நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 19 மே, 2021

பூவொன்று நின்றிருந்தது சாலையில்...

(முன்குறிப்பு :

மாவரைக்கச் சென்றிருந்தேன் மாலையில்

பூவொன்று நின்றிருந்தது சாலையில்

இப்படித் தொடங்கும் கவிதை எழுதி முடிச்சாச்சு., அவங்கள பாக்கும் வாய்ப்பு கிடச்சிதுனா சொல்லிட வேண்டியதான்.,)

*

மாவரைக்க வேண்டும். அம்மா பணித்தாள். அந்தி மாலை நேரம். நீண்ட சாலையோரம். முதல்முறை செல்கிறேன் அங்கு.

மில்-லைத் தேடிய கடைக்கண் பார்வையை நில்லென்று சொல்லவில்லை அவள், நின்றுவிட்டது வண்டி அவளுக்குப் பக்கத்தில்.

இயல்பில் இரைச்சலான இடம்கூட அவள் இருப்பதால் அமைதி கொண்டது. வாசலில் அல்காரிதப் பாத்திரங்கள், பவா செல்லதுரையான மனிதர்கள் என இல்லாத மின்சாரம் இயல்பைக் கலைத்துப் போட்டிருந்தது.

வெளியே வருகிறோம்! என எந்தப் பிரயத்தனங்களும் செய்திருக்கவில்லை. உம்மென்ற முகம். கடந்துவந்த மேகமாய் கலைந்த ஆடை. கொண்டைக்கு கூடப்பிறந்த தங்கையென சிகை. ‘இருள்வானில் ஒளிவீசும் முழுநிலவுக்கு எதிர்ப்பதமென அஞ்சனமிலா கண்கள். இந்தக் கண்களை பார்ப்பது அரிது. அரிதென்றால் அரிதினும் அரிது. வளரிளம் குழந்தைகள் மட்டுமே பட்டா வைத்திருக்கும் இந்தக் கண்களுக்கு.

லேடி பேர்ட்-ஐ அச்சாணியாய்க் கொண்டு ஊசலாய் அலைந்தன கால்கள். கட்புலனாகாத கொலுசு செவிப்புலனானது. யாருக்கேனும் காத்திருப்பவளோ, மாவரைக்க வந்தவளோ, மாலையிலே பூத்திருக்கும் அல்லிப்பூ இவள்தானோ என்ற விவரங்கள் ஏதொன்றும் அறியமால் நிகழ்ந்தன கண் சந்திப்புகள்.

யாரென்று தெரியவில்லை, ஏதொன்றும் அறியவில்லை.ஆனாலும் அழகு. அலட்டிக்கொள்ளாத அழகு. இந்த பிரக்ஞை இருந்தால் உடனுறையும் கர்வம் வெளிப்படவேயில்லை. “இங்க யாரும் இவ்ளோ அழகா இப்படியொரு அழகைப் பார்த்ததில்லைஎன்றிருப்பேன் தைரியம் இருந்திருந்தால்.

ஊசல் கால்கள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. காரைக்கால் பண்பலையில் யாரிந்த முயல்குட்டி, உன் பேரென்ன முயல்குட்டி…” ஒலிப்பதாய் மனதுக்கு மட்டும் கேட்டுகொண்டது.

கண்நடத்திய பேச்சுவார்த்தைகள் மட்டும் நான்கைந்து சுற்றுகளைக் கடந்தன. இதுவே அதிகபட்சம்தான் சிறுநகரங்களில். வலித்திருக்கும் கால்கள்போல. கால்களில் கைகளை முட்டுக்கொடுத்த பாட்டியிடம் பேச வந்தாள், பேசினாள். பாட்டியுடன் மாவரைக்க வந்திருக்கிறாள் என்பது உறுதியானது. பட்சியாக இருந்திருந்தால் இது லவ் தான ஜெஸ்ஸிஎன்றிருக்கும்.

நிமிடங்களின் நிறைவில்., லேட் பேர்ட்-இல் பறந்தது றெக்கை இல்லா தேவதை. பிறகென்ன, பெங்களூரில் பணிபுரியும் உறவினரின் அறிவுரையின் பேரில் காலை போட்ட கொரோனா தடுப்பூசியால் உடல்வலியெடுக்கும் இதுவரை மருந்து மாத்திரையே அறியாத பாட்டியுடன் நட்பாகியாச்சு. (இன்னும் எத்தனை காலம்தான் நட்பாகுவது இந்த பாட்டிகளுடன்..)

நல்லா பேசினார். நிறைய பேசினார். மின்சாரம் வந்து மாவரைத்த பெரும்வாளியை கைதூக்க முடியாமல் சென்ற பாட்டியிடம் நான் வேண்டுமானால் கொண்டுவந்து தரட்டுமா என்றேன். என்னமோ தெரியவில்லை வேண்டாம்பாஎன்று விட்டார்.


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக