தாலிபான்கள் அமைதிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சோதிக்கும் அமெரிக்கா.
February 7, 2020 Commentary
(தி இந்து பத்திரிக்கையின்
சிறப்பு நிருபர் கல்லோல் பட்டாச்சர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – தமிழ்
பாரதன்)
அமெரிக்காவும், தாலிபான்களும்
சமாதான உடன்படிக்கை குறித்த இழுபறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவாக, தற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான
காலக்கெடுவை வெவ்வேறு தேதிகளில் அறிவித்து
வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் சமாதான முன்னெடுப்புகள் மிக நெருக்கடியான
கட்டத்தை எட்டியுள்ளன. தாலிபான்களுடன் தொடர்பு கொள்ளும் நுட்பமான பணியை மேற்கொள்ள
அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், சிறப்புப் பிரதிநிதியாக சல்மே
கலீல்சாத்தை நியமித்ததிருந்தார். அதிலிருந்து பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்த இரு
தரப்பினருக்கும் இடையிலான நம்பிக்கையைப் போர் நிறுத்தம் சோதிக்கும். இருப்பினும், ஆப்கானிஸ்தான்
பகுதியில் போரில்இரு தரப்பினரும் சிக்கிக் கொண்டுள்ளனர்.
போர்
நிறுத்தம் பத்து நாட்களுக்கு இருக்க வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. ஆனால்
தாலிபான்கள் அதற்கு ஏழு நாட்கள் கேட்டனர். இத்தகைய பேரம் பேசுதல், இருதரப்பினருக்கும்
இடையேயான பரிவர்த்தனைகளின் ஒரு அங்கமாகும்.
2019 செப்டம்பரில் பேச்சுவார்த்தைகளில்
அதிரடியான திருப்பங்கள் கூடிவருகின்ற வேளையில்,
தாலிபான் அரசியல்
குழுவையும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியையும் அமைதிப்
பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் டிரம்ப் அவர்கள் அழைப்பு
விடுத்தார். எனினும், அமைதிப்
பேச்சுவார்த்தையைப் பொருட்படுத்தாமல், காபூலுக்கு
அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது தாலிபான்கள் தாக்குதலைத் தொடர்ந்ததால், இந்த
அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்தது.
பேச்சுவார்த்தையை
மீண்டும் தொடங்க, பல மாதங்களும் சர்வதேச அளவில் சீனா, ரஷ்யா, ஈரான்
மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் முயற்சியும் தேவைப்பட்டன. தற்போது, அமெரிக்காவுக்கும்
தாலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளன. செப்டம்பர்
மாதத்தில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட, இருதரப்பினரும்
ஒப்புக்கொண்ட வரைவு ஒப்பந்தம் தயாராக இருப்பதாக தலிபான் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இரு
தரப்பினரும் உத்தரவாதம் அளித்துள்ளதால், ஒப்பந்தத்தில் மாற்றங்கள்
எதுவும் தேவை இல்லை என்றும் தாலிபான் கூறியுள்ளது. இருப்பினும், அமைதி
ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தகுந்த சூழலை உருவாக்க வேண்டிய அவசியமுள்ளது.
சமாதான
உடன்படிக்கையில் கையெழுத்திட்டபின், தாலிபான்கள் உண்மையிலேயே
சண்டையை நிறுத்துவார்கள் என்பதற்கான நிரூபண ஆதாரங்களை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ அவர்கள் தெரிவித்திருந்தார். முன்னர், ஒரு
உடன்படிக்கைக்கு இருதரப்பினரும் நெருங்கி வந்ததாகவும், ஆனால், வன்முறையைக்
குறைப்பதற்கான உறுதிப்பாட்டையோ, திறனையோ தாலிபான்களால் நிரூபிக்க முடியவில்லை என்றும்
திரு. போம்பியோ கூறினார்.
தாலிபான்களின்
அமைதிக்கான செயல் விளக்கம், அதிபர் கானி அரசாங்கத்துடன்
மிகவும் கடினமான பேச்சுவார்த்தையைத்
தொடங்குவதற்கான அரசியல் உறுதிப்பாட்டைக் குறிக்கும். சமாதான
முன்னெடுப்புகளை உறுதி செய்து, பல பத்தாண்டுகளாக
நிகழும் ஆப்கானிஸ்தான் போரை
முடிவுக்குக் கொண்டுவர இது இன்றியமையாததாகும்.
தாலிபான்களிடமிருந்து, அமைதிக்கான
செயல் விளக்க நிரூபணத்தை அமெரிக்கா கோருவதற்கு ஒரு காரணம், இந்த
ஒப்பந்தம் ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நீண்டகாலத் தாக்கத்தை
ஏற்படுத்தவல்லது என்பதேயாகும். பெரும்பாலான பாதுகாப்பு நிபுணர்களால் தாலிபான் ஒரு
பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்டு வருகிறது. தோஹாவில் அமெரிக்காவுக்கும், தாலிபான்களுக்குமிடையே
ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், தாலிபான்களுக்கு அங்கீகாரம்
கிடைக்கும்.
இதுவரை, ஆப்கானிஸ்தான்
அரசாங்கம், அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்குமிடையிலான
பேச்சுவார்த்தைகளை எச்சரிக்கையுடனே நோக்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் உளவுத்துறையின்
முன்னாள் தலைவர் அம்ருல்லா சலேஹ் அவர்கள், தாலிபான்களை நம்ப முடியாது
என்று திட்டவட்டமாக விமரிசித்துள்ளார். அரசியல் தீர்வுக்கு வன்முறை பலனளிக்கப்
போவதில்லை என்பதைத் தாலிபான்கள் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று திரு. சலேஹ்
கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர்,
அமெரிக்காவும்
தாலிபான்களும் ஒருவித ஒப்பந்தத்தை எட்டினாலும் கூட,
ஆப்கானிஸ்தான்
அரசின் முக்கியப் பிரமுகர்களின் இத்தகைய
அறிக்கைகள் , அமைதிக்கான பாதை கடினமான சவால்கள் நிறந்தது என்பதை வெளிப்படுத்துகின்றன.
அதிபர்
பதவிநீக்க செயல்முறையிலிருந்து கிட்டத்தட்ட சேதம் ஏதுமின்றித் தப்பியுள்ள அதிபர்
டிரம்ப் அவர்கள், தற்போது வலுவான நிலையில் உள்ளார். எனவே, தாலிபான்களால்
மீண்டும் ஏமாற்றப்படுவதற்கும், அதன் விளைவாகத் தனது வோட்டு
வங்கி சீர்குலைக்கப்படுவதற்கும் அவர் அனுமதிக்க மாட்டார். தாலிபான்களிடமிருந்து, அமைதிக்கான
செயல் விளக்க நிரூபணத்தைக் கோருவதன் மூலம், தான் மிகுந்த தன்னம்பிக்கையுடன்
இருப்பதை அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். நடப்பாண்டு ஜனவரி 3 ஆம்
தேதியன்று, ஈரானின் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முக்கியத்துவம்
வாய்ந்த இப்பகுதி, அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமிடையே
ஆடுகளமாக உருவாகியுள்ளது.
போரால்
பாதிக்கப்பட்ட இந்நாட்டில், எந்தவொரு சமாதான முன்னெடுப்பும்
ஆப்கானிஸ்தான் அரசின் தலைமையிலும், அதன் சொந்தப் பொறுப்பிலும்
இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.. அமைதியான மற்றும்
பாதுகாப்பான ஆப்கானிஸ்தானைக் காண இந்தியா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இந்தியாவுக்கு
நம்பிக்கையளிக்கக் கூடியதாக இல்லை..
தாலிபானுக்கும்
அமெரிக்காவிற்கும் இடையிலான சந்திப்பு எவ்வாறு முன்னேறும் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Tamil free tools
பதிலளிநீக்குUse free tools from http://www.valaithamil.com/tools.html to create great content in Tamil.