நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 13 ஜூலை, 2021

கோவை - கொடிசியா - ஊக்கப்பரிசு

 

அது 2014. சூலை மாதத் தொடக்கம்.

B.Sc இயற்பியல் இரண்டாமாண்டு வகுப்புகள் நடத்தத்தொடங்கிய காலம். நுண்கலைமன்ற பொறுப்பாளர் குமரேச மூர்த்தி ஐயா, தொடர்புகொண்டு ஒரு போட்டி வந்திருக்கு போகணும் என்றார்கள். முதலாமாண்டு பயின்றபோது நான் கல்லூரிக்காப் பெற்ற பரிசுகளின் மீதான நம்பிக்கை இந்த வாய்ப்பைத் தந்திருக்கும் என்று எண்ணினேன்.

குறிப்பாக, 2014ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி நிகழ்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பேச்சுப்போட்டியில் திரு.வி. கல்லூரியிலிருந்து சென்று முதலிடம் பெற்றது. UG முதலாமாண்டு மாணவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடிப்பதெல்லாம் பெரிய விசயமென்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அது அப்போது உண்மையும்கூட.

திருவாரூர் செல்வீஸ் குளிர்மை அரங்கத்தில் நடக்கவுள்ள பேச்சுப் போட்டிக்கு, திரு.வி.க கல்லூரி சார்பில் இருவரைத் தெரிவு செய்தார்கள். நானும் மோகனப்பிரியாவும். (மோகனப்பிரியா பயங்கரமான பேச்சாளர். கல்லூரி நிறைவுசெய்யும்வரை மூன்றாண்டுகளும் எங்களுக்குள் பயங்கர போட்டி இருந்தது.)

போட்டியை நடத்துவது வெற்றித்தமிழர் பேரவை. அப்போதுதான் அந்த அமைப்பின் பெயரையே கேள்விப்படுகிறேன். அது திரு. வைரமுத்து அவர்கள் நிறுவிய அமைப்பு என்று பிறகு தெரிந்தது. அப்பேச்சுப் போட்டியில் திருவாரூரின் முதன்மையான கல்லூரிகளின் மாணவர்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்றிருந்தனர். அப்போட்டிதான் பிறகல்லூரி மாணவர்களை தோழன்களாகவும் தோழிகளாகவும் அடையாளப்படுத்தியது. அத்தோழமை நெடுங்காலமாகத் தொடர்ந்தும் வருகிறது.

திரு. வைரமுத்து அவர்களின் 60ஆம் பிறந்தநாளை ஒட்டி நிகழ்ந்த பேச்சுப்போட்டி அது. மிகவும் எளியவகையில் நடைபெற்றது. ஏழு தலைப்புகள் கொடுத்திருந்தார்கள். அவற்றுள் ஒன்றில் பேசவேண்டும். திரைத்துறை பங்களிப்புகள் சார்ந்த தலைப்புகளைப் பலரும் பரவலாக எடுக்க இயலும் என்பதால் கண்ணகியா? கருவாச்சியா? எனப் பொருள்படும் தலைப்பைத் தெரிவுசெய்து பேசினேன். அப்போதெல்லாம் கலையென்ற கடலுக்கு கரைகண்டபுணையாம் எனத்தொடங்கும் தமிழ் வாழ்த்துப்பாடல்தான் பேச்சின் தொடக்கமாக இருக்கும். ஓரளவு நன்றாகவே பேசியிருந்தேன். எளிதான போட்டி. வென்றபின் பரிசளிப்போடு முடிந்துவிடும் என்றெண்ணிக் கொண்டிருந்தோம். பரிசறிவித்தனர்.

மோகனப்பிரியாவும் நானும் மாவட்ட அளவிலான வெற்றியாளர்கள். அடுத்தசுற்று மாநில அளவில் கோவையில் ஜூலை12ஆம் நாள் நிகழவுள்ளது. கலந்துகொள்ளவேண்டுமென்றனர். முதல்முறையாக மாநில அளவிலான பேச்சுப்போட்டி ஒன்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறேன் என்பதே மிகவும் வியப்பாக இருந்தது. மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்பதற்கு 13 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே என்று அவமானமாகவும் இருந்தது.

திருவாரூர் விளிம்புநிலை மாவட்டம். வேளாண்மைதான் முதன்மைத்தொழில். கலை, திரை, தமிழ், ஆய்வு, இலக்கியம், அரசியல் எனப் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்தவர்களின் சொந்த மாவட்டம். ஆனால், அவர்கள் யாவரும் திருவாரூரில் மட்டுமே இருக்கவில்லை. தத்தமது துறைகளில் வெற்றியடைய இடம்பெயர்ந்தனர் என்பதை உணர்ந்து செயலாற்ற நெடுங்காலம் எடுத்திருந்தது. திருவாரூருக்கு திருச்சிதான் மண்டலம். பேச்சுக்கு அதுவரை மண்டலம் தாண்டியதில்லை.



முதல்முறை மாநிலப் போட்டி. கோவையில் நிகழ்கிறது, அதுவும் கொடிசியா வளாகத்தில் நிகழ்கிறது. வெற்றித்தமிழர் பேரவையின் திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளரின் ஊரிலிருந்து ஜூலை 11 இரவு கோவைக்குப் பேருந்து கிளம்புகிறது. அங்கு சென்று அவர்களோடு இணையவேண்டும். போட்டியாளர் கூடுதலாக ஒருவரை அழைத்துவர அனுமதி அளித்திருந்தனர்.

என்சார்பில் திரு.வி. கல்லூரி கவிஞ நண்பன் வெற்றிச்செல்வனை அழைத்துக்கொண்டேன். மோகனப்பிரியா சார்பில் அவரது அப்பாவை அழைத்துக்கொண்டார். நால்வரும் திருவாரூரில் ஏறி கும்பகோணம் பேருந்துநிலையத்தில் இறங்கி, நகரப் பேருந்துநிலையம் மாறினோம். அப்போதெல்லாம் கும்பகோணம் அவ்வளவு தூய்மையாக இருக்கும். சிறந்த நகராட்சிக்கான விருதை வென்றிருந்தது. சிலமணித்துளிகள் காத்திருப்பில் நகரப் பேருந்து வந்தது. அரசுப் பேருந்து என்பதற்கான பதினோரு பொருத்தங்களும் கச்சிதமாக இருந்தது.

வலங்கைமான் உள்ளடங்க ஊரொன்றில் இறங்கினோம். இரவாகியிருந்தது. தேடிச் சென்று பொறுப்பாளரின் வீடடைந்தோம். அந்த ஊரில் பலரும் வெற்றித்தமிழர் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தனர். ஒரு பெரிய ஆம்னி பேருந்து தயாராக இருந்தது. ஊர்க்காரர்கள் பலரும் நிறைய, பேருந்து நிரம்பியதும் புறவழிச்சாலையில் புறப்பட்டது.

மொத்தம் ஏழு தலைப்புகள். மாவட்ட அளவிலான போட்டியில் பேசிய தலைப்பை மாநிலப் போட்டியில் பேசக்கூடாது. மாநிலப் போட்டிக்கு, கள்ளிக்காட்டு இதிகாசம் காவியமா? வரலாறா?” எனும் தலைப்பைத் தெரிவு செய்திருந்தேன். எனினும், கள்ளிக்காட்டு இதிகாசம் என் கையிருப்பில் இல்லை. நினைத்தவுடன் புத்தகம் வாங்குமளவு திருவாரூர் ஒன்றும் பெருநகரம் கிடையாது. இணையதள விற்பனையும் இன்றிருப்பதுபோல் அன்றில்லை. திரு.வி.க. கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேரா. தனராசன் தம் ஆய்வாளர்கள் செய்தளித்த வைரமுத்து படைப்புகள் மீதான ஆய்வேடுகளை அளித்தது உதவியாய் இருந்தது. 

இதற்கிடையே, நெய்வேலி புத்தகக் கண்காட்சியை ஒட்டி, NLC+தினமணி இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருந்தேன். 2014 ஜூலை 9ஆம் நாள் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குப் பரிசுபெறச் சென்றிருந்தபோது, கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் உட்பட சில நூல்களை வாங்கியிருந்தேன். அதற்கான பொருளாதாரத்தை அன்றைக்குப் பெற்றிருந்த ஆறுதல் பரிசுத்தொகையும் வெற்றித்தமிழர் பேரவையின் மாவட்டப் போட்டியில் வென்ற பரிசுத்தொகையும் ஈடு செய்தன.

கள்ளிக்காட்டு இதிகாசம் போன்ற நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட நூலை ஒரே மூச்சில் படிக்கும் வாசிப்புத்திறனெல்லாம் அப்போது இல்லை. அதற்கான சூழலும் இல்லை. எனினும், இணையத் தமிழ்ச் சமூகம் கைக்கொடுத்தது. பல்வேறு வலைப்பூ மற்றும் இணையதளங்களில் (Blog+Website) இந்தப் படைப்பு மீதான விவாதங்கள் நடந்திருந்தன. அவற்றை முழுமையாக வாசித்ததிலே இதுதான் கதைப்போக்கு என்பதை அறியமுடிந்தது.

(இப்போது, 2021. அன்றிருந்ததைவிட காத்திரமான விவாதங்கள் முகநூலில் நடைபெற்றிருந்தாலும் அவையாவும் முகநூல் தனிக்கணக்குகள் என்பதால் கூகுள் தேடல் இவற்றை அடையாளப்படுத்தாது. எழுத்தாள பெருமக்களுள் பலரும் முகநூலில் எழுதுவதை அப்படியே விட்டுவிடுகின்றனர். அன்றாடம் சில நேரம் செலவிட்டு, அதை copy செய்து ஒரு வலைப்பூ தொடங்கி paste செய்தால், தேடல் உடையோருக்கு Google Searchஆல் நலம் பயக்கும். தற்காலத்தில் வலைப்பூவில் (Blog) எழுதுபவர்கள் எண்ணிக்கை சமூகவலைதளங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவு. பிறகொரு முக்கியச் செய்தி! நீங்கள் என் வலைப்பூவில்தான் இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.)

எங்கே விட்டோம்! ஆங். ஜூலை 11 இரவு புறவழிச்சாலை ஆம்னி பேருந்து.

விடிந்தால் போட்டி, இன்னும் கள்ளிக்காட்டு இதிகாசத்தை படித்து முடிக்கவில்லை. பின்னிரவு வரை பேருந்தின் நைட் லேம்ப் ஒளி கைக்கொடுத்தது. புறஒலிகளைத் தாண்டியும் கேட்ட குறட்டை ஒலிகள் பலரும் உறங்கிவிட்டதை உறுதிப்படுத்தின. அக்கறை உடைய ஒரு பெரியவர் போதும்பா., காலையில நல்லாபேசனும்னா தூங்கணும் என்றார்.

விடியற்காலையில் ஒரு பேருந்து நிலையத்தில் பொறுப்பாளர்கள் சிலரோடு இறக்கிவிட்டனர். அப்பேருந்துநிலையம் பொள்ளாச்சி என பின்னாட்களில் அங்கு சென்று வருகையில் தெரியலானது. உடனிருந்த பொறுப்பாளர்கள் கோவை காந்திபுரம் பேருந்துநிலையம் அருகே ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்றனர். அப்படியெல்லாம் பெயர் வைப்பார்களா என்றிருந்தது. Hotel La La. அங்கு குளித்து, உணவு முடித்து, தயாராகியிருந்தோம். அங்கு தான் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த போட்டியாளர்கள் சிலரும் தங்கவைக்கப் பட்டிருந்தனர்.

அங்கிருந்து போட்டி நிகழுமிடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது மௌலிவாக்கம் கட்டிட விபத்து நிகழ்ந்த காரணத்தினால் கோவையில் பல வணிக நிறுவனக் கட்டிடங்கள் மூடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. முதன்மைச் சாலைகளில் விதிமீறி அதிக உயரம் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தால்ல்தலை சுற்றியது. கொஞ்சம் எட்டியே நடக்கலானேன். நோட்டீஸ் ஒட்டப்பட்ட கட்டிடங்களைக் காண்கையில்.

கோவையே கோலாகலமாக இருந்தது. திரு. வைரமுத்து பிறந்தநாளையொட்டி மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸ் போர்டுகளுக்கு மாநகராட்சி ஆணை எண் வழங்கப்பட்டிருந்தது. (திருவாரூரில் இத்தகைய நடைமுறை இன்றளவும் (2021) இல்லை). கோவையை, அதன் எழிலை முதன்முறை பகலில் தரிசிக்கிறேன்.



கோவையின் நட்சத்திர விடுதியொன்றின் வரவேற்பறையில் இருந்தோம். அந்த வரவேற்பறையில் இசைக்கும் கலைஞர்களின் சிலைகள் இருந்தன. பெயர் நினைவில் இல்லை. காத்திருந்தோம். இன்னும் காத்திருந்தோம். சில நிமிடங்கள் கழித்து லிஃப்ட் வழியாக எங்களை அழைத்துச் சென்றனர். அதுவும் தரைகீழ் தளத்துக்கு. வாழ்க்கையிலே முதல்முறையாக பூமிக்கடியில் / நிலத்துக்கு அடியில் செல்கிறேன். அதுவும் லிஃப்ட்-இல். தரைக்குக்கீழ் இரண்டாம் தளத்தில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குளிர்மை அரங்கம். ஏனைய மாவட்டங்களிலிருந்து குழுமியிருந்த மாணவர்கள் ஏற்கெனவே உள்நுழைந்திருந்தனர்.

வழக்கம்போல் இருக்கும் குசல விசாரிப்புகள் நிகழ்ந்தன. பொதுவாக, போட்டியாளர்கள் போட்டிக்குப் பிறகு, இயல்பு நிலையில் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. மாநிலப் போட்டியென்பதால் புதியோர் பலரும் அறிமுகமாகினர். ஆனாலும், பலரும் வெற்றிபெற வேண்டும் என்ற மும்முரத்தில் மற்றவர்களிடம் பேசுவதில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். ஏனெனில், முதல்பரிசு 25,000 உரூபா. அந்தக் காலத்தில் மிக உயர்ந்த பரிசுத்தொகை அதுவாகத்தான் இருக்கும்.

திரு. மரபின் மைந்தன் முத்தையா, திரு. கபிலன் வைரமுத்து நடுவர்களாக இருக்க வெற்றித் தமிழர் பேரவை நிகழ்த்தும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி பூமிக்கு அடியில் தொடங்கியது. குலுக்கல் முறையிலான எண்வரிசைப்படி, பேச அழைத்தனர். பலரும் திரு. வைரமுத்து அவர்களுடைய திரைப் பங்களிப்பு சார்ந்த தலைப்புகளையே தேர்ந்தெடுத்திருந்தனர். அத்தகைய தலைப்பில் கவர்ச்சிகரமாக பேசமுடியும். திரைத்துறை சார் தகவல்கள் பலவும் எல்லார்க்கும் தெரிந்திருக்கும். ஆதலால், ஒப்பீட்டளவில் ஏனையவர்களை விட இவர்களுக்குக் கைத்தட்டல் அதிகம் கிடைத்தது.

தமிழகத்தின் என்றென்றைக்குமான Hot Topic வேளாண்மை தான். (கடந்த பத்தாண்டுகளாக திரைத்துறையைப் பீடித்திருக்கும் வேளாண்மை சார்ந்த கருத்தாக்கப் படங்கள் இன்றளவும்(2021) முடிந்தபாடில்லை.) வேளாண்மை நம் மக்களை எளிதில் உணர்ச்சியடையச் செய்யும். உணர்ச்சிகரப் பேச்சாளர்கள் பலரும் மூன்றாம் உலகப் போர் நாவல் பொருண்மையை மையமிட்டுப் பேசினர். தவிர, சிலர் கண்ணகியா? கருவாச்சியா? என்று பேசினர். உணர்ச்சிமயப் பேச்சுகள் குளிர்மை அரங்கையே கொதிப்படையச் செய்திருந்தன.

ஏழு நிமிட நிறைவில் மணி அடிக்கப்படும். அடுத்த மூன்று நிமிடத்துக்குள் பேச்சை நிறைவு செய்ய வேண்டும். ஆக மொத்தம் பத்துநிமிடம். பத்தாவது நிமிட நிறைவில் மற்றொரு மணி அடிக்கப்படும். அதற்கு மேல் பேசுவதற்கு அனுமதியில்லை. அந்தப் போட்டியில் புதுமையான ஏற்பாடு ஒன்றிருந்தது. ஒருவர் பேசிமுடித்தபிறகு, அவர் பேச்சின்மீதான கருத்துகளை நடுவர்கள் வெளிப்படுத்துவர். இது பேச்சாளர்களது திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

நான் பேசவேண்டிய நேரம் வந்தது. பேசினேன். முதல்முறையாக மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் பேசுகிறேன் என்பதால் உண்டாகும் பதட்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க முனைந்தேன். ஏற்கெனவே, பலரும் பேசிவிட்டதால் தொடர்ச்சியாகக் கேட்ட அயர்ச்சி நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருக்கும். அந்த அயர்ச்சியை நீக்க, அவர்கள் கவனத்தை ஈர்த்தாக வேண்டும், புதிய கருத்துகளைத் தந்தாக வேண்டும். இவையாவற்றையும் கவனத்தில் கொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் காவியமா? வரலாறா? எனும் தலைப்பில் பேசினேன். இணையத்தில் குறிப்பெடுத்தது, பேருந்தின் உட்புற நைட்லேம்ப் வெளிச்சத்தில் படித்தது, மோகனப்பிரியாவின் முதன்மைக் குறிப்புகள் (இதேதலைப்பில் மாவட்ட அளவில் பேசியிருந்தார்), மேடையில் தன்னிச்சையாகத் தோன்றும் கருத்துகள் என சீர்மையற்ற கலவையாக பேச்சு அமைந்தது. ஆனால், அது புதியவித சீர்மையை அளித்தது.

உரை காண்க:


கடந்த பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, பலவற்றைக் கவனத்தில் கொண்டு பேசியதில் நிமிடத்தைக் கவனிக்கவில்லை. 7 நிமிட நிறைவில் அடித்த மணியை 10 நிமிட நிறைவு மணியாகக் கருதி மூன்று நிமிடம் முன்னதாகவே முடித்துவிட்டேன். கீழிறங்கி வருகையில்தான், நண்பர்கள் செய்கை வாயிலாகத் தெரியப்படுத்தினர். என்ன செய்வது முடிந்தது முடிந்ததுதான். என் பேச்சின் மீதான கருத்தைத் திரு. கபிலன் வைரமுத்து அளித்தார். “முதலில் நான் ஒரு மதிப்பெண் இட்டேன், காலம் செல்லச்செல்ல அந்த மதிப்பெண் அதிகரித்துக்கொண்டே சென்றதுஎன்பதாய் குறிப்பிட்டார்.

கடலில் பயணித்த கப்பலைக் கரைசேர்த்த மாலுமிபோல பேசிமுடித்து இருக்கை அமர்ந்தேன். அம்பெய்தும் வரைதான் அதன் பாதையை நாம் தீர்மானிக்க முடியும். எய்திய பிறகு, அதன் பாதையை அதுவே தீர்மானிக்கும். பேசி முடித்தாயிற்று, இனி கவலை இல்லை. அந்தப் பேச்சு தக்கதாய் இருப்பின், பரிசைப் பெறும். இல்லெனின், எதிர்காலத்தில் பெறலாகும் பரிசுக்குப் பயிற்சியாய் மாறும். கொஞ்சம் சமனிலைப்படுத்தி, ஏற்பாட்டாளர்கள் முன்னமே கொடுத்திருந்த பண்டங்களைக் கொரிக்கத் தொடங்கினேன்.

நண்பகலுக்குள் பேச்சுப்போட்டி முடிந்தது. நடுவர்களின் மதிப்பெண்கள் கூட்டப்பட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விவரம் வருமாறு.

·   முதல் பரிசு      – 25,000 உரூ சாத்தம்மைப் பிரியா, திருச்சி (தற்போது உதவிப் பேரா.)

·   இரண்டாம் பரிசு – 10,000 உரூ வேதவள்ளி, தஞ்சாவூர் (தற்போது உதவிப் பேரா.)

·   மூன்றாம் பரிசு   – 15,000 உரூ - கஜலெட்சுமி, திருச்சி (தற்போது குடும்பத்தலைவி)

·   ஊக்கப்பரிசு      – 5,000 உரூ   - தமிழ்பாரதன், திருவாரூர் (தற்போது ஆய்வு மாணவர்)

·   ஊக்கப்பரிசு      – 5,0000 உரூ – (யாரென்று நினைவில் இல்லை)



கள்ளிக்காட்டு இதிகாசம் குறித்து அப்போட்டியில் பேசிய ஒருவனும் நான்தான், நன்றாகப் பேசியும் 7 நிமிடங்களில் உரையை முடித்தவனும் நான்தான். வென்றவர்களுள் இளையோனும் நான்தான், ஒரே ஆணும் நான்தான். எல்லாம் இயல்பாக அமைந்துபோனது. அரிஸ்டாட்டிலை வாசித்தபிறகு, தற்செயல்  நிகழ்வு, உடனிகழ்வு குறித்த புரிதல்கள் அதிகரித்துள்ளன. ஆதலால், நான் என்று பெருமைப்பட்டவற்றை அடித்துவிட்டேன். 

முதல்முறையாய் மாநில அளவிலான போட்டியில் பங்கெடுத்து, பெருந்தலைகள் பலவற்றைத் தாண்டி பரிசு வென்றது மகிழ்வே. பொதுவாக மூன்றாம் பரிசுக்குப் பிறகு, ஆறுதல் பரிசு என்றே பலரும் அளிப்பர். மூன்றாம் பரிசுக்கு அடுத்த பரிசு, ஆறுதல் பரிசாக (ஆறுதல் செய்வதாக) இருக்கக்கூடாது, ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டுமென்று ஊக்கப்பரிசு என்று திரு. வைரமுத்து அவர்கள் பெயரிட்டுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மேடையில் அறிவித்தனர்.

இந்தப் பரிசாளர் பட்டியலைப் பார்த்தால், முதல் நால்வரும் சோழ மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும். (மற்றொரு ஊக்கப்பரிசு பெற்றவர் கொங்கு மண்டலமாக இருக்க வேண்டும்). ஏனைய மண்டலத்தினரும்/மாவட்டத்தினரும் சளைத்தவர்கள் அல்லர். ஆனால், அக்காலத்தில் சோழ மண்டலம் வலிமையான பேச்சாளர்களைக் கொண்டிருந்தது.

தமிழ் வளர்ச்சித் துறை (25,000 முதல்பரிசு), இன்றைய தேதியில் (ஜூலை 13 2021) திமுகவில் இருக்கும் திரு. பி.பழனியப்பன், ...தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 66ஆம் பிறந்தநாளுக்காக நடத்திய பேச்சுப்போட்டி (66,000 முதல்பரிசு), மதிமுக மாணவரணி நடத்திய பேச்சுப்போட்டி (ஒரு இலட்சம் முதல் பரிசு) என பெருந்தொகை கொண்ட மாநில அளவிலான போட்டிகள் பலவற்றிலும் சாத்தம்மைப் பிரியா அக்காதான் முதலிடம். (கதை சொல்லி பவா செல்லதுரை போல், இவரது பேச்சில் எடுத்தாளும் மாடப்புறா, கருப்புரோஜா கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம்). மாநில அளவில் பல்வேறு பரிசுகளை வென்ற வேதவள்ளி அக்காவுக்குக் குரலே போதும். உச்சரிப்பிலேயே அசர வைத்துவிடுவார். குரலும் ஒலியும் தெளிவாக இருக்கும்போது, அதனோடு இயையும் கருத்தும் அற்புதமாகத்தானே இருக்கும்.

இத்தகையவர்களோடுதான் அன்றைய மேடையைப் பகிர்ந்துகொண்டேன். ஆமாம், வெற்றியாளர்களை நடுவர்களோடு படமெடுத்துக்கொள்ள மேடைக்கு அழைத்தனர். ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சோடு, உணவுக்குத் தயாரானோம். போட்டிக்குப் பிறகு போட்டியாளர்கள், நண்பர்களாக மாறினாலும் சின்னதொரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும் எந்த இடத்தில் இடறினோம் என்று. பொதுவாக இந்த உறுத்தல் முதல்பரிசு பெற்றவரைத் தவிர அனைவருக்குமே இருக்குமென்று எண்ணுகிறேன். எனினும், யாவையும் மறந்து அந்தந்த நொடி வாழ்வை அனுபவித்தலே நலம். உணவு அருமை. கற்பூரக் கட்டிகள் எரிய, சூடாக இருக்கும் பாத்திரத்திலிருந்து நாண் முதலான உணவுகளை பஃபே முறையில் உண்டோம்.

பிறகு, மீண்டும் லா லா விடுதிக்குப் பயணப்பட்டோம். நன்றாக உறங்கினோம். வந்த கனவுகளையெல்லாம் விரித்து எழுதலாம். ஏற்கெனவே, நீங்கள் 14 நிமிடங்களாக வாசித்து வருகிறீர்கள். அப்றம் உங்களுக்கும் அயர்ச்சி வந்திடும் என்ற காரணத்தினால், அவற்றைத் தவிர்க்கிறேன். மாலை வந்தது. மோகனப்பிரியா அப்பாவின் துணையோடு காலாற கோவையின் வீதிகளைச் சுற்றினோம். நாட்டார் வழிபாடுகள் உட்புறத் தெருக்களில் உள்ள சிறுகோயில்களில் நிகழ்ந்து கொண்டிருந்தது. கீழ்/மேம்பாலம் இடையே தொடர்வண்டிப் போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. கோனியம்மன் கோயிலுக்கு அன்றைக்குத் தான் திருக்குடமுழுக்கு என்பதாய் ஊரெல்லாம் சுவரொட்டிகள் இருந்தன. அந்தக்கோயிலின் இருப்பிடமறிந்து அங்கு சென்றோம். பிரசாதம் உண்டு, பொறுமையாக நடைபயின்று லா லா விடுதியடைந்தோம்.



மோகனப்பிரியாவின் அப்பா ஆசிரியர் என்பதாலும் சமூக அக்கறை மிக்கவர் என்பதாலும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாட வைத்தார்கள். அப்படித்தான், அந்த விடுதியில் குழுமியிருந்த முன்பறியா மாணவர்களுடன் பேசத்தொடங்கினோம். களைப்பு தந்த தூக்கத்தை இருட்டடிப்பு செய்து கலந்துரையாடினோம் நடுஇரவு வரை. ஒருவழியாக நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியபிறகே, அறை சென்று உறங்கினோம்.



காலை முன்கூட்டியெழுந்து தயாராகியாச்சு. புதுச்சட்டை வாங்கியிருந்தேன், ஒருவேளை பரிசுபெற நேர்ந்தால், அணிந்துகொள்ளலாம் என்று. அதை அணிந்தபிறகு, வெளியேறி வாகனமேறி போக்குவரத்து நெரிசலூடே கொடிசியா வளாகம் சென்றோம். ஆமாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்த அதே கொடிசியா வளாகம். அங்குதான் நிகழ்வு நடைபெறத் தயாராய் இருந்தது. வாகனம் விட்டு இறங்குகையிலே திரைத்துறை, அரசியலுலகு சார்ந்த முன்னணி ஆளுமைகள் எதிர்ப்பட்டனர். எல்லாரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக்கொண்டிருப்பதாய் தெரிந்தது. அப்போது வரை எனக்குத் தெரியவில்லை யார் வரப்போகிறார் என்று.

அப்படியோரு வளாகத்தை அதுவரை நேரில் கண்டதில்லை. பெரிய நீண்ட வளாகம். பொள்ளாச்சி பேருந்துநிலையத்தில் விட்டுச்சென்ற, ஆம்னி பேருந்தில் இருந்த திருவாரூர்க்காரர்களை அடையாளங்கண்டு அவர்களோடு இணைந்தோம். பரிசு அறிவிக்கப்பெற்றதை அவர்கள் அறிந்திருந்ததை அவர்கள் தெரிவித்த வாழ்த்துகள் தெரியப்படுத்தின. அவர்களுள் ஒருவர், “யார் வரப்போறாங்க தெரியுமாஎன்ற கேட்க, அதற்குள்ளாக வேறொருவர்அப்துல்கலாம் வர்ராறுஎன்றார். அவர்ட்ட பரிசு வாங்குறதுலாம் பெரிய விசயம் என்று இன்னொருவர் சொல்லுமுன்னமே கற்பனைகள் எங்கெங்கோ சென்றன.

ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பற்ற சூழலே அங்கிருந்தது. அவ்வளவுபெரிய வளாகம். வளாகம் நிரம்பிய மனிதர்கள். மேனாள் குடியரசுத் தலைவருக்கான ப்ரொடொகால் வேறு. நாங்கள் அரங்கத்தின் பிற்பகுதியில் இருந்தோம். பரிசு பெறுவோரை மேடைக்கு ஏற்றுவது அவ்வளவு எளிதன்று என்பதை, முன்பு பங்கேற்ற பரிசளிப்பு நிகழ்வுகளின் அனுபவங்களிலிருந்து அறிவேன். இருக்கட்டும், அப்துல்கலாம் அவர்களின் பேச்சை நேரில் கேட்கும் வாய்ப்பாவது கிட்டியதே என்று மகிழ்ந்தேன்.

மேதகு அப்துல்கலாம் அவர்கள் வருகை தந்ததும் காலை அமர்வு தொடங்கியது. பிறநாடுகளிலிருந்தும் சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தனர். குழந்தமைக் குரலோடு பேச்சைத் தொடங்கினார் ஏபிஜே. அரங்குக்கு இருபுறமும் இருந்த திரையில் அவரது உருவம் மிகப்பெரியதாக இருந்தது. எட்டி இருந்து பார்த்தாலும் எட்டி இருந்து பார்ப்பதைப் போலவே தோன்றியது அந்தத் திரையும். ஏற்கெனவே தயாரித்து வைத்த உரையை மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்தார். கவிஞர்கள் திருநாள் என்ற பொருண்மை தரப்பெற்றிருந்ததால், புறநானூறு-திருக்குறள் இவற்றிலிருந்து மேற்கோள் குறிப்பிட்டு உரையாற்றினார். இத்தகு பெரியவர்களின் பேச்சில், சராசரி பேச்சாளர்கள் பயன்படுத்தும் பஞ்ச் வசனங்கள் இருப்பதில்லை. கருத்துகளே நிறைந்திருக்கும். செறிவான ஒன்றாகவே அமைந்திருந்தது. கவிஞர் விழாவில் விஞ்ஞானிக்கென்ன வேலை என்ற அடிப்படைக்கேள்வி எழாமல் இல்லை. ஒரு வாசகராக, இலக்கிய நுகர்வோராக, கலை இரசிகராக அப்துல்கலாம் அவர்கள் தன் கருத்துகளை முன்வைத்திருந்தார். (கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எடுக்கப்பட்ட நிகழ்விலும் அப்துல்கலாம் அவர்கள் பங்கேற்று உரையாற்றிருந்ததை பின்னாட்களில் அறிந்தேன்). பேசி முடித்து, முதன்மை விருந்தினர்கள் உரை நிறைவுற்றதும் அப்துல்கலாம் அவர்கள் விடைபெறுவதாக, விழா தொகுப்பாளர் அறிவித்தார். அவரிடம் பரிசுபெறும் வாய்ப்பு தவறியது. வந்தமர்ந்த கூட்டத்தில் பெரும்பகுதி அவரைக்காண வெளியே சென்றது. முன்னாள் குடியரசுத்தலைவருக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் சூழ, அணியமாய் இருந்த அம்பாசடர் காரில் ஏறிச் சென்றார்.



கொடிசியா இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. அடுத்தடுத்த அமர்வுகள், சிறப்பிப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்தன. நாகப்பட்டிணத்திலிருந்து வந்திருந்தோர் பரிசுபெற்றதை அறிந்து, போட்டியில் பேசியதன் கருத்துச் சாரத்தைக் கேட்டறிந்தனர். அப்போது, அங்கொருவர் இருந்தார். வாஞ்சையோடு உரையாடினார். கல்வி, கலை, கவிதை, பேச்சு தொடர்பான உரையாடலாகக் கட்டமைத்தார். அவரை யாரென்று அதுவரை அறிந்ததில்லை. அவரைமுக்கியமான கவிஞர்என்று அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர். அவர் வேறு யாருமில்லை “கொஞ்சம் கொஞ்சமாய் சாகவேண்டுமென முடிவெடுத்தபிறகு, காதல் சரியான வழிதான்எனப்பொருள்படும் கவிதையை எழுதிய, பிறந்தநாள் வாழ்த்துப்பாடலைத் தமிழில் இயற்றிய, தற்காலக் கவிஞர்களின் தாய்வீடு அறிவுமதி அவர்களே



இதற்கிடையே மதிய உணவும் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதுபோன்ற பெருநிகழ்வுகள் திட்டமிட்டபடி நடத்திமுடிப்பது சவாலானது. ஒருபுறம் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்க மறுபுறம் மதிய உணவு நடந்தது. கோவையில் உள்ள பள்ளிகளுக்கு திரு. வைரமுத்து அவர்களின் அனைத்துப் படைப்புகளடங்கிய பெட்டி தரப்பெற்றன. பல்வேறு இலக்கிய நல உதவிகள் வழங்கப்பெற்றன. அதோடே பரிசளிப்பும். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மட்டுமே மாணவர் பெயர், கல்லூரி, ஊர் விவரங்களோடு அறிவிக்கப்பெற்றன. ஊக்கப்பரிசுகள் வெறுமனே அறிவிக்கப்பெற்றன.

வருத்தம். அவ்வளவு பெரிய மக்கள் திரள், கொடிசியா வளாகம், எனக்காக இல்லாவிடினும் என் கல்லூரி, ஊருக்கேனும் கைத்தட்டல் கிட்டியிருக்கும். எனினும், அவ்வளவு பெரிய மேடையில் பரிசு வாங்கச் சென்றதே பெருவிடயம் அப்போதைய எனக்கு. எதிரே அவ்வளவு கேமிராக்கள் ஒளிர சான்றிதழும் பணமுடிப்பும் ஊக்கப்பரிசாக அளித்தார் திரு. வைரமுத்து அவர்கள். ஐயாயிரம் உரூபா பணத்தை ஒரு பொற்கிழி வடிவ துணியுள் (அதுவும் பொன்னிறத்தில்) வைத்தளித்தார். கையெழுத்துத் தனித்துவத்திற்கு/அழகியலுக்கு Typography என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கையெழுத்துத் தனித்துவமாக இல்லாதோரும் கையொப்பத்தைத் தனித்துவமாகக் கொண்டிருப்பர். வைரமுத்து அவர்களின் கையொப்பம் தனித்துவமானது அல்லது கவித்துவமானது. அவரது கையொப்பமிட்ட சான்றிதழும் பொற்கிழியோடும் மேடையிலிருந்து விடைபெற்றேன்.

பரிசுபெற்ற படத்தை அரங்குக்கு வெளியே பிரிண்ட் எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தனர். பெறச்சென்றால் தொகை என்றனர். ஒளிப்படம் எடுப்பதை ஒப்பந்தம் செய்த நிறுவனம் அவற்றை விற்பனையாக மாற்றியது. என்னுடைய பரிசளிப்புப் படத்தைத் தேடி எடுத்தனர்.  அந்தக் கோப்பின் எண்ணைக் குறிப்பிட்டு, அச்சிட்டுத் தருவதற்கு அவர்கள் கேட்டது 100 உரூபா என்று நினைவு. (அந்தக்காலத்தில் பரிசுபெற்ற படத்தை ஐம்பது உரூபா கொடுத்துப் பெறுவதே மிக அதிகம் திருவாரூரில்). கொடுக்க மனமின்றி படம் பெறாமலே வந்துவிட்டேன். இருப்பிடம் வந்தால் பரிசு வென்றவர்கள் எல்லாம் கையில் படத்தோடு இருந்தனர். வாய்ப்பை விட்டுட்டோமோ என்று எண்ணம் மட்டும் ஓய்ந்தபாடில்லை. (பரிசுபெற்ற படம் பெறுவதில் பலவித அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன். குறிப்பாக, 2015இல் கலைஞரிடம் பரிசு பெற்ற படத்தை உடனடியாகப் பெறமுடியாமல் மாதமொன்று காத்திருந்து, அறிவாலயத்திலிருந்து கோபாலபுரம் நடந்தேசென்று புகைப்படக் கலைஞரைக் கண்டறிந்து, அவரிடம் இருநூறு உரூபா கொடுத்தபிறகு தான் பெறமுடிந்தது. படம் பெறுவது குறித்து, பிறகு விரிவாகப் பதிவு செய்கிறேன்)

எப்போதுமே, பரிசு பெற்ற பிறகு, நிம்மதியாய் இருக்கலாம். வீடு/ஊர் திரும்புதல் ஒன்றே கடமை. பிற்பகலுக்குமேல், கருத்தரங்க அமர்வுகள் நிகழ்ந்தன. பேசவந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படைப்பே தலைப்பு. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகள், பேரா. பர்வீன் சுல்தானா, திரு. ஸ்டாலின் குணசேகரன்  எனப் பல ஆளுமைகளை அந்த மேடையில்தான் முதன்முதலில் நேரில் கண்டேன். பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் முதலான பல முன்னணி பத்திரிக்கை, ஊடகத்துறையினரும் வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தனர். அவர்களையும் அங்குதான் நேரில் கண்டேன். அப்போதெல்லாம் பேச்சாளர்கள் பேசும் அனைத்துமே புதிதானதாகத் தோன்றும். யாவற்றையும் குறிப்பெடுக்கத் தோன்றும்….



அன்றைய நாள் மாலை வந்தது. திரையுலகினரின் பாராட்டு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. இயக்குநர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார் என்ற நான்கு தலைமுறை இயக்குநர்களின் பங்கேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. இதில் கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் வரவில்லை. (லிங்கா படப்பிடிப்பில் இருந்திருக்கிறார் என்று தகவல். அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி ஒலிவாயிலாக எங்களை வந்தடைந்தது).  கே. பாலச்சந்தர் அவர்கள் தமக்கேயுரிய முதிர்ந்த நடையில் வாழ்த்தினார். அடுத்து பாரதிராஜா அவர்கள் பேசத்தொடங்கினார். வைரமுத்து அவர்களுடன் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த கசப்பான உணர்வுகளை நினைவுபடுத்திப் பேச்சைத் தொடர்ந்தார். அடுத்து மணிரத்னம் அவர்களுடைய உரை அமைந்தது.

விழாவின் நிறைவாக, கவிஞர் வைரமுத்து பேசினார். பாரதிராஜா அவர்களுக்குப் பதில் தருவதாய் அமைந்தது அதன் தொடக்கம், “நமக்கிடையேயானதைத் தனியறையில் பேச வேண்டும், பொதுவில் பேசினால் பொதுவில் பதிலளிப்பதே முறையானது” என்று அவர் தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார். இருவரும் மேடையின் இருபுறத்திலும் இருந்தனர். வழக்காடு மன்றம்போலத் தோன்றியது. ஒரு கட்டத்தில் “வைரமுத்து, இது உன்னுடைய விழா, உன்னுடைய இரசிகர்கள். வாழ்த்துகள். வருகிறேன்” எனப் பொருள்படுமாறு கூறிவிட்டு உடனடியாக மேடையைவிட்டு இறங்கிச் சென்றார் அல்லது வெளிநடப்பு செய்தார்.



அன்றைய நிகழ்வை அவர் நெகிழ்ச்சியாகக் கொண்டாடினார். ஆனால், மகிழ்ச்சியாகக் கொண்டாடினாரா என்பது ஐயமே. அவர் நன்றி சொன்னவிதம் இன்றளவும் நினைவுள்ளது. அறுபதாண்டுகள் வாழ்ந்த மனிதன், தன் துறையில் உச்சம் தொட்ட ஒருவன் எத்தனை பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும்… ஆனால், அவர் தனது உடலுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டார். இரசிகர்களுக்கும் மக்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி சொல்ல அந்தியில் நிறைவடைந்தது நிகழ்வு.

கொடிசியாவிலிருந்து வெளியே வந்தால் அத்தனை வாகனங்கள் புறப்படத் தயாராய் இருந்தன. திருவாரூர் மாவட்டத்தினர் சீக்கிரம் ஆம்னி பேருந்தில் ஏறச் சொல்லினர். ஆனால், அந்தப் பரிசு பெற்ற படத்தைப் பெறாமல் போவது சரியாய்ப் படவில்லை. இருங்கள் வரேன் என்று சொல்லி, குறித்து வைத்த எண்ணைக் (AMS_0036) கொண்டு, படங்கள் பிரிண்ட் எடுக்கும் இடத்திற்கு சென்றால், அங்கு தந்த மின்சார சப்ளை நிறுத்திவிட்டனர். இனி வழியில்லை போலும் என்று, எண்ணிக்கொண்டிருக்கையில், மின்னஞ்சல் முகவரி கொடுங்க ஊருக்குப்போய் அனுப்புறோம் என்றனர் (இப்போது 2021இல் இருப்பதுபோல், வைஃபை, மோடம், மொபைல் டேட்டா பரவலாக்கம் அப்போது இல்லை என்றறிக). பென்டிரைவ் இருக்கு. ஏத்தித் தரலாமா? என்று கேட்க, சரி கொடுங்க என்று வாங்கி உடன் High Resolution படம் ஏத்திக்கொடுத்தனர். 100 உரூபா பணம் எடுத்துக்கொடுக்க பிரிண்ட் எடுக்கலல்ல. வேண்டாம்பா என்றனர். (அந்தப் புகைப்பட நிறுவனத்தை சென்னையில் பின்னாளில் சந்தித்து நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன். அவர்கள் இருநாள் எடுத்த காணொளிப் பதிவுகள் ஒருமணிநேர நிகழ்ச்சியாக சன் டிவியில் ஞாயிறு ஒன்றில் ஒளிபரப்பானது)

ஆம்னியில் ஏற, நெடுஞ்சாலையில் வேகமெடுக்க, விடியலில் ஊர்வந்து சேர்ந்தோம்.

 

-          #தக | 13 சூலை 2021

சனி, 5 ஜூன், 2021

கோவிஷீல்ட்-கோவாக்சின் வேறுபாடு என்ன?

நன்றி : சிவ ஆனந்தகிருஷ்ணன்
(முகநூல் பதிவு : https://m.facebook.com/story.php?story_fbid=10225518555934904&id=1356846673)

என்னிடம் பலர் COVISHIELD ஆ அல்லது COVAXIN ஆ.. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்.. அது எப்படி செயல்படுது பொதுவா என்ன முறையில் எல்லாம் தடுப்பூசி தயார் செய்கிறார்கள் ன்னு ஒரு பதிவை போட்டா நல்லா இருக்கும் ன்னு தொடர்ந்து கேட்டாங்க.. அதற்காக 

பொதுவாக நான்கு முறையில் கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன..... 

1. WHOLE VIRUS 
மிகப் பழமையான முறை இது. இந்த முறையில் என்ன செய்வார்கள் என்றால் உயிருள்ள வைரஸை எடுத்து அதை செயலிழக்க வைத்து விடுவார்கள். எளிதாக சொல்ல வேண்டுமெனில் ஊருக்குள் ஒரு கொலைகாரன் வந்துவிட்டான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அவன் கைல இரண்டு கத்தி இருக்கு..மூஞ்சி இப்டி இருக்கும். ஒரு கண்ணு இருக்காது. இந்த கலர் டிரஸ் போட்டு இருப்பான். அவன் கத்தி இவ்ளோ நீளமா இருக்கும் ன்னு அங்க அடையாளங்கள் கரெக்டா குறித்து வைத்து விடுவார்கள் விஞ்ஞானிகள். இப்ப விஞ்ஞானிகள் என்ன செய்வார்கள் என்றால் அந்த உண்மையான வைரஸை சோலியை முடிச்சு கொலைகாரன் என்கிற செத்த உடலை (Dead Virus or Attenuated) மட்டும் மனித உடலுக்குள் அனுப்பி விடுவார்கள். “கொலைகாரனின் கத்தி மூஞ்சி இதலாம் புதுசா இருக்கே...இவனை இது வரைக்கும் பாத்ததே இல்லையே.. அய்யயோ நம்ம Boss அ காப்பாத்தணுமேன்னு” .... நம்ம உடல்ல இருக்கிற நோய் எதிர்ப்பான்கள் எனப்படும் Antibodies அந்த உயிரில்லாத கொலைகாரனை (Dead Corona Virus) உயிர் உள்ள கொலைகாரனவே நினைத்து கொள்ளும். நினைத்து கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை தீவிரமாக உருவாக்கும். உதரணமா “அவன் கைல ரெண்டு கத்தி இருக்கு. ரெண்டு அருவாள் இருக்கு. அப்ப நம்மகிட்டயும் அதை தடுக்க ஆயுதம் இருக்கனும் ன்னு அதற்கு ஏற்றார் போல் நம்ம தயாரா இருக்கணும்” ன்னு ரெடியா இருக்கும். இப்ப உண்மையாவே ஒரு உயிருள்ள கொலைகாரன் உடம்புக்குள்ள வந்தா ரெடியா இருக்கிற நம்ம உடலின் நோய் எதிர்ப்பான்கள் (IgG) அவன் வந்த உடனே எளிதாக எதிர்கொண்டு நம் உயிரை காப்பற்றி விடும். 

இந்த முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி தான் COVAXIN 

2. VIRAL VECTOR 
கொஞ்சம் நுட்பமான முறையில் தயாரிக்கப்படும் முறை. இங்கே என்ன செய்வார்கள் என்றால் கரோனா வைரசின் DNA வை எடுத்து சாதாரண சளியை ஏற்படுத்தும் Adeno Virus உடன் ஒட்டி வைத்து விடுவார்கள். இங்கே Adeno வைரஸ் என்பது ஒரு கொரியர் Boy மாதிரி தான். கொரியர் என்ன செய்யும்.. “சார் பார்சல் “.. என்று சொல்கிறது போல அந்த பார்சல் தான் கரோனா வைரசின் DNA. அந்த பார்சலில் ஒரு தகவல் இருக்கும் . என்ன தகவல் என்றால் “மனித உடம்புக்குள்ள போனதும் கரோனா வைரஸ் உடம்பு மேல இருக்கிற மாதிறியே நீ முள்ளை ஏற்படுத்தணும். அதான் உன் வேலை. ஆனா நீ நோயை ஏற்படுத்த கூடாது” . இப்படி உத்தரவு  இருப்பதால் கரோனா வைரசின் முள் போன்ற அமைப்பு மட்டும் நம் உடலில் ஏற்படும். பிறகு நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பான்கள் அந்த முள்ளை எதிர்கொள்ள பயிற்சி மேற்கொள்ளும்.  இந்த பயிற்சியால் உண்மையான முள் போன்ற அமைப்புடன் வரும் கரோனா வைரஸ் வந்தால் அந்த பயிற்சியை வைத்து நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பான்கள்.
முட்டு கொடுக்கும் 

மேலதிகாரியின் உத்தரவை எப்படி OA/Peon மூலம் கொடுத்து வேலை செய்ய சொல்கிறார்களோ அந்த மாதிரி தான். அவர் என்ன செய்வார் .. “ ஐயா இதை செய்ய சொன்னங்க உங்களை” ன்னு சொல்லிடு போயிருவார். அதே தான் இங்க நடக்கும். 

இந்த முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்புசி தான் COVISHIELD,SPUTNIK  

3. mRNA Vaccine 
மிக புதுமையான அதே நேரத்தில் மிகுந்த கடினமான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் முறை. இங்கே என்ன செய்வார்கள் என்றால் கரோனா வைரசின் mRNA வை எடுத்து கொள்வார்கள். இங்கே m என்பது messenger. இந்த RNA என்பது உத்தரவு போடும் அதிகாரி போன்றவர். நீ இதை செய் என்று கட்டளையிடும் போது அதை செல்கள் செய்யும். Vector முறை போன்று கொரியர் வேலை இங்கே கிடையாது. எதுனாலும் நேரடி டீலிங் தான். இங்கே என்ன நடக்கும் என்றால் mRNA நம் உடல் உள் சென்றதும் நம் மனித செல்களுக்கு உள்ளேயே சென்று கட்டளையிடும். என்ன கட்டளை என்றால் “ கரோனா வைரஸ் போன்ற முள் போன்ற அமைப்பை ஏற்படுத்து. மனித DNA க்குள் நீ செல்ல கூடாது  “ என்பது தான். 

நம் செல்களும் உடனடியாக “உத்தரவு எஜமானே.உடனே செய்கிறேன் ” என்று அந்த முள்ளை (Spike Protein) ஏற்படுத்தும். ஏற்படுத்திய உடன் காவலர்களான நோய் எதிர்ப்பான்கள் மனித செல் தான் என்று அதற்கு அடையாளம் தெரியாமல். “கொலைகாரன் கொலைகாரன்னு..அய்யயோ எவனோ புதுசா வந்து இருக்கானே” ன்னு அந்த முள் போன்ற அமைப்பை எதிர்கொண்டு பழகிவிடும். பிறகு உண்மையான கொலைகாரனான Corona Virus அதே முள் போன்ற அமைப்புடன் வந்த உடன் “டேய் நீயா...உன்னை அன்னைக்கே கொன்னு அனுப்பனேன்ல...திருந்தலையா நீ ன்னு இப்பவே சோலியை முடிக்கிறேன் பாருடா ன்னு” நம் உடல் திறன்பட எதிர்கொள்ளும். 

இங்கே மேலதிகாரி OA/Peon லாம் நம்பாம நேரடியா களத்துல இறங்கிருவார். நேரடியா சொன்னா எப்படி வேலை அடிச்சு பிடிச்சு உடனே நடக்குதோ அதே மாறி தான் இந்த mRNA Vaccine செயல்படும்.

இந்த முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்புசி தான் Pfizer,Moderna 
 
4. PROTEIN SUBUNIT VIRUS 
இங்கே கரோனா வைரசின் Spike Proteins போன்ற முட்களை மட்டும் பிரித்து எடுத்து அந்த முட்களை மட்டும் நம் உடலில் செலுத்துவார்கள். இது எப்படி என்றால் கொலைகாரனின் கையையோ காலையோ எடுத்து “ எப்பா இதான் பா கொலைகாரன் கை..பாத்துக்கோ” ன்னு அனுப்புற மாறி. நம் உடல் “ஒ.. இப்டி தான் இருக்குமா அவன் கையி.. ஒ இப்டிதான் இருக்குமா அவன் காலு.. ஒ இப்டிதான் இருக்குமா அவன் கத்தி.. வந்தா நா டீல் பண்ணிக்கிறேன்” ன்னு நம் நோய் எதிர்ப்பான்கள் பாத்து கத்து வச்சிக்கும்...பிறகே அதே போன்ற உடல் அமைப்புடன் கரோனா வைரஸ் வரும்போது பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் தடுப்புசிகளுக்கு Booster தேவைப்படும். 

இந்த முறையில் தயாரிக்கப்படும் தடுப்பூசி தான் NOVAVAX,EPIVAC,Sanofi-GSK

அன்புடன் 
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன் 
திருநெல்வேலி

புதன், 19 மே, 2021

ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்துத் தமிழ்ப் பெயர்கள்

 ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்துத் தமிழப்பெயர்கள் 

நன்றி : இரா. திருமாவளவன்

ஆண்பால்

1. தீரன் > வீர மிக்கவன் / திறமையானவன்
2. மாறன் > அழகானவன் / அன்புக்குரியவன்
3. வேலன் > வேலை ஏந்தியவன் / வேல் போன்ற கூரிய அறிவாளன்
4. ஏரன் > வான் போல் உயர்ந்தவன் / மேலானவன்
5. மாலன் > அன்பில் மழை போன்றவன்/ கரிய வண்ணத்தன்
6. மாயோன் > அன்பில் மழை போன்ற மேலோன் / கரிய வண்ணத்தன்
7. சேயோன் > கதிரவன்
8. பாரி > உலகம் போல் விரிந்தவன் / கொடையாளன்
9. ஓரி > தேன் போலும் இனியவன்
10. மதி > அறிவாளன்/ நிலவைப் போன்றவன்
11. ஆலன் > ஆல மரம் போல் உறுதியானவன்
12. கதிர் > ஒளியைப் போன்றவன்
13. ஊரன் > ஊரைச் சேர்ந்த உரிமையாளன்
14. சேரன் > சேரனைப் போன்றவன்
15. மேலன் > மேலானவன்
16. வாணன் > என்றும் வாழ்பவன்
17. வானன் > வான் போல் உயர்ந்தவன்
18. பூவன் > பூவைப் போன்றவன்
19. தூயன் > தூய உள்ளத்தன்
20. தூவன் > தூயவன்
21. மறவன் > வீரன்
22. மீனன் > மீன் போல் மின்னுபவன் / பாண்டியன்
23. திறலன் > திறமை மிக்கவன்
24. தேயன் > நாட்டுக்குரியவன் / ஒளி வீசுபவன்
25. நாடன் > நாட்டுக்குரியவன்
26. ஒளியன் > ஒளி வீசும் அறிவாளன்
27. அறிவன் > அறிவாளன்
28. புதியன் > புதிய சிந்தனையாளன்
29. பதி > தலைவன்
30. இனியன் > இனிய நெஞ்சன்
31. எழிலன் > அழகானவன்
32. கணியன் > கணிக்கும் அறிவாளன்
33. மணியன் > அழகானவன்
34. மணி > அழகன்
35. அரி > அரிமா போன்றவன் 
36. அரன் > அரம் போலும் அறிவுக் கூர்மையாளன்
37. எல்லன் > கதிரவன்
38. எல்லோன் > கதிரவன்
39. பகவன் > பகுத்து உணர்த்தும் அறிவாளன்
40. பகலன் > கதிரவன்
41. பேகன் > அருள் உள்ளம் கொண்ட பேகன்
42. மேனன் > மேன்மைக்குரியவன்
43. நயனன் > அழகானவன்/ இனிய உரையாளன்
44. நல்லன் > நல்ல மனத்தன்
45. நல்லான் > நல்ல உணர்வாளன்
46. நீரன் > நேர்மையானவன் / நீரைப் போலும் குளிர்ந்தவன்
47. நேரன் > நேர்மையானவன்
48. ஆரன் > செம்மையான அறிவாளன்
49. ஆகன் > ஆக்க மனம் கொண்டவன்
50. ஆவன் > ஆகும் எண்ணம் கொண்டவன்
51. ஏரகன் > வான் போல் உயர்ந்தவன்
52. செவ்வன் > ஒழுங்கானவன்
53. சேனன் > உயர்ந்தவன் / செம்மையானவன்
54. செம்மல் > செவ்விய அறிவாளன்
55. வையன் > உலகுக்குரியவன் / கூரிய அறிவாளன்
56. வளவன் > வளமானவன்
57. வல்லன் > வலிமையானவன்
58. வரணன் > கடலைப் போன்றவன்
59. வருணன் > கடலைப் போன்றவன்
60. திண்ணன் > திண்மையான உள்ளத்தவன்
61. தென்னன் > தென் திசைக்குரிய பாண்டியன்
62. பெரியன் > சிறந்தவன்
63. அழகன் > அழகானவன்
64. அமுதன் > இனிமையானவன்
65. அணியன் > அழகானவன்
66. தெம்பன் > மன உறுதியானவன்
67. நன்னன் > நன் மனம் கொண்டவன்
68. நளினன் > அழகன்
69. சேந்தன் > சிவந்தவன் / காப்பானவன்
70. வேங்கை > புலி போன்றவன் / வீரன்
71. வெற்பன் > வெற்றியாளன் / மலையைப் போன்றவன்
72. வெற்றி > வெற்றியாய் விளங்குபவன்
73. வென்றி > வெற்றியாளன்
74. தொன்மன் > தொன்மைச் சிறப்பைக் கொண்டவன்
75. கவினன் > அழகானவன்
76. மலையன் > மலைபோலும் உயர்ந்தவன்
77. ஆளன் > ஆளுமை உடையவன்
78. ஆதன் > உயிரைப் போன்றவன் / முதன்மையானவன்
79. ஆற்றல் > வலிமை உடையவன்
80. செக்கன் > செம்மையானவன்
81. செல்லன் > அன்புக்குரியவன்
82. சிற்பன் > சிலையைப் போலும் நிலையானவன்
83. சின்னன் > இளையவன்
84. தொகையன் > செல்வச் சிறப்பானவன்
85. ஓங்கல் > மலை போலும் உயர்ந்தவன்
86. உயிரன் > உயிரைப் போலும் சிறந்தவன்
87. கோவன் > அரசனைப் போன்றவன்
88. கோளன் > குறிக்கோள் உடையவன்
89. மெய்யன் > உண்மையானவன்
90. மிசையன் > மேலானவன்
91. மாணன் > மாண்புக்குரியவன்
92. மானன் > பெருமன்
93. நெடியோன் > உயர்ந்த மனம் உடையவன்
94. நெடியன் > உயர்ந்த உள்ளத்தன்
95. ஐயன் > மேலான அறிவாளன்
96. நெறியன் > முறையானவன்
97. நின்றன் > சொல் மாறாத நெறியாளன்
98. நீடன் > என்றும் இனியவன்
99. மனன் > நல்ல மனத்தன்
100. அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்
101. அத்தன் > முதன்மையானவன்
102. வியன் > வியப்புக்குரிய செயலாளன்
103. வியலன் > விரிந்த உள்ளம் உடையவன்
104. விரியன் > விரிந்த நெஞ்சன்
105. வாரியன் > கடல் போலும் வளமை உடையவன்
106. விசும்பன் > விண்ணைப் போலும் உயர்ந்தவன்
107. வெளியன் > விரிந்த உள்ளம் கொண்டவன்
108. எளியன் > எளிமையானவன்
109. சீரன் > சீர்மையான போக்குடையவன்
110. சீரியன் > சீரிய பண்பாளன்
111. தவன் > கொண்ட கொள்கையை நிறைவேற்றுபவன்
112. தானன் > கொடுக்கும் மனம் உடையவன்
113. உலகன் > உலகம் போலும் விரிந்தவன்
114. நிறை > நிறைவான மனம் கொண்டவன்
115. மறையன் > ஆழமானவன்
116. குணன் > பண்பாளன்
117. குன்றன் > மலை போலும் உறுதியானவன்
118. அறன் > தூய நெஞ்சம் உடையவன்
119. அறவான் > தூய உள்ளத்தவன்
120. ஊங்கன் > எதிலும் முதன்மையானவன்
121. ஓங்கன் > உயர்ந்தவன்
122. ஓவன் > ஓவியம் போன்ற அழகன்
123. பொற்பன் > பொன்னைப் போன்றவன்
124. துய்யன் > தூய்மையானவன்
125. உய்யன் > விடிவை உடையவன்
126. பண்பன் > பண்பாளன்
127. தெய்வன் > கதிரவனைப் போன்றவன்
128. நோற்பன் > உறுதியானவன்
129. நூலன் > நூலைப் போன்ற அறிவாளன்
130. ஆயன் > ஆய்ந்த அறிவாளன்
131. ஆவலன் > மிகுந்த ஈடுபாடுடையவன்
132. புகழன் > புகழுக்குரியவன்
133. ஏறன் > ஏற்றம் உடையவன்
134. எழுவன் > எழுச்சிக்குரியவன்
135. யாழன் > யாழ் போலும் இசையாளன்
136. இன்பன் > இன்பம் விழைபவன் / இன்புறுத்துபவன்
137. குழலன் > குழலிசை போலும் உள்ளத்தவன்
138. முனைவன் > முனைந்த அறிவாளன்
139. நீலன் > நீல நிறம் போல குளிர்ந்தவன்
140. சாலன் > சால்புடையவன் 
141. அமரன் > வீரன் 
142. சமரன் > போர் வீரன்
143. சாரன் > கொள்கைச் சார்புடையன்
144. துணையன் > நன்மைக்குத் துணையாக விளங்குபவன்
145. தூணன் > தூண் போலும் துணையானவன்
146. வித்தன் > விதைபோலும் மூலவன்
147. பணிவன் > பணிவானவன்
148. பணியன் > பணிந்த மொழியாளன்
149. தக்கன் > தகுதியானவன்
150. தக்கான் > தகுதிப்பாடுடையவன்
151. தகவன் > ஏற்புடையன்
152. செறிவன் > சிறந்த, செறிந்த சிந்தனையாளன்
153. பெரியன் > பெருமைக்குரியவன்
154. தகையன் > தகைமைக்குரிய பெருமகன்
155. ஓரகன் > ஒரே குறிக்கோளை உடையவன்
156. ஓரையன் > ஒரு நெறியாளன் / விண் மீன் போன்றவன்
157. நாவன் > சொல்லாற்றல் உடையவன்
158. நாவலன் > சொல் வன்மை உடையவன்
159. காவன் > காக்கும் காவலன்
160. காவலன் > காக்கும் தன்மையன்
161. காரி > காரிக் கோளைப் போன்றவன்
162. காளை > காளையைப் போல் திண்மையன்
163. விழுப்பன் > என்றும் நிலைத்த செயலைச் செய்பவன்
164. ஞாலன் > உலகத்தைப் போலும் விரிந்தவன்
165. மன்றன் > தலைவன்
166. அகரன் > முதன்மையானவன்
167. அகன் > ஆழ்ந்த உளத்தவன்
168. அகிலன் > உலகம் போல் அகன்ற மனத்தன்
169. அரவன் > கூரிய அறிவாளன்
170. குயிலி > குயில் போலும் குரலைக் கொண்டவள்
171. குழலி > அழகிய கூந்தலை உடையவள்
172. மல்லி > மல்லிகை மலர் போன்றவள்
173. மலர் > பூவைப் போன்றவள்
174. அல்லி > அல்லி மலர் போன்றவள்
175. மேழி > ஏர் போன்றவள்
176. சுடர் > சுடர் ஒளி போன்றவள்
177. நிலா > நிலவைப் போன்றவள்
178. தாமரை > தாமரை மலரைப் போன்றவள்
179. விழி >  கண்ணாக விளங்குபவள்
180. கயல் > கயல் மீனைப்போன்ற கண்ணை உடையவள்
181. சேல் > சேல் மீனைப் போன்ற சிவந்த கண்ணைக் கொண்டவள்
182. ஒளி >  ஒளி வீசுபவள்
183. இசை > இசை போலும் இனியள்
184. தேன் > தேன் போலும் இனியள் 
185. பூவை > பூவைப் போன்றவள்
186. பாவை > அழகிய பெண்
187. வடிவு > அழகானவள்
188. எழிலி > அழகியவள்
189. நங்கை > அழகிய பெண்
190. மங்கை >  பெண்
191. அரசி > தலையானவள்
192. கனி > கனி போலும்  இனிமையானவள்
193. மயில் > மயில் போலும் அழகியவள்
194. மறத்தி > வீரமானவள்
195. வெயினி > தென்றலைப் போன்றவள்
196. அன்பி > அன்புக்குரியவள்
197. பண் > இசையானவள்
198. வாணி > என்றும் வாழ்பவள்
199. நளினி > அழகிய தன்மை உடையவள்
200. வள்ளி > வள்ளிக் கொடியைப் போன்றவள்
201. வல்லி > வன்மையானவள்
202. அமுதினி > அமிழ்தைப் போலும் இனியவள்
203. அழகி > அழகானவள்
204. நல்லி > நல்லவள் 
205. நகை > என்றும் சிரிப்பவள் / நகையைப் போன்றவள்
206. முறுவல் > அழகிய சிரிப்பைக் கொண்டவள்
207. ஒளிர் > ஒளி வீசுபவள்
208. மிளிர் > மினுக்கிடுபவள்
209. தளிர் > மென்மெயானவள்
210. கலை > எழிலானவள்
211. செவ்வை > ஒழுங்குடையவள்
212. செங்கை > சிவந்த கரத்தை உடையவள்
213. மான்விழி > மான் விழியைப் போன்ற கண்ணை உடையவள்
214. சேல்விழி > சேல் மீன் போன்ற கண்ணை உடையவள்
215. செங்கொடி > சிவந்த கொடியைப் போன்றவள்
216. கோதை >  அழகிய கூந்தலை உடையவள்
217. கோவை > கோவைப் பழத்தைப் போலும் சிவந்தவள்
218. அருளி > அருள் உள்ளங் கொண்டவள்
219. அருளினி > அருள் தன்மை கொண்ட இனியவள்
220. அகில் > அகிலைப் போலும் மணம் வீசுபவள்
221. முகிலி > வான் முகிலைப் போலும் மென்மையள்
222. திங்கள் > நிலவைப் போலும் ஒளி வீசுபவள்
223. செவ்வி > செம்மையானவள் / தக்கவள்
224. மதி > நிலவைப் போன்றவள் 
225. பொன்னி > பொன்னைப் போன்றவள்
226. தங்கம் > பொன்னைப் போன்றவள்
227. வேண்மாள் > சீரிய அன்புக்குரியவள்
228. தூயள் > தூய்மை எண்ணம் உடையவள் 
229. தூயவள் > தூய மனத்தினள்
230. இனியாள் > இனிய உள்ளத்தினள்
231. இனி > இனிய மனத்தினள்
232. இனியள் > இனிய பண்புடையவள்
233. சிவலை > சிவந்தவள் 
234. செவ்விழி > சிவந்த கண்ணையுடையவள்
235. செம்மாள் > செம்மை மகள் 
236. புகழி > புகழை உடையவள் 
237. நவ்வி > மானைப் போன்றவள்
238. பொன் > பொன் ஆனவள்
239. பொற்பு > பொன்னைப் போன்றவள்
240. யாழினி > யாழிசை போன்றவள்
241. தென்றல் > தென்றல் காற்றைப் போன்றவள்
242. அன்பினி > அன்புக்குரிய இனியவள்
243. யாழி > யாழைப் போன்றவள்
244. மறத்தி > வீரம் உடையவள்
245. ஆயி > அறிவார்ந்த முதிர்ந்த பெண்
246. மாள் > அழகிய மகள்
247. வேல் > வேல் போன்ற கூரிய விழி உடையவள்
248. இன்மொழி > இனிய மொழி பேசுபவள்
249. காந்தல் > ஈர்க்கும் மலர்
250. மென்மொழி > மென்மையான மொழி பேசுபவள்
251. தீஞ்சுவை > தேன் போன்ற இனிய சுவை உடையவள் 
252. திலகம் > ஒளி வீசும் புகழுக்குரியவள்
253. இலங்கி > ஒளி வீசுவது புகழ் பெறுபவள்
254. தண்டலை > குளிர்ந்த சோலையைப் போன்றவள்
255. அருவி > அருவி போலும் குளிர்ந்தவள்
256. பூஞ்சோலை > பூக்கள் நிறைந்த சோலையைப் போன்றவள்
257. திருவிழி > பெருமைக்குரிய விழியை உடையவள்
258. திருமொழி > பெருமைக்குரிய மொழியைப் பேசுபவள்
259. திருநுதல் > பெருமைக்குரிய நெற்றியை உடையவள்
260. ஒண்மை > ஒளியைப் போன்ற அறிவையுடையவள்
261. நுதலி > அழகிய நெற்றியை உடையவள்
262. நாவினி > இனிய பேச்சாற்றல் உடையவள்
263. முல்லை > முல்லைப் பூ போன்றவள்
264. சாந்தி > சந்தன மணம் போன்றவள்
265. சாந்தினி > சந்தன மணம் போன்றவள்
266. மாண்மொழி > பெருமைக்குரிய மொழி உடையவள்
267. கன்னி > இளைமையானவள்
268. மண்ணி > பொருத்தம் உடையவள்/ மண்ணுக்குரியவள்
269. மின்னி > மின்னுபவள்
270. மின்னல் > மின்னலைப் போன்றவள்
271. கன்னல் > கரும்பைப் போன்ற இனியவள்
272. கனலி > தீமையைக் கண்டு கனல் போல் சுடுபவள்
273. தழல் > தீமையைக் கண்டு தழல் போல் எரிபவள்
274. தணலி > தீமையைக் கண்டு தணல் போல் சுடுபவள்
275. கயல் > கயல் மீனைப் போன்றவள்
276. தேறல் > தேன் போல் இனிப்பவள்
277. தெளிதேன் > தெளிந்த தேனைப் போன்றவள்
278. தூவி > வெள்ளை இறகினைப் போன்ற தூயவள்
279. செம்மை > வெவ்விய ஒழுங்குடையவள் 
280. அம்மை > அழகியவள்
281. பனி > பனி போல் குளிர்ந்தவள்
282. புகழி > பலரால் போற்றப்படுபவள்
283. மீனாள் > மீனைப் போலும் மின்னுமவள்
284. தேனாள் > தேனைப் போன்றவள்
285. இமை > இமையைப் போலும் காப்பவள்/ உயர்ந்தவள்
286. மகிழி > என்றும் மகிழ்பவள்
287. வெண்பா > வெண்பாவைப் போன்ற சுவையள்
288. மான் > மானைப் போன்றவள் 
289. மெய்மை > மெய்த்தன்மை உடையவள்
290. மெய்யாள் > உண்மையானவள்
291. மெய் > உண்மைத் தன்மையள்
292. பொன்மை > பொன்னைப் போல் ஒளிர்பவள்
293. பொன்னாள் > பொன்னைப் போன்றவள்
294. பூவாள் > பூவைப் போன்றவள் 
295. மெல்லி > மென்மையானவள்
296. கொடி > கொடியைப் போலும் மென்மையானவள்
297. கொவ்வை > கொவ்வைப் பழம் போல் சிவந்தவள்
298. தென்னாள் > தெற்குத் திசைக்குரியவள்
299. தென்னள் > தெற்குத் திசையள்
300. தண்ணல் > குளிர்ந்தவள்
301. ஆதி > முதன்மையானவள்
302. அவ்வை > பெருமைக்குரிய பெண்
303. தமிழி > தமிழைப் போன்றவள்
304. இமிழ் > அலையோசை / இனிய ஓசை
305. குமரி > இளமையானவள்
306. பூவிதழ் > பூவின் இதழைப் போன்ற மென்மையானவள்
307. பூவனம் > பூஞ்சோலை 
308. பூங்கனி > பூவைப் போல கனியாள் / 
309. பூவணி > பூக்களின் அணி
310. இன்பா > இனிய பாவினைப் போன்றவள்
311. தீங்கனி > இனிமையுடைய கனியைப் போன்றவள்
312. மாங்கனி > மாங்கனியைப் போன்றவள்
313. செங்கனி > சிவந்த கனியைப் போன்றவள்
314. அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்
315. பெற்றி > எல்லாச் சிறப்பும் பெற்றவன்
316. பொன்னன் > பொன்னைப் போன்றவன்
317. தங்கன் > தங்கமானவன்
318. வண்ணன் > அழகான வண்ணத்தன்
319. நிறன் > நிறமுள்ள அழகன்
320. கெழுவன் > நிறம்  மிகுந்த அழகன்
321. வாரியன் > பெருங்கடல் போல் வளம் உள்ளவன் 
322. பரவன் > பரந்த மனம் உள்ளவன்
323. ஆழியன் > ஆழமான மனம் அறிவு உள்ளவன்
324. விரியன் > விரிந்த மனம் உள்ளவன்
325. விழுப்பன் > அழியாத புகழுடையவன்
326. மீனன் > மீன் கொடியுடைய பாண்டியன்
327. வேயன் > வேந்தன்
328. திருமான் > பெருமைக்குரியவன்
329. புரவன் > பேணிப் பாதுகாப்பவன்
330. புதுவன் > புதிய சிந்தனையாளன்
331. பரிதி > கதிரவன்
332. நெறியன் > ஒழுங்கானவன்
333. காரன் > கரியன்/ உணர்ச்சியுள்ளவன்
334. வேயோன் > மணிமுடி தரித்த வேந்தனைப் போன்றவன் 
335. காரோன் > கார் முகில் போன்றவன்
336. செம்பன் > செந்தன்மையன்
337. சேம்பன் > செந்தன்மையுள்ளவன்
338. சேவன் > செந்தண்மையாளன்
339. சேகன் > செந்தன்மையாளன்
340. நீரியன் > நீர் போல் குளிர்ந்த வன்/ நேர்மையானவன்
341. நந்தன் > நட்புறவானவன்
342. தேனன் > தேன் போன்ற இனியமையன்
343. நிரையன் > நேர்மையானவன்
344. நிறையன் > நிறைந்த உள்ளம் உள்ளவன்
345. தகையன் > பெரும்பண்புடையவன்
346. தாதன் > முந்தையன்
347. தத்தன் > மூத்தவன்
348. தக்கன் > தகுதியானவன்
349. கொற்றன் > அரசனைப் போன்றவன்
350. காழன் > உறுதி வாய்ந்தவன்
351. கனகன் > பொன்னைப் போன்றவன்
352. உறவன் > உறவாய் விளங்குபவன்
353. ஊரன் > ஊரைச் சார்ந்தவன்
354. எழினி > முகில் போன்றவன்
355. அணவன் > நெருங்கிய தன்மையன்; பொது உறவினர் 
356. அணன் > நெருங்கிய அன்பின் தன்மையின்
357. அண்டன் > அண்டன் போல் விரிந்த மனத்தன்
358. அந்தணி > அகம் தணித்தவன்
359. அண்ணல் > மேலானவன்
360. முதலன் > முன்னே இருப்பவன்
361. முதல்வன் > தலைமையாக இருப்பவன்
362. அதிகன் > மேலானவன்
363. அரணன் > அரணானாக விளங்குபவன்
364. அரண் > பாதுகாப்பாக விளங்குபவன் 
365. ஈழன் > ஈழத்திருமகன்
366. ஈழவன் > ஈழத்தைப் போற்றுபவன் / சார்ந்தவன்
367. செம்பன் > செந்நிறமானவன்
368. செம்பகன் > செம்மை அகத்தவன்
369. வாகையன் > வெற்றி ஈட்டியவன்
370. தமிழவன் > தமிழுணர்வன்
371. தாயகன் > தாய் நாட்டு உணர்வுடையவன்
372. வேந்தன் > மாமன்னன் ( வேய் > வேய்தோன் > வேந்தன்)
373. வேங்கை > வேங்கைப் புலி போன்றவன்
374. புயலன் > புயல் வேகம் உடையவன்
375. புயலவன் > புயலைப் போன்றவன்
376. ஏந்தி > ஏந்துபவன்/ பொறுப்புகளை தாங்கி வாழ்பவன்
377. ஏந்தன் > உயர்ந்து வாழ்பவன் / தாங்கி நிற்பவன்
378. ஏந்தல் > பெருமைக்குரியவன்
379. மணி  > அழகன்
380. மதி > அறிவாளன் 
381. முத்து  > முத்துமணியைப் போன்றவன் 
382. வாணன் > நெடிது வாழ்பவன்
383. ஓவியன் > அழகு ஓவியம் போன்றவன்
384. நம்பி > நம்பகம் உடைவன் / நம் அன்பன்
385. கவரன் > கவரும் தன்மையன்
386. மொழியன் > நல்லதை உரைப்பவன்/ செம்மையானவன்
387. ஊழி > காலங் கடந்தும் நிலைப்பவன்
388. கோ > அரசன்
389. கோன் > அரசன்
390. எழில் > அழகன்
391. அண்ணல் > மேன்மையானவன்
392. பரிதி > சூரியனைப் போன்றவன்
393. தேறன் > தேனைப் போன்ற இனியவன் 
394. தெளியன் > தெளிந்தவன்
395. தேரன் > தேரியவன்
396. வேள்> வேட்கையுடையவன் / உழவன்
397. வளன் > வளம் பொருந்தியவன்
398. உரன் > உரம் வாய்ந்தவன்
399. பரன் > விரிந்தவன்
400. மறன் > வீரன்

இரா. திருமாவளவன் 

நல்லத் தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் நானொரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்