நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

yuva scheme - காயம்பட்ட முயற்சிகளும் பதில்களற்ற கேள்விகளும்

#yuva #scheme #காயம்பட்ட_முயற்சிகளும் #பதில்களற்ற_கேள்விகளும்

குடிமைப்பணிகள் தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களும் என் வளர்ச்சியில் அக்கறை உள்ளோரும் யுவா திட்டம் அறிவிக்கப்பெற்ற சில நாட்களிலேயே அதன் விவரங்களை அனுப்பி வைத்தனர். தவிர, பேசியில் இருந்த mygov செயலியும் யுவா திட்டம் குறித்த அறிவிப்பை வழங்கியது.



https://innovateindia.mygov.in/yuva/ என்ற இணையப் பக்கத்தில் யுவா திட்டம் குறித்த விவரங்கள் இடம்பெற்றன. யுவா திட்டத்தின் பொருண்மை: விடுதலைப் போராட்டம். திட்டம் குறித்து, முதலில் சிறுவிளக்கமே இடம்பெற்ற போதிலும், காலப்போக்கில் விரிவான அறிமுகம் தரப்பெற்றது. சூன் மாதம் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வில் முழுமையாக ஈடுபட்டமையால், இத்திட்டத்தில் பங்கெடுப்பது குறித்துச் சிந்திக்க இயலவில்லை.

சூலை மாதத் தொடக்கத்தில், யுவா திட்டத்திற்கு எழுதலாம் என்ற எண்ணம் வந்தது. நான் வளர்ந்த நிலப்பரப்பான கீழத்தஞ்சையில் நிகழ்வுற்ற விடுதலைப் போராட்டத்தைப் பதிவு செய்வோம் என்று முடிவெடுத்தேன். கீழத்தஞ்சையில் நிகழ்ந்த விடுதலைக்கான போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று 1930இல் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகம். இந்த உப்பு சத்தியாகிரகம் குறித்துத் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் மேடையிலும் தனி உரையாடலிலும் பேசக் கேட்டிருக்கிறேன்.

தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் அன்றைய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. 1930 ஏப்ரம்13 அன்று திருச்சியில் நடைபயணத்தைத் தொடங்கிய போராட்டக் குழுவினர், தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வாயிலாக 1930 ஏப்ரல் 28 அன்று வேதாரண்யத்தை வந்தடைந்தனர். இடைப்பட்ட நாட்களில் போராட்டக் குழுவினர் அடைந்த இன்னல்கள் ஏராளம். ஆங்கிலேயர்கள் விதித்த மிகுந்த கட்டுப்பாடுகளைத் தாண்டி, இந்த உப்பு சத்தியாகிரகம் நிகழ்வதற்கு எளிய மக்களின் பங்கு அளப்பரியது. 1930 ஏப்ரல் 30ஆம் நாள் ஆங்கிலேயர்களின் பார்வையிலிருந்து தப்பித்து, சக போராட்டக்காரர்கள் இராஜாஜியை அழைத்துச் சென்று உப்பு எடுக்க வைத்து உப்பு சத்தியாகிரகத்தை வெற்றிபெறச் செய்ததெல்லாம் சுவாரசியமான திரைப்படத்தின் இறுதிக்காட்சியாக வைக்கத்தக்கது. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் வெற்றியடைய உறுதுணையாக இருந்தவர் விடுதலைப் போராட்ட வீரர் வேதரத்தினம்.


உப்பு சத்தியாகிரகத்துக்கு இராஜாஜி தலைமையேற்றமை-அதனையொட்டிய அரசியல், உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் தூத்துக்குடியை விட்டுவிட்டு, வேதாரண்யத்தைத் தேர்வு செய்தது-அதன்பின்னணி, காவிரி டெல்டா நிலப்பரப்பு-கீழத்தஞ்சை வாழ்வியல், உழவியல்-உப்பளவியல், அக்காலத்திய கல்விமுறை, பண்பாடு, போக்குவரத்து இவற்றை அடியொற்றி வரலாற்றுப் புனைவு-புதினமாகப் படைப்பை அளிக்க எண்ணினேன்.

திருவாரூர் கடைத்தெருவில் உள்ள சக்தி மணிப்பொறியகத்தின் உரிமையாளர் சக்தி செல்வகணபதி அவர்கள் ஆண்டுதோறும் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரகத்தின் நினைவைப் போற்றும் வகையில் குறிப்பிட்ட நாட்களில் பயணம் மேற்கொள்வார். அவரிடம் முதற்கட்டமாகத் தரவுகள் திரட்டினேன்.

அடுத்தகட்டமாக, 13.07.2021 அன்று வேதாரண்யம் சென்றேன். வேதாரண்யத்தில் தெரிந்தவர் ஒருவரின் உதவியோடு களப்பயணம் மேற்கொண்டேன். உப்பளங்களில் உப்பு எடுக்கும் செயல்முறையையும் உப்பளர்களின் வாழ்வியலையும் நேரடியாகக் கண்ணுற முடிந்தது. மாலைக்குப் பிறகு, 1930களில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகத்தின் நினைவைப் போற்றும் நினைவுத்தூண் பகுதிக்குச் செல்ல விரும்பினேன். உள்ளூர் வாசிகள் அங்கு செல்ல வேண்டாம். சாலை மிக மோசமாக இருக்கிறது என்று கூறினர். இவ்வளவு தொலைவு வந்துவிட்டு, வரலாற்று நிகழ்வு நடந்த ஓரிடத்தைப் பார்க்காமல் போக மனமில்லை. உதவிக்கு உடனிருந்தவரோ, மோசமாகத்தான் இருக்கிறது எனினும் சென்று வரலாம் என நம்பிக்கை அளித்தார்.

மிகமோசமான அந்தச் சாலையில் பயணித்து, வழிமாறிச் சென்று, ஒருவழியாக உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண் உள்ள பகுதியை அடைந்தோம். 1950ஆம் ஆண்டு இந்த நினைவுத்தூண் நிறுவப்பெற்றுள்ளது. நினைவுத்தூணுக்கு எதிர்ப்புறம், கான்கிரீட் கூரை வேயப்பட்ட ஒரு கூடம் உள்ளது, நினைவுத்தூணுக்குப் பின்புறம் பாதி-கட்டப்பட்டு முடிக்கப்பெறாத கட்டிடம் ஒன்றுள்ளது. அங்கு ஒளிப்படங்கள் எடுத்தபிறகு திரும்புகையில், மாலை வந்துவிட்டது.


திரும்பி வருகையில், அந்த மோசமான பாதை எங்களையும் விட்டுவைக்கவில்லை. மோட்டார் வாகனத்தில் பொறுமையாகச் சென்ற போதினும் கண்ணிமைக்கும் நேரத்தில் சறுக்கி, ஒரு பக்கமாக விழுந்தோம். வண்டியை இயக்கியவருக்குக் கை, கால்களின் வெவ்வேறு இடங்களில் காயம்பட்டு இரத்தம் வழிந்தது. எனக்கு வலதுகாலில் அடிப்பட்டது. (வண்டியை இயக்கியவர் வேட்டி அணிந்திருந்ததால் காயம் பலமாக ஏற்பட்டது. நானோ கடல்நீரில் கால்நனைத்தபோது, ஈரம் ஏறிய ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததால் பலத்த காயத்திலிருந்து தப்பித்தேன்.)

அந்த மோட்டார் வாகனம் கோட்டம் விழுந்துவிட்டது. அவரைக் காரில் ஏற்றி வீடு சேர்ந்தோம். முதலுதவிக்குப் பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். என் அழைப்பின்பேரில் வந்து அவருக்குக் காயம் ஏற்பட்டு விட்டதென்று நானும், எனக்கு அடிபட்டுவிட்டதென்று அவரும் வருத்தமுற்றோம். இன்னமும் என் வலது கணுக்காலில் வலி இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் இந்நாளில் (10.08.2021) அவரிடம் விசாரித்தபோது, சர்க்கரை நோய் பாதிப்பால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் முழுமையாக ஆறவில்லை என்பதைத் தெரிவித்தார்.

நிற்க, 13.07.2021 அன்று வேதாரண்யத்திலிருந்து திரும்புகையில் கருப்பம்புலம் கடைத்தெருவில் ஆசிரியர் பாலாஜி அவர்கள், தற்போது பதிப்பில் இல்லாத அரிய நூல்களை அளித்து உதவினார்.

இதற்கு அடுத்த கட்டமாக, திருவாரூர் கழகப்பள்ளியில் பயின்ற 80, 85+, 90+ அகவையுடையவர்களின் இளமைக்கால (இந்திய விடுதலைக்கு முற்பட்ட) வாழ்வனுபவங்களைத் திரட்டினேன்.

இவ்வாறு திரட்டிய அனைத்துத் தரவுகளையும் தொகுத்தபிறகு, முக்கியக் கதாப்பாத்திரங்களையும் கதை செல்லும் போக்கையும் கட்டமைத்தேன். யுவா திட்டத்திற்குப் படைப்பின் முன்மொழிவு அனுப்ப வேண்டும். ஆய்விற்கான முன்மொழிவு அறிவேன். படைப்பிற்கான முன்மொழிவு குறித்த அனுபவமின்மையால், மூத்தவர்கள் சிலரின் அறிவுரை பெற்றேன். அதனடிப்படையில் முன்மொழிவு தயாரித்தேன். இவையாவற்றையும் செய்துமுடிக்க சூலை 31 வந்தது.

யுவா தளத்திற்குள் சிலநாட்களுக்கு முன்பே சென்று, எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொண்டேன். எளிய வழிதான், வயதுக்கான சான்றிதழ் + படைப்பின் முன்மொழிவு அளித்தால் submit ஆகிவிடும். சூலை 31 இரவு பதிவேற்றத் தொடங்கினேன். mygov தளத்துடன் இணைந்திருக்கும் எனது மின்னஞ்சல் முகவரி, பேசி எண் அனைத்தும் default ஆக இத்தளத்தில் இடம்பெற்றது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், படைப்பின் முன்மொழிவைப் பதிவேற்றி submit என்பதைச் சொடுக்கினால், பேசி எண்ணை மாற்றச் சொன்னது.

பேசி எண்ணில் 91 என்ற முன்னொட்டு இருக்கிறது. பத்து எண்ணுருக்களைத்தான் யுவா தளம் ஏற்றுக்கொள்ளுமாம். (யுவா திட்டத்திற்கு விண்ணப்பித்த ஒருவர் பத்து எண்ணுருக்கள் கொடுத்துதான், பதிவு செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்தபிறகே இதனை எழுதுகிறேன். 91 என்ற முன்னொட்டுடன் யாரேனும் பதிவு செய்திருப்பின் தெரியப்படுத்துங்கள்). சரி, என் பேசி எண்ணின் முன்னொட்டாக இருக்கும் 91 ஐ நீக்கலாம் என்றால் யுவா திட்டத்தின் https://innovateindia.mygov.in/yuva/ தளம் பேசி எண்ணையோ, மின்னஞ்சல் முகவரியையோ திருத்தும் வாய்ப்பைத் தரவில்லை. மீண்டும் mygov தளம் சென்று திருத்தம் மேற்கொள்ள வேண்டும். வேறொரு நாட்டுக்குச் சென்றுள்ளேன் என்று நாட்டிற்குரிய பேசிஎண் குறியீட்டை மாற்றலாம். ஆனால், முன்னொட்டை எப்படி நீக்க முடியும் என்ற ஐயம் எழுந்தது. இதில் இப்போது கை வைத்தால், வெவ்வேறு சிக்கல்களுக்குக் கொண்டுசெல்லும் என்று தோன்றியது. அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது. (mygov இல் முன்னொட்டை நீக்க முடியவில்லை)

நண்பர்களின் பேசி எண், மின்னஞ்சல் முகவரி கொடுத்து otp வைத்து கணக்குத் தொடங்கி உள்நுழைந்து பதிவு செய்யலாம். ஆனால், யாரிடமாவது இப்போது கேட்டால், முதலில் போலி அழைப்பு என்றே கருதுமளவு ஏமாற்றுப்பேர்வழிகள் (fake profile, fraud, spam calls) பெருகிவிட்டனர். வீடியோகால் செய்து, ஆதி முதல் அந்தம் வரை விளக்கிப் பேசியாக வேண்டும். உண்மையை விளம்பி, நண்பரை நம்பச் செய்யலாம் அல்லது முன்மொழிவை அவர்களுக்கனுப்பி, அவர்களையே பதிவேற்றச் செய்யலாம். மனம் ஒப்பவில்லை. எனினும், கேட்கையில் “நெட் இல்லை, பயணத்தில் இருக்கிறேன், கணினி இல்லை, இதெல்லாம் தெரியாது, காலையில் செய்யட்டுமா” போன்ற பதில்களே கிட்டின.

இதற்குமேல் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. (வீட்டில் உள்ளோர் ஏற்கெனவே mygov பயன்படுத்துவதால், அவர்களது கணக்கின்வழி உள்நுழைந்தாலும் இச்சிக்கலுக்குத் தீர்வு கிட்டாது). இதற்கிடையிலும் யுவா தளத்தில் பதிவேற்றும் முயற்சியில் இருந்தேன். கடைசி முயற்சியும் தோல்வியடையும் வண்ணம் submission closed என்று வந்தது.

உடனடியாக, NICஇன் சேவை மையத்திற்கு 1800111555 அழைப்பு விடுத்து, என்னுடைய சிக்கலை விளக்கமாகச் சொன்னேன். மிகப்பொறுமையாகக் கேட்ட எதிர்முனையில் இருந்தவர் புகாரைப் பதிவு செய்து அதற்கான டிக்கெட் எண்ணை மின்னஞ்சல்வழி அனுப்பினார். அவரது கனிவான பேச்சும் உடனடிச் செயல்பாடுகளும் விடியலில் தீர்வு கிடைத்திடும் என்றிருந்தது. ஆனால், அடுத்தநாள் மாலைவரை எந்தத் தகவலும் இல்லை. இரவு 8 மணியளவில் உங்களுடைய குறை தீர்க்கப்பட்டுவிட்டது. அதனால், உங்கள் டிக்கெட்டை மூடுகிறோம். நாங்கள் அளித்த தீர்வில் நீங்கள் திருப்தி அடையவில்லையென்றால், மீண்டும் உங்களுடைய டிக்கெட்டைத் திறக்கலாம் என்று மின்னஞ்சல் வந்தது.

சேவை மையத்திற்கு மீண்டும் பேசியபோது, அது தானியங்கி மின்னஞ்சல் என்றும் உங்களது கோரிக்கை உரிய குழுவுக்கு அனுப்பப்பெற்றுள்ளது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரியப்படுத்தினர். எனினும், உரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக அளித்து, என்னுடைய டிக்கெட்டை மீண்டும் திறந்தேன்.

அடுத்தடுத்த நாட்களில் இரவு 8 மணியளவில் உங்களுடைய டிக்கெட் மூடப்பட்டுவிட்டது என்று மின்னஞ்சல் வரும். அவர்கள் ஒருமுறை கூட தீர்வை அளிக்கவில்லை. என் அதிருப்தியை எழுத்துப்பூர்வமாக அளித்தும், அதனை மேற்பார்வையாளர் forward செய்தும் எப்பயனும் இல்லை. “இந்த முயற்சி எடுத்துள்ளோம்/முடியும்/முடியாது,” என்று சொல்லிவிட்டால், தேவலாம். இதோ அதோ என்று அவர்கள் கடைசி வரை ஒரு தீர்வுமே அளிக்கவில்லை. இந்த அர்த்தமற்ற செயலைச் செய்வதற்கு வெறுப்பாக இருந்தது. ஆகஸ்ட் 7ஆம் நாள் உங்கள் டிக்கெட் மூடப்பட்டு விட்டதென வந்த மின்னஞ்சலைத் திறந்துகூடப் பார்க்கவில்லை.

இதற்கிடையில், போட்டியை ஒருங்கிணைக்கும் NBTஇன் தலைமை அலுவலகத்திற்கு முயற்சிக்கையில் அழைப்பு செல்லவேயில்லை. மண்டல அலுவலகத்திற்கு முயற்சிக்கையில் அழைப்பு எடுக்கப்பெறவே இல்லை.

யுவா விற்கு முயற்சித்த பலருக்கும் இதுபோன்ற சிக்கல் இருப்பதாகவும் அறியமுடிந்தது. இதுகுறித்த முறையான வழிகாட்டலை யுவா தளமோ NBT அமைப்போ வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எதுவுமே செய்யவில்லை. முறையாகப் புகாரளித்தும் அதுகுறித்து NIC எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது எடுத்த நடவடிக்கைகள் குறித்து எந்தத் தகவலும் அளிக்கவில்லை.

இப்பதிவின் நோக்கம் :  எவ்வளவு முயற்சித்தும் படைப்பின் முன்மொழிவைப் பதிவேற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதைத் தெரியப்படுத்துவதே. 

போட்டியிட்டுத் தோற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். எல்லா முயற்சிகள் எடுத்தும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்காமல் தோற்கடிக்கப்படுவதை வெறுக்கிறேன்.

முதல்முறையாகச் சிறுகதை எழுத முயன்றேன் 2013இல். எனது சிறுகதையொன்று முதல்முறையாகப் பிரசுரமானதோ 2020இல் அதுவும் ஒரு இலட்சம் உருபா வெற்றியுடன்.

முதல்முறையாகப் புதினம் எழுத முயன்றிருக்கிறேன் 2021இல்…

-தக | 10.08.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக