அது 2014. சூலை
மாதத் தொடக்கம்.
B.Sc
இயற்பியல் இரண்டாமாண்டு வகுப்புகள் நடத்தத்தொடங்கிய காலம். நுண்கலைமன்ற
பொறுப்பாளர் குமரேச மூர்த்தி ஐயா, தொடர்புகொண்டு
ஒரு போட்டி வந்திருக்கு போகணும் என்றார்கள். முதலாமாண்டு
பயின்றபோது நான் கல்லூரிக்காப் பெற்ற பரிசுகளின் மீதான நம்பிக்கை இந்த வாய்ப்பைத் தந்திருக்கும் என்று எண்ணினேன்.
குறிப்பாக, 2014ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி நிகழ்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பேச்சுப்போட்டியில் திரு.வி.க கல்லூரியிலிருந்து
சென்று முதலிடம் பெற்றது. UG முதலாமாண்டு மாணவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடிப்பதெல்லாம் பெரிய விசயமென்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அது அப்போது உண்மையும்கூட.
திருவாரூர்
செல்வீஸ் குளிர்மை
அரங்கத்தில் நடக்கவுள்ள பேச்சுப் போட்டிக்கு, திரு.வி.க கல்லூரி சார்பில் இருவரைத் தெரிவு செய்தார்கள். நானும் மோகனப்பிரியாவும். (மோகனப்பிரியா பயங்கரமான பேச்சாளர். கல்லூரி
நிறைவுசெய்யும்வரை மூன்றாண்டுகளும் எங்களுக்குள் பயங்கர போட்டி இருந்தது.)
போட்டியை நடத்துவது வெற்றித்தமிழர் பேரவை. அப்போதுதான்
அந்த அமைப்பின் பெயரையே கேள்விப்படுகிறேன். அது திரு. வைரமுத்து
அவர்கள் நிறுவிய அமைப்பு என்று பிறகு தெரிந்தது. அப்பேச்சுப் போட்டியில் திருவாரூரின் முதன்மையான கல்லூரிகளின் மாணவர்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்றிருந்தனர். அப்போட்டிதான் பிறகல்லூரி மாணவர்களை தோழன்களாகவும் தோழிகளாகவும் அடையாளப்படுத்தியது. அத்தோழமை நெடுங்காலமாகத் தொடர்ந்தும் வருகிறது.
திரு. வைரமுத்து
அவர்களின் 60ஆம் பிறந்தநாளை ஒட்டி நிகழ்ந்த பேச்சுப்போட்டி அது. மிகவும்
எளியவகையில் நடைபெற்றது. ஏழு
தலைப்புகள் கொடுத்திருந்தார்கள். அவற்றுள் ஒன்றில் பேசவேண்டும். திரைத்துறை பங்களிப்புகள் சார்ந்த தலைப்புகளைப் பலரும் பரவலாக எடுக்க இயலும் என்பதால் கண்ணகியா? கருவாச்சியா? எனப் பொருள்படும் தலைப்பைத் தெரிவுசெய்து பேசினேன். அப்போதெல்லாம்
கலையென்ற கடலுக்கு கரைகண்டபுணையாம் எனத்தொடங்கும் தமிழ் வாழ்த்துப்பாடல்தான் பேச்சின் தொடக்கமாக இருக்கும். ஓரளவு
நன்றாகவே பேசியிருந்தேன். எளிதான போட்டி. வென்றபின்
பரிசளிப்போடு முடிந்துவிடும் என்றெண்ணிக் கொண்டிருந்தோம். பரிசறிவித்தனர்.
மோகனப்பிரியாவும் நானும் மாவட்ட அளவிலான வெற்றியாளர்கள். அடுத்தசுற்று மாநில அளவில் கோவையில் ஜூலை12ஆம்
நாள் நிகழவுள்ளது. கலந்துகொள்ளவேண்டுமென்றனர். முதல்முறையாக மாநில அளவிலான பேச்சுப்போட்டி ஒன்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறேன் என்பதே மிகவும் வியப்பாக இருந்தது. மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்பதற்கு 13 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே என்று அவமானமாகவும் இருந்தது.
திருவாரூர் விளிம்புநிலை மாவட்டம். வேளாண்மைதான்
முதன்மைத்தொழில். கலை, திரை, தமிழ், ஆய்வு, இலக்கியம், அரசியல்
எனப் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்தவர்களின் சொந்த மாவட்டம். ஆனால், அவர்கள் யாவரும் திருவாரூரில் மட்டுமே இருக்கவில்லை. தத்தமது துறைகளில் வெற்றியடைய இடம்பெயர்ந்தனர் என்பதை உணர்ந்து செயலாற்ற நெடுங்காலம் எடுத்திருந்தது. திருவாரூருக்கு திருச்சிதான் மண்டலம். பேச்சுக்கு
அதுவரை மண்டலம் தாண்டியதில்லை.
முதல்முறை மாநிலப் போட்டி. கோவையில்
நிகழ்கிறது, அதுவும்
கொடிசியா வளாகத்தில் நிகழ்கிறது. வெற்றித்தமிழர்
பேரவையின் திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளரின் ஊரிலிருந்து ஜூலை 11 இரவு கோவைக்குப் பேருந்து கிளம்புகிறது. அங்கு சென்று அவர்களோடு இணையவேண்டும். போட்டியாளர் கூடுதலாக ஒருவரை அழைத்துவர அனுமதி அளித்திருந்தனர்.
என்சார்பில் திரு.வி.க கல்லூரி
கவிஞ நண்பன் வெற்றிச்செல்வனை அழைத்துக்கொண்டேன். மோகனப்பிரியா
சார்பில் அவரது
அப்பாவை அழைத்துக்கொண்டார்.
நால்வரும் திருவாரூரில் ஏறி கும்பகோணம் பேருந்துநிலையத்தில் இறங்கி, நகரப்
பேருந்துநிலையம் மாறினோம். அப்போதெல்லாம்
கும்பகோணம் அவ்வளவு தூய்மையாக இருக்கும். சிறந்த
நகராட்சிக்கான விருதை வென்றிருந்தது. சிலமணித்துளிகள் காத்திருப்பில் நகரப் பேருந்து வந்தது. அரசுப்
பேருந்து என்பதற்கான பதினோரு பொருத்தங்களும் கச்சிதமாக இருந்தது.
வலங்கைமான் உள்ளடங்க ஊரொன்றில் இறங்கினோம். இரவாகியிருந்தது. தேடிச் சென்று பொறுப்பாளரின் வீடடைந்தோம். அந்த ஊரில் பலரும் வெற்றித்தமிழர் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தனர். ஒரு
பெரிய ஆம்னி பேருந்து தயாராக இருந்தது. ஊர்க்காரர்கள்
பலரும் நிறைய, பேருந்து நிரம்பியதும் புறவழிச்சாலையில் புறப்பட்டது.
மொத்தம் ஏழு தலைப்புகள். மாவட்ட
அளவிலான போட்டியில் பேசிய தலைப்பை மாநிலப் போட்டியில் பேசக்கூடாது. மாநிலப் போட்டிக்கு, “கள்ளிக்காட்டு இதிகாசம் காவியமா? வரலாறா?” எனும் தலைப்பைத் தெரிவு செய்திருந்தேன். எனினும், கள்ளிக்காட்டு இதிகாசம் என் கையிருப்பில் இல்லை. நினைத்தவுடன்
புத்தகம் வாங்குமளவு திருவாரூர் ஒன்றும் பெருநகரம் கிடையாது. இணையதள
விற்பனையும் இன்றிருப்பதுபோல் அன்றில்லை. திரு.வி.க. கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேரா. தனராசன் தம் ஆய்வாளர்கள் செய்தளித்த வைரமுத்து படைப்புகள் மீதான ஆய்வேடுகளை அளித்தது உதவியாய் இருந்தது.
இதற்கிடையே, நெய்வேலி
புத்தகக் கண்காட்சியை ஒட்டி, NLC+தினமணி இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருந்தேன். 2014 ஜூலை 9ஆம்
நாள் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குப் பரிசுபெறச் சென்றிருந்தபோது, கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி
காவியம் உட்பட சில நூல்களை வாங்கியிருந்தேன். அதற்கான பொருளாதாரத்தை அன்றைக்குப் பெற்றிருந்த ஆறுதல் பரிசுத்தொகையும் வெற்றித்தமிழர் பேரவையின் மாவட்டப் போட்டியில் வென்ற பரிசுத்தொகையும் ஈடு செய்தன.
கள்ளிக்காட்டு இதிகாசம் போன்ற நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட நூலை ஒரே
மூச்சில் படிக்கும் வாசிப்புத்திறனெல்லாம் அப்போது இல்லை. அதற்கான
சூழலும் இல்லை. எனினும், இணையத் தமிழ்ச் சமூகம் கைக்கொடுத்தது. பல்வேறு வலைப்பூ மற்றும் இணையதளங்களில் (Blog+Website) இந்தப் படைப்பு மீதான விவாதங்கள் நடந்திருந்தன. அவற்றை முழுமையாக வாசித்ததிலே இதுதான் கதைப்போக்கு என்பதை அறியமுடிந்தது.
(இப்போது, 2021. அன்றிருந்ததைவிட காத்திரமான விவாதங்கள் முகநூலில் நடைபெற்றிருந்தாலும் அவையாவும் முகநூல் தனிக்கணக்குகள் என்பதால் கூகுள் தேடல் இவற்றை அடையாளப்படுத்தாது. எழுத்தாள பெருமக்களுள் பலரும் முகநூலில் எழுதுவதை
அப்படியே விட்டுவிடுகின்றனர். அன்றாடம் சில நேரம் செலவிட்டு,
அதை copy செய்து ஒரு வலைப்பூ தொடங்கி
paste செய்தால், தேடல் உடையோருக்கு
Google Searchஆல் நலம் பயக்கும். தற்காலத்தில் வலைப்பூவில் (Blog) எழுதுபவர்கள் எண்ணிக்கை சமூகவலைதளங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவு. பிறகொரு முக்கியச் செய்தி! நீங்கள் என் வலைப்பூவில்தான் இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.)
எங்கே விட்டோம்! ஆங். ஜூலை 11 இரவு புறவழிச்சாலை
ஆம்னி பேருந்து.
விடிந்தால் போட்டி, இன்னும்
கள்ளிக்காட்டு இதிகாசத்தை படித்து முடிக்கவில்லை. பின்னிரவு வரை பேருந்தின் நைட் லேம்ப் ஒளி கைக்கொடுத்தது. புறஒலிகளைத் தாண்டியும் கேட்ட குறட்டை ஒலிகள் பலரும் உறங்கிவிட்டதை உறுதிப்படுத்தின. அக்கறை உடைய ஒரு பெரியவர் போதும்பா., காலையில நல்லாபேசனும்னா தூங்கணும் என்றார்.
விடியற்காலையில் ஒரு பேருந்து நிலையத்தில் பொறுப்பாளர்கள் சிலரோடு இறக்கிவிட்டனர். அப்பேருந்துநிலையம் பொள்ளாச்சி என பின்னாட்களில்
அங்கு சென்று வருகையில் தெரியலானது. உடனிருந்த
பொறுப்பாளர்கள் கோவை காந்திபுரம் பேருந்துநிலையம் அருகே ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்றனர். அப்படியெல்லாம் பெயர் வைப்பார்களா என்றிருந்தது. Hotel La La. அங்கு குளித்து, உணவு
முடித்து, தயாராகியிருந்தோம். அங்கு தான் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த போட்டியாளர்கள் சிலரும் தங்கவைக்கப் பட்டிருந்தனர்.
அங்கிருந்து போட்டி நிகழுமிடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது மௌலிவாக்கம் கட்டிட விபத்து நிகழ்ந்த காரணத்தினால் கோவையில் பல வணிக
நிறுவனக் கட்டிடங்கள்
மூடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. முதன்மைச் சாலைகளில் விதிமீறி அதிக உயரம் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தால்ல்… தலை சுற்றியது. கொஞ்சம்
எட்டியே நடக்கலானேன். நோட்டீஸ் ஒட்டப்பட்ட கட்டிடங்களைக் காண்கையில்.
கோவையே கோலாகலமாக இருந்தது. திரு. வைரமுத்து பிறந்தநாளையொட்டி மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸ் போர்டுகளுக்கு மாநகராட்சி ஆணை எண் வழங்கப்பட்டிருந்தது. (திருவாரூரில் இத்தகைய நடைமுறை இன்றளவும் (2021) இல்லை). கோவையை, அதன்
எழிலை முதன்முறை பகலில் தரிசிக்கிறேன்.
கோவையின் நட்சத்திர விடுதியொன்றின் வரவேற்பறையில் இருந்தோம். அந்த
வரவேற்பறையில் இசைக்கும் கலைஞர்களின் சிலைகள் இருந்தன. பெயர்
நினைவில் இல்லை. காத்திருந்தோம். இன்னும் காத்திருந்தோம். சில நிமிடங்கள் கழித்து லிஃப்ட் வழியாக எங்களை அழைத்துச் சென்றனர். அதுவும்
தரைகீழ் தளத்துக்கு. வாழ்க்கையிலே
முதல்முறையாக பூமிக்கடியில் / நிலத்துக்கு அடியில் செல்கிறேன். அதுவும்
லிஃப்ட்-இல். தரைக்குக்கீழ் இரண்டாம் தளத்தில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குளிர்மை அரங்கம். ஏனைய
மாவட்டங்களிலிருந்து குழுமியிருந்த மாணவர்கள் ஏற்கெனவே உள்நுழைந்திருந்தனர்.
வழக்கம்போல் இருக்கும் குசல விசாரிப்புகள் நிகழ்ந்தன. பொதுவாக, போட்டியாளர்கள் போட்டிக்குப் பிறகு, இயல்பு
நிலையில் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. மாநிலப்
போட்டியென்பதால் புதியோர் பலரும் அறிமுகமாகினர். ஆனாலும், பலரும்
வெற்றிபெற வேண்டும் என்ற மும்முரத்தில் மற்றவர்களிடம் பேசுவதில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். ஏனெனில், முதல்பரிசு 25,000 உரூபா. அந்தக்
காலத்தில் மிக உயர்ந்த பரிசுத்தொகை அதுவாகத்தான் இருக்கும்.
திரு. மரபின்
மைந்தன் முத்தையா, திரு. கபிலன் வைரமுத்து நடுவர்களாக இருக்க வெற்றித் தமிழர் பேரவை நிகழ்த்தும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி பூமிக்கு அடியில் தொடங்கியது. குலுக்கல்
முறையிலான எண்வரிசைப்படி, பேச அழைத்தனர். பலரும்
திரு. வைரமுத்து
அவர்களுடைய திரைப் பங்களிப்பு சார்ந்த தலைப்புகளையே தேர்ந்தெடுத்திருந்தனர். அத்தகைய தலைப்பில் கவர்ச்சிகரமாக பேசமுடியும். திரைத்துறை சார் தகவல்கள் பலவும் எல்லார்க்கும் தெரிந்திருக்கும். ஆதலால், ஒப்பீட்டளவில்
ஏனையவர்களை விட இவர்களுக்குக் கைத்தட்டல் அதிகம் கிடைத்தது.
தமிழகத்தின் என்றென்றைக்குமான Hot
Topic வேளாண்மை தான். (கடந்த
பத்தாண்டுகளாக திரைத்துறையைப் பீடித்திருக்கும் வேளாண்மை சார்ந்த கருத்தாக்கப் படங்கள் இன்றளவும்(2021) முடிந்தபாடில்லை.) வேளாண்மை நம் மக்களை எளிதில் உணர்ச்சியடையச் செய்யும். உணர்ச்சிகரப்
பேச்சாளர்கள் பலரும் மூன்றாம் உலகப் போர் நாவல் பொருண்மையை மையமிட்டுப் பேசினர். தவிர, சிலர் கண்ணகியா? கருவாச்சியா? என்று பேசினர். உணர்ச்சிமயப்
பேச்சுகள் குளிர்மை அரங்கையே கொதிப்படையச் செய்திருந்தன.
ஏழு நிமிட நிறைவில் மணி அடிக்கப்படும். அடுத்த மூன்று நிமிடத்துக்குள் பேச்சை நிறைவு செய்ய வேண்டும். ஆக
மொத்தம் பத்துநிமிடம். பத்தாவது நிமிட நிறைவில் மற்றொரு மணி அடிக்கப்படும். அதற்கு மேல் பேசுவதற்கு அனுமதியில்லை. அந்தப் போட்டியில் புதுமையான ஏற்பாடு ஒன்றிருந்தது. ஒருவர் பேசிமுடித்தபிறகு, அவர் பேச்சின்மீதான கருத்துகளை நடுவர்கள் வெளிப்படுத்துவர். இது பேச்சாளர்களது திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும்.
நான் பேசவேண்டிய நேரம் வந்தது. பேசினேன். முதல்முறையாக மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் பேசுகிறேன் என்பதால் உண்டாகும் பதட்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க முனைந்தேன். ஏற்கெனவே, பலரும் பேசிவிட்டதால் தொடர்ச்சியாகக் கேட்ட அயர்ச்சி நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருக்கும். அந்த
அயர்ச்சியை நீக்க, அவர்கள்
கவனத்தை ஈர்த்தாக வேண்டும், புதிய
கருத்துகளைத் தந்தாக வேண்டும். இவையாவற்றையும்
கவனத்தில் கொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் காவியமா? வரலாறா? எனும் தலைப்பில் பேசினேன். இணையத்தில்
குறிப்பெடுத்தது, பேருந்தின் உட்புற நைட்லேம்ப் வெளிச்சத்தில் படித்தது, மோகனப்பிரியாவின்
முதன்மைக் குறிப்புகள் (இதேதலைப்பில் மாவட்ட அளவில் பேசியிருந்தார்), மேடையில் தன்னிச்சையாகத் தோன்றும் கருத்துகள் என சீர்மையற்ற கலவையாக பேச்சு அமைந்தது. ஆனால், அது புதியவித சீர்மையை
அளித்தது.
உரை காண்க:
கடந்த பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, பலவற்றைக் கவனத்தில் கொண்டு பேசியதில் நிமிடத்தைக்
கவனிக்கவில்லை. 7 நிமிட நிறைவில் அடித்த மணியை 10 நிமிட நிறைவு மணியாகக் கருதி மூன்று நிமிடம் முன்னதாகவே முடித்துவிட்டேன்.
கீழிறங்கி வருகையில்தான், நண்பர்கள் செய்கை வாயிலாகத் தெரியப்படுத்தினர். என்ன செய்வது முடிந்தது முடிந்ததுதான்.
என் பேச்சின் மீதான கருத்தைத் திரு. கபிலன் வைரமுத்து
அளித்தார். “முதலில் நான் ஒரு மதிப்பெண் இட்டேன், காலம் செல்லச்செல்ல அந்த மதிப்பெண் அதிகரித்துக்கொண்டே சென்றது” என்பதாய் குறிப்பிட்டார்.
கடலில் பயணித்த கப்பலைக் கரைசேர்த்த மாலுமிபோல பேசிமுடித்து
இருக்கை அமர்ந்தேன். அம்பெய்தும்
வரைதான் அதன் பாதையை நாம் தீர்மானிக்க முடியும். எய்திய பிறகு,
அதன் பாதையை அதுவே தீர்மானிக்கும். பேசி முடித்தாயிற்று,
இனி கவலை இல்லை. அந்தப் பேச்சு தக்கதாய் இருப்பின்,
பரிசைப் பெறும். இல்லெனின், எதிர்காலத்தில் பெறலாகும் பரிசுக்குப் பயிற்சியாய் மாறும். கொஞ்சம் சமனிலைப்படுத்தி, ஏற்பாட்டாளர்கள் முன்னமே கொடுத்திருந்த
பண்டங்களைக் கொரிக்கத் தொடங்கினேன்.
நண்பகலுக்குள் பேச்சுப்போட்டி முடிந்தது. நடுவர்களின் மதிப்பெண்கள் கூட்டப்பட்டு மொத்த
மதிப்பெண் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விவரம் வருமாறு.
·
முதல் பரிசு – 25,000 உரூ – சாத்தம்மைப்
பிரியா, திருச்சி (தற்போது உதவிப் பேரா.)
·
இரண்டாம் பரிசு – 10,000 உரூ – வேதவள்ளி,
தஞ்சாவூர் (தற்போது உதவிப் பேரா.)
·
மூன்றாம் பரிசு – 15,000 உரூ - கஜலெட்சுமி,
திருச்சி (தற்போது குடும்பத்தலைவி)
·
ஊக்கப்பரிசு – 5,000 உரூ - தமிழ்பாரதன்,
திருவாரூர் (தற்போது ஆய்வு மாணவர்)
·
ஊக்கப்பரிசு – 5,0000 உரூ – (யாரென்று நினைவில் இல்லை)
கள்ளிக்காட்டு இதிகாசம் குறித்து அப்போட்டியில் பேசிய ஒருவனும்
நான்தான், நன்றாகப் பேசியும் 7 நிமிடங்களில்
உரையை முடித்தவனும் நான்தான். வென்றவர்களுள் இளையோனும் நான்தான்,
ஒரே ஆணும் நான்தான். எல்லாம் இயல்பாக அமைந்துபோனது. அரிஸ்டாட்டிலை வாசித்தபிறகு, தற்செயல் நிகழ்வு, உடனிகழ்வு குறித்த புரிதல்கள் அதிகரித்துள்ளன. ஆதலால், நான் என்று பெருமைப்பட்டவற்றை அடித்துவிட்டேன்.
முதல்முறையாய் மாநில அளவிலான போட்டியில் பங்கெடுத்து, பெருந்தலைகள் பலவற்றைத் தாண்டி பரிசு வென்றது மகிழ்வே. பொதுவாக மூன்றாம் பரிசுக்குப் பிறகு, ஆறுதல் பரிசு என்றே
பலரும் அளிப்பர். மூன்றாம் பரிசுக்கு அடுத்த பரிசு, ஆறுதல் பரிசாக (ஆறுதல் செய்வதாக) இருக்கக்கூடாது, ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டுமென்று
ஊக்கப்பரிசு என்று திரு. வைரமுத்து அவர்கள் பெயரிட்டுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மேடையில் அறிவித்தனர்.
இந்தப் பரிசாளர் பட்டியலைப் பார்த்தால், முதல் நால்வரும் சோழ மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்
என்பது தெரியும். (மற்றொரு ஊக்கப்பரிசு பெற்றவர் கொங்கு மண்டலமாக
இருக்க வேண்டும்). ஏனைய மண்டலத்தினரும்/மாவட்டத்தினரும் சளைத்தவர்கள்
அல்லர். ஆனால், அக்காலத்தில் சோழ
மண்டலம் வலிமையான பேச்சாளர்களைக் கொண்டிருந்தது.
தமிழ் வளர்ச்சித் துறை
(25,000 முதல்பரிசு), இன்றைய தேதியில்
(ஜூலை 13 2021) திமுகவில் இருக்கும் திரு.
பி.பழனியப்பன், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்
66ஆம் பிறந்தநாளுக்காக நடத்திய பேச்சுப்போட்டி (66,000 முதல்பரிசு), மதிமுக மாணவரணி நடத்திய பேச்சுப்போட்டி
(ஒரு இலட்சம் முதல் பரிசு) என பெருந்தொகை கொண்ட
மாநில அளவிலான போட்டிகள் பலவற்றிலும் சாத்தம்மைப் பிரியா அக்காதான் முதலிடம்.
(கதை சொல்லி பவா செல்லதுரை போல், இவரது பேச்சில்
எடுத்தாளும் மாடப்புறா, கருப்புரோஜா கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும்
கேக்கலாம்). மாநில அளவில் பல்வேறு பரிசுகளை வென்ற வேதவள்ளி அக்காவுக்குக்
குரலே போதும். உச்சரிப்பிலேயே அசர வைத்துவிடுவார். குரலும் ஒலியும் தெளிவாக இருக்கும்போது, அதனோடு இயையும்
கருத்தும் அற்புதமாகத்தானே இருக்கும்.
இத்தகையவர்களோடுதான் அன்றைய மேடையைப் பகிர்ந்துகொண்டேன். ஆமாம், வெற்றியாளர்களை
நடுவர்களோடு படமெடுத்துக்கொள்ள மேடைக்கு அழைத்தனர். ஒருவழியாக
நிம்மதிப் பெருமூச்சோடு, உணவுக்குத் தயாரானோம். போட்டிக்குப் பிறகு போட்டியாளர்கள், நண்பர்களாக மாறினாலும்
சின்னதொரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும் எந்த இடத்தில் இடறினோம் என்று.
பொதுவாக இந்த உறுத்தல் முதல்பரிசு பெற்றவரைத் தவிர அனைவருக்குமே இருக்குமென்று
எண்ணுகிறேன். எனினும், யாவையும் மறந்து
அந்தந்த நொடி வாழ்வை அனுபவித்தலே நலம். உணவு அருமை. கற்பூரக் கட்டிகள் எரிய, சூடாக இருக்கும் பாத்திரத்திலிருந்து
நாண் முதலான உணவுகளை பஃபே முறையில் உண்டோம்.
பிறகு, மீண்டும்
லா லா விடுதிக்குப் பயணப்பட்டோம். நன்றாக உறங்கினோம்.
வந்த கனவுகளையெல்லாம் விரித்து எழுதலாம். ஏற்கெனவே,
நீங்கள் 14 நிமிடங்களாக வாசித்து வருகிறீர்கள்.
அப்றம் உங்களுக்கும் அயர்ச்சி வந்திடும் என்ற காரணத்தினால், அவற்றைத் தவிர்க்கிறேன். மாலை வந்தது. மோகனப்பிரியா அப்பாவின் துணையோடு காலாற கோவையின் வீதிகளைச் சுற்றினோம்.
நாட்டார் வழிபாடுகள் உட்புறத் தெருக்களில் உள்ள சிறுகோயில்களில் நிகழ்ந்து
கொண்டிருந்தது. கீழ்/மேம்பாலம் இடையே தொடர்வண்டிப்
போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. கோனியம்மன் கோயிலுக்கு
அன்றைக்குத் தான் திருக்குடமுழுக்கு என்பதாய் ஊரெல்லாம் சுவரொட்டிகள் இருந்தன.
அந்தக்கோயிலின் இருப்பிடமறிந்து அங்கு சென்றோம். பிரசாதம் உண்டு, பொறுமையாக நடைபயின்று லா லா விடுதியடைந்தோம்.
மோகனப்பிரியாவின் அப்பா ஆசிரியர் என்பதாலும் சமூக அக்கறை மிக்கவர்
என்பதாலும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாட வைத்தார்கள். அப்படித்தான், அந்த விடுதியில்
குழுமியிருந்த முன்பறியா மாணவர்களுடன் பேசத்தொடங்கினோம். களைப்பு
தந்த தூக்கத்தை இருட்டடிப்பு செய்து கலந்துரையாடினோம் நடுஇரவு வரை. ஒருவழியாக நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியபிறகே, அறை சென்று உறங்கினோம்.
காலை முன்கூட்டியெழுந்து தயாராகியாச்சு. புதுச்சட்டை வாங்கியிருந்தேன், ஒருவேளை பரிசுபெற நேர்ந்தால், அணிந்துகொள்ளலாம் என்று.
அதை அணிந்தபிறகு, வெளியேறி வாகனமேறி போக்குவரத்து
நெரிசலூடே கொடிசியா வளாகம் சென்றோம். ஆமாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்த அதே கொடிசியா வளாகம். அங்குதான் நிகழ்வு நடைபெறத் தயாராய் இருந்தது. வாகனம்
விட்டு இறங்குகையிலே திரைத்துறை, அரசியலுலகு சார்ந்த முன்னணி
ஆளுமைகள் எதிர்ப்பட்டனர். எல்லாரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக்கொண்டிருப்பதாய்
தெரிந்தது. அப்போது வரை எனக்குத் தெரியவில்லை யார் வரப்போகிறார்
என்று.
அப்படியோரு வளாகத்தை அதுவரை நேரில் கண்டதில்லை. பெரிய நீண்ட வளாகம். பொள்ளாச்சி
பேருந்துநிலையத்தில் விட்டுச்சென்ற, ஆம்னி பேருந்தில் இருந்த
திருவாரூர்க்காரர்களை அடையாளங்கண்டு அவர்களோடு இணைந்தோம். பரிசு
அறிவிக்கப்பெற்றதை அவர்கள் அறிந்திருந்ததை அவர்கள் தெரிவித்த வாழ்த்துகள் தெரியப்படுத்தின.
அவர்களுள் ஒருவர், “யார் வரப்போறாங்க தெரியுமா”
என்ற கேட்க, அதற்குள்ளாக வேறொருவர் “அப்துல்கலாம் வர்ராறு” என்றார். அவர்ட்ட பரிசு வாங்குறதுலாம் பெரிய விசயம் என்று இன்னொருவர் சொல்லுமுன்னமே
கற்பனைகள் எங்கெங்கோ சென்றன.
ஆனால், அதற்கெல்லாம்
வாய்ப்பற்ற சூழலே அங்கிருந்தது. அவ்வளவுபெரிய வளாகம்.
வளாகம் நிரம்பிய மனிதர்கள். மேனாள் குடியரசுத்
தலைவருக்கான ப்ரொடொகால் வேறு. நாங்கள் அரங்கத்தின் பிற்பகுதியில்
இருந்தோம். பரிசு பெறுவோரை மேடைக்கு ஏற்றுவது அவ்வளவு எளிதன்று
என்பதை, முன்பு பங்கேற்ற பரிசளிப்பு நிகழ்வுகளின் அனுபவங்களிலிருந்து
அறிவேன். இருக்கட்டும், அப்துல்கலாம் அவர்களின்
பேச்சை நேரில் கேட்கும் வாய்ப்பாவது கிட்டியதே என்று மகிழ்ந்தேன்.
மேதகு அப்துல்கலாம் அவர்கள் வருகை தந்ததும் காலை அமர்வு தொடங்கியது. பிறநாடுகளிலிருந்தும் சிறப்பு விருந்தினர்கள்
வந்திருந்தனர். குழந்தமைக் குரலோடு பேச்சைத் தொடங்கினார் ஏபிஜே.
அரங்குக்கு இருபுறமும் இருந்த திரையில் அவரது உருவம் மிகப்பெரியதாக இருந்தது.
எட்டி இருந்து பார்த்தாலும் எட்டி இருந்து பார்ப்பதைப் போலவே தோன்றியது
அந்தத் திரையும். ஏற்கெனவே தயாரித்து வைத்த உரையை மக்களுக்கு
அளித்துக்கொண்டிருந்தார். கவிஞர்கள் திருநாள் என்ற பொருண்மை தரப்பெற்றிருந்ததால்,
புறநானூறு-திருக்குறள் இவற்றிலிருந்து மேற்கோள்
குறிப்பிட்டு உரையாற்றினார். இத்தகு பெரியவர்களின் பேச்சில்,
சராசரி பேச்சாளர்கள் பயன்படுத்தும் பஞ்ச் வசனங்கள் இருப்பதில்லை.
கருத்துகளே நிறைந்திருக்கும். செறிவான ஒன்றாகவே
அமைந்திருந்தது. கவிஞர் விழாவில் விஞ்ஞானிக்கென்ன வேலை என்ற அடிப்படைக்கேள்வி
எழாமல் இல்லை. ஒரு வாசகராக, இலக்கிய நுகர்வோராக,
கலை இரசிகராக அப்துல்கலாம் அவர்கள் தன் கருத்துகளை முன்வைத்திருந்தார்.
(கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எடுக்கப்பட்ட நிகழ்விலும்
அப்துல்கலாம் அவர்கள் பங்கேற்று உரையாற்றிருந்ததை பின்னாட்களில் அறிந்தேன்).
பேசி முடித்து, முதன்மை விருந்தினர்கள் உரை நிறைவுற்றதும்
அப்துல்கலாம் அவர்கள் விடைபெறுவதாக, விழா தொகுப்பாளர் அறிவித்தார்.
அவரிடம் பரிசுபெறும் வாய்ப்பு தவறியது. வந்தமர்ந்த
கூட்டத்தில் பெரும்பகுதி அவரைக்காண வெளியே சென்றது. முன்னாள்
குடியரசுத்தலைவருக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் சூழ, அணியமாய்
இருந்த அம்பாசடர் காரில் ஏறிச் சென்றார்.
கொடிசியா இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. அடுத்தடுத்த அமர்வுகள், சிறப்பிப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்தன. நாகப்பட்டிணத்திலிருந்து வந்திருந்தோர் பரிசுபெற்றதை அறிந்து, போட்டியில் பேசியதன் கருத்துச் சாரத்தைக் கேட்டறிந்தனர். அப்போது, அங்கொருவர் இருந்தார். வாஞ்சையோடு உரையாடினார். கல்வி, கலை, கவிதை, பேச்சு தொடர்பான உரையாடலாகக்
கட்டமைத்தார். அவரை யாரென்று அதுவரை அறிந்ததில்லை. அவரை “முக்கியமான கவிஞர்” என்று
அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர். அவர் வேறு யாருமில்லை
“கொஞ்சம் கொஞ்சமாய் சாகவேண்டுமென முடிவெடுத்தபிறகு, காதல்
சரியான வழிதான்” எனப்பொருள்படும் கவிதையை எழுதிய, பிறந்தநாள் வாழ்த்துப்பாடலைத் தமிழில் இயற்றிய, தற்காலக் கவிஞர்களின் தாய்வீடு
அறிவுமதி அவர்களே.
இதற்கிடையே மதிய உணவும் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதுபோன்ற பெருநிகழ்வுகள் திட்டமிட்டபடி நடத்திமுடிப்பது
சவாலானது. ஒருபுறம் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்க மறுபுறம்
மதிய உணவு நடந்தது. கோவையில் உள்ள பள்ளிகளுக்கு திரு. வைரமுத்து
அவர்களின் அனைத்துப் படைப்புகளடங்கிய பெட்டி தரப்பெற்றன. பல்வேறு
இலக்கிய நல உதவிகள் வழங்கப்பெற்றன. அதோடே பரிசளிப்பும்.
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மட்டுமே மாணவர் பெயர், கல்லூரி,
ஊர் விவரங்களோடு அறிவிக்கப்பெற்றன. ஊக்கப்பரிசுகள்
வெறுமனே அறிவிக்கப்பெற்றன.
வருத்தம். அவ்வளவு
பெரிய மக்கள் திரள், கொடிசியா வளாகம், எனக்காக
இல்லாவிடினும் என் கல்லூரி, ஊருக்கேனும் கைத்தட்டல் கிட்டியிருக்கும்.
எனினும், அவ்வளவு பெரிய மேடையில் பரிசு வாங்கச்
சென்றதே பெருவிடயம் அப்போதைய எனக்கு. எதிரே அவ்வளவு
கேமிராக்கள் ஒளிர சான்றிதழும் பணமுடிப்பும் ஊக்கப்பரிசாக அளித்தார் திரு. வைரமுத்து
அவர்கள். ஐயாயிரம் உரூபா பணத்தை ஒரு பொற்கிழி வடிவ துணியுள்
(அதுவும் பொன்னிறத்தில்) வைத்தளித்தார்.
கையெழுத்துத் தனித்துவத்திற்கு/அழகியலுக்கு
Typography என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கையெழுத்துத்
தனித்துவமாக இல்லாதோரும் கையொப்பத்தைத் தனித்துவமாகக் கொண்டிருப்பர். வைரமுத்து அவர்களின் கையொப்பம் தனித்துவமானது அல்லது கவித்துவமானது.
அவரது கையொப்பமிட்ட சான்றிதழும் பொற்கிழியோடும் மேடையிலிருந்து விடைபெற்றேன்.
பரிசுபெற்ற படத்தை அரங்குக்கு வெளியே பிரிண்ட் எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தனர். பெறச்சென்றால் தொகை என்றனர். ஒளிப்படம் எடுப்பதை ஒப்பந்தம் செய்த நிறுவனம் அவற்றை விற்பனையாக மாற்றியது.
என்னுடைய பரிசளிப்புப் படத்தைத் தேடி எடுத்தனர். அந்தக் கோப்பின் எண்ணைக் குறிப்பிட்டு, அச்சிட்டுத்
தருவதற்கு அவர்கள் கேட்டது 100 உரூபா என்று நினைவு. (அந்தக்காலத்தில் பரிசுபெற்ற படத்தை ஐம்பது உரூபா கொடுத்துப் பெறுவதே மிக அதிகம்
திருவாரூரில்). கொடுக்க மனமின்றி படம் பெறாமலே வந்துவிட்டேன்.
இருப்பிடம் வந்தால் பரிசு வென்றவர்கள் எல்லாம் கையில் படத்தோடு இருந்தனர்.
வாய்ப்பை விட்டுட்டோமோ என்று எண்ணம் மட்டும் ஓய்ந்தபாடில்லை.
(பரிசுபெற்ற படம் பெறுவதில் பலவித அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன்.
குறிப்பாக, 2015இல் கலைஞரிடம் பரிசு பெற்ற படத்தை
உடனடியாகப் பெறமுடியாமல் மாதமொன்று காத்திருந்து, அறிவாலயத்திலிருந்து
கோபாலபுரம் நடந்தேசென்று புகைப்படக் கலைஞரைக் கண்டறிந்து, அவரிடம்
இருநூறு உரூபா கொடுத்தபிறகு தான் பெறமுடிந்தது. படம் பெறுவது குறித்து, பிறகு
விரிவாகப் பதிவு செய்கிறேன்)
எப்போதுமே, பரிசு
பெற்ற பிறகு, நிம்மதியாய் இருக்கலாம். வீடு/ஊர் திரும்புதல் ஒன்றே கடமை. பிற்பகலுக்குமேல்,
கருத்தரங்க அமர்வுகள் நிகழ்ந்தன. பேசவந்த ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு படைப்பே தலைப்பு. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகள்,
பேரா. பர்வீன் சுல்தானா, திரு. ஸ்டாலின் குணசேகரன் எனப் பல ஆளுமைகளை அந்த மேடையில்தான் முதன்முதலில்
நேரில் கண்டேன். பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் முதலான பல முன்னணி பத்திரிக்கை,
ஊடகத்துறையினரும் வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தனர். அவர்களையும் அங்குதான் நேரில் கண்டேன். அப்போதெல்லாம்
பேச்சாளர்கள் பேசும் அனைத்துமே புதிதானதாகத் தோன்றும். யாவற்றையும்
குறிப்பெடுக்கத் தோன்றும்….
அன்றைய நாள் மாலை வந்தது.
திரையுலகினரின் பாராட்டு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. இயக்குநர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார் என்ற நான்கு தலைமுறை இயக்குநர்களின்
பங்கேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. இதில்
கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் வரவில்லை. (லிங்கா படப்பிடிப்பில் இருந்திருக்கிறார் என்று
தகவல். அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி ஒலிவாயிலாக எங்களை வந்தடைந்தது). கே. பாலச்சந்தர் அவர்கள் தமக்கேயுரிய முதிர்ந்த நடையில் வாழ்த்தினார். அடுத்து பாரதிராஜா அவர்கள் பேசத்தொடங்கினார். வைரமுத்து அவர்களுடன் இளமைப் பருவத்தில்
நிகழ்ந்த கசப்பான உணர்வுகளை நினைவுபடுத்திப் பேச்சைத் தொடர்ந்தார். அடுத்து மணிரத்னம்
அவர்களுடைய உரை அமைந்தது.
விழாவின் நிறைவாக, கவிஞர் வைரமுத்து பேசினார். பாரதிராஜா அவர்களுக்குப்
பதில் தருவதாய் அமைந்தது அதன் தொடக்கம், “நமக்கிடையேயானதைத் தனியறையில் பேச வேண்டும்,
பொதுவில் பேசினால் பொதுவில் பதிலளிப்பதே முறையானது” என்று அவர் தன் தரப்பு நியாயத்தை
எடுத்து வைத்தார். இருவரும் மேடையின் இருபுறத்திலும் இருந்தனர். வழக்காடு மன்றம்போலத்
தோன்றியது. ஒரு கட்டத்தில் “வைரமுத்து, இது உன்னுடைய விழா, உன்னுடைய இரசிகர்கள். வாழ்த்துகள்.
வருகிறேன்” எனப் பொருள்படுமாறு கூறிவிட்டு உடனடியாக மேடையைவிட்டு இறங்கிச் சென்றார்
அல்லது வெளிநடப்பு செய்தார்.
அன்றைய நிகழ்வை அவர் நெகிழ்ச்சியாகக் கொண்டாடினார். ஆனால், மகிழ்ச்சியாகக்
கொண்டாடினாரா என்பது ஐயமே. அவர் நன்றி சொன்னவிதம் இன்றளவும் நினைவுள்ளது. அறுபதாண்டுகள்
வாழ்ந்த மனிதன், தன் துறையில் உச்சம் தொட்ட ஒருவன் எத்தனை பேருக்கு நன்றி சொல்லியாக
வேண்டும்… ஆனால், அவர் தனது உடலுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டார்.
இரசிகர்களுக்கும் மக்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி சொல்ல அந்தியில் நிறைவடைந்தது
நிகழ்வு.
கொடிசியாவிலிருந்து வெளியே வந்தால் அத்தனை வாகனங்கள் புறப்படத்
தயாராய் இருந்தன. திருவாரூர் மாவட்டத்தினர் சீக்கிரம் ஆம்னி பேருந்தில் ஏறச் சொல்லினர்.
ஆனால், அந்தப் பரிசு பெற்ற படத்தைப் பெறாமல் போவது சரியாய்ப் படவில்லை. இருங்கள் வரேன்
என்று சொல்லி, குறித்து வைத்த எண்ணைக் (AMS_0036) கொண்டு, படங்கள் பிரிண்ட் எடுக்கும்
இடத்திற்கு சென்றால், அங்கு தந்த மின்சார சப்ளை நிறுத்திவிட்டனர். இனி வழியில்லை போலும்
என்று, எண்ணிக்கொண்டிருக்கையில், மின்னஞ்சல் முகவரி கொடுங்க ஊருக்குப்போய் அனுப்புறோம்
என்றனர் (இப்போது 2021இல் இருப்பதுபோல், வைஃபை, மோடம், மொபைல் டேட்டா பரவலாக்கம் அப்போது
இல்லை என்றறிக). பென்டிரைவ் இருக்கு. ஏத்தித் தரலாமா? என்று கேட்க, சரி கொடுங்க என்று
வாங்கி உடன் High Resolution படம் ஏத்திக்கொடுத்தனர். 100 உரூபா பணம் எடுத்துக்கொடுக்க
பிரிண்ட் எடுக்கலல்ல. வேண்டாம்பா என்றனர். (அந்தப் புகைப்பட நிறுவனத்தை சென்னையில்
பின்னாளில் சந்தித்து நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன். அவர்கள் இருநாள் எடுத்த காணொளிப்
பதிவுகள் ஒருமணிநேர நிகழ்ச்சியாக சன் டிவியில் ஞாயிறு ஒன்றில் ஒளிபரப்பானது)
ஆம்னியில் ஏற, நெடுஞ்சாலையில் வேகமெடுக்க, விடியலில் ஊர்வந்து
சேர்ந்தோம்.
- #தக | 13 சூலை 2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக