்ற சங்க கால நம்பிக்கையை விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். நம்பிக்கைகளுக்கும் அறிவியலுக்குமிடையிலான வேறுபாட்டை விளக்கி, அறிவியலின் மாறும் தன்மையினையும் நம்பிக்கையின் அறுதித்தன்மையும் சுட்டுகிறார்.
நுண்ணிய/வெவ்வேறு அளவிலான நீர்த்திவலைகள்,
பனிக்கட்டியால், காற்றால் செலுத்தப்படும் வகையில்
அமைந்துள்ள நீர்த்திவலைகளின் தொகுதியே மேகம். லூக் ஹவார்ட் என்கிற
வானிலை அறிவியலாளர் 1803இல் மேகங்களை கீற்று வகை முகில்கள்(cirrus
clouds), படை முகில்கள்(stratus clouds), குவியல்
முகில்கள்(cumulus clouds) என்றும் வளிமண்டலத்தில் அவை உருவாகும்
உயரத்தின் அடிப்படையில் பின்வருமாறும் பகுத்திருக்கிறார்.
உயர்மட்ட(high clouds) – கீற்று முகில்,
கீற்றுத் திரள் முகில், கீற்றுப்படை முகில்
இடைமட்ட(medium clouds)– இடைமட்ட திரள்,
இடைமட்ட படை, கார்ப்படை முகில்
கீழ்மட்ட(low clouds) – படைத்திரள் முகில்,
பனிமுகில், திரள் முகில், இடிமுகில்
வெப்பச்சலனம், மலைப்பகுதியில் ஏறும் காற்று,
காற்று முகப்புகள், பருவக்காற்று எனும் நான்கு
காரணிகளால் மேகங்கள் உருவாகின்றன. நீராவியான காற்று வளிமண்டலம்
செல்கையில், குளிரடைந்து மேகமாய் உருப்பெறுகின்றது. மேகங்கள் உருவாகும் விதம் குறித்து ஒலிக்கின்ற கடலின் நீரைப்பருகி மேகங்கள்
எழுந்து வந்தமை (அகம். 334.4) முதலான பல்வேறு
சான்றுகளும் மழைப்பொழிய வாய்ப்பற்ற மேகமற்ற வானம், இளவேனிற்காலத்தில்
காணப்படும் புகைபோன்ற மேகங்கள், மழை நீங்கிய பஞ்சு போன்ற மேகங்கள்,
பறவை/விலங்குகள் போலத் தோன்றும் திரண்ட மேகங்கள்,
தொங்கும் பைகளையுடைய மேகங்கள், பருவ கால மேகங்கள்,
இடி மேகங்கள் குறித்த பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
இடியால் நிலம் அதிர்தல், மின்னல்,
மலையும் மேகமும் குறித்தும் மலைச்சரிவுகளில் நகரும் மேகங்கள் பற்றி நக்கீரரும்
(நற்.197.10-12), உயர்ந்த கிளைகளில் உள்ள மின்மினியை
விளக்காகக் கொண்டு வானிற் செல்லுகின்ற மழைமுகிலின் இயக்கத்தைக் காணுதல் (நற்.44.10-12) முதலான மேகங்களின் இயக்கம் குறித்தும்
குறிப்பிடுகின்றார். அடுத்தடுத்த இயல்களில் கருத்துகளின் தொடர்ச்சியைப்
பற்றிப் பேசுவதால், கூறியவிடயத்தையே திரும்பக் கூறும் பண்பு நிலவுகிறது.
இது தொகுப்பு நூல் இல்லை என்பதால் இச்சிக்கலைத் தவிர்க்க முனைந்திருக்கலாம்.
ஓராண்டினை ஒரே மாதிரியான வானிலை நிலவுகின்ற பகுதிகளாக, பருவகாலங்களாகப் பிரித்து அறிதல்(முதற்பொருளில் பொழுது), ஓரிடத்தின் வெப்பநிலை,
மழையளவு இயற்கைத் தாவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலப்பகுதிகளைப்
பல பகுதிகளாகப் பிரித்தறிதல்(முதற்பொருளில் நிலம்) என இருவகை காலநிலைக் கணிப்புகள் உள்ளன. ஒரு பகுதியின்
காலநிலை பற்றி அறிய, அப்பகுதி நிலநடுக்கோட்டிலிருந்து அமைந்துள்ள
தொலைவு, கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம், அப்பகுதியின் நிலம், நீர்நிலைகள், காற்று, மலைகள், காடுகள் குறித்த
தெளிந்த அறிவு அவசியமாகிறது.
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீர்-இள வேனில் முதுவேனில் என்றா
அறுவகைப் பருவம் என்ப அவைதாம்
ஆவணி முதலா இரண்டிரண் டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே
என திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது. பூமி சூரியனைச் சுற்றிவரும் ஒரு சுழற்சிக்காலத்தில் (ஓராண்டில்) பருவகாலங்கள் மாற்றமுருகின்றன.
முல்லைத் திணைக்குரிய
பெரும்பொழுது கார்காலம் (ஆவணி, புரட்டாசி).
இம்மாதங்களை வர்ஷ ருது என்று காளிதாசர் எழுதிய ருது ஸம்ஸ்காரம் நூல்
குறிப்பிடுகிறது. கார்காலத்தின் தொடக்கத்தில் பொழிவது இளமழை எனவும்
பலநாட்களாகப் பொழிவது பழமழை எனவும் இறுதியில் பொழிவது சில்பெயல் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது.
மார்கழி,
தை மாதங்களான முன்பனிக்காலத்தில் பயிர்களின் நிலை (அவரி பூத்தல், நெற்பயிர் முற்றுதல்), பனியால் உயிரினங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்து நேரடி விளக்கங்களே இருக்கின்றன.
பின்பனிக்காலமான மாசி, பங்குனியில் தனித்த வரையறைகளைக்காண
முடிவதில்லை. முன்பனி-பின்பனிக் காலம் என்ற
பருவ வரையறை இன்றி பனிக்காலத்ததாகவே காணமுடிகிறது. இவ்விரண்டையும்
இணைத்து அற்சிரம் என்ற சொல் குறிக்கும் என்ற மு.வ-வின் கருத்தைப் பதிவுசெய்கிறார்.
மாசி, பங்குனி மற்றும் சித்திரை, வைகாசி முறையே இளவேனில், முதுவேனில் ஆகும். இவ்விரண்டு காலமும் பாலைக்குரியதென தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பாலைத்திணைப் பாடல்களில் முதுவேனில் குறித்த வருணனைகள் இடம்பெற்றுள்ளன. சூரிய வெப்பத்தால் நிலம் பிளவுபட்டு, குளங்களில் நீர்வற்ற, வயல்கள் நலம் குன்றுகின்றன. இது தட்பவெப்பத்தால் நில அமைப்புத் திரிபடைவதைக் குறிக்கும். இவ்வியலில் கோடை வறட்சியைத் தாங்கும் இலையுதிர்க் காடுகள் பற்றியும் பருவ காலங்களில் நீர்வேட்கை, கோடை மழை, காட்டுத் தீ, புழுதி பரவுதல், கானல்நீர் குறித்தும் மேலதிகத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார்.
இவ்வியலின்/நூலின் தலையாய பகுதி காலநிலை மண்டலங்கள் பற்றியது. உலக இயக்கத்தைப் புரிந்து கொள்ள காலநிலை மண்டலம் அடிப்படையானது. ஐந்திணைக்கும் தொல்காப்பியர் கூறியுள்ள நிலமும் பொழுதும், கருப்பொருட்களும், உரிப்பொருட்களும் அவரை திறமையான காலநிலையாளராகப் புலப்படுத்துவதாக விதந்தோதுகிறார். காலநிலை செய்யுந்தொழிலோடு தொடர்புடையது. கூதிர்ப் பருவத்திலும், முன்பனிப்பருவத்திலும் சங்க காலத்தில் போர்கள் தொடங்கப்படுவதில்லை, தொடங்கிய போர்கள் தான் தொடரும். இக்காலத்தில் ஆண்கள் பெண்களை விட்டுச் செல்வதில்லை. இருவரும் இல்லத்தில் இணைந்து இருக்கின்ற காலமாகவே கொள்ளப்பட்டது முதலான நூலாளர் தொகுத்தளித்தத் தகவல்கள் காலநிலையொட்டியே சங்க கால வாழ்வியல் இருந்துள்ளதைத் தெளிவுபடுத்துகின்றன. மேலும், முதற்பொருளான நிலம்+பொழுது அடிப்படையிலும் நிலத்திற்கான பொழுதின் அடிப்படையிலும் உரிப்பொருள் அமைகின்றன. இதனையொட்டியே தொழில், உணவு, புள் முதலான கருப்பொருள்கள் அமைந்திருக்கின்றன என்பதும் வெளிப்படையானதே.
தற்கால அறிவியல் நோக்குநிலையில்,
வானிலை, காலநிலை குறித்த விளக்கங்கள் கொடுத்து
அதற்கான சங்க இலக்கியத் தரவுகளை மட்டுமே சான்றுகளாகக் கொடுத்திருக்கிறார். அதற்கான காரணங்கள், எவ்வாறு அந்நுட்பங்களை அறிந்திருக்கக்கூடும்,
அதற்கான அனுமானக் கருத்துகளே தமிழர்தம் அறிவியலைப் பற்றிப் பேசுவதாக
இருந்திருக்கும்.
சங்க கால வானிலை
எனும் நூற்தலைப்பு கொண்ட நிறைவு இயலில் நூலில் விவாதித்த, வெளிப்படுத்திய
கருத்துகளின் தொகுப்புகளை நூல் முடிவுகளாக அளித்துள்ளார். சுருக்க
விளக்கம் முன்னரும் துணைநூற்பட்டியல் பின்னரும் இடம்பெற்றுள்ளன. கலாநிதி கைலாசபதி பற்றி நாடகவியலாளர் மௌனகுரு குறிப்பிடுமிடத்து, தன்துறையில் ஆழமான புலமையும் ஏனைய துறைகளில் பரிச்சியமும் உள்ளவன்தான் ஒரு
ஆய்வாறிவாளன் என்கிறார். இஃது கருத்தளவில்
நூலாளருக்கு பொருந்துகிறது.
- தக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக