நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வியாழன், 19 ஏப்ரல், 2018

செதுக்க வேண்டியது - சிற்பிகளையா ? சிலைகளையா ?

பெயர் சொல்லக்கூடாத மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் அவர்.

பிரதமர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக முதலமைச்சரிடம் விருது பெற்றிருந்தார்.

பெயரிடப்படாத நாளொன்றின் காலைப்பொழுதில் அவரைச் சந்திக்க முகாம் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன்.

____________ தாண்டியிருப்பேன், நான் தேடிச்சென்ற அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தன் அரசு வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

நான் அவரைத் தேடிச் சென்றேன். அவர் என்னைத் தாண்டிச் சென்றுவிட்டார்.

அவரைப் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் அவரைப் பின்தொடர்ந்தேன்.

கிட்டத்தட்ட என் வீட்டிற்குப் பக்கத்துத் தெருக்களின் வழியே சீறவேண்டிய வாகனம்,  காலை வேளை என்பதால் பள்ளிப் பிள்ளைகளின் நெருக்கத்திற்கு மத்தியில் மிகவும் ஊர்ந்து ஊர்ந்து சென்றது.

இந்த நேரத்தில் எங்கு செல்கிறது, என்பது எனக்கே ஆச்சரியம். தொடர்ந்தேன்.

இறுதியாக ஒரு கிறித்தவ ஆங்கில வழிப் பள்ளி வளாக வாசலில் நான் வெளியே நிறுத்தப்பட்டேன். உள்ளே அவர் வாகனம் சென்றது.

பள்ளிப் பாதுகாவலர் சொன்னார், “கலெக்டர் சார், புள்ளைங்க இங்க படிக்குதுங்க, தினெக்கும் வந்து விட்டுட்டு போவாரு”ன்னு சொன்னார்.

இந்தக்காலத்துல இவ்வளவு வேலைப்பளுவிற்கு மத்தியில் தகப்பனாக பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டுச்செல்கிறாரே என்று மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், இதுவல்ல நான் உங்கள் நேரத்தை செலவழித்து நான் கூற வந்த செய்தி.

அவரது முகாம் அலுவலகத்திலிருந்து, அவரது பிள்ளை படிக்கும் பள்ளிக்கு வந்த வழியில்,

5 ஆங்கிலவழி தனியார் பள்ளீகள்
3 தமிழ்வழி தனியார் பள்ளிகள்
1 நகராட்சி தொடக்கப் பள்ளி

ஆகியன உள்ளன. இதில் அவர் முகாம் அலுவலகத்திற்கு அருகாமையில் வேறு சில அரசாங்க பள்ளிகளும் இருக்கின்றன. அரசாங்கமே அரசாங்கப் பள்ளிகளையும் அதன் தாய்மொழியையும் நம்பாத போது, அதன் மக்கள் மட்டும் எப்படி நம்பிக்கைக் கொள்வார்கள் என்கிற கேள்வி எழுகிறது.

அதுசரி,

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளே அரசுப் பள்ளிகளை நம்பாத போது, அரசாங்க அதிகாரிகளைக் குறைசொல்லி என்ன ?

உவகைபூரிக்காத உதடுகளுடைய சிலைகளையே சிற்பிகள் வடிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்னச் சொல்லிட முடியும்.!

-த.க.தமிழ்பாரதன்
08.04.2018






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக